Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்
சூர்யா

அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக கூற முடியாத நிலையில் கிடந்தார்கள். ஆனால் அனைவரும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். அவர்களில் ஒரு ஓரமாக ஜன்னல்களில் கால் வைத்தபடி படுத்துக்கொண்டிருந்த இளைஞன் நடிகர் ராஜ்கிரணைப் போல் கைலியை ஏற்றிக் கட்டியிருந்தான். அந்தப் பக்கம் திருமபிப் பார்க்கவே சங்கடமாயிருந்தது அவனுக்கு. வீட்டிலிருக்கும் பொழுது உள்ளாடை அணியாமல் இருப்பது சகஜம் தான் எனினும் பார்ப்பவர்களை பதற வைக்கும் போஸில் படுத்திருப்பது என்ன நியாயம். அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாயில்லை. எனினும் ஒவ்வொருவராக அனைவரும் தங்களை நாகரீகமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவனும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

Man “ஹலோ என் பெயர் ராகவன்”

ஐந்தாறு முறை அவன் தன் பெயரை கூறி அறிமுகப்படுத்திக் கொண்டபின் ஏழாவதாக ஒருவன் கழிவறையிலிருந்து வெளியே வந்தான். அவனும் தன் பெயரை கூறியபடியே கையை நீட்டினான். கைகுலுக்கியபடியே தனதுபெயரை கூறிமுடிக்கும் பொழுது அவனால் சங்கோஜப்படாமல் இருக்க முடியவில்லை. அவன் ஊரிலிருந்து வந்த பொழுது மறக்காமல் எடுத்து வந்திருந்த புத்தகம் சத்திய சோதனை. அதை இன்று இரவு முழுவதும் படித்தால்தான் பதற்றம் குறையும் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.

இரவு வெகு நேரமாகியும் தூக்கம் வரவில்லை. ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு அமிழ்த்திக் கொண்டிருந்தது. மூன்று அறை கொண்ட ஒரு வீட்டில் மொத்தம் எட்டு பேர். எப்படி இந்த பேச்சுலர் வாழ்க்கை நகரப் போகிறது எனத் தெரியவில்லை. சத்திய சோதனையை விரித்து வைத்துக் கொண்டு எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தான் ராகவன்.

சிறிது நேரத்தில் பக்கத்து அறையிலிருந்து தீப்பிடித்து புகை கிளம்புவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. பொதுவாக தீப்பிடித்து எரிந்தால் எப்படி அணைப்பது என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ராகவன் தான் கொண்டு வந்திருந்த பெரிய கம்பளிப் போர்வையை எடுத்துக் கொண்டு ஓடினான். அங்கு அந்த 7 பேரும் வட்டமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். பின் 7 பேர் ஒரே நேரத்தில் சிகரெட் பிடித்தால் தீப்பிடித்தது போன்று புகை வராமல் என்ன செய்யும்.

சிறிது நேரத்தில் புகை மண்டலமாகிவிட்ட அறையிலிருந்து வெளியேறாவிட்டால் நுரையீரலானது புகையேறி அடைத்துக் கொள்ளும் என்கிற நிலையில் டீக்கடை வரை சென்று வரலாம் என்று கிளம்பினான். கதவோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 15, 20 செருப்புகளுக்கு நடுவே தனதுசெருப்பை நிதானமாகத் தேடினான். ஐயோ அதைக் காணவில்லை. புது செருப்பாயிற்றே. ஊரிலிருந்து கிளம்பும் பொழுது ஏதோ தூர தேசத்துக்கு செல்பவனைப் வழியனுப்புவது போல, புதுபேஸ்ட், புதுபிரஸ், புதுசோப்பு, புது செருப்பு என தடபுடலாக வழியனுப்பி வைத்தார்கள். வந்த முதல் நாளே செருப்பை காணவில்லையென்றால் அதையெப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும்.

வட்டமாக உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களிடம் கேட்டான். “யாராவது இங்கிருந்த என்னுடைய புதுசெருப்பை பாத்தீங்களா?”

3, 4 முறை கேட்டபின், ஏதோ நிஷ்டையிலிருந்தவனைப் போல ஒருவன் மட்டும் தலையை நிமிர்ந்து பார்த்தான் என்ன என்பது போல. ராகவன் தன் கேள்விக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவன் நிமிர்ந்து பார்த்ததற்காக மனதார, மனதிற்குள்ளாக நன்றியை கூறிவிட்டு, செருப்புக் குவியலிலிருந்து ஏதோ ஒரு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.

அந்த மூன்றடுக்கு பிளாட்டிலிருந்து இறங்கி கீழே வந்தான். வெகு நேரமாக நுரையீரல் நல்ல காற்றுக்காக ஏங்கிக் கிடந்தது. வேகவேகமாக இறங்கி வந்தவன் ஒரு நோடி தாமதிக்காமல் இருந்திருந்தால், அந்த எச்சில் அவன் மேல் விழுந்திருக்கும். எவனோ மொட்டைமாடியின் உச்சியிலிருந்து துப்பியிருந்தான். கோபமாக நிமிர்ந்து மாடியை பார்த்தபொழுது, துப்பியவன் பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. இனி அந்த இடத்தை கவனத்துடன் கடக்க வேண்டும் என்று மூளையில் குறித்து வைத்துக் கொண்டான். அந்த ஏரியாவை பொறுத்தவரை பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு அடியும் ஏதேனும் ஆபத்து நிறைந்ததாக தோன்ற ஆரம்பித்தது அவனுக்கு.

யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவன் சொதசொதவென இருந்த எதன் மீதோ மிதித்து விட்டான். அது மாட்டுச் சாணம். சென்னை நாகரீகமான நகரம் என்பதால், மாடுகள் எல்லாம் பொதுக் கழிவறையையா உபயோகப்படுத்தப் போகின்றன. உலகில் உள்ள அத்தனை மாடுகளும் நடு ரோட்டைத்தான் தனது கழிவறையாக உபயோகப்படுத்தும் என தனது மரமண்டைக்கு புரியாமல் போனது குறித்து நொந்து கொண்டுதான் என்ன பிரயோஜனம். நமது நாட்டில் சாணத்தை மிதித்துவிட்டால் அதை சுத்தம் செய்வதற்கென்று சில வழி முறைகள் இருக்கின்றன. அதற்கு தேவை ஏதேனும் ஒரு டிரான்ஸ்பார்மர். அதன் அருகே நிச்சயமாக ஏதேனும் ஒரு கல் இருக்கும். அது போதும். ராகவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அதெப்படி இல்லாமல் போகும். ஈசானி மூலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது அங்கே ஒரு பெரிய கல் படுக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதில் ஏற்கனவே பலர் முயற்சி செய்திருப்பது அதை பார்க்கும் பொழுதே தெரிந்தது. இந்த இடத்தில் இதற்கு முன்னர், இதே போன்று பல நிகழ்வுகள் நடந்திருப்பதும், தான் முதல் ஆள் இல்லை என்பதும் சற்று ஆறுதலான விஷயமாக இருந்தது அவனுக்கு.

தனது கால்களை சுத்தம் செய்யும் வேலையை முடித்துவிட்டு இன்னும் சற்று விழிப்புணர்வுடன் கிளம்பினான். தெருவின் அடுத்த முனையில் ஒரு நாய் நின்று கொண்டிருந்தது. அது முறைத்துப் பார்பப்பதைப் பார்த்தால், ஏதோ பழி உணர்ச்சியுடன் காத்திருப்பதை போல தோன்றியது. ராகவன் தன் பின்னே வேறு யாரையாவது முறைத்துப் பார்க்கிறதா? என திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. நிச்சயமாக அந்த நாய் அவனைதான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. தொப்புளை சுற்றி 40 ஊசிகளை சரமாரியாக குத்தும் மருத்துவ வழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருக்குமானால், அந்த நாய் ராகவனுக்கு ஒரு விஷயமேயில்லை. அதோடு அவனுடைய கூடுதல் தகுதி என்னவென்றால் அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்பது. இருப்பினும் 40 ஊசிகளுக்கு மரியாதை கொடுத்து அவன் டீடைக்குச் செல்வதற்கு மற்றொரு தெருவை தேர்ந்தெடுத்தான். கடவுளின் கருணையின் பேரில் அந்த தெருவில் எந்த நாயும் இல்லை.

ராகவன் கடைசியாக சந்தித்த அந்த சாகசம், ஒரு சைக்கிள் ஓட்டுபவன் ரூபத்தில் வந்தது. அது ஏன் கால்களுக்கு இடையிலேயே சைக்கிளை சொருகுகிறார்கள் என்று தான் புரியவில்லை. இடிப்பதாக இருந்தால் வேறு எங்கேனும் இடிக்க வேண்டியது தானே. இடிப்பதற்கு அந்த இடம் தான் கிடைத்ததா? அந்த இடத்தில் பட்டவலியை சற்று கண்களை மூடி உணர்ந்து பார்த்த ராகவன், டாக்டர். மாத்ருபூதம் போன்று யாரையும் தேடிச் செல்ல வேண்டியிருக்காது என்று நினைத்துக் கொண்டான். கைலியை இருகக் கட்டிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து டீக்கடைக்குள் நுழைந்தான்.

அது டீ கடையா, கல்யாண சத்திரமா? என்பது புரியவில்லை. அப்படி ஒரு கூட்டம். கடைக்காரனிடம் பத்து ரூபாயை நீட்டி ஒரு டோக்கன் வாங்குவதற்கு பத்து நிமிடமும், அதற்கு மீதி சில்லறை வாங்குவதற்கு பத்து நிமிடமும் ஆகிவிட்டது. அந்த டோக்கனை மாஸ்டரிடம் கொடுத்து அந்த டீயை எப்படி வாங்குவது என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். கால் மணிநேர முயற்சிக்குப் பின் ஒரு கண்ணாடி குவளையில் அவனுக்குரிய டீ, அவனது கைகளுக்கு வந்து சேர்ந்தது. கடினமாக உழைத்த விவசாயி ஒருவர் நெற்றி வியர்வையை வழித்தெடுப்பது போல் அவன் தனது நெற்றி வியர்வையை சுண்டிவிட்டான். காற்றோட்டமாக கடைக்கு வெளியே வந்து அந்த கண்ணாடிக் குவளையில் வாய் வைத்து உறிஞ்சினான். அதில் டீயே வரவில்லை. வெறும் நுரைதான் வந்தது. தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ? என்று குவளையை உயர்த்திப் பார்த்தான். அடியில் குறுகிப் போயிருந்த அந்த குவளையில் 40 சதவிகிதம் டீ என்னும் அந்த திரவம் இருந்தது. மீதி 60 சதவிகிதத்தில், 40 சதவிகிதம் நுரையும், 20 சதவிகிதம் வெற்றிடமும் இருந்தது. எப்படியிருந்தாலும் விடுவதாயில்லை என்கிற முடிவிலிருந்த ராகவன், அந்த நுரையை எல்லாம் ஊதித் தள்ளினான். அந்த டீ கண்களுக்கு இப்பொழுது நன்றாகத் தெரிந்தது. ஆசையோடு அதை குடிப்பதற்கு வாயருகே கொண்டு சென்றான், அப்பொழுது...........

எவனோ ஒருவன் காறி வாய் நிறைய கோழையை கொண்டு வந்து சொத்தென்று துப்பினான் தரையில்....... நிதானமான சில நொடித்துளிகளுக்குப் பின் ........... ராகவன் கண்களிலிருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் சென்னை மண்ணில் விழுந்து நனைத்தது.

சூழ்நிலைக்குத் தகுந்தாற் போன்று தனது வாழ்வமைப்பை மாற்றிக் கொள்ளும் உயிரினம் மட்டும் தொடர்ந்து உயிர் வாழும் தகுதி படைத்தது என தனது உயிரியல் ஆசிரியர் டார்வினிசம் பற்றி என்றோ பாடம் நடத்தியது இன்று நியாபகம் வந்தது அவனுக்கு. அறைக்கு நான்கு பேர் என இரண்டு அறைகளையும் அடைத்துக் கொண்டு படுத்திருந்தார்கள். இவ்வளவு நெருக்கமான மற்றும் புழுக்கமான இரவு ராகவனுக்கு தூக்கத்தை வரவழைப்பதற்கு பதிலாக துக்கத்தைத்தான் வரவழைத்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அவனது உயிரியல் ஆசிரியர் இன்றுதான் நினைவுக்கு வந்தார் தேவையில்லாமல்.

எப்படியாவது தூங்கிவிட வேண்டும் என்று கடினமாக போராடிக் கொண்டிருந்த பொழுது அவனது மூக்கின் மேல் வலிமையான தடிமனான உலக்கை ஒன்று வடதிசையிலிருந்து பறந்து வந்து சொத்தென்று விழுந்தது. அந்த உலக்கை அருகில் படுத்திருந்தவனின் கைதான். மூக்கில் ரத்தவாடை அடித்தது. கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டு நின்றது.

அதிசயப் பிறவிகள் மட்டுமே அதற்கு மேலும் தூங்க முடியும். எவ்வளவுதான் தைரியமானவனாக இருந்தாலும் கண்ணீர் தானாக வரும் பொழுது என்ன செய்ய முடியும். தனது தலையனையையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு கிளம்பினான். இருட்டில் எதன் மீது மிதிக்கிறோம் என்பது தெரியாமல் யாரோ ஒருவனுடைய காலை மதித்து விட்டான் ராகவன். தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமோ? என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மிதிபட்டவன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவனிடம் வாழும் திறனை சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் வளர்த்துக் கொள்ளும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் எண்ணியவனாக மாடியை நோக்கிச் சென்றான்.

என்னதான் நெருக்கமான சென்னையானாலும் மொட்டைமாடி என்றுமே ஏமாற்றுவதில்லை. எவ்வளவு இனிமையான காற்று வீசுகிறது. நினைக்கையிலேயே குதூகலம் கொள்ளும் நெஞ்சத்துடன் படுக்கையை விரித்தான். இந்நேரம் இனிமையான இசைமட்டும் காதோரமாக ரீங்காரமிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று மனதிற்குள்ளாக எண்ணி ஐந்து நொடிகள் கூட கடந்திருக்கவில்லை. ஒரு கொசு காதோரமாக ரீங்காரமிட ஆரம்பித்தது. அன் பின் இரண்டு, மூன்று........ஐந்து..... அதன் பின் எண்ண முடியாத அளவிற்கு. கொசுக்களுக்கு மட்டும் ஆறாவது அறிவிருந்தால் அதன் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சி மன்னிப்பு கேட்டாவது தூங்கிவிடலாம். வேறு என்னதான் செய்வது இப்பொழுது.

இப்பொழுது வழிந்த கண்ணீர் நிஜமாகவே அவன் அழுவதுதான். கொடூரமான கொசுக்களுக்கு, அந்த உலக்கையே எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டான் ராகவன். மீண்டும் தனது இருப்பிடத்தை தேடி புறப்பட்டான். அந்த இடத்தில் எவனோ ஒருவன் உருண்டு பிரண்டு கோணல் மாணலாக படுத்துக் கிடந்தான். யோசிக்காமல் எழுந்து சென்ற தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா? என்று வெகு நேரமாக வேண்டிக் கொண்டிருக்கும் வேலையில் ஒருவன் லேசாக உருண்டு படுத்தான். கடந்த அரை மணி நேரமாக சுவரோரமாக குத்துக் காலிட்டுக் கொண்டு ஒரு உருண்டு படுத்தலுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான். ஒரு நொடி கூட வீணாக்காமல் அந்த இடைவெளியில் பாய்ந்து தன்னை சொருகிக் கொண்டான்.

விடிவதற்குள் மூன்று உலக்கையடி வாங்கியிருந்தான். அந்த நான்காவது அடி மேல் வந்து விழுந்தபோது மணி 7:30. காலை நேரம். ராகவன், சரி எழுந்திரிப்போம் என்று நினைத்தது அந்த அடிக்காக அல்ல. அவனை படுக்கையிலிருந்து எழுப்பிய அந்த சக்தி, அந்த இனிமையான சுப்ரபாத இசைதான். இரவு 2 மணிவரை போதையில் மிதந்து கொண்டிருந்தவர்களில் 3 பேர் இப்பொழுது பக்தியில் மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் இறைவனை வழிபட்டுவிட்டு அலுவலகம் சென்று விட்டார்கள். ஆனால் இந்த அருகில் படுத்திருப்பவன் தூக்கத்தில் கூட வன்முறையை கையாள்வது சற்றும் முறையற்ற விஷயம் என்று நினைத்தவனாய், அலுவலகம் சென்றுவிட்ட 3 பேர் படுத்திருந்த இடத்திற்கு தாவிச்சென்று படுத்துக் கொண்டான்.

6 மாதங்களுக்குப் பிறகு, ராகவனது கொத்து கொத்தான் தலைமுடியில் தங்களுக்குரிய கூட்டை அமைத்துக் கொள்ளலாமா? என இரண்டு குருவிகள் மின்சார ஒயரில் அமர்ந்தபடி கீச் கீச் என தங்களுக்குள் பேசி கொண்டிருந்தன. ஆனால் அவை நிச்சயமாக இப்படியொரு முடிவைத்தான் எடுத்திருக்கும். அந்த அழுக்கு பிடித்த பரட்டைத் தலைக்குள் தங்களது வீட்டை அமைத்துக் கொண்டால் தங்களுக்கு ஏதேனும் தொற்று வியாதி ஏற்பட்டு விடும், ஆகையால் வேண்டாம் என்பதாகத்தான் இருந்திருக்கும் அந்த முடிவு. அந்த முடி தனது கருமை நிறத்தைத் தொலைத்து வெகு நாட்களாகியிருந்தது.

அந்த தெருவின் மூலையில் தனது கடையை அமைத்திருந்த துணிகளை துவைத்து மற்றும் தேய்த்துக் கொடுக்கும் தொழிலாளி வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். அதற்கு காரணமுண்டு. ஊருக்கு வந்த புதிதில் ஒரு முறை துவைத்து போட்டதாக ஞாபகம், ராகவனுக்கு ஞாபக சக்தி அதிகம் தான். இருப்பினும் இரண்டரை மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு நாள் துவைத்தது எப்படி ஞாபகம் இருக்கும். இவனைப் போன்று பலரை பார்த்து பார்த்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். பின் அந்த பழமொழி எதற்குத்தான் இருக்கிறது தேவையில்லாமல் “ஊரோடு ஒத்துப் போ” என்று

அந்த செருப்பு, ஐயோ அதைப்பற்றி எப்படி விவரிப்பது. அது வறுமையில் வதைபட்ட சோமாலியா நாட்டு குழந்தை போல பார்க்கவே கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் மட்டும் அந்த செருப்பை மீண்டும் தைக்கக் கொடுத்தால் அவர் ஒரு கொலைகாரனாகி விடுவார் என்பது மட்டும் உறுதி. சமீபத்தில் தான் அந்த செருப்பில் ஒரு ஓட்டை விழுந்திருந்தது. அதை கண்டு ராகவனது மனம் வெதும்பியது உண்மைதான்.

வாரத்திற்கு ஒருமுறை பல் துலக்குவதில் அப்படியொன்றும் சிரமமில்லை என்றாலும், அதை ஏன் செய்யமாட்டேன் என்கிறான் என்பது புரியவில்லை. இந்த ஆடு, மாடுகளை பார்க்கும் பொழுதுதான் அவனுக்கு இந்த மனஉறுதி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் பிறகும் அவனுக்கு பூச்சி பல் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். பின் அந்த பூச்சிகளுக்கு மட்டும் உயிர் வாழும் விருப்பம் இருக்காதா என்ன? அந்த துர்நாற்றம் பிடித்த வாய்க்குள் நுழைய எந்த பூச்சிக்குத்தான் தைரியம் வரும்.

அவன் உபயோகப்படுத்தும் டவலைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ............ம் .......... இல்லை வேண்டாம்....... ஐயோ கடவுளே.......... அந்த பயங்கரத்தைப்பற்றி சொல்லித்தான் ஆக வேண்டுமா? அது ஒரு......... அது ஒரு........... அது....... அது ஒரு பயாலஜிக்கல் கொலை ஆயுதம். இதற்கு மேல் எதுவும் வேண்டாம். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இவ்வளவு கொடூரங்களுக்குப் பிறகும் தன் சென்னை வாசத்தை தவிர்க்காமல் ராகவ் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் வேறு என்னவாக இருக்க முடியும். அவன் தந்தையின் அந்த வார்த்தைகள் தான்.

புதிதாக முளைத்திருந்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு தான் அந்த வீட்டைவிட்டு கிளம்புவதாக கூறிக்கொண்டு, தனது துணிகளை மூட்டைகட்டிக் கொண்டு கிளம்பும் போது திரு. ரத்தினம் (5ம் வகுப்பு ஆசிரியர்) இவ்வாறு தான் கூறினார். “அடேய் ஆக்கங்கெட்ட கூவ, இன்னைக்கு சொல்லுதேங் கேட்டுக்க, நீ சென்னைக்கு போயி போட்டுக்க துணியில்லாம, திங்க சோறில்லாம, பரட்ட தலையோட, கால்ல செருப்பு கூட இல்லாம அலைய போற எழுதி வச்சுக்கோடா”

அப்பொழுது இடது புறமாக வாயை கோணிக் கொண்டு நக்கலாக சிரித்தோமே... இப்பொழுது எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அங்கே போய் நிற்பது என்பதை நினைக்கும் பொழுது அடிவயிற்றில் பசி எரிச்சலுடன் மற்றொரு வேதனையான எரிச்சலும் தோன்றியது. ஆனாலும் தன் தந்தை நாஸ்ட்ரடேமசைப் போல என்னவொரு தீர்க்க தரிசியாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது லூசுத்தனமாக ஒருவித பெருமையுணர்வு வேறு வந்தது. இந்த ஆச்சரியத்தை தாங்கவே முடியவில்லை. நடக்கப் போவதையெல்லாம் புட்டு புட்டு வைத்துவிட்டாரே. ஒரு வேளை தன் தந்தை தான் நாஸ்ட்ரடேமசின் மறுபிறவியாக இருப்பாரோ? என்று நினைத்துக் கொண்டான்.

அவர் இன்னொன்றும் சொன்னார். அது......... அது...... பிச்சையெடுப்பதை பற்றியதாக இருந்தது. ராகவன் அழுது கொண்டே தன் மனதிற்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டான். “அப்பா, நான் உங்கள் மகன் என்பதற்காகவாவது, கொஞ்சம் சாபத்தை குறைத்திருக்கக் கூடாதா?”

திடீரென காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. மதியம் 2:30 மணியளவிலும் அறையில் இருப்பவன் இவன் ஒருவனாகத்தான் இருக்கும் என்பது கொரியர் கொடுப்பவனுக்கு கூட தெரிந்திருந்தது. அதனால்தான் பெயர் சொல்லி கதவை தட்டியிருந்தான். ஒரு கணமான கவர் கொடுக்கப்பட்டதும், பிரித்துப் பார்த்தான். உள்ளே இரண்டாயிரம் ரூபாயும், ஒரு கடிதமும் இருந்தது. திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால் இதயம் ஏன் வலிக்கிறது என்பதை பற்றி எந்த மருத்துவரிடமாவது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை பிரித்துப் படித்தான்.

ராகவனுக்கு தந்தை ரத்தினம் எழுதிக் கொள்வது என்னவெனில்,

இங்கு அனைவரும் நலம், நீ நலமோடு இல்லையென்பது தெரியும். எனது பள்ளி தோழனிடம் உனக்காக ஒரு வேலையை ஏற்பாடு செய்திருக்கிறேன். அவனைச் சென்று பார். இந்த சினிமாக்காரர்களிடம் சிக்கி சீரழிந்து விடாதே? அப்படியொரு எண்ணமிருந்தால் அதை அடியோடு மறந்துவிடு. உனக்கு நாசமாக போக விருப்பம் இல்லையென்றால் இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேள்.............. ......... ........... .......... ......... ................. ................ ................ ............. .......... ....... ...

அன்புடன் ரத்தினம்

பின் குறிப்பு:

வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரில் திருவிழா நடக்க இருப்பதால் ஊருக்கு வந்துரு. உனக்கு புடிச்ச நண்டு குழம்பு செய்யப் போறாளாம் உன் அம்மா. நீ வந்தாதான் நானும் நல்ல சாப்பாடு சாப்பிட முடியும், நீ போனதிலருந்து இங்க யாரும் சரியா சாப்பிடுறதில்ல. மறக்காம வந்துரு.

ராகவன் திருப்தியாக உணவருந்தி பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த நண்டை நினைத்துப் பார்க்கும் பொழுது நியாயமாக வாயில் உமிழ்நீர் தான் ஊறியிருக்க வேண்டும், ஆனால் மாறாக அவன் கண்களில் கண்ணீர் திரண்டது. என்னவென்று சொல்வது, இந்த கண்ணிற்கு தெரியாத, மனதிற்கு புரியாத அன்பை பற்றி, ராகவனுக்கு சற்று மனசாட்சியும், யோசிக்கும் திறனும் உண்டு என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது.

- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com