Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
குறுநாவல்
இறந்தவன் குறிப்புகள் -1
(திராவிடப் பார்வை கொண்ட படைப்புகளில் ஒன்று)

தாஜ்


மதிப்பிற்குரிய இறந்தவன் அவர்களுக்கு,

நெருக்கடியான உங்களது பணிகளுக்கிடையில் என் கடிதப் பக்கங்களை தீர வாசித்து பதில் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. எதையும் தெளிவுடன் எழுத வேண்டும் என்ற உந்தலில், அது கடிதம் என்றாலும் நான் நிறையவே எழுதி விடுகிறேன்.

என் நண்பர்களின் பட்டியலில் ஹாஜா அலிக்கு தனியிடமுண்டு. ஹாஜா அலி தமிழ் படித்தவர். நவ இலக்கியத்தில் கெட்டி. கவிதைகள் எழுதக்கூடியவர். ஒரு முறை அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. உங்களுக்கு சின்னதாகத்தான் கடிதம் எழுத நினைத்தேன், அப்படி எழுத நாட்கள் கூடுதலாகத் தேவைப்பட்டதால் இப்படி அதிகப் பக்கங்களுடன் நீண்ட கடிதம் எழுதும்படி ஆகிவிட்டதென கடிதத்தில் குறிப்பெழுதியிருந்தார். நான் அப்படி சொல்லிக் கொள்ள முடியாது. யதார்த்தத்தில் எனக்கு குறைவாக எழுதத் தெரியவில்லை என்பதுவே நிஜம்.

இலக்கியம் சார்ந்த பல்வேறு இஸங்கள் குறித்து நான் கேட்டிருந்ததைமைக்கு நீங்கள் எழுதியிருக்கும் அபிப்ராயம் அலாதியானது. தவிர, கடித இலக்கியம் குறித்த என் ஆதங்கத்திற்கும் நீங்கள் கூறியிருக்கும் கருத்தும் ஏற்புடையது. கடித வடிவிலான இலக்கிய ஆக்கங்கள் தமிழில் முழுமை அடையாமலேயே போய்விட்டது என்பது என் ஆதங்கத்தின் செய்தி. அதை நீங்கள் எப்படி புரிந்துகொண்டீர்கள் என்பது விளங்கவில்லை.

உங்கள் எழுத்துக்களைப் பற்றிய உங்களது கருத்தையொட்டி புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் உங்கள் எழுத்துக்களைப் படித்த பிறகுதான், நாமும் எழுதலாம் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. தவிர, அப்பொழுது நிறைய சோவியத் எழுத்தாளர்களைப் படித்திருந்தேன். தடங்கல் இல்லாமல் எழுத நிறைய விஷயதானங்களும் இருந்தன. எழுதவும் எழுதினேன். உங்கள் கதைகளில் தெரியும் மேலோட்டமான மனித நேயம் மனிதாபிமானம் என்பன எனது ஆரம்பக் கதைகளில் தென்பட, ஓர் ஜாக்கிரதை உணர்வுடன் நேரம் எடுத்துக்கொண்டு, அந்த சாயலைத் தவிர்த்தேன். நீங்கள் 'ஔ' இதழுக்கு நேர் காணல் தந்ததற்கு சில மாதங்களுக்கு முன் 'நகம்' காலாண்டிதழில் வெளியாகி பிச்சனையில் இழுத்து வைக்கப்பட்ட என் குறுநாவல் குறித்து சில தெளிவுகளை முதல் கடிதத்திலேயே உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். பிறிதொரு எண்ணத்தில் அதைத் தவிர்த்து விட்டேன்.

உங்களின் எல்லா ஆக்கங்களையும் எப்பவும் விமர்சனமென்ற பெயரில் சீண்டும் அந்த டெல்லி விமர்சகரின் விஷமம் இம்முறை கொஞ்சத்திற்கு அதிகம்தான். உங்களது சமீபத்திய நாவலைப்பற்றிப் பேசுகிறபோது, எனது குறுநாவலை இழுத்துவைத்துப் பேசி யதென்பது வேண்டாத வேலை. கஷ்டம். உங்கள் மீதான கோபத்திற்கு என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது..

சோவியத் எழுத்தாளர் 'ஜான் கஸிமோவின்' புகழ் பெற்ற நாவலான 'தி பெக்கர்' படிக்கக் கிடைத்தது. சென்ற வருடக் கடைசியில் வாசித்தேன். அதன் தாக்கம் நாட்கணக்கைத் தாண்டி, வார, மாதக் கணக்கில் இருந்தது. அந்த நாவலின் விசயதானங்கள் தமிழ் சூழலுக்கும், இந்திய அரசியல்சார்ந்த பாங்கிற்கும் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. அந்த நாவலையொட்டி, தமிழில் படைப் பொன்றை செய்ய வேண்டுமெனத் தோன்றியது. முயற்சிக்கவும் செய்தேன். அதுதான் அந்தக் குறுநாவல்.

சென்ற நூற்றாண்டில், ஐம்பதுக்குப் பிந்தைய காலகட்டத்தில் சோவியத் யூனியனின் முக்கிய நகரங்களான மாஸ்கோ, விலாடிமீர், மார்ட்டோவ், லெனின்கிரேட், காரிலியா போன்றவற்றில் பிச்சைக்காரர்களின் பெருக்கம் அபரிமிதமாய் இருந்தது. ஒரு சமூகப் பிரிவே நாடோடிகளாக இந்த தொழில் சார்ந்த சூழலில் மிகுந்த ஈடுபாடுடன் இயங்கியதென்றும், அவர்களின் முந்தைய தலை முறையினர் ஜார் மன்னர்களின் காலத்தில் அரசர்களையும், அரசு அதிகாரிகளையும் அண்டிப்பிழைத்வர்கள் என்றும் அவர்களை நிறம் காட்டுறார் ஜான் கஸிமோவ்.

மன்னர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எடுபிடிகளாகவும், களிப்பூட்டும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களாகவும், அவர்களின் படுக்கைக்கு குடும்பப் பெண்களைச் சரி செய்பவர்களாகவும், இடதுசாரி சிந்தனையாளர்களுக்கும், பண்ணைத் தொழிலாளர்களுக்கும் எதிராக ஜார் மன்னர்கள் இரும்புக்கரங்களை நீட்டியபோது அதிகாரத்திற்கு அனுசரணையகவும் அவர்களுக்கு உளவு சொல்பவர்களாகவும் இவர்களது நடவடிக்கைகள் இருந்ததென்கிறார்.

சோவியத் மக்களின் நீண்ட புரட்சிக்குப் பிறகு அங்கே மன்னர்களின் முடியாட்சி விழுந்தது. இந்த வீழ்ச்சி அந்த நாடோடி சமூகத்திற்குப் பெரிய பேரிடி. மக்கள் மத்தியிலும் அவர்களுக்கு மரியாதை இல்லாமல் போய் விட, தொடர்ந்து அவர்களது பிழைப்பு கேள்விக்குறியாகிப் போனது. நாளடைவில், அவர்கள் பிச்சை எடுப்பதை வெற்றிகரமானதொரு தொழிலாகத் தேர்வுசெய்து கொண்டார்கள் என்கிறார் கஸிமோவ்.

இந்த பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்களுக்கென்றான சில நெறிமுறை தர்மங்களை விட்டு அதிக வருமானத்திற்காக அலைய ஆரம்பித்த கால கட்டத்தில் அந்த நாவல் தொடங்குகிறது. பிச்சை எடுப்பதில் இவர்கள் பல வித புதிய புதிய யுக்திகளைக் கையாண்டனர். அவர்களின் சாமார்த்தியம் அன்றைக்கு சோவியத்தில், குறுக்குவழிகளில் பொருள் ஈட்டும் கூட்டத்தார் எல்லோரையும் விஞ்சுவதாக இருந்தது என்கிறார். குருடர்களாகவும், ஊமைகளாகவும், பெருவியாதிக் கொண்டவர்களாகவும். கைகால் விளங்காத முடங்களாகவும் வேஷமிட்டு மக்கள் மத்தியில் யாசிக்கிற அவர்களை மக்கள் புரிந்து உணர முடியாத அளவுக்கு அவர்களின் வேஷப் பொருத்தம் அத்தனைத் துல்லியமாக இருக்குமாம்.

இவர்களில் பெண் பிச்சைக்காரிகள் யாசிக்கும் வியூகம், அவர்களின் ஆண்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பிச்சைக்காரிகளில் சற்று இளம் வயதினரின் வியூகம் தனிக்கதை. கிளர்ச்சித் தருபவை அவை. வெற்றிகளை குறிவைத்து புறப்படுகிறபோது, அவர்களின் மேலாடை பல கிழிசல்களைக் கொண்டதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புதிய மேலாடை வாங்க இயலாத வருமையைக் கோடிட்டுக் காட்டுவதாக தோன்றும். நிஜத்தில் அப்படியல்ல.

அவர்கள் தனவந்தர்களிடம் யாசிக்கும் போதெல்லாம் கைகளை நன்றாக உயர்த்தியபடி யாசிப்பார்கள். புஜத்திற்கும் மார்பின் திரட்சிக்கும் இடைப்பட்ட மேலாடைப் பகுதி கிழிசலாகி விரியக் கிடக்க, அந்த இளம் யுவதிகளின் மஞ்சள் கிழங்குப் பகுதி தனவந்தர்களின் பார்வையில் மின்னலைப் பாய்ச்சும். தனவந்தர்களிடம் தர்மவேட்கை அதிகரிக்கும். அன்றைக்கு சோவியத் ரஷ்யாவில் பல தனவந்தர்கள் அதிக புண்ணியம் தேடிக்கொண்டது இந்த பிச்சைக்காரிகளால்தான் என்று கஸிமோவ் கிண்டலடிக்கிறார். இவர்களில் வயது கூடிய பிச்சைக்காரிகளின் தொழில் நாசூக்கு வேறு தினுசானது எனவும் வியக்கிறார்.

தங்களது கைக்குழந்தைகளுக்கு சற்று கூடுதல் அளவில் 'குளோரோஃபார்ம்' கொடுத்து, ஜனசந்தடி அதிகமுள்ள வீதிகளின் திருப்பங்களில் ஆங்காங்கே அந்த குழந்தைகளை சுற்றிப் போர்த்திய நிலையில் கிடத்திவிட்டு, பத்தடி தூரத்தில் மெளனமாக கைகளைக் கட்டி நிற்பார்கள். கண்களில் கண்ணீர் மல்க, மூக்கைச் சிந்தியபடி வெறித்துப் பார்க்கும் அவர்களது பார்வை தேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு மட்டுமே வாய்க்கக் கூடியது. அந்த வழியே கடக்கும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பலானோர் இவர்களது சூட்சமத்திற்கு இரையாவார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் சிக்கும் இரக்கம் மிகுந்தவர்களிடம் பணத்தைக் கறந்துவிட்டு, ஜனசந்தடி குறைந்த தருணத்தில் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வீதிகளின் சந்துகளில் நுழைந்து, தென்படும் ஏதேனுமோர் மதுபான விடுதியில் புகுந்து விடுவார்கள். அங்கே வோட்கா அருந்தி, கலகலப்பான கிறக்கத்தில் தங்களது தொழில் சாமார்த்திய நுணுக்கங்களை தங்களுக்குள் சொல்லி மகிழ்பவர்களாக இருப்பார்கள். 'அய்யோ பாவம், அவளது குழந்தை இறந்து விட்டது, அடக்கம் செய்ய அந்த மாதுக்கு கையில் காசில்லை' என தங்களது சுற்றுப்பயணச் செலவுக்காக கொண்டுவந்த டாலரில் ஒரு கணிசமான பகுதியைக் கொடுத்து உதவிய அந்த சுற்றுலாப் பயணிகள் எவரேனும் அந்நேரம் யதேச்சையாக அந்த விடுதிக்கு வரக்கூடுமென்றால், அங்கே அவர்களின் கும்மாளங்களைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் கஸிமோவ்.

விபச்சாரத்திற்குப் பெயர்போன சோவியத் யூனியனின் மத்திய நகரமான 'கோர்க்கி'யின் உயர்மட்ட வேசிகள் கூட, இந்த பெண் பிச்சைக்காரிகளைப் பார்த்து வியப்பார்களாம். தங்களை மாதிரி முக அலங்காரம்கூட தீட்டிக்கொள்ளாமல், கண் சிமிட்டி அழைக்கும் வேலையும் இல்லாமல், பகல் இரவு பாராத உடல் கஷ்டமில்லாமல், மிகவும் லகுவாக பன் மடங்கு பொருள் ஈட்டிவிடுவது குறித்து அவர்கள் புலம்பாத நாளில்லை என்று கூடுதல் தகவல் தருகின்றார்.

அலையலையாய் தலைமுடி பிறழ நேர்வகிடு எடுத்துச்சீவி, நீள வெண்ணிற அங்கியணிந்து, ரோமன் கத்தோலிக்க ஆலயங்களின் வாயிலில் யாசிக்க நிற்கும் ஆண் பிச்சைக்காரர்களில் சிலர் தேர்ந்த ஞானம் உடையவர்கள். கிருஸ்துவ மதத்தைப் பற்றிய இவர்களது உரத்த உரை வியக்க வைக்கக் கூடியது. கம்யூனிசத்தின் அடக்குமுறையால் ஒடுங்கி நின்ற மதப்பற்றாளர்களின் நாடித் துடிப்பை அறிந்து இவர்கள் பேசக்கூடியப் பேச்சு சாதாரணமானது அல்ல. தங்களது இருகரங்களையும் உயர்த்திய நிலையில் அதை அகலத் திறந்து, தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் இல்லாத குறையாக ' ஓ...மை சன்...!' என அவர்கள் அழைக்கிறபோது, போவோர் வருவோரெல்லாம் அந்த கத்தோலிக்க ஆலயத்தின் வாயிலில் ஸ்தம்பித்து நின்று விடுவார்கள். மதக் கலாச்சரத்திற்கு எதிராக அரசின் அடக்கு முறையினை மறைமுகமாகச் சாடி,'பாவிகளை மன்னிப்பீர்களாக' எனத் தொடங்கும் தோத்திரத்தின் மேற்கோள்களை கிரேக்க சங்கீத தொனியில் பிரஸ்தாபித்து, அதற்கு அவர்களே உருகி, பின்னர் விளக்கமும் சொல்லும் அதீத சாமர்த்தியம் அவர்களுக்கே உரியது.

நின்று காது கொடுத்துக் கேட்கும் கிருஸ்துவ அடிப்படைவாதிகள் மெய்சிலிர்த்து விடுவார்கள். தானம் செய்யப் பழக்கமில்லாத கிருஸ்துவர்களையும் அந்த பிரசங்கம் வலிய தானம் செய்ய வைத்து விடும். அன்றைக்கு ஏறுமுகமாக இருந்த கம்யூனிச சித்தாந்தத்தின் தளபதிகளான காம்ரேட்டுகளால்கூட இந்தப் பிச்சைக்காரர்களின் மதரீதியான ஹிம்சையை ஒன்றும் செய்யமுடியவில்லை.

கம்யூனிஸத்தின் சித்தாந்த எதிர்ப்பாளர்கள் மற்றும் தேசத்துரோகமிழைத்த பூர்ஷ்வாக்களுக்கென்று ரஷ்யாவில் புகழ்பெற்ற 'கேம்ப்' இருக்கிறது. அங்கே அனுப்பப்படுபவர்கள் திரும்பவே முடியாது. சித்திரவதைகளை அனுபவித்து அங்கேயே மடியவும் மடிவார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி மதரீதியாக சில்மிஷம் செய்து, மதஅடிப்படைவாதிகளை சிலிர்க்கவைக்கும் இந்த பிச்சைக்காரர்களை அங்கே அடைக்கவும் முடியாது. இவர்கள் புரியும் இந்தவகை செய்கைகள், 'கேம்ப்'புக்கு அனுப்பும்படியான குற்றங்கள் அடங்கிய பட்டியலில் இல்லை.

வரம்பு மீறும் பிச்சைக்காரர்களை ஏற்கனவே அங்கே அடைத்துப் பார்த்தாகிவிட்டது. கூடுதலாக வருமானம்வரும் அந்த வழியை அவர்கள் விடுவதாக இல்லை. அங்கே அடைக்கப்பட்ட பிறகாவது அவர்கள் சும்மா இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஆட்சியாளர்களை எதித்து 'கேம்ப்-இல் நடக்கும் அத்தனைப் போரட்டங்களுக்கும் இவர்கள்தான் அடிப்படைக் காரணமாக இருக்கின்றார்கள். தங்களதுப் பிரசங்கத்தை எங்கும் எப்பொழுதும் இவர்கள் நிறுத்துவதென்பதே கிடையாது என்று நமக்கு நமுட்டுச் சிரிப்பை வரவழைக்கிறார் கஸிமோவ்.

கம்யூனிச ஆட்சியின் மதக் கலாச்சார ஒடுக்குமுறைகளால், அன்றைக்கு அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள்தான். பாரசீக வம்சாவளியான அவர்கள் சோவியத் யூனியனின் தென்மேற்கு மாகாணங்களில் அதிகம் வசித்தனர். அரசின் பல விதமான ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொண்டார்களே தவிர, அவர்களின் மதச்சடங்குகளை அரசால் முற்றும் முடக்க முடியவில்லை. வருடத்தில் ஒரு மாதம் கட்டாயமாக உண்ணாவிரதம் இருப்பதையும், அந்த மாதங்களில் அவர்கள் 'ஜக்காத்' என்னும் தானதருமங்கள் நிறையச் செய்வதையும்கூட அவர்கள் கைவிடுவதில்லை.

அவையெல்லாம் ஆண்டவனின் கட்டளை என்பது அவர்களின் வாதம். இஸ்லாமியர்களுக்குப் புனிதமான அந்த மாதத்தில், நாட்டின் பல பகுதிகளில் யாசிக்கும் பிச்சைக்கார சமூகம் இந்த தென்மேற்கு மாகாணங்களுக்கு வந்து விடுவார்கள். இங்கே அவர்கள் யாசிக்கப் பெரிய திறமை எதனையும் காட்டவேண்டி இருக்காது. அந்த ஒரு மாதம் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே தர்மங்கள் வந்து குவியும். ஆனாலும் அவர்களில் பிச்சைக்கார்களில் சிலர் தங்களின் அதிகப்படியான வருமானத்திற்காக தனித்திறமையை பிரயோகிக்கத்தான் செய்தார்கள். திறமை அவர்களின் இரத்தத்தோடு கூடியது.

பிரசித்தி பெற்ற பாரசீகக் கலாச்சார மோஸ்தருடன் எம்ப்ராய்டிங் செய்யப்பட்ட வெள்ளைக் குர்தாக்களை முழங்காலுக்கு மேல் அணிந்து, கீழே அதே நிறத்தில் கால்சராய் இட்டு, தங்களது அலங்காரத்தைத் தொடங்குவார்கள். சிகப்பு நிறமும் கருப்புக் குஞ்சமும் கொண்ட உயரமான துருக்கித்தொப்பியை ரசித்து அணிந்து, சிகப்பும் வெள்ளையுமான கட்டங்கள் இடப்பட்ட மேல்துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு இஸ்லாமிய மதகுருக்களான இமாம்களைப் போன்றே மாறிவிடுவார்கள். முந்தைய மாதங்களில், இந்த வேஷத்திற்காக வளர்த்த தாடி இப்பொழுது இவர்களுக்கு கம்பீரமான ஒரு தோற்றத்தை வழங்கும். உலக அளவில் பெயர் பெற்ற 'அல் மஸர்' நாட்டின் இமாம்களுக்கும் கிட்டாத 'கொஞ்சும் தெய்வீகக் கருணை விழிகள்' இந்த நாடகமாடிகளுக்கு எளிதில் வாய்க்கும்.

திருக்குர்ஆனில் உள்ள புகழ்பெற்ற சில வசனங்களை மனனம் செய்துகொண்டு வந்து, காலாதிகாலமாக கற்றுத் தேர்ந்த 'ஹாஃபீஸ்'களை ஒத்த ஏற்றயிறக்கத்தோடு, ரம்லான் மாதத்து 'ஃபர்ளான' விரதத்தை மேற்கொண்டிருக்கும் இஸ்லாமிய செல்வந்தர்களிடம் நாவினிக்க உச்சரிப்பார்கள். பெரும்பாலும் அந்த வசனங்கள், ஏழை எளியவர்களுக்கு வசதி படைத்தவர்களை தானதர்மங்கள் செய்யும்படி நிர்ப்பந்திக்கும் இறைவனின் கட்டளையாகவே இருக்கும்.

கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் மாற்று நிலைப்பாடு கொண்ட கம்யூனிச சித்தாந்தத்தை அந்த தென்மேற்கு மாகாண இஸ்லாமிய மக்கள் விரும்பவில்லை. கடவுளுக்கு விரோதமாக நாத்திக, நபும்சக அரசாக கம்யூனிச ஆட்சியைக் கருதினார்கள். அவர்கள் தென்மேற்குப் பகுதியை சோவியத் யூனியனிலிருந்து பிரித்து, தங்களுக்கு இஷ்டமான அரசை அமைக்கவே நினைத்தார்கள். அவர்களின் எண்ணவோட்டத்தை நன்கு உணர்ந்தவர்களான இந்த வேஷதாரி இமாம்கள், அவர்களின் ஆழ்மனதில் உறங்கும் பிரிவினை எண்ணத்தைக் குறிவைத்து அதற்கு அனுசரணையாகப்போடும் தூபம் ஒன்றே, இவர்களை விசேஷப்படுத்தி விடும். தர்மங்கள் குவியத்தொடங்கும். இவர்களின் குறி தப்பியதே இல்லை. அசல் ஜரிகையிலான காஷ்மீரத்துப் பட்டாடைகள், கலைநயம் மிக்க வெள்ளியினால் ஆன பொருட்கள், தங்கக் காசுகள், பணம் என்று இந்த இமாம்கள் பூரித்துப் போகும் அளவுக்கு சேர்ந்துவிடும்.

வருடங்கள் தோறும் இந்த செல்வ வேட்டை முடிந்ததும், பிச்சைக்காரர்கள் சோவியத் யூனியனின் வடமேற்கில் உள்ள 'தூய கடல்' (White Sea) கரையோர நகரமான 'கீம்' நோக்கிப் புறப்படுவிடுவார்கள். 'கீம்' தான் இவர்களின் பூர்வீக ஸ்தலம். இந்த நாடோடிச் சமூகத்தார்கள் அங்கே உள்ள மலையடிவாரங்களுக்கு தங்களது வருடாந்திர ஓய்வுக்காகவே செல்கின்றார்களென பரவலான ஒரு பேச்சு உண்டு. அது அவ்வளவு சரியான கணிப்பு அல்ல என்கிறார் கஸிமோவ்.

சுமார் இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரேப்பாவிலிருந்து ஒரு பெருங்கூட்டம் இன்றைய போலந்து வழியாகப் புறப்பட்டு, விதுன்னியா, லாட்வியா கடந்து விலிகயா மலைத் தொடர்களின் கனவாய்கள் வழியாக ருஷ்யபீட பூமியை அடைந்தனர். அங்கிருந்து ரஷ்யாவின் பழமை வாய்ந்த நகரான பிஸ்கோவ் சென்று பின்னர் மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பக்கம் செல்லாமல் வடமேற்காக நகரத் தொடங்கினர். இப்படி ருஷ்யாவின் வடமேற்காக நகரத் தொடங்கியதில் இவர்களிடம் சில திட்டங்கள் இருந்தது என்று வியக்கிறார் கஸிமோவ்.

பூர்வீகக் குடிகள் என்று யாரும் வசிக்காத கடல் சார்ந்த பிரதேசத்தை அடைந்து அதை சொந்தம் கொண்டாடினர். அவர்கள் கண்டடைந்த அந்த கடலுக்கு 'தூய கடல்' (White Sea) என்றும் பெயரிட்டனர். இந்த கடல் சார்ந்த பிரதேசத்தை ஒட்டிய பகுதி யில்தான் 'கீம்' (Keem) இருக்கிறது. கீம் இவர்கள் உண்டாக்கிய பூர்வீக ஸ்தலம். மலைகளும் மலையடிவாரமுமாக பசுமை போர்த்திய பூமி. மிதமான சீதோஷ்ணம் ஓர் வரப்பிரசாதம். அந்த மலைகளின் சிகரங்களில் பலமாதங்கள் பனி படர்ந்திருக்கும் வெண்மை கண் கொள்ளாக் காட்சி.

வீரம், தைரியம், மதி நுட்பம், பொது அறிவு ஆகியன இந்தக் கூட்டத்தாரிடம் அதிகம். இவர்களது உடல் வாகும், தேஜஸும் அபரிமிதமானது. எலுமிச்சை நிறம் கொண்ட இவர்களது மேனி இவர்களுக்கோர் கூடுதல் விசேசம். இந்த சமூகத்திற்கு, சக்திகள் அத்தனையும் பெற்ற ஒரு தலைவன் உண்டு. அவனது மனைவி தலைவியாகக் கருதப்பட்டாள். தலைவனுக்குப் பிறகுதான் தலைவி என்றாலும், நடப்பில் மக்கள் அதீத மரியாதையை தலைவிக்கே தந்தனர். குலம் காக்கும் மாதாவாகவும் போற்றப்பட்டாள்.

அந்த சமூக மொத்தமும் வணங்கத்தக்க ஒரு மஹா குருவும் அங்கே உண்டு. தலைவன், கடவுளின் மகனாக கருதப்பட்டான் என்றால் குரு... கடவுளாகவே போற்றப்பட்டார்! மன்னர்களுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் எடுபிடிகளாகவும், பிச்சைத்தொழிலாளிகளாகவும் நாம் அறியவரும் அந்த நாடோடி சமூகத்தின் ஆதி முன்னோர்கள் இவர்கள்தான்.

'தூய கடல்' பிரதேசத்தில் நிலை கொண்டுவிட்ட அந்த சமூகத்தாரிடம் அன்று சில திட்டங்கள் இருந்தது. அவர்களின் குல வெற்றிக்காக அவர்களது மஹா குரு, தனது வல்லமை பொருந்திய ஞானத்தால் வகுத்துத் தந்த திட்டமது. நாளடைவில் அவர்கள் தங்களது எல்லைப் பரப்பை விரிவுபடுத்திக் கொள்ளவும் முனைந்தனர். கீமில் இருந்து வட கிழக்காக நகர்ந்து யாருமே அது வரை சொந்தம் கொண்டாடாத அந்த வடதுருவ பெருவெளிப் பேரெல்லைப் பரப்பை தங்களுக்குக் ந்கீழ் வசப்படுத்தி விடலாம் என நம்பினர். அவர்களின் தலைவனும், வழிநடத்திகளும் காலம் எடுத்துக் கொண்டு, முயற்சிகளில் இறங்கினார்கள்.

கீமில் இளவேனிற் பருவம் கோலாகலமாகத் துவங்கியது. அந்த பருவத்தில் தென்படும் மூல நட்சத்திர தினத்தில் யாகம் வளர்த்து ஊரே விழாக்கோலம் கொண்டது. அதில் சந்தோசம் கொண்டாடி, மகிழ்ச்சியில் திளைத்து, புறப்பாட்டையும் நிகழ்த்தினர். பல நூறு காட்டெருமைகளைக் கொன்று அவற்றின் தோல்களை பதப்படுத்தி வைத்திருந்தமைகளை அணிந்துக் கொண்டு குழுக் குழுவாக வடகிழக்குதிசை பார்த்துச் சென்றனர்.

பல மாதங்களுக்குப் பிறகு ஆர்டிக் பெருங்கடலின் கரையொட்டியும், உறைந்து கிடந்த அப்பெருங்கடலின் சில பகுதிகள் மீது நடந்தும், வட துருவ எல்லைப் பகுதியை ஒட்டிய சிறிய தீவுகளை சமீபிக்க, பிரதேசம் முழுவதுமே நிரந்தர உறைபனி... அதற்கு மேல் அவர்கள் நகர எத்தனிக்கவில்லை. தாமதத்தால், பருவத்தை தவற விட்டு விட்டதாக நினைத்தனர். இத்தனை பெரிய கட்டிலடங்காப் தூய பிரதேசம் தங்களது காலடிக்கும்கீழே என்ற நினைப்பும், வெற்றியைச் சமீபித்து விட்டோம் என்ற களிப்பும் மேலோங்க, அந்த உறைபனிப் பிரதேசம் அப்பொழுது அவர்களுக்கு அச்சத்தைத் தரவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக தூர முகடுகளில் தென்பட்ட வளர்ந்த மரங்கள் பனியால் உறைந்து வெள்ளைக் கலைவடிவாக நின்றது. கண்களுக்கெட்டிய தூரம்வரை சமுத்திர விஸ்தீரணமாகத் தெரிந்த உறைபனி நாளடைவில் அவர்களை என்னவோ செய்தது. அச்சத்தை அவர்கள் அசட்டைச் செய்தாலும், அந்த பிரமாண்ட வெள்ளை உலகத்தை பார்க்கப் பார்க்க ஹிருதயத்தின் இயக்கம் மெல்லச் சுருங்கி ஜில்லிட்டுவிடும் உணர்வே மேலோங்கியது.

அந்த குழுக்களுக்கு தலைமை ஏற்று வந்த அவர்களின் தலைவனுக்கும், முன் அழைத்துச் சென்ற குழுவின் வழி நடத்திகளுக்கும் அங்கே பிடி மண் கூட காணக் கிடைக்கவில்லை என்பதிலான ஏமாற்றம் நெருடலாக உறுத்திக் கொண்டே இருந்தது. யுகயுகமானாலும் உபயோகத்திற்குரிய பசுமைகள் அங்கே துளிர்விடவோ, தங்களது சொத்துக்களாக போற்றும் கால்நடைகள் உயிர் வாழவோ சாத்தியமே இல்லை என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. திசை பார்த்து நடக்க இரவில் பேருதவியாக இருந்த நட்சத்திரக் கூட்டம் மறைந்து போய் மாதங்கள் ஆகிவிட்டது! தலைக்கு மேலே எந்த நேரமும் சூரியன் ஏழாக அல்லவா தெரிகிறது!! ஒரு நாளின் கணிசமான பொழுதுகள் கழிந்தும் ஏன் அவைகள் மறைவதில்லை? இதனைக் குறித்தெல்லாம் எத்தனை முறை யோசித்தாலும் அவர்களுக்குப் பிடிபடுவதேயில்லை!

"நடந்து வந்த பாதையும், நாம் வந்து சேர்ந்திருக்கிற இடமும் சரியானதுதானா?" எனக் கேட்ட தலைவனிடம், மூத்த வழிநடத்தி சொன்னான், "புஜ வலிமை பொருந்திய எங்களின் மஹா தலைவனே..! இத்தனை காலமும் காத்து உணவளிக்கின்ற தெய்வத்தின் மகனே! மூவுலகையும், முக்காலத்தையும் கணிக்கக் கூடிய நமது குருவின் சொற்படித்தான் வந்து சேர்ந்திருக்கிறோம். அவர் குறித்துத் தந்த வட கிழக்கு விடி வெள்ளியின் பாதையில் இருந்து நாம் இம்மியும் பிசகவில்லை!"

"இப்பொழுது எங்கே அந்த வடகிழக்கு விடிவெள்ளி.? சூரியன் ஏன் இப்படி மறையாது தெரிகிறது! அதுவும் ஏழு! எப்படி இதெல்லாம்? எங்கேபோனது இரவு? எங்கணம் மறைந்தன பிற நட்சத்திரங்கள் எல்லாம்? நாம் எங்கேதான் வந்து சேர்ந்திருக்கிறோம்? குரு சொல் சத்தியமானது; இப்பவும் நம்புகிறோம். அதில் தவறு நேர வாய்ப்பேல்லை. எங்களின் நம்பிக்கைக்குரிய முதன்மை வழிநடத்தியே...எப்படி..இந்த குழப்பம்?"

தலைவனின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வழிநடத்தியிடம் வேறொரு பதில் இல்லை. எல்லாம் முன்னமே சொல்லியாகி விட்டது. நம்மையும் அறியாமல் பாதை தவறி இருப்போமோ! குழம்பினான். ஐம்புலகளும் ஒடுங்க மௌனமாகவே நின்றான். துணை வழிநடத்திகளையும் தலைவன் ஏறிட்டுப் பார்க்க, அவர்களும் வாய்மூடி நின்றனர். தலைவன் பொறுமையை இழந்து, உரத்த குரலில் பேசத்துவங்கினான். மொத்த குழுக்களுமே உயிர் ஒடுங்க கேட்டது.

'இந்த லோகத்தின் மூத்தகுடி நாம்தான். இறைக்குடும்பத்தின் தொப்புள் கொடிப்பிறப்பாக இம்மண்ணில் அவதாரம் கொண்டவர்கள் நாம். இந்தலோகம் நம்முடையது. அதை ஆளப்பிறந்தவர்கள் நாம்தான். நமது வெற்றிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இருக்கவும் வேண்டும். வெற்றிகளால் மட்டும்தான் நமது குருவின் பாதத்தை அடையமுடியும். நம்மின் சொர்க்கமே அதுதான். இந்த முறை குருவின் வாக்கைத் தவறவிட்டுவிட்டோம். மாபாதகம் இது. இதிலிருந்து நமக்கு விமோசனம் என்பது இல்லை. மாட்சிமைக்குரிய வழி நடத்திகள்தான் இந்த மாபாதகத்தின் மூல முதல் காரணம்' என்றான். குழுக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பியது : 'எங்கள் தலைவனின் சொல் சத்தியம்!'. அந்த வெண்பரப்புலகமே அதிர்ந்தது. 'சத்தியம்...! சத்தியம்...!!'

சத்தியத்தின் அதிர்வுகள் அடங்குமுன், மூத்தவழி நடத்தியோடு உதவி வழிநடத்திகளுமாக மொத்தம் பதினெட்டு பேர்கள் தலைவனுக்கு முன்னால் வந்து நின்று, தங்களது உடைவாளை உருவி அவன் காலடியில் வைத்து, 'குலம் வாழ்க! குரு வாழ்க! தலைவன் வாழ்க! நமது இனத்திற்கு தோல்வியே இல்லை. அது ஆகவும் ஆகாது. இந்த தோல்விக்கு நாங்களே பொறுப்பு. எங்களைக் காத்த தலைவனே, எங்கள் உயிரை உங்கள் பாதத்தில் மனமுவந்து அர்ப்பணிக்கின்றோம், எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்.

'இனம் தழைக்க, குலம் தழைக்க, நம் குருவின் பெயரால் இவர்களின் அர்ப்பணிப்பை ஏற்கிறேன்' என்ற தலைவன், தனது படைத் தளபதியை அழைத்து, தூரத் தெரியும் பனிப் பள்ளத்தாக்கை காண்பித்து உத்தரவு பிறப்பித்தான். 'இவர்கள் இந்த லோகம் அழிந்தொழியும் காலம்வரை அந்த பள்ளத்தாக்கில் பத்திரமாய் இருப்பார்கள்' என குழுவினரிடம் மகிழ்ச்சியோடு சொன்னான். வழிநடத்திகள் பதினெட்டு பேரும் உதவித் தலைவனின் பின்னால் நிமிர்ந்து நடைபோட்டுச் சென்றார்கள்.

பனிப் பாறைகள் கண்ணாடியாக அந்த ஏழு சூரியனையும் பிரதிபலித்தது. வெண்மையான அடர்ந்தமுடி கொண்ட மிருகங்கள் தங்களின் மேல் படியும் பனிப் பொழிவை சிலுப்பி விட்டபடி இரைதேடுவதையும், நீண்ட மூக்கும் சங்கு கழுத்தும் கொண்டு தத்தித் தத்தி நடந்துத் திரியும் ஒரு வகையான வாத்தினங்களை நிறையக் கண்டார்கள். இன்னும் சில வினோத உயிர் இனங்களும் அவர்களின் பார்வைக்குப் பட்டது. நாளாக நாளாக, சற்றைய நாழிக்கொருதரம் வீசிய பனிப்புயலின் வேகமும், வீச்சின் இரைச்சலும் மிரட்சியைத் தந்தது. தாங்கள் சிலையாக உறைந்து விடுவோமோ என்கின்ற அச்சம் அவர்களுக்கு இப்பொழுது கூடுதலாகிப் போனது.

தங்களை ஒத்த மனிதக்குழுக்கள் அங்கே வசிக்கும், அவர்களை எதிர்த்து அதன் வெற்றியில் கிட்டும் நிலப்பரப்பை தங்களின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரவேண்டும்; அதுதான் அவர்கள் திட்ட முனைப்பு. அது இப்பொழுது அர்த்தமில்லாமல் போய் விட்டது. அவர்கள் எதிர் கொள்ள அந்த மகா சமுத்திர அளவிலான உறைபனிப் பிரதேசத்தில் மனித வாடையே காணோம். அந்த குழுக்கள் இப்படி புறப்பட்டு வந்து மாதங்கள் பல கடந்தும், இன்னும் அந்த பிரதேசம் அத்தனைப் பேர்களுக்கும் ஆச்சரிய பூமியாகவே இருந்தது. அவர்களிடத்தில் எழுந்த எந்தவொரு கேள்விக்கும் அங்கே யாரிடத்திலும் பதிலென்பதே இல்லை. இந்தப் புரியாமை அவர்களை கலவரப் படுத்தியபடியே இருந்தது. அவர்கள் நாடுதிரும்ப எத்தனித்த தறுவாயில், அந்தக் குழுக்களில் வயதான ஒருவர் அவர்களது சந்தேகத்தைப் போக்க முன் வந்தார். அந்த வெள்ளை உலகத்தை மண்டியிட்டு வணங்கி எழுந்து, எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படிச் சொன்னார். 'இது கடவுளின் பூமி!!'

(தொடரும்)

- தாஜ் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com