KeetruLiteratureNovel
நாவல்

வால் பாண்டி சரித்திரம் - 2

நிலாரசிகன்

தட்டப்பாறை பள்ளியில் சேர்த்துவிட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார் அப்பா. ஒரு வாரம் ஒன்றும் புரியவில்லை. தட்டும் டம்ளரும் எடுத்துகொண்டு வரிசையில் நின்று உணவு வாங்க வேண்டும் என்றார்கள் ஹாஸ்டலில். சிங்கம் மாதிரி ஊரில் சுற்றிக்கொண்டிருந்த இந்த பாண்டிக்கு வந்த கதியை நினைத்து கோபம் வந்தது. முதல் நாள் சாப்பிடவில்லை. மறுநாளிலிருந்து உடம்பு சிங்கம் மாதிரி இருக்க உணவுதான் முக்கியம் என்பதாலும், கோபத்தைவிட பசிக்கும் வயிற்றுக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதாலும் கோபத்தை விரட்டிவிட்டு வரிசையில் தட்டும் டம்ளருமாய் நின்றேன்.

ஒரு வாரத்தில் அப்பாவும் அம்மாவும் என்னை பார்க்க வந்தார்கள். அம்மா ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள். அம்மாவை கட்டிக்கொண்டே அப்பாவை முறைத்தேன். "உங்க அம்மாவுக்கு நீயில்லாம வீடே வெறிச்சுன்னு இருக்காம், அதான் உன்னை கூட்டிட்டுப் போலாம்னு வந்தோம். திரும்பவும் உன்னை பழைய பள்ளிக்கூடத்திலேயே சேர்க்கப் போறேன்" என்றார் அப்பா. அம்மாவை இன்னும் இறுக்கமாய் கட்டிக்கொண்டேன். மீண்டும் என் பள்ளிக்கே போகப்போகிறேன் என்றாலும் பெயில் ஆனதால் அதே வகுப்பில் இருக்கப் போகிறேனே என்கிற கவலையும் வந்தது.

அம்மாதான் சொன்னாள் "இந்த வாட்டி ஒழுங்கா படிச்சிரு பாண்டி இல்லன்னா உங்கப்பா உன்னை கடைப்பையன் வேலைக்கு பெரியசாமி அண்ணன் கடையில சேத்து விட்டுடுவாங்க". அம்மாவுக்கு நான் படித்து பெரிய இஞ்சினியர் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அம்மாவுக்காக தலையை ஆட்டிவிட்டு "நல்லா படிக்கிறேன்மா" என்றேன். ஊர் வந்து சேர்ந்தவுடன் கார்த்தியை தேடி அவன் வீட்டிற்கு ஓடினேன். வைக்கோல் போரில் சாக்குப்பையை விரித்து தூங்கிக்கொண்டிருந்தான். மெதுவாக பக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து அவன் தலையில் ஊற்றினேன். "யம்மே" என்று அலறி புடைத்துக்கொண்டு எழுந்தான். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. "பார்த்தியால இதுக்குதான் சோம்பேறி மாதிரி பகல்ல தூங்கக்கூடாதுன்னு சொல்றது! பாண்டி வந்துருக்கேன் நீ பாட்டுக்கு தூங்கிட்டு கிடக்க?"

என்னைப் பார்த்த சந்தோசத்தில் ஓடிவந்து கையை பிடித்துக்கொண்டான். "எலே பாண்டி எப்பம்ல வந்த? சரி வந்த உடனே உன் புத்திய காமிச்சுட்டல்லா? நானும் மழபெய்யுதோன்னு பயந்துட்டேன்" சட்டையை கழற்றி பிழிந்துகொண்டே முகம் மலர சொன்னான் கார்த்தி. "சீக்கிரம் சட்டைய மாத்திட்டு வா. இன்னைக்கு ஒரு பயலுக்கு சங்கை ஊதணும்" கையை முறுக்கிக்கொண்டே சொன்னவுடன் புரிந்துவிட்டது கார்த்திக்கு.

"ஓ நீ பெயிலா போன்னு சாபம் விட்டானே நம்ம டேவிட்டு அவனையால கொல்லப்போற?" கேட்டுவிட்டு சிரித்தான்.

"அவனேதான் அவன் மண்டையில என் பம்பரத்தால ஒரு கொத்து விட்டாத்தான் என் கோவம் தீரும்"

"அவன் ஊர்ல இல்ல, திருச்செந்தூர்ல அவங்க பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கான், உனக்கு ஒரு சந்தோசமான நியூஸ் வச்சிருக்கேன் பாண்டி" கள்ளச்சிரிப்புடன் சொன்னான் கார்த்தி. எனக்கு லேசாக புரிந்தாலும் அவன் சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

"நீ தட்டப்பாறைக்கு போனதுல இருந்து நம்ம இல்ல இல்ல, உன் ப்ரெண்டு முத்துக்காமாட்சி சரியாவே யாருகிட்டேயும் பேச மாட்டைக்கா" சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தான்.

"இது நல்ல நியூஸாலே? ஒனக்கு கொழுப்பு ஏறிப்போச்சு முட்டைக்கண்ணி ஒழுங்கா பல்லு வெளக்க மாட்டா அதான் யாருகிட்டேயும் பேசிருக்க மாட்டா, சரி கவுட்டைய எடுத்துட்டு வா, குருவி அடிக்க போவம்" சொல்லிவிட்டு நடந்தேன்.

முத்துக்காமாட்சி என் தோழி. ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தாள். எனக்கு எப்பொழுதுமே கடைசி பெஞ்சில் உட்காருவதுதான் பிடிக்கும். அங்கேதான் வாத்தியார் வரமாட்டார். எனக்கு முன் உட்கார்ந்திருப்பான் குண்டு ராமகிருஷ்ணன். அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்துகொண்டால் எந்த கேள்வியும் யாராலும் கேட்கமுடியாது. என் வால்த்தனம் தெரிந்தே எங்கள் வகுப்பு பிள்ளைகள் யாரும் என்னிடம் பேசமாட்டார்கள். ஒரு முறை எங்கள் வகுப்பு அன்னலட்சுமி என்னை பற்றி ஏதோ திட்டியிருக்கிறாள். அடுத்த நாள் பட்டத்திற்கு செய்து வைத்திருந்த வாலை எடுத்து அவளுக்கு தெரியாமல் அவள் ஜடையில் மாட்டிவிட்டுவிட்டேன்.

அந்தக் கோவத்தில் எந்த பிள்ளைகளும் என்னிடம் பேசுவதேயில்லை. முத்துக்காமாட்சி வந்து சேர்ந்த இரண்டுநாள் யாரிடமும் அதிகம் பேசவில்லை. ஒரு நாள் கடைசி பெஞ்சுக்கு வந்தாள் "பாண்டி நீ பண்ற குறும்ப பாத்து சிரிப்பு சிரிப்பா வருது, நானும் வீட்ல இப்படித்தான் நிறைய குறும்பு பண்ணுவேன்" பவ்யமாக என்னிடம் வந்து சொன்னாள். சரி நம்ம வால்சாதி பொண்ணாச்சேன்னு நானும் பேச ஆரம்பித்தேன்.

"என்ன பாண்டி யோசனையெல்லாம் பலமா இருக்கு?" கவுட்டைக்கு கற்கள் பொறுக்கிக்கொண்டே கேட்டான் கார்த்தி. "ஒழுங்கா கல்லை பொறுக்கினோமா வேட்டைக்கு போயி நாலு குருவி அடிச்சோமான்னு இல்லாம யோசனையை பத்தி கேட்கற ஆளைப்பாரு, ஒரு ஓந்தாணாவது அடிச்சிருக்கியா நீ" அவன் வீரத்தை பற்றி கேட்டவுடன் முகம் கறுத்துவிட்டது. எதுவும் பேசாமல் நடந்துவந்தான்.

"என்ன கோவிச்சுகிட்டியா கார்த்தி" தோளில் கைபோட்டேன். பேசிக்கொண்டே வாழைத்தோட்டம் நோக்கி நடந்தோம். எதிரே வந்துகொண்டிருந்தாள் முத்துக்காமாட்சி.

(தொடரும்...)

- நிலாரசிகன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்