Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பூச்சிக்கிழவி
எஸ்.காமராஜ்

''இந்தா வாரேன்.... பிள்ளைகளா.... பெசாசுக, ஒங்காத்தாமாரு ஒங்கள எந்த நேரத்துல பெத்தாளுக''

Old lady உட்கார்ந்த இடத்திலிருந்து கையை அரை வட்டமடித்துத் தடவி ஊனுகம்பைத் தரையில் தட் தட் என்று பலங்கொண்ட மட்டும் அறைந்தாள். இருந்த நாலைந்து பேரும் கலைந்து ஓட்டிவிட்டார்கள். அவனும் அமல்ராசும் கிழவியின் ஊனுகம்புக்கு எட்டாத தூரத்தில் பத்திரமாகப் பதுங்கிக்கொண்டார்கள்.

''கம்ப தூக்கிட்டு ஓடிருவமா? “அமல்ராஸ் குசு குசுத்தான்.

“ஏ பாத்துடா, மாட்டுனமுன்னா அன்னைக்கி ஊச்சி மூக்கனுக்கு உழுந்த மாதிரி உழுந்துரும்”

அமல்ராஸ் பூனைபோல எட்டெடுத்து வைத்து ஊனு கம்பை எடுக்கப்போனான். கிழவி சுதாரித்துக் கொண்டாள்.

“சித்திரைக்குப் பொறந்த பயகா, வாங்க.. ஒங்காத்தாமாரு குடுத்த சேனையக்கலக்குறன்” ஆங்காரத்தோடு தட்டுத்தடுமாறி எழுந்தாள்.

“ஏ குசும்பா ஓடியாந்துரு”

“யார்ல யாரு அஞ்சன் பேரனா ஏலே நீயுமாடா ?''

கிழவி குரலை இறக்கி உருக்கமாகக் கேட்டாள். தங்கராசை என்னவோ செய்தது.

உலகத்திலே மூனே மூனு பேர்தான் அவனைப் பேர் சொல்லிக் கூப்பிடுவார்கள். அம்மா, பள்ளிக்கூட வாத்தியார், அப்புறம் கமலாச்சித்தி. கமலா அந்த ஊரிலே பத்துப்படித்த ஒரே பெண்.

ரொம்ப அழகாயிருப்பாங்க. “தங்க..ரா.ஜ் “சொல்லிக்கூப்பிடும்போது அவனுக்கே ரொம்ப இனிமையாயிருக்கும்.

மத்தபடி எல்லாருக்கும் அவன் குசும்பன்தான் . அவன் கூட்டாளிகளையும் சேர்த்து அவனது பட்டாளம் குசும்பன் பட்டாளம் ஆனது. செத்த பாம்பை பாதுகாத்து ஊரடங்கியதும் தண்ணிக் கிணத்துப்படியில் போட்டுவிடுவார்கள். செங்க மங்கலா இருக்கும்போது பொம்பளைகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதை ரசிப்பார்கள். மொளகாச்செடிக்கு பாஞ்சுக்கிட்டிருக்கும் தண்ணியெ தென்ன மரத்துக்கும், பூச்செடிக்கும் திருப்பிவிடுவார்கள். கரட்டாண்டி பிடித்து மூக்குப்பொடி போட்டு ஆடவைத்துப் பார்ப்பார்கள். பூச்சிக்கிழவியைக்கூட இப்படித்தான் படாத பாடு படுத்துவார்கள். கூரைத்தாவாரத்தில் முடங்கிக் கிடப்பவளை சீண்டுவதில் அவர்களுக்கு கொள்ளை ஆனந்தம். கஞ்சிச் சட்டியை எடுத்து ஒளித்து வைப்பது, ஊனுகம்பைப் பிடித்து இழுத்து விட்டு மூச்சு விடாமல் கிழவிக்குப் பின்னால் நிற்பது, வெத்துப்பொடி மட்டையில் தெருப்புழுதி தெள்ளிப்போட்டு ஏமாத்தவும், கிழவி ‘த்தூ த்தூ’ எனத் துப்பிவிட்டு, மூணு தலைமுறைக்கும் சேத்து வைத்துக் கொடமாணம் குடுப்பாள். ‘அந்த மகனே, இந்த மகனே” சொல்லித் திட்டும்போது கெக்கலிட்டுச் சிரிப்பார்கள்.

பள்ளிக்கூடம் இல்லாத லீவுக்காலங்களில் அவர்களுக்குத்தான் வேறென்ன வேலையிருக்கிறது. ஊரைத்தாண்டி கண்மாய்க்கரை. புளியம்பழம் பறிக்கலாம், மரத்திலேறி காக்கா வெரட்டலாம். தக தக வென மின்னிக்கிடக்கும் கண்மாய்த் தண்ணியில் விழுந்து கிடக்கலாம். கரையிலிருந்து ஊர்வரை பசேரென்று விரிந்துகிடக்கும் வயக்காடு. கமலாச்சித்தியின் உச்சி வகிடு மாதிரி வாய்க்கால். அருகம்புல் சுற்றிய தண்டவாளம் மாதிரி வரப்புகளில் விழுந்துவிடாமல் பேலன்ஸ் பண்ணி நடக்கலாம். இவைகள் போதாதென்றால், இருக்கவே இருக்கிறாள் பூச்சிக்கிழவி.

பூச்சிக்கிழவி பழுத்த கிழவி. நீளமான கால்களிலும் கைகளிலும் பச்சை நரம்புகள் புடைத்திருக்கும். உடம்பு முழுவதுமுள்ள சுருக்கங்கள் பாம்பின் செதில்கள் மாதிரி பளப்பளத்திருக்கும். பொடிப்போட்டு காவியேறிய பற்களும் ஈறுகளும் பார்க்க கம்மாப்பாட்டிப் பெருமாள்கோவிலில் வெள்ளையடித்த மாதிரி இருக்கும். தலைமுடி முழுக்க நரைத்து பஞ்சுப்பொதி மாதிரி இருக்கும். மருந்துக்குக்கூட கருத்தமுடி கிடையாது. பிராயத்தில் கிழவி வாட்ட சாட்டமான உயரத்தில் ஆம்பிளை போலிருந்திருக்க வேண்டும்.

சில நேரம் தங்கராசுக்கு பிடிபடாமல் இருக்கும். கிழவி எப்படி சந்துக்குள்ளிருக்கிற வீட்டுக்குள்ளிருந்து விடுவிடுவெனத் தெருவுக்கு வந்து கண்ணிருக்கிறவங்கள விடத் தெளிவா நடந்து போறதும் மாரியப்ப நாடார் கடையில் பொடிமட்டை வாங்கி மீதிச் சில்லறையை கரெக்டாத் தடவித் தடவி வாங்குறதும் எப்படி என்று அடைபடவில்லை. பழக்கப்பட்ட ஆளு வந்தா டக்குனு பேரைச் சொல்லுவது பள்ளிக்கூடத்தில் மேஜிக் பாத்த மாதிரி இருக்கும். தங்கராசும் சில நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு நடக்க எத்தனிப்பான். பத்து எட்டு வைக்குமுன் தோற்றுப்போவான். கிழவிக்கு இந்த ஊரோடு எண்பது வருச அனுபவம் என்பதை தங்கராசு அறிந்திருக்க நியாமில்லை.

ஊரிலிருந்து பத்து மைல் தொலைவுக்கு எந்த பிஞ்சை யாருடையது என்ற விபரங்கள் அவளூக்கு அத்துபடி. யாரு தோட்டத்துக்கு வரப்பெது, மால் எது எனும் விபரக்கணக்குகளில் வீ ஏ ஓ கூடத் த்துப்போவான். விதைபோடக் களையெடுக்க, அறுக்கப்போக குமரிகளும் தொடமுடியாத வேகத்தில் லொங்கு லொங்கு என்று அலைந்தவள். ஆண்களோடு போட்டி போட்டு கல்லுடைப்பாள், குழியடிப்பாள். சில நேரம் பீடி கூடக் குடிப்பாள். ஊரில் நடக்கிற எல்லா நல்லது கெட்டதிலும் அவள் தலையில்லாமல் இருக்காது. சிங்கம்மாக்கிழவி செத்தப்ப மகன் மெட்ராசிலிருந்து வர ரெண்டு நாளானது. நாத்தமெடுத்த பொணத்துப் பக்கத்தில் யாரும் போகவில்லை கிழவிதான் முகஞ்சுளிக்காமல் காரியமெல்லாம் பண்ணினாள். இந்த ரெண்டு வருசமாத்தான் கண்ணு மங்கிப்போய். கூரையே கதியென்று கிடக்கிறாள். அப்பப்போ செவனிக்கிழயிடம் போய்ச் சூரங்குடியைப்பத்தி விசாரித்துக் கொள்வாள்.

“ஏ... செவனி உப்புமூலப்பிஞ்சையில என்ன வெள்ளாமடீ”

“என்னமோ நித்திகல்யாணியாம், ஆமா அதக்கேட்டு என்ன செய்யபோறே”

“ஏக்கி இதென்ன கருமம், அது வெசமில்ல, பூமி என்னத்துக்காகும்”

முடங்கிக்கிடக்கிற தாவாரத்தைத்தவிர ஒரு பொட்டு நிலம் கிடையாது அவளுக்கு.

''அத யாருக்கி பாக்கா துட்டு கணம்மா கெடைக்கில்ல”

“ஆமடி பொங்கலு எப்ப''

“என்ன நீயி போயித்தாங் கெரகாட்டங் கெட்டப்போறயாக்கும், அது கெடக்கு ரெண்டு மாசம்”

“ஏடீ அந்த மொட்டயம் மருமகா சீதேவி கெனக்கா இருக்காளாமில்ல “

“அதயேங் கேக்க இந்தக்கூலுப்பான வகுறனுக்கு வாக்கப்பட்டு....ம்ம்..”

இப்படியே பேச்சு நீண்டுகொண்டே போய் கடைசியில் “என்னக்கி பொழப்பு கஞ்சிக்குந்தண்ணிக்கும் தடவி தடவி,... இந்தப்பாழாப்போன கடவுளுக்கு நம்மளக் கூப்பிடத் தேரமில்ல” தொண்டை கரகரக்கிற குரலில் சொல்லும்போது அவளது பூழைசாடிய கண்களில் நீர் கோர்க்கும். தங்கராசு கூட கிழவியின் இந்த அழுகிற அவதாரத்தைப் பார்த்திருக்கிறான். அதெல்லாம் அவனுக்கு சினாய்க்கவில்லை, மனசுக்குள் நிக்கவுமில்லை.

ஆனால் இன்றைக்கென்னவோ பூச்சிகிழவியின் குரல் “நீயுமாடா” என்று திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே இருக்கிறது. களத்தில் வைக்கோல் படப்பில் ஏறி விளையாண்டு அரிப்பெடுத்தது. அம்மாவின் வசவோடு அரைப்பானைத் தண்ணியில் குளித்து, கலியுங் கருவாடும் தின்னு கைகழுவ முந்தியே தூக்கம் சொருகிக்கொண்டு வந்தது. பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கிடந்தபோது பூச்சிக்கிழவியின் குரல் திரும்ப வந்து தொந்தரவு பண்ணியது.

சூரங்குடி ஏழு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிப்போகும். வெயிலில் குளித்த உடல்கள் வாசல் பக்கம் தலை வைத்து தெருவில் கால்நீட்டும். சிம்னி விளக்குகள் ஆளில்லா வீடுகளுக்குள் அரைத்தூக்கத்தில் விடிய விடிய முழித்திருக்கும். காட்டு வேலைக்குப் போகாத வீடுகளில் தூக்கம் பிடிக்க நேரம் பிடிக்கும். எப்போதும் போல பாட்டிமார்கள் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள். கதை கேட்பதில் தங்கராசுக்கு அவ்வªவு ஆனந்தம். தரைச்சூடு ஏறாமலிருக்க சாக்கு விரிப்பின் மேலே பழைய சேலை மடித்து விரிக்கப்பட்டிருக்கும். பாட்டியின் வேர்வை வாசத்தோடும் வெற்றிலை வாசத்தோடும் கதை தொடங்கும் போது தங்கராசின் கனவுகள் விரியும். நம்பமுடியாத அளவுக்கு குள்ள உருவங்கொண்ட சுண்டெலியண்ணன் ஒரு சாம்ராஜ்யத்தையே மடக்குவான். அண்டரெண்டாப்பட்சியின் முதுகில் ஏறி, ஏழு மலை, ஏழுகடல் தாண்டி ராஜகுமாரன் ஒரு ராட்சசனைக் கொல்வான்.

தங்கராசு ராஜகுமாரனாவான். ராமாயணத்தில் சீதையின் அழகைப் பற்றிச்சொல்லும்போது கமலாச்சித்தி ஞாபகம் வரும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாகி கிணற்றில் விழுந்து அலறுவான். பாட்டிக்கு எட்டிய மகாபாரதம் கேட்பான். இன்றும் கூட மகாபாரதம் வேண்டிக் கேட்டான். “ஏம்ல அந்தப் பூச்சிகெழவியப் போயி தெனந் தெனம் தொயரம் பண்ணுதிகளாக்கும்” கேட்டாள். தங்கராசு பேசாமலிருந்தான்.

“ஏ பாவண்டா நாளக்கி எனக்கும் கண்ணுபோச்சின்னா”

“...............''

“ஆமாடா அவ யாருன்னு நெனச்சீக .... இன்னைக்கி அவ கூனிதா, குருடிதான் அவ கத தெரியுமா. அவ லேசுப்பட்ட கெழவியில்ல அவாட்ட ஆம்பள தோத்துப்போவான்... பெராயத்துல செகப்பா ஓங்குதாங்கா இருப்பா தெரியுமா...? இந்தூர்ல ஆறு கொல நடக்க அவதாங்காரணம்.

ஊர் மடத்துக்கிட்ட ஒரு கட்டச்சொவரு நிக்கில்ல .. அந்த வீட்ல ஆறண்ணந்தம்பிக இருந்தாங்க. இடுமந்தடியங்கெணக்கா, பொல்லாத போக்கிரிக, ஊரையே ஆட்டிப்படைச்சாங்க. ஒண்ணா ரெண்டா எத்தனை அநியாயம். ஆத்தா அந்த மாரிக்கே பொறுக்காது அம்புட்டு அட்டூழியம். ஆடு கோழி கண்ணுல பட்டாக்க ரோமமும் தோலுந்தான் மிஞ்சும். சம்சாரிக வெள்ளாம எடுத்து வீடு சேக்க முடியாது. ராவோட ராவா அழிமாண்டஞ் செஞ்சிருவாங்க. பஞ்சாயத்தக் கூட்டுனா வெட்டுக்குத்து வந்துருமின்னு நயந்த வார்த்த சொல்லியே காலங்கழிஞ்சது. வீடு நொழஞ்சி அநியாயம் பண்ணுவாங்க. ஓண்ட சொல்லக்கூடாது, ஆளான பொட்டச்சிக கொலையக் கையில பிடிச்சிக்கிட்டுத்தா அலைவாளுக கண்ணுல பட்டாத் தொலஞ்சது.

ஊர்ல பூச்சிக்கெழவி குடும்பம் ரொம்ப நாயமான குடும்பம். தாட்டிகமான குடும்பமுந்தான். வேத்து சாதிக்காரங்க வெளியூர்க்காரங்க அவங்க வீட்ல தான் நாயங்கேப்பாங்க. பூச்சிக்கு ரெண்டண்ணந்தம்பி அவுகளுக்கு ரெம்பச் செல்லம்.

வென வந்து சேந்தது அம்மாப்பட்டிக்காரப் பொம்பளையக் கையப்பிடிச்சி இழுத்ததாலத்தான். காட்டுக்கு பருத்தியெடுக்க வந்த நாய்க்கரம்மாவ வெரட்டியிருக்காங்க பாவிப்பயலுக. அந்த வழியா வந்த பூச்சியோட அண்ணன் தூங்கனோட கால்ல அந்தம்மா உழுந்துருக்கு. தவிச்ச வாயிக்கு தண்ணி தரவே போனியத் தூக்கி கையில ஊத்துற, மேச்சாதிப்பொம்பள கால்ல கெடந்தத தாங்க முடியாம வெரட்டுனவங்களோட மல்லுக்கு நின்னுருக்கான். ஆறுபேருல்ல கைகலப்பு வந்துருச்சி. தூங்கனுக்கு கம்புசுத்த தெரியும், அந்த வித்தைய வச்சு தாக்கட்டிருக்கான்... ஒரு பாவி வயித்துல வேல் கம்பச் சொருகிட்டான். குத்துப்பட்ட எடத்த தலத்துண்டவச்சி கட்டிக்கிட்டு தப்பியோடி வீட்டுக்கு வந்துட்டான். வந்து விழுந்து கண்ணு நெலகுத்திப்போச்சு. ஊரே கூடி குய்யோமுறையோன்னு வண்டிகட்டி டவுன் பெரியாஸ்பத்திரிக்கு, தூக்கிப்போனாங்க. பெரிய டாக்டர் ஆறுமணி நேரங்கழிச்சுத்தான் உறுதி சொல்ல முடியுமின்னுட்டாரு

எங்கொலையே, எம்பெறப்பேன்னு நெஞ்சிலடிச்சிக்கிட்டு கெடந்த பூச்சிக்கு அந்த ஆங்காரம் எப்பிடி வந்ததோப்பா. அந்தானக்கி எந்திரிச்சி ஊருக்கு ஓடியே போனா... பரணுமேல கெடந்த அருவா வேல் கம்பும் எடுத்துக்கிட்டு தெருவுக்கு வந்தாளா, வந்து சத்தங்குடுத்தா. ஊர்தெரண்டிருச்சி. ஆனும்பொண்ணும் கம்புங்கத்தியமா நெலையழிஞ்சி நின்னாங்க. சமாதானஞ் சொன்னவகளத் தள்ளி விட்டுட்டு அருளு வந்தவ கணக்கா உடம்பக் குலுக்கி தாறுமாறாக் கத்தினா. சேலைய உருவி சமாதானம் பண்ணவங்க முஞ்சியில எரிஞ்சா. ஊரே அடங்கிப்போச்சி பிறகு அவா பின்னால படைதெரண்டு போனாங்க. வீம சேனங்க மாதிரி இருந்த ஆறுபேரும் அலறிப்பிடிச்சி உசிரக் காப்பாத்த ஓடுனாங்க. மின்னக்கூடியே எலந்தாரிக ஊரைச்சுத்தி நிக்க ஆறு பேரு கதையும் முடிஞ்சி போச்சி.

அதுவரை உம் கொட்டாமல் பிரமிப்போடும் பயத்தோடு கதை கேட்ட தங்கராசு மெல்ல “அப்புறம்” என்றான்.

“பெறகென்ன... வழக்கம்போல போலீசு வந்து ஊரோட பிடிச்சிட்டுப்போயி, அந்தமான்லயும் பளையங்கோடையிலயும் அடைச்சது. நாலஞ்சி வருசங்கழிச்சி சொதந்திரத்துக்காக ரெம்பபேர விடுதலை செஞ்சது. பூச்சியோட புருசன் போலீசோட போனவன் போனவந்தான் திரும்பல. இப்ப இருக்கிற கருப்பசாமிக் கெழவனும் அப்ப பொண்டாட்டியப் பறிகுடுத்து நின்னிருந்தான். ரெண்டுபேருஞ் சேந்துக்கிட்டாங்க. பின்ன என்ன நாலு பிள்ளப்பெத்து கல்லொடைச்சி, களையெடுத்து வகுத்தக்கழுவி இந்தா, இப்ப மகராசிக்கு எம்பது வயசாச்சி. மொடங்கிப் போயிட்டா”.

சுண்டெலியண்ணன், ராமர், வீமன் அர்ச்சுனன் எல்லோரும் தங்கராசின் நினைவிலிருந்து மங்கிப் போனார்கள். அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்த்து பூச்சிக்கிழவியை நினைத்துக் கொண்டான். பயமில்லாமல் எழுந்து ஒத்தையிலே போய் ஒன்னுக்கிருந்தான். திரும்ப வந்து பூச்சிக்கிழவியின் நினைவோடு துங்கிப்போனான்.

சுள்ளென்று முகத்திலறைந்த வெயில் தங்கராசின் தூக்கம் கலைத்தது. தெருவில் கதைகேட்டவன் திண்ணையில் படுத்திருந்தான். அம்மா படுக்க வைத்திருக்க வேண்டும். சோமு வாத்தியார் வீடு தாண்டி நடந்தான். ஊர், மம்பட்டி செதுக்கிகளோடு வழக்கம்ப்போல இயங்கிக் கொண்டிருந்தது. அம்மா கஞ்சு கரைத்து விட்டு அவனைத் தேடியபோது தங்கராசு பூச்சிக்கிழவியின் அருகில் நின்றிருந்தான்.

கிழவி அரவம் கேட்டு எழுந்தாள்.

“ஆரது”

“நாந்தாம் பாட்டி”

“யாரு அஞ்சன் பேரனா”

“ஆமா”

பூச்சிகிழவிக்கு இவ்வளவு பக்கத்தில் அவன் ஒரு நாளும் நின்றதில்லை. அவளுக்குப் பக்கத்தில் சலனமற்றுக்கிடந்த ஊனு கம்பைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

- எஸ்.காமராஜ்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com