Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
வேட்டி சட்டை

ஐரேனிபுரம் பால்ராசய்யா

பள்ளிக்கூட வராந்தாவில் படுத்துக்கிடந்த மொக்கையனை குளிர் அடர்த்தியாய் சூழ்ந்து கொள்ள உடல் நடுங்கத்தொடங்கியது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியைப் பிரித்து கழுத்துவரை போர்த்தி தனது மொத்த உடம்பை சுருக்கி அந்த லுங்கிக்குள் மறைத்தான்.

Poor man மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கு சென்றுகொண்டிருந்த மாட்டு வண்டி எழுப்பிய சத்தத்தில் மிச்சமிருந்த அரைதூக்கமும் தொலைந்து போக, எழுந்து லுங்கியை இடுப்பில் கட்டிக்கொண்டு பீடியை பற்ற வைத்தான். அருகிலிருந்த ஓட்டலின் அறை விளக்குகள் உயிர்த்தெழ மணி நான்கு என்பதை உணர்ந்தான். முடிந்து போன பீடித்துண்டை சாலையின் ஓரத்தில் வீசிவிட்டு அந்த ஓட்டலை நோக்கி நடந்தான். ஓட்டலில் அடுப்பு பற்ற வைத்து பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது.

‘‘ஒரு கட்டங் காப்பி தரணும்” மொக்கையன் தனது கரகரத்த குரலில் கேட்டான்.

‘‘மொத போணி இன்னும் ஆகல கொஞ்ச நேரம் பொறு!” ஒட்டல்காரர் சொன்னபோது தனது லுங்கியில் முடிந்து வைத்திருந்த காசுகளைப் பிரித்து எண்ணிக்கொண்டான்.

‘‘கைநீட்டம் காசு நான் தாறேன் கட்டங் காப்பி தரணும்!”

“உங்கிட்ட கைநீட்டம் வாங்கினா இன்னைக்கு வியாபாரம் நடந்தது மாதிரி தான்!”. ஓட்டல்காரர் முணுமுணுத்துக்கொண்டே கட்டங்காப்பி போட்டு வெறுப்புடன் தந்தார்.

“காசொண்ணும் வேண்டாம் காப்பிய குடிச்சுட்டு சீக்கிரம் தண்ணி கோரீட்டு வா!” ஓட்டல்காரர் அவசரப்படுத்தினார். சுவற்றின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த காப்பியில் ஆவி பறந்துகொண்டிருந்தது. மொக்கையனுக்கு கை விரல்கள் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்கும். திருமண வீட்டில் இலையிலிருக்கும் சோற்றை எடுத்து வாய்க்கு கொண்டு செல்கையில் அவனது விரல்கள் நடுங்கி பாதி சோற்றுபருக்கைகள் இலையில் விழ மீதிதான் அவன் வாய்க்குள் செல்லும்.

கண்ணாடி டம்ளரில் அடர்ந்திருந்த உஷ்ணம் அவன் விரல்களைப் பயமுறுத்தியது. தரையில் கிடந்த துண்டு இலையை எடுத்து கண்ணாடி டம்ளருக்கு அணை கொடுத்து அவன் வாயருகே கொண்டு வந்து ஒரு வாய் உறிஞ்சியபோது, விரலின் நடுக்கத்தில் காப்பி தண்ணீர் அதிகமாய் வாய்க்குள் போக நாக்கு வெந்துவிட்டதை உணர்ந்து கட்டங் காப்பியை பழையபடி சுவற்றின் மீதே வைத்தான்.

சிறிது நேர இடைவெளி கடந்து காப்பியை தொட்டபோது கண்ணாடி டம்ளரில் படிந்திருந்த உஷ்ணம் முழுவதுமாய் விலகியிருந்தது. விரல்கள் நடுங்க கட்டங் காப்பியை குடித்துவிட்டு தோண்டியையும் கயிறையும் கப்பியையும் மரச்சட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த டின்களையும் தூக்கிக்கொண்டு கிணற்றடிக்கு வந்தான்.

சாலையின் ஓரத்தில் சுமார் முன்னூறு அடி ஆழமிருந்தது அந்த கிணறு. சிறுவர்கள் யாரும் அந்த கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று எட்டி கூட பார்க்க மாட்டார்கள். உள்ளே தண்ணீர் கிடந்தாலும் இருள் தான் கண்ணுக்குத் தெரியும். அந்த இருளின் பயம் விலக பல வருடங்கள் கழியக்கூடும்.

மொக்கையன் கப்பியில் கயிற்றை மாட்டி தோண்டியை உள்ளே இறக்கும்போது கப்பியிலிருந்து எழுந்த கிரீச் சத்தம் ஒரு பர்லாங் தூரம் வரை கேட்டது. தோண்டியை தண்ணீருக்குள் நன்கு அழுத்தி கயிற்றை இழுத்து கிணற்றின் விளிம்பில் வட்டமாக சுற்றி வைத்தான்.

கிணற்றுக்குள் விட்ட தோண்டியை தண்ணீரோடு இடப்பக்கம் வலப்பக்கம் என்று இடுப்பை ஆட்டியபடி கயிற்றை இழுத்தது பார்ப்பதற்க்கு வேடிக்கையாக இருந்தது. இரண்டு டின்களிலும் தண்ணீர் நிறைத்துவிட்டு டின்களை இணைத்திருந்த மரச்சட்டத்தை தன் தோள்கள் மீது வைத்து தடுமாறியபடி ஓட்டலுக்கு நடந்தான். தோளில் மரச்சட்டம் வைத்து பழகியதில் இரண்டு இஞ்ச் அளவுக்கு தோல்கள் காய்ப்பேறி கிடந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி வாக்கில் அருகிலிருந்த தேவாலயத்திலிருந்து முதலாவது மணி அடிக்கத் தொடங்கியது. எட்டரை மணிக்கு இரண்டாவது முறை ஆலயமணி அடித்தபோது அரக்க பரக்க ஓடிவந்து ஆலயத்தில் அமர்ந்தார்கள் அந்த ஊர் ஜனங்கள். பத்து மணிக்கு ஆராதனை முடிந்து மெல்லமாய் அனைவரும் வெளியேறத் துவங்கினார்கள்.

மொக்கையன் ஆலயத்தின் வெளிக்கேட்டில் நின்றுகொண்டு வெளியூரிலிருந்து யாராவது ஆலயத்துக்கு வந்திருக்கிறார்களா என்று பார்வையை சுழற்றினான். சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்த தங்கதுரை அவன் பார்வையில் கிடைத்தான்.

“சாரே பைசா தரணும்!'' அவர் எதிரில் கையேந்தியபடி நின்றான் மொக்கையன். தங்கதுரை ஐந்து ருபாய் நாணயத்தை அவனுக்குத் தந்தார்.

“சாரே கிறிச்மச் வருது புது வேட்டி சட்டை வாங்கணும்!'' மொக்கையன் தலை சொறிந்தபடியே கேட்டான். அவன் கிறிச்மச் என்று சொன்னது கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதைப் புரிந்துகொண்டு பர்ஸிலிருந்து பத்து ருபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். மொக்கையன் நன்றியோடு அதை வாங்கிக்கொண்டு தனது பார்வையை வேறு பக்கம் திருப்பினான். அன்று கிடைத்த சில்லறை காசுகளையும் ரூபாய் நேட்டுகளையும் மடியில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

அவன் கட்டியிருந்த அழுக்கு படிந்த லுங்கிக்குள் ஐந்தாறு இடங்களில் பீடி கங்கி விழுந்த பொத்தல்கள் தெளிவாய் தெரிந்தன. லுங்கியின் கிழிந்த பகுதியை வெளியே தெரியாதபடி மடித்துக் கட்டியிருந்தான். ஊரில் திருமணங்களோ, நிச்சயதார்த்தங்களோ, கிரகப்பிரவேசமோ, பூப்புனித நீராட்டு விழாக்களோ, அன்னதானங்களோ தினமும் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வான். அங்கெல்லாம் அழைக்கப்படாத விருந்தாளியாகச் சென்று கடைசி பந்தி வரை காத்திருந்து சாப்பிட்டு விட்டு திரும்புவான்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி தின்று விட்டு பள்ளிக்கூட வராந்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் கண்ட பலரிடமும் தான் சாப்பிட்ட பிரியாணியை அவன் பிர்ராணி என்று இழுத்துச் சொன்னது கேட்டு பலரும் வாய்விட்டு சிரித்தார்கள்

மொக்கையனுக்கு வயது ஐம்பது தாண்டியிருந்தது. எதிர்காலம் பற்றிய சிந்தனையற்று கவலைகள் எதுவுமின்றி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு யாராவது பழைய லுங்கியோ வேட்டியோ தருவார்கள். வெள்ளை நிறத்திலிருக்கும் வேட்டியை அவன் கட்டத் துவங்கினால் பின்பு அது பழுப்பு நிறமேறி வேட்டியின் சுய அடையாளத்தை இழந்து பெயரிடப்படாத வேறு கலராக மாறி அது கிழிந்து போகும் வரை அவனை விட்டு விலகாமலேயே இருக்கும்.

இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புது வேட்டி சட்டை வாங்கி விடவேண்டும் என்ற கனவு அவன் மனதில் எழும்பிக்கொண்டே இருந்தது. புது வேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற காரணத்தை சொல்லி யாரிடமாவது காசு கேட்டால் எல்லோருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. மேலாடை அணிந்து பார்த்திராத ஊர் ஜனங்களுக்கு அவன் புது வேட்டி சட்டை வாங்க காசு கேட்டால் கொடுத்த ஒரு ருபாய் நாணயத்தை திரும்ப வாங்கி விடலாமா என்று நினைக்கத் தோன்றியது.

சிறுக சிறுக கிடைத்த காசுகள் பீடி வாங்கியும் கட்டங் காப்பி வாங்கியும் செலவழிந்து போயின. அரசியல் கூட்ட விழாவில் ஒலிபரப்பான பாட்டுச்சத்தம் கேட்டு அது திருமண வீடாக இருக்கக்கூடும் என்று நம்பிச் சென்று ஏமாந்து திரும்பியதைப் போலவே வேட்டி சட்டை வாங்குவது என்ற எண்ணமும் அவனை விட்டு மெல்ல விலகியது.

அவனுக்குள் புற்றுநோய் குடிவந்து பல வருடங்கள் ஆனது தெரியாமலேயே அவனது ஜீவனம் நகர்ந்துகொண்டிருந்தது. அன்று உடம்புக்கு முடியாமல் பள்ளிக்கூட வராந்தாவில் முடங்கி கிடந்தான். மனசு மட்டும் புது வேட்டி சட்டையின் மீது வியாபித்திருந்தது.

மொக்கையனை காணவில்லையென்று அவனைத் தேடி வந்த ஓட்டல்காரரிடம் உடம்புக்கு முடியல என்று சொல்லிவிட்டு தனது புது வேட்டி சட்டை ஆசையை சேர்த்துச் சொன்னான். ஓட்டல்காரருக்கு கோபம் வந்தது

"புது வேட்டி சட்ட போட்டுகிட்டு பொண்ணா கெட்டப்போற? ஆசயப்பாரு!" அவர் சினந்தபடியே கிளம்பிப் போனார். புற்று நேய் தனது உக்கிரத்தை காட்ட மொக்கையனுக்கு பேச்சு நின்று போனது. அது மே மாதம் வேறு. சிறுவர் சிறுமியர்களின் வாசனையற்று இருண்டு கிடந்தது அந்த பள்ளிக்கூடம். அவன் முனகல் நின்று உயிர் பிரிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ஓட்டல்காரருக்குத் தெரிய வந்தது.

மொக்கையன் இறந்த செய்தி ஊர் முழுக்கப் பரவியது. அவனது உடலை தகனம் செய்ய ஊர்க்காரர்களிடம் வசூல்வேட்டை நடத்தப்பட்டது. வசூலான பணத்தில் புது வேட்டி சட்டை வாங்கி வந்து உடலுக்கு அணிவித்து உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. புதுவேட்டி சட்டை வாங்கவேண்டும் என்ற ஆசை முதலில் அவனுக்குள் புதைந்துபோக அவனது உடல் பிறகு மண்ணில் புதைந்து போனது.

ஓட்டல்காரர் வீட்டில் என்றோ எடுத்த புகைப்படத்தின் ஓரத்தில் நின்றிறுந்த மொக்கையனை இனம் கண்டு அதை ஸ்கேன் செய்து சட்டை அணிந்திருப்பதுபோல் புகைப்படம் தயாரித்து மறுநாள் காலை நாளிதழில் அஞ்சலி என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தான் மொக்கையன்.

உயிருடன் இருக்கும்போது மேல்சட்டை அணியாத அவன் புகைப்படத்தில் மேல்சட்டை அணிந்திருப்பதை அவன் ஆத்மா மன்னிக்குமா என்பது யாருக்கும் தெரியவில்லை.

- ஐரேனிபுரம் பால்ராசய்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com