Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatrukaruthu
Maatrukaruthu
நவம்பர் - டிசம்பர் 2008
மெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி

சமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் ச்சிடப்பட்ட க்காலத்திய ஆவணம் ஒன்றில் க்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:
1835 பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே பிரபு நிகழ்த்திய உரை :

‘நான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்ததில், ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ கூட பார்க்கவில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பையும், உயர்ந்த தார்மீக மதிப்புகளயும் திறமைமிக்க மனிதர்களையும் நான் பார்த்தேன். இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காமல் இந்நாட்டை ஒரு போதும் நாம் வெற்றி கொள்ள முடியாது. ஒருவேளை இந்தியர்கள், தங்கள் மொழியைவிட ஆங்கிலம் உயர்ந்தது என்றும், உயர்ந்தது எல்லாம் வெளிநாட்டைச் சேர்ந்தது என்றும் நினைத்தால் அவர்கள் தங்களது சுய மதிப்பையும் சுயத்தையும் கலாச்சாரத்தையும் இழப்பார்கள்; நாம் விரும்பியவாறு ஓர் உண்மையான அஅடிமைநாட்டு மக்களாக ஆவார்கள். அதற்காகத்தான் நாம் இந்தியாவின் பழைய, முற்கால கல்விமுறையையும் கலாச்சாரத்தையும் மாற்ற வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன்.’

போலி என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள்

இதைப் படித்ததும் ஒருவர் ஆங்கிலக் கல்விமுறை வந்தபின்தான் நம்மில் பிச்சைகாரர்களும், திருடர்களும் உருவானார்கள் என்றும், ஆங்கிலக் கல்வி முறையைவிட அதற்கு முன்பு நம் நாட்டில் இருந்த கல்விமுறை உயர்ந்ததாக இருந்தது என்றும் அதை மெக்காலேயே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் தவறான முடிவுகளுக்கு வரலாம். இதில் மெக்காலே சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் மெக்காலேயின் கருத்துக்கள்தானா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னதாக இந்த ஆவணம் போலியானது என்பதைக் காட்டக் கூடிய சில வெளிப்படையான ஆதாரங்களப் பார்ப்போம்.

முதலில் இந்த உரை 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரை என்று கூறப்படுகிறது. ஆனால் 1834ம் ஆண்டு இந்தியா வந்த மெக்காலே 1838ம் ஆண்டு அவரை இந்தியாவில்தான் இருந்திருக்கிறார். ஒரு வேள இடையில் அந்த ஒரு நாளில் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் அல்லவா என்றும் கூட ஒருவர் வாதிடலாம். ஆனால் அக்குறிப்பிட்ட நாளில் அதாவது 1835 பெப்ரவரி 2 அன்று இந்தியாவில் கொல்கத்தாவில் நடந்த கவர்னர் ஜெனரலின் பொதுக்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு ஒரு குறிப்பில் கையெழுத்திட்டுள்ளார். அது மெக்காலேயின் மினிட் என்று இந்திய கல்வி வரலாற்றில் ழைக்கப்படுகிறது.

ந்த போலி ஆவணத்தை உருவாக்கியவர்களின் நோக்கம், ஆங்கிலக் கல்விமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இங்கு இருந்த சமஸ்கிருத கல்வி முறை உயர்ந்ததாகவும் உயர்ந்த கலாச்சாரம் மிக்க, எவருக்கும் அடிமையாகாத மனிதர்களை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது என்றும், ஆங்கிலக் கல்வி முறையின் மூலம்தான் இந்திய மக்களை ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தி வைக்க முடிந்தது என்பது போலவும் ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதே.

எனவே, மெக்காலே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆற்றியதாகக் கூறப்படும் இந்த உரை ஒரு குறிப்பிட்ட உள் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அந்த ஆவணத்தில் Calibre என்ற ஆங்கில வார்த்தை Caliber என்று அமெரிக்க ஆங்கில எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆவணத்தில் அமெரிக்க ஆங்கில முறையில் எழுதப்பட்டிருப்பது இதன் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

வேத, புராணக் கல்வி அடிமைமனநிலையை கற்ற வல்லதா?

ஆங்கிலக் கல்வி முறையை மெக்காலே இந்தியாவில் அறிமுகப்படுத்தியதன் நோக்கம் ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்பிருந்த சமஸ்கிருத குருகுலக் கல்வி முறை அல்லது திண்ணைப் பள்ளிக் கல்வி முறையால் இவர்கள் சொல்வது போல் உயர்ந்த தார்மீக மதிப்புகளயும் எளிதில் அடிமையாகாத மனிதர்களயும் உருவாக்கியிருக்க முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும். சமஸ்கிருதக் கல்வி முறையின் ஆதாரப் பாடங்கள் வேதங்களும், புராணங்களும்தான்.

ஆனால் இந்த வேதங்களும், புராணங்களும் தான், பஞ்சமர்கள், சூத்திரர்களுக்கு அடிமை; சூத்திரர்கள் வைசியர்களுக்கு அடிமை; சூத்திரர்களும் வைசியர்களும் ஷத்திரியர்களுக்கு அஅடிமைஇவர்கள் அனைவரும் பிராமணர்களுக்கு அடிமை என்ற வர்ணாசிரம தர்மத்தை சொல்லித் தருகின்றன. சக மனிதர்களயே சக மனிதர்களுக்கு ஜாதிகளின் பெயரில் அடிமையாக்கும் வேதங்களக் கற்கும் மாணவர்கள், எப்படி எளிதில் அடிமையாக்க முடியாத கலாச்சார முதுகெலும்பு உள்ளவர்களாக உருவாக முடியும். சமஸ்கிருத இலக்கியங்கள், வேதங்கள் உபநிடதங்கள், புராணங்கள் ஆகியன வர்ணாசிரம அமைப்பு முறைக்கும் ஜாதி அடிப்படையிலான அடிமைத்தனத்திற்கும் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து, அந்த அடிமைத்தனத்தின் வலி தெரியாமல் மக்கள் அடிமையாகவே காலம் முழுவதும் வாழ்ந்து மடிவதை இறைவனின் நியதியாகவே முன்வைக்கின்றன.

ஆங்கிலக் கல்வி வெள்ளயர்கள் வேறு வழியின்றிக் கொண்டு வந்ததே

அதனால்தான் ஆரம்பகால கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள் சமஸ்கிருதக் கல்வியையே இந்திய மக்களுக்கு வழங்க விரும்பினர். பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறும் மேலைநாட்டு ஜனநாயக இலக்கியங்களை இந்தியர்களுக்குக் கற்றுத்தரும் ஆங்கிலக் கல்வி முறையைக் காட்டிலும் பிறப்பால் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் வேத இலக்கியங்களைக் கற்றுத் தரும் சமஸ்கிருதக் கல்வி முறையே நம்முடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட உகந்தது என்று எண்ணினர்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் (17721785) முதல் வந்த பல்வேறு கவர்னர் ஜெனரல்கள் அரபி மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் நிறுவினர். 1821 முதல் 1833க்கு இடைப்பட்ட காலங்களில் கல்கத்தா, பனாரஸ் (காசி), ஆக்ரா, புனே போன்ற இடங்களில் பல்வேறு அரபி மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. அவற்றின் நிர்வாகச் செலவிற்கு கம்பெனி அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கீடு செய்தது. சமஸ்கிருதம் மற்றும் அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதே சமயம் ஆங்கிலக் கல்விக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய நிலை இருந்தது. அரசு செலவில் சமஸ்கிருத நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன.

இந்திய றிஞர்களின் வேண்டுதலின் விளவாக தோன்றியதே விஞ்ஞானப்பூர்வ கல்வி

ஆனால் கம்பெனி ஆட்சி அறிமுகப்படுத்திய சமஸ்கிருதக் கல்வி முறையின் மூலம் இந்திய மக்களின் அறிவு வளர்ச்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்த ராஜாராம் மோகன்ராய் போன்ற ஆங்கிலக் கல்வி கற்ற இந்திய சமூக சீர்திருத்தவாதிகள், ஆங்கிலக் கல்வியே எங்கள் மக்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தொடங்கினர். 1823ல் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில் சமஸ்கிருத கல்வியின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்ட அறிவை நுட்பமான புதிய வார்த்தைகளின் மூலம் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதில் எவ்வித பயனும் இல்லை என்றார்.

ஒருபுறம் ஆங்கிலக் கல்விக்கான கோரிக்கை இந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் மத்தியில் வலுப்பெற்று வந்த வேளையில், மறுபுறம் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் எழுத்தர் போன்ற டிப்படைப் பணியிடங்களுக்கும் பிரிட்டிஷ் கம்பெனிகள் மற்றும், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான ஆங்கில அறிவு பெற்ற இந்திய தொழிலாளர்களின் தேவை ஏற்பட்டது.

மாறிவிட்ட வாழ்க்கைச் சூழ்நிலையோடு பொருந்திவராத சமஸ்கிருத கல்வி

அதே சமயத்தில் உதவிப் பணம் பெற்று சமஸ்கிருத, அரபி கல்வி பெற்றவர்கள் அக்கல்வியை பயன்படுத்தி ஒரு மேலான வாழ்க்கை நடத்த முடியாமல் மீண்டும் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கத்தை உதவி கோரி அணுகியதும் ஒரு சமூக சிக்கலை கம்பெனி ஆட்சிக்கு உருவாக்கியது. சமஸ்கிருத அரபிக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரம் ஈட்ட உதவுவனவாக இல்லை. மாறாக அவை பொருளாதார சிக்கல் பெரிய அளவில் இல்லாமல் மக்களின் வாழ்க்கை சுமூகமாக நடைபெற்ற சூழ்நிலையில் அவ்வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த மதவாத மதிப்புகளை வாழ்க்கைக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவனவாகவே இருந்தன.

பழைய நிலவுடைமை பொருளாதாரத்தின் அடித்தளம், அதற்கு முன்பிருந்த அமைதியான வாழ்க்கை, கம்பெனி ஆட்சியால் நிர்மூலம் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் இயந்திர தொழில் உற்பத்தி முறை தலைகாட்டத் தொடங்கி இருந்தது. பழைய பொருளாதார அடித்தளம் தகர்ந்து போனதால் தங்களின் பொருளியல் ரீதியான வாழ்விற்கும் வழிகாட்டக் கூடிய ஒரு கல்வியை தேடும் வசியத்தில் அப்போது மக்கள் இருந்தனர். அப்படிப்பட்ட விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவை சார்ந்த கல்வியாகவேலை வாய்ப்பு பெற்றுத் தரும் கல்வியாக ஆங்கில கல்வி இருந்ததால் அரசாங்க உதவித் தொகை கிடைக்காத போதிலும் தாங்களே பணம் செலுத்தி ஆங்கிலக் கல்வியை கற்கும் வசியத்தில் மக்கள் இருந்தனர். இவை அனைத்தும் சேர்ந்துதான் மெக்காலே ஆங்கில கல்வி முறையை பரிந்துரைக்கும் ஒரு சூழ்நிலையை அவருக்கு உருவாக்கியது.

சமஸ்கிருதக் கல்வி முறைக்கு மாற்றாக ஆங்கிலக் கல்வி முறையை வலியுறுத்திய மெக்காலே தனது 1835 பெப்ரவரி 2ம் நாளய குறிப்பில் (மினிட்), சமஸ்கிருதக் கல்வியின் மூலம் பயனுள்ள அறிவை மக்களுக்கு வழங்க முடியாது; மூட நம்பிக்கைகளையே கற்றுத்தர முடியும். மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து, மாணவர்களின் இளமையையும் வீணடித்து, அவர்களுக்கு ஒரு கழுதையை தொட்டால் வரும் தீட்டை எவ்வாறு புனிதப்படுத்துவது, அல்லது ஒரு ஆட்டை கொன்ற குற்றத்திற்கு வேதத்தில் இருந்து எந்த மந்திரத்தை உச்சரித்து பரிகாரம் தேடலாம் என்பது போன்றவற்றைத்தான் கற்றுத் தர முடியும் என்று வாதிடுகிறார். சமஸ்கிருதக் கல்வி முறை பற்றி இப்படிப்பட்டதொரு எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கும் மெக்காலே, அக்கல்வி முறையை உயர்வாகப் புகழ்ந்து பேசியதாக அந்த இணையதள ஆவணத்தில் கூறப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மெக்காலே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பயன்படக்கூடிய கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவே விரும்பினார் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஆங்கிலக் கல்வியின் மூலம் அப்புறப்படுத்திய முற்கால இந்தியாவின் சமஸ்கிருதக் கல்வி முறை ஆங்கிலக் கல்வி முறையை விட உயர்ந்தது என்று கூறமுடியாது. ஆங்கிலேயர்கள் என்ன நோக்கத்திற்காகக் ஆங்கிலக் கல்வியைக் கொண்டு வந்திருந்தாலும் ஆங்கிலம் கற்ற இந்தியர்கள்தான் இந்தியாவின் இலக்கிய மறுமலர்ச்சியில், விடுதலை போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. சமஸ்கிருதம் மட்டுமே கற்ற பண்டிதர் எவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் எதையும் வகிக்கவில்லை.

ஒரு மூடநம்பிக்கையை ஒழித்தது மற்றொன்றை கைக்கொள்ள அல்ல

மெக்காலேயின் நோக்கமும் கூட பரந்த அளவில் ஆங்கிலக் கல்வி அனைவருக்கும் சென்று சேர செய்ய வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தன் மூலம் அவர்கள் பெறும் அறிவை, நாட்டின் சராசரி சாதாரண மக்களுக்கு அவரவர் தாய் மொழியின் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம். அவரது இந்த சாதாரண, கம்பெனியின் நடைமுறை ஆட்சிக்கு உதவவல்ல விருப்பத்திற்கு மாறாக இந்திய மக்களின் முழுமையான கல்வி வளர்ச்சியில் பெரும் க்கறை கொண்டு இருந்த ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற இந்திய பெருமக்களை பரந்த அளவில் ஆங்கிலக் கல்வியும் தன் மூலம் பெறப்படும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொருளாலாகிய உலகம் சார்ந்த தத்துவதர்க்க சாஸ்திர கல்வியும் மக்களிடம் சென்று சேர வேண்டுமென்று விரும்பினர்.

அவர்கள் ஆங்கிலக் கல்வியை அது தரும் அறிவிற்காக வரவேற்றார்களே தவிர தன் மேல் உள்ள மோகத்தால் வரவேற்கவில்லை. ராஜாராம் மோகன்ராய் இது போன்ற சீர்திருத்தங்களை வலியுறுத்துவதை வைத்து அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டார் என்ற வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அப்போது அவர் கூறினார்: ‘நான் ஒரு மூடநம்பிக்கையை விட்டொழித்தது வேறொரு மூடநம்பிக்கயை பற்றிக்கொள்வதற்காக அல்ல’ என்று.

எந்திரத் தொழிலுற்பத்தி முறை முன்னிறுத்திய புதிய கேள்விகள்

உண்மை இதுவாக இருக்கையில், மெக்காலே பற்றிய இந்த போலி ஆவணத்தை தயாரித்து மக்களுக்கிடையில் புழக்கத்தில் விட்டது யாராக இருக்கும் என்று பார்த்தால், அது ஹிந்து மத அடிப்படைவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவுசெய்யப் போதிய ஆதாரம்அ ந்தப் போலி ஆவணத்திலேயே உள்ளது. அதாவது அந்த ஆவணத்தில் உள்ள ‘ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காமல்’ என்ற வார்த்தைகள் கண்ணுக்கு கண்ணாடியாக அதை உருவாக்கியவர்களின் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. இந்துத்துவ சக்திகளின் போக்கும் நடவடிக்கையும் அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிவதும் நமக்கு வசியமாகும்.

அறிஞர் கொசாம்பி கூறுவது போல், மிகமிக ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு கிராம மக்களை தள்ளி அந்த கிராம சமூக உற்பத்தியின் மூலம் உருவான உபரியைக் கொண்டு புது புது மூட நம்பிக்கைகளயும் ஏற்றத் தாழ்வுகளயும் உருவாக்கி, ஏழ்மை நிலைக்கு எதிராக எழும் மனநிலையை அக்காலத்திய ஆளும் வர்க்கம் மிகுந்த திறமையுடன் காலங்காலமாக மட்டுப்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் அந்த அமைதியான வாழ்க்கை சூழல் வெள்ளயர் புகுத்திய எந்திர தொழில் உற்பத்தி முறையினாலும் விஞ்ஞானம் சார்ந்து நடைபெற்று வந்த அந்த உற்பத்தி முறை தன் உபபொருளாக கொண்டுவந்த பத்தாம்பசலித்தனங்களுக்கு எதிரான மனநிலையைக் கண்டும் அஞ்சினர். அதனை எதிர்த்து இந்த இந்து மறுமலர்ச்சிவாதிகள் ஆரம்பத்தில் போராடவும் செய்தனர்.

ஆனால் சமூக வாழ்க்கையின் பெருகி வரும் தேவையை ஈடுகட்டுவதாக அந்த எந்திர உற்பத்தி முறை இருந்ததால் தன் பரவலை அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்நிலையில் அந்த சனாதன வாதிகளின் ஒரு பகுதியினர் இந்த போக்கிலுள்ள சமூக வளர்ச்சிக்கு தேவைப்படும் தன்மைகளை கணக்கில் எடுத்துக் கொண்டனர். காரியார்த்தமான விதத்தில் வெள்ளையரை தங்களது வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பவர்கள் என்ற எண்ணத்தில் எதிர்க்கும் துணிவுடன் களமிறங்கிய இந்திய தேசிய முதலாளிகளாடு இணைந்து செயல்படத் தொடங்கினர். தேசிய இயக்க பொது நீரோட்டத்தில் கலந்தனர். இப்போக்கில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாத இந்து மத அடிப்படைவாதிகள் வேறொரு நிலையினை எடுத்தனர். மதத்தின் பெயரால் தாங்கள் உழைக்காமல் இருக்க உதவும் வர்ணாசிரம தர்ம வாழ்க்கை முறையை மீண்டும் எப்படியாவது நிலைநாட்டி அதில் குளிர்காய வேண்டும் என்று விரும்பினர்.

விடுதலைப்போரில் வகுப்புவாத சக்திகள் குறைவான பங்கினையே வகித்தனர் என்பதே வரலாறு புகட்டும் பாடம்

ஆனால் ன்றாட வாழ்க்கைத் தேவைகளால் உந்தப்பட்டு இயந்திர தொழில் உற்பத்தி முறையிலும் அதற்கு உதவும் ஆங்கில கல்வியிலும் தங்களை பெரிதும் ஈடுபடுத்த முனைந்திருந்த மக்கட்பகுதியினை இந்த தங்களின் குறுகிய நோக்கத்திற்கு ஆதரவாக உடனே கொண்டுவந்து நிறுத்த முடியாது என்பதை அவர்கள் நாளடைவில் அறிந்து கொண்டனர். எனவே தன் பின்னர் பொங்கி பிரவாகித்த விடுதலைப் போராட்டத்தில் அந்த இந்துமத அடிப்படை வாதிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக ஆங்கில அரசாங்கத்தை எதிர்க்காமல் முன்பு ஒரு வாழ்க்கை முறையாக இருந்து பின்னர் ஒரு பிரிவினரின் சுயநல நோக்கத்திற்காக என்று சீரழிந்து வகுப்பு வாதமாக மாறிப் போன அந்த வர்ணாசிரம கண்ணோட்டத்தையும், அதை போதிக்கும் இந்துத்துவத்தையும் ஆர்ப்பாட்ட அரவமின்றி வளர்க்கத் தலைப்பட்டனர். விடுதலை கிடைத்த பின் தங்கள் வேலையைத் தொடங்கலாம் என்றிருந்தனர். விடுதலைப் போராட்டம் கொழுந்துவிட்டெரிந்த காலத்தில் இவ்வாறு இந்துமத அடிப்படை வாதத்தை ஆதார சுருதியாகக் கொண்ட மைப்புகள் விடுதலைப் போரில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பங்கினையும் ஆற்றவில்லை என்பதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

அன்று நாடு அடிமைப்பட்டு கிடந்த போது அவ்வாறு செயலற்று இருந்துவிட்டு இன்று இதுபோன்ற போலி ஆவணங்களை தயாரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த அளவிற்கு, அதாவது அவர்கள் தங்களது மொழியினால் நம்மை அடிமைப்படுத்த முயன்றதை இன்றும்கூட அம்பலப்படுத்தி முறியடிக்க முனைபவர்கள் என்ற அளவிற்கு போலி வேடம் போடுகிறார்கள்.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இருந்த கல்வி உயர்குணங்கள் நிறைந்த மனிதர்களை உருவாக்க வல்லதாக இருந்தது என்று கூறுவது அப்பட்டமான பொய்யே தவிர வேறெதுவும் இல்லை. வெள்ளயரின் வருகைக்கு முன்பு அனைவருக்குமான பொதுக்கல்வி என்ற கண்ணோட்டமே இருக்கவில்லை. அச்சு இயந்திரமும் ஆங்கிலேயர்களால் தான் அறிமுகம் செய்யப்பட்டது. சமஸ்கிருத, அரபு மொழிகளில் இருந்த நூல்களும் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு போதுமானவைகளாக இல்லை. புத்தகங்களை ஒட்டு மொத்தத்தில் ஒரு சிறு அலமாரியில் அடைத்து விடலாம் என்றே மெக்காலே கூறினார்.

நம்மைப் பொருத்தவரை ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை தன் சுரண்டலை எதிர்க்க வேண்டும்; அவர்கள் எவ்வாறு நமது பொருளாதாரத்தை கொள்ளயடித்தார்கள், உள்நாட்டு தொழில்கள் வளர விடாமல் நலிவடையச் செய்தார்கள், உலக நாடுகளாடு போட்டியிட முடிந்தவர்களாக ஆக முடியாத ஒரு பின் தங்கிய நிலைக்கு நம்மை எவ்வாறு தள்ளினார்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு எவ்வாறு மக்களை பிரித்தார்கள், மத அடிப்படையில் நாடு துண்டாடப்படுவதற்கு காரணமாக இருந்தார்கள் என்ற அடிப்படைகளில் அவர்களை எதிர்க்க வேண்டும். நேர்மையாக தலை நிமிர்ந்து நின்று எதிர்க்க வேண்டும். ஆனால் எதிர்க்க வேண்டிய சமயத்தில் தங்களது தன்னலம் சார்ந்த குறுகிய காரணங்களுக்காக எதிர்க்காது இருந்துவிட்டு பின்னாளில் போலி ஆவணங்கள் தயாரித்து அவர்களுக்கு எதிரானவர்கள் போல் செத்த பாம்பை சினம் தீர டிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம், அப்பட்டமான கயமைத்தனம்.

மொழி யாரையும் அடிமைப்படுத்தும் தன்மையதல்ல

மேலும் மொழிகளின் மூலம் நாடுகளை அடிமைப்படுத்துவது என்றுமே நடவாத காரியம். அடிமை மனநிலை கொண்ட ஒரு சிலர் ஆங்கிலத்தை கற்று வெள்ளையர்களுக்கு பல்லக்கு தூக்கி இருக்கலாம். அது ஆங்கிலம் என்ற மொழியின் கோளாறல்ல; அவர்களது இரத்தத்தில் கலந்திருக்கும் டிமைத் தனத்தின் கோளாறு. உலகம் முழுவதிலும் இருந்த விஞ்ஞான முற்போக்கு சிந்தனைகளை நமது மக்களுக்கு கொண்டு வந்ததன் மூலம் ஆங்கில மொழி விடுதலை போராட்டத்திலும் சரி, அதற்கு பிந்திய காலத்திலும் சரி சமூக வாழ்க்கையில் ஒரு முற்போக்கான பாத்திரத்தையே ஆற்றியுள்ளது. இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கேள்வி கேட்பாரற்று நிலவி வந்த வர்ணாசிரம ஜாதி அமைப்பு முறையையே கேள்விக்குள்ளாக்கிய ஜாதி ஒழிப்பு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் தோன்றியதற்கு காரணமும் ஆங்கிலக் கல்வி நமக்களித்த சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக கருத்துக்கள் தான். மேலும் ஆங்கிலத்தின் மூலம் உயர்ந்த சிந்தனைகள் நமது நாட்டில் உள்ள மொழிகளுக்கெல்லாம் வந்ததன் காரணமாக நமது மொழிகளிலும் கலைச்சொல்லாக்கம் வளர்ந்தது, துரிதப்பட்டது. உரைநடை இலக்கியம் வளர்ந்து அனைத்து மக்களும் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

மொழிகள் ஒட்டு மொத்தத்தில் சிந்தனைகளயும், கருத்துக்களயும் சுமந்து செல்லும் வாகனங்களை தவிர அவற்றிற்கு ஆதரவாக ஆர்ப்பரிப்பது, எதிராக மீசை முறுக்குவது என்ற வெறிவாதத்தை வைகளாகவே தூண்டக்கூடியவை அல்ல. இலக்கிய மேதை சரத்சந்திரர் கூறியது போல் நமது தேசிய கலாச்சாரம் இது போன்ற கல்வி கற்பதன் மூலமாக அழிந்துவிடும் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. இது போன்ற உயர்ந்த கருத்துக்களயும், வாழ்க்கை முறைகளயும் அறிந்து கொள்ள உதவும் கல்வி இப்போதிருப்பதை காட்டிலும் மேலான உயர்வான ஒரு உலகளாவிய கலாச்சாரத்தையும், சமூக வாழ்க்கையையும் உறுதி செய்யும் என்றால் அதனை வரவேற்று ஏற்றுக் கொள்வதே சரி, அதில் ஒரு தவறும் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com