Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
மார்ச் - ஏப்ரல் 2009
யாருக்கு நம் வாக்கு? - இனத் துரோகிகளை வீழ்த்த கிடைத்திருக்கும் வாய்ப்பு
இராசேந்திரசோழன்

தமிழீழத் தமிழர்களைக் காக்கவும், தமிழகத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து மண்மொழியில் எழுதி வந்தோம்.

இதழில் எழுதப்பட்ட அளவு இல்லையாயினும் அதை நோக்கிய திசையில், ‘இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம்’ தோற்றம் பெற்றது குறித்தும், அதன் செயல் பாடுகள் குறித்தும் மண் மொழி 26வது இதழில் எழுதியதோடு, தேர்தல் அறிவிப்பால் இந்த கூட்டணி சிதறி விடக் கூடாது, மாறாக தமிழீழ ஆதரவுக் கூட்டணியே தேர்தல் கூட்டணி யாகவும், பரிணமிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை யும் வெளியிட் டிருந்தோம்.

ஆனால் அந்த வேண்டுகோள் முழுமையடைய வாய்ப்பில்லாமல் பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க, அ.தி.மு.க. அணியிலும், வி.சி.க. தி.மு.க. அணியிலுமாக இடம் பெற தமிழீழ ஆதரவு கட்சிகள் இருவேறு அணியாகப் பிரிய வேண்டியதொரு கெடு வாய்ப்பான சூழல் நேர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழல் உருவாகக் காரணமென்ன? எந்தப் பின்னணியில் இப்படிப்பட்ட அணி சேர்க்கைகள் உருவாயின என்பதெல்லாம் ஒரு புறம் நமக்குக் கேள்வியானாலும், அதற்கும் அப்பால் இப்படி உருவாகியுள்ள கூட்டணிகளில் தமிழ் உணர்வாளர்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், மனித நேயப் பற்றாளர்களது நிலை என்னவாக இருக்க வேண்டும், எதிர் வர இருக்கும் தேர்தலில் அவர்கள் எப்படிப்பட்ட நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலருக்கும் முக்கிய கேள்வி. எனவே, இதுகுறித்து நம் ஆழ்ந்த சிந்தனைக்காக சில கருத்துகள் :

1. தேர்தலின் இலக்கு : பொது வாகத் தேர்தல் என்றால் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதுதான் முக்கிய மான கேள்வியாயிருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்துவது என்பதுதான் முக்கிய கேள்வி.

ஏன் இந்த வீழ்த்த வேண்டிய கேள்வியை நாம் முன் வைக்க வேண்டி யிருக்கிறது என்றால், முதலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈழச் சிக்கலில், தமிழக மக்கள் உரிமைக் காப்பு நடவடிக்கையில் உடனடியாக எந்தவித பெரிய மாற்ற மும் நிகழ்ந்து விடப் போவதில்லை. மாறாக இச் சிக்கல்கள் தொடரவே செய்யும் என்பது ஒன்று.

அதேவேளை களத்தில் நிற்கும் மூன்று சக்திகளில் ஒப்பு நோக்கில் எந்த சக்தி குறைவான கெடுதி விளைவிப்ப தாக இருக்கும் என்கிற நோக்கிலான கணிப்பு மற்றொன்று.

இதில் முதலாவது கேள்விக்கான பதில், இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டிய சக்திகள், தமிழீழத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம், வஞ்சகம் செய்து வருகிற காங்கிரசும் தி.மு.க.வும் தான்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும், அவற்றைத் தணிக்கவும், திசை திருப்பவும், தமிழக மக்களை ஏமாற்றவும் இவ்விரு கட்சிகளும் கையாண்டுவரும் உத்திகளையும்,

இது மட்டுமல்ல, சிங்கள இனவெறி அரசின் தமிழீழ அழிப்பு இனவெறிப் போருக்கு தில்லி காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள், படைப் பயிற்சி கள் அளித்து வருவதுடன் நேரடி யாகவே இந்திய இராணுவத்தினரையும் களத் துக்கு அனுப்பி சிங்களர்களின் தமிழின அழிப்புப் போருக்கு துணை நிற்பதை யும், அதில் சொந்த ராணுவத்தையே பலி கொடுத்து வருவதையும், தி.மு.க. அரசு இதை மூடி மறைத்து தில்லி அரசு ஏதோ தமிழீழ மக்கள்பால் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது போல படம் காட்ட முயன்று காங்கிரஸ் அரசுக்கு காவடி தூக்கி வருவதையும் நோக்க எவரும் இதைப் புரிந்து கொள்ளலாம். எனவேதான் இந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்கிறோம்.

ஆனால், இதில் காங்கிரசை வீழ்த்தவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் போட்டியிடும்

16 தொகுதிகளிலும் அதை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூடத் தோர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எல்லாரும் குறியோடும், மிகுந்த வெறியோடும் இருக்கிறார்கள்.

எனில், தி.மு.க. வையும் இந்த நிலையில் வைத்துப் பார்க்க வேண் டுமா. காங்கிரசோடு சேர்ந்து அதையும் வீழ்த்த வேண்டுமா என்பதில் தான் சிலருக்குக் கேள்வியிருக்கிறது. ஆயிரம் தான் தி.மு.க. தமிழர்களுக்குக் துரோக மிழைத்தாலும், சில தமிழ் உணர் வாளர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான அறியாமை வயப் பட்ட பற்று, தி.மு.க.வை விட்டால் வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது என்ப தான தயக்கம் ஆகியனவே இந்த கேள்விக்குக் காரணம்.

அதாவது காங்கிரஸ் நிற்கும் 16 தொகுதிகளிலும், அதைத் தோற்கடிக்க அதை எதிர்த்து வீழ்த்த எந்தக் கட்சிக் கும் வாக்களிக்கத் தயாராயிருக்கும் மனம், தி.மு.க.வை மட்டும் எதிர்க்கத் தயங்குகிறது. குறிப்பாக தி.மு.க. -வும், அ.தி.மு.க.வும் நேரடியாக மோது மிடங்களில், தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயக்கம் காட்டுகிறது.

இந்த தயக்கத்திற்கு காரணம், கருணாநிதி ஆட்சியிலாவது ஈழ மக் களுக்கு ஆதரவாக பேச, கூட்டம் போட, போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கிறது. ஜெ. ஆட்சி வந்தால் அந்த உரிமைகூட இருக்காதே என்கிற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இதனால் இரண்டையும் ஒப்பு நோக்க தி.மு.க.வுக்கு வாக்களிப்பதுதானே சரியாயிருக்கும் என்று கருதுகிறார்கள்.

இந்தக் கருத்தோட்டத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சலிப்பூட்டும் அளவுக்கு விளக்கம் அளித் திருக்கிறோம். முதலில் ஜெ. ஆட்சி சர்வாதிகார ஆட்சி, கருணாநிதி ஆட்சி சனநாயக ஆட்சி என்று கருதுவதே மயக்கமானது. இருவரது ஆட்சியி லுமே தமிழ் உணர்வாளர்கள், தமிழீழ ஆதாரவாளர்கள் சிறை வைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்களது சனநாயக உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என் பதே அனுபவம்.

அப்படியே ஒரு வாதத்துக்கு மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்வ தானாலும், கருணாநிதி ஆட்சி சனநாயக உரிமை என்பதன் பேரால் மக்களுக்கு பராக்கு காட்டி வருகிறதே தவிர, போராடும் மக்களின் எந்தக் கோரிக்கை யையும் வலியுறுத்தி அதைப் பெற்றுத் தரமுயலாமல் மக்களை ஏமாற்றி வஞ்சித்து, வருகிறது. இதையே தொழி லாகக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவே உதவி செய்வதாகக் கூறி படம் காட்டி வஞ்சித்து வரும் கட்சிக்கும், நேரடியாகவே எதிர்ப்புக் காட்டும் கட்சிக்கும் பெரும் வேறுபாடு எதுவுமில்லை. இத்துடன் கூட இருந்து குழி பறிக்கும் துரோகியை விட, நேரடி யாக வரும் எதிரி எவ்வளவோ தேவ லாம் என்றே தொடர்ந்து சொல்லி வந் திருக்கிறோம்.

அந்த வகையில் துரோகியை வீழ்த்தி எதிரியை முன் நிறுத்த வேண் டும் என்பதே நம் வேண்டுகோள்.

இதில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு ஆதரவான உணர்வு தமிழகமெங்கும் பொங்கி எழுந்துள்ள இத்தருணத்தில் தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சத்திலோ, வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்திலோ, ஈழச் சிக்கலுக்காக ஒரு நாள் பட்டினிப் போராட்டம் இருந்தார் ‘ஜெ’. அவர் ஈழப் போராளிகளுக்கு எதிரான கருத்து கொண்டவராக இருந்தும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை - தன்னுரிமை அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்றிருக் கிறார். இதை அவர் உண்மையாகச் சொன் னாரா, கண் துடைப்பாகச் சொன்னாரா என்பதெல்லாம் மிகுந்த ஆராய்ச்சிக் குரியதாகக் கொண்டாலும், தமிழக மக்களுக்கு எதிராகக் கருத்து கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்கிற கட்டாயத்துக்கு அவர் ஆளாகி யிருக்கிறார் என்கிற அளவி லேனும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆக, இந்த நிலையில் நம் எதிரில் உள்ள கட்சிகள் இரண்டு. தமிழக மக்களை என்ன சொல்லியும் ஏமாற்றலாம், எப்படியும் வஞ்சிக்கலாம் என்ற நிலை யில் இருக்கும் தி.மு.க., தமிழகத்தில் தமிழீழ மக்களுக்கு எதிரான நிலை எடுத்து அரசியல் நடத்த முடியாது என்கிற அச்சத்தில் இருக்கும் அ.தி.மு.க. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே தற்போது உணர்வாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடைகாணும் முன் இப்படி யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி பெற்றால், இதைத் தங்கள் நிலைப் பாட்டுக்குத் தமிழக மக்கள் கொடுத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்வார்கள். காங்கிரஸ் - தி.மு.க. நெருக்கம் மேலும் அதிகமாகும். தமிழ் மக்களுக்கு எதி ரான வஞ்சகம் மேலும் தீவிரமாகும். அ.தி.மு.க. அணி வென்றால் ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுக்கத் தயங்கும். ஏற்கெனவே ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுத்து அதனால் தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்ட தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளின் அனுபவம் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஈழச் சிக் கலின் தீர்வுக்கான தன் நிலைப்பாட்டில் ஓரளவேனும் மாற்றம் வரும். அத்துடன் தேற்கடிக்கப்பட்ட தி.மு.க.வும் தன் தோல்வியிலிருந்து ஓரளவு பாடம் கற்று, உண்மையாகவே ஈழ மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்க முயலும். இரண்டு கட்சிகளுமே அடுத்த இரண் டாண்டுகளில் வர இருக்கிற சட்ட மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சற்றேனும் ஈழ ஆதரவு நடவடிக்கை களை, அதற்கான போராட்டங்களை மேற்கொள்ள முயலும்.

ஆகவே, இப்படி எந்த நோக்கில் பார்த்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டில் தி.மு.க.வை தோற்கடிப் பதே, அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வதே பயனுள்ளதாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, காங்கிரஸ் நிற்கும் 16 தொகுதிகளிலும் காங்கிரசை வீழ்த்து வது, தி.மு.க. நிற்கும் 21 இடங்களிலும் தி.மு.கவை எதிர்த்து யார் நிற்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க.வுக்கு எதிராக அதை வீழ்த்தும் அணிக்கு வாக்களிப்பது என்கிற நிலை யையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

மீதமுள்ள மூன்று தொகுதிகளில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம். இது தி.மு.க. அணியில் கூட்டணியாயி ருப்பதால் வீழ்த்த வேண்டிய கட்சி என்பதில் எவருக்கும் தயக்கம் இருக்க முடியாது. ஆனால் வி.சி.க. நிற்கும் இரு தொகுதிகள்தான் பலருக்கும் என்ன செய்வதென்று பிரச்சனை.

வி.சி.க. தொடர்ந்து ஈழ விடு தலைக்கு ஆதரவாக, கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக போராடி வந்த கட்சி. நியாயமாய் அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்து ஜெ. அணியில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன நெருக் கடியோ, என்ன நிர்ப்பந்தமோ, அது தி.மு.க. அணியிலேயே தங்கி விட்டது. காங்கிரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வந்த வி.சி.க. காங்கிரசோடு சமரசமாகி அதனோடு குழையும் அவலத்துக்கு ஆளாகியிருக்கிறது.

இந்நிலையில் தி.மு.க. காங்கிர சோடு சேர்ந்து அதையும் எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

என்றாலும், வி.சி.க. தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், தாங்கள் பதவிக்கு வரக் கூடாது என் பதால் தங்களை ஓரம் கட்ட முனையும் முயற்சியிலேயே தங்களைத் தோற் கடிக்க முயல்கிறார்கள் என்று குறைப் பட்டுக் கொள்ள அது சார்ந்த பிரச்சாரத் தில் ஈடுபடலாம். தவிர, என்னதான் அது காங்கிரஸ் - தி.மு.க. அணியில் இருந் தாலும் அதன் ஈழ ஆதரவு உணர்வு முற்றாக மங்கிவிட்டது. இத்தேர் தலையொட்டிய பிளவு, பிரிவும் என் றென் றைக்கும் நிரந்தரமானதல்ல. தேர்தல் முடிந்தபின் நாளைக்கே ஈழச் சிக்கலின் தீர்வுக்காக பழையபடியே அனைவரும் ஒன்று சேர்ந்து போராட லாம் என்கிற நிலையும் ஏற்படலாம்.

எனவே, இதெல்லாம் கருத்தில் கொண்டு இரண்டு ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சிதம் பரத்தில் களத்தில் நிற்கும் இரண்டு கட்சிகளுமே ஈழ ஆதரவு கட்சிகள் என்ப தால் உணர்வாளர் கள் எவரும் அவர வர்கள் விரும்பும் கட்சிக்கு வாக் களித்துக் கொள் ளட்டும் எனலாம்.

அதேபோல பிரச்சார களத்திலும் ஒருவரை யொருவர் கடுமையாக விமர்சனம் செய்து சாடிக் கொள்ளா மல், நேரடியாக வும், மோதிக் கொள்ளாமல், கண்ணியமாகவும், நாகரிகமாகவும் பிரச்சாரம் செய்து நேர்மையாக அவரவர்களுக்குள்ள செல்வாக்கிற்கு யார் வருகிறார்களோ வரட்டும் என்கிற அளவில் விட்டு விடலாம் என்றும் சொல்லலாம்.

ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், வி.சி.க. என்கிற இதை இங்கு தனிப்பட்ட ஒரு கட்சியாகப் பார்க்காமல் அதைத் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு அங்க மாகவே பார்க்க வேண்டியுள்ளது. வி.சி.க. விற்கு அளிக்கும் வாக்கு காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அளிக்கும் வாக்காகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.அதாவது வி.சி.க. என்கிற ஒரு தனிப்பட்ட கட்சியின் பால் நாம் கருணை கொண்டு அனுதாபத்தோடு பார்த்து நாம் அளிக் கும் வாக்கு, இதுநாளும் ஈழத் தமிழர் களைப் படுகொலை செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு அதற்குத் துணை போகும் தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்காக ஆகிற நிலை உள்ளது.

ஏன், அ.தி.மு.க. கூட்டணியாக பா.ம.க. வென்றால் நாளை அது தில்லிக்கு ஆதரவாகப் போகாதா, போகாது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் சிலருக்கு எழலாம். நியாயம்.

தேர்தல் முடிந்த பிறகு தில்லியில் யார் ஆட்சியமைக்க வாய்ப்பிருக் கிறதோ அவர்களுக்கு அது காங்கிரசா, பா.ஜ.க.வா, மூன்றாவது அணியா என்பது பற்றிக் கவலைப்படாமல் தமிழகக் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. ஆதரவளிக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே எந்தக் கூட்டணி வென்றாலும் தில்லிக்குத் துணை போவதும், தில் லிக்கு ஆதரவளிப்பதும் நிச்சயம்.

என்றாலும், வெற்றி பெற்ற பிறகு தில்லியில் பேரம் பேசும் வாய்ப்போடு நிபந்தனை விதித்து அதற்கு ஆதர வளிக்க முன் வருவது என்பது வேறு. போட்டியிடும் தருணத்திலேயே காங் கிரசுக்கு கொத்தடிமை போல சேவகம் செய்து கொண்டிருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதில் பா.ம.க. நிலை முதல் நிலை என்றால், வி.சி.க.வின் நிலை இரண் டாவது நிலை. இந்த இரண்டாவது நிலையே இப்போது நாம் எதிர்க்க வேண்டியது. இந்த அடிப்படையில் நோக்க தெள்ளத் தெளிவாக தற்போதே காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் கூட்டு என காங்கிரசின் தோளில் கை போட்டு வரும், வி.சி.க.வை உணாவாளர்கள் ஆதரிக்க முடியது.

ஆகவே, இந்த அடிப்படையில், ஏற்கெனவே தமிழினத்தை ஏமாற்றி வஞ்சித்து துரோகமிழைத்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதும், எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஈழ ஆதரவுச் சக்திகளை நாடாளுமன்றம் அனுப்புவதுமே இத்தேர்தலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை யாக, நடைமுறையாக இருக்க முடியும். எனவே, அதற்கேற்பவே நாம் வாக் களிக்கவும், மற்றவர்களை வாக்களிக்கச் செய்யவும் வேண்டும்.

இதற்கடுத்து இன்னும் இரண்டு கேள்விகள். ஒன்று, இரண்டு அணிகளில் எது வுமே சரியில்லை. ஆகவே உணர்வா ளர்களாகிய நாம் மூன்றாவது அணி யாக வாய்ப்புள்ள இடங்களில் ஒரு சில வேட்பாளர் களை நிறுத்த லாமே என்கிற ஒரு கருத்தும், அடுத்து இரண்டு அணிகளுமே சரியில்லாதவை, ஆகவே இரண் டையுமே புறக் கணித்து யாருக் கும் வாக்களிக்காமல் இருந்து விட லாமே என்கிற ஒரு கருத்தும் சிலரிடம் நிலவுகிறது.

மூன்றாவது அணி : தமிழகத்தில் தமிழீழ உணர்வாளர்கள் கொண்ட மூன்றாவது அணி என்பது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க. ஆகிய கட்சிகள், தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகள் கொண்ட அணியாக உருப்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி உருவாக வாய்ப்பற்ற சூழலில், இக்கட்சிகள் இருவேறு முகாம்களில் இடம் பெற்றுள்ள நிலையில், வெறும் உணர்வாளர்கள், ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட அணி, மிகச்சிறிய பலவீனமான அணியாகவே அமையும். இந்த அணியால் தி.மு.க. - காங்கிரஸ் அணியை வீழ்த்த முடியாது என்பதோடு மட்டுமல்ல, வீழ்த்தும் வாய்ப்புள்ள அணியையும் இது பலவீனப்படுத்து வதாகவும் அமையும்.

காரணம், இந்த உணர்வாளர்கள் அணி எந்த வாக்குகளைப் பெற முடி யும். காங்கிரஸ் தி.மு.க. அணியி லிருந்து இதற்கு வாக்குகள் கிடைக் காது. பா.ம.க., தி.மு.க., வி.சி.க., அணியிலிருப்பவர்கள் மட்டுமே இதற்கு ஆதரவாகச் செயல் படுவார்கள். வாக்களிக்கவும் முன் வருவார்கள். இந்நிலையில் இது தி.மு.க. எதிர்ப்பு அணியை வலு விழக்கச் செய்வதாக, எதிர்ப்பு வாக்குகளைக் கலைத்து, அதை சிதறடிக்கச் செய்வதாகவே, இதன் மூலம் ஆளும் தி.மு.க. காங் கிரஸ் ஆதிக்கக் கூட்டணிக்கு வலு சேர்ப்பதாகவே முடியும் என்பதால் இந்த யோசனை தேவையற்றது, நமது இலக்குகளுக்கு எதிரானது என்பதை உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு : ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 25 விழுக்காடு முதல் 40, 50 விழுக்காடு வரையான மக்கள் ஏதாவதொரு காரணம் பற்றி வாக்களிக்காமல் தான் இருந்து வருகிறார்கள். இதற்கு வாக் களிக்க விரும்பாமை, இயலாமை, ஈடுபாடின்மை என பலத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பகுதிக்கு உரிய நலத்திட்டங்களை நிறைவேற்ற வில்லை என்கிற முடிவிலான காரணங் களும் இருக்கலாம். இதற்கு அப்பால் கொள்கை, கோட்பாடு சார்ந்த ஒட்டு மொத்தப் புறக்கணிப்புகளும் காரண மாக இருக்கலாம். எனில், இப்படிப் பட்ட புறக்கணிப்பு என்பது எதிர்ப்பைக் காட்டும் நடவடிக்கை என்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட லாமே அன்றி பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று கொள்ள முடியாது. பெரும் போராட்டமும் கொந்தளிப்பும் நிலவுகிற காலங்களில், தேர்தல் வெற்றி பெற்றாலும் வெற்றி பெற்ற கட்சியால் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையில், பெருவாரியான மக்கள் செல்வாக்கு நிலவுகிற சூழலில் தான் இந்தப் புறக்கணிப்பு என்பது அர்த்த முள்ளதாகவும் ஒரு விளைவை ஏற் படுத்துவதாகவும் இருக்கும்.

ஆனால், இன்று, இப்போதுள்ள மக்களின் விழிப்புணர்வு, அரசியல் நிலை சார்ந்த சூழலில் இந்தப் புறக் கணிப்பு குறிப்பாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. இது, இந்தப் புறக்கணிப்புக்கு அப்பால் மக்கள் எப்போதும் போல் வாக்களிக்கவும், வெற்றி தோல்விகள் வழக்கம் போல் நிகழவும்தான் வாய்ப்பளிக்குமேயல் லாது, மாறுபட்ட எந்த விளைவு எதையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில் சாதாரண காலங்களிலானால் ஒரு எதிர்ப்பு நட வடிக்கை, மறுப்பின் வெளிப்பாடு என்கிற அள வில் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாசகார சக்திகள் ஒரு இனத்தின் அழிவே இலக்காகச் செயல்படும் போது, அப்படிச் செயல்பட்ட முகத் தைத் தூக்கிக்கொண்டு வந்து வாக்குக் கேட்கும்போது, அதை வீழ்த்தவும், முறியடிக்கவும் என்னென்ன வாய்ப்பு கள் உண்டோ அனைத்தையும் பயன் படுத்திக் கொண்டு அதை வீழ்த்தும் இலக்கு ஒன்றே சரியான நிலைப் பாடாய் இருக்க முடியும்.

தவிர, புறக்கணிப்பு என்றால் யார் புறக்கணிப்பாளர்கள்? தி.மு.க. காங் கிரஸ் அணியாளர்கள் யாரும் புறக் கணிக்க மாட்டார்கள். மூன்றாவது அணி போல், மாற்று அணியில் உள்ள உணர்வாளர்கள்தான் புறக்கணிப்பார் கள். இதுவும் மூன்றவாது அணி மாதி ரியே தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை குறைக்கவே, அதைப் பலவீனப்படுத்தவே பயன்படும்.

ஆகவே, கொள்கைப் புனிதம், கோட்பாட்டுத் தூய்மைக் காக்க பரி சுத்த ஆவிகளாய்த் திரிய முயல்வது ஆதிக்க சைத்தான்களுக்கே துணை போவதாய் முடியும் என்பதை உணர்ந்து புறக் கணிப்பு நோக்கத்தை கொண்ட வர்கள் அந்நிலையைக் கைவிட்டு ஆதிக்க அணியை வீழ்த்த மாற்று அணிக்கு அது குறைவான ஆபத்து கொண்ட அணி எனக் கருதியேனும் இதற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழீழத்துக்கு ஜெ. ஆதரவு

இக்கட்டுரை ஜெ. தனி ஈழம் என்கிற கருத்தை முன் வைப்பதற்கு முன் எழுதியது. தற்போது அவர் தனி ஈழம் என்கிற கருத்தை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் உறுதிபடத் தெரி வித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய வாதங்களுக்கான நியாயத் துக்கு மேலும் வளம் கூட்டுகிறது. ஆகவே அனைத்தையும் கருத் தில் கொண்டு காங். - தி.மு.க. கூட்டணியை வீழ்த்தும் முனைப்பில் நாம் இயங்க வேண்டும்.

இ.க.க.(மா)-வுக்கும் நமது வாக்கா?

எல்லாம் சரிதான். ஆனால் காங். - திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என் பதற்காக தனி ஈழத்துக்கு எந்த நாளிலும் ஆதரவு தராத, எப்போதும் அதை எதிர்க்கும் இ.க.க.(மா)வுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று பலருக்குத் தயக்கம் இருக்கலாம். என்றாலும் வேறு வழியில்லை. இதற்கு வாக்களிக்காமல் விட்டால் ஆதிக்க அணி துரோக அணி, வஞ்சக அணிதானே ஜெயிக் கும் என்பதால் அந்த அணியை வீழ்த்த இ.க.க.மா.வுக்கும் அது ஜெ. அணியில் உள்ளது என்பதால் அதற்கு வாக்களிக்க வேண்டியது தான். தி.மு.க. காங்கிரஸ் அணியை வீழ்த்தி பின் இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

மாறாத கூட்டணி புனிதமானதா?

சில தலைவர்கள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள் என்று சில பேர் அதையே ஒரு கேலியாகவோ, மலிவாகவோ பேசி வருகிறார்கள். தேர்தல் அரசியல் என்று வந்து விட்ட பிறகு அடிக்கடி கூட்டணி மாற்றம் என்று அது குறித்து பேசுவது அர்த்தமற்றது.

காரணம், ஒரே கூட்டணியில் நிரந்தரமாய் இருப்பது புனிதமானது, பத்தினித் தனமாது என்றோ, அடிக்கடி அணி மாறுவது, புனிதம் கெட்டது, சோரம் போவது என்றோ அர்த்தமாகி விடாது.

எந்தக் கூட்டணியிலும் எவரும் நிலையாக இருந்தாலும் சரி, கூட்டணி மாறினாலும் சரி, அவர் எந்த சந்தர்ப்பத்தில், ஏன் இருக்கிறார், மாறுகிறார், எந்த நோக்கத்திற்காக மாறுகிறார். தற்போதைய பொது இலக்கு என்ன என்பதை வைத்தே அதை நாம் மதிப்பிட முடியும்.

இந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் கூட்டணி பற்றி யோசிப்போம். தற்போது தமிழக மக்களின் உயிரும் உணர்வுமாய் இருக்கிற பிரச்சினை, பொதுவில் எல்லோருடைய கவனத்திலும், கவலையிலும் உறைந்திருக்கிற பிரச்சினை ஈழப்பிரச்சினை.

இதில் ஜெ. கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிற கட்சிகளில் இ.க.க.மா. தவிர அனைத்தும் ஈழ ஆதரவுகட்சிகள். ஆகவே இக்கூட்டணியில் ஏதும் முரண் இல்லை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஈழ ஆதரவு கூட்டணி அல்ல, எதிர் கூட்டணி. வி.சி.க. ஆதரவு அணி. ஆகவே முரண்பட்ட கூட்டணி. எனவே, இந்தக் கூட்டணி வேறுபாட்டையும் நாம் வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும்.

துரோகம்

தமிழக அரசியலின் மிகப் பெரும் சோகம் கருணாநிதியின் துரோக, வஞ்சக குடும்ப அரசியலை வீழ்த்துவதற்கு வலுவான ஒரு மாற்று அணி இல்லை என்பதுதான். இடையில் ஜெ. முதல்வராக வந்தார். வந்து என்ன பயன்? கருணாநிதி ஆட்சியில் கோபாலபுரம் குடும்ப ஆதிக்கம் என்றால், ஜெ. ஆட்சியில் மன்னார்குடி குடும்ப ஆதிக்கம். ஜெ. மட்டும் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்து நல்லாட்சி தந்திருந்தால் கருணாநிதி குடும்ப ஆட்சியை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் தடுக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு கிட்டாமல் போயிற்று. அடுத்து இருக்கிற பிற கட்சிகள், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க., ஆகிய ஒன்றிணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்கும் என்று பார்த்தால் அதுவும் கை கூடி வரவில்லை. அதனால் தனக்கு நிகராக யாரும் இல்லை என்கிற எக்காளத்தில் தில்லியின் கூட்டோடு தில்லியின் பின்புலத்தோடு, காங்கிரஸ் - தி.மு.க. பரஸ்பர உதவியில் நடந்து கொண்டிருக்கிறது கருணாநிதி ஆட்சி. எனவே, இந்த சூழலையும் நாம் கருத்தில் கொண்டு இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. காங்கிரசின் துரோகத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.

பா.ம.க., வி.சி.க. நிரந்தர இணக்கம் தேவை

பா.ம.க., சிறுத்தைகள் அமைப்பினர் தொடக்க காலங்களில் அடிக்கடி ஒருவருக் கொருவர் மோதிக் கொள்ள சமூகத்தில் எப்போதும் ஒரு பதட்ட நிலை இருந்து வந்தது. பின் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டுப் போராட தொண்டர்களிடமும் நல்ல இணக்கம் ஏற்பட்டு இரு பிரிவினருக்குமிடையே மோதல் எதுவும் நேராமல், சமூகத்தில் அமைதி நிலவியது. இந்த இணக்கமும், அமைதியும் தொடரவேண்டும் என்பதே அனைவரதும் அவா. இதற்கு மருத்துவர் இராமதாசு எந்த அளவு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கோரப்படுகிறதோ, அதே அளவு ஒத்துழைப்பைத் தர வேண்டியது திருமாவின் பொறுப்பும். எனவே தாற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த தேர்தல் காலப் பிரிவை பெரிது படுத்தாமல் நாகரிகத்தோடும் கண்ணியத்தோடும் சுமுகமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி தேர்தலுக்குப் பின் எப்போதும் போல் இவ்விரு அமைப்பினரும் இணக்கமாகவும் சுமுகமாகவும் இயங்கக் கேட்டுக் கொள்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Puramboakku
2009-05-10 11:36:00
Puramboakku@gmail.com

ஜெயலலிதாவை எந்த அளவுக்கு நம்பலாம் என்று தெரியாது. ஆட்சியில் இல்லாத போதே ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி விட்டு, அடுத்த நாள் காலையில் எல்லா அ.தி,மு,க எம்.பி. களும் ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொண்டு வாக்கு அளித்தது நாம் அறிந்ததே. அதே நேரம் சில விஷயங்களில் அவர் பிடிவாதமாக இருந்து இருக்கிறார்.

ஆனால் இந்த தேர்தலில் முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. அது "ஈழத்தில் அப்பாவி மக்கள் செத்து மடிவது, சோறு தண்ணி இல்லாமல் தவிப்பது இதெல்லாம் சாதாரண விஷயம் தானா? இல்லை மக்களால தாங்கிக் கொள்ள முடியாத விஷயங்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி.

'2004 ம் வருடத்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்ததும் பி.சே.பி கட்சி ஆட்சியை இழந்ததற்கும், காங்கிரெஸ் ஆட்சியை பிடித்ததற்கும் முக்கிய காரணம் தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் தான்' என்றே தேர்தல் அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.

எனவே தமிழ் நாடு எந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சோனியாவுக்கும் நன்கு தெரியும். ஆனால் ஈழப் பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், அதை கலைங்கர் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து, மொழிப் புலமையை வைத்து, கட்சி வலிமையை வைத்து சமாளித்து தங்கள் கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தந்து விடுவார் என்றே காங்கிரெஸ் கருதியிருக்கும்.

பதிலாக கலைங்கரை விட்டு பிரியாமல் அவருடன் கூட்டணியில் இருந்து தமிழகத்தில் அவருடைய அரசே தொடர நாம் உதவினால் போதும், மேலும் கலைங்கர் விரும்பும் மைய அமைச்சர் பதவிகளையும் தருவோம், கலைங்கர் தாங்கள் நம்பக் கூடிய, தங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத உறுதியான நண்பர் என்றே காங்கிரெஸ் கருதியது. அதை ஒகேனேக்கல் குடி நீர் திட்டத்தில் கலைங்கர் பின் வாங்கியதை வைத்து உறுதியாகிய‌து.

அதாவது கலைங்கரை தமிழக மக்களை விட சோனியாவும், காங்கிறேசும் நன்றாக புரிந்து கொண்டு விட்டன.

கலைங்கரோ, நான் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டு விட்டேனே, வண்ணத் தொலைகாட்சி பெட்டி, சமையல் எரி வாயு அடுப்பு இவ்வளவும் வழங்கி விட்டேனே. இதையெல்லாம் வாங்கிக் கொண்ட பின் ஓட்டைப் போட்டு விட்டு போக வேண்டியாய்து தானே, என் குடும்பம் மட்டுமே ஆண்டால் என்ன, ஜெயா என்ன ஒழுங்கா? என்பதாகவே உள்ளது.

என‌வே க‌லைங்க‌ரை ம‌ட்டும் த‌னிமைப் ப‌டுத்தி ப‌ழி கூறுவ‌து ச‌ரியா? என்ற‌ கேள்விக்கு ப‌தில் க‌லைங்க‌ர் தானே த‌மில‌க‌ முத‌ல்வ‌ர், க‌லைங்க‌ர் தானெ மைய‌ அரசின் பிர‌தான‌ காவ‌ல‌ர், க‌லைங்க‌ர் தானே காங்கிரெஸ் கட்சியின் மிக‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்‍, அவ‌ர் நினைத்து இருந்தால் அழுத்த‌ம் குடுத்து ஈழ‌த்தில் நில‌மையை மாற்றி இருக்க‌ முடியாதா என்ற‌ கேள்வியெ!

இந்த‌ தேர்த‌லில் ஜெயாவுக்கு விழும் ஓட்டுக்க‌ள், க‌லைங்க‌ர் ‍‍காங்கிரெச் கூட்ட‌னி ஈழ‌த்தில் ந‌ட‌த்திய‌ திருவிள‌யாட‌ல்க‌ளுக்கு எதிராக‌ விழும் ஓட்டுக்க‌ள்.

இந்த‌ தேர்த‌லில் க‌லைங்க‌ர் எவ்வ‌ள‌வு இட‌ங்க‌லை வெல்லுகிராரொ, அவ்வ‌ள‌வு தூர‌ம், த‌மில‌க‌ ம‌க்க‌ள், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌தை ஒத்துக் கொண்ட‌தாக‌வே அமையும்.

Dr. V. Pandian
2009-05-10 06:41:00
porkkaiponds@yahoo.co.in

எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடவேண்டாம் என்று போகாத ஊருக்கு வழி சொல்லி சில மின்னஞ்சல்கள் வருகின்றன. தேர்தல் புறக்கணிப்பு நாம் ஆண்டாண்டு காலமாய் செய்வது தான். புதிதாக காணப்போகும் பலனென்ன?

இந்திய தேசியம் என்பது தான் இன்று தமிழினத்தின் புதைகுழி என்று நாம் தௌிவாக உணர்ந்துள்ளோம். அதை ஒழித்து தமிழகம், வடவராட்சியிலிருந்து மீள்வது தான் நமது திட்டம், இனி வருங்காலங்களில். ஆளும் காங்கிரஸ் கட்சிதான் ஈழப்படுகொலையின் கர்த்தா.

எனவே, காங்கிரஸாகிய தேசியக் கட்சியைத் தோர்க்கடிப்பது தான் நமது முதல் வேலை. அது ஜெயலலிதாவுக்கு பயன்பட்டாலும் தவறில்லை. அவர் தனி ஈழம் தான் தீர்வென்றும் சொல்லியுள்ளார். புலிகளை ஆதரிக்கிறேன் என்று அவர் சொல்லவில்லை என்றாலும், பார்ப்பனீயம் நமக்காக பேசியுள்ளது என்பதே நமது எழுச்சியின் வெற்றி. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், நமது போக்குணமும், எழுச்சியும் நமது எதிரிகளை நம்மிடம் மண்டியிடவைக்கும் என்பது தான்.

அதே சமயம், பெற்றிபெற்ற பிறகு ஜெயலலிதா நமக்கு நாமம் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் நமது போராட்டங்களாலும், போர்க்குணத்தாலும் அடையக்கூடியது தான்.

அடுத்த ஆட்சி அமையும் போது ஜெயலலிதாவை கீழ்க்கண்ட முறையில் பேரம் பேசவைக்க வேண்டும்.

1. தனி ஈழம் தீர்வு என்பதை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்க வேண்டும்.

2. ராணுவ அமைச்சு, வௌியுறவுத் துறை ஆகியவற்றை தமிழருக்கு கொடுக்க வேண்டும்.

3. இலங்கைக்கு இந்தக் கூட்டணி சொல்லும் தமிழர் ஒருவரைத்தான் தூதுவராக நியமிக்க வேண்டும்.

4. தேசிய பாதுகாப்பு செயலகத்தில் தமிழருக்கும் பதவியளிக்கப்பட வேண்டும்.

5. ஈழத்தமிழர் பற்றிய தூதுக்குழுவில் தமிழரும் முக்கிய இடம் பெறவேண்டும்.

அடுத்த சட்டசபைத் தேர்தல் வருவதால், ஜெயலலிதா இவ்வகையில் பேரம் பேசித்தான் ஆகவேண்டும். அவரைப் பேசவைப்பது நமது விளம்பர போராட்டங்களும், போர்க்கணமும் தான்.

இனி இவர் திமிராகப் பேசி அரசியல் நடத்த முனைந்தால், தமிழக அரசியலையே (தமிழ் நாட்டையும்) விட்டு அவர் விரட்டப்படுவார் என்று அவர் உணரவேண்டும்.

தமிழ் மக்களை நாம் அரசியல் மயப்படுத்தினால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும்.

அதற்கான ஆக்க வழிகளைத்தேடிச் செயலாற்ற வேண்டும்.

இனி ஓயாதே தமிழா!



Subavee Thaasan
2009-05-10 09:59:00
subaveethaasan@gmail.com

கலையரை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பவரும் இல்லை.கண்டபடி விமர்சிப்பவரும் இல்லை(மேடை நாகரீகம் சிறிதும் இல்லாமல்,வயதிற்கும்,அறிவிற்கும்,அனுபவத்திற்கும் சிறிதும் மதிப்பு கொடுக்காமல் ஏக வசனத்தில் விமர்சனம் செய்வது போல...).

அவரின் மீது எங்களின் விமர்சினத்திற்கும்,உங்களின் விமர்சினத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
அவர் பல விடயங்களில் மாற வேண்டும் என்பதின் அடிப்படையில் அமைந்ததே எங்களின் விமர்சனம்.
அவரை அடியோடு மாற்றிவிட வேண்டும்,அழித்து,ஒழித்து விட வேண்டும் என்பதின் அடிப்படையில் அமைந்திருக்கிறது உங்களின் விமர்சனம்.

கலையர் எது செய்தாலும் அதை நாடகம் என்றும்,தமிழின துரோகி என்றும்,பித்தலாட்டக்காரர் என்றும்,அம்மா எந்த நாடகம் அரங்கேற்றினாலும் அவர் பிடிவாதக்காரி அதனால் நம்பலாம் என்று அவரை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டே(சேது சமுத்துரத்திட்டத்தை ஆதரித்தது பின்னால் எதிர்ப்பது,ஈழம் என்ற வார்த்தையையே உபயோகிக்காமல் அவர்களின் விடுதலை அல்லது சுய நிர்ணயம் பற்றி ஒரு தீர்மானமும் நிறைவேற்றாமல்,அதை பற்றி பேசாமல்,அதை பற்றி பேசினவர்களை பொடோவில் போட்டு,போர் என்றால் மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது என்று புது வியாக்கியானமும் கொடுத்து இன்று நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் திறனாய்வுப்படி ஓட்டு வங்கிக்காக ஈழ விடுதலை பற்றி பேசுவது) நீங்கள் இப்படி சப்பைக்கட்டு கட்டுவதே மேலே நான் சொன்ன விளக்கத்திற்கு சிறந்த உதாரணம்.

நாங்கள் விரும்புவது நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் வேண்டாம்,கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம்.
இன்றைய சூழ் நிலையில் அம்மா ஆட்சி மட்டும் இருந்திருந்தால் எந்த அளவுக்கு நம்மால் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க முடிந்திருக்கும் என்பதை நிச்சயம் உங்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
மேலும் அம்மா ஆதரவோடு மத்தியில் அமையும் ஆட்சி அமைந்தாலும்,அம்மா ஆட்சி இங்கே அமைந்தாலும் அவர் எந்த அளவுக்கு ஈழ தமிழர் விடயத்தில் பேசுவார் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்,அப்படி பேசுகிற பட்சத்தில் நீங்கள் அதற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டாமல் இருந்தால் சரி...

விடுதலைப் புலிகள் இல்லாமல் ஈழ விடுதலை என்பது இயலாதது என்று கூறி விட்டு அதிமுக விற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி அவர் கட்சியினரே அடிக்கப் பாய்ந்த, அய்யா 'பொடோவில் கைதான' நெடுமாறன் அவர்களுக்கும்,ஓட்டு பிச்சை கேட்டு,அம்மாவிற்கு பயந்து ஈழத்தமிழர் என்ற பெயரை இலங்கை தமிழர் என்று தம் அமைப்பிற்கு பெயர் மாற்றிய,'பொடோ புகழ்' வைகோ அவர்களுக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்பற்றியெல்லாம் விமர்சித்தால் நாங்கள் ஒருகாலத்தில் அம்மா அவர்களையும் விமர்சித்திருக்கிறோம் பேர்வழி என்று ஒன்று,இரண்டு இணையத்தளப் பக்கங்களை காண்பித்து விட்டு செல்வது.
உங்களில் யாருக்கும் ஈழ தமிழர் பிரச்சனையை விட இங்கெ உள்ள ஆட்சியை ஒழித்து விட வேண்டும் என்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பது கண்மூடித்தனமான உங்களின் விமர்சனம் மூலம் தெள்ளத் தெளிவாகவே விளங்குகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும்,இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும்(கருணா வழி தொட்ட சில உறுப்பினர்களை தவிர),ஈழத்தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திராசனிடமிருந்தும் கலையர் மற்றும் சுபவீ அவர்களுக்கு வரும் அழைப்புகளின் மூலம் உங்களின் ஆட்சியை தவிர வேறு ஆட்சியில் இந்த அளவுக்கு ஆதரவை,எழுச்சியை பெற முடியாது என்று கூறுவது மூலம் அவர்களின் ஆதரவு கிடைக்கவே செய்கிறது,ஆனால் உங்களின் கண்மூடித்தனமான விமர்சனங்கள்,எதிர்ப்புகள் நான் மேற்சொன்ன காரணத்திற்கு அடிப்படையாகவே அமைகிறது.

மேலும் சுபவீயைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி உங்கள் எவருக்கும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.அவரை மிகவும் நெருக்கமாகத் தெரிந்தவர் அடிப்படையில் ஒன்றை தெளிவு படுத்தும் கடமை என்னிடம் இருக்கிறது.ஒரு காலத்தில் கலையரையும் விமர்சனம் செய்து(கண்மூடித்தனமாக,கண்டபடி பிதற்றாமல்...)அம்மா அவர்களையும் எதிர்த்து பொடோவில் ஒன்றரை வருடம் சிறைத்துன்பம் அனுபவித்து,எந்த பதவி,பகட்டிற்கும் ஆசை படாமல் வாழும் அவரைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அம்மாவின் ஆட்சி காலத்தில் எல்லாம் பொட்டிப் பாம்பாய் இருந்து கொண்டு அய்யா ஆட்சிக்கு வரும்பொழுது எல்லாம்(கண்டுக்க மாட்டார் இல்லை மிஞ்சிப் போனால் 2 அல்லது 3 மாதம் சிறையில் போடலாம் அதுவும் கூட்டணிக் கட்சிகளுக்காக அவ்வளவு தான் என்ற தைரியத்தில்!?) வேட்டியை மடித்துக் கொண்டு விமர்சனம் செய்யும் உங்களுக்கு நிச்சயமாக இல்லை.சுபவீயைப் பற்றி எதுவும் தெரியாமல் கண்மூடித்தனமாக நீங்கள் விமர்சனம் செய்வதின் மூலமே தெரிகிறது,எதைப் பற்றியும் உங்களின் விமர்சனம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது!?

ஈழத் தமிழர்களுக்காக வீராவசனம் பேசிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து திமுக,அதிமுக,காங்கிரஸ் மற்றும் பிஜேபி எதிராக ஒரு அணியை உருவாக்கியிருந்தால் அதற்குத்தான் எனது ஓட்டு விழுந்திருக்கும்.இதைப் பற்றி விமர்சனம் செய்ய உங்களில் எவருக்கும் தோணவில்லையே...தயவு செய்து ஆக்கப் பூர்வ விமர்சனங்களை முன்வையுங்கள்,அழிவிற்கான விமர்சனங்களை,காட்டு மிராண்டித்தனமான விமர்சனங்களை கைவிடுங்கள்.
காங்கிரஸ் இலங்கைப் போருக்கு மறைமுக ஆதரவாக இருப்பது மறுக்க,மறைக்க முடியாத உண்மையே...அதற்காக 18 எம்.பிக்களை(மதிமுக,சிபிஎம்,பமக மற்றும் காங்கிரஸ் தவிர) திரும்ப பெறுவதன் மூலம் மத்தியில் ஆட்சியை கலைத்து விட முடியும் என்பது இயலாத காரியம் என்பது அனைவருக்கும் தெரியும்(மேலும் மா நில ஆட்சி இழப்பதை உங்களை தவிர எந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும் விரும்ப வில்லை என்பது இன்னொரு செய்தி)அவ்விதம் திரும்ப பெற்றாலும் கம்யூனிஸ்ட் வெளியில் சென்ற பொழுது காங்கிரஸ் தக்க வைத்தது போல தக்க வைத்து விடுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.....
சரி நாங்களும் ஒத்துக் கொள்கிறோம் கலையருக்கு குடும்ப ஆட்சி,பதவி வெறி இருக்கவே செய்கிறது,இதே விமர்சனங்களை அய்யா ராமதாஸ் மீது உங்களில் எவரும் சுமத்தாதது ஏன் என்று தான் தெரியவில்லை!?

1956 முதற்கொண்டு பல தீர்மானங்கள்,போராட்டங்களில் ஈடுபட்டு,1983 இல் தனித்தமிழீழம் தான் தீர்வு என்று முன் மொழிந்து,டெசோ என்பதன் சுருக்கமான தமிழீழ பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி தனித்தமிழீழத்தை ஆதரித்து பின்னாளில் சகோதர யுத்தத்தால் எம்.ஜி.ஆர் விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரிக்க ,கலையரின் ஆதரவாக சிறீசபாரத்தினத்தின் டெசோவை கலையர் ஆதரிக்க,அதற்குப் பிறகு சிறீசபாரத்தினத்தின் கொலைக்குப் பிறகும் திமுக வின் நிலைப்பாடு தனித்தமிழ் ஈழமாகவே இருந்தது,பின்னாளில் பத்மனாபா மற்றும் ராஜீவ் கொலைகள் போன்ற துன்பியல் நிகழ்வுகளுக்குப் பின்பு பல சந்தர்ப்பங்களில்,ஜெயின் கமிஷன் மூலமாகவும் திமுக பல இடர்ப்பாடுகளை சந்தித்து உள்ளது,2 முறை ஆட்சியயையும் இழந்துள்ளது(இப்பொழுது எதிர்ப்பவர்கள்,விமர்சிப்பவர்கள் அப்பொழுது ஒற்றை இடம் மட்டுமே ஜெயித்த திமுக விற்கு ஆதரவளித்துருக்க வேண்டிஅது தானே...).இன்றோ திமுக இருதலை கொள்ளி எறும்பாக இருக்கிறது,கோவி லெனின் தாகத்தில் சுட்டிக்காட்டியது போல அறிவுமதி கூறியது போல ஈழப் பிரச்சனைக்காக எம்.ஜி.ஆர் கொடுத்த தொகை அதிகம்,கலையர் கொடுத்த விலை அதிகம்,இதில் ஒரு சதவீதம் கூட ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாத அம்மாவிற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவது தான் வேதனையாக உள்ளது.

காங்கிரஸ் நிற்கும் இடங்களை தோற்கடிப்போம்,அதற்குப் பதில் அம்மாவிற்கு ஓட்டு என்பது முட்டாள்தனமான காரியமே......
மறுபடியும் கூற கடமைப்பட்டுள்ளேன்,,,,ஆக்கப்பூர்வ விமர்சனங்களை தைரியமாக எந்த காலத்திலும் முன் வையுங்கள்,கண்மூடித்தனமான,அழிவுப்பூர்வனமான விமர்சனங்களை கைவிடுங்கள்.

பொரம் போக்கு
2009-05-11 05:57:00
puramboakku@gmail.com

ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது.

ஈழப் பிரச்சினைக்காக தியாகம் செய்தாராம்! என்ன தியாகம் ஐயா? தமிழுக்காக இது வரை பலமுறை " இருப்பது ஒரு உயிர், அது போவது ஒரு முறை" என்று வார்த்தையிலேயே தியாகம் செய்தது போலவா?

1975 ல் ஆட்சியை இழந்தது வூழல் புகார்களின் அடிப்படையில்.

1989 ல் ஆட்சி இழந்ததற்கு காரணம் ஜெயாவின் ஆதரவில் சந்திர சேகர் ஆட்சி செய்து கொண்டு இருந்ததால் (அப்போது தி.மு.க ஒற்றை இடத்தில் கூட ஜெயிக்கவில்லை)!

ஆனால் சமயத்திற்கு ஏற்றார் போல தமிழ் மொழிக்காக ஆட்சியை இழந்தோம், தமிழருக்காக ஆட்சியை இழந்தோம், ஈழத் தமிழருக்காக ஆட்சியை இழந்தோம் என்று குஸ்பூ புடவை, சிம்ரன் புடவை , ஜோதிகா புடவை என்றே அதே டிசைன் புடவையை 5 வருடத்திற்கு ஒரு முறை பேர் மாற்றி விற்பது போல விற்கிறார்கள்.


இப்போது என்ன செய்தார்கள்?

...அதற்காக 18 எம்.பிக்களை(மதிமுக,சிபிஎம்,பமக மற்றும் காங்கிரஸ் தவிர) திரும்ப பெறுவதன் மூலம் மத்தியில் ஆட்சியை கலைத்து விட முடியும் என்பது இயலாத காரியம் என்பது அனைவருக்கும் தெரியும்!


The United Progressive Alliance (UPA) on Tuesday won the trust vote in the Lok Sabha by a margin of 19 votes after a two-day debate, often marked by acrimony and allegations. The ruling coalition secured 275 votes as against 256 by the Opposition. As many as 10 members were absent or abstained from voting.

Prime Minister Manmohan Singh described the outcome as “a convincing victory” for the UPA government, the Congress and the supporting parties. “This will send a message to the world at large that India is prepared to take its rightful place in the comity of nations,” Dr. Singh told journalists after he emerged from the Parliament House

275 லே 18 இடங்களைக் கழித்தால் ஆளும் காங்கிரெஸ் கூட்டணிக்கு மொத்த ஆதரவு 257 இடங்கள்தான்.

275- 18 = 257

அப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவு தராத 18 பேரும், ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து இருந்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான மொத்த வாக்குகள்

256 + 18 = 274.

எனவே இந்த காங்கிரெஸ் அரசை தாங்கிப் பிடித்தது, காவல் காத்து வந்தது,இந்த அரசுக்கு உயிர் மூச்சாகவே இருந்தது, கழகம் தான், கலைங்கர் தான் என்பது உள்ளங்கை நெல்லி கனி!

ஈழத்திலே குண்டுகள் தமிழர் மீது சீறிப் பாய்கிறது. ஆனால் ஒரு பெரியவர் சென்னையிலே வந்து என்ன பேட்டி குடுக்கிறார்?

"கன ரக ஆயுதங்கள் உபயோகப் படுத்தப் படவில்லை" என்கிறார்.

இலகு ரக ஆயுதங்கள் உபயோகப் படுத்தினால் குளிர் சாதன வசதி செய்தது போல இருக்குமா?

"இலகு ரக ஆயுதம் தான் உபயோகப் படுத்தினார்கள், குண்டு மெதுவாகத் தான் பாய்ந்தது, ரத்தம் மெதுவாகத் தான் வழிந்தது. கால் மட்டும் தான் உடைந்தது" - இப்படியெல்லாம் கூடக் கூறுவார்கள் போல இருக்கிறது.

எந்தப் பாவமும் செய்யாத , தமிழை தாய் மொழியாக கொண்டதை தவிர வேறு எந்த தவறும் செய்யாத மக்கள் கொத்து கொத்தாக சாகிறார்கள். இங்கெ விமரிசனம் செய்தால் இவர்களுக்குப் பொருக்காதாம்!

நன்கு ஜால்ரா அடிப்பதோடு நின்று விடாதீர்கள், இப்படி எல்லாம் எழுதினோம் என்று உங்கள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். வாலி, வைர முத்து, பாலச்சந்தர், சுப வீ போல நீங்களும் மங்களமாக வாழ வழி பிறக்க கூடும்!

Milton
2009-05-11 09:51:00
amvinoth143@gmail.com

இடது சாரிகளின் 60 இடங்களையே திரும்பப் பெற்ற மன்மோகன் அரசு,இன்னும் சற்று கூடுதலாக 18 இடங்களைப் பெறுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதும் விவாதத்துக்குரியதே.....
கலைன்யரை எதிர்க்கிறேன் பேர்வழி என்று எந்த கொள்கையிலும் பிடிபடாத,பிடிப்பில்லாத செயலலிதாவிற்கு ஓட்டு என்பதும் கேள்விக்குறியதே....

Puramboakku
2009-05-12 04:29:00
puramboakku@gmail.com

இப்போது ஜோசியமும் கூற ஆரம்பித்து விட்டார்கள். பதினெட்டு பேர் எதிர்த்து வாக்கு அளித்து இருந்தாலும், வேறு 18 பேரை பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பார்களாம் கொள்வார்களாம். மை போட்டு பார்த்தார்களா?

நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் குடுத்து விலைக்கு வாங்குவது பற்றிக் கேட்ட போது , அதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறிய தலைவரின் அனுதாபிகளுக்கு, 18 பேரை வாங்குவது பெரிய கடினமான செயலா- என்று தோன்றுவது இயற்க்கை தானே!

ஆனால் பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 545 பேர்தான் என்பதை மறந்து விட்டார்கள். மொத்த இடங்கள் 545 தான். முக்கி, முனகி, வளைத்து இழுத்து எல்லாம் செய்து 275 பேரை சேர்த்து வைத்தார்கள். இன்னும் பதினெட்டு பேரை எங்கிருந்து கொண்டு வருவார்கள்? வானத்திலிருந்து குதிப்பார்களா? இல்லை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் கள்ள ஓட்டு போடும் முறைகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளனவா? நாடாளு மன்ற உறுப்பினர்களை தர அள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருக்கிறதா?

என்னவோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது கட்சி கூட்டத்திற்கு காசு குடுத்து ஆள் சேர்ப்பது போல பேசுகிறார்கள். நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்பது சுவிஸ் வங்கியில் போடப்பட்ட பணமா- தேவையான போது தொண்டு நிறுவனம் மூலமாக பெற்றுக் கொள்வதற்கு?

கொள்கை குன்று, குணாளன், இலட்சிய அரிமா ஆட்சியில் தான் தமிழரைக் காக்க ஆரம்பிக்கப் பட்ட பெரிய போரட்டங்கள் எல்லாம், கடைசியில் டிஞ்சர், பேண்டேசு அனுப்பும் வெற்றியாக திசை திருப்பியது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம், ஒரு முழு இனப் படுகொலையை தமிழ் வார்த்தைகளில் விளையாடி மறைக்க முடியுமா?

Milton
2009-05-12 11:22:00
amvinoth143@gmail.com

அய்யா கொள்கை குலவிளக்கே..... நடைமுறையில் உள்ளதைத் தான் கூறினோம்.
அது சரி நீங்கள் மட்டும் அம்மா பிடிவாதக்காரி அதனால் அவர்களை ஒருவேளை நம்பலாம், நம்புவதில் தவறில்லை(முக்கியமாக ஈழத் தமிழர் விடயத்தில்!?)என்று மை போட்டோ இல்லை கை பார்த்தோ சொல்வது சரியாகப் படுகிறதோ!!!

Puramboakku
2009-05-13 05:13:00
puramboakku@gmail.com

அம்மையார் எப்படிப்பட்டவர் என்று எல்லா தமிழக மக்களுக்கும் தெரிவது போலவே எனக்கும் தெரியும். அதிகார துஷ் பிரயோகம், வன்முறை அரசியல், சொத்து குவிப்பு ஆகியவற்றில் தமிழினத் தலைவரே வியந்து கன்னத்தில் கை வைக்கும் வண்ணம் செயல் பட்டவர்.

எனவே அம்மையாரின் சார்பாக நான் பேச வரவில்லை. அவர் எனக்கு தலைவியுமில்லை. நான் அம்மையாரின் அனுதாபியுமில்லை.

ஆனால் வீராணம், வீராணம் என்று பெரிதாக பேசி விட்டு, சில பல சிமிட்டி குழாய்களை இங்கும் அங்கும் போட்டு விட்டு சென்று விட்டார்கள். இது நடந்தது 1974ல், அதற்குப் பிறகும் அவர் 1988 லும் , 1996 லும் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் வீராணம் பற்றி பேச்சே இல்லை. அம்மையாரோ 2003ல் ஆறே மாதத்தில் அதே வீராணம் நீரை சென்னைக்கு கொண்டு வந்தார். இப்போதும் அது சென்னையின் குடி நீர் தேவைக்கு பெரிதும் உதவுகிறது.


கலைங்கரும் இம்முறை சாதனைகளை செய்திருக்கிறார். சென்னையில் பாலங்கள் அமைக்கப்பபட்டுள்ளன. ஆனால் அது என்னவோ தெரியவில்லை, தமிழரின் குடிநீர், வாழ்வு பிரச்சினை என்று வரும் போது தமிழனத் தலைவர் தமிழனைக் கை விடுகிறார்.


ஆனால் ஐயா பாலங்கள் முக்கியம் தான், நன்றி கூறுகிறோம். ஆனால் பாலங்களை விட மனித உயிரும் , வாழ்வும் முக்கியமானது.


ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள். ஒரு நாள் முழுதும் குடிக்க நீர் இல்லாமல் இருந்து பாருங்கள். உண்ண உணவில்லாமல் இருந்து பாருங்கள். அந்த நேரத்தில் நமது தலையில் குண்டு விழுந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நமது மனைவி , மக்கள் அந்த சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன? அவர்களுடைய அம்மா அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த மொழி , அவர்களுடன் பேசிய மொழி தமிழ் மொழி - வேறு எந்த தவறு அவர்கள் மீது?

அப்பாவி மக்கள் , தினமும் வேலை செய்து விட்டு குடும்பத்தோடு வாழ்பவர்கள் - வன்முறையில் ஈடு படாதவர்கள், அவர்கள் சாவது நமது சகோதரன் சாவது போலத்தான் , நாம் சாவது போலத்தான்.

அப்படிப் பட்ட அப்பாவி, அவன் தமிழனாக இல்லாவிட்டாலும் நாம் அவனுக்காக குரல் கொடுக்க வேண்டாமா? இப்போது அந்த அப்பாவி "அய்யோ, அம்மா, கடவுளே" என்று கத்துவது நமக்கு தானே புரியும்.

மனதில் என்றும் கருணை எண்ணத்தை விட்டு விடக் கூடாது. நம் மனசாட்சியை ஆழ் குளிர சாதன பெட்டியில் வைக்க கூடாது.

அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும்.

ஐயா நாங்கள் உங்களிடம் ஆட்சியை கேட்கவில்லை. இந்தியாவையும் , தமிழகத்தையும் பரம்பரை பரம்பரையாக ஆண்டு கொள்ளுங்கள் , அதற்கு உங்களைப் போன்றவர்கள் தூணாக இருங்கள்.

அப்பாவிகளை , எங்களைப் போன்றவர்களை , எங்கள் உறவுகளை தயவு செய்து உயிரோடும் மானத்தோடும் வாழ விடுங்கள் என்று மட்டும்தான் கேட்கறோம்.

இந்த‌ தேர்த‌லில் ஜெயாவுக்கு விழும் ஓட்டுக்க‌ள், க‌லைங்க‌ர் ‍‍காங்கிரெச் கூட்ட‌னி ஈழ‌த்தில் ந‌ட‌த்திய‌ திருவிள‌யாட‌ல்க‌ளுக்கு எதிராக‌ விழும் ஓட்டுக்க‌ள்- ஜெயாவைப் பாராட்டி விழும் ஓட்டுகள் அல்ல!






Milton
2009-05-13 09:22:00
amvinoth143@gmail.com

தமிழரின் வாழ்வுரிமைக்கு அம்மையார் தான் பொருத்தமானவர் என்று கூறுகிறீர்களா என்று புரியவில்லை.
வாங்கும் நிலையில் இருக்கும் நாம் காமராசர் ஆட்சி முதற்கொண்டு இன்று வரை கர் நாடகா மற்றும் ஆந்திரா விடம் இருந்து பேச்சு வார்த்தை மூலமே காவிரி மற்றும் கிரிஷ்ணா நதி நீரை அந்த மக்களுக்கே தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் இரவு நேரத்தில் திறந்து விடுவதன் மூலம் பெற்றுக் கொண்டு வந்தோம்.
ஆனால் அம்மையார் வழக்கு தொடர்ந்தார்,அந்த வழக்கு விசாரணை எல்லாம் எப்படி போனது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
பிடிவாதமாகவும்,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சாதிகாரமாக எடுக்கும் பல முடிவுகள் சர்வாதிகார நோக்குடனும்,முட்டாள் தனமாகவே போய் முடியும்.
இந்த பிரச்சனை மட்டும் அல்ல பணியாளர்களை நீக்கம் செய்தது போன்ற பல விடயங்களை கூறலாம்.
கலைன்யரை எதிர்ப்பதாக அம்மையாரை ஆதரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே.....
ஈழத் தமிழர் விடயத்தில் இணைந்த அனைவரும் தி மு க,அதி மு க,பி ஜே பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விலக்கி இங்கே ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி ஒரு முன்னுதாரணத்தை எதிர்கால சந்ததியினருக்கு உருவாக்கியிருக்கலாம்.
நிச்சயமாக கணிசமாக அவர்களால் ஓட்டுகளை பெற்றிருக்க முடிந்திருக்கும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP