Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கைகாட்டி(7)
மு.குருமூர்த்தி


புத்தகப்பைக்குள்ளிருந்த அலுமினியத் தட்டை உருவிக்கொண்டு வேப்பமரத்தடிக்கு மணிவேல் ஓடி வந்தபோது வரிசை நீண்டிருந்தது.

நச நசவென்று பெய்த மழையால் ஏற்கனவே சேறாகி இருந்த பூமி மாணவர்களின் காலடிபட்டு சேறடித்தாற்போல் இருந்தது.

சோறு வாங்கிக்கொண்டு வந்த பழனியின் தட்டை மணிவேல் உற்றுப்பார்த்தான். சோற்றுக்கட்டியின் உச்சியில் சீவிப்போட்ட ஒரு சுரைக்காய்த்துண்டும் அதற்கடியில் வெளுத்த மஞ்சள் நிறத்தில் ஒளிந்து கொண்டிருந்த சாம்பாரும் தெரிந்தது.

கண்சிமிட்டும் நேரத்திற்குமேல் பார்ப்பதற்கு அந்த சாப்பாட்டுத்தட்டில் எதுவும் இல்லை. சாப்பாடு வேண்டாம் என்று மணிவேல் முடிவு செய்துவிட்டான். தட்டை செல்வத்திடம் கொடுத்துவிட்டு குளக்கரையைப் பார்க்க நடந்தான்.

செல்வம் அவனுடைய தெரு. பத்தாம் வகுப்பு படிக்கிறவன். தட்டு எடுத்துவர வெட்கம். பெரிய பசங்களோடு சுவரின் நிழலில் நிற்பவன்.

மத்தியானம் சாப்பிடாத மாணவர்களின் கூட்டத்தில் மணிவேலுவும் அடக்கம். மத்தியானம் சாப்பிடவில்லை என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் இந்தக்கூட்டம் ரொம்பவும் கவனமாக இருக்கும்.

தட்டுகழுவும் இடத்தில் கூட்டத்தோடு தண்ணீர் வாங்கிக்குடித்துவிட்டு.......

பையிலிருக்கும் காசை ஆயாக்கிழவியிடம் கொடுத்தால் இரண்டு மூன்று வத்தல் கிடைக்கும்.......

வத்தலோடு பசியையும் தின்றுவிட்டு........

மற்ற மாணவர்களுடன் குளக்கரையில் நின்று கல்வீசிக் கொண்டிருப்பார்கள்.

சிலர் கொடுக்காப்புளி மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். கூட்டமாக கொஞ்சிக்கொண்டிருக்கும் பச்சைக்கிளிகள் பழம் சாப்பிடுவதில் இவர்களுடைய பசி மறந்துபோகும்.

கொஞ்ச நேரம்தான். பெல் அடித்ததும் சாப்பிட்டவனும் சாப்பிடாதவனும் ஒன்றுதான்.

பள்ளிக்கூடங்களில் மத்தியானம் சத்துணவு கொடுக்கப்படும் நேரத்தில் காணக்கிடைக்கிற காட்சிதான் இது.

பெரிய சாருக்கு இது பழகிப்போன ஒன்று.

கையில் குச்சி வைத்துக்கொண்டு எல்லோரையும் கட்டாயப்படுத்தி சாப்பாடு வாங்கிக்கொள்ளுமாறு அவரால் செய்யமுடியும்.

ஆண்டைகள் வீட்டுவாசலில் அடங்கிப் போனவர்கள் காத்துநின்று ராத்திரிச் சோறு வாங்கிக்கொள்வது மாதிரி...........

மாணவர்கள் சாப்பிடும் நேரத்தில் அவர் குச்சியை வைத்துக் கொள்வதில்லை.

சாப்பாட்டை வாங்கிக்கொள்ளுமாறு செய்யலாமே தவிர சாப்பிட வைக்கமுடியாது...............அது உள்ளே போகும் தரத்தில் இருந்தால்தானே கட்டாயப்படுத்தலாம் என்பது அவருடைய வாதம், காயும் கீரையும் மிதக்கும் வாசனையான சாம்பார் ஊற்றும் நாட்களில் நிலைமை தலைகீழாக இருக்கும். வீட்டில் இருந்து சாதம் மட்டும் கொண்டுவந்த பெண்பிள்ளைகள் கூட சாம்பாருக்காக வரிசையில் நிற்பார்கள். தோழிகளுக்கு டிபன்பாக்ஸ் மூடியில் வழிய வழிய சோறு வாங்கிக்கொண்டு வகுப்பறைக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள். சாப்பிடும் நேரத்தைவிட பேசும் நேரம் அதிகமாக இருக்கும்.

முட்டை கொடுக்கும் நாட்களில் ஏறக்குறைய எல்லாப் பிள்ளைகளையும் வரிசையில் பார்க்கலாம்.

நடந்துகொண்டே முட்டையை ரசித்துக்கடிக்கும் சிறுவர்கள்......

குனிந்ததலை நிமிராமல் தட்டேந்தி நடக்கும் வளர்ந்த பெண்கள்...

சாம்பாரை மட்டும் வழித்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சாம்பாருக்காக சோற்றுக்கட்டியுடன் நிற்கும் பிள்ளைகள்.......

சோற்று வாசனை பிடிக்காமல் குளத்தைநோக்கி ஓடும் பிள்ளைகள்......

அண்ணே......அண்ணே.....என்ற கெஞ்சல்......

சோற்றைவெட்டி தட்டில் போடும் மயில்கண்ணுதான் அந்த அண்ணன்......

கொஞ்ச நேரம் அந்த வேப்பமரத்தடி பரபரப்பாக இருக்கும். மாணவர்கள் சாப்பிட்டு முடியும்வரை பெரியசார் புங்கமரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டேயிருப்பார்.

பெரிய சாரை பார்த்துக்கொண்டே வரிசையில் ஒருவரோடு ஒருவர் தள்ளிக்கொண்டு நிற்பார்கள்.

அது அவருக்கு பிடித்தமான காட்சி என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் சாப்பாட்டு நேரத்தில் பெரிய சார் யாரையும் அடிக்கமாட்டார் என்பது மட்டும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவரைப் பொறுத்தவரையில் அங்கே அவர் அவசியம் நிற்கவேண்டும்.

வளர்ந்த மாணவர்கள் கூட்டமாக சுவரின் நிழலில்.

அவர்களுக்கு தட்டு இல்லை.

சிறு பையன்கள் சாப்பிட்டபின் தரப்போகும் தட்டிற்காக ஒதுங்கி நிற்பவர்கள்.

சமையல் கொட்டகையின் கீற்றுகளுக்கிடையில் அங்கங்கே செருகிவைத்திருக்கும் நெளிந்துபோன அலுமினியத் தட்டுகள் அவர்களுடையதாக இருக்கும்.

லேட்டஸ்ட் முடிஅலங்காரம்....கிருதா வளர்க்கும் முயற்சியில் சிலர்..... கையிலும் கழுத்திலும் தங்கத்திற்கு பதிலாக எவர்சில்வர் செயின்கள்.......அரும்பிய மீசைகள்......புதிதாக மழித்த முகம்........பெரும்பாலும் அரைக்கால் சட்டைக்கு விடைகொடுத்து முழுக்கால் சட்டைக்கு மாறியிருப்பார்கள்.... இவற்றுடன் அந்தக்கூட்டம் கடைசியில் சாப்பிடக் காத்து நிற்கும்.

வருடக்கடைசி நெருங்கும்போது இந்தக்கூட்டம் பெரியதாகி இருக்கும்.

வரிசையில் நிற்பது அவர்களுக்கு கெளரவக்குறைச்சல். கடைசியில் சாப்பிடுவதால் மீதமுள்ள சோறு குழம்பு எல்லாமே அதிகமாக கிடைக்கும்.

சிலநாட்களில் சோறுபோதாமல் போய்விடுவதும் உண்டு. அப்போதெல்லாம் அமைப்பாளருடன் சண்டைபோட்டு ஆயாவின் தூக்குச்சட்டியில் உள்ள சாப்பாட்டை வாங்கிச்சாப்பிடுவதும் உண்டு.

ஆயாவின் வீட்டில் அன்று பட்டினி.

பெரியசாருக்கு எல்லாம் தெரியும்.அவர் வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்பார். அமைப்பாளருடன் வாக்குவாதம் நடந்தால்கூட அது பெரியசாரை பார்த்துக்கொண்டே நடக்கும்.

அந்த வாக்குவாதம் தேவையானது என்பது அவரது வாதம்.

இடைவேளை மணிஅடித்ததும் சாப்பாட்டிற்காக மாணவர்கள் ஓடிவரவேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பு முதலில் நிற்கும்....அப்புறம் ஏழு..எட்டு..ஒன்பது.

பெண்கள் தனியாக... ஆறாம் வகுப்பிற்குள் மட்டும் தள்ளுமுள்ளு நடக்கும்...அதுவும் பெரியசாரை பார்த்துக்கொண்டே....

ஒட்டாத தெருக்கள் எல்லாம் ஒட்டிநிற்கும் வரிசை அது.....

எட்டிநிற்கும் மக்களின் பிள்ளைகள் ஒட்டி நிற்கும் வரிசை அது.....

செட்டித்தெருவும், சிவன்கோவில்தெருவும், காலனித்தெருவும், வடக்குத்தெருவும், இன்னும் கிராமத்து தெருக்கள் எல்லாம் ஒன்றின்மீது ஒன்றாக விழுந்து புரள்வதாகத்தான் அவருக்குத் தோன்றும்.

இந்த சாப்பாடு இல்லாமற்போனால் இந்தப்பிள்ளைகள் எல்லாம் தொட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என்ன......

அடுப்பிலிருந்து சோற்றுவட்டாவையும், சாம்பார் வட்டாவையும் இறக்கிவைக்க ஆயாக் கிழவிக்கு பெரிய பையன்கள் துணை வேண்டும். அப்போதும் அவள் அவர்களைத் திட்டிக்கொண்டே இருப்பாள். சூடான சோற்றை அலுமினிய பேசினில் அள்ளிக் கொடுப்பது மட்டும் அவள் வேலை. சூடான ஆவிபட்டு அவளுடைய நெற்றியின் விபூதிப்பட்டை மறைந்திருக்கும் நேரம் அது.

இடையிடையே இரண்டு எவர்சில்வர் வாளிகளில் சோற்றை நிரப்பி ஓரமாக வைத்துக்கொள்வாள்.

சாம்பார் வட்டு நேரடியாக மரத்தடி மேடைக்குப் போய்விடும். கையில் அளவுக் கரண்டியுடன் சின்ன ஆயா சாம்பாரை கலக்கி விட்டுக்கொள்வாள். சாம்பார் மட்டும்தான் அவள் போடுவாள். ஒருவருக்கு ஒரு கரண்டி....அவ்வளவுதான். கலக்கும்போது கச்சிதமாக ஒரு காய்கறித்துண்டு அல்லது அளவான கீரை கரண்டியில் வரும்.

சாம்பார் போதவில்லையென்றால் மறுபடியும் தனிவரிசை.

................மிச்சம் இருந்தால் மட்டும் அது கிடைக்கும்.

மயில்கண்ணுதான் சாதம் வெட்டிப்போடுகிறவன். பத்தாம் வகுப்பு படிக்கும் பெரிய பையன்.

சாப்பாட்டு நேரத்தில் எல்லா பிள்ளைகளுக்கும் அவன்தான் அண்ணன்.

கையில் அன்னவெட்டியுடன் குனிந்ததலை நிமிராமல் தட்டையும் முகத்தையும் பார்த்து சோற்றை வெட்டி தட்டில் வைத்துக்கொடுப்பான்.

பிள்ளைகளிடையே தள்ளு முள்ளு நடக்கும் நேரங்களில் அண்ணே..அண்ணே என்ற பிள்ளைகளின் கூக்குரல் ஓங்கி ஒலிக்கும்.

பெரிய பையனாக இருந்தாலும் யாரையும் திட்டியதில்லை.

பெரியசார் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதை பிள்ளைகள் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

பையன்களுடைய வரிசை பெண்களுடைய வரிசை இரண்டிற்கும் நிரந்து சாதம் போடுவான்.

அன்னவெட்டியில் சாதம் ஒட்டிக் கொள்ளும்போது அலுமினிய பேசின் விளிம்பில் சோற்றை வழித்துக்கொள்வான்.

பேசினில் சாதம் தீர்ந்துபோனவுடன் ஒரு பெரிய அடி பேசினுக்கு விழும்.

பெரிய பையன்கள் சமையலறையில் இருந்து சூடான சோறு நிரம்பிய அடுத்த பேசினை கொண்டுவந்துவைப்பார்கள். சூடான ஆவிபட்டு முகத்தில் வியர்வைத்துளிகள்......

சிவன்கோவில்தெருப்பிள்ளைகள்........
இடையிடையே காலனித்தெரு பிள்ளைகள்.....
தங்கச்சங்கிலிபோட்ட செட்டியார்வீட்டுப்பெண்.......
பின்னால் கறுப்புக்கயிறு அணிந்த காலனிப்பெண்.....
செருப்புப்போட்ட சிங்கப்பூரார் வீட்டுப்பையன்.......
முன்னால் வெறும் காலோடு வேறு ஒருவன்........
சட்டை கிழிந்தவன்.....
பின்னால் புதுச்சட்டை போட்டவன்.....
முட்டைக்காக சோறு வாங்க வந்தவன்....
தினமும் சோறு வாங்கும் பிள்ளை....
எல்லாம் அவனுக்கு அத்துபடி.

சூரியஉதயத்தில் கூலிவேலைக்குப்போவதற்கு முன்னால் அம்மா வாங்கிக்கொடுத்த பார்சல் டீக்குப்பிறகு.................

முதன்முதலாக சாப்பாட்டைப் பார்க்கும் பிள்ளைகளை அவனுக்குத் தெரியும்.

சூரியன் மறைந்தபிறகு முன்னிருட்டு நேரத்தில் ஆண்டைகளின் வீட்டுவாசலில் சோற்றுக்காக தட்டேந்தப்போகும் பிள்ளைகளையும் அவனுக்குத் தெரியும்.

அந்த நேரங்களில் அன்னவெட்டி கொஞ்சம் அழுத்தமாக சோற்றை வெட்டும். பசியைத்தின்று பசியாறத்தெரிந்தவர்களின் குணம் அது.

ஏகாலியும்.......
அம்பட்டனும்......
சக்கிலியனும்.....
குடிப்பறையனும்.....
தட்டேந்தாமற்போனால் அந்தகிராமம் நசிந்துபோகும் என்றொரு நம்பிக்கை.

சூத்திர பிராமணர்கள் நசிந்துபோகக்கூடாது என்பதற்காகவே டீக்கடையில் தனித்தனியாக குவளைகள் வைத்திருப்பதாகச் சொல்லும் பெற்றோர்களையும் பெரியசாருக்குத் தெரியும்.

சமத்துவம் பேசுவோரின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கண்ணடைத்து நடக்கும் நரிகளையும் பெரியசாருக்குத் தெரியும்.

மயில்கண்ணு வெட்டிப்போடும் சோற்றுக்காக அவர்கள் பெற்ற பிள்ளைகள் அவனை அண்ணே.....அண்ணே என்று அழைப்பதை கேட்பதற்காகவே பெரியசார் புங்கமரத்தடியில் நின்றுகொண்டிருப்பார்.

ஆனால்......

எல்லாப் பிள்ளைகளுடைய தட்டிலும் சோற்றை நிரந்துபோட வேண்டுமே என்ற கவனத்தில் இருப்பான் மயில்கண்ணு என்ற அந்த ஏகாலி வீட்டுப்பிள்ளை.

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com