Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம் : சிதைந்த கனவு
5. மாமல்லரின் பயம்

காஞ்சி அரண்மனையின் மேல் உப்பரிகையில் பளிங்குக் கல் மேடையில், விண்மீன் வைரங்கள் பதித்த வான விதானத்தின் கீழ், மாமல்லரும் மானவன்மனும் அமர்ந்திருந்தார்கள்.

இலட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த காஞ்சி மாநகரத்தில், அப்போது அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது.

மாமல்லர், அந்த நள்ளிரவில், காஞ்சி நகரின் காட்சியை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சு விட்டார்.

"இந்தப் பெருநகரம் இன்றைக்கு அமைதியாகத் தூங்குகிறது. நாளைக்கு இந்நேரம் ஏக அமர்க்களமாயிருக்கும். நகர மாந்தர் நகரை அலங்கரிக்கத் தொடங்குவார்கள். படை வீரர்கள் புறப்பட ஆயத்தமாவார்கள். ஆகா! நாளை இரவு இந்த நகரில் யாரும் தூங்கவே மாட்டார்கள்!" என்றார் மாமல்லர்.

"பல்லவேந்திரா! அப்படியானால் குறித்த வேளையில் புறப்படுவதென்று முடிவாகத் தீர்மானித்து விட்டீர்களா? பாண்டியன் வந்து சேராவிட்டால் கூட?" என்று மானவன்மன் கேட்டான்.

"விஜயதசமியன்று காலையில் ஒருவேளை சூரியன் தன் பிரயாணத்தைத் தொடங்காமல் நின்றாலும் நான் நிற்கமாட்டேன். ருத்ராச்சாரியார் சொன்னதைக் கேட்கவில்லையா, இளவரசே!"

மானவன்மன் இலங்கை அரசனாக இன்னும் முடிசூட்டப்படவில்லையாதலால் 'இளவரசன்' என்றே அழைக்கப்பட்டு வந்தான்.

"ஆம்; ருத்ராச்சாரியார் கூறியதைக் கேட்டேன். பல்லவேந்திரா! அப்புறம் ஒரு முறை நான் தனியாகவும் ருத்ராச்சாரியாரிடம் சென்று ஜோசியம் கேட்டு விட்டு வந்தேன்."

"ஓஹோ! அப்படியா! ஆச்சாரியார் என்ன சொன்னார்?"

"எல்லாம் நல்ல சமாசாரமாகத்தான் சொன்னார்."

"அப்படியென்றால்?"

"இலங்கைச் சிம்மாசனம் எனக்கு நிச்சயம் கிடைக்குமென்றார். அதற்கு முன்னால் பல இடையூறுகள் நேரும் என்றும் பல போர் முனைகளில் நான் சண்டை செய்வேன் என்றும் சொன்னார்."

மாமல்லர் புன்னகை புரிந்து, "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று கேட்டார்.

"தாங்கள் வாதாபியைக் கைப்பற்றி, வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்களென்றும், இந்தக் காரியத்தில் இரண்டு இராஜ குமாரர்கள் தங்களுக்கு உதவி புரிவார்கள் என்றும் கூறினார்."

மாமல்லர் சிரித்துக் கொண்டே, "அந்த இரண்டு இராஜகுமாரர்கள் யார்?" என்று கேட்டார்.

"இதே கேள்வியை நானும் ருத்ராச்சாரியாரைக் கேட்டேன். ஜோசியத்தில் அவ்வளவு விவரமாகச் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்" என்றான் மானவன்மன்.

"என் அருமைத் தோழரே! அந்த விவரத்தை நான் சொல்கிறேன். எனக்கு வாதாபிப் போரில் உதவி செய்யப் போகிற அரச குலத்தினரில் நீர் ஒருவர். நீர் இந்தக் காஞ்சி நகரில் இருந்தபடியே எனக்கு உதவி செய்யப் போகிறீர்!...." என்று மாமல்லர் சொல்வதற்குள், இலங்கை இளவரசன் குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருளுங்கள். குமார பாண்டியன் வந்து சேருவது தான் சந்தேகமாயிருக்கிறதே, அவனுடைய ஸ்தானத்தில் என்னை அழைத்துப் போகலாகாதா? தாங்கள் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சி அரண்மனையில் என்னைச் சுகமாக உண்டு, உடுத்தி, உறங்கச் சொல்கிறீர்களா? இது என்ன நியாயம்!" என்று கேட்டான்.

"என் அருமைத் தோழரே! நான் உம்மைப் போருக்கு அழைத்துப் போக மறுப்பதற்கு எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதை இது வரையில் சொல்லவில்லை. நீர் பிடிவாதம் பிடிப்பதால் சொல்கிறேன். ஒருவேளை போர்க்களத்தில் உமது உயிருக்கு அபாயம் நேர்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், இலங்கை இராஜ்ய வம்சத்தின் கதி என்ன ஆவது? உமது இராஜ்யத்தை அநீதியாகவும் அக்கிரமமாகவும் அபகரித்துக் கொண்டிருக்கிறவனுக்கே அல்லவா இராஜ்யம் நிலைத்துப் போய் விடும்! மானவன்மரே! இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய வம்சம் தடைப்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதில் முதன்மையான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பல்லவ வம்சத்தை விளங்க வைப்பதற்கு, எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான். உமக்கு இல்லை. ஆகையினால் தான் முக்கியமாக உம்மை வரக் கூடாதென்கிறேன்" என்றார் மாமல்லர்.

இதைக் கேட்ட மானவன்மன் பொருள் பொதிந்த புன்னகை புரிந்த வண்ணம், "பல்லவேந்திரா! இதைப் பற்றி என் மனைவி ஸுஜாதையிடம் இப்போதே சொல்லி, அவளோடு சண்டைப் பிடிக்கப் போகிறேன். இலங்கை இராஜ வம்சத்துக்கு அவள் இன்னும் ஒரு புதல்வனைத் தராத காரணத்தினால்தானே என் வாழ்நாளில் ஓர் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறது? உலக சரித்திரத்தில் என்றென்றைக்கும் பிரசித்தி பெறப் போகிற வாதாபி யுத்தத்தில் நான் சேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்.

"நண்பரே! உட்காரும், உமது துணைவியோடு சண்டை பிடிப்பதற்கு இப்போது அவசரம் ஒன்றும் இல்லை. நான் வாதாபிக்குப் புறப்பட்டுப் போன பிறகு, சாவகாசமாகத் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்" என்றார் சக்கரவர்த்தி.

மேடையிலிருந்து எழுந்த மானவன்மன் மீண்டும் உட்கார்ந்து, "பிரபு! நள்ளிரவு தாண்டி விட்டதே? நாளை இரவுதான் யாரும் தூங்குவதற்கில்லை. இன்றைக்காவது தாங்கள் சிறிது தூங்க வேண்டாமா?" என்று கேட்டான்.

"என்னைத் தூங்கவா சொல்கிறீர்! எனக்கு ஏது தூக்கம்? நான் தூங்கி வருஷம் பன்னிரண்டு ஆகிறது!" என்றார் மாமல்லர்.

"லக்ஷ்மணர் காட்டுக்குப் போனபோது, அவருடைய பத்தினி ஊர்மிளை, அவருடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு, இரவும் பகலும் பதினாலு வருஷம் தூங்கினாளாம். அம்மாதிரி தங்களுடைய தூக்கத்தையும் யாராவது வாங்கிக் கொண்டு தூங்குகிறார்களா, என்ன?" என்று மானவன்மன் கேட்டான்.

"இளவரசே! என்னுடைய தூக்கத்தையும் ஒரு பெண்தான் கொண்டு போனாள். என்னைக் கேட்டு அவள் வாங்கிக் கொள்ளவில்லை. அவளே அபகரித்துக் கொண்டு போய் விட்டாள். ஆகா! அந்தச் சிற்பி மகள் இங்கே சமீபத்தில் அரண்ய வீட்டில் இருந்தபோதும் எனக்குத் தூக்கம் இல்லாதபடி செய்தாள். இப்போது நூறு காத தூரத்துக்கப்பால் பகைவர்களின் நகரத்தில் இருக்கும் போதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் செய்கிறாள்..." என்று மானவன்மனைப் பார்த்துச் சொல்லி வந்த மாமல்லர், திடீரென்று வானவெளியைப் பார்த்துப் பேசலானார்: "சிவகாமி! ஏன் என்னை இப்படி வருத்துகிறாய்? உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகப் பகலெல்லாம் பாடுபடுகிறேனே. இரவிலே சற்று நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாதா? வாதாபியில் தனி வீட்டிலே இரவெல்லாம் நந்தா விளக்கே துணையாக உட்கார்ந்து என்னைச் சபித்துக் கொண்டிருக்கிறாயா? தாங்காத களைப்பினால் தப்பித் தவறி நான் சற்றுத் தூங்கினால், கனவிலும் வந்து என்னை வதைக்கிறாயே? உன்னை நான் மறக்கவில்லை, சிவகாமி! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடவில்லை. இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!"

மாமல்லர் வெறிகொண்டவர் போல் வானவெளியைப் பார்த்துப் பேசியது, இலங்கை இளவரசனுக்குப் பயத்தை உண்டாக்கிற்று.

"பல்லவேந்திரா! இது என்ன? சற்று அமைதியாயிருங்கள்" என்றான் மானவன்மன்.

"நண்பரே! என்னை அமைதியாயிருக்கவா சொல்கிறீர்! இந்த வாழ்நாளில் இனி எனக்கு எப்போதாவது மன அமைதி கிட்டுமா என்பதே சந்தேகந்தான். மானவன்மரே! பத்து வருஷத்துக்கு முன்பு நான் ஒரு தவறு செய்தேன். ஓர் அபலைப் பெண்ணின் ஆத்திரமான பேச்சைக் கேட்டு, அந்தக் கணத்தில் மதியிழந்து விட்டேன். நானும் சேனாதிபதியும் வாதாபியில் சிவகாமியைச் சந்தித்து அழைத்த போது, அவள் சபதம் செய்திருப்பதாகவும், ஆகையால் எங்களுடன் வர மாட்டேனென்றும் சொன்னாள். அப்போது சேனாதிபதி அவளுடைய பேச்சைக் கேட்கக் கூடாதென்றும் பலவந்தமாகக் கட்டித் தூக்கி வந்துவிட வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேளாமல் போய் விட்டேன். அந்தத் தவறை நினைத்து நினைத்துப் பத்து வருஷமாக வருந்திக் கொண்டிருக்கிறேன்."

இவ்விதம் கூறி விட்டுச் சற்று மாமல்லர் மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு கூறினார்: "மானவன்மரே! வாதாபிக்குப் படையெடுத்துச் செல்லும் நாளை நான் எவ்வளவோ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நாளைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வளவோ தீவிரமான முயற்சிகள் எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியாகப் புறப்படும் நாள் நெருங்கியிருக்கும் போது பயமாயிருக்கிறது....!"

"என்ன? தங்களுக்கா பயம்?" என்று மானவன்மன் அவநம்பிக்கையும் அதிசயமும் கலந்த குரலில் கூறினான்.

"ஆம்! எனக்கு பயமாய்த்தானிருக்கிறது. ஆனால், போரையும் போர்க்களத்தையும் நினைத்து நான் பயப்படவில்லை. புலிகேசியைக் கொன்று, வாதாபியைப் பிடித்த பிறகு நடக்கப் போவதை எண்ணித் தான் பயப்படுகிறேன். பகைவரின் சிறையில் பத்து வருஷமாகச் சிவகாமி எனக்காகக் காத்திருக்கிறாள். அந்த நாளில் அவளுடைய குழந்தை உள்ளத்தில் தோன்றிய காதலையும் அன்று போல் இன்றும் தூய்மையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள். ஆனால், என்னுடைய நிலைமை என்ன? கலியாணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கிறேன். சிவகாமியை எந்த முகத்தோடு நான் பார்ப்பது? அவளிடம் என்ன சொல்லுவது? இதை நினைக்கும் போதுதான் எனக்குப் பயமாகயிருக்கிறது. அதைக் காட்டிலும் போர்க்களத்தில் செத்துப் போனாலும் பாதகமில்லை!"

"பல்லவேந்திரா! தாங்கள் போர்க்களத்தில் உயிரை விட்டால், தங்களை நம்பி இங்கு வந்து உட்கார்ந்திருக்கும் என்னுடைய கதி என்ன? இலங்கைச் சிம்மாசனத்தில் என்னை அமர்த்துவதாகத் தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிதான் என்ன ஆவது?..." என்று நாத்தழுதழுக்கக் கேட்டான் மானவன்மன்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com