Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review

எத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்?
2008இன் ஞானம் சிறப்பிதழைப் பார்த்தால் விளங்கும்
வசந்தன்

நவீன இலக்கியச் சிறப்பிதழாக ஞானம் சஞ்சிகையின் நூறாவது இதழ் வந்திருக்கிறது. அதில் பெரும் பகுதியானவை கட்டுரைகள். கட்டுரைகளில் பெரும்பகுதியானவை இலக்கிய வரலாறுகள். இலக்கிய வரலாறுகளில் பெரும் பகுதியானவை பட்டியல்கள். பட்டியல்கள் ஆய்வாளர்கட்குத் தேவையானவை தான். என்றாலும் அவை போதுமானவை அல்ல. என்ன தேவைக்காகப் பட்டியல் ஒன்று தரப்படுகின்றது என்கிறதை நாங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வு என்கிற பேரில் வருகிற அரைகுறைப் பட்டியல்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள். இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகுகளையே சொறிந்து கொள்ளுவார்கள்.

Gnanam Magazine இந்த விதமான பட்டியல் வரலாறுகள் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வந்திருக்கிற மாற்றங்களும் வளர்ச்சிகளும் என்ன காரணத்தால் ஏற்பட்டன என்று சொல்லுவது இல்லை. அவை என்ன விதமாகச் சமூகத்தைப் பாதித்தன என்றும் சொல்லுவது இல்லை. இடையில் ஒரு படைப்பையோ எழுத்தாளரையோ புகழ்ந்து நாலு வரிகள் வரும். ஆனால் என்ன சிறப்பு என்கிறதை கட்டுரையாசிரியர் சொல்லமாட்டார். உண்மையான காரணம் உள்ளடக்கத்தை விட்டு வேறெதுவுமாக இருக்கும்.

இந்த விதமான குறைபாடுகளுக்கு ஒரு காரணம் பல ஆய்வுக் கட்டுரைகள் ஒரு தரவழி ஆய்வும் இல்லாத அவசரக் கோலங்களாக இருக்கிறது தான். அதைவிடப் பொல்லாத காரணங்களும் இருக்கின்றன. அவை வன்மம் வக்கிரச் சிந்தனை தனிப்பட்ட பகைமை பொறாமை தொடர்புடையவை.

இந்தச் சிறப்பிதழில் வலிந்து சொல்லப்பட்டுள்ள சில இடதுசாரி விரோதமான திரிப்புக்களையும் திட்டமிட்ட புறக்கணிப்புக்களையும் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் பொய்களும் போலித்தனங்களும் இப்போது சுட்டிக்காட்டப்படாவிட்டால் அவையே மற்ற ஆய்வாளர்களுக்கான ஆதாரப்பூர்வமான உண்மைகளாகி நாளைய இலக்கிய வரலாறாகி விடும்.

மு.பொன்னம்பலதத்தின் பொய்கள் பற்றிப் ‘புதிய பூமி’யில் ஒரு கட்டுரை சிலவருடம் முந்தி வெளிவந்தது. திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக அவருக்கு “கொயபெல்சு” பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும். கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்தபோது முற்போக்கு எழுத்தாளர்கட்கு மட்டுமே ஆதரவுகாட்டினாரென்றும் அந்த அணி சாராதோர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் அதனால் சமஷ்டி ஆட்சிக் கொள்கை இலக்கியத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் தனக்கே உரிய கோமாளித்தனத்துடன் அடுக்கடுக்காகப் பொய் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வருகிற பிதற்றல்களுக்கெல்லாம் மறுமொழி எழுதுகிறது என்றால் அதற்காகவே ஒரு சிறப்பிதழ் வெளியிடக் கூடிய அளவுக்குப் புண்ணியவான் பிதற்றி வைத்திருக்கிறார்.

இந்த விதமான சில பொய்களை விமர்சனமில்லாமல் விழுங்கி மீண்டும் மீண்டும் சொல்லுகிறவர்களுள் கலாநிதி துரை மனோகரனும் ஒருவராகக் காணப்படுகிறார். உலக இடதுசாரி இயக்கம் பிளவுபட்டு நாற்பது ஆண்டுகட்குப் பிறகும் ரஷ்யசார்பு சீனசார்பு என்று எழுதி அந்தப் பிளவின் அடிப்படையையே அவர் கொச்சைப்படுத்துகிறார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என். சோமகாந்தனும் சில ஆண்டுகள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப்பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்டத்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் “இமேஜைக்” குறைத்ததாக எழுதியிருக்கிறார். இந்த இரண்டு பேருக்கும் அந்தக் கூட்டத்தைக் குழப்புகிற தீர்மானம் முன்கூட்டியே தெரியும். ஏனெனில் அது எழுந்தமானமாக நடந்த சம்பவமில்லை. யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. இதை மிகவும் நேர்மையாகவே சொக்கன் சில காலம் முந்தி உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் அது சரியானது என்றுங் கூறியிருக்கிறார். அன்றைய நிலைமையில் சாதி வெறி இலக்கியப் பிரமுகர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் தொழிலாளர் மீதும் இழிசினர் என்றும் வேறு நிந்தனைச் சொற்களாலும் நாளாந்தம் கூழ்முட்டை எறிந்து கொண்டு இருந்தார்கள். அதைப் பற்றி எங்களுடைய இலக்கியப் பண்பாட்டுக்காரர்களுக்கு இது வரையிலும் ஒரு கவலையும் இருக்கவில்லை.

“புரட்சி என்பது தேநீர் விருந்து வைபவமல்ல” என்று நினைவூட்ட விரும்புகிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மக்களிடையே மரியாதை கெட்டது அதனாலில்லை. சந்தர்ப்பவாதிகளுக்குப் பின்னால் அந்தச் சங்கத்தை இழுத்துக் கொண்டு போனவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை எதிர்க்கிறவர்களுடன் சேர்ந்து நின்றார்கள். 1966இல் பேரினவாத ஊர்வலம் போனவர்களை ஆதரித்தார்கள். 1970 முதல் பதவிகளுக்குப் பின்னால் அலைந்தார்கள். இவற்றால் தான்.

அப்படிச் செய்யாதவர்கள் தங்களுடைய ஒவ்வொரு செய்கைக்கும் தட்டிக் கழித்துப் பிறர் மேல் பழி சொல்லாமல் துணிந்து பொறுப்பெடுக்கிறார்கள். நல்ல இடதுசாரிக்கு வேண்டியது “இமேஜ்” இல்லை. நேர்மையான இதயம். இது தான் கைலாசபதி காட்டிய வழி. “இமேஜ்” தேவையானவர்கள் பச்சோந்தி போல நிறங்களை மாற்றிக் கொள்ளலாம்.

கலாநிதி துரை மனோகரன் சொல்கிறது போல முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுபதுகள் வரை வீறு நடைபோடவில்லை. அறுபதுகளிலேயே படுத்து விட்டது. sஎழுபதுகளில் அரசாங்கத்துக்கு வால்பிடித்து எழும்பி நிற்கப் பார்த்தது. நிற்க முடியவில்லை. டொமினிக் ஜீவாவின் தளராத உழைப்பும் திரிபுவாதிகளிடமிருந்து கிடைத்த மறைமுகமான சிறு நிதி உதவியும் மல்லிகையை மாதமாதம் வெளியிட உதவி செய்தன. மற்றப்படி அந்த அமைப்பால் இலக்கியத் துறையில் எதையுமே செய்ய முடியவில்லை. இதைச் சிவத்தம்பியோ டொமினிக் ஜீவாவோ இயலுமானால் மறுக்கட்டும். என்.ஜி.ஓப் பிழைப்பு நடத்தி வந்த உதிரிகள் சிலர் சில ஆண்டுகள் முன்பு உருவாக்கிய ஒரு அமைப்பை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்ச்சி என்ற விதமாகச் சொல்லியிருக்கிற கலாநிதி துரை மனோகரனுக்குத் தேசிய கலை இலக்கியப் பேரவையே முற்போக்கு இலக்கியச் சிந்தனையின் மக்கள் இலக்கியப் பாசறையாக 1974 முதல் இன்று வரை இருந்து வருவதை உரிய இடத்தில் கூற முடியவில்லை. கட்டுரையின் முடிவில் இன்னுமொரு அமைப்பாக அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஏன்?

வேண்டுமென்றே விடயங்களைத் தவிர்க்கிறதில் ஸ்ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவராகி வருகிறார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் தொகுப்பு நூலும் அவர் கண்ணிற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை மறைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஒழுங்காக ஒரு தொகுப்பை வழங்குவதற்கு இரண்டு விடயங்கள் தேவை. ஒன்று திட்டமிட்ட முறையிலான கடும் உழைப்பு. மற்றது நேர்மை. தன்னுடைய அரைவேக்காட்டுத் தொகுதியை விமர்சித்தவர்கள் புலம்பித்தீர்த்திருக்கிறதாகச் சொல்லுகிற ஸ்ரீ பிரசாந்தன் கட்டுரை முடிவில் கட்டுரைக்குப் பொருத்தமின்றித் தனக்காகப் புலம்பித் தீர்த்திருக்கிறார். பிழையைப் பிழையென்று விளங்கிக்கொள்ள அறிவு வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள நேர்மை வேண்டும். இவரிடம் எது மிகவுங் குறைகிறது என்று விளங்கவில்லை.

பேராசிரியர்கள் நுஃமானும் மௌனகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேராசிரியர் நுஃமான் சிறுவர்கட்கான பாநாடகங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். என்றாலும் அவருக்குப் பேராசிரியர் சிவசேகரம் பல வேறு செய்யுள் வடிவங்களையும் கூத்துச் சந்தங்களையும் பயன்படுத்தி எழுதிய “கிட்கிந்தை” பற்றித் தெரியாதா? “பாட்டுங் கூத்தும்” என்ற தலைப்பில் வெளிவந்த சிறுவர்கட்கான பாநாடக நூல் பற்றித் தெரியாதா? அவை பல முறை லண்டனில் மேடையேறியதும் கொழும்பில் மேடையேற்றப்பட்டதும் தொடர்ந்தும் மேடையேறி வந்ததும் தெரியாதா? பேராசிரியர் மௌனகுருவுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தின் சிறுவர் நாடகங்கள் பற்றித் தெரியாதா? மொழி பெயர்ப்பு நாடகங்கள் பற்றிப் பேசுகிற போதும் நூல்வடிவம் பெற்ற பேராசிரியர் சிவசேகரத்தின் நாடகங்கள் பற்றியோ பாலேந்திரா மேடையேற்றிய பிற தமிழாக்க நாடகங்கள் பற்றியோ பேராசிரியர் மௌனகுருவுக்கு எழுத இயலவில்லை என்றால் அதற்கான காரணம் அறியாமையாக இருக்க முடியாது.

இதனை பேராசிரிய வக்கிரத்தனம் என்பதா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதா? இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு பேரும் சொல்ல மறந்த முருகையனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. அவருடைய “வெறியாட்டு” என்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை மேடையேறிய பின் யாழ்ப்பாணத்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலைமைக்கு அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதால் நாடகம் தடை செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பானவர்களில் இந் நாள் தமிழ்த் தேசியவாதிகளும் முன்னாள் தமிழ்த் தேசிய வாதிகளும் அடங்குவார்கள்.

இளங்கீரனின் நாவல்களை மிகைப்படுத்தி பேராசிரியர் கைலாசபதி இலக்கிய உலகில் உயர்த்தி வைத்தார் என்று முறைப்படுகிற செங்கை ஆழியான் அவரது இரண்டு நாவல்கள் ஈழத்து நாவல் துறைக்கு வலுச் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறார் இவர் இன்னொரு இடத்தில் ஏராளமான தமிழ் நாவல்களில் ஒரு சில ஒரு சில போக எல்லாமே சருகுகள் என்றும் சொல்லி வைத்திருக்கிறார். இதில் ஞானம் ஆசிரியர் சருகல்லாத ஒரு நாவலை எழுதியதாகச் சொன்ன புண்ணியத்திற்காகவே இந்த மேற்கோள் என நம்பலாம்.

ஈழத்தில் தலித் இலக்கியம் என்ற தலைப்பில் எழுதியிருக்கிற மா. ரூபவதனன் இலங்கையிலே தலித் இலக்கியம் என்ற முத்திரை இல்லாமல் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான காத்திரமான படைப்புக்கள் 1950கள் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டத்தில் வெளியாகி உள்ளன என்பதை விங்கிக் கொள்ள இயலாதவராகத் தெரிகிறார். முருகையனைப் போலி இலக்கியப் படைப்பாளர் என்று வலிந்து தாக்கியும் இருக்கிறார். அதற்கும் மேலாகச் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தையும் வக்கிரப்படுத்தி எழுதியுள்ளார். அவருக்கு சாதிப்பிரச்சனை தானாய்த் தீரும், சண்டை வேண்டாம் என்பவர்கள் யாரென்று தெரியாது. சாதி முறையின் வரலாறும் தெரியாது. சாதி முறைக்கும் சாதியத்துக்கும் ஆதரவாக நிற்கிறவர்கள் யாரென்றும் தெரியாது. அவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு யார் யாரெல்லாம் சாதியத்துக்கு எதிராகத் தளராது போராடி நிற்கிறார்களோ அவர்கள் மீது சேறு வீசுகிறார்.

மார்க்சிச எதிர்ப்பு என்கிற தொற்று வியாதிக்கு செ. சுதர்சனும் உள்ளாகியிருக்கிறார். கட்டுரைக்கு எவ்வகையிலும் பொருத்தமில்லாமல் “ஒரு காலத்தில் ஈழத்துப் புனைகதைத் துறைக்கும் வாசிப்புத் துறை க்கும் வித்திட்ட பொதுவுடைமைவாதிகள் பலர் இன்று வணிக நாயகர்களாக வடிவம் எடுத்துள்ளனர்” என்று வலிந்து சாடியிருக்கிறார். தடித்த எழுத்தில் இது அச்சிடப்பட்டிருக்கிறது. இது சுதர்சனுடைய கை வண்ணமா அல்லது இது போல பிற கட்டுரைகளிலும் தடித்த எழுத்துக்களைப் புகுத்தியிருக்கிற ஞானம் பத்திரிகைக் “குடும்பத்தின்” கை வண்ணமா?. சுதர்சனுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தைத் தெரியாதா? வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன.

- வசந்தன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com