Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சோற்றுமூட்டை
மலையாள மூலம்:காரூர் நீலகண்ட பிள்ளை/தமிழில்:மு.குருமூர்த்தி
(சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சிறுகதை)


"சார், இந்தப்பையன் இங்கே வைத்திருந்த சோத்துமூட்டையைக் காணவில்லை என்கிறான்."

இரண்டாம் வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார். தலைமை ஆசிரியர் எழுதுவதை நிறுத்திவிட்டு அந்தப் பையனை நிமிர்ந்து நோக்கினார். கண்ணீர் ஓடிக்காய்ந்த சுவடுகள் அந்தக் கன்னங்களில் தெளிவாகத் தெரிந்தன.அந்த சுவடுகள் வழியே மீண்டும் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. பசியால் வாடிய அந்தப் பிஞ்சு முகத்தை அவர் ஒரு நிமிட நேரம் நோக்கிக் கொண்டிருந்தார்.

"சோத்துமூட்டையை எங்கே வைத்திருந்தாய்?" பள்ளிக்கூடத்தின் அதிகாரி என்கிற குரலில் தலைமை ஆசிரியரிடமிருந்து கேள்வி பிறந்தது.

"அதோ அந்த அறையிலே" சிறுவன் கைநீட்டிக் கூறினான்.

"தினந்தோறும் சோறு வைக்கிற இடத்திலே தான் வைத்திருக்கிறான். மற்றவர்களுடைய சோத்துமூட்டையெல்லாம் அதது வைத்த இடத்தில் இருக்கிறது. இவனுடைய சோத்து மூட்டையை மட்டும் காணவில்லை." இரண்டாம் வகுப்பு ஆசிரியர் விவரித்துக் கூறினார்.

"எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டாயா?”

"தேடிப் பார்த்துவிட்டேன் சார். எந்த இடத்திலும் இல்லை."

"மணி அடித்த உடனே போய்ப் பார்த்தாயா?"

"பார்த்தேன் சார்."

"இது ரொம்ப மோசம். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சோறு திருடித் தின்பதற்காகவே வருகிறார்கள் என்றால் அது மகாமோசம்."

தலைமை ஆசிரியர் அந்தப் பையனை சமாதானப்படுத்தினார்.

"எல்லோரும் வரட்டும். நான் கண்டுபிடிக்கிறேன். இனிமேல் யாரும் இதுபோல் செய்யாதபடி செய்வோம். உனக்குப் பசியாக இருக்கும். அழாமல் வீட்டுக்குப் போ. தனியாகப் போவாயா?"

"நான் இப்போது போகவில்லை சார்."

"சரி. அப்படியென்றால் வகுப்பில் போய் இரு."

அந்தப் பையன் போய்விட்டான். இரண்டாம் வகுப்பு ஆசிரியர் கொஞ்சநேரம் தலைமை ஆசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார். சோறு திருட்டுப் போனது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தலைமை ஆசிரியரும் "அதுதான் சரி" என்றார்.

பள்ளிக்கூடத்தில் இடைவேளை முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலித்தது. பிள்ளைகள் வெளியேறியதால் காலியாகக் கிடந்த பெஞ்சுகளில் படுத்துக் களைப்பாறிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு தங்களுடைய ஆசனங்களில் வந்து அமர்ந்து கொண்டார்கள். பசியும் வெய்யிலும் நிறைந்த அந்தப் பள்ளியின் சூழ்நிலையில் ஓடியாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் வியர்வையோடு வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் எத்தனையோ வகையினர்.

அந்தக் கூட்டத்தில் சில பிள்ளைகள் வீட்டுக்குப்போய் சோறு சாப்பிட்டுவிட்டு வந்திருந்தார்கள். சிலர் கஞ்சி குடித்துவிட்டு வந்திருந்தார்கள். வீட்டில் அம்மா கஞ்சி வைக்கவில்லை என்ற விவரத்தை வீடுவரை போய் தெரிந்துகொண்டு வந்த பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். சோத்துமூட்டையைக் கொண்டுவந்து திருப்தியாக சாப்பிட்ட பிள்ளைகளும் அங்கே இருந்தார்கள். அண்டைப் பக்கங்களில் இருந்த கிணறுகளில்
தண்ணீர் இறைத்துக் குடித்து தங்களுடைய பசியையும், தாகத்தையும் அப்போதைக்கு தீர்த்துக்கொண்ட பிள்ளைகளும் அங்கே இருந்தனர். சோத்துமூட்டையைப் பறிகொடுத்த சிறுவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான்.

சோறு திருட்டுப்போன விஷயம் பள்ளிக்கூடத்தில் வேகமாக பரவிவிட்டது. ஒவ்வொருத்தனும் அவனவனுடைய ஊகத்துக்கு ஏற்ற வகையில் அடுத்தவன்மீது பழிபோட்டுக் கொண்டிருந்தான்.

"சார். நான் தான் சோறு திருடித் தின்றேன் என்று பாலகிருஷ்ணன் சொல்கிறான் சார்" என்று ஒருவன் புகார் சொன்னான். அதே வேகத்தில் அவன் பாலகிருஷ்ணனிடம் திரும்பி "நீதாண்டா சோறு திருடித் தின்னவன்... திருடா.. .திருடா..." என்று பழியும் தீர்த்துக்கொண்டான்.

"நான் இனிமேல் இங்கே சோறு கொண்டுவந்து வைக்கப்போவதில்லை" மத்தாய் தீர்மானமாகச் சொன்னான். வகுப்பு முழுவதும் இதுவே பேச்சாகிப் போனது. ஆசிரியர்கள் தங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பிஞ்சுகளின் முகங்களைக் கண்களால் துருவிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சோறு திருடியவனைக் கண்டுபிடிக்கத்தான்.

தலைமை ஆசிரியர் கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கினார். சாம, பேத, தான முறைகள் எல்லாம் பயனற்றுப் போயின. யாரும் சோறுதிருடியதை ஒத்துக்கொள்ளவில்லை. தம்முடைய வாக்கு சாதுர்யத்தை பயன்படுத்தி இனிமையாக அறிவுரை செய்தார் தலைமை ஆசிரியர்.

"திருட்டு மகா பாவம். நீங்கள் செய்த திருட்டு மனிதர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு அது நிச்சயமாக தெரிந்துபோகும். திருடுவது கெட்ட குணம். ஒருவேளை நீங்கள் தெரியாமல் தவறு செய்திருக்கலாம். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் நான் உங்களை மன்னிப்பேன். தெய்வமும் உங்களை மன்னிக்கும். ஒருமுறை செய்த தவறை மறைக்க முயற்சி செய்தால் மீண்டும் மீண்டும் உங்களை தவறு செய்யத்தூண்டும். மேலும் மேலும் தவறுகள் செய்து கெட்டவர்களாகப் போய்விடுவீர்கள். கடைசியில் திருடன் என்ற பெயர்தான் கிடைக்கும். திருடனைப் போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போவதை பார்த்திருக்கிறீர்களா?"

சிலர் "ஆமாம்" என்றார்கள். சிலர் "இல்லை" என்றார்கள்.

"ஆமாம் அதனால்தான் சொல்லுகிறேன். உண்மையை சொல்லிவிடுங்கள்."

குற்றத்தை யாராவது ஏற்றுக் கொள்கிறார்களா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சோத்துமூட்டையை பறிகொடுத்த பையன் எழுந்து சுற்று முற்றும் நோக்கினான். யாரும் குற்றத்தை ஏற்கவில்லை. பிறகு தலைமை ஆசிரியர் ஒவ்வொருத்தனையும் தனித்தனியாக விசாரிக்கத் தொடங்கினார்.

"நீ எடுத்தாயா?... நீ...நீ..."

"இல்லை...இல்லை..."

"நான் வீட்டில் போய் சாப்பிட்டேன் சார்."

"நான் சோறு கொண்டுவந்திருந்தேன் சார்."

"ம்..."

அந்தச் சிறுவர்களின் முன்னால் தலைமை ஆசிரியர் தோற்றுவிட்டார். சக ஆசிரியர்களுக்கு அவர்மீது மதிப்பு உண்டு. பிள்ளைகளுக்கு நாலாம் வகுப்பு ஆசிரியர் என்றால் பயமும் பக்தியும் உண்டு. பள்ளிக்கூட மேனேஜருக்கு அவர்மீது நம்பிக்கை உண்டு. தலைமை ஆசிரியர் செய்யும் காரியங்களில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கு எப்பொழுதும் திருப்தி உண்டு.

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய அறைக்குத் திரும்பினார் தலைமை ஆசிரியர். உடைந்துபோன அவருடைய நாற்காலியில் தளர்ந்துபோய் உட்கார்ந்தார். அவருடைய முகம் களையிழந்திருந்தது. எதிலும் உற்சாகம் இல்லை. நாலாம் வகுப்புக்கு கணக்கு கொடுத்து அதைக் கரும்பலகையில் செய்து காண்பித்தார். விடை தவறாக வந்தது. பூகோளப்பாடம் நடத்தினார். மாணவர்கள் சொன்ன சரியான விடையை தவறு என்று சொல்லிவிட்டார். மணி அடிக்கவேண்டிய நேரத்தையும் மறந்துவிட்டார். சக ஆசிரியர் நினைவுபடுத்தியபோதுதான், அதுவும் பத்து நிமிடம் தாமதித்து மணியடிக்க அனுமதி கொடுத்தார்.

பள்ளிக்கூடம் விட்டாயிற்று. கதவுகளை இழுத்துப் பூட்டுவதற்காக பணியாள் காத்துக் கொண்டிருக்கிறான். தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்காக முதலாம் வகுப்பு ஆசிரியரும் காத்துக்கொண்டு நிற்கிறார். கையெழுத்து மறையும்நேரம்வரையில் தலைமை ஆசிரியர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்.

அன்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ரேடியோவை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த பள்ளிக்கூட மானேஜருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.

"மானேஜர் அவர்களுக்கு,

இன்றைய தினம் பள்ளியில் ஒரு திருட்டு நடந்துவிட்டது. ஒரு பையன் வைத்திருந்த சோற்று மூட்டையை யாரோ எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.
இதைப் போன்ற அவமானகரமான சம்பவம் நம் பள்ளியில் இதற்குமுன் நடந்தது இல்லை. நான் இந்தப் பள்ளிக்கு வந்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. பள்ளிக்கூடத்தில் திருடலாம் என்றால் சோற்று மூட்டையைக் காட்டிலும் விலை மதிப்புள்ள பொருட்கள் எத்தனையோ உள்ளன."

"பசித்தவர்கள் யாரேனும் எடுத்துச் சாப்பிட்டிருக்கலாம் என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் அதைவிட கூடுதலாக சோறு இருந்த பாத்திரங்கள் அங்கே இருந்திருக்கின்றன. திருட்டுப்போன சோறு பெரிய பிள்ளைகளுடைய பசியை போக்கப் போதுமானது இல்லை. அப்படியென்றால் சிறிய பிள்ளைகள் எடுத்திருக்கலாம். ஆனால் சின்னஞ்சிறிய பிள்ளைகளுக்கு அப்படித் திருட துணிச்சல் வருமோ? இத்தனை சோறு உண்டு பசி அடங்க வேண்டுமென்றால் பசி எவ்வளவு அதிகமாக இருந்திருக்கவேண்டும்? காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்த பிள்ளைகள் இதைப் போன்ற திருட்டில் ஈடுபட துணியமாட்டார்கள்.

காலையில் ஆகாரம் இல்லாமல் பட்டினியாக இருந்தவர்களுக்கு மதிய வேளையில் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். வீட்டில் உள்ள தாய்மார்கள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வார்கள். அதனால் அந்தப் பிள்ளைகள் திருடித் தின்னவேண்டிய அவசியம் இல்லை. காலையிலும் மதியத்திலும் பட்டினியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டார்கள். போகும் வழியில் அந்தப் பிள்ளை மயங்கி விழுந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுவது இயற்கைதானே!

குழந்தைகள் சிலேட்டோ, புத்தகமோ, பென்சிலோ திருடினார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சில நேரங்களில் மாம்பழத்தையோ, ஆரஞ்சுப் பழத்தையோ திருடினார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கலாம். சோறு திருடுதல்... அதுவும் யாருடைய சோறு என்று தெரியாத நிலையில்... நாம் கேள்விப்படாத ஒன்று. பள்ளிக்கூடப் பையன் ஒருவன் இப்படிச் செய்வான் என்று நாம் நம்ப முடியாது. ஒரு பிள்ளையைப் பார்த்து "நீ சோறு திருடினாயா?" என்று கேட்பது கூட மிகவும் கேவலம். நம்முடைய பள்ளி ஆசிரியர்களிடையேயும் மத்தியான பட்டினிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இந்தக்காரியம் செய்திருப்பார் என்று நம்மால் நினைக்க முடியுமா?"

"பிள்ளைகளும் திருடவில்லை. ஆசிரியர்களும் செய்யவில்லை. அந்நியர் எவரும் இங்கு வரவில்லை. பின்னே யார்? நானா? ஆம். நான் தான். நானே தான். இந்தப்பள்ளிக்கூடத்தின் அதிகாரியான நான் தான் இந்தக்காரியம் செய்தவன். நூற்று எண்பது எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கவேண்டிய நான் தான் இந்த ஈனக்காரியம் செய்தேன். ஐந்து சக ஆசிரியர்களை நிர்வாகம் செய்யவேண்டியவன், இந்தப்பள்ளிக்கூடத்தில்
ஏற்படும் எல்லா முறைகேடுகளையும் கண்டிக்க வேண்டியவன், எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டியவன், நான் தான் இந்த இழிவான காரியம் செய்தேன்."

"அடுத்த தலைமுறையின் கருவை உருவாக்க வேண்டிய நான் தான் சிறுபிள்ளையின் மத்தியான சோற்றைத் திருடித் தின்றேன். ஒரு நாய் மட்டுமே செய்யக்கூடிய ஈனமான காரியம் இது. உங்களுக்கு என்னிடம் அவமதிப்பும் கோபமும் உண்டாகியிருக்கும். உங்களுடைய பள்ளிக்கூடத்திற்கு என்னால் கெட்டபெயர். என்னை வேலையிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்று நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். நான் அதைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் தன்னுடைய சோறு திருட்டுப் போனதினால் பசித்து வாடி கண்ணீர்விட்ட ஆறுவயதுப்பையனுடைய பிஞ்சு முகம்தான் எனக்கு வேதனை அளிக்கிறது."

"நான் ஏன் இந்த இழிவான காரியம் செய்தேன் என்று நீங்கள் ஒரு கணம் சிந்திக்கவேண்டும். இதே போன்ற காரியத்தை நான் இதற்கு முன்னரும் செய்திருக்கலாமே? அப்படிச் செய்யவில்லை. அப்படிச்செய்வதற்கான அவசியம் உண்டாகாமல் இல்லை. அவமானமும் பயமுமே என்னைத்
தடுத்துக்கொண்டு இருந்தன. ஆனால் இப்போது நான் அவற்றைக் கடந்துவிட்டேன். நான் என்ன செய்வது? உயிர்வாழ வேண்டாமா? உங்கள் பள்ளிக்கூடத்தில் முப்பது வருஷமாக வேலை செய்துவரும் எனக்கு நீங்கள் தருகிற சொற்பரூபாய் எத்தனை பேருடைய நித்தியத்
தேவையை தீர்க்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு எதற்காகத் தெரியவேண்டும்? வேண்டாம், ஒருவரும் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று நீங்கள் ஒதுக்கிவைத்தாலும் ஒருநாள் எல்லோருக்கும் இது தெரிய வரும். எட்டு பேர்களைக்கொண்ட ஒரு குடும்பத்துக்கு முப்பது நாட்களுக்கு அதுவும் இப்படி பொருட்களின் விலையேறிய நாட்களில் சம்பளப் பட்டியலில் ஒருவிதமாகவும், உண்மையில் அரைவயிற்றுக்கும் போதாதவாறு தரும் சம்பளத் தொகையில் எப்படி நான் வாழ முடியும்?"

"பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். பள்ளிக்கூடத்தை திறமையாக நிர்வாகம் செய்யவேண்டும். செய்யச்செய்ய வளர்ந்துகொண்டே போகும் வேலையையும் செய்து தீர்க்கவேண்டும். மானத்தோடும் மரியாதையோடும் வாழவும் வேண்டும். வலிமை குன்றிய வயது
முதிர்ந்த பெற்றோரும் எனக்கு இருக்கிறார்கள். என்னையே நம்பி வாழும் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். எனக்கும் ஆசாபாசங்கள் உண்டு, இல்லையா? உங்களைப்போலவே! ஒரு பிஞ்சுக் குழந்தையின்சோற்றை எடுத்துத் தின்றேன். திருடவேண்டும் என்ற நோக்கத்திலா நான் அப்படிச் செய்தேன்? ஒருவேளை அப்படியும் இருக்கலாம்."

"இதோ, நான் மனம் விட்டுச்சொல்கிறேன். நேற்றுக்காலையில் கஞ்சிகுடித்ததற்குப் பின்னால் இருபத்தெட்டு மணிநேரம் வேலை செய்து தளர்ந்து, இனி வீழ்ந்துபோவேன் என்று தோன்றிய நிலையில்... நான் ஒரு பிள்ளையின், அதுவும் யாருடையது என்று தெரியாத சோற்றை... மூன்று மணி நேரத்திற்கு முன்னால் ஆகாரம் சாப்பிட்டிருக்கக்கூடியவனுடைய, மூன்று அல்லது நான்கு கவளங்களே வரக்கூடிய சோற்றை எடுத்துத் தின்றேன். அது குற்றமாக இருக்கலாம். பாவமாகவும் இருக்கலாம். ஆண்டவன் முன்னால் இதற்கு பதில்சொல்ல வேண்டிவரலாம். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்திலும் நான் இதற்கு உண்டான விளக்கத்தை கொடுக்கும்படி நிர்பந்திக்கப்படலாம். விளக்கத்தை நான் சொல்லிக் கொள்கிறேன்."

"ஆனால், எனக்கு நீங்கள் இதைச் சொல்லுங்கள். நான் வேறு என்ன செய்திருக்கலாம்?"


- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com