Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
புறங்களின் அகங்கள்
க.ராஜம்ரஞ்சனி

ரத்னா

கீதா ரொம்ப நல்ல பொண்ணு. இவ என்னோட ஃப்ரண்டா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு அடிக்கடி ஹெல்ப் பண்றா. டென்ஷனா இருந்தாகூட பக்கத்துல வந்து மனசுக்கு சந்தோசமா பேசிட்டு போறா. வேலையிடத்துல போட்டி, பொறாமைனு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டுருக்கேன். ஆனா கடவுள் எனக்கு வேலை இடத்துல நல்ல கூட்டாளிய குடுத்ததுக்கு நன்றி சொல்லனும். போன வாரம் கூட உடம்பு சரியில்லாம வீட்டுல இருந்தப்ப ஒவ்வொரு நாளும் போன் பண்ணி விசாரிச்சாளே, ரொம்ப பாசமானவ. எனக்கு சம்பளம் ஏறனப்ப எவ்ளோ சந்தோஷப்பட்டா. கள்ளம் கபடம் இல்லாத மனசு அவளுக்கு. அன்னைக்கு முக்கியமான பைல் நான் எங்கயோ தொலைச்சி ராத்திரி வரைக்கும் தேடனப்ப என் கூடவே இருந்து தேடினாளே, அந்த நேரத்துல அவ என்கூட இருந்தது எவ்வளவு தைரியமா இருந்துச்சி. இந்த மாதிரி ஆள பாக்கறதே இப்பல்லாம் கஷ்டம். மீனாதான் எப்போதும் அமைதியாவே இருக்கா. முகங்கொடுத்து பேசமாட்டறா. எதும் கேட்டாதான் பதில் சொல்றா. பெரும்பாலும் யெஸ் நோ அப்படினு சுருக்கமா முடிச்சுக்குவா. ஒருவேள அவ குணம் அப்படிபோல. ஏதோ எந்தவொரு வம்பும் பிரச்சனையும் இல்லாம தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்கா.

கீதா

Girl Friends இந்த ரத்னாவ பாஸ் பார்வையில கீழ விழ வைக்கணும். எப்ப பார்த்தாலும் ரத்னாவையே பாராட்டி தள்ளறாரு. அவ செய்ற எல்லா வேலயும் அவருக்கு நல்லாருக்கு. நான் வேலை செய்யலையா? ஒரு தடவ கூட என்னை பாராட்டி பேசனதில்ல. நினைக்க நினைக்க வயித்தெரிச்சலா இருக்கு. மொதல்ல மொதலாளி அவ மேல வச்சிருக்கிற நல்ல அபிப்ராயத்த வீணாக்கனும். சமயம் பாத்து அவரு காதுல போடனும். போன மாசம் சம்பளத்த வேற ஏத்திகொடுத்துருக்காரு. ரத்னா முன்னுக்கு என் கடுப்பல்லாம் மறைச்சி எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கு. வேற என்ன செய்ய முடியும்? அவ கிட்ட இதல்லாம் காட்டி பகைச்சிகிட்டா எனக்குதான் நஷ்டம். மொதலாளிக்கு தெரிஞ்சா பாதிப்பு எனக்குதானே. அதனாலதான் பொறுமையா அவகிட்ட நடந்துக்கறேன். அவ என்னை நம்புவானு எனக்கு நல்லா தெரியும். அன்னைக்கு நான் பைல ஒளிச்சி வச்சி அவ பட்ட அவஸ்தைய ராத்திரி வரைக்கும் கூடவே இருந்து பார்த்தப்ப வயித்தெரிச்சல் கொஞ்சம் குறைஞ்சுச்சு. மீனா இருக்காளே அத பத்தியெல்லாம் கவலயே படமாட்டா. அவ பாட்டுக்கு அவ வேலய செஞ்சுட்டு போயிடுறா. நான் அவ மாதிரி இருக்க முடியாது.

மீனா

யாருக்கிட்டயும் ரொம்ப பேச்சு வச்சுக்கவே கூடாது. இல்லனா பிரச்சனதான். என் வேலைய சரியா முடிச்சு பாஸ்கிட்ட பாட்டு வாங்காம இருந்தா சரி. கெடைக்கிற சம்பளத்துக்கு கரெக்டா வேலை செஞ்சிடனும். இந்த ரத்னாவுக்கும் கீதாவுக்கும் ரொம்ப ஈகோ. அதுங்க பேசறது நடந்துக்கறது எதுவுமே எனக்கு பிடிக்கல. துஷ்டன கண்டா தூர விலகுனு சொல்வாங்க. நான் தூரமாவே இருந்துக்குறேன். அதான் எனக்கு நல்லது.

ரத்னா

இந்த பாஸ்க்கு என்னாச்சி, எடுத்ததுக்கெல்லாம் எரிஞ்சி எரிஞ்சி விழறாரு. எவ்ளோ நல்லா வேலை செஞ்சி முடிச்சி குடுத்தாலும் எதாச்சும் குறை கண்டுபிடிக்கறாரு. இப்படி செஞ்சா, அப்படி செய்ய சொல்றாரு. அப்படி செஞ்சா, இப்படி செய்ய சொல்றாரு. வெறுப்பா இருக்கு. கீதாதான் ஆறுதலா இருக்கா. இல்லனா எப்பயோ வேலையை விட்டுட்டு போயிருப்பேன். ஆனா எத்தன நாளக்கி பொறுத்துக்க முடியும்? டென்ஷனா இருக்கு. கொஞ்ச நாள் பாத்துட்டு, சரிபடலனா ராஜினாமாதான் செய்ய போறேன்.

கீதா

நான் போட்ட ப்ளான் கொஞ்ச கொஞ்சமா நிறைவேறிக்கிட்டு வருது. அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. மொதலாளி காதுல சமயம் கெடைக்கும்போதெல்லாம் போட்டது வீண்போகல. ரத்னா முன்னுக்கு நான் இன்னும் நல்ல பொண்ணாவே காட்டிக்கணும். அப்பதான் நாளை பின்னாடி அவளோட உதவி தேவைபட்டா போயி அவ முன்னுக்கு நிக்க முடியும். அவ இப்ப ரொம்ப டென்ஷனா இருக்கா. எந்த நேரத்திலயும் வேலைய ராஜினாமா செஞ்சுடுவா. அதுக்கப்புறம் நான்தான் இங்க மகாராணி. என்னோட அதிகாரந்தான். மீனாவைப் பத்தி கவல பட வேண்டியதில்ல. அவ ரத்னா அளவுக்கு கெட்டி இல்ல. அவளால எனக்கு எந்த தொந்தரவும் வராது. ஆனாலும் கவனமாதான் இருக்கனும். ஊமை ஊர கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க?

மீனா

என்னமொ நடக்குதுனு தெரியுது. ஆனா என்னானுதான் தெரியல. ரத்னா கவலயா இருக்கற மாதிரி படுது. கீதா ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரியும் தோணுது. ஏதோ எப்படியோ.. எனக்கென்ன? எப்போதும்போல நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்துடறேன். அதான் நல்லது.

ரத்னா

பரவால. நான் இங்கய வேல செய்றேன். மத்த எடத்திலயும் மொதலாளிங்க இந்த பாஸ் மாதிரியே இருந்துட்டா என்ன செய்றது. இங்கயாவது ஆறுதலா கீதா இருக்கா. மத்த எடத்துல அவ மாதிரி ப்ரெண்டு கிடைக்கிறது கஷ்டம். போக போக பாஸ் குணம் மாற வாய்ப்பிருக்கு. என்னோட வேலய சரியா செஞ்சு அவருகிட்ட குடுக்கனும்.

முதலாளி

இந்த ப்ராக்ஜட்ட ரத்னாகிட்டதான் ஒப்படைக்க முடியும். அவதான் இதுக்கு ஏத்த ஆள். பல கோடி வருமானம் உள்ளதால அவ சம்பளத்தையும் ஏத்தனும். நான் சொல்றபடி வேலை செஞ்சு குடுக்க அவளால மட்டும் தான் முடியும். எப்பயும் பிழைய காட்டுனா பொறுமையா கேட்டு சரியா செஞ்சு குடுத்துடுவா. எத்தன தடவ ஏசிருக்கேன். அதெல்லாம் பெரிசு பண்ணாம வேலைய எவ்ளோ நல்லா செய்ய முடியுமோ அந்தளவுக்கு செய்ற தெறம அவகிட்ட இருக்கு.

- க.ராஜம்ரஞ்சனி, மலேசியா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com