Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சொல்லக்கூடாதது...?
உஷாதீபன்

'அவுங்கள நம்பி இம்புட்டுத் துணிய வாஷ் பண்ணி, கஞ்சி போட்டு எடுத்து வச்சிருக்கேன். இப்போ பாருங்க...ஆளைக் காணல...? - சுமதியின் சலிப்பு மனதில் பொங்கும் கோபத்தை வெளிப்படுத்திற்று எனக்கு. நான் பதில் எதுவும் பேசாமல் நின்றேன். எது சொன்னாலும் அது நிச்சயம் அவளுக்கு உகந்ததாக, சமாதானமளிப்பதாக இருக்கப் போவதில்லை. அவளுடைய கோபத்தைத் தணிப்பதாகவும் அமையப் போவதில்லை. பின் எதற்குப் பேசுவது? என்ன பேசுவது? ஏதோ பேசிவிட்டேன் என்றுதானே இப்போது பிரச்னையே...!? என்னால்தான் இந்தச் சங்கடம் நிகழ்ந்தது என்று முடிவு செய்தாயிற்று. அதைச் சொல்லிச் சொல்லி நிறுவியும் ஆயிற்று. பசுமரத்தில் ஆணி அடித்துத் தொங்கவும் விட்டாயிற்று. அந்த நிறுவுதலில்தான் எத்தனை திருப்தி? ஏதோவொருவகையில் புருஷனான என்னை மட்டம் தட்டுவதற்கென்று வகையாய் அமைந்து போனது ஒரு விஷயம். அதை எளிதில் விட்டு விடுவதா என்ன? அந்த வலிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? கெட்டியாக உடும்புப்பிடி பிடித்து அப்படியே ஒரு உலுக்கு! 'அப்பாடா..! இப்போதான் மனசு சமாதானமாச்சு...!! திருப்தியாச்சு...நிறைவாச்சு...!

"ஆகட்டும்... சரிதான்... ஆனா அடுத்தாப்ல காரியத்துக்குன்னு வர்றபோது எங்கிட்டதானே வந்து நின்னாகணும். வேறே போக்கிடம் ஏது? உன்னால தனியா ஆகுமா? நாந்தானே அலைஞ்சு பார்த்தாகணும்...அப்போ?"

“அப்போ என்ன அப்போ...?"

'சரி...சரின்னு விடலாமில்லியா...? அதைத்தான் சொல்ல வர்றேன்... ஏன் பெரிசாக்கினே உப்புப் பெறாத விஷயத்தை? ஏதோ நான் சொல்லிட்டேன்னா, சொல்லிட்டேன்னா என்ன, அப்படிச் சொன்னாத்தான் அவுங்களுக்கெல்லாம் புரியும்...தெரியும்...; அப்போதான் அடுத்தமுறை ஒழுங்கா நடந்துக்குவாங்க...அதுக்காகச் சொன்னேன்... நீ அந்தத் தாத்பரியத்தைப் புரிஞ்சிக்காம, பெரிசாக்கிட்டே... அவுங்களே பதில் பேசாம கம்முன்னு கேட்டுட்டிருக்கிறபோது அப்டியே அதை விட்டிற வேண்டிதானே? அந்த சூட்சுமம் தெரிஞ்சிதா உனக்கு? அவுங்க முன்னாடியே அதை மறுக்கிறாப்ல பேசினா? என் பக்கத்தை நீதானே பலவீனப்படுத்தின மாதிரி ஆகுது? அப்போ ஒரு சாதாரண விஷயம் தவறான விஷயமாப்படுமில்ல எதிராளிக்கு? இதைச் சொல்லியிருக்கக் கூடாதோங்கிறமாதிரி ஆயிடுதில்ல? மௌனமா நின்னிட்டிருந்த அவுங்க, அப்டியே கிளம்பிப் போயிருந்தாக்கூட ஒண்ணும் ஆகியிருக்காது. ஏதோ சொன்னாங்க... சர்தான்...ன்னு காத்துல கரைஞ்சு போயிருக்கும்...பேசாம இருங்க, வேண்டாம் வேண்டாம்னு மறுக்கிறாப்ல நீ குறுக்கே புகுந்ததுனாலதான் இப்போ தப்பாப் போச்சு...அதுனாலதான் அவுங்க இப்போ வரலைன்னு நான் சொல்றேன்... இதுக்கு நீ என்ன பதில் சொல்லப் போறே?"

முன்னே குவிக்கப்பட்டிருந்த புடவை மலைக்கு ஊடே, நான் சொன்ன வார்த்தைகள் புகுந்து புறப்பட்டு வளைந்து வளைந்து பத்திப் புகை போல வெளிக்கிளம்புவதாய்த் தோன்றியது எனக்கு. சுமதி இப்போதும் கம்மென்றுதான் இருந்தாள். நீங்க சொல்றது சரிதான் என்று இப்போதாவது அவள் ஒப்புக் கொள்ளலாம்தான். மனசு வேண்டுமே அய்யா? வீட்டு ஆம்பளையைத் தான் அறிய மட்டம் தட்டுவதில், என்னதான் அப்படி ஒரு பெருமையோ இந்தப் பெண்களுக்கு? வகையாய்த் தனியாய் மாட்டினேன் அல்லவா?

மனித வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகளை அன்றாடம் நாம் சந்திக்கிறோம். அதிலும் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் எல்லோருமே நம்மைப்போலவேதான் என்ற நினைப்பில் அல்லது இயல்பில் நாம் செயல்பட்டோமென்றால், பேசினோமென்றால் அது சரியாக முடியும் என்று சொல்லவே முடியாது. காரணம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள். அதற்கு ஆதாரமாக விளங்கும் சூழல், பொருள் ஆதாரம், அதன் போதாமை, அதற்கான போராட்டம், முனைப்பு இன்னபிற என்று எல்லாமும் மனித இயல்புகளை வெகுவாக மாற்றித்தானே விடுகின்றன? 'அவுங்களை நம்பி இத்தனை துணியையும் நான் வாஷ்பண்ணியாச்சு...இப்போ காணலை...அடுத்த வாரம் பூராவும் இதுகளத்தான் உடுத்திண்டு நான் ஆபீஸ் போயாகணும்... ஆள் வரல்லைன்னா நீங்கதான் எனக்கு அயர்ன் பண்ணிக் கொடுத்தாகணும்...சொல்லிட்டேன்..."

Ironing எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை...! இதென்ன வம்பாப் போச்சு? அயர்ன் பண்றவங்க வராததுக்கு நான்தான் பழியா? நடுஹாலில் குறு மலையாய்க் குவிந்து கிடந்தன துணிகள். நானே இந்தக் காரியத்தைச் செய்ய முடியாமல்தானே குறுக்கு ஒடிந்து போய்க் கிடக்கிறேன்...? இவள் என்னைப் பணயம் வைக்கிறாளே இதற்கு?

"உங்களுக்கு உடம்பு வளைய மாட்டேங்குது..."

"ஆமாண்டீ...நீ ஒரு வண்டித் துணியைக் கொண்டுவந்து போடுவே... என் பேன்ட் சட்டைகள் வேறே ஏழெட்டுக் கிடக்கு. இத்தனையையும் நாள் பூரா உட்கார்ந்து நான் பொட்டி போடணுமாக்கும்? எந்த வீட்லடி அவனவனே அயர்ன் பண்றான்? ஒரு வீடு விரல் விட்டுச் சொல்லு பார்ப்போம்? இருக்கிற அயர்ன் பாக்சு அதுபாட்டுக்கு மூலைல தூங்கிட்டிருக்கு... நாம என்ன பண்ணினாலும் திருப்தி ஆக மாட்டேங்குது. விரிச்சுப் பார்த்தா அங்கங்கே மடிப்பு, கசங்கல். இந்த லட்சணத்துல எவன் இந்தக் கண்றாவியையெல்லாம் சுமக்கிறது? உட்கார்ந்து இழுத்துப் பார்த்தால்ல உனக்குக் கஷ்டம் தெரியும்? ஆகுற கரண்ட் செலவுக்கு, பேசாமக் காசைக் கொடுத்தா ஒரு குடும்பமாச்சும் பொழைக்கும். இப்படி நினைச்சுத்தான் எல்லாரும் செய்திட்டிருக்காங்க... நீ என்னடான்னா என்னைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறே...?

"தெரியுதில்ல வண்டவாளம்...? அப்போ வாயை மூடிக்கிட்டுக் கெடக்க வேண்டிதானே? எதுக்கு அனாவசியமாப் பேசுறீங்க?"

நான் அவளையே கூர்ந்து பார்த்தேன். பேசியது தவறுதான் என்பதிலும், அதனால்தான் இந்தக் கஷ்டம் என்பதிலும் அவள் இன்னும் உறுதியாய் இருப்பது தெரிந்தது.

"என்னடீ நீயே இப்டிச் சொல்றே? நாலு ஆளைக் கூட்டிவந்து ஆளுக்கு ரெண்டு மொத்து மொத்துங்கடான்னுவ போலிருக்கு? உன் பேச்சு அவ்வளவு உக்ரமால்ல இருக்கு?”

சுமதி இப்போதும் அமைதியாய் இருந்தாள். அதிலும்கூட ஒப்புதலோ என்னவோ?

“அப்டியெல்லாம் ஒண்ணுமில்லே..." - என்று சொல்ல அவளுக்கு மனதில்லை. அவள் அப்படிச் சொன்னால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது எனக்கு. அது பெருத்த ஆறுதலாய் இருக்கும். நம்மவளே நமக்கு சார்பாக இல்லையே...?- மனசு நொந்தவாறே என் அறைக்குள் சென்று புகுந்து கொண்டேன். எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தேன். சுவிட்ச் போட்டதும் சரசரவென்று சத்தமெழ சுற்ற ஆரம்பித்த காற்றாடியை வேகம் குறைத்தேன். மென்மையான இருள் படர்ந்த அந்த நிலை மனதை அமைதியுறச் செய்தது. கண்களை மூடியவாறே நிச்சலனமாய் அமர்ந்திருந்தேன். இருளும், யாருமற்ற தனிமையும், அமைதியுமென்ன அத்தனை சுலபமாக நம் கைக்குள், கட்டுக்குள் வந்து விடுகிறதா என்ன? இந்த மனம் என்ற ஒன்று இருக்கிறதே அது என்று தனிமையாய் இருந்தது? என்று அமைதியாய் இருந்தது?

இழுத்துப் பிடித்து நிறுத்தினாலும் அத்தனை சீக்கிரத்தில் அடங்கி விடக் கூடியதா என்ன? மனிதனுக்குத் தனிமையில் இருக்கத் தெரிய வேண்டும். தனிமையைப் பழக வேண்டும். தனிமையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்தான். ஆனால் அது சாதாரண மனிதனுக்கு சாத்தியமாகிறதா? தனிமையில் இருந்தால், நம்மை நாமே இருத்திக்கொண்டால், துள்ளிக் குதித்து மேலெழும்பி உயரத்தை, உச்சத்தை எட்டி விடுகிறதாக்கும்? தாராளமாய்ச் சலித்துக்கொள்ளத்தானே செய்கிறது? வேறு என்ன கண்டது இன்றுவரைக்கும்? நாலு பேர் மத்தியில் ஒருவன் இருக்கும்போது இருக்கும் மனதைவிட, தனிமையில் இருக்கும்போது இருக்கும் மனது என்றாவது உசத்திபோல் இருந்திருக்கிறதா?

"சே! என்ன கஷ்டம் இது? சாமான்யனுக்கு இப்படியெல்லாம்தான் சங்கடங்கள் வருமோ? மனுஷன், தேவையானதை, மற்றவருக்கு எது சரியோ அதைச் சொல்லக் கூடாதா? சொன்னால் அது குற்றமா? தெரியாதவர்களுக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும்? அப்படிச் சொன்னது ஒரு தப்பா? பேச்சோடு பேச்சாக ஒன்றை வலியுறுத்தக் கூடாதா? அது குற்றமாகி விடுமா? சொல்ல வேண்டியது, சொல்லக் கூடாததாக எப்பொழுது மாறியது? எதனால் மாறியது? யார் மாற்றியது? எதையுமே சொல்லாமல் அவரவர் இஷ்டம்போல் விட்டுவிட வேண்டுமென்றால் பிறகு அனுபவப்பட்டவர்கள் எதற்கு? அவரவர்களாகவே அவரவர் அனுபவத்தில் தெரிந்துகொள்ளட்டும் என்று அர்த்தமா? பிறகு சக மனிதர்களோடு பழகுவது எப்படி? அவர்களோடு பேசும் அனுபவம் என்பது என்ன? அவர்களது அனுபவத்தை, செழுமையை, அந்தப் பரி பக்குவத்தை உள்வாங்குவது, அடைவதுதான் எங்ஙனம்?

தொட்டபின் பாம்பு என்றும், சுட்டபின் நெருப்பு என்றும், பட்டுப் பட்டே அறிவது என்று வழக்கமானால் எவ்வளவு நஷ்டங்களை மனிதர்கள் இந்த வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டி வரும்? வழிகாட்டுதல் இல்லையென்றால் வாழ்க்கை திசை மாறிப் போகாதா? இது ஏன் தெரிய மாட்டேனென்கிறது யாருக்கும்? இதையேன் உணர மறுக்கிறார்கள் பலரும்? சுமதியே இந்த வாங்கு வாங்குகிறாளே என்னை? அப்படி நான் என்னத்தைச் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டேன்? ஏன் தாமதம் என்று கேட்டுவிட்டது ஒரு தவறா? 'அதைக் கேட்குறதுக்கும் ஒரு அளவில்லையா? என்ன லேட்டாயிடுச்சி...சரி...சரி...கொண்டாங்க..; அப்ப்டீங்கிறதோட விடணும்...இப்டியா அரைமணி நேரம் லெக்சர் கொடுக்கிறது? அதுவும் கூண்டுல நிறுத்தி வச்சு விசாரிக்கிற மாதிரி?"

"ஞாயிற்றுக்கிழமை கொடுத்த துணி ...இன்னைக்குக் கொண்டு வர்றீங்க... இன்னிக்கு என்ன கிழமை தெரியுமில்ல? வியாழன்...!! அஞ்சுநாளா இதுக்கு? வெறும் நாலு துணி... அன்று தான் ஆரம்பித்ததை நினைத்துக் கொண்டான் ரமணன். கழுத்தில் புதிய மஞ்சள் தாலிக்கொடி பளபளக்க வழக்கமாக வரும் அந்த அம்மாளின் மருமகப் பெண் வந்திருந்தது. துணி வாங்கிக் கொள்ளவும் இவர்கள்தானே வந்தார்கள்? சொல்லப்போனால் கொஞ்ச நாளாகவே இவர்கள்தான் வருகிறார்கள் என்று தோன்றியது. யார் வந்தால் என்ன? நேரக் கட்டுப்பாடு மாறுமா? எல்லாருக்கும் ஒன்றுதானே?

'எவ்வளவு காசு?’ சுமதி குரலைத் தாழ்த்திக் கேட்டது என்னவோபோல் இருந்தது.

'பன்னெண்டு ரூபாம்மா..’ அவளைப் பார்த்து புன்னகைத்தவாறே கூறியது அது.

'இந்த டிரஸ்ஸை திங்கட்கிழமை ஆபீசுக்குப் போட்டுகிட்டுப் போகணும்னுதான் உங்ககிட்டே கொடுத்தேன். நீங்க என்னடான்னா சாவகாசமா இன்னைக்குக் கொண்டு வர்றீங்க...’ - ஆரம்பித்தேன் என் விசாரணையை.

‘திங்கட்கிழமை நான் வந்து பார்த்தேன் சார்...வீடு பூட்டியிருந்திச்சு...’

"அது எப்டிங்க? ரெண்டு பேரும் ஆபீஸ் போறவங்கன்னு தெரியும் உங்களுக்கு...! அப்போ காலைல எட்டு ஒன்பதுக்குள்ள வரவேணாமா? வந்தேங்கிறீங்க.... பார்த்தேங்கிறீங்க... வீடு பூட்டியிருந்திச்சீங்கிறீங்க... நல்லாவா இருக்கு நீங்க சொல்றது? போன டிரிப்பு எதிர்வீட்டுல கொடுத்திட்டுப் போனீங்க...”

"இப்பவும் கொடுக்கப் போனேன் சார்... நீங்களே கொடுத்திருங்கன்னு சொல்லிட்டாங்க..." குரலைத் தாழ்த்திச் சொல்லிற்று அந்தப் பெண். இவனுக்குச் சுருக்கென்றது. பிறகு நிதானித்துக்கொண்டு சொன்னான்.

"ஆமாங்க... ஒவ்வொரு தடவையும் வாங்கி வைக்கிறதுக்கு அவுங்க என்ன நாம வச்ச ஆளா? ஏதோ ஒரு தடவை உதவியாச் செய்வாங்க... அதையே வழக்கமாக்க முடியுமா?"

"சாயங்காலமா எடுத்திட்டு வந்திருக்கலாம்ல...? ஒரு நாள் கூடவா முடியல...?”

“பக்கத்தூருக்குக் கல்யாணத்துக்குப் போயிட்டோம் சார்..."

"அப்போ நாங்க என்ன செய்றது? நீங்க கொடுக்கிறபோது வாங்கிக்கிட வேண்டிதான்... ஏன்னா உங்களவிட்டா எங்களுக்கும் வேறே கதி இல்ல பாருங்க...?"

அந்தப் பெண் அமைதியாய் நின்றது இப்போது.

"காசைக் கொடுத்து விடுங்க... இதுக்கு எதுக்கு இவ்வளவு பேச்சு...? விட மாட்டீங்களா?" - உள்ளிருந்து சுமதி கத்தினாள்.

"நாங்க இப்போ மரத்தடில தேய்க்கல சார்... எங்க ஏரியாவுல வீட்டுல வச்சே தேய்க்கிறோம்... இந்தப் பக்கம் வந்து துணி வாங்கிட்டுப் போறதோட சரி..."

"அது சரிங்க...நீங்க மரத்தடில தேய்ச்சா என்ன, மண்டபத்தல தேய்ச்சா எங்களுக்கென்னங்க? எங்களுக்கு வேண்டியது தேய்ச்ச துணி டயத்துக்கு, அவ்வளவுதான்... இப்படி இஷ்டம் போல கொண்டு வந்திங்கன்னா யோசிக்க வேண்டியிருக்கும். வேறே ஆள் தேட வேண்டிதான்... தேடினா ஆள் கிடைக்கும்தானே...? தொழில் சுத்தம் வேணும்ங்க எதுவானாலும்.!.. கல்யாணத்துக்குப் போனேன் காட்சிக்குப் போனேங்கிறீங்க... நாலஞ்சு நாள் கழிச்சு வர்றீங்க... நாங்க என்னன்னு நினைக்கிறது...?"

அத்தோடு நான் விட்டிருக்கலாம்தான். மனுஷனோட இயல்பே, கேட்க ஆள் இருக்குமானால் சொல்லிக் கொண்டே இருப்பதுதானே? இந்தக் கடைசி வார்த்தைகள் சொல்லியிருக்க வேண்டாமோ என்னவோ.! பிறகுதான் உறைத்தது எனக்கு. அந்தச் 'சுத்தம்’ என்ற சொல்லை வேறு எப்படிப் புரிந்து கொண்டார்களோ? நமக்குத் தெரிந்த அர்த்தச் சொற்கள் அப்படியே போய்ச் சேரும் என்பது என்ன உறுதி? என் வாய் சும்மா இருந்தால்தானே? அதென்னவோ, சொல்லவேண்டியதைச் சொல்லி முடித்தால்தானே மனது ஆறுகிறது?

“நல்லாக் கொண்டுவந்தீங்க துணியை! ஞாயிற்றுக்கெழமை வாங்கிப்போயிட்டு, அஞ்சு நாள் வச்சுக்கிட்டு, வியாழக்கெழமை சாவகாசமாக் கொண்டு வந்து கொடுத்தா, நாங்க என்னன்னு நினைக்கிறது? கேட்டாக் கல்யாணத்துக்குப் போனேங்கிறீங்க.. கண்காட்சிக்குப் போனேங்கிறீங்க... உங்க பதில்லயே எல்லா விடையும் இருக்குன்னு வச்சிக்க வேண்டிதான் போலிருக்கு?" - முகத்தைப் பார்க்காமலேயே நான்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு காசை எடுத்து நீட்டினேன்.

“அப்டியெல்லாம் இல்லீங்க சார்...! தப்பா நினைக்கிறீங்க...? எங்களுக்கும் விசேஷம்னு வருமில்ல சார்...?" - குரல் தாழச் சொல்லிக்கொண்டே காசை வாங்கிக்கொண்டு நகர்ந்தது அந்தப் பெண். முகம் சற்று வாட்டமாகி விட்டதோ? கேட் கொக்கி கூட சத்தமின்றி மெதுவே இறங்கியது.

ஏதோ யோசனை சட்டென்று மனதில் தோன்ற, எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

“சுமதி...இதோ வந்துடறேன்...வாசலைப் பூட்டிக்கோ..."- சொல்லிவிட்டு வெளியேறினேன்.

“எங்கே வீடு என்று சொன்னார்கள்? அதைக்கூடச் சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லையே? பக்கத்துக் கிராமமாய் இருக்குமோ? அல்லது அந்தச் சாவடிப் பகுதியா? தினமும் காலையில் சர்ச் பெல் அடிக்குமே... ஒரு வேளை அந்த ஏரியாவோ? அங்கெல்லாம் போனதேயில்லையே? எப்படிக் கண்டு பிடிப்பது? அந்த அம்மாளின் பெயர்தான் என்ன? எங்காவது சாலையில் தென்பட்டால் கூப்பிடலாம்... இல்லையென்றால் அயர்ன் பண்றவங்க என்று அடையாளம் சொல்லலாம்... நிறையப் பேர் இருந்தால்? சுமதி மலையாய்க் குவித்திருக்கும் புடவைகள் கண்முன் தோன்றி பயமுறுத்தின. கால்கள் வேகமெடுத்தன. குடிசை, கண்மாய், பொட்டல் வெளி என்று பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அட. ராமச்சந்திரா...! இன்றைய பொழுது ஏனிப்படி அல்லலாகிவிட்டது?

“என்னங்க...எங்க போயிட்டீங்க...? இவ்வளவு நேரமாச்சு...? " - சோர்ந்து திரும்பியிருந்த என்னை வாசலிலேயே வரவேற்றது சுமதியின் குரல்.

“எல்லாம் உனக்காகத்தான் அலைஞ்சிட்டு வர்றேன்..." -அலுப்பாய்ப் பதில் சொன்னேன்.

“இன்ன எடத்துக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போக மாட்டீங்களா? நான் என்ன நினைக்கிறது? பயந்தே போயிட்டேன் ஆளக் காணமேன்னு? அவுங்க வந்துட்டாங்க பாருங்க." சுமதி காட்டிய திசையை நோக்கினேன்.

எதிர் ரெண்டாவது வீட்டில் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தது அந்த அம்மாள். இது அந்தப் பெண்ணின் மாமியார். ஆரம்பத்தில் இந்த அம்மாள்தானே தொடர்ச்சியாக வந்து போய்க் கொண்டிருந்தது.

“நல்லதாப் போச்சு...கொடுத்தனுப்பு... கொடுத்தனுப்பு..."- விரைவுபடுத்தினேன் அவளை. வீட்டிற்குள் வந்தபோது 'அப்பாடா..." என்றிருந்தது மனதுக்கு. ஆசுவாசமாய் அப்படி உட்காரவில்லை...அதற்குள் சுமதியின் குரல் மீண்டும்.

“என்னங்க... அந்தம்மா என்னவோ சொல்றாங்க...என்னன்னு கேளுங்க..." - சொல்லிவிட்டு சுமதி உள்ளே போய்விட்டாள். எனக்கு 'பக்’கென்றது. லேசாக வயிற்றில் புளியைக் கரைத்தது.

“எங்கிட்டப் பேசணுமா? என்னவாம்?" அந்த மருமகப் பெண்ணிடம் தான் பேசியது ஏதாவது ஏடாகூடமாகிவிட்டதோ? காற்றாடியை வேகமாகச் சுழலவிட்டேன். உடம்பு திடீரென்று வியர்த்தது. "என்னடா இது வம்பு... லீவு நாளும் அதுவுமாக...?" - மனம் தவிக்க ஆரம்பித்தது.

“சார்..." - வாசலில் சத்தம். எப்பவும் ‘அய்யா’ என்றுதானே அழைப்பார்கள்? இப்பொழுதென்ன ‘சார்’? - மனம் ஏனோ இப்படி நினைத்தது. சுமதி புடவைகளை அள்ளிக்கொண்டுபோய் எண்ணிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“அய்யா இல்லீங்களா...?” - நல்லவேளை பழைய பேச்சுத்தான்.

“ஓ...இருக்காரே... இதோ வரச் சொல்றேன்... என்னங்க... காதுல விழலியா... கூப்டறாங்கன்னா..." -தயங்கியவாறே வெளியே வந்தேன்.

'அய்யா...ஒரு உதவி உங்ககிட்ட... நீங்க சரின்னு சொல்லணும்..." அந்தம்மாள் பவ்யமாய் கேட்டவிதம் என்னுள் சற்று தைரியத்தை வரவழைக்க, முன்னே வந்து நின்று “என்ன, சொல்லுங்க..." என்றேன்.

“ஒண்ணுமில்லீங்கய்யா... உங்க வீட்டுக் காம்பவுண்ட் வாசல்ல, இந்த மரத்தடி நிழல்ல, கடை போட்டுக்கிடக் கொஞ்சம் அனுமதி வேணும்..."

“கடை போடவா...? என்ன சொல்றீங்க...?"

“தேய்க்குறதுக்குதான்யா கேட்குறேன்...."

"ஓ...! வண்டி நிறுத்திக்குறேங்கிறீங்களா...?"

"ஆமாங்கய்யா...நல்ல நெழல் இருக்குது...துணிமணிகள இருந்து தேய்ச்சுக் கொடுத்திட்டுப் போயிடலாம் தாமசமில்லாம.... நீங்க சரின்னு சொன்னீங்கன்னா..."

எனக்குள் பெருத்த ஆசுவாசம். மெல்லிய குளிர் உடம்புக்குள் பரவுவது போன்ற உணர்வு. அப்பொழுதுதான் நானே நன்றாகப் பார்த்தேன். பக்கத்து ஆபீஸ் ஃபாரஸ்ட் ரேஞ்சரிடம் சொல்லி வைத்து வாங்கியது. 'சொர்க்கம்’ என்று பெயர் சொல்லியிருந்தார் அதற்கு. “இது என்ன மரம் சார்?” கேட்காதவர் பாக்கியில்லை. உண்மையிலேயே சொர்க்கம்தான் அது. அவ்வளவு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. குட்டைத் தென்னையளவுக்கு அளவாக உயர்ந்து, குடைபோல் படர்ந்து, அடர்த்தியாக விரிந்து, குளுகுளுவென்று இடத்தை இதமாக்கிக் கொண்டிருந்தது. விடுமுறை நாளில் கூடத்தில் படுத்து கதவுகளைப் பூட்டாமல் கூட எத்தனையோ நாள் அந்தக் குளிர்ச்சியில், பகலில், கும்பகர்ணனாய் நான் தூங்கி வழிந்திருக்கிறேன். எதிர்வீடு, பக்கத்து வீடு என்று எல்லோரும் அவரவர்கள் டூ வீலர்களை சர்வ சுதந்திர பாத்தியதையாய் அங்கே கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள். எவனும் ஒரு வார்த்தைகூட மரியாதைக்கு என்று கூட இன்றுவரை கேட்டதில்லை. இதுதான் இப்பொழுது டிரென்ட் போலிருக்கு? என்று நினைத்துக் கொள்வேன் நான்.

இப்பொழுது இவர்களுக்காவது உதவட்டுமே? நமக்கென்ன நஷ்டம்? வீட்டுக்கும் ஒரு பாதுகாப்பாயிற்று. துணிமணிகளை உடனுக்குடன் தேய்த்து வாங்கிக் கொள்ளலாம் (அதிலும் சுயநலம்தானா?- சிரித்துக்கொண்டேன்) யோசித்தவாறே உள்ளே திரும்பிப் பார்த்தேன். ‘சரின்னு சொல்லுங்க...’ - என்பதுபோல் சைகை காண்பித்தாள் சுமதி.

"சொல்லுங்கய்யா... புண்ணியமாப் போகும்..." அந்த அம்மாள் என் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தது.

“இத அம்மாகிட்டச் சொல்லிட்டுக் கடையைப் போட வேண்டிதானே... நான் சொன்னாத்தானா?" - சிரித்தவாறே சொல்லிவிட்டு உள்ளே வந்தேன். எதிலிருந்தோ மீண்டுவிட்டதில் பரம திருப்தி. மறுநாள் காலையிலேயே கடை உதயமாகிவிட்டது அங்கே. நீளக்க சாணம் தெளித்துப் பெருக்கி பளிச்சென்றிருந்தது வாசல். பெட்டிக்குள் கணகணவென்றிருந்த நெருப்பும், அளவான சூட்டில் அழுந்தத் தேய்படும் துணியும் ஒரு மெல்லிய நாசிக்கு இதமான நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது அங்கே.

அலுவலகம் போய்விட்டு இருட்டும் வேளையில் திரும்பியபோதுகூட வேலை முடியாமல் தேய்த்துக் கொண்டிருந்தது அந்த அம்மாள்.

"சுமதி... வாசல் லைட்டைப் போட்டு விட வேண்டிதானே... அவுங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்ல..." என்றவாறே உள்ளே நுழைந்தேன். பட்டென்று லைட் சுவிட்சைத் தட்டினாள் சுமதி. வெளிச்சம் பரவியபோது அந்த அம்மாளின் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி.

“வண்டிய வேணா ராத்திரி இப்படி உள்ளே நிறுத்திக்குங்க.. .." - காம்பவுண்ட் உள்ளே ஓரமாய்க் கையைக் காண்பித்தேன்.

“ரொம்பச் சந்தோஷமுங்கய்யா..." திருப்தியோடு உள்ளே நுழைகிறேன். ஆனாலும் அந்த மருமகப் பெண் இன்று வரை அங்கே தலைகாட்டாமல் இருப்பது என்னவோ இன்னும் என் மனதை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது!!

- உஷாதீபன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com