Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
மார்ச் - ஏப்ரல் 2009
திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை
கணியன்

தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” தோற்றுவிக்கப்பட அவ்வியக்கம் பற்றிய மதிப் பீடுகள் பலவாக இருந்தாலும், இந்த ஈழ ஆதரவுக் கூட்டணியே தேர்தல் கூட்டணியாகவும் பரிணமிக்க வேண்டும். தேர்தல் சாகசங்களுக்குப் பலியாகி இந்தக் கூட்டணி பிளவுபட்டுப் போய் விடக் கூடாது என்று தமிழக மக்கள் விரும்பினார்கள். இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தமிழக மக்களின் எண்ணம் ஈடேறவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அப்பால் ஈழ ஆதரவு சக்திகள் மூன்றாவது அணியாகத் திரள வாய்ப்பற்ற சூழல் ஈழ ஆதரவு அணியிலிருந்த பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க. ஆகிய மூன்று கட்சிகளும் அ.தி.மு.க. அணியில் இடம் பெற்றன. சரி, இதே வழியில் வி.சி.க.வும் இந்தப் பக்கம் வந்து விட்டால் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி தி.மு.க. காங்கிரஸ் துரோகக் கூட்டணியை வீழ்த்தி அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம் என்று பார்த்தால் வி.சி.க. அந்த துரோகக் கூட்டணியிலேயே தன்னைத் தக்க வைத்துக் கொண்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக முதல் கண்டனக் குரல் எழுப்பிய வி.சி.க., ஈழத்தில் இனப் படுகொலை நடத்தி வரும் இந்திய அரசைக் கண்டித்து எண்ணற்ற பல போராட்டங்களை நடத்திய வி.சி.க., ஈழ மக்களுக்கு எதி ராக இந்தியா செய்த அடுக்கடுக்கான குற்றங்களை, கொடூரங்களை இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இனி வரும் தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு திருமா வின் உரையை ‘குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு’ என்று நூலாக வெளி யிட்டு மக்களுக்கு விழிப்பூட்டிய வி.சி.க., இன்று எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து கொலைகார காங்கிரசுடனே கூட்டு சேர்ந்து நிற்கிற தென்றால் சந்தர்ப்பவாத நாற்காலி அரசியலின் சீரழிவுக்கு தன்னலவாத தேர்தல் அரசியலின் தகிடு தத்தங் களுக்கு ஓர் எல்லையே இல்லையா என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈழ மக்களின் எதிரிச் சக்திகள் என்று நாம் எப்போதும் குறிப்பிடுவது மூன்று. ஒன்று களத்தில் ஈழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவம், சிங்கள அரசு. இரண்டு அந்த இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசு, இந்திய இராணுவம். மூன்று அதற்குத் துணை போகும், முட்டுக் கொடுக்கும் அல்லது இவற்றை மூடி மறைத்து மோசடி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்ததது வரும் தி.மு.க. அரசு என்பதையும் - ஏன், இதில் அ.தி.மு.க., இ.க.க.மா., கட்சிகளெல்லாம் ஈழ மக்கள் எதிரிக் கட்சிகள் இல்லையா என்று கேட்டால் இவை அதிகாரத்தில் இல்லாத எதிரிக் கட்சிகள். ஆனால் அதிகாரத்தில் உள்ள, அன்றாடம் போரை நடத்துகிற போருக்குத் துணை போகிற கட்சிகள் இம்மூன்று மட்டுமே என்பதையும் - சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்திருககிறோம்.

இப்படியிருக்க அந்தத் துரோகக் கூட்டணியில்தான் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது வி.சி.க. இதன் மூலம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் வி.சி.க.வுக்கு வழங்கும் ஆதரவுக்குப் பதிலுதவியாக 38 தொகுதிகளிலும் வி.சி.க., காங்கிரஸ், தி.மு.க. அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவர்களுக் காக உழைக்கும், வாக்கு சேகரிக்கும். அந்தந்த பகுதி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடும். அதாவது இவ்வளவு காலமாக தமிழீழத்துக்கும் தமிழக மக்களது உரிமைக்கு குரல் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வந்த வி.சி.க. தேர்தலில் ஈழ விடுதலையின் எதிரியான காங்கிரசுக்கு, அதற்குத் துணைப் போகும் தி.மு.க.வுக்கு உழைக் கும். சிறுத்தைகள் உழைப்பார்கள். பாடுபடுவார்கள்.

சரி, அப்படியானால், இவ்வளவு காலமும் ஈழம் பற்றிப் பேசியது, அதற்கு ஆதரவாகப் போராடியது, சிறை சென்றது, வழக்குகள் சந்தித்தது, பட்டினிப் போராட்டம் நடத்தியது இதற்கெல்லாம் என்ன பொருள். இந்தப் போராட்டங்களை எப்படி எடுத்துக் கொள்வது. இந்தப் போராட் டங்கள் உண்மையா அல்லது இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்காக எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கூட்டு சேர்ந்திருப்பது உண்மையா.

ஏன் சிறுத்தைகள் மட்டும்தான் அணி மாறுகிறதா, மற்ற கட்சிக ளெல்லாம் அணி மாறவில்லையா. சந்தர்ப்பவாத தேர்தல் அரசியல் நாற்காலி அரசியல் நடத்த வில்லையா என்கிற கேள்விகள் எழலாம். உண்மை. தேர்தலுக்குத் தேர்தல் எல்லா கட்சி களும்தான் அணி மாறுகின்றன. வெவ் வேறு கூட்டணிகளில் அங்கம் வகிக் கின்றன. சந்தர்ப்பாத நாற்காலி அரசியல் நடத்துகின்றன. மறுக்க வில்லை. அதை நியாயம் என்றும் சொல்லவில்லை. ஆனால் எந்தக் கூட்டும் அணி மாற்றமும் ஏன், யாரோடு என்பதுதான் கேள்வி.

தற்போது பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க., கட்சிகள் அ.தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்துள்ளன. சரி. அதிமுக,வின் ‘ஜெ’ தமிழகத்திற்கு எதிரானவர், தமிழினத் துக்கே எதிரானவர் என்கிற ஒரு கருத்தும் இருக்கிறது. சரி. ஆனால், தற்போதைய தமிழீழத்துக்கு அவர் எதிரியா, அங்கே போரை நடத்து பவரோ, போரை நடத்து பவர்களுக்கு துணை நிற்பவரோ அவரா. நிச்சயமாக அல்ல. மாறாக அப்படிப்பட்ட போரை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கு துணை நிற்பவர்களுக்கு அவர் எதிரி. அப்படியிருக்க உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள் அவரைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டாமா. அவரை வைத்து தமிழினத்தின் எதிரி களை, துரோதிகளை வீழ்த்த முயல வேண்டாமா. அதை விட்டு கொலை காரக் காங்கிரசோடு சமரசம் செய்து கொண்டு, அவர்களோடே கூட்டுச் சேர்ந்து, அவர்களுக்காக வாக்கு கேட் டால், தமிழீழப் படுகொலையில் நமக்கும் பங்கு இருப்பதாக ஆகாதா. அந்தப் படுகொலையை நாமே முன் னின்று நடத்துவது, அதற்கு துணை நிற்பது ஆகாதா? ஈழத் தமிழர்களுக் காகத் தன் உடலையே எரித்து கரிக் கட்டையாக்கி வீரச்சாவு எய்திய முத்துக் குமாரின் இறுதிக் கடிதத்தில் ‘நான் எரிந்த தகவலை அண்ணன் பிரபா கரனுக்கும் அண்ணன் திருமாவளவனுக் கும் உடனடியாகத் தெரியப்படுத்துங் கள்’ என்று குறிப்பிட்டிருந்தாரே, அந்த நம்பிக்கையை எரித்து சாம்பலாக்குவது ஆகாதா? அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, திருப்பித் தாக்கு என்று இளைஞர்களைத் திரட்டிய தெல்லாம் இதற்குத்தானா, தங்கள் தன்னலத் துக்காக ஆதிக்க சக்திகளுக்கு அடி பணியவும், சேவை செய்யவும் கொலை காரர்களோடு கூட்டு சேரவும், அவ் விளைஞர்களது உணர்வுகளைப் பலி கொடுக்கவும்தானா? எப்படி மனம் வருகிறது இதுபோன்ற முடிவுகளை எடுக்க? மனச்சாட்சி எப்படி இடம் கொடுக்கிறது இப்படி மனச்சாட்சி யற்று இயங்குவதுதான் நாற்காலி அரசியலின் மகிமையோ, புரிய வில்லை.

ஏன், சிறுத்தைகள் நாங்கள் இப்போது நேரடியாக காங்கிரசோடு கரம் கோர்த்து நிற்கிறோம். எதிர் அணியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளே நாளைக்கு காங்கிரசுக்கு ஆதரவாக வர மாட்டார்களா, வர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று சிலர் கேட்கலாம்.

நியாயம், தமிழ்நாட்டில் வெற்றி பெறும் எந்தக் கட்சியும், நாளைக்கு தில்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப் புள்ள எந்தக் கட்சிக்கும் ஆதர வளிக்கும், அமைச்சர் பதவிகளைப் பெறும் , ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்பது தமிழ்நாட்டின் வரலாற்று சாபக்கேடு. ஆட்சிக்குப்பிறகு அது எப்படியும் நிகழட்டும்.

ஆனால் அதற்காக இப்போதே காங்கிரசோடு கூட்டு சேர்வது என்ன நியாயம்? இது காங்கிரஸ் கட்சி இது வரை நடத்திய கொலை பாதகங்களை ஆதரிப்பதாக, அதற்கு வக்காலத்து வாங்குவதாக, அதற்கு ஊக்கம் கொடுப் பதாக, மக்களிடம் அதற்கு நியாயம் கற்பிப்பதாக ஆகாதா?

இதுவரை தமிழீழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகமிழைத்த கட்சிகளுக்கு தற்போது கிடைத்திருக் கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு பாடம் கற்பித்தால் நடைபெற இருக் கிற தேர்தலில் அக்கட்சிகளை தோற் கடித்தால், அது அடுத்து வரும் கட்சி களுக்கும் ஒரு பாடமாக அமையும். தமிழக மக்களுக்குத் துரோகமிழைத் தால் அவர்கள் நேரம் பார்த்து பதிலுக்கு பாடம் புகட்டு வார்கள் என்கிற அச்சம் இருக்கும். இதை வைத்து தில்லியில் அடுத்து அமைய இருக்கும் ஆட்சிக்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாம். உண்மை யிலேயே நாம் ஈழ மக்கள் ஆதரவில் அக்கறையுள்ள அமைப்பாக இருந்தால் இந்திந்த கோரிக்கைகளை நிறை வேற்றினால்தான் தில்லி அரசுக்கு, ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என நிபந்தனை விதிக்கலாம். சில கோரிக் கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தம் தரலாம். ஆனால், இந்த எல்லா வாய்ப்புக்களையும் முன் கூட்டியே தவறவிட்டு, தேர்தலுக்கு முன்பேயே அந்த ஆதிக்கச் சக்தி களுக்குத் துணை நிற்பது, அதனோடு கூட்டு சேர்வது, கூட்டாகப் போய் வாக்கு கேட்பது என்றால் இது எப்படிப்பட்ட கொடுமை? நாளை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஈழ ஆதரவுக் கூட்டங்களில் பேசுவது..

ஒருவேளை, இனி ஈழ ஆதரவு நிலையே வேண்டாம். கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கேயே சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி இதற்குள்ளேயே நிறைவு காணலாம் என வி.சி.க.வில் அறிவிக்கப் படாத முடிவாக எடுத்து விட்டார்களா. புரியவில்லை..

அதாவது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வோ, ம.தி.மு.க. வோ., இ.க.க.வோ., ஈழ மக்களுக்கு ஆரதரவாகக் குரல் கொடுக்கும் உரி மையை இழக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் வி.சி.க. அந்த உரிமையை இழந்து விட்டது. இழந்து நிற்கிறது இதுதான் இந்த இரண்டு கூட்டணியிலும் சேர்ந்திருப்பவர்களுக் கான அடிப்படை வேறுபாடு.

இந்த வேறுபாடு சாதாரணமானதல்ல. வி.சி.க.வின் அரசியல் வரலாற்றில் என்றென்றைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும், மாறாத கறையாகப் படிந்து உறுத்தும் முக்கிய வேறுபாடு. இந்த வேறுபாட்டை வி.சி.க., தோழர்கள் உணர வேண்டும். இந்தக் களங்கத்திலிருந்து மீள உரிய வழி வகைகளைக் காண வேண்டும்.

கருணாநிதியின் சூழ்ச்சிக்கு பலியான திருமா

திருமா, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் தொடருவதன் மூலம் ஈழச்சிக்கல் சார்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இயங்கும் அவர் இயல்புக்கும், சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்காக தன் மனசாட்சிக்கு, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு செய்யும் துரோகத்துக்கும் இடையில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

திருமாவை அச்சுறுத்தியோ, ஆசைகாட்டியோ தி.மு.க. தன்கூட்டணியில் வளைத்துப் போட்டதன் மூலம் கருணாநிதி தன் தன்னல வாத அரசியல் நோக்கில் இரண்டு காரியங் களைச் சாதித்திருக்கிறார்.

ஒன்று திருமா எதிர் அணியில் போய் காங்கிரசை விளாசித் தள்ளும் வாய்ப்பைத் தடுத்து, அவர் வாயை அடைத்து வாலைச் சுருட்டி வைத்து பெட்டிப்பாம்பாய் அடங்க வைத் திருக்கிறார். வி.சி.க. மற்றும் அதன் ஆதர வாளர்கள், அனுதாபிகள் வாக்குகளை தங்கள் அணிக்கு எதிராகச் செல்லாமல் தடுத்து ஆதரவாக தக்க வைத்திருக்கிறார்.

மற்றொன்று, தொடர்ந்து கருணாநிதி தமிழனத்துக்கு தமிழீழத்துக்கு செய்து வரும் துரோகத்துக்கு, தமிழக மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் வெறுப்பை, கோபத்தைத் தன்மீது மட்டுமே பாயவிடாமல் அதை திருமா பக்மும் திருப்பிவிட்டு அவர்மீதும் பாய வைத்திருககிறார். தமிழின உணர்வாளர்கள் தன்மீது மட்டுமே வசை பாடாமல் திருமாவின் மீதும் சேர்ந்து வசைபாட வைத்திருக்கிறார். இதன்மூலம் திருமாவின் அரசியல் வாழ்க்கையில் என்றென்றும் மாறாத களங்கத்தை ஒரு துரோகக் கறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுமாதிரி சாணக்கியத் தனத்தில் வல்லவர், தேர்ந்தவர் கருணாநிதி என்பது தெரிந்த கதை. ஆனால் திருமா போன்றவர்களும் அதற்குப் பலியாவார்கள் என்பதுதான் யாரும் அறியாத எதிர்பார்க்காத கதை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் என்ன கேள்வி எழுகிறது என்றால், சமூக அவலங்கள் மீதான கோபத்துடனும், அதை எதிர்க்கும் வீராவேசத்துடனும் கிளர்ந்தெழுந்து வரும் ஒவ்வொருவரும் கொஞ்ச காலம் அப்படியிருந்து மக்களை ஈர்த்துத் திரட்டி, பின் அவர்களை இப்படி மொத்தமாகத் தன், தன்னலத்துக்கு, ஆதிக்க சக்திகளுக்கு பலி கொடுப்பது என்றால், அப்புறம் யாரைத்தான் நம்புவது என்கிற அலுப்பும், வெறுப்பும், விரக்தியும் ஏற்படுகிறது. இது அடுத்து உண்மையாகவே யாரும் போர்க்குணத்துடன் வந்தாலும், ஆமாம் எல்லாரும் முதலில் இப்படித்தான் வருகிறார்கள். அப்புறம் போகப்போக சோரம் போய் விடுகிறார்கள் என்று அவநம்பிக்கையோடு நோக்க வைக்கிறது. அல்லது பொது வாழ்விலேயே நாட்டமற்ற அலுப்புக்கும் சோர்வுக்கும் ஆளாக்க வைக்கிறது.

திருமாவின் இந்த முடிவு, தன் கட்சிக்குள்ளும் சரி, ஆதரவாளர்கள் மத்தியிலும் சரி இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் தோற்றுவித்து இருக்கிறது. வரலாற்றில் போர்க்குணமிக்க பக்கங்களை அவர் எழுதுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தவர்கள் வரலாற்றில் அவர் இதுபோன்ற கருப்புப் பக்கங்களை உருவாக்கியிருக்கும் கைங்கர்யங்களைப் பார்த்து, திருமா, நீங்களுமா? என்று கேட்க வைத்திருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com