Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன்
நேர்காணல்: முனைவர் ஆ.தனஞ்செயன்


ஏறக்குறைய ஐம்பத்து மூன்று ஆண்டுகள் திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்து ஒப்பீட்டுமொழியியல், சமூகவியல் மற்றும் சமயம் என பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர் கால்டுவெல். ஆய்வாளர் என்ற முறையில் கால்டுவெல் என்ற மனிதர் உங்களை எந்த அளவிற்குக் கவர்ந்துள்ளார்?

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கால்டுவெல் தமிழ்நாட்டுக்கு; தமிழ்நாட்டின் தென்கோடிப் பகுதியான இடையன்குடிக்குவருகிறார். தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூருக் கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள கடற்கரைப்பகுதி மிகமிக வெப்பமான பகுதி. இந்த இடத்தை அவர் தேர்வு செய்ததற்கானக் காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் இன்றுகூட அந்த ஊரிலே நாம் ஒருநாள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெயிலும் செம்மணல் தேரியினுடைய சூடும் தாங்கமுடியாது. அந்த ஊரிலே இந்த ஐரோப்பியர் 53 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வியப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. நான் அந்த ஊருக்குக் கால்டுவெல் நினைவுக் கருத்தரங்கிற்காக மூன்றுமுறை சென்றுள்ளேன். ஆண்டுதோறும் ஜூலையில் நடத்துகிறார்கள்.

கால்டுவெல் என்ற மிஷனரியை விட கால்டுவெல் என்ற மொழியியலறிஞரை விட கால்டுவெல் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடைய சமூகச்சீர்திருத்தவாதியைத் (Deticated Social Reformist)தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால்டுவெல் வருகிறபோது, ஏன் இப்ப ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட அந்தப்பக்கம் பேருந்துவசதி கிடையாது. தேரிமணல், சாலைகளை காற்றிலே மூடிவிடும் என்பதனாலே பனைஓலைகளைப் போட்டு அதன்மீது ஜீப் ஓட்டுவார்கள். இதுதான் போக்குவரத்து வசதி. அப்படியென்றால் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே அந்தநிலம் எவ்வாறு இருந்திருக்கும். கால்டுவெல் குதிரைவண்டியிலும் குதிரையிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இடையன்குடி என்ற பெயரோடு வழங்கிய சின்னக் கிராமத்தினுடைய செம்மணல் தேரிக்காட்டின் தென்பகுதியை விலைக்கு வாங்கி அதிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, பக்கத்திலே தனக்கு ஒரு வீட்டைக்கட்டி தேவாலயத்தினுடைய வலதுபுறத்திலே தான் மதம்மாற்றிய அந்த எளிய நாடார் கிறிஸ்தவ மக்களுக்காகத் தெருக்களை, வீடுகளை அமைக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக இன்றளவும் அவை இருக்கின்றன.

கால்டுவெல் காலத்திய இடையன்குடி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. இன்றைக்கும் அந்த தேவாலயத்திற்கு நேர் எதிரே இருபதுமீட்டர் தாண்டிச் சென்றால் அந்தப் பழைய இடையன்குடி கிராமம் உள்ளது. அதே பழைய ஓலைக்குடிசைகள். பனைமடலால் ஆன வேலிகள். அழுக்கு, வறுமை, வெள்ளாடு இவைகளோடு அப்படியே இருக்கிறது. கால்டுவெல் வருகிறபோதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கால்டுவெல் நாடார் மக்களிடம் வருகிறபோது பதனியை இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்து கொண்டிருந் தார்கள். அன்றைக்குத் தென்மாவட்டங்களிலேயே இடையன் குடிக்கு ஒரு ஆறு கிலோமீட்டருக்கு முன்னாலேயே உள்ள திசையன்விளை பெரிய கருப்பட்டிச்சந்தை. அதை நம்பித்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரம் இருந்தது.

இன்றைக்கு அந்த மக்கள் கல்வி, சமூகவிடுதலை, பாதுகாப்பான வீடு இவற்றோடு நான்காவது தலைமுறையைக் கழித்துக்கொண்டு கால்டுவெல்லைத் தங்களுடைய குலதெய்வமாக, சாஸ்தா என்று நாம் சொல்வதைப் போல கருதுகிறார்கள். ஏனென்றால் அவர்தந்த வாழ்க்கைதான் இதெல்லாம். ஒரு சுவையான செய்தி. திசையன்விளையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் பாளையங்கோட்டையிலே இருக்கிறார், Bellpins முதலாளி செல்லத்துரை நாடார். அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். சீர்திருத்த திருச்சபைக் காரர்கள் எல்லாம் ஒரு புதிய இடத்தை வாங்கி அதில் ஊரை நிர்மாணிப்பார்கள். அப்படி நிர்மாணிக்கிறபோது அதற்கு சமாதானபுரம், சுவிசேஷபுரம், கடாட்ஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் என்ற மதம் சார்ந்த ஒரு பெயரை இடுவார்கள். வேதாகமம் சார்ந்த பெயர்கள் அவை. ஆனால் கால்டுவெல் இடையன்குடி பெயரை ஏன் மாற்றவில்லை என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன் நான்.

அவர் சொன்னார். நான் கால்டுவெல் பிறந்த ஊருக்குப் போனேன். அவர் பிறந்த ஊரின் பெயர் Shepherdyard. அதாவது தமிழிலே சொல்வதானால் இடையன்குடி. இது தன்னுடைய ஊர்ப்பெயரை நினைவுபடுத்துகிற ஊர் என்பதாலே இந்த ஊர்ப் பெயரை மட்டும் கால்டுவெல் மாற்றவில்லை என்றார். எனக்கு ரொம்ப வியப்பாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர் தன்னுடைய ஊர்ப்பெயரைக்கொண்ட ஒரு ஊரை இங்கு தேர்ந்துகொண்டதாலோ என்னவோ அங்கு 53 ஆண்டுகள், இடையிலே ஒரேயருமுறை மட்டும் இங்கிலாந்து சென்று வந்திருக்கிறார். தன்னுடைய மகளைக் கூட பக்கத்தில் நாகர் கோவிலிலே இருந்த இன்னொரு மிஷனரிக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது அங்கு கால்டுவெல் தனக்காகக் கட்டிய வீடு இருக்கிறது. வீட்டிலே வேறெந்த நினைவுச் சின்னமும் இல்லை. கால்டுவெல் பயன்படுத்திய அந்த கோர்ட்ஸ்டாண்டு மட்டும் தான் உள்ளது. தேவாலயத்திலிருந்து அந்த வீட்டிற்கு நடந்து செல்ல நூறு அடிதான். இந்த நூறு அடியையும் அந்த மணலிலே வெயிலிலே நம்மால் நடந்து செல்ல இயலாது. அதற்குப் பின்னாலே கால்டுவெல் மேனிலைப்பள்ளி உள்ளது. கால்டுவெல் மனைவி அந்த ஊர்ப்பெண்களுக்காக உருவாக்கிய ஒரு தையல்பள்ளியின் இடிந்த கட்டிடம் இருக்கிறது. இவ்வளவுதான் அங்கு இருக்கிற மிச்சம்.

இந்த தேவாலயம் அவ்வளவு நேர்த்தியாக எண்ணி எண்ணி கட்டப்பட்டது. அந்த கோபுரமணியினுடைய ஓசை தனியாக இருக்கும். அது கால்டுவெல்லுடைய தம்பி ஐரோப்பாவிலிருந்து வாங்கி அனுப்பியது என்று சொல்கிறார்கள். இந்த கோபுர மணிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கூட கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றன. கால்டுவெல்லுடைய விருப்பப்படி, கொடைக்கானலிலே கால்டுவெல் இறந்தாலும் மூன்று நாட்களாக அந்த உடலைப் பாதுகாத்து மலையிலிருந்து டோலி கட்டிக் கீழே கொண்டுவந்து _அன்றைக்கு அதானே சாத்தியம்_ அங்கிருந்து ரயிலிலே மதுரை கொண்டுவந்து, அப்படியே திருநெல்வேலி கொண்டுவந்து, அங்கிருந்து பீட்டன் அல்லது சாரட் என்று சொல்லக்கூடிய குதிரை வண்டியிலே பாளையங் கோட்டை தேவாலயத்தில் வைத்து பூசைசெய்து, இடையன் குடிக்குக் கொண்டுச்சென்று அந்த தேவாலயத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர் மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். ரொம்ப பெரிய வியப்பு இதுதான்.

சமூகவிடுதலை, பொருளாதார விடுதலை, சமூக மரியாதை அவர் பெற்றுத் தந்தது. இவைகளை அவர் மதம் மாற்றிய எந்தக் குடும்பமும் இதுவரை இழக்கவில்லை. மாறாகப் பெருக்கிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்னொரு செய்தி எனக்கே கொஞ்சம் வியப்புதான். நாடார்கள் என்று அன்றைக்குச் சொல்லப்பட்ட பதநீரும், கள்ளும் இறக்கும் தொழில்செய்யும் சாதிக்காரர்களை அவர் மதமாற்றம் செய்தார். அடுத்த சாதிக் காரர்களை மதம்மாற்றம் செய்யும் முயற்சியிலே கால்டுவெல் ஈடுபட்டதாகக் கூடத் தெரியவில்லை. சவேரியாரைப் போல ஒரு சாதியை மட்டும் மதம்மாற்றம் செய்வது எந்த சாதிப்பிரச்சனைக் கும் வழிவகுக்காது. இன்னொரு சாதியைச் சேர்த்தால் சாதிமோதலுக்கு வழிவகுக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதனாலேதான் இடையன்குடியிலே தேவாலயத்திற்கு அறுபது மீட்டர் தூரத்திலே வாழக்கூடிய இடையர்கள் இன்றும் கிறிஸ்தவர்களாக ஆகாமல் அப்படியே இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கால்டுவெல்லைப் பற்றி நிறைய கதைகள் அந்த ஊரிலே சொல்லப்படுகிறது. அதிலே முக்கியமான கதை. கால்டுவெல் ரொம்ப கோபக்காரராம். தெருக்களில் வீட்டினு டைய ஒரு அறையை அரையடி முன்னால் தள்ளி கட்டினால் அங்கிருந்து கூப்பிட்டுச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டு வாராம். அதைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் இன்றைக் கும் சொல்கிறார்கள். ஏனென்றால் அவரை தங்களுடைய முப்பாட்டன் அல்லது குலதெய்வம் என்று அவர்கள் கருதுவ தாலே. அந்த ஊரின் முகமே தனி அழகாக இருக்கிறது; சின்ன ஊராக இருந்தாலும்.

கால்டுவெல் காலத்திலே பயணம் மட்டுமில்லை, மின்சாரம் இல்லை, பேருந்து இல்லை, சாலை வசதி இல்லை. தனக்கு வேண்டிய கோதுமையை வாங்க வேண்டியிருந்தால் கூட கால்டுவெல் தூத்துக்குடிக்கோ, பாளையங்கோட்டைக்கோ தான் வந்திருக்கவேண்டும். இப்படிச் சிரமமிகுந்த காலத்திலே 53 ஆண்டுகள் ஒரேயருமுறை இங்கிலாந்து சென்று வந்ததைத் தவிர அந்த ஊரிலே அந்த மனிதர் வாழ்ந்தார் என்பது, மகத்தான தியாகம். ஒரு குளிர்நாட்டில் இருந்துவந்து இந்த தகிக்கிற வெப்பத்திலே 53 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மகளையும் இங்கேயே திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் தான் சொல்கிறேன். ஒருமொழியியல் அறிஞர் என்பதைவிட அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட மக்கள் அன்றைக்குச் சமூக மரியாதையே இல்லாத ஒரு பெரிய மக்கள் கூட்டம்.

ஆனால், அவர்கண்டு கொண்ட விஷயம், இந்த மக்கள் மிகுந்த நன்றியறிவுடையவர்கள் என்பதைக் கண்டுகொண்டார். இதனால் அவர்களுக்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்திருக்கிறார். மருத்துவவசதி எப்படிச் செய்தார் என்பது பற்றிய எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. அதுவரை அவர்கள் பனைஓலைக் குடிசைகளில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கு மூன்றாவது, நாலாவது தலைமுறைப் பட்டதாரிகளை இடையன்குடியிலே பார்க்கலாம். இதுதான் நான் அந்த ஊருக்குச் சென்றுவந்த அளவிலே கால்டுவெல்லைப் பற்றித் தெரிந்த செய்திகள்.

‘திராவிடமொழி ஒப்பிலக்கணம்’ என்ற கால்டுவெல் படைப்பைதான் பெரும்பாலும் எல்லாரும் தெரிஞ்சிருக்கிறோம். ஆனால் அவருடைய மற்ற படைப்புகள் - அதனுடைய முக்கியத்துவம் - இதப்பற்றிச் சொல்லுங்க.

குறிப்பா Sannars of Tamilnadu ன்னு அவர் எழுதின புஸ்தகம் இருக்கு. முதல்ல Ethinographic studyன்னு நாம இன்றைக்குச் சொல்றோமே ... முதல்ல விஞ்ஞானப்பூர்வமாகச் செய்யப்பட்ட Ethinographic studyஅதுதான். அதுலதான் அந்த lore எல்லாம் அவர் கணக்குல எடுத்துப் பேசுவாரு. அதுல ஒரு கதை. நாடார்கள் ஈழத்துல இருந்து பனங்கொட்டையோட வந்தாங்க அப்படின்றது. நான் அதை ஒரு வரலாற்று உண்மையாகக் கருதுறேன். ஏனென்றால் ஈழம் என்ற சொல்லுக்குத் தமிழில் பனை என்ற பொருள் உண்டு. பனைமீது விதிக்கப்பட்ட வரிக்கு ஈழம்பூச்சி என்றே பெயர். ஈழவர் என்று கேரளாவிலே சொல்லப்படுகின்ற சாதியார் ஈழத்திலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். அதுபோல நெல்லைமாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள். அவர்களும் அங்கிருந்துதான் வந்திருக்கணும். Sanars of Tamilnadu ஒரு அருமையான Ethinographic study. இன்னுஞ் சொல்லப்போனா கனகசபைப்பிள்ளை, சீனிவாச ஐயங்கார் இவர்களுக்கெல்லாம் அது முன்னோடி நூலாக இருந்தது என்று நான் கருதுகிறேன்.

Ethinographic aspect- லே அவரோட படைப்ப நாம வச்சு பார்க்கற ஒரு தேவையும் அதனுடைய முக்கியத்துவமும் உங்களுடைய வார்த்தைகளில் இருந்து புரியுது. அதுபோலவே வரலாற்று ரீதியாக இந்தியர்களை அணுகும்போது இந்தியர்களுக்கு வரலாற்று பார்வை இல்லை என்பதாக கால்டுவெல் கருதுகிறார். அதுபோல ஒரு மன்னனைப் பற்றியோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றியோ உள்ளதை உள்ளவாறே எழுதுவதில் இந்தியர் களுக்கு மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது. கவிஞர்களின் கட்டற்ற கற்பனைக்கு இடங்கொடுக்கும் போதுதான் எந்த ஒரு படைப்பும் ஆர்வம் ஊட்டுவதாக அமைகிறதென்று அவர்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. புராதனமான இந்திய வரலாறு என்று நாம் சொல்வோமானால், கல்வெட்டு களிலும் நாணயங்களிலும் காணக்கிடைக்கும் பழமரபுக்கதைகள், புராணங்கள் இப்படி எந்தப்பெயரில் இருந்தாலும் அவை தூக்கியெறியப் படவேண்டும். அதனால் சிறப்பு எதுவும் இல்லை. மாறாக சாதகமானதுதான் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

History of Tinnevelly - லே ஒருஇடத்துல வந்து அவர் எழுதறாரு. இந்த மக்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாதுன்னு. Historicsense கிடையாதுன்னு. அது ஒரு அபத்தமான ஸ்டேட்மெண்ட். ஏன்னா கால்டுவெல் காலத்துல கல்வெட்டியல் துறை தொடங்கப்படல. இந்தியாவுல இருக்கிற கல்வெட்டுல 75 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ்நாட்டுல. அதுல 75 விழுக்காடு தமிழ்க் கல்வெட்டுகள். அதுல கிட்டத்தட்ட ஒரு முப்பதனா யிரம் கல்வெட்டுகள் அச்சிடப்பட்டிருக்கு. இதைத் தெரிந்திருந் தால் கால்டுவெல் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். அவர் காலத்துல அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சுந்தரம்பிள்ளை போன்ற கல்வெட்டு வாசிக்கிற வாய்ப்பு அவர்க்குக் கிடைக்கவில்லை. அவர் வாழ்ந்த நிலப்பகுதியும் அப்படிப்பட்ட பகுதி. ரெண்டாவது அந்த நிலப்பகுதி பார்ப்பனியத் தாக்கம் இருந்த பகுதி அல்ல. இந்த நிலப்பகுதியில் வாழ்பவர்கள் பார்ப்பனிய மேலாண்மைக்கு அடிமைப்பட்ட வர்கள் இல்லை. அவர்களெல்லாம் வெள்ளாள மேலாண்மைக்கு அடிமைப்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள்.

History of Tinnevelly புத்தகத்துல ஒரு இடத்துல வரலாறு பற்றி அவர் சொன்ன கருத்தை நீங்க சொன்னீங்க. அவர் சொல்றாரு இந்திய வரலாறு அப்படின்னு ஒண்ணு சொல்லப்போனா அந்த வரலாறுங்கிற அர்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு கருத்துவந்து நம்முடைய நாணயங்கள்லேயும் கல்வெட்டுக்கள்லேயும் தான் இருக்கு. அதற்குப்பிறகு வேறு எதுலயுமே இல்ல அப்படின்னு ஒரு கருத்து சொல்றாரு. அதேபோல மகாவம்சத்துல தான் அந்த வரலாறோட தன்மை இருக்கு. இலங்கைல இருந்து எழுதப்பட்ட மகாவம்சம் அது.

கால்டுவெல் காலத்துல எழுத்துமரபுக்கான மரியாதை இருந்தது. இன்றைக்கு இல்ல. இன்றைக்கு நாம வாய்மொழி மரபுக்கான மரியாதை தருகிறோம். கால்டுவெல் காலத்துல அப்படி ஒரு அறிவுலகம் தோன்றல. அவர் அதையெல்லாம் கதை என்ற நினைப்புலதான் பதிவு செய்ராறே தவிர அது lore என்ற நினைப்புல பதிவு செய்யல.

அதுபோல இன்னொரு கருத்து அவர் வந்து வரலாறு அப்படின்னா வாய்மொழி மரபுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரா, அப்படிங் கிற சந்தேகம் எழுகிறது. எழுத்துமொழிக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருகிறார்.

இல்ல, வழக்கு மொழியிலிருந்துதான் வேர்ச்சொற்களை யெல்லாம் திராவிடமொழிகளோட ஒப்பிட்டுநிலைக்கு முக்கியமாகப் பயன்படுத்தறார்.

ஆனா வரலாறு அப்படின்னு பார்க்கும்போது அவர்வந்து எழுத்து மொழில அமைந்த வரலாற்றைத்தான் பார்க்கிறார்.

ஆமா, அவர் காலத்து அறிவுலகம் அப்படித்தான் இருந்தது.

இப்ப அதேமாதிரி எதார்த்தத்தை எதார்த்தமாகவே பதிவுபண்றது அப்படிங்கிறது இந்தியர்க்கு கைவராத கலைன்னு... அப்படிங்கிற மாதிரி சொல்றார். ஏன் அப்படின்னா, ஏதாவது எழுதப்பட்டதுன்னா அதுவந்து புலவர்கள் அல்லது கவிஞர்கள் வந்து ரொம்ப உணர்ச்சி மேலீட்டோட ... கற்பனை நயம்கலந்து எழுதுவதைத்தான் அவர்களுடைய எழுத்துக்கள்ல பார்க்க முடியுது. வரலாறு இல்ல. ஒரு மன்னனைப்பற்றி நாம குறிப்பிடும் போதுகூட மன்னனைப்பற்றி எழுதும்போதுகூட மிகையாவே எழுதறாங்க.

கால்டுவெல்லோட குற்றச்சாட்டு உண்மைதான். காரணம் அவர் காலத்துத் தமிழ் உரைநடை வளர்ச்சி பெறல. எல்லா மொழியும் கவிதையாகவே இருந்தது. கணக்கு உட்பட. எனவே இந்த மிகைவேடப்புனைதல் என்பது கவிதைக்குரிய அடிப்படைப் பண்பு. அறிவுக்கான ஊடகம் என்பது கவிதையாக இருந்தபோது இந்த மிகைவேடப்புனைதல் என்பது தவிர்க்கமுடியாத அம்சம்.

அந்த மிகையை வந்து அவர் ஏத்துக்கவே இல்ல. ஒரு இடத்துல அவர் என்ன சொல்றார். Poetical aspect -லே எழுதப்பட்ட பனுவல்கள் popular legends இதெல்லாம் டிஸ்கார்டு பண்ணனும். அதனால பெரிய இழப்பு எதுவுமே இல்ல அப்படிங்கிறார்.

அவர் காலத்து அறிவுலகச் சூழல் அப்படி. பின்னால வரவர நமக்கு வந்து மாறிடுச்சு.