Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
பாலாமணி எனும் ஒரு நல்ல தேவதாசி
தியடோர் பாஸ்கரன்


புகழ் பெற்ற பிரஞ்சு நாவலாசிரியர், நாடகாசிரியர் பியரி லொட்டி (Pierre Loti, 1850-1923) இந்தியாவிற்கு 1900இல் வந்தார். மதுரையில் சில நாட்கள் தங்கிய போது பாலாமணியைச் சந்தித்தார். இந்தியா அனுபவத்தை ஒரு பயண நூலாக ‘இந்தியா (ஆங்கிலேயர் இல்லாத) / L,inde (Sans les Anglais)’ என்ற தலைப்பில் 1903இல் வெளியிட்டார். அதில் பாலாமணி பற்றி ஒரு இயல் உள்ளது. அந்த நூலை ஜார்ஜ் இன்மான் (George A.F.Inman) மொழி பெயர்த்து India என்ற தலைப்பில் அதே ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் பாலாமணி பற்றி எழுதப்பட்டுள்ளவை இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அழகிற்கும் தயாள குணத்திற்கும் பேர்போன ஒரு தேவதாசி மதுரையில் வசிக்கின்றாள். பாரம்பரியத்திற்கேற்ப முதலில் அவள் ஒரு நவாபுடன் வாழ்ந்திருந்தாள். தான் காலமாகுமுன் அவளுக்குச் ஏராளமான வைரங்களையும் வைடூரியங்களையும், தங்கநகைகளையும், ஒரு கோவில் அம்மனுக்கு சாத்துவதற்கு அளிப்பது போல, விட்டுச் சென்றார். இன்று செல்வக்கொழிப்புடன் சுதந்திரமாக வாழும் அவள், தர்ம காரியங்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றாள். தான் கட்டியிருக்கும் நாடக அரங்கில், நம் நாடகங்களைவிட ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட, பண்டைய இந்திய நாடகங்களை, மீட்டெடுத்து மேடையேற்றிக் கொண்டிருக்கின்றாள்.

நிலவொளியில், தென்னைமரங்களூடே அந்த நல்ல தேவதாசி யின் அரங்கை நோக்கி நான் நடந்து சென்றேன். நான் போகும் பாதையில், நீண்டு தொங்கிய தென்னம்பாளைகள் மெல்லிய காற்றில் அசைந்து ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டன. அரங்கினுள் நுழைந்து, என் இருக்கையில் உட்காரும்போது பாலாமணி மேடையில் நடித்துக்கொண்டிருந்தாள். ஓவியப் படுதாக்களால் உருவாக்கப்பட்ட ஒரு தோட்டம், தேவலோக அரண்மனையில், பொற்கோபுரமொன்றில் அவள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றாள். அவளது ஆடை அலங்காரம் ஒரு சிற்பத்தை ஒட்டி இருக்கின்றது. அந்த நாடகத்தில் அவள் ஒரு இளவரசி. அண்டை நாட்டு அரசனின் மகனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. அவளைக் கூட்டிச் செல்ல அவன் சீக்கிரமே வரப் போகின்றான். சாளரம் வழியாக வெளி நோக்கியபடி, மண்டோலினை இசைத்தபடி அவள் பாடிக்கொண்டிருக்கின்றாள். பாட்டின் முதல் வரிகளிலேயே, அவள் குரல் வளத்தையும், அந்த இசையின் இனிமையையும் உணர முடிகின்றது. அவள் பாடும்போது ஏற்படும் ஒவ்வொரு அங்க அசைவிலும் அவள் அணிந்திருக்கும் வைரங்களும், கோமேதகங்களும் மின்னுகின்றன.

ஆனால் மேடையின் மற்ற அலங்காரங்கள் கலையழகின்றி இருக்கின்றன. ஏதோ வேறு ஒரு நாடு, வேறு ஒரு உலகம் போலத் தோன்றுகின்றது. அந்த விஸ்தாரமான அரங்கு ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு மேல் அமரக் கூடியது. ஆனால் பார்ப்பதற்குக் கோவில் திருவிழா ஒன்றிற்குப் போட்ட மர மூங்கில்களான பெரிய பந்தல் போல் தோன்றுகின்றது. அரங்கினுள்ளே அலங்காரம் ஏதுமில்லை. ஆனால் மேடையின் இருபுறமும் உள்ளூர் ராஜவம்சத்து பெண்களுக்கான இருக்கைகள் உள்ளன. இன்று அவர்களில் யாரும் வரவில்லை. இது அவர்கள் வரவேண்டிய நாளுமல்ல. மற்றபடி, எல்லா இருக்கைகளிலும் நாடகம் பார்க்க வந்தவர்கள் மேலாடை ஏதுமின்று உட்கார்ந்திருந்தனர். கொட்டகையினுள் ஒரே புழுக்கம். வெந்து புழுங்கியது.

நெடுங்காலத்திற்கு முன்னரே மறக்கப்பட்ட, நமது இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு மூலமான, சமஸ்கிருத மொழியில் பாலா மணி பாடுகின்றாள். பழைய வடிவிலேயே முழுப்பாட்டு களையும் பாடுகின்றாள். ஆனால் அங்கு கூடியிருந்த எல்லா ரசிகர்களுக்கும், என்னைத் தவிர, இப்பாட்டு புரிவது போலிருக் கின்றது. கதை இப்படி போகின்றது. ஒரு இளவரசியை_- பாலாமணி _ ஏழு இளவரசர்கள் ஒரே சமயத்தில் காதலிக்கின் றார்கள். இந்த ஏழு பேரும் கூடப் பிறந்தவர்கள். ஆனால் ஒருவரை ஒருவர் துன்பப்படுத்திவிடக்கூடாது என்ற கரிசனத்தில் அவளை யாரும் திருமணம்செய்து கொள்ளக் கூடாது என்று உறுதியெடுத்துக் கொள்கிறார்கள். தந்தையால் அவளுக்காக நிச்சயிக்கப்பட்ட இளவரசன் கூட அவளைக் கல்யாணம் செய்யக் கூடாது என்று முடிவெடுக்கின்றனர். இளவரசியின் நல்லெண்ணமும் புன்சிரிப்புமே போதுமென்று இந்தத் தீர்மானத்தில் யாவரும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.

ஒருநாள் அவர்கள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, வெண்முடி கொண்ட முனிவர்கள் போல் உருவெடுத்த பேய்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று பேசி, ஆசைகாட்டி, பொய்கள் பல கூறி, ஒருவருக்கெதிராக ஒருவரை மூட்டிவிடுகின்றனர். வெறுப்பும் குரோதமும் ஆயிரம் கொலைத் திட்டங்களுடன் அரண்மனைக்குள் குடியேறுகின்றன. நல்லவேளையாகச் சில தேவதைகள் நீண்ட போராட்டத்திற்குப் பின் இளவரசர்களைத் தம் வசமாக்கினர். அதன் பின்னர், அரசகுமாரர்களும், அமைதியாக, ஒற்றுமையாக, இளவரசியிடம் சகோதர அன்பைப் பொழிந்து வாழ்ந்தனர்.

ஒரு காட்சி மாற்றத்தின் போது நான் பாலமணியைப் பார்க்கச் சென்றேன். அவ்வளவு சௌந்தர்யவதியாக இருப்பதற்கும், இளவரசி பாத்திரத்தை இயல்பாக, எளிமையாகப் பிரதிபலித்ததற்கும் நன்றி தெரிவிக்க நான் விரும்பினேன். நான் அவளைக் காண வருவது பற்றி அவளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறிய பாய் விரிக்கப்பட்ட அறையிலிருந்தார். வைரங்களும் ஆபரணங்களும் தரையில் சிதறிக்கிடந்தன. ஏதோ ஒரு தேவதை எளிய, குடிசையில் வாழும் மாடு மேய்க்கும் பெண்ணொருத்திக்கு நகைகளை பரிசாகப் போட்டு விட்டுப்போனது போல் தோன்றியது.

நான் அந்த அறையில் கதவருகே சென்றபோது, அவர்கள் சம்பிரதாயப்படி நிஜமலர்களால் ஆன, ஜரிகை சேர்த்துக் கட்டப்பட்ட மலர்வளையமொன்றை எனது கழுத்தில் ஒருவர் போட்டார். வெகு இயல்பாக பாலாமணி கையை நீட்டி எனது கையைப்பற்றி குலுக்கினார். பண்டைய சமஸ்கிருத நாடகங்களை மீட்டெடுத்து நிறைவேறுவதே தன் எண்ணம் என்று தெரிவித்தார். இதுபற்றிப் பிரான்ஸிலுள்ள என் நண்பர்களிடம் நான் பேசுவேன் என்று நான் கூறியபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

மறுநாள் காலை மிகவும் வேறுபட்ட ஒரு சூழலில், நான் பாலாமணியைத் தற்செயலாக, மறுபடியும் சந்திக்க நேர்ந்தது.-மதுரை ரயில்வே நிலையத்தில் ஒரு சராசரி குடும்பப் பெண் போல, இரண்டு வேலைக்காரர்களுடன் கிராமத்திலிருக்கும் தன் சொத்துக்களைப் பார்க்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அரைகுறை ஆடைகளிலிருந்த அந்த இந்தியக் கூட்டத்தினரிடையே, ஏதோ வழி தவறி அங்கு வந்துவிட்ட ஒரு தேவதை போல் அவள் காட்சியளித்தாள்.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே, பிரகாசிக்கும் ஒரு விண்மீன் போல அவள் தோன்றினாள். காதில், கழுத்தில், மார்பில் வைரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. மணிகட்டிலிருந்து தோள்பட்டை வரை வைர நகைகள், அவளது சிறிய மூக்கிலிருந்து ஒரு சிறு ஆபரணம் வாய் வரை தொங்கலாடிக் கொண்டிருந்தது. அவளது இடுப்பைச் சுற்றியிருந்த ஒட்டியாணத்திற்கும், கத்தரிப்பூ நிற பட்டு மார்க்கச்சைக்கும் இடையில், வழவழப்பான ஒரு உலோகம் போல், அவளது உடலின் ஒரு பகுதி தெரிந்தது. அதற்கு மேலே அவளது அழகிய மார்பின் ஒரு பகுதியும் கண்ணுக்குப் பட்டது. மஸ்லின் துணி மூடியிருந்தாலும் எளிதாக பார்வைக்குப்பட்டது. (நமது நாட்டில், பெண்கள் மாலையில் அணியும் உடையில் மார்பின் மேல்பாகத்தைப் பார்வைக்கு விடுகிறார்கள். இங்கு மார்பின் கீழ்பாகத்தைக் காட்டுகிறார்கள் அவ்வளவுதானே என்று என் எண்ணம் ஓடியது) பாலாமணி கண்ணியத்துடனும் கம்பீரத்துட னும் நடந்துகொண்டாள்.

சமூகத்தில் அந்தஸ்துடைய ஒரு பெண்ணுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையைச் செலுத்தினேன். அவள் இந்திய முறைப்படி, தனது மாணிக்க மோதிர மணிந்த கைகளால் தனது நெற்றியைத் தொட்டு அதை ஏற்றுக் கொண் டாள். பின்னர், தனது தோழிப் பெண்களுடன் ‘லிணீபீவீமீs ளிஸீறீஹ்’ என்று எழுதியிருந்த ரயில் பெட்டிக்குள் ஏறி அமர்ந்துகொண்டாள். வண்டி நகரும் போது பாலாமணி மேல் வைத்த கண்ணெடுக் காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அந்த அருவருக்கத்தக்க ரயில்நிலைய சூழலிலிருந்து வந்து, அம்மன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவள் செய்யும் தர்ம காரியங்களைப் பற்றி அன்று சிலர் என்னிடம் கூறினார்கள். அதில் இதுவும் ஒன்று: சென்ற மாதம் ஒரு இந்து அநாதை நிலையத்திற்கு நன்கொடை திரட்டிக்கொண்டிருந்த சில ஐரோப்பியப் பெண்கள் பாலாமணியைக் காண வந்தனர். அவள், ஒரு மந்தகாச புன்னகையுடன், ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தாளாம். (எண்பது பவுன்டுகள்). யாராயிருந்தாலும் அவள் வள்ளல் போல்தான் நடந்துகொள்வாள். மதுரையிலுள்ள ஏழைகளுக்கு அவளுடைய வீட்டிற்குப் போகும் வழி நன்றாகத் தெரியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com