Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
மார்ச் - ஏப்ரல் 2009
தமிழீழத் தன்னுரிமையை அங்கீகரிப்போம்; ஈழச் சிக்கலை தேர்தல் முழக்கமாக்குவோம்
இராசேந்திரசோழன்

நடைபெற இருக்கிற நாடாளு மன்றத் தேர்தலில் முந்தைய எந்தத் தேர்தலிலும் கண்டிராத அளவுக்கு ஈழச் சிக்கல் ஒரு முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. ஈழச் சிக்கலைப் பற்றிப் பேசாமல், ஈழ மக்களுக்குத் தாங்கள் ஆதரவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், தமிழக மக்களின் வாக்கைப் பெற முடியாது என்கிற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இந்த வாய்ப்பைத் தமிழீழ விடுதலை ஆதரவு உணர்வாளர்கள் எப்படிப் பயன் படுத்திக் கொள்வது, தமிழீழ மக்களுக்கு உதவும் வகையில் இப்போக்கை எப்படி முன்னெடுத்துத் செல்வது என்பதே தற்போது நம் முன்னுள்ள கேள்வி.

தமிழகத்தில் தொடர்ந்து ஈழ விடு தலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க., இதில் தற்போது வி.சி.க. காங்கிரஸ் கூட்டணியில் இருந் தாலும் ஈழ மக்களுக்கு ஆதரவாக அது ஏற்கெனவே நடத்திய போராட்டங் களைப் புறக்கணித்து விட முடியாது. இ.க.க நேரடியாக தமிழீழ விடுத லையை ஆதரிக்கவில்லை யாயினும், தமிழீழத்தில் நடைபெறும் இனப் படு கொலையைத் தடுத்து நிறுத்த வேண் டும் என்கிற அக்கறையில் தமிழீழ ஆதரவு அமைப்புகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போரா டிய, கூட்டுப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கட்சி.

ஆக இவையெல்லாம் போக ஈழ விடுதலைப் போராடாத, சொல்லப் போனால் அதற்கு எதிராகவே கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த கட்சிகள் இரண்டு. ஒன்று அ.தி.மு.க., மற் றொன்று இ.க.க.மா. இதில் சமீபத்தில் அதிமுகவின் ஜெ. ஈழத்துக்காக ஒரு நாள் பட்டினிப் போராட்டம் மேற் கொண்டதும் கூடவே ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டதும் அதிமுகவின் நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனை.

எந்தக் காலத்திலுமே எதற்கும் அசையாமல், விதைப்பில் உழைப்பில் எந்த பங்குமே கொள்ளாமல், அறு வடையில் பங்கு கொள்ள மட்டுமே அரிவாளை எடுத்துக் கொண்டு வரும் இ.க.க.மா. இதுவரை ஈழத்துக்காக எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை என்பதும், அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததில்லை என்பதும், அகில உலகப் பிரச்சினைக்கெல்லாம் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் தீர்வு காணவேண்டும் என்று சொல்வதைப் போலவே ஈழச் சிக்கலுக்கும் அரசியல் தீர்வு காண வேண்டும் எனச் சொல்லி வருவதும் அனைவரும் அறிந்த செய்தி.

இந்நிலையில் இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது. ஈழ மக்கள், தமிழக மக்களாகிய நம் மிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே தற்போதைய நமது அக்கறை.

இந்தத் தருணத்தில் சமீபத்தில் சந்திக்க நேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரின் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன் றுகிறது. சந்திப்பிலான உரையாடல் இயல்பாக ஈழச் சிக்கலைப் பற்றி மையம் கொண்டிருந்தாலும், பேச்சு ஜெ.வின் அறிக்கை சார்ந்து திரும்பியது.

ஈழத்துக்காக இதுகாறும் வாயைத் திறக்காதவர், திறந்தாலும் எதிராகவே திறந்தவர் திடீரென்று பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். ஈழ மக் களின் தன்னுரிமையை அங்கீகரிக்கிறார் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள் வது, தமிழக மக்களின் பெருவாரி உணர்வு ஈழத்துக்கு ஆதரவாக இருக் கிறது என்கிற நிலையில் இதில் தான், தன் கட்சி தனிமைப் பட்டுப் போய் விடக் கூடாது என்கிற அச்சு உணர்வு தான் இதற்குக் காரணமே தவிர, இது அதற்கான ஒரு கண் துடைப்பு அறிக்கை தானே தவிர, மற்றபடி ஈழத்தின் பாலான உண்மையான அக்கறையி லிருந்து எழுந்த அறிக்கை அல்ல அது. போலியானது. ஏமாற்றுத் தனமானது என்று ஒரு கருத்து வந்தது.

அதற்கு பதிலளித்த அவர், அறிக் கையின் பின்னணி எதுவானாலும் அப்படி ஒரு அறிக்கை வந்துள்ள இந் நிலையில் இந்த அறிக்கையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதில் தான் நமது அக்கறை இருக்க வேண் டுமே தவிர, அதைவிட்டு அந்த அறிக்கையின் பின்னணியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல நம் பணி என்றார் அவர். கூடவே ஈழப் போராளி களின் விருப்பம் வெறும் போர் நிறுத்தம் மட்டுமே அல்ல. போரை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் கோருவதெல்லாம் அவர்களது போராட்டத் திற்கான உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அங்கீகாரம் தான். போராட்டத்துக்கான நியாயம் உணரப் பட்டால் போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைத்து விடும். போராளி கள் அமைப்பு மீதான தடை நீக்கப் படும். ஈழ மக்களின் தன்னுரிமை அங்கீ கரிக்கப்படும். போராட்டத்தின் பரி மாணமே மாறிவிடும். எனவே ஈழ மக்களுக்கான தன்னுரிமை என்கிற கோரிக்கையை தமிழக மக்கள் முன் னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

ஆகவே ஜெ. அறிக்கை பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்காமல், அவர் விடுத்த அந்த அறிக்கையில் அவர் உறுதி யோடு நிற்கவும், அதே நிலைபாட்டை மற்ற கட்சிகளும் எடுத்து அதைத் தங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு கூறாக முன் வைக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டு வதே தற்போதைய உடனடித் தேவை. இப்படிச் செய்வதன் மூலம் தி.மு.க. வுக்கும் ஒரு நெருக்கடியைத் தர முடியும். ஈழம் பற்றி தி.மு.க. தன் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத் துக்குத் தள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூடவே இன்னொன்றையும் அவர் சொன்னார். இந்திய அரசு நடத்தி வரும் போரை தமிழக அரசியல் கட்சித் தலை வர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்றோ, இவர்கள் எங்களைக் காப்பாற்றி விடுவார்கள் என்றோ அந்த நம்பிக்கையெல் லாம் எங்களுக்குக் கிடையாது. தங்கள் சொந்த மண்ணின் மீன வர்களைக் காப்பாற்ற வக்கற்ற கட்சிகள், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றை பாதுகாக்க மீட்கத் திராணியற்ற கட்சிகள் எங்களை வந்து காப் பாற்றி விடும் என்கிற மாயையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு வேண்டியது அரசியல் அங்கீகாரம். அந்த அங்கீகாரம் எங்களுக்கு இருந் தால் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார்.

போர் என்றால் இரு தரப்பிலும் சாவுகள் நேரத்தான் செய்யும். ஆனால் அந்த சாவின், தியாகத்தின் நியாயம் உணரப்படவேண்டும். அதற்கு தமி ழீழத்தின் தன்னுரிமை ஏற்கப்பட வேண் டும். உலக நாடுகளால் அது அங்கீ கரிக்கப் பட வேண்டும் என்பதே போராளிகளின் அவா என்றார் அவர். யோசித்துப் பார்க்கையில், அவர் சொல்வதெல்லாம் நியாயம் என்ப தாகவே தோன்றியது. எனவே, இந் நிலையில் நாம் செய்ய வேண்டுவ தெல்லாம் ஈழச்சிக்கலை தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு தவிர்க்க முடி யாத அங்கமாக மாற்றுவதேயாகும்.

ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கை களை வெளியிட்டுவிட்டன. அ.தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஈழம் பற்றித் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளன. ஈழ மக்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படாவிட்டால் ‘தனி ஈழமே’ தீர்வு என ஜெ.வும் சமீபத்தில் குறிப்பிட் டுள்ளார். இந்தக் கருத்துக்கு இலங்கை யிலிருந்தும் தில்லியிலிருந்தும் எதிர்ப்பு வந்தபோதும் அதற்கு பதிலடி கொடுத்து தனித்தமிழ் ஈழம் என்கிற நிலைப் பாட்டை அவர் மீண்டும் உறுதி செய் துள்ளார். இந்நிலையில் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் கடந்த காலங் களில் ஈழம் பற்றி யார் யாரெல்லாம் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற வெட்டி ஆராய்ச்சிகளில் இறங் காமல் தற்போது ஈழம் பற்றி அவர்கள் என்ன குறிப்பிடுகிறார் கள். அதை நமது பிரச் சாரத்துக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள் ளலாம் என்பதில் கவன மாயிருந்து அதைச் செயல்படுத்த வேண்டும என்பதே.

இந்த அடிப்படை யில் நம்முடைய பிரச் சாரங்களில் ஈழச் சிக் கலை முதன்மைப் படுத்தி, தமிழீழ விடு தலைப் போராட்டத் திற்கான நியாயங்களைத் தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இந்த விடுதலைப் போராட்டத் திற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி செய்து வரும் துரோகங்களையும் மோசடிகளையும் போலித் தனங்களை யும் அம்பலப்படுத்த வேண்டும்.

இதன் வழி, காங்கிரசையும், திமுகவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடாத வகையில் தோல்வியைத் தழுவச் செய்து அக் கட்சிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.

ஜெ.வின் தனி ஈழக் கொள்கைக்கு கருணாநிதியின் பதிலென்ன?

விடுதலைப் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் எவ்வெப்போதோ பேசியதைப் பற்றியே கருணாநிதி மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர, தமிழக மக்களுக்கு தன்னுரிமை வேண்டும், தனி ஈழம் அமைய வேண்டும் என்று தற்போது ஜெ. கூறி வருவது பற்றி கருணாநிதி எதுவும் பேசுவதில்லை. கருணா வழியைப் பின்பற்றி தற்போது திருமாவும் அதேபோல் நடந்து கொள்கிறார்.

எல்லாம் போகட்டும், இப்போது கேட்கிறோம். முதல்வர் கருணாநிதி அவர்களே, நேரடியாக ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுங்கள். ஜெ. தனி ஈழம் என்பதை அங்கீகரிக்கிறார். ஏற்றுக் கொள்கிறார். ஆதரிக்கிறார். நீங்கள் தனி ஈழத்தை ஆதரிக் கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆதரிக்கிறீர்கள் என்றால் ஜெ. போல உறுதிபட அறிக்கை விடத் தயாரா? பத்திரிகையாளர் மத்தியில் பகிரங்கமாகச் சொல்லத் தயாரா? திருமாவைப் பற்றிப் பிரச்சினையில்லை. அவர் ஏற்கெனவே தனி ஈழ நிலைப்பாட்டில் உள்ளவர். நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் தயாரா? இப்படி எல்லோருமாகச் சேர்ந்து தமிழ் ஈழம், தனி ஈழம் என்று குரல் கொடுத்தால் ஈழ மக்களுக்கு போராளிகளுக்கு அது தெம்புதானே.. செய்வீர்களா.....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com