Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பார்வைகள்
சூர்யா


தாண்டிச் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த கவனிப்பை புறந்தள்ள நினைத்தாலும், உள்ளிருந்து பார் என்று உந்தித் தள்ளும் அந்த உணர்வுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பது உண்மைதான். நானும் நிமிர்ந்து பார்க்க நினைக்கும் எனது ஆசையும் சண்டை போடும் போது வரும் தலை வலியும், விரும்பத்தகாத உணர்வும் என்னை தினம் தினம் வெறுப்புக்குள்ளாக்குகிறது. வெறுப்பிலிருந்து வெளியேறி சிந்தையை வேறு திசையில் திருப்புவதற்குள் மனம் புண்ணாகிப் போவது உண்மைதான். இதெல்லாம் எதற்காக, நான் இதற்குப் பொறுப்பல்லவே. என்னால் என்ன செய்ய முடியும். நான் தவிர்க்கத்தானே நினைத்தேன். ஏன் தவிர்க்க வேண்டும் என்று கேள்விக்கு என்னால் உடனே பதிலிறுக்க முடியாது. சுற்று யோசிக்கத்தான் வேண்டும் . நான் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை உறுதி செய்ய நான் கவனிப்பதெல்லாம் இந்த சமுதாயம் என்னை எந்த விதத்திலெல்லாம் பாராட்டுகிறது என்பதை பொறுத்துத்தான் ஏற்கிறேன். அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கவனித்தால் நான் பார்க்க வெறுத்த அந்த பார்வை தான் என் கண் முன்னே வந்து உருவமாக நிற்கிறது. அது இப்பொழுது பார்க்க வெறுத்த செயலா? இல்லை பார்க்க தவறிய செயலா? விசாரணை வைத்தால் பார்க்க தவறிய செயலாகத்தான் இருக்கும். நினைவுகளை விலக்கி வைக்கும் திறமை மட்டும் எனக்கிருந்தால் எத்தனை வசதியாயிருக்கும். அவ்வாறு முடியாதிருப்பது என் இயலாமை குவியலுக்குள் சிக்கியிருக்கும் நான் தாழ்ந்தோனாயிருப்பது குறித்து என்னையே ஏற்றுக் கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் அந்த பெண் அவ்வாறு மாடியில் இருந்து பார்ப்பது சிநேக பாவனையில் இல்லை என்பது மட்டும் உண்மை. அன்று இரவு அவள் இவ்வாறு கேட்டாள்.

‘ஹலோ டைம் என்ன?”

அவள் பதிலை எதிர்பார்க்காமல் சிரித்தாள். நானும் பதில் சொல்லவில்லை. உண்மையான கேள்வி என்னவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் உள்ள இப்பொழுதைய கேள்வி.

எத்தனை விதமான பார்வைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

வெகு நேரமாக எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டு திடீரென பார்வையை நிமிர்த்தி ஆச்சரியத்துடனும், பயத்துடனும் பாவமாக, எந்த எதிர்ப்பும் அற்று, எதையோ எதிர் பார்க்கும் தோரணையுடன் தத்தி தத்தி தவழ்ந்து நெருங்கி வந்து உரிமையோடு என் மடியில படிப்படியாக ஏறி சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு மீண்டும் தனது சுவாரஸ்யமான, எதைச் செய்யப்போகிறோம் என்ற காரணமற்ற உலகத்துக்குள் நுழைந்து கொண்டு மூழ்கிவிடும் குழந்தைத்தனமான பார்வையுடன் வேறு எதையும் ஒப்பிடி முடியாது. அதைத் தவிர்க்கவும் முடியாது. அப்படித் தவிர்க்கும் பட்சத்தில் என் உள்ளுணர்வு என்னைக் கொன்று விடும். நான் ஏன் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் அந்தக் குழந்தையை அள்ளி என் மடியிலாவது உட்கார வைத்துக் கொள்ளலாமே. அதைக் கூட செய்துவிடாத அளவிற்கு என்னை தடுப்பது எது, நான் அமைதியாக இல்லை. நான் அமைதியாக இருக்க வைக்கப்பட்டிருக்கிறேன்.

சிறிது நேரத்தில் அந்த குழந்தையின் அம்மா (எதிர்வீட்டு மாடிப்பெண்) வந்து தன் குழந்தையை அள்ளிக் கொண்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றாள்.

அருணாச்சல பிரதேசத்தில் அஸ்ஸா ரைபிள் படைப்பிரிவில் பணிபுரிந்துவந்த அவள் கணவன் ரமேஸ் மட்டும் சாகாமல் இருந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு கெட்டப் பெயர் வந்திருக்காது.

மளிகைக் கடைகளில் புரணி பேசும் 36 வயதைக் கடந்த பெண்கள். டீக் கடைகளில் மேல் சட்டை போடாமல் நிமிடத்திற்கு ஒருமுறை எச்சிலை துப்பிக் கொண்டு புறம் பேசும் 50 வயதைக் கடந்த பெருசுகள். பொழுதைப்போக்குவதற்காக காரணமே இல்லாமல் எதையாவது பேசி வைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கும் 20 வயதைக் கடந்த இளைஞர்கள், இவர்கள் அனைவரும் அவளைப் பற்றி தவறாகப் பேசும் போது சற்று வேதனையாகவும், பயமாகவும் இருந்தது. நானும் அப்பேச்சுக்களுக்கு இலக்காகிவிடக் கூடாது என்ற பயம் எனக்கொன்றும் விதிவிலக்கல்லவே.

பார்வையின் அர்த்தங்கள் எப்படி மாறும் என்பது குறித்து மிகுந்த சிந்தனைவயப்பட்ட நிலையில் நான் வெட்கங் கொள்ளும் விதமாக வடிவம் எடுத்து என்னை பயமுறுத்திய பார்வைக் குறிப்புகள், நான் தவறானவனா? இல்லை தவறான கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்கிறேனா?, என்ற கேள்வியோடு நின்றுவிட்டது. பார்வைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது இது எத்தனையாவது முறையோ? சுரியான கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில். சரியானது கிடைக்கவில்லையென்றாலும், கிடைத்துவிட்ட திருப்தியில், யோசனையை முடித்துக் கொள்வது அன்றாடம் நடக்கும் தற்காப்பு விஷயம் தான் என்றாலும் சில (போலி) முடிவுகளை எடுத்துவிட்டதாக நினைத்துக் கொண்டேன். இல்லை எடுத்துவிட்டேன். இது தான் சரி. ஆம் சகோதரத்துவத்துடன் பதில் சிரிப்பை உதிர்க்கும் முடிவு அது.

கசப்பான உணர்வுகள் ஏறிமிதித்து அமுக்க, குளிர்ந்த நீரில் உடலை நனைத்துவிட்டு அப்படியே இருப்பதில் எனக்கொரு பிரச்சனை இல்லாவிடடாலும் சமுதயா அலுப்பிற்காக, மென்மையாக ஈரத்தை ஒற்றியெடுத்துவிட்டு அரைத்தூக்கத்தில் அலுப்போடு என்னை மறந்து மற்றும் அனைத்தையும் மறந்து தாண்டிச்சென்றுவிட வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பார்க்கக் கூடாது என்ற நினைப்பே பார்க்கத் தூண்டுவதாக இருக்கிறது. அந்த அதிகாலை நேரத்தில் அவளது வீட்டிற்குள் ஒரு ஆணின் குரல் உச்ச ஸ்தாதியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளது சகோதரனைப் பற்றி இங்கு கூற வேண்டும். அவனது சகோதரி ஊரார் சிந்தனைக்குள் சிக்கி அல்லல் உற்று அவமானப் படுவதில் என்னைப் போலவே அவனுக்கும் உடன்பாடில்லை. ஆனால் சம்பந்தம் இல்லாத நான் தள்ளி நின்று வருத்தப்படுவதோடு சரி. எந்த எதிர்வினையும் செய்வதில்லை. அவன் அப்படியில்லை. அவனுடைய பேச்சை கேட்கும் பொழுது அவள் ஊரார் வாயிலேயே விழலாம்.

வழக்கம் போல் சிந்தனைவயப்படுவதிலிருந்து விலகி பரபரப்போடு தாண்டிச் சென்று அலுவலகத்திற்குள் நுழைந்து இயந்திரமானேன். இயந்திரமானதில் சற்று இளைப்பாறினேன். இயந்திரமாவதில்தான் எத்தனை சுமைகள் விலகிவிடுகின்றன. என் நேரத்தை அவை எடுத்துக் கொள்கின்றன. நேரத்தை மறக்கச் செய்யும் அனைத்தும் மனதிற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. நான் என் வேலையை நேசித்தேன். கடவுள் இருக்கும் இடத்தில் சாத்தான் இல்லை என்றால் எப்படி. எனதுஅலுவலக மேனேஜர் இவ்வாறு என் காதருகே வந்து கத்தினார்.

‘வேலை செய்யும் போது அப்படி என்ன வெட்டி பேச்சு வேண்டி கிடக்கு”

அவருக்கு அப்படித்தான் தெரியும் அவருடைய ஊமை காதுக்கு யார் பேசுகிறார்கள், யார் பேசாமல் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது. சகித்துக் கொள்வது குறித்து சாதனை படைக்கச் சொன்னால் அதில் வெற்றி கொள்ள எனக்கொரு வாய்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

எனக்கு இந்த நான்கு வருடங்களில் தூக்கமும், அரைத்தூக்கமும் தான் தெரியும். முழு விழிப்பை பற்றி எதுவும் தெரியாது. எனது முதல் அடி அடுத்த அடியை எடுத்து வைக்க உதவுகிறது. மற்றபடி நான் நிமிர்ந்து பார்த்து என்ன செய்யப் போகிறேன். பணிச்சுமை என்பது வெட்ட வெளியைப் பார்க்கும் பொழுது, மற்ற நபர்களை பார்க்கும் பொழுது. கடைத்தெருக்களைப் பார்க்கும் பொழுது கலைந்து போகும் என்பது உண்மை போல தெரிந்தாலும். என்னைப் பொருத்த வரையில் அரைத்தூக்கத்தில் எனக்குள்ளேயே சுகமாக தூங்கிக் கொண்டு செல்வதில் சுகமான சுகம். அலுவலகம் விட்டு நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு முட்டாள். நான் அவள் வீட்டை கடக்கும் பொழுது அவளை மறந்துவிட வேண்டும் என்று நினைத்து அவளை நினைத்துவிட்டேன். எப்படி சிரிக்காமல் இருக்க முடியம். எனக்கும் நகைச் சுவை உணர்வு உண்டு. நான் ஒரு சிரிக்கும விலங்கு. ஆனால் ஏன் என்னை கடந்தவன் அப்படி முறைத்துப் பார்த்தான் என்று எனக்கு சட்டென்று விலங்க வில்லை. தெரு முனையிலிருந்தே அந்த மாடி வீட்டை பார்வை மேய்ந்தது.

நான் அவளுக்கு சொரணையில்லை என்றே நினைத்திருந்தேன். எத்தனை முறை லூசுத்தனமாக, எத்தனை நாட்கள் வெட்கமில்லாமல், எத்தனை நாட்கள் தொடர்ச்சியாக, எத்தனை நாட்கள் சொரணையில்லாதவளே என்று கத்த வேண்டும் என்பது போல், எத்தனை எத்தனை நாட்கள். இன்று ஏன் அவள் அங்கே இல்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மை தானே. நான் யானை என்று சொல்லிக் கொண்டது என்னைத்தான். அவளது ஆறாவது அறிவை தூண்டிவிட அவளது சகோதரனின் வார்த்தைகளுக்கு சக்தி இருந்திருக்கிறது என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றாலும் பார்வை ஏன் அங்கு சென்றது. ஆம் என்னிடம் தான் தவறு இருக்கிறது. வெட்கமில்லாதவனே? (நான் என்னையே திட்டிக் கொண்டேன்)

எனக்குள் இருந்து எழும்பும் கேள்விக்கு நானே பதில் சொல்லிக் கொள்ளும் பொழுது. நான் யார்? கேள்வி கேட்பவனா பதில் சொல்பவனா? அல்லது இரண்டும் அற்று குழப்பத்தில் தவிக்கும் மூன்றாவதாக யாராவதா? உண்மையில் நான் எத்தனை பேர்? நான் ஒருவனாக என்றுமே இருந்ததில்லை, என்பது மட்டுமே உண்மை? நான் இந்த 3 பேரில் யாராக இருக்க வேண்டும். யாராக இருந்தால் எனக்கு நல்லது. நான் எனக்கு என்று சொல்வது எதை. என்னை நான் எது என்று சொல்வேன். புரியாத்தனத்திலேயே வாழ்க்கை போய்விடும் போல. சற்று தலைவலியாய் இருந்தது. மீண்டும் ஒரு முறை அந்த மாடிப்பக்கம் திரும்பி பார்த்தது என் கண்கள். அதற்கு நான் தான் பொறுப்பா என்று கேட்டால் என்னால் சரியாக சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தது நானாகாவும் இருக்கலாம். அந்த பெண் அங்கு தான் உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

சார்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்பவர்கள் பெண்கள். தந்தை, அண்ணன், கணவன். மகன், என சார்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்பவர்கள். அடிமைத்தனத்தின் ஊற்ற கண்ணே சார்ந்திருப்பது தான். இது ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதெல்லாம் இல்லை. யார் சார்ந்திருந்தாலும் அடிமைத்தனம் என்பது அமிழ்த்துவிடும். பெண்கள் தங்களுக்குரிய விலங்கை தாங்களே போட்டுக் கொள்கிறார்கள். வழிகின்ற கண்ணீர் துளிகள் ரணத்தை ஆற்றும் மருந்தோ என்னவோ? காரணமற்று எந்த ஒரு விஷயமும் இருக்க முடியாது என்பது உண்மையானால். கண்ணீர் துளிகளுக்கு பதில் சொல்லிவிடுவதைப் பற்றி அவள் யோசிக்கலாமே? இது எனக்குள் எழும் பரிதாபமா? என்னைப் போன்ற குழப்பவாதிகளுக்கு சிந்தனை ஒரு கேடு, என் சட்டையோடு சேர்த்து எனது மூளையையும் கழற்றி வைக்கும் வரம் மட்டும் கிடைத்தால். கடவுளுக்கு என்றென்றம் நன்றி உள்ளவனாக இருப்பேன். அந்த சனியன் பிடித்த மூளையில் தானே இத்தனை சிந்தனைகளும் குழப்பங்களும்.

மணி இரவு 11.30. நான் எனக்குள் இருக்கும் 3 பேரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தேன் தயவு செய்து தூங்கவிடுங்கள். இந்தக் கேள்வி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த கெஞ்சுபவன் யார்? வேண்டாம். 3 பேருக்கு மேல் வேண்டாம். சற்று கூட கருணையில்லாமல் 4 வது ஆளை உருவாக்கிவிடாதே சனியனே? எங்கே தொலைந்தான் அந்த இயந்திர மனிதன். அவன் தான் யோசிப்பதே இல்லை. அவன் தான் தனக்கு பழக்கப்பட்ட வேலைகளை எந்த உணர்வும் அற்று செய்து கொண்டே இருப்பான் நிம்மதியாக. எனக்கு ஏன் இன்னும் தூக்கம் பழக்கமாகவில்லை. அந்த பெண் பாவம். ஐயோ வேண்டாம், இருந்தாலும் பாவம். எனக்கு மட்டும் அப்படி நடந்திருந்தால். ஐயோ வேண்டாம். நிறுத்து. அவளை கடவுள் காப்பாற்றுவார். முடிந்தது.

இரவுத்தூக்கம் போர்க்களப் போராட்டத்தை மிஞ்சுவதாக இருந்தது.

நான் ஏன் தூங்கும் பொழுது காதுகளில் பஞ்சுகளை வைத்துக் கொள்ள வில்லை. என் செவிப்பறையை நிம்மதியாக விட்டிருந்தால் என் மூளையும் நிம்மதியாக இருந்திருக்கும். விடிந்ததும் விடியாததுமாக இப்படியெல்லாம் மூளை யோசிக்கும் என்று நினைத்தாவது பஞ்சுகளை பாதுகாத்து வைத்திருக்காலாம். என் அசட்டையால் மாட்டிக் கொண்டேன். காலை 5 மணிக்கு சுப்ரபாதம் அவ்வளவு அவசியமா? அதை இவ்வளவு சத்தமாக வைப்பதன் மூலம் தன் பக்தியை ஊர் முழுவதும் பறை சாற்றுகிறானா அவன்? அதிகாலை சாபம் பழிக்கும் என யாராவது உறுதி செய்திருந்தால்; அவன் எண்ணெய் சட்டியில் அல்லவா வருபட்டு செத்திருப்பான். மீண்டும் தலைவலி. சகிப்புத் தன்மைக்கு இலக்காவது இது முதல் முறை அல்ல.

‘ஏ பக்கத்து வீட்டு நண்பா நான் தூங்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீ வெற்றி பெற்று விட்டாய். வாழ்த்துக்கள்”

இது தான் முதல் முறை நான் அதிகாலை 5 மணிக்கு பல் துலக்குவது. என் வீட்டு முற்றத்தில் நான் எச்சிலை துப்பினால் என்னை நான் எப்படி இந்தியன் என்று சொல்லிக் கொள்ள முடியும். அதற்காக அழகாக கோலம் போடவதற்காக தண்ணீர் தெளித்து வைத்திருந்த இடத்தில் துப்பியது சற்று அ;திக பிரசங்கித்தனம் தான். நான் துப்பி முடிப்பதற்குள் அவள் ஏன் வர வேண்டும். இன்று எனக்கு நேரமே சரியில்லை. எச்சிலை மொத்தமாக துப்பிவிட்டு மன்னிப்பு கேட்டேன். அவள் அதே சிரிப்புடன் பரவாயில்லை என்றாள்.

உள்ளே செல்ல முயன்ற என்னை தடுத்து நிறுத்தியது அவளுடைய வார்த்தைகள்.

அவள்: ஒரு நிமிஷம்

நான் : (சற்று வெறுப்புடன் என்ன என்பது போல் பார்வை)

அவள் : நீங்க வேலை பார்க்குற இடத்துல எனக்கு எதாவது ஒரு வேலை வாங்கித் தர முடியுமா? நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன். டைப்பிங்கும் தெரியும். உங்களுக்கே தெரியும். வீட்டுல ரொம்ப அசிங்க படுத்துறாங்க.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு நான் எனது அறைக்குள் கதவை பூட்டிக் கொண்டு.

என்னை செருப்பால் அடித்திருந்தால் கூட இவ்வளவு வலி இருந்திருக்காது. பெண்ணே என்னால் முடியக் கூடிய விஷயம் தான் , உனக்கு ஒரு வேலை, அது பெரிய விஷயம் இல்லை. எத்தனை விதமான கண்ணோட்டங்கள். எத்தனை விதமான பார்வைகள். எத்தனை விதமான தப்பர்த்தங்கள். முதல் முறையாக சக தோழியாக, ஒரு மனுஷியாக எனக்குள் உள்ள 3 பேரின் ஒப்புதலோடு ஒரு மனதாக உன்னை ஏற்றுக் கொள்கிறேன்.


- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com