அக்கக்காக் குஞ்சு !
எம்.ரிஷான் ஷெரீப்
இன்னும் தன் கண்திறவாக் குருவிக்குஞ்சினைக் குளிப்பாட்டித் துடைத்துத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் யாரையாவது எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.சச்சுவுக்கு அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அந்த வயதுச் சிறுமிகளுக்கேயுரித்தான அத்தனை குறும்புகளும், சேட்டைகளும் அவளுக்கும் வாய்த்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. எனினும் சில பொழுதுகளில் அவள் செய்யும் செயல்களை எண்ணும்போது இப்படியும் யாராவது உலகிலிருப்பார்களா எனவும் எண்ணத் தோன்றும்.
சச்சு எனது பக்கத்து வீட்டிலிருந்தாள். அவளது அப்பாவுக்குச் சொந்தமான ஒரு செங்கல் சூளை ஊரில் இருந்தது. அக்காக்களிருவரும் பக்கத்து,பக்கத்து ஊர்களில் வாழ்க்கைப்பட்டுப் போய்விட அப்பாவுடன் அம்மாவும் சூளை வேலைக்குச் செல்லும் நாட்களில் சச்சுவுக்கு என் வீடும், முற்றமும்தான் விளையாடுகளமானது.
அன்றைய நாட்களில் எனது வீட்டுமுற்றத்தில் அடர்த்தியாகிக் குட்டையானவொரு எலுமிச்சை மரம் இருந்தது. ஒரு முறை அதன் நெருங்கிய கிளைகளுக்கிடையில் ஒரு குருவிக்கூடு இருப்பதைப் பார்த்துவிட்டவள் முட்கள் குத்தக் குத்தக் கூட்டினை எடுத்து விட்டாள். உள்ளே சாம்பல் நிறம் படர்ந்த ஒரு குஞ்சு, எந்தப் பாசாங்குமற்ற விழிகளை மூடியவாறும் இளஞ்சூட்டோடும் சிறு நுரையீரல் நிரப்பிய காற்று வயிறை உப்ப வைத்துக் கீழிறக்கத் துயிலிலிருந்தது.
தனக்குத் துணைக்கு விளையாட ஒரு உயிர், தான் பெயர் வைத்து ரசிக்க ஒரு ஜீவன்... இன்னும் என்னென்ன நினைத்தாளோ, அப்படியே என் வீட்டுத் திண்ணை நிழலுக்கு எடுத்துவந்தவள் என்னை அழைத்ததன் பெயர் கேட்டாள்.ஓர் நாள்க் குஞ்சின் உருவம் பார்த்துப் பெயர் சொல்லுமளவிற்கு பறவை சாஸ்திரமெதுவும் அறிந்தவனல்ல நான்.மௌனமாய் அவள் முன் உதடு பிதுக்க 'இது அக்கக்காக் குஞ்சாக்கும்' என அவளே சொன்னாள். நள்ளிரவில் மட்டும் கீச்சிடும் குருவியதுவெனவும் அது பற்றி அம்மா நிறைய கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறாவெனவும் குருவிக் குஞ்சினைத் தடவிக் கொடுத்தவாறே சொன்னாள்.
பிறகு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் திரும்பக் கூட்டில் வைக்கமறுத்துவிட்டாள். ஒரு குஞ்சின் பிடியில் இன்னொரு குஞ்சு. எதுவும் செய்ய இயலாதவனாக எனது உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்களில் ஆழ்ந்துவிட்டேன். மாலையில் பார்த்தபோது சச்சு விழிகள் சிவக்க விசும்பிக்கொண்டிருந்தாள். என்னவென்று கேட்க, அவள் காட்டிய மாமர நிழலில் ஒரு சிறு மண்மேடு. அதன் மேல் நடப்பட்டவாறு செஞ்செவ்வரத்தம் பூவோடு கிளையொன்று.என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.
தான் தவறாக ஏதும் செய்யவில்லையெனவும் அதனைக் குளிப்பாட்டித் துடைத்துப் பின் சோறு ஒரு பருக்கை ஊட்டித் தூங்கவைத்ததாகவும் பிறகு பார்த்தால் செத்திருந்ததாகவும் மூக்கிழுத்து விசும்பியவாறு சொன்னாள். அளவிட முடியாக் கோபம் என்னை ஆட்கொள்ள அவளது காதைத் திருகி உச்சந்தலையில் குட்டி விட்டேன்.மதியம் நான் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
பின்வந்த ஒரு வாரத்துக்கு எனை நோக்கும் கணங்களில் அவள் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. கோபம் நிறைந்து அப்பாரம் உடலை அழுத்துவது போலவே வளைய வந்தாள். எல்லாம் என் வீட்டு முகட்டிலிருந்து அணில்குஞ்சொன்று விழும் வரைக்கும்தான். அப்பொழுதிருந்த என் பழைய வீட்டில் சீலிங் வசதி எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. நாட்டு ஓடுகளால் மூடப்பட்ட வீட்டின் முகடுகளில் அணில்கள் வெகு சுதந்திரமாய் ஓடித்திரியும். முகட்டுக்கு நேராகத் தரையில் தும்புச் சிதறல்கள், வைக்கோல் துண்டுகள் சிதறிக்காணப்படின் தாய் அணில் பிரசவத்திற்காகக் காத்திருப்பதையும் அதற்கான கூட்டின் ஆயத்தங்களில் இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு காலைப் பொழுதொன்றில் காதைச் சில்லிட வைக்கும் 'கீச் கீச்' சத்தம் வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீட்டின் எந்த மூலையிலிருந்து சத்தம் வருகிறதென ஒவ்வொரு கீச்சிடலையும் தொடர்ந்து வீடு முழுக்கத் தேடிப் பார்க்க சாப்பாட்டு மேசை மேல் சிறு உயிர் துடிப்பது தெரிந்தது. எலிக்குஞ்சுக்குச் சமமான தோற்றமெனினும் தலை சற்றுப் பெரியது. கண்கள் முடிக்கிடக்க இளஞ்சூடாக இருந்தது. இடைவெளி விட்டு விட்டுக் கீச்சிட்டது. ஒரு மேசைக்கரண்டியில் பாலெடுத்து சிறு துணியை அதில் நனைத்து அதன் வாயில் வைத்து அது சப்பத் தொடங்கிய வேளை சச்சு வந்தாள். அவளுக்குத் தரச்சொல்லி அத்தனை கெஞ்சியும் கையில் கொடுக்க மறுத்தேன். என்ன நினைத்தாளோ...? அவசரமாய் அவ்விடத்தை விட்டும் ஓடிப் போனாள்.
பிற்பாடு ஏணி வைத்துச் சுவரில் ஏறி உச்சி முகட்டில் குஞ்சினை வைத்துவிட்டேன். அடுத்த கணமே தாய் அணிலின் வருகையைப் பார்க்கமுடிந்தது. ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் வந்ததைப்போலவொரு மிகப் பெரும் களிப்பை அதுவும் உணர்ந்திருக்க வேண்டும். சத்தமாய்ச் சத்தமிட்டது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டுக்குப்போய் அவளுக்காகப் பேச மூன்றாம் பிரசவத்துக்காக வந்திருந்த அவளது மூத்த அக்காவை அழைத்து வந்திருந்தாள் சச்சு. அவளது அக்கா அவ்வளவாகப் பேசமாட்டார். அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் எப்பொழுதும் அவர் முகத்தில் இழையோடும். முதல் இரண்டு பெண்குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையைப் பெற்று வரவேண்டுமென்ற வலியுறுத்தலோடு மாமியாராலும், கணவனாலும் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
உயர்தரப் பரீட்சை எழுதிமுடித்த கையோடு நானும் அப்பாவும் அம்மாவும் அப்பாவின் வேலை இடம் மாற்றத்தாலும், எனது கணணிப் படிப்பைக் கருத்தில் கொண்டும் தலைநகர் வந்துவிட்டோம்.அதன் பிறகு ஊரோடு கடந்த பதினொரு வருடங்களாக எமக்கெந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
மூடிக்கிடக்கும் பழையவீட்டை விற்றுவிடலாமெனச் சமீபத்தில் நாங்கள் தீர்மானித்து ஊர் நோக்கி வரும்போது வாகனத்துக்குள் பழைய ஊர்க்கதைகளோடு சச்சு பற்றியும் பேசிக்கொண்டோம். பாழடைந்த வீட்டுக்குரிய அத்தனை குணாதிசயங்களோடும் நிறைந்திருந்த எமது வீட்டைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவேளை அம்மாவுடன் சச்சுவும் நின்றிருந்தாள். மூத்த அக்கா மூன்றாவதாகவும் பெண்குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோனதைத் தொடர்ந்து சில மாதங்களில் அப்பாவும் இறந்து போக, மூன்று குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆண் வாரிசுக்காக வேண்டியும் சச்சு, அக்கா கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். மேடுற்ற வயிரோடு, ஒரு அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருந்தது.
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|