Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureShort Story
கரையைத் தேடி..
ராமலக்ஷ்மி, பெங்களூர்

முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான்.

Man "டேய் தண்டச்சோறு. என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வையேன். சும்மாதானே கிடக்கே" என்று விரட்டுகிற அண்ணன்.

"வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்" என்று சம்பாதிக்கும் திமிரில் தேளாகக் கொட்டுகிற தம்பி.

"உன்னை வளர்த்துப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன், அத்தனையும் வேஸ்ட். சே! நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்?" என்று கணக்குப் போடுகிற அப்பா.

அவனோடு பேசுவதையே குறைத்து விட்ட நோயாளி அம்மா.

"வேலை வெட்டி இல்லாதவன்" என்று அலட்சியப் பார்வை பார்க்கும் சமுதாயம்.

எல்லோருக்கும் மேலாக உமா. அவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.

இருவரும் கல்லூரி விழா ஒன்றில் சந்தித்து, பிறகு நல்ல நண்பர்கள் ஆனார்கள். இவன் அந்த நட்பைக் காதலாக்கிப் பார்த்த போதும், அவள் அதை நட்பாகவே பாவிக்கத்தான் விரும்பினாள்.. ஆனால் இவனது தீவிரத்தைப் பார்த்து மனம் இளகி தந்தை முன் கொண்டு நிறுத்தினாள். அந்த நல்ல மனிதரோ ஒரு வேலையோடு வந்தால் உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லையெனில் தான் பார்க்கும் வரனையே மணந்து கொள்வாள் என்று வாக்களித்து ஒரு வருட அவகாசமும் கொடுத்திருந்தார்.

வருடங்கள் இரண்டே ஓடிட இப்போது வேறு வரன் பார்த்து விட்டார். இவன் வேலைக்கு முயற்சி செய்யாமலா இருந்தான்? எத்தனை இன்டர்வ்யூக்கள்? எத்தனை தோல்விகள்? ஏற்கனவே அவமானத்தைச் சுமந்தபடி ஊசலாடிக் கொண்டிருந்த மனது இப்போது அடியோடு அறுந்து விட்டதாக உணர்ந்தான்.

'வேலை ஒன்று இல்லாததால் வீட்டுக்கு வேண்டாதவனாக இருந்தேன். இப்போது விரும்பியவளுக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையும் கிடைக்காமல் உமாவும் கிடைக்காமல் எதற்காக யாருக்காக நான் வாழ வேண்டும்?' என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டான். அம்மாவுக்கு டாக்டர் தந்திருந்த தூக்க மாத்திரைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டான். அலமாரி மேலிருந்த டப்பாவில், அம்மா வைத்திருந்த நோட்டுத்தாள் சில்லறைகளை அப்படியே பையில் திணித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

பஸ்ஸுக்காகக் காத்திருந்த போது "என்ன சார், எங்கே கிளம்பிட்டீங்க?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு 'சார்' என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஜீவன் காயத்ரியாகத்தான் இருக்க முடியும். பக்கத்து வீட்டுப் பெண். ஹைகிரவுண்டில் ஆஸ்பத்திரியில் நர்ஸாக இருக்கிறாள்.

"சும்மாதான், இப்படி ஜங்ஷன் வரை போகலாம்னு.."

"அதென்ன 'சும்மாதான்'? நம்ம ஜனங்கதான் சார், இப்படி எதற்கெடுத்தாலும் சொல்லப் படிச்சிருக்காங்க ஒரு வார்த்தை 'சும்மா'ன்னு" என்று சிரித்தவளின் முகம், பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்து கொண்டிருந்த சுமதியைப் பார்த்ததும் பிரகாசமானது.

"ஹாய் சுமதி! எப்ப வந்தே? நேற்று கூட உங்க வீடு பூட்டியிருந்ததே?"

"இன்னிக்கு காலையில்தான் வந்தோம்."

"ட்ரிப் எப்படி? மாமா ஊரிலே ஒரு வாரமும் குஷாலாய் கழிஞ்சுதுன்னு சொல்லு!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே"

அவள் குரலில் இருந்த உற்சாகக் குறைவைக் கவனிக்கத் தவறவில்லை காயத்ரி.

"ஏன் என்ன விஷயம்?"

"அதையேன் கேட்கிறே? ஊருக்குப் போன அடுத்த நாள் எங்க மாமா வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான். ‘நீ வேற விதமாய் போயிருந்தா கூட விதின்னு மனசு ஏத்திருக்கும். ஆனா நாங்கெல்லாம் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டியே? எப்படிப்பா மனசு வந்தது'ன்னு அவன் குடும்பம் கதறின கதறல் இருக்கே, அப்பப்பா! சரியாப் படிக்கலேன்னு அப்பா ஓவரா திட்டிட்டாரு போலிருக்கு. குற்ற உணர்விலே அவர் ரொம்பவே உடைஞ்சு போயிட்டார். அந்தப் பையனுக்கு பதினெட்டே வயசுதான் பாவம்!"

"எதற்குத் திட்டுகிறார்? அப்படியாவது பையனுக்கு ரோஷம் வந்து நல்லாப் படிக்க மாட்டானாங்கிற ஆசையில திட்டியிருப்பார். சரி ஓவர்தான் என்றாலும் எந்த அப்பாவும் தன் பையன் ஒழிஞ்சு போகட்டும்னு மனசார நினைக்கவே மாட்டார். போறவன் போயிட்டான். இருக்கிறவங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் பார்த்தியா? அவன் மேல பாவப்படுறியே?"

அருகில் நின்றிருந்த முரளிக்கு சுரீரென்றது.

சுமதியோ வியப்புடன் கேட்டாள்: "என்ன மனசுடி உனக்கு? அவன் முடிவு உன்னைப் பாதிக்கவேயில்லையா?"

காயத்திரியின் குரலில் உஷ்ணமேறியது. "பாதிக்கிறதனாலேதான் சொல்றேன், அவன் மேலே பாவமாயில்லேன்னு. பரிதாபப்படுறேன் அவன் குடும்பத்த நினைச்சு. வருத்தப்படுறேன் அவன் முட்டாள்தனத்தையும் கோழைத்தனத்தையும் நினைச்சு. ஆனா என்னால அவன் மேல் ஏனோ இரக்கப் பட முடியல. வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப்படத்தான் தோணுது. ரிசல்ட் சமயத்திலே எத்தனை ஸ்டூடன்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிறாங்க பாரு! எதிர்காலத்தை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாத இவங்க கையில்தான் எதிர்காலம் இருக்குன்னு நாம நம்பிட்டிருக்கோம்."

"ஈஸி காயத்ரி. ரொம்ப உணர்ச்சி வசப்படுறியே?"

"இல்லப்பா! ரொம்ப நாளாகவே எம் மனசை அரிச்சிட்டிருக்கும் விஷயம் இது. 'காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை! இளம்பெண் தற்கொலை'ன்னு எத்தனை ந்யூஸ் படிக்கிறே? இவங்கெல்லாம் காதலும், கலியாணமும் மட்டுமேதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அது வாழ்க்கையிலே ஒரு அம்சம்தான். இட்ஸ் ஒன்லி எ பார்ட் ஆஃப் அவர் லைஃப். விரும்பினவங்களை அடையறது ஒண்ணுதான் வாழ்க்கையோட லட்சியம்னு தப்புக் கணக்குப் போட்டு வாழறாங்களே! வாழ்க்கையிலே இதையெல்லாம் தாண்டி உயர்ந்த லட்சியங்கள் எவ்வளவு இருக்கு? நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற என்னவெல்லாம் சாதிக்கணும்னு ஆக்க பூர்வமா சிந்திக்க மறந்திட்டு இந்த இளைய சமுதாயம் 'காதல் காதல்'னும் 'காதல் இல்லையேல் சாதல்'னும் இருப்பதைப் பார்த்தால் மனசு பதறது. 'சாதல்'னா 'சாகிறது'ன்னு நினைச்சுட்டாங்க!"

அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் கன்னத்தில் விழுந்த அறைகளாக உணர்ந்தான் முரளி. காயத்திரியோ யாரையும் சட்டை பண்ணாமல் சீரியஸாகப் பேச்சைத் தொடந்தாள்.

"போன வாரம் கூட எங்க ஹாஸ்பிடல்லே போஸ்மார்ட்டத்துக்கு ஒரு கேஸ் வந்ததுப்பா. பி.காம் படிச்சவனாம். வேலை தேடித் தேடி அலுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானாம். இப்படி வெள்ளைத் துணியப் போட்டு மூடற நிலைக்குப் போனாலும் பரவாயில்லை. வெள்ளைச் சட்டை வேலை....அதாம்பா வொயிட் காலர் ஜாப் கிடைச்சாதான் பார்க்கணும்ங்கிற போலி கவுரவத்திலே ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டான்."

"அவன் ஒரு விரக்தியில அப்படி பண்ணியிருக்கலாமில்லே?"

"அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு இப்போ ஆட்டோ ஓட்டலையா? தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"

"இந்த மாதிரி கோணங்களிலே எல்லாம் நான் யோசிக்கவேயில்லை காயத்ரி" என்றாள் சுமதி வியப்பு தொனிக்கும் குரலில்.

'நானும்தான்' என்று நினைத்துக் கொண்டான் முரளி. அவனுக்குள் ஒரு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

"சரி இத்தனை சொல்றியே! வரதட்சணை கொடுமையால தற்கொலை பண்ணிக்கிறவங்க பாவம்தானே?" சுமதியிடமிருந்து அடுத்த கேள்வி புறப்பட்டது.

"ம்ம்ம். இல்லப்பா சூழ்நிலைக் கைதிகளாயிட்டாலும் கூட அவங்களும் முட்டாள்கள் கோழைகள்னுதான் சொல்லத் தோணுது. உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? சொந்தக் காலிலே வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் எப்பவும் இருக்கணும். பொண்ணப் பெத்தவங்க சீர் செனத்திய விட பொண்ணுகளுக்கு முக்கியமா இந்தத் தைரியத்தைதான் தந்து அனுப்பணும். ஆம்பள பசங்களுக்கு குறைவில்லாம அவங்களையும் படிக்க வைக்கணும். ஒரு பொண்ணு கோழையா பயந்து சாகிறத விட வாழ்ந்து அவளுக்கு அநியாயம் பண்றவங்கள இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாமில்லையா?"

அதுவரை பேசாமலிருந்த முரளி "உங்களை ஒண்ணு கேட்கலாமா காயத்ரி" என்றான். 'தாராளமாக' என்பது போலப் பார்த்தாள் காயத்ரி.

"தற்கொலை பண்ணிக்கிறதை முட்டாள்தனம்னு சொல்றீங்க. சரி. ஆனா கோழைத்தனம்னு எப்படிச் சொல்ல முடியும்? சாகிறதுக்கு ஒரு அசாத்திய தைரியம், துணிச்சல் இருக்கணுமில்லையா?"

காயத்ரியின் முகம் சிவந்தது.

"பிரச்சனைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா? தற்கொலை ஒரு ஈஸி எஸ்கேப்பிஸம். பிரச்சனைகளுக்குத் தீர்வு தற்கொலைதான்னா எல்லோருமே சாக வேண்டியதுதான்! யாருக்குதான் பிரச்சனையில்லை?"

"ஒத்துக்கறேன். பிரச்சனை ஒரு பொதுச் சொத்துதான். ஆனா அவங்க துவண்டு போறது ஓட ஓட விரட்டும் தாங்க முடியாத தோல்விகளாலே..."

"முரளி சார், தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு..."

"இருங்க இருங்க. முதல் சில தோல்விகளிலே வேணுமானா அப்படி நினைக்கலாம் நம்பலாம். ஆனா வெற்றிப் படியே கண்ணுக்குத் தெரியாம அடுக்கடுக்கா தோல்விகளே தொடரும் போது...?"

"வெற்றி கிடைக்குமோ என்னமோ? அதனாலே இப்பவே செத்திடலாம்னு முடிவு பண்ணிடணுமா? முயற்சி வேணுங்க. நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது...அத்தனை கஷ்டப்பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? எதுங்க விவேகம்?"

பொட்டில் அறைந்தது போலப் புறப்பட்ட அவளது கேள்வியிலே பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்டான் முரளி. மனதில் இருந்த அத்தனை பாரங்களையும் காயத்ரி என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"நான் சொல்றதெல்லாம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?"

'இல்லை'யென்பது போலத் தலையாட்டியவன் என்ன பதில் சொல்வதென யோசிக்கையிலேயே அவனுக்குச் சிரமம் வைக்காமல் பஸ் வந்து நின்றது. ஏறுவதற்கு எல்லோரும் எத்தனிக்கையில், இவன் மட்டும் அம்மா பார்க்கும் முன் பணத்தைத் திரும்ப வைக்க வேண்டுமேயென்ற அவசரத்துடன் திரும்பி நடக்கலானான்.

"ஜங்ஷன் போகணும்னீங்களே? இப்ப எங்க போறீங்க..?" அவசரத்துடன் கூவினாள் காயத்ரி.

"கரையைத் தேடி..." என்றபடி இவன் கை அசைக்க, அவன் சொன்னது புரியாத முக பாவத்துடனே காயத்ரி பஸ்ஸில் ஏறிக் கொள்ள, அது வேகமாக நகர்ந்தது..

*** *** ***

[மார்ச் 1988 "நண்பர் வட்டம்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை.]

- ராமலக்ஷ்மி(ramalakshmi_rajan@yahoo.co.in)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP