Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
52. வளையற்காரன்

நாகநந்தி என்ற பெயரைக் கேட்டவுடனே அங்கிருந்தவர் அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

மாமல்லர், "ஆஹா! புத்த பிக்ஷுவா? அப்படியானால் குண்டோ தரன் கூறிய செய்தி பொய்யா?" என்று சொல்லிய வண்ணம் குண்டோ தரனை நோக்கினார்.

"இல்லை, பிரபு! குண்டோ தரன் கூறிய செய்தி உண்மைதான். வாதாபிக்கு வரும் வழியில் பிக்ஷு வேங்கி நகரத்துக்குத்தான் போனார். துரதிர்ஷ்டவசமாக நேற்றுத் திரும்பி வந்துவிட்டார். அவருடைய வரவினால் நம்முடைய காரியம் ஒன்றுக்குப் பத்து மடங்கு கடினமாகி விட்டது. இன்னும் இரண்டு நாளைக்கு முன்னால் மட்டும் நாம் வந்திருந்தால்?...." என்றான் சத்ருக்னன்.

"பிக்ஷு நேற்றுத்தான் திரும்பி வந்தாரா? உனக்கு எப்படித் தெரியும், சத்ருக்னா!" என்று சேனாபதி பரஞ்சோதி வினவினார்.

"நகரமெல்லாம் அதைப்பற்றித்தான் பேச்சு, தளபதி! ஜனங்கள் பேசிக் கொண்டதிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் சென்ற வருஷம் வேங்கி மன்னனாக முடிசூட்டிக் கொண்டானல்லவா? எந்த வேளையில் மகுடாபிஷேகம் செய்து கொண்டானோ, தெரியவில்லை. சில நாளைக்கு முன்பு அவன் மாண்டு போனான். அவனுடைய மனைவியையும் ஆறு மாதத்துக் கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு நாகநந்தி நேற்றுத் திரும்பி வந்தாராம்" என்று சத்ருக்னன் கூறினான்.

"சளுக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் நெருங்கி விட்டது என்று பல்லவேந்திரர் கூறியது வீண்போகவில்லை. விஷ்ணுவர்த்தனன் எப்படி இறந்தானாம்?" என்று பரஞ்சோதி கேட்டார்.

"விஷ்ணுவர்த்தனன் வேங்கிப் படைகளை முழுவதும் நாசம் செய்ய முடியவில்லை. நம்முடைய சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியிருந்தபடி வேங்கிப் படைகள் பின்வாங்கிச் சென்று கிருஷ்ணை கோதாவரி நதிக் கரைக் காடுகளில் ஒளிந்து கொண்டிருந்தன. விஷ்ணுவர்த்தனன் முடி சூட்டிக்கொண்ட பிறகு நாடெங்கும் கலகங்கள் மூண்டன. ஒளிந்திருந்த படை வீரர்கள் அங்கங்கே திடீர் திடீரென்று கிளம்பித் தாக்கினார்கள். கலகத்தைத்தானே அடக்கப் போவதாக விருது கூறிக் கொண்டு விஷ்ணுவர்த்தனன் கிளம்பினான். ஒரு சண்டையில் படுகாயமடைந்து விழுந்தான். நாடெங்கும் கலகங்கள் அதிகமாயின. இந்த சமயத்தில்தான் நாகநந்தியும் அங்கே போய்ச் சேர்ந்தார். விஷ்ணுவின் மனைவியையும் குழந்தையையும் கொண்டு வந்து சேர்த்தார். விஷ்ணுவர்த்தனன் மனைவி துர்விநீதனுடைய மகள் என்பது தங்களுக்குத் தெரியுமல்லவா, பிரபு?"

"அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன கவலை, சத்ருக்னா? நாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லாமல் ஊர்க்கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே? மேலே நடந்ததைச் சொல்லு!" என்றார் மாமல்லர்.

"நாகநந்தி பிக்ஷுவைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்த சிவகாமி அம்மை, சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு பல்லக்கில் போய் ஏறினார். பல்லக்கைச் சற்றுத் தூரம் நான் தொடர்ந்து சென்றேன். ஆரவாரமின்றி அமைதி குடிகொண்டிருந்த ஒரு வீதிக்குள் பல்லக்குச் சென்று அழகான மாளிகை ஒன்றின் வாசலில் நின்றது. சிவகாமி அம்மை பல்லக்கிலிருந்து இறங்கி அந்த மாளிகைக்குள்ளே போனார். வீதி முனையிலேயே நான் கொஞ்ச நேரம் நின்று என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பிறகு மாளிகை வாசலை நெருங்கினேன். காவலாளிகள் இருவர் அங்கு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'காஞ்சி நகரத்து நாட்டியப் பெண் இருப்பது இந்த வீட்டிலே தானே?' என்று கேட்டேன். 'ஆமாம்! எதற்காகக் கேட்கிறாய்?' என்றார்கள். 'நான் வளைச் செட்டி. அழகான வளைகள் கொண்டு வந்திருக்கிறேன், அம்மையிடம் காட்ட வேண்டும்' என்றேன். 'இரவு நேரத்தில் இந்த வீட்டுக்குள் யாரும் புகுவதற்கு அனுமதியில்லை, நாளைப் பகலில் வா!' என்றார்கள். சற்று நேரம் அவர்களுடன் வம்பு பேசிப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சிவகாமி அம்மையும், ஒரு தோழியும் சமையற்காரியும் மட்டும் அந்த வீட்டுக்குள் இருப்பதாகவும், வேறு யாரும் இல்லை, வருவதுமில்லையென்பதாகவும் தெரிந்து கொண்டேன். ஒரே ஒரு தடவை புலிகேசிச் சக்கரவர்த்தி அங்கு வந்து இராஜ சபையில் நடனம் ஆடும்படி கேட்டாராம். அம்மை அதை மறுத்து விட்டபடியால் இம்மாதிரி வாதாபி வீதிகளில் தினம் நாட்டியமாடும்படி தண்டனை விதித்தாராம். இதை அறிந்ததும் எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. மனத்திற்குள்ளே அந்தக் கொடுமனம் படைத்த ராட்சதப் பதரைத் திட்டிக்கொண்டு கிளம்பினேன். வீதி முனைக்குச் சென்றதும் ஒரு பக்கத்திலிருந்து தீவர்த்திப் பிடித்த காவலர்கள் புடைசூழ ஒரு பல்லக்கு வருவதைக் கண்டேன். ஒரு வீட்டுத் திண்ணையில் தூணின் பின்னால் ஒளிந்து கொண்டு பல்லக்கில் வருவது யார் என்று கவனித்தேன். நான் எதிர் பார்த்தது போலவே நாகநந்தி பிக்ஷுதான் பல்லக்கில் இருந்தார்...."

அப்போது நறநறவென்று, மாமல்லர் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்டது. சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "சத்ருக்னா! ஏன் கதையை வளர்த்திக் கொண்டே போகிறாய்? அம்மையைச் சந்தித்துப் பேசினாயா? ஏதாவது செய்தி உண்டா? அதைச் சொல்லு!" என்றார்.

பரஞ்சோதியைச் சிறிது கோபமாக மாமல்லர் பார்த்துவிட்டு, "சத்ருக்னா! எதையும் விடவேண்டாம், நாகநந்தி எங்கே போனார்? சிவகாமியின் வீட்டுக்குள்ளேயா?" என்று வினவினார்.

"ஆம், பிரபு! அம்மையின் மாளிகைக்குள்தான் போனார். ஒரு நாழிகை நேரம் வீட்டுக்குள்ளே இருந்துவிட்டு வெளியேறினார். அந்த ஒரு நாழிகை நேரமும் நானும் அந்த வீதியிலேயே சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை வீட்டு வாசலுக்கு அருகில் சென்று காவலரில் ஒருவனிடம், 'சமீபத்தில் சத்திரம் சாவடி எங்கேயாவது இருக்கிறதா?' என்று விசாரித்தேன். அப்போது உள்ளே சிவகாமி அம்மை புத்த பிக்ஷுவின் தலையில் நெருப்புத் தணலைக் கொட்டிக் கொண்டிருந்தார். அவ்வளவு கோபமாக அவர் பேசியது என் காதில் விழுந்தது. அதில் எனக்குப் பரம திருப்தி ஏற்பட்டது..."

"இங்கே எல்லோருக்கும் அப்படித் தான்!" என்றான் குண்டோதரன்.

"அதே வீதியில் இருந்த ஒரு சத்திரத்தில் படுத்து இரவு நிம்மதியாகத் தூங்கினேன். இன்று பொழுது விடிந்து சற்று நேரம் ஆனதும் அம்மையின் மாளிகைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் சிவகாமி அம்மைக்கு ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த தோழியை ஏதோ காரியமாக உள்ளே போகச் சொல்லிவிட்டு, 'சத்ருக்னா! இது என்ன? காஞ்சிக்கு நீ போகவில்லையா? என்னைப் பின்தொடர்ந்தே வந்துவிட்டாயா?' என்று கேட்டார். 'இல்லை, அம்மணி! காஞ்சிக்குப் போய் மாமல்லரிடம் தாங்கள் கூறிய செய்தியைச் சொன்னேன். அவரும் வந்திருக்கிறார், சேனாபதியும் வந்திருக்கிறார்!' என்றேன்.

இதைக் கேட்டதும் அம்மை உற்சாகமும் பரபரப்பும் அடைந்து, 'சைனியம் எங்கே இறங்கியிருக்கிறது?' என்று கேட்டார். சைனியத்தோடு வரவில்லையென்றும், மாமல்லரோடு சேனாபதியும் கண்ணபிரானும் வந்திருக்கிறார்கள் என்றும், கோட்டைக்கு வெளியே இந்த மலையடிவாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தேன். நாளை அமாவாசை இரவில் எல்லோரும் வருகிறோம் என்றும், தோழிப் பெண்ணை எங்கேயாவது அனுப்பிவிட்டு நம்முடன் புறப்பட ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டு வந்தேன்!" என்று சத்ருக்னன் முடித்தான்.

"சத்ருக்னா! சிவகாமி முடிவாக என்ன சொன்னாள்? ஏதேனும் செய்தி உண்டா?" என்று மாமல்லர் கேட்டார்.

"ஒன்றுமில்லை, பிரபு! அம்மை அதிகமாகப் பேசாமல் அமாவாசை இரவு நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி எனக்கு விடை கொடுத்தார் அவ்வளவுதான்!" இதைக் கேட்ட மாமல்லர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com