Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு
அ. மங்கை


பின்காலனியச் சூழல், காலனியம், கீழைத்தேய வாதம் குறித்த பின்னணியில் கால்டுவெல்லின் செயல்பாடுகள் கிளப்பக்கூடிய கேள்விகள் என்ன என்பதுதான் என்னுடைய முக்கிய எடு கோளாக அமைகிறது.

கீழைத்தேய வாதம் (Orientalism) காலனியக் கட்டத்தில் மேலெ ழுந்த ஒரு துறை. அதில் முக்கியமான சில கருத்தாக்கங்களாக அதிகாரம், அதிகாரக் கட்டமைப்பு, படிநிலைத் தன்மை ஆகியவற்றைக் கூறலாம். அதன் அடிப்படையில் எழக்கூடிய உளவியல் ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வாக, ஃபனான் அவர்களின் ஆய்வுகளைக் குறிப்பிடலாம். அரசியல் ரீதியான விடுதலை என்பது கிடைத்த பிறகும் கூட காலனியச் சூழல் நம் மத்தியில் விட்டுச்செல்கிற சுவடுகள் பற்றி நாம் எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறோம் என்பன போன்ற விஷயங்களைத்தான் பின்காலனிய ஆய்வுகளின் மிக முக்கியமான கருதுகோளாக நாம் பார்க்கிறோம்.
இன்றைய பின்காலனியச் சூழலில் கீழைத்தேயவாதத்தின் பெருமதியாக நமக்குக் கிடைத்த நவீனத்தைக் காலனிய நவீனம். (Colonial Modernity) என்கிறோம். பொத்தாம் பொதுவாக உலக அளவில் பொருந்தக் கூடிய நவீனம் என்பதிலிருந்து வித்தியாசப் படுத்திப் புரிந்து கொள்வதற்காக நாம் காலனிய நவீனம் என்று கொள்கிறோம். அவற்றை எவ்வாறாக எதிர்கொள்ளப் போகி றோம் என்ற கேள்வியில் எனக்கெழுந்த ஐயங்களைப் பின்வரு மாறு நான் வகுத்துக் கொள்கிறேன்.

_ கீழைத்தேய வாதிகளின் சமஸ்கிருதம் அல்லது தமிழ் சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியிலிருந்த காலனிய நோக்கும் பார்வையும்.

_ காலனிய பார்வைகளோடு இருந்தாலும் அவர்கள் கண்டறிந்த உண்மைகள் இன்று நமக்குக் காட்டக்கூடிய பொருண்மைகள்.

_ இன்றைய நமது மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை வடிவமைப்பதில் இந்த ஆய்வுகளுக்குள்ள பங்குநிலை.

_ வரலாற்றில், ஆய்வாளர்கள் குறித்த நமது பார்வைகளை இந்த ஆய்வுகள் வடிவமைக்கும் தகைமை.

மொழிநூல் (Philology)எனப்படும் மொழிகள் குறித்த இந்த ஆய்வுப்புலம்தான் நவீனகால கீழைத்தேயவாதத்தின் அடிவேர். அதன் தொடக்கத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணலாம் என செய்த் அவர்கள் குறிப்பிடுகிறார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டு என்று சொல்லுவது பெரும்பகுதி அராபியச் சூழலிலிருந்து இருக்கலாம். நம்மைப் பொருத்தவரை சீகன் பால்குவிலிருந்து(Zeiganbalg), அதாவது பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மொழிநூலின் ஆரம்பக் கட்டத்தைக் காணமுடியும்.
காலனியம் எப்படி மொழிகளை அணுகியது என்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன:

_ வரிவடிவத்தில் இல்லாத மொழிகளுக்கு பேச்சில் மட்டுமே இருக்கக்கூடிய மொழிகளுக்கு வரிவடிவம் கொடுக்கிறார் கள். (ஆப்பிரிக்க மொழிகள் தமது வரிவடிவத்தை இழந்தி ருந்தன. அவற்றை இவர்கள் வடிவமைத்துத் தருகிறார்கள்.)

_ பேச்சும் எழுத்தும் இலக்கணமும் இலக்கியமும் கொண்ட மொழிகளை இவர்கள் அணுகிய விதம்.

காலனியத்துக்குள் கீழைத்தேயவாதத்தோடு செயல்படக்கூடிய வர்கள், இந்த இரண்டுபட்ட (பேச்சுவடிவத்தில் மட்டும் உள்ள மொழிகள், வரிவடிவம் கொண்ட மொழிகள்) மொழிக்குடும்பங் களை வேறுமாதிரியாகப் புரிந்து கொள்கின்றனர். பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கக்கூடிய மொழிகளை வேறுமாதிரியாகவும் வளர்ச்சியடைந்த இலக்கணமும் இலக்கியமும் உள்ள மொழி களை அவர்கள் பார்த்த பார்வை வேறாகவும் இருக்கிறது. எனவே, ஆப்பிரிக்கா காலனியத்தில் தொழிற்பட்ட கீழைத்தேய வாதம் என்பது வேறு; இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக் கூடிய காலனியச் சூழலில் கீழைத்தேய வாதம் தொழிற்பட்ட முறை வேறு. இந்தப் பின்னணியையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மொழிசார்ந்த இந்த வேறுபாடுகள் இருந்தாலும்கூட இனத் துவப் பார்வை ஒரேமாதிரியாகத்தான் இருந்தது. இவர்கள் எல்லோரும் காட்டு மிராண்டிகளாகவும் இவர்களை நாகரீகப் படுத்துவதுதான் காலனியவாதிகளின் முழுமுதற்பணியாகவும் கருதப்பட்டது. நிர்வாகத்துறை சார்ந்து வந்தவர்கள், வணிகம் சார்ந்து வந்தவர்கள், மதபோதகர்களாக வந்தவர்-கள் ஆகிய மூவரும் இதில் வெவ்வேறான விஷயங்களை முன்னெடுத்துச் சென்றார்கள். இதில் மதபோதகர்களாக வந்தவர்களிடத்தில்தான் மேலதிகச் சிக்கல் இருந்தது. கிருத்துவம், சைவம் ஆகிய இரண்டுக் கும் இடையே கிளம்பிய வாதமாக நாம் இவற்றைப் பார்க்கலாம்.

‘நவகாலனிய யுகத்தில் பண்பாட்டுக் கூறுகள்’ எனும் கட்டுரையில் கூகி வாதியாங்கோ, “ஆதிக்கம் செலுத்தப்படும் நாடுகள் மற்றும் வர்க்கங்கள் குறித்த தனிப்பட்ட அல்லது கூட்டுத் -தன்னிலைப் படிமத்தை உருவாக்குவதோடு ஆதிக்கம் செலுத்துகின்ற நாடுகள், வர்க்கங்கள் குறித்தும் படிமங்களை (காலனியம்) விட்டுச் செல்கிறது. இது நமது ஓர்மைத்தளத்தில் செயல்படும் ஆதிக்கம்.’’ (1993: 51) என்று குறிப்பிடுகிறார். ஓர்மைத்தளத்தில் காலனியம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதை முன்னிறுத்துகிறார். இதில் இரண்டு விஷயங்கள் உறுதியாகின்றன.

‘பிறிது’ என்ற முத்திரை _ காலனியச் சூழலில் இருந்து வரக்கூடியவர்கள் ‘தானா’கவும் தன்னிலையாகவும், காலனியப் படுத்தப்படுபவர்கள் ‘பிறிதாகவும்தான் இருக்க முடியும்.

‘பிறிதாக ச்இருப்பவர்கள், இங்கிருந்துதான் வருகிறார்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்ற முத்திரையைக் கொடுப்பது _ ஒரு சாராம்சவாத இனத்துவமான நேர்கோட்டுப்பார்வை. இந்த இரண்டு தன்மைகளையும் இதன் அடிப்படையாகக் கொள்ளலாம். இதுபற்றி கவிராஜ் என்பவரை மேற்கோள் காட்டி ட்ரவுட்மன் கூறுகிறார். “இந்தியாவின் எண்ணற்ற மொழிகள் தொகுக்-கப்பட்டன; பகுக்கப்பட்டன; தரப்படுத்தப் பட்டன; விளக்கப்பட்டன; இதனால் ‘கணக்-கில் வராத’, ‘மூட்டத் தன்மை’ கொண்ட தன்மைகள் அனைத்தும் பிசிறில்லாமல் கட்டப்பட்டு, எண்ணப்பட்டு வரைபடங்களுக்குள் அடக்கப் பட்டன. (கவிராஜ், 1992) என்று குறிப்பிடுகிறார்
.
இந்தத் தன்மையை இலக்கணத் தொழிற்சாலை (Grammar Industry) என்ற சொல்லின் மூலமாக ட்ரவுட்மன் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கணத் தொழிற்சாலையைப் பதினெட்டாம் நூற்றாண் டின் பிற்பகுதியில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பார்க்க முடியும் என்பதுதான் ட்ரவுட்மன் வைக்கக்கூடிய முக்கியமான வாதமாக இருக்கிறது.

இலக்கணத்தில் தொழிற்படக்கூடிய உலகப் பார்வைகள் குறித்த ஆய்வுகள் இன்றைக்குப் பெருகிவருகின்றன. பொதுவாக இலக்கணத்தில் ஆராய என்ன இருக்கிறது. ஏற்கனவே வரையறை செய்யப்பட்டதைச் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இலக்கணம் என்பது ஆதிக்கம் செலுத்தக்கூடிய சக்திகள், முன்வைக்கக்கூடிய ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் செயல்பாடு. கால்டுவெல்லின் நூலில் உச்சரிப்பு மாற்றம் சொற்களுக்குள் எப்படி நிகழ்கின்றன என்பவற்றைத் தீர்மானிப்பது என்பது ஆதிக்கத்திலிருக்கக்கூடிய சொற்கள்தான்.

கால்டுவெல்லினுடைய நூலில் சீகன்பால்குவைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது சூத்ரா என்று சொல்வதற்கு மாறாக ‘சுத்ரா’ என்று குறிப்பிடுகிறார் என்கிறார். அதற்குக் காரணம் அவருக்குத் தகவல் கொடுக்கக்கூடிய தகவலாளி அவரிடம் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பறையர்கள் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் பறையர்கள்தான் ஐரோப்பியர்களுக்குச் சமையல் பணிசெய்யக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் உச்சரிப்பால் சீகன்பால்கு தவறாகச் சொல்லிவிட்டார் என்பதுதான் கால்டுவெல் லினுடைய முடிவு. எந்த அளவிற்குக் கால்டுவெல் பறையர்கள் மீது குறிப்பாக அவர் வாழ்கிற பகுதியில் இருந்த பறையர் மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும் உச்சரிப்பு தொடர்பாக இந்த பார்வை தொடர்கிறது.

ஆங்கிலத்தைப் பொருத்தவரை லண்டன் ஆங்கில உச்சரிப்பைக் கேள்வி கேட்கக்கூடிய தன்மை இன்றைக்கு உறுதி பெற்றுவிட்டது. இன்று அதற்கு மாற்றாக அமெரிக்க உச்சரிப்பு நிலைபெற்று வருகிறது-. அழைப்புப்பணி (Call-center- BPO) பணியில் சேர்பவர் களுக்கு 15 நாளில் அமெரிக்க உச்சரிப்பில் பேசுவதற்கான பயிற்சியைத் தருவதைப் பார்க்க முடிகிறது.

மொழி என்பதும் அதில் அங்கீகரிக்கப்பட்ட இலக்கணமாக எதனை நாம் ஏற்கிறோம் என்பது ஒரு அப்பாவித்தனமான விஷயமாக, நடுநிலைமை வாய்ந்ததாக, கணக்கில் எடுப்பதுபற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. இத்தகைய ஒரு முறை யியலைத்தான் கால்டுவெல் அவர்களும் பின்பற்றுகிறார். கால்டுவெல் அவர்களின் ஆய்வுகளைப் பற்றி முடிவாக ட்ரவுட் மன் கூறும்போது, கால்டுவெல்லின் இலக்கண ஆய்வு ஒப்புயர் வற்றது. புதியக் கீழைத்தேய வாதத்தின் மூன்று தலைமுறை ஆய்வுகளின் தொகுதி என்கிறார். முதல் தலைமுறை எல்லிஸ், ஸ்டீவன்சன், இரண்டாம் தலைமுறை ஹாட்க்சன். (2006:74_81)

இப்படியான ஆய்வுகளுக்கான அடித்தளம் என்பது அவர்கள் வந்து வாழ்கின்ற புவிப்பரப்பின் கடந்தகாலம். இன்றிருப்பதை விட அவர்களின் கடந்த காலம் எப்படி இருந்தது என்பதுதான் காலனிய கீழைத்தேய வாதத்திற்கு முக்கியமாகிறது. அதை அறிந்தால்தான் இவர்களை ஆள முடியும். கடந்தகாலம் என்பது பண்பாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்திதான் கண்டறியப்படு கிறது. எனவேதான் கால்டுவெல் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்கிறார். மொழி, மதம் ஆகியவை இவற்றில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மிகமோசமான ஒரு ஆய்வாளரின் நூல், இப்படியான காலனிய கீழைத்தேய சிந்தனையில் வரும் பொழுது இனத்துவ காழ்ப்பு வெளிப்படையாகத் தெரியும்.

இனத்துவ காழ்ப்பு, தானல்லாத பிறவற்றைப் பார்க்கும் பொழுது வரக்கூடிய அபூர்வமான ஒரு பொருளைப் பார்ப்பது போன்ற பார்வையை முன்வைக்கக் கூடியதாக வரலாம். இந்தப் பார்வையை எதிர்கொள்ளும் முகமாகத்தான் 1835இல் (இந்த காலகட்டத்தில்தான் கால்டுவெல் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.) மெக்காலேயின் குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. மெக்காலே இங்கிலாந்தில் இருக்கக்கூடிய விக் (Whigs) கட்சியைச் சேர்ந்தவர். எனவே ஆளும் (Tory) கட்சியில் இருக்கக்கூடிய மேலாதிக்கத்தை ஆதரிக்கக்கூடிய பின்னணி மெக்காலேவுக்குக் கிடையாது.

இந்தியா வந்தபிறகு மெக்காலே தனது குறிப்புகளை (Minutes) எழுதும் பொழுது, இங்கு இருக்கக்கூடியவர்கள், குறிப்பாக கீழைத்தேயவாதிகள், ஆசிய ஆய்வு நிறுவனம், கல்கத்தாவில் செயல்பட்ட சமஸ்கிருதவாதிகள் முன்வைத்த வாதத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மெக்காலே கல்வித் தேர்ச்சி பெற்ற உள்நாட்டவர்கள் என்று கருதப்படுபவர்களை உள்ளடக்க வேண்டும் என்று சொல்லுவது பொருந்தாது என்கிறார். ஏனென்றால் கல்வி கற்று வாழக்கூடிய சுதேசிகள் வடமொழி சார்ந்து இயங்கும் சாதிய வர்க்கப் பின்னணியில் உள்ளவர்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு எழுதும் குறிப்பில் எழுதுகிறார். இந்துப் புனித நூல்களில் புலமை பெறாத கோடானுகோடி மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்பில் இவர்களை மட்டும் முன்னிறுத்துகின்ற கல்விமுறை வேண்டாம் என்ற வாதத்தை முக்கியமான விஷயமாக முன்வைக்கிறார். அதற்கு மாற்றான கல்வியை, ஓரளவு சனநாயகப் படுத்தக்கூடிய ஒரு பார்வையை முன்வைக்கக்கூடியவராக மெக்காலே வருகிறார். அதேசமயம் சமஸ்கிருதத்திலோ, பர்ஷியத்திலோ இருக்கக்கூடிய அத்தனை நூற்றாண்டுகால இலக்கியத்திற்குப் பதிலாக ஒரே ஒரு அலமாரி ஆங்கில இலக்கியத்தைப் படித்தால் போதும் என்று சொன்னவரும் மெக்காலேதான். காலனியச் சிந்தனை அவரிடம் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் இங்கு இருக்கக்கூடிய சாதியப் படிநிலை சார்ந்த கல்வியை மறுக்க வேண்டும் என்ற பார்வையை அவர் முன்னெடுக்கின்றார்.

இத்தகு சூழலில் கால்டுவெல்லின் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது என்பதை நாம் கணக்கில் எடுக்கவேண்டும். இந்தப் பின்னணியில் ‘நாகரிகப் படுத்துகின்ற’ பார்வை இருந்தாலும் சமூகத்தில் நிலவிய நிலவுடைமைக் கூறுகளைக் கேள்வி கேட்கும் தன்மைகளை இந்த ஆய்வுகள் கொண்டிருக்கின்றன என்று கூறலாம்.
இப்பின்னணியில் எனக்கிருக்கக்கூடிய சிலகேள்விகளை வெறும் கேள்விகளாகவே முன்வைத்துச் செல்ல விரும்புகிறேன். கால்டுவெல் இந்தத் துறையில் மிக முக்கியமானவராக கருதப் படக்கூடிய தன்மையைக் கேள்வி கேட்பதாகவே ட்ரவுட்மனி னுடைய நூல் வெளிவந்திருக்கிறது. அது தமிழிலும் திராவிடச் சான்றாக மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கிறது. அது முழு நூலினுடைய மொழிபெயர்ப்பு அல்ல.

கால்டுவெல், மொழித் துறையில் தனக்கு முன்பு ஈடுபட்டிருந்த வர்களை எவ்விதம் அங்கீகரிக்கிறார் என்ற கேள்வியை முன் வைக்கிறேன். கால்டுவெல்லின் இவ்வளவு பெரிய இலக்கண நூலில் சீகன்பால்கு பற்றிய குறிப்பு வருவது ஒரு இடத்தில் மட்டுமே. அது நான் முன்பே சுட்டிக்காட்டிய ‘சூத்ரா’ என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது ஏற்படக்கூடிய தவறினைச் சுட்டிக்காட்டுவதற்காக வரக்கூடிய ஒருபகுதி. சீகன்பால்கு வேறுநாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு முன்பே வந்தவர் என பலகாரணங்களைச் சொல்லி கால்டுவெல்லுக்குச் சாதகமாக பேசினாலும் கூட, இதே தமிழகத்தில் கால்டுவெல்லுக்கு முன்பு இத்துறையில் பணியாற்றிய எல்லீஸ் துரையின் ஆய்வைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்பதை ட்ரவுட்மன் வெளிப்படுத்து கிறார். உண்மையில் ட்ரவுட்மன் எல்லீஸின் பங்களிப்பை வெளிக்கொணர எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மிகவும் விரிவாகவே குறிப்பிடுகிறார்.

எல்லீஸ் தனக்கு வந்த பல்வேறு கடிதங்களைப் பாதுகாத்து வைக்கும் பழக்கமுள்ளவர். அப்படியான கடிதங்களிலிருந்தே ட்ரவுட்மன் எல்லீஸின் முயற்சிகளைக் கண்டெடுக்கிறார். கால்டுவெல் எல்லீஸைப் பற்றித் தரக்கூடிய குறிப்பு:

“இத்துறையில் முதன்முதல் உடைப்பை ஏற்படுத்தியவர் சென்னையைச் சேர்ந்த எல்லீஸ் ஆவார். அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் புலமை மிக்கவர். காம்ப்பெல் அவர்களின் தெலுங்கு இலக்கண நூலுக்கான முன்னுரையில் சுருக்கமான ஒப்பியல் ஆய்வை மேற்கொண்டுள்ளார். மூன்று திராவிட மொழிகளுக்கிடையே உள்ள ஒலிக்கூறுகளை ஒப்பிடுகிறார். இலக்கண அமைப்பை அல்ல. (கால்டுவெல், 1856: 4)’’ என்ற கால்டுவெல்லின் குறிப்பை ட்ரவுட்மன் மேற்கோள் காட்டுகிறார்.
தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்றுக்குமிடையிலான ஒப்புமைகளைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லும் ஆய்வாகத் தான் எல்லீஸினுடைய ஆய்வு இருந்தது என்பது கால்டு-வெல் தரும் விளக்கம். இதில் கால்டுவெல் எல்லீஸை எவ்வளவு குறைவாக மதிப்பிட்டிருக்கிறார் என்பதைக் குறித்துக் கேள்வி எழுப்பலாம். ஆனால் இப்போது பிரச்சனைக்குரிய இந்த இரண்டாம் பதிப்பில் _ 1875இல் வந்த அந்தப் பதிப்பு இப்போது நமக்கு மறுபதிப்பாக வந்துள்ள சூழலில், எல்லீஸ் பற்றிய இந்தக் குறிப்பு கால்டுவெல்லின் முன்னுரையில் இல்லை.

கால்டுவெல்லை விட எல்லீஸை ஓரம் கட்டுவதில் இந்த இரண்டாம் பதிப்புக்குப் பங்கு இருந்திருக்கிறது. கால்டுவெல்லின் ஒட்டுமொத்த நூலில், எல்லீஸ்பற்றி வரக்கூடிய இரண்டு மூன்று குறிப்புகள் பற்றி ட்ரவுட்மன் குறிப்பிடும்போது “எங்கெல்லாம் எல்லீஸ் தவறிழைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கால்டுவெல் எல்லீஸைக் குறிப்பிடுகிறார். எனவே எழுதியதை மீண்டும், மறுபதிப்பாக வரும்போது, சில பகுதிகளை வெட்டுவதில் வெளியாட்களுக்கு மட்டுமல்ல, கால்டுவெல்லுக்கும் பங்கு இருந்தது என்பது தெரிகிறது. எல்லீஸ் போன்றவர்கள் இத்துறையில் பணிபுரிந்தது தெரியவந்த பொழுதுங்கூட தான் செய்கிற பணியில் இந்த ஆய்வுகள் பெரிய அளவு பங்களிக்கவில்லை என்றெல்லாம் கால்டுவெல் சொல்கிறார்.

எல்லீஸ், தமிழை அல்லது தென்னிந்திய மொழிகளைப் பாடமாக வைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகள் போராடி இங்குள்ள கல்லூரிகளில் அதை நடை முறைப்படுத்தி யவர்களில் ஒருவர். 40 வயதிற்கு முன்பாகத் தான் எழுதியதை வெளியிடக்கூடாது என்ற முடிவில் இருந்ததன் காரணமாகப் பல தகவல்கள் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ட்ரவுட்மன் நிரூபிப்பது என்னவென்றால் ‘எல்லீஸ் திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டறியாமல் இருக்கலாம். ஆனால் திராவிடச் சான்று என்பதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிரூபித்துவிட்டிருக்கிறார். கால்டுவெல் அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தரவில்லை என்று ட்ரவுட்மன் வாதிடுகிறார்.

நம்நாட்டிலேயே இருந்த ஆய்வாளர்களைப் பற்றிக் கால்டுவெல் என்ன விதமான கருத்தை முன்வைக்கிறார் என்பதும் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக ட்ரவுட்மன், எல்லீஸிற்கு உதவியாக இருந்த சங்கரய்யா என்பவர் தெலுங்கு இலக்கண நூலுக்கு விமர்சனம் எழுதும்போது அவர் வைக்கக் கூடிய விமர்சனங்களில் ஒன்று தெலுங்கில் இருக்கும் பலசொற் கள் நன்னூலில் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். சங்கரய்யா சொன்னதனால் எல்லீசுக்கு அந்த முடிவு வந்ததா? அல்லது எல்லீஸ் அந்த முடிவினை எடுத்ததன் காரணமாக சங்கரய்யா அதற்கான தரவுகளைத் தேர்ந்தெடுத்தாரா என்பது இன்று நம்மால் சொல்லமுடியவில்லை என்று ட்ரவுட்மன் சொல்கிறார். சங்கரய்யா என்ற ஒரு நபர் எல்லீசுடன் இருந்தார் என்பது எல்லீஸ் பற்றி பேசும்போது தெரியவருகிறது.

அவ்வாறே சீகன்பால்குக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த நபரை இங்கிருந்து அந்த நாட்டு அரசரைப் பார்ப்பதற்கு இட்டுச் செல்கிறார். இரண்டாண்டுக்கு முன் சீகன்பால்கு பற்றி நடந்த கருத்தரங்கில் அந்தப் படங்கள் உட்பட எல்லாவற்றையும் காட்டினார்கள். ஆனால் தேடித் துருவிப் பார்த்தாலும் கால்டுவெல்லின் நூல்களில் இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பலர் என்ன செய்தார்கள் என்கிற பதிவு இல்லை. இங்கிருக்கக் கூடிய சைவம் கால்டுவெல்லுக்குப் பிடிக்காததினால் அவர் அதைச் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் சோமசுந்தர நாயகர், சி.வை. தாமோதரம்பிள்ளை, மனோன்மணீயம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகிய பலபேரைக் கால்டுவெல் பொருட்டாகக் கருதவில்லை. அவர்கள் மேல் உள்ள விமர்சனங்களை நான் முற்றாக மறுதலிக்கவில்லை. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு உரையில், இங்கிருக்கக்கூடிய சுதேசிகள் இத்தகு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் சுதேசிகளைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. கால்டுவெல் இவ்வாறு சொல்லாது விட்ட ஆய்வுகளையும் சேர்த்துதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இதைப் பற்றிக் குறிப்பிடும் போது தீபேஷ் சக்கரவர்த்தியின் சமீபத்திய நூலில் “இன்றைக்கு ஐரோப்பியக் காலனிய ஆட்சி நமக்கு விட்டுச் சென்ற மிச்ச சொச்சம் என்னவென்றால், தெற்காசியாவில் சம்ஸ்கிருதம், பர்ஷிய அராபிய மொழிகளில், கண்ணிகள் அறாமல் தொடர்ந்த அறிவுப்புல மரபுகளை இன்று வரலாற்றியல் ஆய்வுகளாக மட்டுமே அணுகும் போக்குதான். இம்மரபுகள் கடந்தகால மரபுகளாக, இறந்து போய்விட்டவைகளாக, வரலாறாக மட்டுமே அணுகப்படுகின்றன.’’(2000) தீபேஷ் சக்கரவர்த்திக்குத் தென்னிந்திய மொழிகள் பற்றிய பதிவு இன்றுகூட இல்லாமல் இருப்பதையும் இணைத்து இதனைப் புரிந்துகொள்ள வேண்டியதாக உள்ளது.
இன்று மனோன்மணீயம் பற்றியோ சி.வை.தா. பற்றியோ ஆய்வு செய்தால் அது பழைய காலத்தைப் பற்றிய ஆய்வாக இருக்கும். ஆனால் கால்டுவெல் பற்றிய ஆய்வு சமகால ஆய்வாகக் கருதப்படும். அந்த சிந்தனை நம்மனதில் எப்படி வருகிறது என்றால், இந்த காலனித்துவ ஆய்வுகள் நமக்குக் கிடைக்கின்றன என்பதால் கால்டுவெல் இங்கிருந்து உடல் நலக்குறைவால் தன்நாடு சென்று இரண்டு ஆண்டுகள் தங்கி யிருந்து இந்த நூலை அவர் எழுதுகிறார்.

இன்று பின்காலனியச் சூழலில் காலனியத்துவ ஆய்வுகளைக் கற்கும் போது அதற்குக் கிடைத்தப் பின்புலம் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கால்டுவெல் ஒவ்வொருவரும் தம்தம் மொழி இலக்கணத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கும் முறையியல் அவர்களுக்கு இல்லை என்கிறார். எனவே இந்த ஒப்பாய்வு மொழியியல் என்ற துறை இங்கு வேரூன்றக் காலம் எடுத்துக் கொண்டது. ஒரு வகையில் நம்முடைய பின்புலமும் சூழலும், அந்தச் சூழலில் இருந்து நாம் எப்படிக் கிளம்புகிறோம் என்பது மிக முக்கியம். இதனை நாம் முக்கியமாக எடுக்கவில்லையென்றால், இங்கு புழங்கிக் கொண்டி ருக்கிற ‘கிரிமீலேயர்’ வாதத்துக்குள் நாம் அடங்கிவிடுவோம். கால்டுவெல் எடுத்த விடயத்தை சி.வை. தாமோதரம்பிள்ளை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வியில் கொண்டு சேர்க்கும்.

கால்டுவெல் அவர்கள் முன்வைத்த மிக முக்கியமான பார்ப்பனிய மறுப்பு என்பதை திராவிடம் எனும் சொற்றொடரின் மூலமாகக் கையிலெடுத்துக் கொண்ட மிகப்பெரிய இயக்கங்களில் தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திவரை செயல்பட்டன. வின்சென்ட் குமாரதாஸ் “காலனீய கிறித்துவத்துடனான ஊடாட்டம்: 19ஆம் நூற்றாண்டு இறுதியில் உருவான திருநெல்வேலி இந்துக் கிறித்துவ சர்ச்’’ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். (South Indian Studies 1: 1996)

வின்சென்ட் குமாரதாஸ் தான் கால்டுவெல் பற்றிய முழுமை யான ஒரு நூலையும் நமக்குத் தந்துள்ளார். “கிறித்துவத்திற்கு மதம் மாறியதால் இங்கு ஏற்கனவே நிலவிய அதிகாரப்படி நிலைக்குச் சவால்விடும் நிலைமை பெற்றவர்கள், அதேநேரத்தில் சர்ச்சுக்குள் அதிகாரம் இழந்தவர்களாகவே இருந்தனர்’’ என்கிறார். (மேற்படி : 15) கால்டுவெல்லோடு கிருத்துவ சபையைச் சார்ந்து செயல்பட்ட பாதிரியார் கமரர் (Rev.caemmerer) என்பவரும் அவருக்குக் கீழ் பணி புரியக்கூடிய பிரகாச புரத்தைச் சேர்ந்த அருமைநாயகம் என்பவரும் இருந்தனர். அருமைநாயகம் அந்த சர்ச்சின் உறுப்பினராக இருக்கிறார். ஜி.யூ.போப்பின் கீழ் தமிழ் கற்றவர். சாயர் புரத்தில் பயின்றவர். மேலும் லத்தீன், கிரேக்கம், தமிழ் போன்ற மொழிகளில் புலமை பெற்றவர். அருமைநாயகம் தொடர்ந்து கமரர் மற்றும் கால்டு வெல்லுடைய போக்குகளை எதிர்த்தார். கமரர் ஒரு பள்ளரை அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக நியமித்ததை அருமை நாயகம் எதிர்க்கிறார். சட்டாம்பிள்ளை விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதில் சர்ச் தலையீடு செய்கிறது. இப்படியான காரணங்களால் அருமைநாயகம் சர்ச்சைவிட்டு வெளியேறுகி றார். இவரைப் பற்றி சர்ச் பதிவு செய்துள்ள குறிப்புகள் ஒட்டுண்ணி தன்மை கொண்டவர் என்று விவரிக்கின்றன.

வெளியேறியபின் 1857இல் இந்துக் கிறிஸ்துவ சர்ச் என்று பிரகாசபுரத்தில் தொடங்குகிறார். குறிப்பாக இந்தச் சங்கத்தில் இருந்து விலகிய சாமியடியான், விசுவாசம் போன்றவர்கள் இதில் இணைந்து செயல்பட்டனர். நாட்டுசபை என்று அது வழங்கப் பட்டது. அந்தச் சபையில் சட்டாம்பிள்ளையின் பல செயல்களை வின்சென்ட் குமாரதாஸ் சர்ச் குறிப்புகளில் இருந்து கொடுக்கிறார். ‘கால்டுவெல்’லின் இலக்கண நூல் வந்தபிறகு சாணார்கள் பற்றிய பகுதியை மொழிபெயர்த்து ‘நம்சமூகத்தை இவ்வளவு மோச மாகச் சொல்கிறார்’ என்று வாதிட்டார் எனக் குறிப்பிடுகிறார்.

அடிப்படையில் ஒரு வகையான சாதிசார்ந்த ஒற்றுமை மேலெழுந்து கிருத்துவத்தைக் கேள்வி கேட்கவும், கிருத்துவமத போதகரைக் கேள்வி கேட்பதுமான முயற்சியாக இது இருந்தது. ஆனால் படிநிலைத்தன்மை தொழிற்படும் பொழுது அதற்கு எதிரான குரலை எழுப்புவது என்பது கட்டாயமாக இருந்திருக் கிறது. கால்டுவெல் காலத்தில் அவரைச் சார்ந்து, அவர் இருந்த சர்ச்சிக்குள் படிநிலைப்போக்கு இருந்தது என்பது உண்மை. அந்தக் குழுவிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை “இவர்கள் கையை யும் காலையும் மட்டுமே ஆட்டத் தெரிந்தவர்கள்’’ எனக் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

கிறித்துவம் தவிர பார்ப்பனிய எதிர்ப்பு தமிழ்ச் சூழலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வள்ளலார் கிருத்துவத்தின் சாரத்தை உள்வாங்கி செயல்பட்டார் என்றுகூடச் சொல்லலாம். இங்கிலாந்தில் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த பிராட்லோவின் சிந்தனையை ஏற்று தமிழகத்தில் நடத்தப்பட்ட ‘தத்துவ விவேசினி’ எனும் இதழ் இங்கு வெளிவந்து கொண்டிருந்தது. இவைதவிர சட்டாம்பிள்ளை அருமைநாயகம் போன்றவர்கள் உள்ளிருந்து கிளப்பிய எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியதாகிறது.

கால்டுவெல்லின் நூல்தான் முதன்முதலில் திராவிட குடும்பம் என்பதை உறுதிபடுத்தியது என்றுதான் சொல்லலாமே தவிர அவர்தான் இதனை நிறுவினார் என்று சொல்ல முடியாது. அந்தப் பெருமை எல்லீசுக்குத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். அம்முயற்சியில் இந்துமத எதிர்ப்புக்கான எடுகோளாக பார்ப்பனிய எதிர்ப்பையும் இந்தோ ஆரிய மொழிக்குடும்ப ஆதிக்கத்தையும் கால்டுவெல் கைக்கொள்கிறார். அதனை அங்கீகரிக்கும் அதே வேளையில் உள்ளாட்டளவில் மொழிசார்ந்து சைவத்தை முதன்மைப்படுத்திய குழுவினரும் வடமொழியை எதிர்த்திருக்கின்றனர் என்பதையும் கூறவேண்டும்.

கிருத்துவ சாரத்தை உள்வாங்கி தன்வயமாக்க நினைத்த வள்ளலார் வடமொழிமறுப்பு சாதிமறுப்பு, வறுமைநீக்கம் போன்றவற்றை முன்வைத்துள்ளார். பகுத்தறிவை முன்வைத்து சடங்குகள் மூடநம்பிக்கைகள் பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்த மரபு ‘தத்துவ விவேசினி’ மூலம் நமக்கு உறுதிப்படு கிறது. கால்டுவெல் தனது கல்விப்புல தேர்ச்சி குறித்து பயிற்சி மிக்க கல்வியாளர் என்றுக் குறிப்பிடுகிறார். இங்கு இருக்கக் கூடியவர்களுக்கு அந்த தேர்ச்சி இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதற்கான அறங்களைக் கால்டுவெல் பின்பற்றியிருந்தால் எல்லீஸைப் பற்றியோ இங்கு இருக்கக்கூடிய அல்லது உள்நாட்டில் இருந்து வரக்கூடிய விவாதங்களையே புறந்தள்ளியிருக்கக்கூடாது. கிருத்துமதத் தொண்டை தனது முக்கியப் பணியாகவும், தனக்கிருந்த மொழி நூல் தேர்ச்சியையும் கொண்டும் தான் அவர் தனது வேலையைச் செய்கிறார். அதன்மூலமே நமக்கு இப்படியான ஒரு நூலை அவர் தந்திருக்கிறார். அவர் முன்வைத்த திராவிடத்தைக் கையில் எடுத்த இயக்கங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் வளர்ந்து ஆதிக்கப் பொறுப்பு களை ஏற்று செயல்படுகிற தன்மையை நாம் அறிவோம்.

கால்டுவெல்லின் முக்கிய ஆவணமாக நமக்குக் கிடைத்திருக் கும் இன்னொன்று மறைக்கப்பட்ட பகுதியான பறையர் குறித்த ஆய்வு: இந்தச் சூழலில் தமிழ்ச்சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, தலித் இயக்கங்கள் இதனை எவ்வாறு கையில் எடுக்கும் என்பதைப் பொறுத்துத்தான் இதன் பொருத் தப்பாடு அமையும். பின்காலனியச் சூழலில் தொழிற்பட்ட கீழைத்தேய வாதத்தை விமர்சனபூர்வமாக எதிர்கொண்டு நாம் எவ்வளவு தூரம் அறிவுலகத்தில் சுயாதீனம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்பது தலித்தியம் இவ்வாய்வை தனதாக்கும் விதத்தில் தான் தங்கி இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com