Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
மரபையும் மாற்றத்தையும் நோக்கிய இனவரைவியல் பார்வை
ஆ. செல்லபெருமாள்


தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதமே இருக்கக் கூடியவர்களானாலும் பலவிதப் பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பெற்றிருக்கின்ற பழங்குடிகளைப் பற்றிய நூல் இது. தமிழ்நாடு அரசு 36 பழங்குடிச் சமூகங்களை அட்ட வணைப்படுத்தி வைத்துள்ளது. அவற்றுள் ஆறு சமூகத்தவர் தொன்மைப் பழங்குடிகள் என அடையாளங் காணப்பட்டுள் ளனர். பழங்குடி என்ற சொல் குறித்த வரையறையின் நெகிழ்வு களை நூலின் தொடக்கப்பகுதி விவாதிக்கின்றது. தமிழ்ச்சூழலில் நீலகிரிப் பழங்குடிகளைப் பற்றியும், பிறபகுதிகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றியும் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராள மான ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்றுள்ளன. எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும் (1909) என்ற ஏழு தொகுதிகள் அடங்கிய நூல் வரிசை, இந்தியாவின் மக்கள் (1985) என்ற பெருந்திட்டத்தின் படி கே.எஸ்.சிங் தொகுத்த தமிழ்நாட்டுச் சமூகங்களைப் பற்றிய தொகுதிகள் மற்றும் திருவனந்தபுரம், சர்வதேச திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட திராவிடக் களஞ்சியம் ஆகிய மூன்று பெரும் நூல்வரிசைத் தொகுதிகளிலும் தமிழ்நாட்டுப் பழங்குடிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் மிக விளக்கமான விவரணைகள் உள்ளன.

மேலும் அகத்தியலிங்கம் (1972), வெங்கட்ராமன், சக்திவேல் (1980), பிலோஇருதயநாத், அய்யப்பன் (1948) போன்றோரின் நூல்களின் வாயிலாகவும், ஒவ்வொரு பத்தாண்டிலும் இந்திய மக்கள் தொகை மதிப்பாய்வகம் வெளியிடும் வெளியீடுகள் வாயிலாகவும் தமிழ்நாட்டுப் பழங்குடிகளைப் பற்றிய விவரங் களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. தமிழகப் பழங்குடிகளைப் பற்றிய இவ்வாறான ஒருங்கிணைந்த பார்வை தரத்தக்க இப்படிப்பட்ட நூல்களோடு தமிழ்நாட்டின் ஒவ்வொரு பழங் குடியைப் பற்றியும் தனித்தனியாக ஆழமான ஆய்வுகளும் வந்த வண்ணமேயுள்ளன. குறிப்பாக ரிவர்ஸ் மற்றும் எமனோவின் தொதுவர்கள், மேண்டல்பாமின் கோத்தர்கள், காமில் ஸ்வெலபிலின் இருளர்கள், கார்ட்னர் மற்றும் நார்ஸ்டார்மின் பளியர்கள், ஆன் பிலிண்டா ஸ்டெயினின் மலையாளிகள் போன்ற ஆய்வுகள் தமிழ்ப் பழங்குடியியல் ஆய்வுக்கு மட்டுமின்றி உலக மானிடவியலுக்கும் அரும்பங்காற்றும் திறத்தன. மேற்குறிப்பிட்ட மேலை மானிடவியலர்களில் சிலர் சங்க இலக்கியம் குறித்து நல்ல புலமையுள்ளவர்கள்.

மேலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி நம் மண்ணுக்குரியோரின் பல ஆய்வுகளும் தமிழகப் பழங்குடிகள் பற்றியப் புரிதல்களில் வெளிச்சம் தரத்தக்கவைகளாக உள்ளன. எடுத்துக் காட்டுகளாக அப்படிப்பட்ட ஆய்வுகளில் சிலவற்றைப் பட்டியலிடலாம். நீலகிரி இருளர் வாழ்வு மற்றும் மொழியைப் பற்றி பெரியாழ்வார், கோவைப்பகுதி இருளர்களைப் பற்றி செங்கோ, இருளர்களின் சமயம் கதைகள் மற்றும் கதைப்பாடல்கள் பற்றி செல்ல பெருமாள், இருளரிடையேயான உலக நோக்கு மற்றும் முன்னேற் றம் குறித்து தமிழொளி போன்றோர்களின் ஆய்வுகளும், காணிக்காரர்களின் வாழ்வு குறித்து தர்மராஜ், ஜெயபதி ஆகியோரும், இசை குறித்த ஸ்டீபன் போன்றோரின் ஆய்வுகளும், முள்ளுக்குறும்பர் பற்றிய சுப்பாரெட்டி, ராஜலட்சுமி மிஸ்ரா, முதுவர் பற்றிய சத்யநாராயணன் போன்றோர்களின் ஆய்வுகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் தமிழகப் பழங்குடிகளிடையே ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானிட வியல் படிக்கும் முதுகலை மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் குறையாத அளவில் இனவரைவியல் களப்பணி நிகழ்த்தி வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வேடுகளைச் சமர்ப்பிக்கின்றனர். மேலும், ஆய்வுத் திட்டங்களின் அறிக்கைகள், அவ்வப்போது ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகள் என தமிழகப் பழங்குடி கள் குறித்த ஆய்வுகள் விரவிக்கிடப்பினும், பக்தவத்சல பாரதியின் இந்தக் கையடக்க நூல் இம்மக்களின் வாழ்வியலைக் கோர்வைப் படுத்திச் சில வினாக்களுக்கு விடைதேட முயலுகின்றது.

தமிழகத்துப் பழங்குடிச் சமூகங்களின் வளர்ச்சி நிலைகள் உலகளாவிய பழங்குடிச் சமூகம் அடைந்த சமூக படிமலர்ச்சிக் கட்டங்களை ஒத்திருக்கின்றது. இவை சங்க இலக்கியத்திலும் பதிவாகியிருக்கின்றது. எனவே, இத் தொன்மைச் சமூகங்களை இணங்கண்டு ஆராய்வதும், பதிவு செய்வதும் நம் மனித குல வரலாற்றை, படிமலர்ச்சியை அறிவதற்குத் துணை செய்யும் (ப.க13) என்பது நூலாசிரியர் கூற்று. தமிழ்ச்சமூகத்தின் மிக நீண்ட அறுபடாத தொடர்ச்சியினை ஆராய்வதற்குப் பழங்குடிகள் பற்றிய ஆய்வு பெரும் பயன் விளைவிக்கும் (பக்.21) என்பது போன்ற சாதாரண மதிப்பீடுகள் உள்ள இந்நூலில் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய பண்பாட்டு பொருண்மைகள் பலவும் பழங்குடிகள் பண்பாட்டிலிருந்தே பெறப்பட்டுள்ளன (பக்.80) என்பது போன்ற மிகை மதிப்பீடுகளுக்கும் பஞ்சமில்லை.

சமூக அமைப்பின் அசைவியக்கம் என்ற இந்நூலின் ஏழாவது இயல் உணவு சேகரிக்கும் குடிகள் பற்றிய கோட்டுபாட்டுப் புரிதல்களை அந்நிலையில் இருக்கும் சில தமிழகப் பழங்குடி களுக்குப் பொருத்திக்காட்ட முனைந்து தோல்வி அடைகின்றது. நல்லவேளையாக அதற்கு அடுத்த எட்டாவது இயலில் இப்படி செயற்கையாகப் பொருத்திப் பார்க்க நூலாசிரியர் முனையாத தால் வேட்டுவப் பொருளாதாரம் பற்றி மட்டும் அறிந்து கொள்ள அந்த இயல் உதவுகின்றது. ஒன்பதாவது இயல் தமிழகப் பழங்குடிகளிடம் காணப்படும் காட்டெரிப்பு வேளாண்மை யினைச் செறிவாக விளக்குகின்றது. பத்தாவது இயல் சமகால ஆயர் பொருளாதார இனவியல் தரவுகளுக்கும், சங்ககால இன வியல் தரவுகளுக்கும் இடையேயான பொருத்தப்பாட்டின் மையை ஒப்புக் கொள்வதுடன், நீலகிரியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளியல் மாற்றத்தையும் விளக்குகின்றது.

சாதி அமைப்பு தோன்றுவதற்கு முந்தைய வடிவம் என ஊகிப்பதற்குரிய பரஸ்பரம் சார்ந்து வாழும் ஒரு சமூக முன்வடிவம், தோற்றத் தொன்மம், தூய்மை/தீட்டு போன்றவை நீலகிரிப் பழங்குடிகளிடம் இருப்பதைச் (பக்.23) சுட்டிக்காட்டி யுள்ள நூலாசிரியர் சாதிகளுக்கும், பழங்குடிகளுக்கும் இடையே யான பன்னெடுங்காலத் தொடர்பு, இன்னுஞ் சொல்லப் போனால் இந்தியச் சூழலில் பழங்குடி (டிரைப்) என்ற பிரிவே ஏனைய உலகப் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டகத்தை வைத்து நோக்குவது போல அணுகத்தக்கது அல்ல என்று கூறும் என்.கே.போஸ், எப்.ஜி.பெய்லி போன்றோரின் கருத்துக்களுக்கு எப்படி எதிர்வினை புரிவார்? அதே சமயம் பழங்குடி என்ற சொல்லாட்சியின் பன்மியம் குறித்தும் இந்நூலில் ஒரு இயல் மிக விரிவாக பேசுகின்றது.

தமிழகப் பழங்குடிகளின் இடப்பெயர்ச்சி வரலாறு இந்நூலில் நன்றாகக் கோர்வைப் படுத்தப்படுகின்றது எனினும், நூலாசிரியர் தொட்டுக் காட்டும் கொண்டரெட்டி, கொண்டகாப்பு போன்ற சமூகங்கள் குறித்துச் சரியான தெளிவுகள் வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள பழங்குடிகளைப் பழங்குடி, முதுகுடி, தொல்குடி என மூவகைப்படுத்தும் நூலாசிரியர் தொல்குடிக்கும் முதுகுடிக்குமான வேறுபாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி எந்தெந்தப் பழங்குடிகள் மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்குள் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடிகளிடம் மிக நுட்பமான ஒப்பியல் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை என்கிறார் நூலாசிரியர் (பக்.25). உண்மைதான். திராவிட மொழியியல் ஆராயப்பட்ட அளவுக்கும் அறியப்பட்ட அளவுக்கும் திராவிடப் பண்பாட்டியல் அதுவும் திராவிடப் பழங்குடிகளின் பண்பாடுகளை ஒப்பிட்டு தேவையான அளவுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் திராவிடப் பண்பாடு குறித்த ஆய்வு, திராவிட மொழியியல் ஆய்வுக்கும் முந்தையது என்பதை எல்.எச்.மார்கன் 1870ஆம் ஆண்டிலேயே தனது நூலில் தமிழர் உறவு முறையைத் திராவிட உறவுமுறை என விவரித்து விளக்கும் பாங்கினை அண்மையில் தான் வெளியிட்ட ஒரு கட்டுரையின் மூலம் இந்தியாவின் மூத்த மானிடவியல் பேராசிரியர் நெ.சுப்பாரெட்டி (2008) சுட்டிக் காட்டுகிறார். தமிழர்களின் பூர்வ பண்பாட்டை முழுமையாகத் தெரிந்து கொள்ள பில்லர் உள்ளிட்ட திராவிட நிலப்பகுதியைத் தவிர்த்து வடஇந்தியா மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் பூர்வதிராவிடப் பழங்குடிகளைப் பற்றியும் அகண்ட தமிழகமா கிய கேரளம், துளு நாடுவரை விரிந்துள்ள பகுதிகளில் வாழும் பழங்குடிகளையும் உள்ளடக்கி ஆய்வுகள் அமையவேண்டும் என்ற நூலாசிரியரின் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

தமிழகத்தில் 36 அட்டவணைப் பழங்குடிச் சமூகங்கள் இருப்பினும், இன்னும் சில சமூகங்கள் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதற்கிடையில் அட்டவணைப் படுத்தப்பட்ட சில பழங்குடிகள் கூட அரசிடம் தங்களுக்கு உரிய சான்றிதழ் பெறமுடியாத சிக்கலில் உள்ளனர். அதற்குக் காரணம் உண்மையில் பழங்குடி களாக அல்லாத பலர் சலுகைகளுக்காக வேண்டி தங்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்த முனைவதுதான். தமிழ் நாட்டில் எந்தெந்தப் பழங்குடிகளைப் பற்றி நிபுணத்துவம் பெற்ற வர்களால் நூல்களோ, கட்டுரைகளோ, அல்லது ஆய்வுகளோ வெளியிடப்பட்டிருந்தாலும் அந்தப் பழங்குடிகள் பற்றிய அடை யாளச் சிக்கல்கள் அதிகம் இல்லை. சரியான நூல்கள், ஆய்வுகள் இல்லாத பழங்குடிகள் பெயரில் பழங்குடிச் சான்றிதழ் பெறுவது இன்றைக்குச் சிக்கலுக்குள்ளாகியிருப்பதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. அதனால் தான் தமிழகப் பழங்குடிகளின் வாழ் விடங்களையும், எண்ணிக்கையையும் பட்டியலிடும் நூலாசிரியர் சில பழங்குடிகள் தமிழகத்தில் குறிப்பாக எங்கு வாழ்கின்றனர் என்பதைச் சொல்ல இயலாமல் சிதறி வாழ்கின்றனர் என்றே குறிப்பிடுகின்றார்.

மேலும் பல பழங்குடிகளின் பெயர்களில் உள்ள சிக்கல்களையும் குழப்பங்களையும் அடையாளச் சிக்கல் கள் என்ற ஆறாவது இயலில் நூலாசிரியர் தொகுத்துள்ளார். பழங்குடிகள் அதிக அடர்நிலையில் வசிக்கும் நீலகிரியிலும், தமிழகப் பழங்குடிகளில் எண்ணிக்கையில் முதலிடம் பெறுகின்ற மலையாடி பழங்குடிகளிடமும், அண்மையில் ஏற்பட்டுள்ள மரபின் மாற்றங்களையும் இந்நூல் கணிக்கின்றது. பழங்குடிகளுக் கான வனஉரிமைச் சட்டம் குறித்த விளக்கத்தோடு இந்நூல் முடிவடைகின்றது. நூலில் குறிப்பிட்டுள்ள அந்தச் சட்டம் இப்போது அமலுக்கும் வந்துவிட்டது.

பின்காலனியப் பார்வை நூல்நெடுக இழையோடும் என்று நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில் கூறியிருந்தாலும் பழங்குடிச் சமூகங்கள் எல்லாம் எளிய சமூகங்கள் என்றும், மானுடவியலரே கூட தவிர்த்துவிட்ட இனவியல் அடிப்படையில் இந்தியப் பழங்குடிகளை வகைமைப்படுத்தி எழுதியுள்ள விதமும், தென்னிந்தியப் பண்பாட்டின் தொல்எச்சங்களாக இன்றைய பழங்குடிகள் வாழ்வு முறைகள் உள்ளன என்ற அணுகுமுறையும் இந்நூல் முழுக்கவே காலனிய, படிமலர்ச்சிச் சட்டகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்தான் என்பதை பறைசாற்றுகின்றது.

சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் காலஞ்சென்ற வ.சுதர்சன் அவர்களுக்கு அவரது மாணவர்கள் கூட செய்யாத ஒரு சிறப்பினை பக்தவத்சலபாரதி இந்நூலை அவருக்குக் காணிக்கையாக்கியதன் மூலம் செய்துள்ளார். தமிழகப் பழங்குடிகள் ஆய்வுகள் பலவற்றையும் தொட்டுக் காட்டிவிட வேண்டும் என்ற முனைப்பு நூல் முழுக்க இழையோடி உள்ளது. ஒரு கையடக்க நூலில் இவ்வளவுதான் முடியும் என்றால் அது ஒரு தலைபாரத்தை சுமக்க முனைவதேன்? சங்க இலக்கி யங்களில் காணலாகும் சில வாழ்வு முறைகளையும் அவை இன்றைய தமிழகப் பழங்குடிகளிடம் காணப்படுவதை இந்நூலா சிரியர் ஆங்காங்குக் கோடிட்டுக் காட்டுவதும் இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

புகைப்படங்களும், தகவல் பெட்டிகளும், தொதுவர்கள் தங்களது எருமைப்பலி தடையாணையை எதிர்த்து நூறாண்டு களுக்கு முன்பு அரசுக்குக் கொடுத்த மனுவும் கலைச் சொற்பட்டி யல், துணை நூற்பட்டியல், சுட்டி போன்றவையும் நூலுக்கு அணிசேர்க்கின்றன. இந்நூலில் ஒரு புது முயற்சியாக ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழில் அப்படியே மொழியாக்கம் செய்து எழுதிவிட்டு அவற்றுள் சிலவற்றை மட்டும் நூலின் பின்பகுதியில் பட்டியலிட்டுள்ளனர். இது கணினியில் தட்டச்சு செய்பவருக்கு வேண்டுமென்றால் சற்று சுளுவாக இருந்திருக்குமே ஒழிய அதனை ஒரு பதிப்பு கொள்கையாக ஏற்க முடியுமா? மொத்தத் தில் இந்நூல் தமிழகப் பழங்குடிகள் குறித்து ஆராய்வோருக்கும், இலக்கிய மானிடவியலர்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியர் : பக்தவத்சல பாரதி, வெளியீடு : அடையாளம், புத்தாநத்தம் பக்.205. விலை ரூ.75/


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com