Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
தேடல்

பத்மப்ரியா


அம்மன் அழகாக இருந்தாள். தெரு ஓரக் கோவில் தான் என்றாலும் அவள் அங்கே வசித்திருந்தாள். பாஸ்போர்ட் சைஸ் அம்மன் தான் என்றாலும், ஜிமிக்கி, மூக்குத்தி எல்லாம் போட்டு , மலர்ந்த கண்களுடன், கடைவாய் புன்னகை கொண்டு அழகாக இருந்தாள்.

இதுக்கு மேல உன்னால ஓட்ட முடியாது.. நிறுத்து - என்றான் என் தம்பி

Chennai street இடப்புறம் ஆண்களும், வலப்புறம் பெண்களும் – அட..! இந்த பெண்களும் அழகா இருக்காங்க.. இவங்களைப் பார்க்கவே வாரா வாரம் வராலாம் போலிருக்கே என்று நினைத்துக் கொன்டேன். வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... அவர் அவ்வளவு தாமதமாக தங்கள் பக்கம் திரும்பியதற்கு ஆண்கள் யாரும் வருந்தவில்லை..வருந்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

“அதோ அந்த ஆட்டோகாரரை கேளுடா” – என்றேன் நான்

“இங்க சாந்த சக்தி சங்கம் எங்கன்னு தெரியுமா?” – என்றான் அவரிடம்

“தெரு பேரு தெர்யுமா?” – என்றார் அவர்

“ இல்ல.. ஏதோ கிறிஸ்டியன் நேம்..பேரு கரெக்ட்டா தெரியாது.. தியானம் சொல்லித் தராங்களே அது “ – என்றேன் நான்

“முந்திரிக்கொட்டை” – என்பதைப்போல முறைத்தான் என் தம்பி

தோராயமாக ஏற்கெனவே தூக்கி இருந்த கையை இன்னும் மேலே தூக்கி, “நேரா போயி பஸ்ட் ரைட் திரும்பி, அப்புறம் அதுலயே நாலாவது ரைட் திரும்புங்க” என்றார் ஒரு தீர்மானத்தோடு.

நாம் நமது வாழ்நாளில், துண்டு சீட்டை நீட்டி யாரிடம் வழி கேட்டாலும், “வாங்க சார்..வாங்க.. கரெக்ட்டா வந்திருக்கீங்க.. இதோ எதிர் வீடு தான் நீங்க கேட்ட அட்ரெஸ்... இதோ பக்கத்து பில்டிங்தான் நீங்க கேட்ட ஆபீஸ்”னு யாராவது சொல்லி இருக்காங்களா? கிடையவே கிடையாது. எப்பவும் “நேரா போயி மூணாவது ரைட்”. இல்லைன்ன “ஐயையோ.. ஏரியா தாண்டி வந்துட்டீங்களே? வந்த வழியே திரும்பி போயி. . .போயி... அப்டியே உங்க வீட்டுக்கு போயிடுங்க” என்பதைப் போலத்தான் வழி சொல்கிறார்கள்.

இன்னும் ரெண்டு பேரை விசாரிக்கலாமே என்று நான் நினைத்ததை என் முட்டைக் கண் மொழியிலிருந்து புரிந்துக்கொண்ட ஆட்டோகாரர் “ம். . கிளம்புங்க” என்பதைப் போல முறைத்தார். நாங்கள் நேராகப் போய் வலது பக்கம் தான் திரும்புகிறோமா என்பதை வேறு இடுப்பில் கை வைத்தபடி கவனித்ததாக, திரும்பி பார்த்த என் தம்பி சொன்னான். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், அக்காவாகவே இருந்தாலும், அவள் வண்டி ஓட்டி, தம்பி பின்னால் உட்கார்ந்து வந்தால்... அந்த தம்பியின் இமேஜ்.. ஒரு கெத்து.. என்னாவறது..? நாளை. . . பின்ன.. பிகருங்க மதிக்குமா அவனை?

“நீ இறங்கி பின்னாடி உக்காரு, நான் ஓட்டறேன்” என்றான் என் தம்பி. இது நான் எதிர்பார்த்தது தான். அந்த ஆட்டோகாரர் பார்வையிலிருந்து அகன்று விட்டோம் என்றாலும் கூட, அவர் மீதான மதிப்பு, மரியாதையை சிறிதும் குறைக்காமல் அவர் சொல்லி அனுப்பியபடி நாலாவது ரைட் திரும்பினோம். டீக்கடைக்கு சற்று தள்ளி இருந்த ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரிக்கடை நிறுவனரை கேட்போம் என நாங்களிருவரும் ஒரு மனதாக முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்தான் சாதுவாக தானுண்டு தன் வேலை உண்டு என துணிகளை தேய்த்தபடி இருந்தார்.

“இங்க சாந்த சக்தி சங்கம் எங்க இருக்குன்னு தெரியுமா?” என்றான் என் தம்பி

“லோன் குடுப்பாங்களே அந்த கட்டடமா”? என்றார் அவர். அவரது அந்த அசாத்தியமான கேள்வியால் அநியாயத்துக்கு பாதிப்படைந்த என் தம்பி, என்னை திரும்பிப் பார்த்து முறைத்தால் நேரமாகும் என்பதால் திரும்பாமலேயே முறைத்தான். அதெப்படி..? அவன் திரும்பாமலேயே உன்னை முறைத்தான்னு உனக்கு எப்படி தெரியும்..? என்று நீங்கள் கேட்டால்..எல்லாம் ஒரு சைக்காலஜி தான்.. ரியர் வியூ கண்ணாடி எதுக்கு இருக்கு..?

அது என்னங்க அது.. அப்பா. அண்ணன், தம்பி கூட போகும் போது...அவங்க மட்டும் தான் அட்ரெஸ் விசாரிப்பாங்க.. நாங்க விசாரிக்கவே கூடாது. அது வரைக்கும் பக்கத்து பக்கத்திலே நடந்து வந்தாலும், அட்ரெஸ் விசாரிக்கும் போது ரெண்டடி பின்னாடி நின்னுடனும்.. வண்டி பின் சீட்ல உக்கார்ந்திருந்தாலும் விளக்கங்கள் ஏதும் தரக்கூடாது...அவங்களுக்கு புரிஞ்சே தொலையாத வழி எங்களுக்கு புரிஞ்சாலும் “புரியவே புரியலயே. . !!!!!!? என்பதைப்போல முகத்தை வச்சுக்கனும்.

புள்ளிக்கு வருவோம்... (அதாங்க.. கம் டு த பாயின்ட் தான்...)

“தெர்லீங்க” என்றார் ஓம் ரா. பா. நடமாடும் இஸ்திரி நிலைய நிறுவனர். அதற்குள் மூன்று, நான்கு பேர் எங்களை சூழ்ந்தனர்.

“இன்னாப்பா. . . இன்னாது”? என்றார் ஒருவர். இவர் பிளம்பராக இருக்கலாம். ஒருவர் செய்யும் தொழில் அவரது உடல் மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி அவரது ஆளுமையை மாற்றுகிறது. ஒவ்வொருவரின் நடை, உடை, பாவனைகளை அவரது தொழில் தான் நிர்ணயிக்கிறது.... (எழுதற எனக்கே புரியவே இல்ல.. அடிச்சு சொல்றேன் உங்களுக்கும் புரியாது.. இதுபோல எழுதற எனக்கும் புரியாம, படிக்கிற உங்களுக்கும் புரிஞ்சுடாம, ஜாக்ரதையா ஒரு மையமா எழுதினாத்தான் சாகித்திய அகாடெமி விருது கிடைக்கும்னு என் ப்ரென்ட் சொன்னா.. இப்ப பாருங்க அவ சொன்னாளேன்னு அவசரப்பட்டு இப்டி எழுதிட்டேனா..? அடுத்த வாரம் அகடெமியிலேர்ந்து விருது வழங்கும் விழா அழைப்பிதழ் வரும்.. நான் அதுக்காக அநாவசியமா தற்செயல் விடுப்பு வேற போட்டுட்டு போயாகனும் ..ப்ச்!)

“இன்னாமோ சக்தி சாந்த சபாவாம்...” என்றார் ஓம் இரா. பா. இஸ்திரி நிலைய நிறுவனர்.

“அடப்பாவிங்களா... சொல்லி ரெண்டு நிமிஷம் ஆகல அதுக்குள்ள பேரயே மாத்திட்டேங்களா ? என நினைத்துக் கொண்டேன்.

“சபாவா..? அதெல்லாம் பீச்சாங்கரைப் பக்கம்” என்றார் அவர்.

“இன்னா எடம் அது” என்றார் மற்றொருவர். இவர் மேஸ்திரியாகத் தான் இருக்க வேண்டும்.

“டேய் வீட்டுக்கே திரும்பி போய்டலான்டா” என்றேன் நான்.

"மவளே.. நீ வீட்டுக்கு வா.. அங்க இருக்கு உனக்கு மண்டகப்படி" என்றான் என் தம்பி.

“இதுக்கு நான் ஒரு முடிவு கட்றேன்” என்பதைப்போல டீ கிளாசை வேகமாய் வைத்துவிட்டு எங்கள் அருகில் வந்தார் டீ குடித்துக் கொண்டிருந்தவர். இவர் நிச்சயம் எலெக்ட்ரீஷியனாத்தான் இருக்கணும். ஏன்னா பால் பாயின்ட் பேனால்லாம் வச்சிருக்காரே.

சொன்னான்... அனைத்தையும் சொன்னான் என் தம்பி.( மவளே... நீ காலிடி இன்னைக்கி... வீட்ல இருக்கு உனக்கு... நற..நற..நற..” என்று அவன் மனதிற்குள் திட்டியது, திவ்யமாக என் மனக்காதுகளில் கேட்டது. என்னாது..!? மனக் காதுகளா..? என்னா ஓவரா ரீல் சுத்தர..? அப்டீன்னு நீங்க கேட்டா “ஏங்க . . மனக்கண்கள் இருக்கும்போது... மனக்காதுகள் இருக்கக் கூடாதா..?” அப்டீன்னு நான் பதில் சொல்ல வேண்டி வரும்)

ஓ... அதுவா... சாமி கும்பிட்டு... பொங்கல் தராங்களே அந்த இடமா”? என்றார். மகிழ்வோடு வேகமாய் தலையாட்டினோம். இம்மாதிரியான சீரிய கால கட்டங்களில் கூட.. அவன் மட்டும் தான் தலை ஆட்ட வேண்டும், நான் வெறுமனே நிற்க வேண்டும் என் தம்பிக்கு. மேல் சாவனிஸம் எதெதில் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த எலக்ட்ரீஷியனும் “நேரா போங்க. பஸ்ட் ரைட் கட் பண்ணுங்க.. அங்கேர்ந்து எண்ணி நாலாவது ரைட் போங்க.. அங்க மிடில்ல இருக்கு” என்றார் என்னையே பார்த்துக்கொன்டு. என்னவோ நான் அவரை “மிஸ்டர் இங்க வாங்க.." என்று கூப்பிட்டு நாலு கேள்வி நாலு விதமா கேட்ட மாதிரி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“பர்ஸ்ட் ரைட், அப்புறம் நாலாவது ரைட்டா?” என்று கேட்டான் தம்பி.

“ஆமாங்க பர்ஸ்ட் ரைட், அப்புறம் போர்த் ரைட்”? என்றார் என்னிடம். இதற்காகவே வண்டியை வேகமாக கிளப்பினான் தம்பி.

நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பி மீண்டும் நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பினால் இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அதே ஆட்டோக்காரரை சந்திப்போம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை நாங்கள். தூக்கி வாரி போட்டது எனக்கு.

“நான் வர்லடா இந்த ஆட்டத்துக்கு” என்றேன்.

தொடரும்...

(ஏதோ ஒரு லாஜிக், ஒரு ஸ்பார்க் இருக்கேன்னு தோராயமா எழுத ஆரம்பிச்சேன்.. முடிக்க முடியும்னு தோணல.. அதனால தொடரும் போட்டுட்டேன்.. விஷயம் தெரிஞ்சவங்க நாலு பேராவது சென்னைல இருப்பாங்க..அடுத்த வாரத்துக்குள்ள கேட்டு எழுதி முடிச்சிடலாமுங்க)

- பத்மப்ரியா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com