Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
காயடிக்கப்பட்ட கோபங்கள்
சூர்யா


‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு தேடிப்பிடிச்சு வருவிங்களாடா?. தினசரி உன்ன மாதிரி ஆட்களோட போராடுறதே என்னோட பொழப்பா போச்சு. உன்னையெல்லாம் பாத்தாலே தெரியுது. என்னைக்காவது ஏத்தாம போனா வக்கனையா திட்டமட்டும் தெரியுது.............. டேய் உனக்கெல்லாம் சொரனைன்னு ஒன்னு இருக்கா இல்லையாடா. சோத்ததான் திங்குறியா? இதே ரூட்ல ஏற்கனவே உன்ன ரெண்டு தடவ திட்டியிருக்கேன். கொஞ்சமாவது ரோஷமிருந்தா இப்டி திரும்ப செய்வியா? உங்களோட போராடியே என் வாழ்க்கைல பாதி போயிடும்டா. என் நிம்மதிய கெடுக்குறதுக்குனே வந்து சேர்றானுக டேய். ஊன்னை மாதிரி ஆட்கள் தாண்டா இந்த நாட்டையே கெடுக்குறானுக. நீங்கள்ளாம் நாட்டுக்கு தேவையில்லாதவனுகடா. ஊங்களல்லாம் நிக்கவச்சு சுடனும்டா,”

டிசம்பர் 2, காலை 9:30

சிவப்பு நிறத்தில் தகரங்கள் படபடக்க, தொழிற்சாலைப் புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகையைபோல் சற்றும் வித்தியாசமின்றி புகையை கக்கிக் கொண்டு வழக்கம் போல் 150 பேரை ஏற்றிக் கொண்டு, இளைஞர்களின் கரகோஷங்களுக்கு நடுவே பொறுக்க முடியாத வேர்வை நாற்றத்துடன் பிதுங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே, வாயில் அந்த சில்வர் விசிலை வைத்துக் கொண்டு, அந்த 150 பேரில் ஒரு பிச்சைக்காரனை (சொரணையில்லாத) கண்டக்டர் தியாகு திட்டிய வார்த்தைகள் தான் இவை.

தியாகு பாவம் தான், குறைசொல்வதற்கொன்றுமில்லை, ஆனால் மற்றொரு கண்ணோட்டமுள்ளது கவனிப்பதற்கு.

டிசம்பர் 2, இரவு 8:30

தியாகு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி லதாவுடன் அமர்ந்து இரவு உணவருந்திக் கொண்டிருந்தார். நடுத்தர மக்களின் வீடுகளில் இரவு நேரங்களில் சன் டி.வி. ஓடவில்லையென்றால் அங்கு நிலைமை சரியில்லை என்று அர்த்தம். தியாகு நியூஸ் பார்த்தபடி அநிச்சையாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

நியூஸ்

‘சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சண்முகம், நேற்று நிபந்தனையின் பெயரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் 5 கோடி ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டுமென்றும், வழக்கு முடியும் வரை அவர் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் தினம் இருமுறை ஆஜராகி காலை, மாலை என இருமுறை கையெழுத்திட வேண்டுமென்றும் கூறப்பட்டது. அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்த மாதம் செல்ல இருக்கும வெளிநாட்டுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது................. விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும். “

தியாகு தனது வாயை பெரிதாகத் திறந்தார். ஒன்றுமில்லை கொட்டாவிதான். நியூஸ் முடியும் தருவாயில் தூங்கவில்லையென்றால் பின் எப்படி? தூக்க மாத்திரைக்கு கூட அவ்வளவு பவர் கிடையாது. தியாகு சுகமாகத் தூங்கினார்.

தியாகுவைப் பற்றி : தியாகு படித்தது தத்துவம். படித்த தத்துவத்தில் அவருக்கு இதுவும் உணர்த்தப்பட்டது. அதாவது தத்துவவாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்களாகத்தான் திரிவார்கள் என்று, இதை உணர்வதற்குள் லதாவுடன் காதல் வேறு ஏற்பட்டுவிட்டது. அவன் சிக்மண்ட் பிராய்டை படித்துவிட்டு உளறியதையெல்லாம் கேட்டுவிட்டு மக்கு லதா (முதல் வருட மாணவி) ஏமாந்து விட்டாள். வேலை வேண்டுமே என்ன செய்வது கடைசியில் குட்டிகர்ணம் அடித்து பார்த்ததில் அவனுக்கு கிடைத்த வேலை பஸ் கண்டரக்டர் வேலைதான். இந்தியாவின் சாபக்கேடு கல்வி வாழ்க்கைக்கு உதவுவதேயில்லை. கல்வி கல்கி, குமுதம் படிக்கத்தான் உதவுகிறது.

இந்த கனடக்டர் வேலையில் குப்பை கொட்டுவதற்குள் 2 குழந்தைகள் பிறந்து விட்டன. கல்லூரி காலங்களில் இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்தை குறித்து நாட்கணக்கில் வருத்தப்பட்டிருக்கிறார். இந்த கவர்ன்மெண்ட் பொறுப்பற்று இருக்கிறது. மக்களும் பொறுப்பற்று இருக்கிறார்கள். பேச ஆரம்பித்தால் குறைந்தபட்சம் 2 மணிநேரம் ஆகும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. திருந்திவிட்டான். காட்டாற்றில் எதிர் நீச்சல் அடிக்க முடியுமா என்ன? அவனும் சிறு துரும்பு தானே. அவர் தத்துவம் படித்ததன் ஒரே நல்ல விளைவு, 2 குழந்தைகள் பிறந்ததும் மனைவியை தொந்தரவு செய்யாமல் வாசக்டமி செய்து கொண்டதுதான்.

இரவுக் கனவு : கரும்புகையை கக்கிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. தியாகு வெறிப்பிடித்தவனைப்போல கத்திக் கொண்டிருந்தார். அந்த பிச்சைக்காரனைப்பார்த்து. ஆனால் பிச்சைக்காரன் உடையில் இருந்தது போக்குவரத்து துறை அமைச்சர் சண்முகம். பாவமாய் நின்று கொண்டிருந்தார். தியாகு தன் கையில் டிக்கெட்டிற்கு பதிலாக பாஸ்போர்ட்டை வைத்திருந்தார். திரு. சண்முகம் எலும்புத் துண்டை பார்த்து கொண்டிருக்கும் நாயைப் போல ஏக்கத்துடன் அந்த பாஸ்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்.

தியாகு தொண்டை நரம்பு வெடிக்க கத்திக் கொண்டிருந்தார். ‘டிக்கெட் எடுக்க வக்கில்லன்னா..................” , டாக்டர் சந்திரசேகர் (தியாகுவுக்கு வாசக்டமி (கருத்தடை) செய்தவர்) தியாகுவை ஆசுவாசப்படுத்தினார். ‘ தியாகு அமைதியா இருங்க. தையல் பிரிஞ்சுடப் போகுது. அப்புறம் எதாவது ஆயிடுச்சுன்னா என்னை கொறை சொல்லாதிங்க”

‘டாக்டர் இவனுகளோட மாறடிச்சே என் வாழ்க்கைல பாதி போயிடும் போல இருக்கு டாக்டர்” இடையில் மனைவிலதா குறிக்கிட்டாள். ‘என்னங்க உங்களுக்கு பி.பி அதிகமாயிடுச்சு. இந்தாங்க பி.பி டேபலட் சாப்பிடுங்க” மாத்திரையை விழுங்கினான். அமைதியானான்.

தியாகுவின் இரண்டு குழந்தைகளுள் ஒன்று அவனைப்பார்த்துக் கேட்டது. ‘அப்பா ஏம்பா இவ்ளோ கூட்டத்துல இந்த அங்கிள மட்டும் திட்டுற”

அதற்கு பதில் எப்படி சொல்வது என்று யோசிப்பதற்குள், ஓரமாக பிச்சைக்காரன் வேடத்தில் நின்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சண்முகம் இவ்வாறு கூறினார். ‘அவரால் என்னை மட்டும் தான் திட்டமுடியும் பாப்பா. இதையெல்லாம் கண்டுக்காத, நீ நல்லா படி ஓ.கே.யா?”

பேருந்து, பேருந்து நிலையத்திற்கு செல்வதற்குப் பதிலாக ஏர்போர்ட்டுக்குள் சென்றது. எல்லோரும் இறங்கி சென்றார்கள். அதோ அந்த பிச்சைக்காரன், ஐயோ தியாகு தன் கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். அவன் தன்னைச் சுற்றி கருப்புப் பூனை படை சூழ பாதுகாப்புடன் அங்கு நின்றிருந்த போயிங் விமானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். சற்று குழப்பமாக இருந்தது. இருப்பினும் தொண்டைகிழிய கத்தினான் தியாகு.

‘டேய் பிச்சக்கார நாயே டிக்கெட் வாங்காம எங்கடா போற” அடி வயிற்றிலிருந்து எக்கி கத்தியதில் இரண்டு தையல் விடுபட்டுப் போனது, வலி அதிகரிக்க கனவிலிருந்து படக்கென்று விழித்துக் கொண்டான். யூரின் முட்டிக்கொண்டு வந்தது. எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான். முடித்துவிட்டு பின் நிதானமாக படுக்கையிலமர்ந்தார் தியாகு”

பின் ஏதோ நினைத்தவராய். தனது பழைய புத்தக அடுக்குகளை கிளற ஆரம்பித்தார். பல வருட பலமை வாய்ந்த தத்துவ புத்தகங்களுக்கு நடுவே அவர் தேடிய அந்த புததகம் கிடைத்தது. “இன்ஸ்ப்ரேஷன் ஆப் ட்ரீம்ஸ்” பிராய்டின் புகழ் வாய்ந்த புத்தகம். அதை படிக்க ஆரம்பித்தார். மணி 5:30 ஐத் தொட்டது. கனவின் விளக்கம் லேசாகப் புரிய ஆரம்பித்தது. தனது முந்தைய நாள் காயடிக்கப்பட்ட கோபங்களும் புரிந்தது. தன்னுடைய கோபம் நேர்மை தவறி அசிங்கமாக அம்மணமாக நிற்பதை அவரால் சகிக்க முடியவில்லை என்றாலும் , அதை உணர்ந்துவிட்டதில் திருப்தியடைந்தார்.

- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com