Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நெஞ்சு பொறுக்குதில்லையே!

நிலா ரசிகன்

கோவில் திருவிழாவிற்காக எங்கள் கிராமம் சென்றிருந்தேன். எத்தனை ஊர் சென்றாலும் சொந்த ஊரில் பாதம் படும் போது ஏற்படும் உணர்விருக்கிறதே! அடடா.... காதல் போல் உணர மட்டுமே முடியும்...

Man பால்ய நண்பன் வீடு தேடி வந்தான்... பழைய கதைகள் பேசி பொழுது போனது,,,

"இன்னைக்கு இராத்திரி ஏழு மணிக்கு ரெடியா இருடா திருவிழா பார்க்க போகலாம்" என்று சொல்லிப்போனான் தோழன்.

இரவு நண்பர்கள் படையுடன் திருவிழா ரசித்துக்கொண்டிருந்தோம்..... பக்தியுடன் சாமி ஆடுவது கண்ட பின் கிண்டலுடன் கரகாட்டம் காண சென்றோம்...

நேரமாக நேரமாக கோவிலில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது...

"மச்சான் வாங்கடா பலூன் கடைக்கு போகலாம் என்றான் தோழன் ஒருவன்....

பலூன் வாங்கற வயசாடா என்றேன் நான்..

அடப்போடா பலூன் கடையிலதான் டா வளையலும் விற்கிறாங்க...என்றான் சிரித்துக்கொண்டே தோழன். பின்புதான் புரிந்தது வளையல் அவனது எதிர்வீட்டு தேவதைக்கு என்று! சரி போகலாம் என்று கடை நோக்கி நடந்தோம். பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சத்தில் சாக்குப்பை விரித்து அதில் கடை போட்டிருந்தார்கள். நண்பன் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்...

அப்போது.... என் அருகில் ஒருவர் தன் சிறுமகளுக்கு பலூன் வாங்க என்னருகில் வந்தார்... இந்த முகம்.... எங்கோ பார்த்த நியாபகம்.... சட்டென்று மனம் கனத்துப்போனது!

அவரா இவர்? நடை தளர்ந்து, உடல் குறுகி.... பற்களில் சிலவற்றை இழந்து.... அய்யோ டேவிட் அண்ணா நீங்களா இப்படி?

என்னைக் கண்டதும், என் பார்வையினைப் புரிந்து கொண்டு அவ்விடம் விட்டு நகர எத்தனித்தார்...

"டேவிட் அண்ணா....."

அவர் கைப்பிடித்து நிறுத்தினேன்...

கெட்ட வாடை வீசியது அவர் மேல். டேவிட் அண்ணன் குடித்திருந்தார்.

"எப்படி இருக்கீங்கண்ணா..."

"நல்லா இருக்கேன்பா.... சரி நான் கிளம்புறேன்..." விறுவிறுவென்று நடந்து போய்விட்டார்.

சுயநினைவிழந்து நின்ற என் தோள் தட்டினான் தோழன்..

"மச்சான் வாடா வீட்டுக்கு போலாம்.."

மெதுவாய் நடந்தேன்... மனதெங்கும் டேவிட் அண்ணனின் நியாபகம்... எட்டு வருடங்கள் பின்னோக்கி மனம் பறந்து சென்றது....



அப்போது நான் கல்லூரி இளநிலை மூன்றாம் வருட மாணவன். எங்கள் கிராமத்திலிருந்து டவுனுக்கு இருபது கிலோமீட்டர்கள் பேருந்தில் பயணிப்போம். டேவிட் அண்ணா என் பக்கத்து கிராமம். அவர் ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு மைதானம் சென்றால் பந்து மைதானத்திற்கு வெளியில்தான் வந்து விழும். கிரிக்கெட் விளையாட சென்றதால் எங்களுக்குள் நல்ல பரிச்சயம்.

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நான் கல்லூரி முடிந்து முதலில் பேருந்து நிலையம் வந்தால் அவருக்கு உட்கார இடம் பிடித்து வைப்பேன். அவர் முதலில் வந்தால் எனக்கு இடம்பிடிப்பார்.

ஒரு நாள்...

"அண்ணே ஒரு டீ குடிக்கலாமா?"

"சரிடா வா"

"அண்ணே என்கிட்ட சில்லரை இருக்கு நான் கொடுக்கிறேன்"

"படிக்கிற புள்ளைக காசு செலவு பண்ணக்கூடாதுடா" என்றவாறே தன் பர்ஸை திறந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை கடைக்காரரிடம் நீட்டினார்.

அப்போதுதான் அவர் பர்ஸைப் பார்த்தேன். நூறு ருபாய்த் தாள்களால் நிரம்பி வழிந்தது...

"என்னண்ணே எங்கயாவது கொள்ள கிள்ள அடிச்சீங்களா?" கிண்டலாய் கேட்டேன் நான்.

"இல்லடா இன்னைக்குதான் சம்பளம் கிடைச்சுது தம்பி"

"எவ்ளோ சம்பளம்ணே"

"அது ஒரு பத்து தேறும்டா"

"பத்தா?"

"ஆமாடா பத்தாயிரத்தி சொச்சம்"

"அடேயப்பா பெரிய ஆளுண்ணே நீங்க" எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை...

அவர் போல் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின் டீக்கு பதில் குளிர்பானம் (பெப்சி வந்த புதிது) கேட்பேன் வெட்கமின்றி(அட நம்ம அண்ணாச்சி,பக்கத்து ஊரு வேற இதுல வெட்கம் என்ன கிடக்கு! )

"நமக்கு டீதான் ஓகே. இந்தா பக்கத்து கடையில குடிச்சிக்க....என்று பத்து ரூபாய் தருவார்...

என் இளைநிலை பட்டம் முடித்து, முதுகலை படிக்க சென்னை வந்துவிட்டேன்.

அதன் பின் அவரைச் சந்திப்பது வெகு கடினமாகிப்போனது.


எட்டு வருடம் கழித்து நேற்றிரவுதான் கோவிலில் டேவிட் அண்ணனை சந்தித்தேன்... "அம்மா நான் டேவிட் அண்ணனை பார்த்துட்டு வரேன்மா" கிளம்பினேன்.

சைக்கிள் மிதித்த காலத்தை நினைத்துக் கொண்டே இன்று பைக்கில் எங்கள் கிராமத்தின் செம்மண் சாலையில் விரைந்தேன்.

அவர் வீடு.....

"அண்ணே..." பதிலில்லை.

"அண்ணேணே....." சற்று குரல் உயர்த்தியபின் உள்ளிருந்து மறுகுரல் கேட்டது

"யா...யாரு..." வெளியில் வந்தார்.

தம்பி... வா உள்ள வாப்பா.... சாராய வாடையுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்...

அண்ணே.... எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற நிலைமையில் நானில்லை...

மெளனமாய் அவரைப் பார்த்தேன்..

எங்கள் மெளனத்தில் கல்லெறிந்தது ஒரு சிறுபூவின் குரல்...

"அப்பா நான் வெளயாட போறேன்பா" என்று சொல்லிவிட்டது அந்த பட்டாம்பூச்சி..

"அண்ணே உங்க ஒய்ப் எங்கே? "

அவரது கண்ணிலிருந்து கண்ணீர்த்துளியொன்று விழுந்து உடைந்தது...

"என்னண்ணே என்னாச்சு? என்ன பிரச்சினை.... நீங்க ஏன் இப்படி இருக்கீங்க"

தம்பி வாழ்க்கையில எல்லாத்தயும் இழந்துட்டேன்....

இதோ போறாளே எம் மக.... இவளுக்காகதான் என் உசிரு இன்னும் இருக்குதோ என்னவோ....

இவ பொறந்த அன்னைக்கே எம்பொஞ்சாதி என்ன விட்டுப் போயிட்டா!

வேற ஒருத்தி கட்டிக்க மனசு வரல.... ஏன்னா எம்பொண்டாட்டிய நான் உசிருக்கு உசிரா நேசிச்சேன்....

அவ நியாபகம் வரும்போதெல்லாம் குடிக்க ஆரம்பிச்சேன்...

குடிச்சுட்டுதான் தினமும் ஆபிஸ் போவேன்...

இரண்டு தடவ சொல்லிப்பார்த்தாங்க....அப்புறம் வேலைய விட்டு தூக்கிட்டாங்க!

பொழப்புக்கு வழியில்ல.... எனக்கு வேற வேலையும் கிடைக்கல...

கவலைய மறக்க குடிச்சு குடிச்சு ஓடா தேஞ்சு போனேன்...

இன்னும் ஆறுமாசமோ ஒரு வருசமோ!

இதுக்கு மேல சொல்ல என் பிளாஷ்பேக் வேற இல்ல தம்பி...

பேசி முடித்தவுடன் அவர் கண்களில் அருவியாய் நீர்த்துளிகள்..

"தம்பி ஒரு ரெண்டு ரூபா இருந்தா கொடேன்... பீடி வாங்க காசில்லை" என்றார்...

நூறு ருபாய் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் வெளியில் வந்தேன்...

வெளியே தெருச்சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் டேவிட் அண்ணனின் மகள்.

"பாப்பா இங்க வாம்மா"

"என்ன அங்கிள்"

"உன் பேர் என்ன்?"

"ஜாய், அங்கிள்"

இவள் பெயரைப்போலவே வாழ்க்கையிலும் இனி சந்தோஷம் ஏற்படுத்துவேன் என்று மனசுக்குள் உறுதி கொண்டு, அவள் கைகள் பற்றிக் கொண்டு சொன்னேன்

"இனி என்னை அங்கிள்னு கூப்பிடக்கூடாதும்மா"

"அப்போ எப்படி கூப்பிடறது"

"அப்பான்னு".

(இது ஒரு நிஜக்கதையின் கரு.)
-நிலாரசிகன் ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com