Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
திராவிட இயல் - சில குறிப்புகள்
வீ. அரசு


இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் பற்றிய மறுபரிசீலனைகளும் புதிது புதிதான உரையாடல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிற காலமாக அண்மைக்காலம் காணப்படுகிறது. தலித் இயக்கம் பற்றிய கருத்துருவாக்கங்கள் மிக வீரியமிக்க சொல்லாடல்களாக முன்னெடுக்கப்படுகின்றன. இப்படியான சொல்லாடல்கள் சார்ந்து கால்டுவெல் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

கால்டுவெல் குறித்த மறுவாசிப்பு அல்லது இன்றைய தேவையை உள்ளடக்கிய வாசிப்புக்குத் திராவிட இயல், அதன் வரலாறு, இதனை தமிழ்ச்சூழல் எதிர்கொண்டவிதம், அவை ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவை தொடர்பான உரையாடல்கள் அவசியமாகின்றன. கால்டுவெல் என்ற மனிதனைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும் அவருடைய செயல்பாடுகள் தமிழியல் வரலாற்றில் அல்லது திராவிடவியல் வரலாற்றில் மற்றும் இந்தியவியல் என்று பேசக்கூடிய துறையில் என்ன இடத்தைப் பெறுகிறது என்பதும் முக்கியம்.

தமிழ் நூல்கள் கண்டறியப்பட்டு அச்சுக்கு வந்த காலமென் பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கூறினாலும் அதற்கு முன்னர் பதினேழாம் நூற்றாண்டுத் தொடங்கி ஏறக்குறைய 250_300 ஆண்டுகளில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கான கால்கோள்கள் இடப்பட்டன.

தமிழ்ப் பாரம்பரியம் என்று சொல்லக்கூடிய இலக்கிய இலக்கண உருவாக்கத்தில் அறிஞர்கள் பலர் உருப்பெற்று வளர்ந்து வந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய வளர்ச்சி தொடர்ந்தது. வைத்தியநாத தேசிகரும் சாமிநாத தேசிகரும் சுப்பிரமணிய தீட்சிதரும் பதினேழாம் நூற்றாண்டில் வெவ்வேறு இலக்கணங்களை உருவாக்குகிறார்கள். அது தமிழ் _வடமொழி உறவு சார்ந்த விளைவுகளில் ஏற்படுத்தக்கூடிய தன்மைகளையும் அதில் தமிழினை முதன்மைப்படுத்துவதா? சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்துவதா என்பதான உரையாடல் களும் குறிப்பாக, தமிழை அடையாளப்படுத்துவது இரண்டாம் பட்சமாகி சமஸ்கிருதத்தை அடையாளப்படுத்தும் தன்மை மேலோங்கி நின்றதையும் காணமுடியும்.

பிரித்தானியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் அச்சு இயந் திரத்தின் மூலமாக நூல்களை அச்சிடும் பணியைத் தொடங்கு கின்றனர். பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலேயே அச்சு இயந்திரம் வந்தாலும் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குப் பின்புதான் தரங்கம்பாடியில் அந்தப் பணி தொடங்கியது. பிரித்தானியர்கள் என்று பொத்தாம் பொதுவாக அனைவரையும் ஒற்றைப்புள்ளியில் புரிந்து கொள்வது தவறு. பதினேழாம் நூற்றாண்டில் சீகன்பால்கு முதல் தொடர்ச்சியான ஒரு பாரம்பரியம் தொடங்கியது. இவர்களை

- -_ இயேசு சபை சார்ந்து இயங்கியவர்கள்
- _ கிழக்கிந்திய கம்பெனிமூலம் நிருவாகிகளாக வந்த அறிவாளிகள்
- - _ நம்முடைய பாரம்பரியத்தில் உருவாகிவந்த புலமையாளர்கள்

என்று மூன்று வகையில் காணவேண்டும். இவர்கள் அனைவரும் மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்கள். இதனை ஆங்கிலத்தில் “Philology” என்று குறிக்கின்றனர். மொழி களைப் பற்றிய ஆராய்ச்சியை அவர்கள் முன்னெடுப்பதற்கான காரணம் அவசியமாகும். பல்வேறு நாடுகளிலிருந்து வணிகம் சார்ந்து வந்தவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத் துவதற்கும் வழி கண்டனர். அதற்கு முன்னர் இருந்ததைவிட பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி பிரித்தானியர்கள் வணிகக் குழுக்களின் மூலமாக ஆசிய நாடுகளில் தங்களுடைய பதிவை நிலையாக்கிக் கொண்டனர்.

ஆசிய நாடுகளில் இருக்கக்கூடிய மக்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு அடிப்டைத் தேவையாக இருந்தது. இதற்காகப் பல நிறுவனங்களை உருவாக்கினர். லண்டன் மாநகரில் குறிப்பாக, Aborigin Protection Society - வளர்ச்சி அடையாத, இன்று பழங்குடிகள் என்று சொல்லக் கூடியவர்களைப் பற்றிய படிப்பு, Ethnological society of London - இனவியல் சார்ந்த செய்திகளை அறிந்துகொள்வதற்கான அமைப்பு, மேலும் Royal Anthropological Institute என்று பல நிறுவனங்கள் தோன்றின. கி. பி. 1837 தொடங்கி 1871 வரை ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில், பிரித்தானியர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் தாங்கள் ஆட்சி செய்யும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. இந்தப் பின்புலத்தில் பல்வேறு விதமான விவாதங்கள் மற்றும் நூல்கள் ஆகியவற்றை அவர்கள் கொண்டுவருகிறார்கள். டார்வினுடைய பரிமாணம வியல் கோட்பாடு குறித்த நூல் 1859 வாக்கில் ஐரோப்பிய மண்ணில் மிக விரிவாக விவாதிக்கக் கூடிய சூழலும் உருவாகிறது.

மேலே குறித்த மூவகையினரையும் சேர்த்துதான் நம்முடைய தமிழியல் சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்திருக்கின்றன. இவர்களுக்கு இடையே நிகழ்ந்த ஊடாட்டம் சார்ந்துதான் நாம் பல்வேறு செய்திகளைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்படிக் காணும்போது கிறித்தவ சபைகள் மூலமாக வந்த பெரியவர்கள் தொடர்ச்சியாக நிகழ்த்திய பல்வேறு விதமான நிகழ்வுகள் மிக முக்கியமானவை. இவை நவீன கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கும் நமது பாரம்பரியமான மரபுகளை நவீனமாக உருப்பெற்றவற்றில் கொடுப்பதற்கும் அதன்மூலமாக ஒரு வட்டாரத்தன்மை பெற்றிருந்த நமது வளம் / மரபு என்பது வட்டாரத்தன்மை மீறி உலக அளவில் அவை சென்றடைவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கின்றது.

நம்முடைய வளம் / நம்முடைய மரபு கி.பி. ஏழு - எட்டாம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சென்றதாக நாம் அறிகிறோம். ஆனால் அதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வளங்கள் எல்லாம் சென்றடைந்ததற்கான வாய்ப்புகள் குறைவு;. பதிவுகளும் இல்லை. வாணிகம் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி நம்முடைய வளம் மிகவிரிவாக அறிமுகமாகத் தொடங்கியது. இதற்குக் கிறித்துவசபைகள் சார்ந்த பெரியவர்களுடைய பங்களிப்புதான் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. சீகன்பால்கு தொடங்கி ஆன்ட்ரிக் அடிகள் வழியாக இக்னேஷியஸ், வீரமாமுனிவர், ராபர்ட்-டி-நொபிலி போன்ற பலரும் இதில் செயல் பட்டனர். குறிப்பாக இலக்கணத்துறை, இலக்கியத்துறை மற்றும் பிரச்சாரம் தொடர்பாக உருவாக்கிய தமிழ்நூல்கள், இப்படிப் பல வடிவங்களில் சமயப்பரப்புதலுக்காக வந்தாலும்கூட அவற்றினூடே தமிழ் மற்றும் தமிழ்மொழி மரபு சார்ந்தவைகளை ஐரோப்பிய மொழிகளில் தருகின்ற வேலைகளைச் செய்தனர்.

பதினேழாம் நூற்றாண்டில் தொடங்குகிற இந்த வேலை கிழக்கிந்தியக் கம்பெனிகளின் நடைமுறைச் செயல்பாடுகளோடு வேறு ஒரு வடிவம் பெறுகிறது. குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பிரித்தானியருடைய தலைமை இடமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த லண்டனில் பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் உருப்பெறுகின்றன.

“Anthropological society of London” என்னும் நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் டார்வினுடைய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களாகவும் அந்த விதிகளைச் சார்ந்து பேசுபவர்களாகவும் உருப்பெற்றனர். உலகத்தை மாற்றிய பல்வேறு விதமான கோட்பாடுகளில் டார்வினின் கோட்பாடு மிக முக்கியமானது என்பது உலகறிந்த உண்மை. அந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய மானிட வியல் துறை சார்ந்த தன்மைகள், மொழிகள் பற்றிய ஆராய்ச்சிக் கான வடிவமாக உருவாகிறபோது அதனடிப்படையில் பல நூல்களை எழுதுகின்றனர். உலகில் உள்ள மொழிகளை ஒப்பிட்டு எப்படி ஆய்வு செய்வது என்பதைக் குறித்தும் பேசுகின்றனர். அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவாக சமஸ்கிருதத்திற்கும் கிரேக்க, ரோமானிய மற்றும் இலத்தீன் மொழிகளுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தத் தொடங்குகிறார்கள்.

ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சமஸ்கிருத மொழி ஐரோப்பிய நாடுகளில் இருக்கக்கூடிய மொழிகளோடு நேரடித் தொடர்புடையது என்பதான ஆய்வை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். இந்தச் சூழலில், 1812-_ -1850 இடைப்பட்ட காலத்தில், சமஸ்கிருத மொழியில் இருக்கக் கூடிய அடிப்படையான வேதங்கள், புராணங்கள், பார்ப்பனங்கள் ஆகிய எல்லாவற்றையும் பதிப்பித்து அவற்றுக்கு ஆங்கில மற்றும் ஜெர்மன் மொழி பெயர்ப்புகளைச் செய்து, சமஸ்கிருத மொழி ஐரோப்பிய அறிவாளிகளிடத்தில் அங்கீகாரம் பெற்ற சூழல் உருவானது. தங்கள் மொழியின் ஒரு பிரிவு மொழியாக சமஸ்கிருதத்தைக் கருதினர். அது தொடர்பான ஆய்வுகளையும் நிகழ்த்தினர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தச் சூழலில் மிக வேகமாகச் செயல்படத் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்புமொழித் துறையில் ஆராய்ச்சி செய்து வந்த பேராசிரியர் வில்சன் மறைந்தபோது மிகக்குறைந்த வயதிலிருந்த மாக்ஸ் முல்லர் ஒப்பீட்டு மொழிநூல் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார். மாக்ஸ் முல்லர் சமஸ்கிருத மொழி சார்ந்தும் ஐரோப்பிய மொழிகள் சார்ந்தும் ஒரு இனவியல் கோட்பாட்டைக் கட்டமைப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். ஆரிய இனம் என்ற ஒன்றை அவர் கட்டமைக்கின்றார்.

ஆரியர்கள் யார்? அவர்கள் ஐரோப்பாவில் உள்ளவர்களா? அல்லது இந்திய மண்ணில் இருக்கக் கூடியவர்களா? என்று பல்வேறு விதமான விவாதங்கள் வருகிற சூழலில் ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தை நிலைப்படுத்திக்கொண்ட கல்கத்தா, சென்னை, மும்பை பகுதிகளில் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கத் தொடங்குகின்றனர். 1784இல் Asiatic Societyஐ அவர்கள் கல்கத்தாவில் உருவாக்குகிறார்கள். அதற்குத் தலைவராக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ், ஆய்வுகள் மூலமாகவும் சொற்பொழிவுகள் மூலமாகவும் சமஸ்கிருதம் என்பது உலகத்தின் மிக முக்கியமான மொழி என்றும் இந்தியாவில் பேசப்படுகிற எல்லா மொழிகளுக் கும் அதுவே மூலமொழி என்றும் கருதினார். இந்தியா என்பதே சமஸ்கிருதம்தான். சமஸ்கிருத வடிவிலிருந்துதான் இந்தியா என்று கட்டமைப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கோட் பாட்டை முன்னெடுத்தார்கள். வில்லியம் ஜோன்ஸ் உருவாக்கிய கருதுகோள், மாக்ஸ் முல்லர் லண்டனில் இருந்துகொண்டு உருவாக்கிய ஆரிய இனம் சார்ந்த கோட்பாடுகளுக்கு மிக வசதி யாகிப் போனது. பிரித்தானியர்கள் இங்கு ஆட்சி நிருவாகத்தை நிலைப்படுத்திக்கொள்வதற்காகப் பல்வேறு அறிவாளிகளை ஐரோப்பிய நாடுகளினின்று இறக்குமதி செய்துகொண்டனர்.

ஐரோப்பிய நாடுகளினின்று வந்த யேசு சபைகள் வேறு, நிருவாகிகளாக வந்தவர்கள் வேறு. இவர்களுக்கிடையே நெருக்கமான தொடர்பு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யேசுசபைமூலம் வந்த சீகன்பால்கு தொடங்கி கால்டுவெல், போப் வரை வந்த மரபு என்பது வேறு. அவர்கள் மொழி மற்றும் மக்களைப் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சி என்பது வேறு. ஆனால் பிரித்தானியர்கள் தங்கள் நிருவாகத்திற்கென தருவித்துக் கொண்ட அலுவலர்கள் முக்கியமானவர்கள். அலுவல் சார்ந்து வந்தவர்களில் எல்லீஸ் மற்றும் கீழ்த்திசை நூலகத்தின் சேகரிப்பைச் செய்த மெக்கன்சியும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழகத்தில் இவைகளை உருவாக்குகிறபோது கல்கத்தாவில் ஆகியக் கழகம் ஆரிய இனம் சார்ந்த கோட்பாட்டை உருவாக்குகின்றது.

எனவே, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இந்தியா என்பது, இந்தியவியல் என்பது, சமஸ்கிருதம், ரிக் வேதம், வேதம் சார்ந்த மரபு என்ற கருத்தாக்கம் உறுதிப்பட்டது. இதற்கு மாற்றான கருத்தாக்கம் என்பதை ஐரோப்பிய அறிஞர்களிடையே உருவாக்கக்கூடிய சூழல் அப்போதுஇல்லை. இதற்கு நிறைய பின்புலங்கள் உள்ளன. இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் என்பது இனம் பற்றியும் மொழி பற்றியும் பல்வேறு கருத்தாடலை உருவாக்கிய சூழலாக விளங்கியது. இத்தகைய சூழலில் இந்தியாவிற்கு வந்த பாதிரியார்கள் மற்றும் அதிகாரிகள் இங்கிருந்த மொழி பற்றிப் பேசுகிறபோது திராவிட மொழிக்குடும்பம் பற்றிய பதிவுகளை கால்டுவெல் தன்னுடைய நூலை வெளியிடுவதற்கு முன்னர் உருவாக்கினார்களா? திராவிடம் / திராவிட மொழிக் குடும்பம் பற்றி ஆய்வு செய்திருந்தனரா? என்று காண்பது அவசியம். அவர்கள் அது குறித்து சிந்தித்தும் பேசியும் இருக்கின்றனர்.

அண்மையில் ட்ரவுட்மேன் எழுதிய “Language and Nations” என்ற நூல் தமிழில் ‘திராவிடச் சான்று’ என்று பேரா. இராம. சுந்தரம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் 1812இல் எல்லீஸ் சென்னையில் செய்த இரு வேலைகள் முக்கியமானவை. புனித ஜார்ஜ் கோட்டையில் ஐரோப்பா
விலிருந்து வரக்கூடியவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க / கல்வி போதிக்க கல்லூரி ஒன்றை நிறுவுகிறார். அதே ஆண்டு “Madras Literary Society” என்ற இலக்கியச் சங்கம் ஒன்றையும் உருவாக்குகிறார். இந்த இரண்டும் கல்கத்தாவின் Asiatic Society யின் இன்னொரு வடிவமாகச் செயல்பட்டன. மேலும் தெலுங்கு மொழிக்கு இலக்கணம் எழுதிய கேம்பெல் நூலில் 1816இல் அதன் முன்னுரையில் எல்லீஸ் சொல்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற ஆறு மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுகின்றன. அந்த மொழிகளுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படையில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. அவை வேறாகத்தான் இருக்க முடியும் என உறுதிப்படுத்துகிறார்.

ஆனால், 40 வயதுக்கு முன்பாக தனது எந்த ஆய்வுகளையும் வெளியிடுவதில்லை என்ற அவருடைய எண்ணத்தின் காரணமாக அவர் எழுதிய தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழர் வரலாறு குறித்தவைகளைக் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்தார். 1819இல் எல்லீஸ் மறைந்தார். அவருடைய ஆய்வுகளைத் தாமஸ் ட்ரவுட்மேன் கடந்த சில ஆண்டுகளாகத் தேடிக் கண்டுபிடித்து விரிவான பதிவுகளை வெளிப்படுத்துகிறார். எல்லீஸ் முதன் முதலில் திராவிடச் சான்று என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறார். அவர்தந்த பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு காணும்போது மாக்ஸ் முல்லருடைய ஆய்வுகள் பொய்யாகிறது. சர் வில்லியம் ஜோன்ஸ் கூறிய தகவல்களும் ஆதாரமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

திராவிட மொழிக் குடும்பம் குறித்த அவருடைய பதிவுகள் அச்சாகி வெளிவராத காரணத்தினால் “கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’’ என்ற நூல்தான் முதலில் இத்தகவல்களை வெளிக்கொண்டு வந்ததாக, அறியப்பட்டிருந்தது. இந்நூல் 1856இல் வெளிவந்தது. கால்டுவெல் எல்லீஸ் பற்றி ஒரு பத்தி அளவில் தனது நூலில் எழுதியுள்ளார். பின்பு அவரும் எல்லீஸை எழுத மறந்து போயிருக்கிறார். இதைக் குறித்து ட்ரவுட்மேன் மிக விரிவாக எழுதுகிறார். கால்டுவெல்தான் “திராவிடம்’’ என்ற சொல்லை கலைச்சொல் லாக, ஆராய்ச்சி உலகில் பயன்படுத்தக் கூடிய சொல்லாக, அங்கீகரிக்கச் செய்து பயன்படுத்துகிறார். அதற்கு முன்னர் அப்படி ஒரு பயன்பாடு அந்தச் சொல்லில் இல்லை. எனவே “பத்தொன்பதாம் நூற்றாண்டில் திராவிட இயல்’’ என்று பேசவேண்டுமென்றால் எல்லீஸ், கால்டுவெல் என்னும் இரு அறிஞர்களையும் உள்வாங்கிக் கொண்டு அவர்கள் ஊடாகத் தான் பேச வேண்டியுள்ளது. நமது மரபில் இருந்த வள்ளலாரோ, தண்டபாணி சுவாமிகளோ அல்லது பின்னர் வந்த ஆறுமுக நாவலரோ, மனோன்மணியம் சுந்தரனாரோ, திராவிடம், திராவிட இயல் பற்றி பேசினார்களா என்று நாம் தேடிப் பார்க்கலாம்.

இந்த மொழிகள் பற்றியும் அதன் பண்புகள் பற்றியும் ஓரளவு உணர்வோடு செயல்பட்டவராக வள்ளலாரைச் சொல்ல முடியும். ஆறுமுக நாவலரோ, சி.வை. தா. வோ, அல்லது மனோன்மணியம் சுந்தரனாரோ வடமொழி மரபிலிருந்து முற்றும் மாறான தமிழ் மரபை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற உரையாடல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால், மாறாக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்’, தமிழ்_- சமஸ்கிருத முரண்பற்றிப் பேசுவதாக அமைந்திருக்கிறது. திராவிட இயல் என்ற பொருண்மை சார்ந்து கால்டுவெல் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்றைக் கட்டமைத்து அதன் பல்வேறு விதமான பண்புகளை வரையறை செய்தார். சமஸ்கிருத மொழியோடு ஒப்பிட்டு அதன் தனித்தன்மைகளை விளக்கினார்.
கால்டுவெல் ஒப்பு மொழி ஆய்வில், லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் பயிற்சி பெற்றிருந்தார். அந்த பயிற்சியினை இங்கும் பயன்படுத்தினார். இன்றும் ஐரோப்பிய மண்ணில் திராவிட மொழிக்குடும்பம் பற்றிப் படிப்பதற்கு மிக அடிப்படையான முதல் நூலாக கால்டுவெல் நூல் உள்ளது. அப்படி உருவான தன்மைக்குத் தான் “திராவிட இயல்’’ என்று கூறுகிறோம். இது பின்பு பல நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றது. கால்டுவெல்லே இதன் திருத்தப்பட்ட பதிப்பை 1875இல் கொண்டு வருகிறபோது முன்பு அவர் கூறிய மொழிகள் என்பதில் மேலும் சில மொழிகளைச் சேர்த்து 15 மொழிகளைக் குறிப்பிடுகிறார்.

1891இல் கால்டுவெல் மறைந்தார். 1905இல் இந்தியா முழுவதும் பிரித்தானியர்கள் “Linguistes Survey of India” என்ற மொழி பற்றிய ஆய்வை மேற்கொண்டார்கள். எமனோ காடு, மேடுகள் எல்லாம் அலைந்து 1930களில் பழங்குடி மக்கள் மொழிகளை எல்லாம் படித்து, அந்த மொழிகள் திராவிட மொழிகள்தான் என்பதை உறுதிப்படுத்தினார். அவை சார்ந்து அவர் மேற்கொண்ட விரிவான ஆய்வு 1962இல் அவரும் பர்ரோவும் சேர்ந்து உருவாக்கிய “The Dravidian Etimological Dictionary” ஆகும். அதில் 24 மொழிகளைத் திராவிட மொழிகளாக அடையாளப்படுத்தினார்கள். அதனுடைய விரிவாக்கப்பட்ட பதிப்பு 1984இல் வருகிறபோது திராவிட மொழிகள் ஏறக்குறைய 27 மொழிகளைக் கொண்ட தனித்த மரபுகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் என்பது உறுதிப்பட்டது. திராவிட இயல், திராவிட மொழி, திராவிடப் பண்பாடு ஆகிய பல கருத்துருவாக்கங்கள் இருபதாம் நூற்றாண்டில் உறுதி படுத்தப்பட்டன.

குறிப்பாக சிந்து சமவெளி கண்டுபிடிப்பும் இதனோடு இணை கிறது. நமக்கு கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சுக்கு வந்து அதில் பேசப்பட்டவைகளும் கல்வெட்டு ஆய்வுகள் சார்ந்து, குறிப்பாக பிராமி எழுத்து வடிவம் பற்றிய ஆய்வுகளும், இவைஅனைத்தையும் இணைத்தே ‘திராவிட இயல்’ என்பது 20ஆம் நூற்றாண்டில் உருப்பெற்றது. இந்த வரலாற்றில் கால்டுவெல் எங்கிருக்கிறார்? அவர் பங்களிப்பு என்ன? அவற்றை எப்படிப்புரிந்து கொள்வது? என்பது தொடர்பான கருத்துக்கள் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழியல் சார்ந்து பேசுபவர்களுக்கும் அவசியம் தேவை.