Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatrukaruthu
Maatrukaruthu
மார்ச் 2009
புதுயுகக் கவிஞன் பாரதிக்கு ஓர் விழா

சிவகாசி ஆலங்குளம் வட்டாரம் மாதாங்கோவில்பட்டியில் உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி சார்பாக 21.12.2008 அன்று பாரதி பிறந்தநாள் விழா சிறப்புடன் நடத்தப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் பெரியவர், பிரேம்குமார், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் V. வரதராஜ், மாற்றுக்கருத்து! மற்றும் கேளாத செவிகள் கேட்கட்டும் ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோருடன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யூ.பி) தமிழ்நாடு அமைப்பாளர் தோழர் A. ஆனந்தனும் உரையாற்றினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தோழர் த.செல்வக்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார்.

விழாவின் தொடக்கத்தில் பாரதியின் வாழ்க்கையின் மிக முக்கிய சம்பவங்களை மாணவ மாணவிகள் ஜென்னி பாரதி, சுபாஷ் ஆகியோர் தொகுத்து வழங்கியதும் பாரதியின் கவிதை ஒன்றினை உயிரோட்டத்துடன் ஜென்னி பாரதி முழங்கியதும் விழாவிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. தனது தலைமையுரையில் தோழர் செல்வக்குமார் விழாவிற்காக உழைத்த உள்ளூர்த் தோழர்களை உருக்கமாக நினைவுகூர்ந்தார்.

அடுத்து உரையாற்றிய தோழர் வரதராஜ் பாரதிக்கு விழா எடுத்துள்ள உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி இதற்கு முன் இப்பகுதியில் எடுத்த பல்வேறு போராட்டங்களையும் இனி எடுக்கவிருக்கும் உழைப்பாளர்களுக்கான பல உரிமைப் போராட்டங்களையும் கூறி அவையனைத்திற்கும் இவ்வட்டாரப் பொதுமக்கள் ஆதரவு தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் பிரேம்குமார் தனது உரையில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியும், கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடையும் (சி.டபிள்யு.பி) பகத்சிங் நினைவு தினம் மற்றும் பாரதி விழா போன்றவற்றை அனுஷ்டிப்பதன் மூலம் அவர்களது சிந்தனைகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி அவர்களின் பாதையில் நடைபயின்று இன்றைய சமுதாய பிரச்னைகளை தீர்ப்பதற்கும், சமுதாய மாற்றத்தை கொண்டு வருவதற்கும் முயன்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.

தோழர் த. சிவக்குமார் தனது உரையில் பாரதியை ஜாதிய வாதியாக சித்தரிக்கும் சில தரப்பினரின் இழிசெயலை வன்மையாக கண்டித்தார். அவரது கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டி நந்தன்தான் மிகச்சிறந்த அந்தணன் என்று அவர் அதில் கூறியுள்ளது பார்ப்பனியத்தையா வெளிப்படுத்துகிறது? கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு பூணூல் அணிவித்து அந்தணனாக்கி சமூகத்தின் மேல் ஈடுபாடும் அக்கறையும் கொண்டு அதற்கு முன்மாதியாக திகழ்பவர்களே அந்தணர்கள் அந்த வகையில் அத்தகுதி, ஒருவரின் நடைமுறையால் அடையப் பெறுவதே என்ற பாரதியின் கருத்து பார்ப்பனியத்தையா பிரதிபலிக்கிறது? என்ற கேள்விகளை எழுப்பியதோடு பிறப்பில் ஜாதி பேதம் பாராட்டுவதை ஒரு சதி என்று அவர் வர்ணித்ததும் அவரது காலத்தில் நிலவிய ஜாதியத்திற்கு எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு எதிர்ப்பைக் கிளப்பியவை என்பதை முன் வைத்தார்.

பாரதியின் கண்ணோட்டம் காந்தியடிகளின் ஜாதியம் குறித்த கண்ணோட்டமான பிராமண வகுப்பில் பிறந்த ஒருவன் அதற்குகந்தவனாக வாழாவிட்டால் அவன் கெட்ட பிராமணன் அதைப்போல் சூத்திர குலத்தில் பிறந்த ஒருவன் பிராமண வகுப்பினனைப் போன்ற குணங்கள் கொண்டவனாக இருந்தால் அவன் நல்ல சூத்திரன் என்பதைக் காட்டிலும் மிக மிக முற்போக்கல்லவா என்று குறிப்பிட்டார். ஜாதியத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் ஜாதிக் கட்சிகளோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகளும் எவ்வாறு ஜாதியத்தை வளர்க்கும் போக்கில் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக உத்தப்புரம் நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

உத்தப்புரத்தில் ஒரு சமயத்தில் அனைத்து மக்களும் ஒருமித்து முடிவு செய்து எழுப்பிய சுவரை இடிப்பதற்கு அனைத்து சமூகத்தினரையும் சுமூகமாக அணுகி அவர்களது ஒற்றுமைக்கு ஊறு விளையா வண்ணம் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே அச்சுவருக்கு தீண்டாமைச்சுவர் என்று பெயரிட்டு அதனை அகற்றுவதில் முனைப்புக் காட்டிய சி.பி.ஐ(எம்) கட்சியினர் இருபிரிவு மக்களிடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்தி விட்டனர். அதே வேகத்தில் அதனால் அக்கட்சியினர் மேல் வெறுப்புற்றிருந்த அதில் சம்பந்தப்பட்ட இன்னொரு வகுப்பினரையும் தாஜா செய்யும் விதத்தில் தற்போது பிள்ளைமார் ஜாதியவாதத்திற்கு இரையாக்கப்பட்டு விட்ட மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் பாரதியின் உற்ற தோழருமாகிய வ.உ.சி-யின் சிலைக்கு மதுரையில் பிள்ளைமார் சங்கத்துடன் போராடி மாலை அணிவித்து தங்களது வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தினர் என்பதை தெளிவுபட எடுத்துரைத்தார்.

சமூகத்தில் ஒரு வகுப்பினர் ஜாதிய வாதத்தை எடுத்தால் அது எவ்வாறு அனைத்து வகுப்பினரும் ஜாதிய வாதத்தை எடுப்பதில் சென்று முடிகிறது என்பதை எடுத்துக் கூறினார். மேலும் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமையினை எவ்வாறு பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து கண்டுபிடித்து அதனைப் பிரபலமாக்கி அழிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு எதிராக நிற்பதாக தேர்தல் ஆதாயம் கருதி மார் தட்டுகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டினார். உண்மையான இடதுசாரிகள் விரும்புவது ஜாதிய ஒழிப்பே தவிர ஒடுக்கிய ஜாதியினரின் ஒடுக்கு முறைக்கு பதிலாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் ஒடுக்கு முறையை கொண்டு வருவதல்ல என்பதை வலியுறுத்தி தன் உரையை நிறைவு செய்தார்.

தோழர் சிவக்குமாருக்கு பின் உரையாற்றிய போராசிரியர் பெரியவர் தனது உரையில் அனைத்து மகான்களைப் போலவே பாரதியும் அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த சமூகத்தால் பார்க்கவும், பாராட்டவும்படவில்லை. அவன் வாழ்ந்த சமூகம் அவனுக்கு வறுமையையும் வேதனையுமே தந்தது. ஆனால் அவன் தீர்க்கதரிசனமாக கூறியவை அனைத்தும் அடுத்து வரும் காலங்களில் நிகழ்ந்து இன்று, அவன் எத்தனை உயர்ந்தவன் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. விடுதலை பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று அவன் விடுதலை பெற்றுவிட்டதாகவே பாடினான்.

வானம் அளந்தது அனைத்தும் அளந்த மொழி என்று அவன் தமிழைப் பற்றி கூறினான். இன்று வாழ்ந்த தமிழகத்தின் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவை உயர்ந்து விளங்கச் செய்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அவனுக்கு பின் தோன்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் புதுவழி காட்டிய புதுயுக கவிஞன் அவன். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் பெண்விடுதலைக் கருத்தும் கண்ணோட்டமும் கொண்டவனாக அவன் விளங்கினான் கற்பென்றால் இருபாலருக்கும் அதனை பொதுவில் வைப்போம் என்று அவன் முழங்கினான். அத்துடன் தனது மனைவியின் தோளில் கைபோட்டுக்கொண்டு அஹ்ரகார தெருவுக்குள் நடைபோட்டு அங்கு நிலவிய பத்தாம் பசலி போக்குகளை பரிகசித்தான் என்ற விசயங்களை சாராம்சப்படுத்தினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் A. ஆனந்தன் தனது உரையில் பின்வரும் விசயங்களை எடுத்துரைத்தார்:

உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை ஆகிய அமைப்புகள் ஒரு இலக்கிய வாதியான பாரதிக்கு விழா எடுப்பது என்பது வித்தியாசமாக தோன்றலாம். ஏனெனில் பாரதி நேரடியாக தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தவனல்ல. அவன் கம்யூனிஸ்ட் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவனும் அல்ல. இருந்தாலும் உண்மையான சமூகமாற்றத்தை கொண்டுவர விரும்பும் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே இலக்கியங்கள் மற்றும் இலக்கியவாதிகள் மீது ஒரு பார்வை மற்றும் ஈடுபாடு இருந்து கொண்டே வந்துள்ளது.

இலக்கியம் என்பது மக்களின் மனதை பண்படுத்தக் கூடியது. பண்படாத நிலத்தில் எவ்வாறு பயிர்கள் வளராதோ அதைப்போல உயர்ந்த சரியான இலக்கியங்களால் பண்படுத்தப்படாத பரந்துபட்ட மக்கள் மனதில் சமுதாய மாற்றக் கருத்து விதைகளை விதைக்கவோ அதனை வளர்க்கவோ முடியாது. அந்த அடிப்படையில் ஒரு சரியான அரசியல் நீரோட்டத்தைக் கொண்டு இன்று நிலவும் சீரழிந்த சாக்கடை அரசியலை அகற்ற முனைபவர்களுக்கு நிச்சயம் பாரதி போன்ற மறுமலர்ச்சியுக இலக்கியவாதிகள் மேல் ஒரு ஈடுபாடு இருக்கவே செய்யும்.

உயர்ந்த கருத்துக்களே உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்குகின்றன. அக்கருத்துக்கள் அரசியல்வாதிகளின் எழுத்துக்களைக் கூட மிகச்சிறந்த உன்னத இலக்கியங்களாக்குகின்றன. கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை கூறினார். தான் படித்த கவிதைகளிலேயே மிக உயர்ந்த கவிதை "பாட்டாளிகளுக்கு இழப்பதற்கென்று எதுவுமில்லை; அவர்களது கைவிலங்குகளைத் தவிர. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது" என்ற இரு வரிகளே என்று. அவ்வரிகள் மாமேதை மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற இறவா இலக்கியத்தில் இடம் பெற்றவையாகும்.

சமகாலத்து எழுத்தாளர்களிலேயே பாரதி மிகவும் வேறுபட்டும் உயர்ந்தும் இருந்ததற்கான காரணம் அவரை வழி நடத்திய அவர் கைக்கொண்டிருந்த உயர்ந்த இலக்காகும். அடிமைத்தனம் என்ற சவுக்கடி அவர்மேல் விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். எனவே தான் தேசவிடுதலைக் கண்ணோட்டத்தை அவர் தனது இலக்காகவும் உயிர் மூச்சாகவும் கொண்டார். அதுவே அவரது எழுத்துக்களில் நெருப்பைப் பாய்ச்சி அவற்றை வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அவரது சமகால இலக்கியங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

அவர் தனது கவிதைகளை வெறும் இலக்கியப் படைப்புகள் என்று பார்க்கவில்லை. அவை தேசவிடுதலைக்கு மக்களை அணிதிரட்டும் கருவிகளாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் அவரது நடையில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை பிறந்தது. யாப்பிலக்கண தளைகளை அவரது கவிதைகள் துச்சமென தூக்கியயறிந்தன. காவடிச்சிந்து அவரது கருத்துக்களை ஏதுவாகச் சுமக்கும் வாகனமாயிற்று. ஏற்றம் இறைப்போர், மீன்பிடிப்போர், புகைவண்டியில் பிச்சை எடுப்போர் போன்றவர்கள் பாடிய பாடல்களில் இருந்தும் கூட அவர் தனது கவிதைகளுக்களான ராகங்களையும் சந்தங்களையும் பெற்றார். அதனால்தான் அவரது இலக்கியம் இன்னும் வாழ்கிறது.

ஒரு அரசியல் நோக்கை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட அவரது கவிதைகள் மற்ற இலக்கியங்களைப் போல் இறவா வரம் பெற்றவையாக இருக்க முடியாது என்பது போன்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றை பொய்ப்பித்து தரமான வாசகர்களால் இன்றும் அவரது கவிதைகள் வாசிக்கப்படுவது மட்டுமல்ல அது பலருக்கு வழிகாட்டுதல் வழங்கவும் செய்கிறது.

உலகம் முழுவதும் சமுதாய மாற்றக் கருத்துக்கள் உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்கவே செய்துள்ளது. ரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி, மாயகோவ்ஸ்கி, ஜெர்மனியின் பிரக்ட் ஆகியோர் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகள் ஆவர். பாரதி கவிதைகளின் அரசியல் ரீதியான பங்கு தேசவிடுதலை கிட்டியதன் மூலம் அரைகுறையாக நிறைவேறிவிட்டாலும் கூட அவரது கவிதைகள் கலாச்சார அரங்கில் சமுதாய மாற்ற சக்திகளுக்கு வழிகாட்ட கூடியவைகளாக இன்றும் உள்ளன.

இன்று ஆளும் முதலாளி வர்க்க கலாச்சாரம் உழைக்கும் மக்களையும் பீடித்து பாதித்துள்ளது. அந்நிலையில் அக்கலாச்சாரத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் தலையாய பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு அவர்கள் விரும்பும் கலாச்சாரச் புரட்சியை கொண்டுவருவதற்கு பாரதியின் கவிதைகளும் கருத்துக்களில் பலவும் வேராக விளங்குகின்றன.

பாரதி போற்றி வளர்த்த மனிதாபிமானக் கலாச்சாரம் இன்று மங்கி மறைந்து கொண்டுள்ளது. ஆளும் முதலாளிவர்க்கத்தின் பாசிச கலாச்சாரம் எங்கும் பரப்பப்படுகிறது. மக்களுக்கிடையே ஒற்றுமையை பேணுவதற்கு பதிலாக வேற்றுமைகளை இன்றைய முதலாளித்துவ சிந்தனைகள் வளர்க்கின்றன. ஒரு சமூகப் பிரிவினர் அனைவரையும் பயங்கரவாதிகள் என சித்தரிப்பது, உலகில் தற்போது நிலவும் முரண்பாடு நாகரிகங்களுக்கிடையே நிலவும் முரண்பாடே என்று கூறுவது தலைவிரித்தாடும் ஜாதியவாதம் போன்றவை ஒரு பாசிச கலாச்சாரத்திற்கு சமூகத்தை இட்டுச் செல்கின்றன.

மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் குறிப்பாக நமது நாட்டில் ஒரு வகை காரியவாதமும் தன்னலவாதமும், கார்ப்பரேட் சிந்தனையின் மூலமும் வெற்றிநெறி (Sucsess ethics) கோட்பாட்டின் அடிப்படையிலும் கொண்டு வரப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு இரையாகியுள்ளனர்.

நமது மக்களிடமும் அவர்களது தார்மீக முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் பல கலாச்சார சீரழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. இலவச திட்டங்கள் மூலம் கிடைக்கும் பொருட்களை விற்பது போன்ற பரவலாக நிலவும் போக்குகள் அநியாயத்தைத் தயக்கம் இன்றி தட்டிக்கேட்க முடியாதவர்களாக அவர்களை ஆக்கியுள்ளன.

இது போன்றவைதான் முதலாளித்துவச் சுரண்டல் எத்தனை கடுமையானதாக இருந்தபோதிலும் அதற்கு எதிராக நிமிர்ந்து நிற்க முடியாதவர்களாக உழைக்கும் மக்களை ஆக்கியுள்ளது. எனவே நமது நாட்டைப் பொறுத்தவரை அரசியல் புரட்சிக்கு முன்னதாகவே கலாச்சாரப் புரட்சி தொடங்கப்பட வேண்டும். அத்தகைய கலாச்சாரப் புரட்சிக்கு பாரதியின் கருத்துக்கள் வளமான சத்தும் சாரமும் வழங்கக் கூடியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மேலைநாட்டு மக்களை புரட்சிகர பாதைக்கு நிச்சயம் இட்டுச்செல்லவே செய்யும். பெர்லின் சுவர் அகற்றப்பட்ட போது அதன் மூலம் அதுவரை சோசலிஸம் என்ற இரும்புத்திரை அமைப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியின் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க தொடங்கிவிட்டனர் என்றெல்லாம் பெரிதுபடுத்தி முதலாளித்துவ பத்திரிக்கைகள் எழுதின.

ஆனால் அந்நாட்டு மக்கள் இன்று சோசலிசமே மிக உயர்ந்த, பிரச்னைகள் எதற்கும் வழிவகுக்காத அமைப்பு என்று உணரத் தொடங்கி விட்டனர். கருத்துக் கணிப்புகளில் 30 சதவீதத்தினருக்கு மேல் சோசலிசத்திற்கு ஆதரவான தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது ஒரு எடுத்துக்காட்டே தவிர மேலை நாட்டு மக்களின் ஒட்டு மொத்த மனநிலையின் படப்பிடிப்பல்ல.

இதை ஒத்த நிலைமைதான் ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகின்றன. இந்நிலையில் முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்தை அவர்கள் பார்க்கத் தொடங்குவர்; அதை கொண்டு வருவதற்கான போராட்டங்களில் ஈடுபடுவர் என்று நாம் நம்புவதற்கு காரணம் நமது நாட்டு மக்களைப் போல் தார்மீக முதுகெலும்பு முறிந்து போனவர்களாக அவர்கள் இல்லை என்பதே.

இந்த நிலையில் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்க கூடிய கலாச்சார பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் பாரதியின் சிந்தனைகளை உள்வாங்கி, ஜீரணித்து அதையும் கடந்து அவன் முன்வைத்த தேசியவாத வரையறையை தாண்டி சர்வதேசவாத, கூட்டுவாத கலாச்சாரங்களை கைக்கொள்ள வேண்டும்.

அக்கருத்துக்கள் வழிநடத்தினால் கலாச்சார துறையிலும் கலை இலக்கிய துறையிலும் சமூகமாற்றப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் நவயுக பாரதிகளாக நாமும் உருவாக முடியும். ஏனெனில் பாரதி அமானுஷ்யனல்ல. அவனுக்கு விழா எடுக்கும் நாம் அவன்பட்ட கஷ்டங்களை எண்ணிக் கண்ணீர் வடிப்பதோடு நமது கடமையை முடித்துக் கொள்ளக்கூடாது. எத்தனை கஷ்டங்களை நாம் மேற்கொண்டாலும் கூட அவனது பாதையில் பயணித்து இன்றைய சமூகத் தேவையான சோசலிஸத்தை கொண்டுவர பாடுபடுவதே அவனை நாம் பொருத்தமான விதத்தில் நினைவு கூர்வதாகும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மிக அதிக எண்ணிக்கையில் இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் கலந்து கொண்ட இப் பாரதிவிழாப் பொதுக்கூட்டம். அவ்வட்டாரத்தில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிக்கு ஒரு முழுமையான அங்கீகாரத்தை மக்களிடையே ஏற்படுத்தி மக்களின் பல்வேறு அன்றாட பிரச்னைகள் சார்ந்த இயக்கங்கள் பல்கிப் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் அது மாணவர் இளைஞரிடையே ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கியம், அதன் சமூக பங்கு குறித்த ஒரு சரியான கண்ணோட்டத்தை அறிமுகம் செய்யும் பணியையும் நிச்சயம் ஆற்றியிருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com