Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
சயாம் மரண ரயில்
ஜ. சிவக்குமார்


‘தமிழர் அலைவுழல்வு’ என்பதே ஈழத் தமிழர்களுக்கான ஒற்றை அடையாளமாக ஒருபுறம் புரிந்துகொள்ளப்படுகிறது. மற்றொருபுறம் உலக மயமாகும் சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாகப் பெரும் சம்பளத்துக்காக மூளையை விற்போருக்குத் தயிர்சாதமும் சாம்பார் சாதமும் கிடைக்கப் பெறாததாக புரிந்துகொள்ளப்படுகிறது. அதேசமயம் மொரீஷியஸ், ஃபிஜீ தீவு முதலான நாடுகளில் தமது மொழியையே இழந்து வழிபாடு சார்ந்த சடங்குகளையே தமது அடையாளமாகக் கொண்டிருக்கும் மொழி மறக்கடிக்கப்பட்ட தமிழர்களின் சிக்கல்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

தவிரவும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழர்களின் சமூக / பொருளாதார நிலை குறித்த ஊடகங்களின் அதீத கற்பிதங்கள் சிதைவுக்குள்ளாகியுள்ளன. சமீபத்தில் மலேசியாவில் நடந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக மெல்லமெல்லத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருவதற்கு எதிரான திமிறலாகவே உணரமுடிகிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் சண்முகம் ‘சயாம் மரண ரயில்’ நாவலைத் தந்துள்ளார். இந்நாவல் முழுக்கவும் தமிழர்கள் பிற இனத்தாரைப் போல பொருளாதார மேம்பாடு, மொழி, சமயம் முதலான பண்பாட்டுக் கூறுகளில் கூட்டுப் புரிதலுடன் செயல்படாததனா லேயே, தங்கள் மேலாண்மையை_சுய மரியாதையைக் கூட_- இழக்கின்றனர் எனும் அவதானிப்பு இழையோடிக் கொண்டி ருப்பதை இத்தகைய பின்புலத்திலேயே வாசிக்கமுடிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பஞ்சம், சாதிய ஏற்றத்தாழ்வு (குறிப்பாக தீண்டாமை), முதலாளித்துவ நாடுகளின் தோட்டத் தொழிலாளர் தேவை முதலிய காரணங் களால் இலங்கை, மலேசியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கணிசமான அளவில் தமிழர்கள் புலம்பெயர்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத் தின்போது இந்தியாவைக் கைப்பற்ற ஜப்பானியப் படைகள் ரயில் மூலமாக இந்தியா வருவதற்கு இருப்புப்பாதை அமைக்க வேண்டி யிருந்தது. இப்பணிக்காக மலேசியவாழ் சீனர்கள், இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்), போர்க் கைதிகளான ஆங்கிலேயர் மற்றும் ஆஸ்திரேலியர்கள் வலுகட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்கள் _- குறிப்பாகத் தமிழர்கள் _ அனுபவித்த துயரங்கள் குறித்து இந்நாவல் பதிவுசெய்கிறது.

யுத்தகால பஞ்சம் மற்றும் கணவன் வலுகட்டாயமாகச் சயா முக்கு அழைத்து செல்லப்பட்டமையால் மூன்று குழந்தை களுடன் வறுமையில் உழலும் தாய் குழந்தைகளின் பசிதீர ‘இன் னொருவனுடன் சேர்ந்து கொள்ளட்டுமா’ எனத் தன் மூத்த மகன் மாயாவிடம் கேட்கிறாள். இதைக்கேட்டு ‘அதிர்ச்சி’ அடையும் மாயா வீட்டை விட்டு வெளியேறுவதாக நாவல் தொடர்கிறது. பின் கோலாலம்பூரில் சுற்றித் திரிந்து சயாமுக்குச் செல்பவனுக்கு ஏற்படும் அனுபவங்களை விவரிக்கிறது. மாயாவின் வழியே நேர்க்கோட்டுத் தன்மையிலேயே நாவல் நகர்கிறது.

சயாம் பயணத்தில் பாம்புகள், சீலைப்பேன் உள்ளிட்ட பூச்சிகள், தோல் வியாதிகள், காலரா, வேலைப்பளு, ஜப்பானியர் தண்டனை, போர் விமானங்கள் முதலியவற்றால் பிறருக்கு நேரும் மரணத்தையும் துன்பத்தையும் யதார்த்தமாக நாவல் சித்திரிக்கிறது. இந்நாவலில் தொடர்ச்சியாக அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இறக்கும் தொழிலாளர்களைக் கூட்டமாக இட்டு ஒண்ணும் பாதியுமாக மூடுகின்றனர்; வியாதிக்காரர்களையும் வியாதியால் இறந்தவர்களையும் ஒன்றாக வைத்து எரிக்கின்றனர். இவ்வகையான மரணங்கள் தொழிலாளர்களுக்கே நிகழ்கின்றன. ஆனால் இந்நாவல் கிராணியான மாயாவையும் கங்காணியான வேலுவையுமே முன்னிலைப்படுத்துகிறது. மாயாவை அரவ ணைக்கும் வேலு பொதுபுத்தியின் பார்வையில் சொன்னால் பச்சை கிராமத்தான். தோட்டத் தொழிலாளர்களின் வழக்காறுகளில் கங்காணிகள், கிராணிகள் குறித்த பதிவுகள் வேறுவிதமானவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வேலு, மாயாவுடன் இருக்கும் மற்ற மூன்று பேருமே தனித்த இருப்பற்றவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த தொழிலாளர்களை வேலு சம்பிரதாய_பல்லக்கு, பூசாரி, தேவாரப் பாடல்_முறைப்படி அடக்கம் செய்வதை ஆசிரியர் ‘புரட்சி’யாகக் கொண்டாடவேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வி எழலாம். அயல்நாடுகளில் சிறுபான்மை யினராக வாழும் தமிழர்கள் ஒன்றிணைய, தங்களின் அடை யாளங்களைத் தக்கவைத்துக் கொள்ள மொழி மட்டும் போது மானதாக இல்லை; மதமும் தேவைப்படுகிறது. மொரீஷியஸ் தமிழர்கள் மொழியைஇழந்தாலும் வழிபாடு சார்ந்த சடங்கு களையே தமிழ் அடையாளமாகக் கொண்டாடுவதை இவ்வாறு தான் விளங்கிக் கொள்ள முடிகிறது. (அதே சமயத்தில் இவர்கள் இந்தியர், இந்து எனும் கற்பிதத்தில் தங்களை இழக்கவும் நேர லாம்.) தமிழ்நாட்டில், நெருக்கடி ஏதுமின்றி பெரும்பான்மை யினராக திராவிட, பொதுவுடைமைச் சிந்தனையின் பின்புலத் தில் இயங்கும் நமக்கு இதனைப் புரிந்துகொள்வது சிரமமே.

முதலாளித்துவ ஆதரவு மனப்பான்மை தெரிந்தோ தெரியா மலோ - இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சயாம் பர்மா ரயில் பாதைக்காகப் பலரைப் பலியிட்ட ஜப்பானியரையும், அணு குண்டின் மூலம் இருபெரும் நகரங்களை அழித்த அமெரிக்கரை யும் கூட நேர்மறையாகச் சித்திரிக்கும் இவர் கம்யூனிஸ்டுகளைக் ‘காட்டுக்காரங்க’ என்றே பதிவு செய்கிறார். ஆங்கிலேயரும் ஜப்பானியரும் மாறி மாறி நாட்டை ஆளும்போது சலனமற்றி ருக்கும் ஆசிரியர் ‘நாட்டையே கைப்பற்றத் துணிந்துவிட்ட கம்யூனிஸ்டுகளின் பயங்கரமும்’ என உள்நாட்டு கம்யூனிஸ்டு களைப் பயத்துடன் எதிர்கொள்கிறார். முதலாளித்துவ, பாசிச சக்திகள் ‘கம்யூனிஸ்டுகள்’ குறித்து பொதுமக்களிடையே பரவ விட்ட ‘கருத்தியலின்’ வெளிப்பாடாகவே இதனை உணரமுடிகிறது.

இருப்பினும் இரண்டுநாள் தொடர்ச்சியான பயணத்தின் பிறகு குளிப்பதில் உள்ள மகிழ்ச்சி, ஜப்பானியரிடம் உள்ள மனிதநேயம், தந்திரம், கடிதம் சரியாகச் சென்று சேராததால் ஏற்படும் இழப்பு, சயாமியப் பெண்களின் தைரியம் எனச் சிறுசிறு நிகழ்வுகளையும் யதார்த்தமாக - கதையின் போக்கு சிதையாமல் சித்திரித்துள்ளார்.
கதையின் போக்கு ஏன் சிதையாமல் இருக்க வேண்டும்? / மாயாவும் வேலுவும் முற்றிலும் நேர்மறையாகச் சித்திரிக்கப் படுவது ஏன்? / ‘முறை பிறழ்ந்த’ உறவுகள், போதை வஸ்துக்கள் குறித்த இவரது ஒழுக்கவியல் பார்வைக்கு அவசியமென்ன? / தொழிலாளர் துயரங்கள் சித்திரிக்கப்பட்ட அளவிற்கு மாயா, - அங்கசாலா இடையிலான நெருக்கத்தைச் சித்திரிப்பது ஏன்?

முதலான பல கேள்விகளைப் பிரதியுடனான எனது வாசிப்பு எழுப்புகிறது. அதேசமயம் 1940களில் பல ஆயிரம் தமிழர்களின் மரணத்துக்கும் மன உளைச்சலுக்கும் காரணமான சயாம் மரண ரயில்பாதை குறித்து புனைகதை வடிவில் நம்பகத்தன்மையுடன் ஆவணப்படுத்தியிருப்பது இக்குறைகளை நீர்த்துப்போகச் செய்கிறது. இந்நாவல் பல இடங்களில் வெகுசனம் சார்ந்த எழுது முறையையும் சினிமாத்தனமான நிகழ்வுகளையும் கொண்டுள்ளது. ஈழத் தமிழர்களின் படைப்புகளில் இம்மாதிரியான தன்மையைக் காணமுடிவதில்லை.

தன் மண்ணிலிருந்து பிய்த்தெறியப்படும் வலியை நவீன இலக்கியங்களில் பதிவு செய்யுமளவு இலக்கியப் பரிச்சயமுள்ள வர்களாக ஈழத் தமிழர்கள் உள்ளனர். இதே வலியை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தோட்டத் தொழிலாளர்கள் பெற்றிருந் தனர்; இவர்கள் எழுத்தறிவு பெறாததனால் நாட்டார் வழக்காறுகளாக அவை பதிவாயின. இதற்கடுத்தடுத்த தலைமுறைகளில் பொருளாதார, பண்பாட்டு நெருக்கடியற்ற நிலை, தமிழ்வழிக் கல்வி முழுமையடையாதது முதலான கார ணங்களால் தீவிரத் தன்மையுள்ள இலக்கியங்கள் மலேசியாவில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இதற்கு மாறாகப் பல தளங்களிலு மிருந்து அனுபவிக்கும் நெருக்கடிகள், அயல்நாட்டு இலக்கியப் பரிச்சயம் மூலம் பெறும் புதிய எடுத்துரைப்பு முறைகள் முதலி யன ஈழத் தமிழர் இலக்கியங்களைச் காத்திரமுள்ளதாக்கு கின்றன. மேற்கண்ட பின்புலத்தில்தான் இந்நாவலின் எடுத்து ரைப்பு முறைகளை விளங்கிக் கொள்ளமுடிகிறது. அதே சமயம் இப்படைப்பை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சிரமங்கள் மதிக்கத்தகுந்தவை.

சயாம் - பர்மா ரயில்பாதை அமைக்கும்போது எடுக்கப்பட்ட பல்வேறு நிழற்படங்கள் தொடர்ச்சியாக எட்டு (209-_216) பக்கங் களில் தரப்பட்டுள்ளன. நாவலின் நிகழ்வுக்கேற்ப நிழற்படங்கள் அங்கங்கே தரப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பதிப்பில் எழுத்துப் பிழைகள் மிகச் சிறிதளவே உள்ளன. ஆப்பிரிக்கர்கள் தங்கள் நாடுகளிலுள்ள ஐரோப்பியர்களை வெளி யேறச் சொல்வதற்கும் ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளிலுள்ள ஆசிய, ஆப்பிரிக்கர்களை வெளியேறச் சொல்வதற்குமான வேறுபாட்டை இப்படைப்பு வாசகருக்கு உணர்த்தும்.

ஆசிரியர் : சண்முகம். வெளியீடு : தமிழோசை பதிப்பகம், 1050, சத்திசாலை, காந்திபுரம்,கோவை-. பக். 304. விலை ரூ.150


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com