Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
திரைகடலோடி.....மனநலம் தேடு
மு.குருமூர்த்தி


நள்ளிரவில் அந்தவிமானம் தமிழ்நாட்டின் தரையைத்தொட்டபோது அவனுடைய நினைவுகள் சொந்த ஊரைத் தொட்டுவிட்டிருந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் இதே விமான நிலையத்திலிருந்து கம்புக்கூட்டில் ஒரு மஞ்சள் பையும் தோளில் ஒரு பயணப்பையுமாக மிரள மிரள வரிசையில் நின்றது நினைவுக்கு வந்தது.

அந்த நினைவுகளை புறம்தள்ளிவிட்டு வீட்டுநினைப்பு முண்டியடித்து முன்னால் நின்றது.

சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்......

ஆயாவை.....அம்மாவை.....மகனை.....மகளை....மனைவியை...தொட்டுப்பேசணும்.....குளக்கணும்.....தரையில் உட்கார்ந்து சுற்றம் சூழ பேசிக்கொண்டே சாப்பிடணும்......

மேசையில் பரத்திவைத்த சாமான்களின்மீது டூட்டியிலிருந்த சுங்க அதிகாரியின் பேராசைக்கண்கள் மேய்ந்தன....அந்தமேய்ச்சலில் ஆசை மகளுக்கு பார்த்துப்பார்த்து வாங்கிவந்த பேசும் பொம்மை இரையாகிப்போனது....

பரவாயில்லை.....சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்.......

டாலரை மாற்றித்தரும் அரசு வங்கி பூட்டியிருக்கிறது. உள்ளே லைட்டை எரியவிட்டுக்கொண்டு ஓர் ஆள் மல்லாந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். போகட்டும்.....வெளியில் புரோக்கர் நிற்பான்......கொஞ்சம் பணம் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.......

சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்......

வம்புபேசும் போர்ட்டர்கள்......டாக்ஸி டிரைவர்கள்......வலிந்து அழைக்கும் ஓட்டல்காரர்கள்.......எல்லோரும் பொருட்டல்ல......அவனுக்கு.

சீக்கிரம் வீட்டுக்குப்போகணும்......

வெளிநாட்டிற்குப்போய் சம்பாதித்துவரும் நம்முடைய பிள்ளைகள் நம்முடைய கண்ணெதிரே சந்திக்கும் அவலங்கள்தான் இவை.

நம்முடைய கண்ணுக்குத்தெரியாமல் அவர்கள் சந்தித்த அவலங்கள் எத்தனை.......

உலகமயமாக்கலின் அடிப்படையே இடப்பெயர்ச்சிதான்.

இடம்பெயர்ந்துவாழ்வதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளால் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வது இன்று அதிகரித்திருக்கிறது.

ஏறத்தாழ 170 மில்லியன் மக்கள் தங்களுடைய பிறந்த நாட்டைவிட்டு அயல்நாட்டில் குடியேறிவாழ்வதாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 700 மில்லியன் மக்கள் சொந்தநாட்டின் எல்லைகடந்து பயணம் செய்வதாக கருதப்படுகிறது.

இந்த மாபெரும் இடப்பெயர்ச்சி காரணமாக தொற்றுநோய்கள் பரவுகின்றன என்பது நமக்குத்தெரிந்த செய்தி.

அதேசமயம் எவ்வளவுபேர் மனநல பிறழ்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை.

உலகமயமாக்கல் வழியாக பரந்துபட்ட சமூக பொருளாதார நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதே நேரத்தில் மிதமிஞ்சிய நுகர்வுக்கலாச்சாரம், வேலையில்லாத் திண்டாட்டம், வேலைக்கான உத்திரவாதமின்மை, வறுமை அதிகரிப்பு, சாதாரண மனிதனுக்குக்கூட எட்டாக் கனியாகிப்போன கல்வியும் சுகாதாரமும், இயலாதவர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கும் சமூக பாதுகாப்பின்மை ஆகிய கேடுகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

கிராமப்பொருளாதாரம் நசித்துப்போவதும் உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் கூட மக்களை இடம்பெயர்ந்து வாழத்தூண்டுகின்றன

உலகமயமாக்கல் மக்களை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ இடம்பெயர்ந்து வாழச்செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் மனநல பிறழ்வுகளுக்கும் அதுவே காரணமாக அமைகிறது என்பதை மறுக்க இயலாது.

விரைவாக வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு முக்கியமான தேவை மலிவான உடலுழைப்பு ஆகும்.

சட்டதிட்டங்கள் அறிந்திராத கிராமத்து மகளிரை குடும்பங்களை விட்டு பிரித்துக் கொண்டுவந்துவிட்டால் மலிவான உடலுழைப்பு எளிதில் கிடைத்துவிடும்.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் குறைவான மக்கள்பெருக்கமும், வளர்ந்துவரும் முதியோர் எண்ணிக்கையும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.

மலிவான விலையில் உடலுழைப்பை அளிக்கக்கூடியவர்கள் அவர்களுக்கு வேண்டும்.

பழகப்பழக பல்வேறுகாரணங்களினால் இவர்கள்மீது முதலாளிகளுக்கு வெறுப்பேற்படுவது அன்றாட நிகழ்வாகிப் போய்விட்டது.

இதுபோன்ற இடங்களில் மனித உரிமைகள் பறிக்கப்படும்போது பாதிப்படைவோர் அண்டைநாடுகளில் தஞ்சம் புகுவதும் நடைபெறுகிறது.

அண்டைநாடுகள் ஏழைநாடுகளாக இருந்துவிட்டால் தஞ்சம் தேடிவந்தவர்களை பராமரிக்கும் சக்தியில்லாமல் திணறுவதும் கவலைக்குரியது.

வறுமை காரணமாக ஆள்கடத்தும் வியாபாரம் சட்டவிரோதக்குடியேற்றம் ஆகியவை உருவெடுக்கின்றன.

நுகர்வுக்கலாச்சாரம், தகவல்தொடர்புசாதனங்கள் காரணமாக பல்வேறு சமூகக் குழுக்களும் தம்முள் நெருங்கிவரும் வாய்ப்பைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இடம்பெயர்ந்து வாழும் குழுக்களை ஆராயும்போது......... கூடி வாழும் சமுதாயமாக இணைந்து செயல்படுவதில் ஆர்வமுள்ள ஏழைமக்கள்.......... சுயநல நாட்டமுள்ள பணக்காரக்குழுக்களை நோக்கி நகருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேறுபட்ட சமூகக்குழுக்கள் தம்முள் பொருந்திப்போகாமலும் அதேசமயம் நெருங்கிவாழவேண்டிய கட்டாயச்சூழலும் ஏற்படும்போது தனிமனிதர்களிடையே மனநல பிறழ்வுகளும், குழுக்களிடையே பதற்றமும் தோன்றுகிறது.

இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிம்மதியை ஒரு தனிமனிதனோ ஒரு குழுவோ சேதப்படுத்துவதை நாம் அலட்சியப்படுத்த இயலாது.


தனிமைப்படுத்தப்படுவது, சிறுகூறாகிப்போவது, சுய அடையாளமில்லாத வாழ்க்கை, உற்றார் உறவினரிடமிருந்து பிரிந்து வாழ்வது, இருப்பிடப் பிரச்சினைகள், பழகிப்போன குடும்ப கலாச்சாரம் இவையெல்லாம் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மனநலத்தை பாதிக்கின்றன.

குடிபெயர்ந்து வாழ்வோரின் இன, கலாசார, மொழி பெருமைகளை முதலாளிகள் அங்கீகரிக்காமற்போகும்போது மன உளைச்சல் மேலும் அதிகரிக்கிறது.

இந்த சூழலில் அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. அயல்நாடுகளில் தம்முடைய குடிமக்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது தூதரகங்கள் மூலம் விரைவாக செயல்பட்டு தீர்வுகாணவேண்டியதுதான் நல்ல அரசின் இலக்கணம் ஆகும்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் நம்வீட்டுப்பிள்ளைகளுக்கு அவர்களுடைய பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு அரணாக நிற்கவேண்டியது நல்ல அரசின் கடமையாகும்.

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com