Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

'காலத்தைச் செதுக்கும் கவிதை வரிகள்
ஜியோதிஸ்மன்

சி.சிவசேகரத்தின் “கல்லெறி தூரம்” கவிதைத் தொகுதியின் உள் நுழைந்து


என்னிடம் மகிழ்ச்சியில்லை
என்னிடம் வார்த்தைகளில்லை
கண்ணீர் இல்லை
எனக்குள் இருக்கும் இதயம்
கல்லைப் போல
அதில் நம்பிக்கையும்
அச்சமும் பூசப்பட்டுள்ளது
நம்பிக்கையை கையிலெடுத்துப்
புறப்படுகிறேன் நான்

- சில்வியா பிளாத்

cover photo அதே நம்பிக்கையை கையிலெடுத்துக் கொண்டு “கல்லெறி தூரம்” என்ற கவிதைத் தொகுதியூடாகப் புறப்பட்டிருக்கிறார் கவிஞர் சி. சிவசேகரம்.

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது. இதன் உண்மையை “கல்லெறி தூரம்” கவிதைத் தொகுதியை வாசித்த போது நான் உணர்ந்து கொண்டேன். இன்று மாலை வெளியிடப்படுகின்ற சி. சிவசேகரத்தின் “கல்லெறி தூரம்” என்ற கவிதைத் தொகுதி ஆசிரியரது எட்டாவது கவிதை நூலாகும். இவர் நான்கு மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களையும் “About Another Matter” என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுதியொன்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஈழத்தின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சி. சிவசேகரம் கவிஞன் என்பதே தனது பொது அடையாளம் என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார். தனது மற்றைய திறமை சார் அடையாளங்களை விட கவிஞராக இருக்கவும் கவிஞராக அறியப்படவும் விரும்புபவர் சி. சிவசேகரம். தமிழ்க் கவிஞர்களில் மிகுந்த இயல்பெழுச்சியுடன் எழுதக்கூடிய சிலரில் இவரும் ஒருவர்.

கவிஞன் என்பவன் சமூகப் பொறுப்பு மிக்கவன், கவிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பலரால் இந்த சமூகப் பொறுப்பின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டு வருகின்றது. இது சவால்களை எதிர்நோக்கும் சமூகங்களுக்கு ஏற்புடையதல்ல.
“தொழிற்சாலையை விட மனிதனுக்குக் கவிதை அவசியம்; தொழிற்சாலை உயிர்வாழத் தேவையானதைத் தருகிறது. ஆனால், கவிதையோ வாழ்வதற்கான விருப்பத்தையும் வாழ்வை எதிர்கொள்வதற்கான வலுவையும் வழங்குகிறது. எனவே கவிஞனுக்கு சமூகக் கடமைகள் அதிகம்”.

என்றார் ஹொஸே மார்த்தி. அதன்படி சமூகப் பொறுப்புடன் செயற்படுபவர் கவிஞர் சி. சிவசேகரம். அதற்கு அவரது கவிதைகளே சான்று.

கவிதைகளை எப்படிப் படிப்பது என்று சிந்திக்கும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், படிப்பது என்பது உண்மையில் கண்ணால் படிப்பது அல்ல என்பதுதான். படிப்பது என்பது மனதால் படிப்பது. அதாவது கருத்தை உள்வாங்கிக் கொள்வது. அவ்வகையில் மிகவும் இலகுவாக உள்வாங்கத்தக்க மொழியில் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் இருக்கின்றன. அறிவுடன் பேச முன் அவை மனத்துடன் பேசுகின்றன. மனத்தின் ஊடாக அறிவுடன் பேச முயற்சிக்கின்றன. இத்தொகுதியில் உள்ள கவிதைகள் வாசகனின் மனதை இலகுவாகச் சென்றடைகின்றன. மனம் கனத்து அறிவை செயற்பட வைக்கும் ஊக்கியாக, மனத்திற்கு அறிவிற்கும் இடையிலான இடைநிலைப் பாத்திரத்தை வகிப்பனவையாக எண்ணங்களை மனத்திலிருந்து அறிவை நோக்கிச் செயற்படுத்தும் திசை வழியாக இக்கவிதைகள் திகழ்கின்றன.

‘முடிந்தொழிந்த கதை பற்றிப் பேசாதிருப்பதற்கு’ என்ற கவிதை இச்செயற்பாட்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

முடிந்தொழிந்த எப்பொருளும் மறுபடியும் பேசுவதால்
உயிர்பெறுதல் ஆகுமெனின்
முடிந்தொழிந்ததென நினைத்த
கொடுமைகளின் வேர்களெல்லாம் அறுந்தும் அழியாமற்
தரைக்குட் கிடப்பதனை நீரறிவீர், நாமறிவோம்
களைப் பூண்டை ஒழிப்பதெனில் மண்ணைக் கிளறாமல்
மறைவாய்க் கிடந்ததன்மேல் வெய்யில் ஒளி பாயாமல்
என்று முடிந்ததென எவர் சொன்னார் நீர் சொல்லும்.
மடியிற் கனமிருந்தாலும் வழியிற் பயமிருக்கும்
துணிந்துரைக்கும் மொழிகளிலே தவறொன்று தானிருப்பின்
எடுத்துரையும், உண்மையெனில் ஏற்போம் நாம்

திருமணமாக இருக்கட்டும், காதலாக இருக்கட்டும், ஏற்படுத்தப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட பிற உறவுகளாகட்டும் எல்லாம் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது. இது குறித்துப் பேசும் கவிதையில் இப்படி வருகிறது.

ஒருவர் மற்றவரை எப்போதோ எப்படியோ ஏய்ப்பர்
என்பது புரிந்தும்
அவர் இவரையும் இவர் அவரையும் எப்போதும் எப்படி
என்பது புரியாமலும்
உடன்பட்ட எதுவுமே உண்மையில் உடன்பாடானதல்ல
என்பது புரிந்தும்
உடன்பாடான உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ளது
என்பது புரியாமலும்
பாம்பின் கால் பாம்பறியும்
என்பது புரிந்தும்
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது
என்பது புரியாமலும்
புரிந்துணர்வு உடன்படிக்கைகள் புரியப்படுகின்றன.

உறவுகள் சேர்வதும் பின் பிரிவதும் எல்லாம் புரிந்துணர்வினாலும் புரிந்துணர்வான புரிந்துணர்வின்மையாலும் என்பதை மிக அழகாகவும் நயமாகவும் எளிமையாகவும் காட்டி விடுகின்றது.

குழந்தைக்காக ஏங்கும்; தாய்மையின் ஏக்கமும் பரிதாபமும் ‘தாயுள்ளம்’ கவிதையில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. தனது மகனை இழந்தவொரு தாயின் உள்ளக் குமுறலும் வேதனையையும் அழகாகக் காட்டுகிறார் கவிஞர்.

கூலிக்காக உயிரைக் குடிப்பவனோ
ஏனென்று எண்ணாமல்
ஏவலுக்காகக் கொல்பவனோ
ஒருகணம்
தனது தாயின் அன்பைத்,
தன்னை இழந்திருந்தால்
தன் தாய் பட்டிருக்கக் கூடிய தவிப்பைக்
கருத்திற் கொண்டிருந்தால்
இம் மண்ணில்
ஏன் இத்தனை வீண் இறப்புக்கள்?

யுத்தம், மரணம் ஒன்றை மட்டும் பரிசாக வழங்குவதில்லை. சொல்லப்போனால் மரணம் ஒரு வகையில் பெரிய வலியே இல்லை, இறப்பவர்களுக்கு. யுத்த பூமியில் வாழ்வதென்பதே வலி தான். இக் கவிதைகளை வாசிக்கும் போது “துயரம் தூங்குவதே இல்லை” என்ற வரிகளே ஞாபகத்திற்கு வந்தன.

பயணப்பட விரும்பும் இன்னொரு தேசத்துக்குப் பயணிக்கிறோம். பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், சிந்திக்கிறோம், அளவளாவுகிறோம், உலாவுகிறோம், ஆர்ப்பரிக்கிறோம், அதிசயிக்கிறோம், நீளமாகப் பெருமூச்சு விடுகிறோம், ஆச்சரியமாகப் பார்க்கிறோம். இவையனைத்தையும் இத் தொகுதியில் உள்ள கவிதைகளுக்கூடாக பயணம் செய்யும் போது அனுபவிக்க முடியும். எங்குமே நெருடல் இல்லாத, தொல்லைகள் தராத சரளமான நடை, சொற்களை வலிந்து அணிந்து கொள்ளும் நாடகபாணி இல்லாத எழுத்து, விலகல் நடை அல்லாத மனசுக்கு நெருக்கமான இயல்பான இதமான எழுத்தோட்டம் என்பன வாசிப்பு அனுபவத்துக்குத் துணை புரிகிறது.

கவிதைப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமா என்ற கேள்வி ஒரு புறமும் நவீன உலகில் புத்தகங்களை வாசிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி இன்னொரு புறமும் வந்து விழுகிறது. இத்தொகுதியை வாசித்த பின்னர் இக் கேள்விகளுக்கான பதிலை நாமே தேடிக் கொள்ள முடியும்.

கவிதையை, கவிதைப் புத்தகத்தை ஒரு தடவை வாசித்த விட்டு ஒன்றுமே இல்லை என்பவர்களும் இவை கவிதைகளே அல்ல என்பவர்களும் நிறையவே எம் சமூகத்தில் இருக்கிறார்கள். நாம் எத்தனை புத்தகங்களைப் படித்தோம் என்பதைவிட என்னென்ன புத்தகங்களைப் படித்தோம் என்பதும், என்னென்ன புத்தகங்களைப் படித்தோம் என்பதைவிட அவற்றை எப்படிப் படித்தோம் என்பதும் முக்கியமானவை. படிப்பால் நமக்குக் கிட்டும் அறிவை இந்த விஷயங்களே தீர்மானிக்கின்றன.

கவிதை வாசகனாக மனதில் நிற்கும் சில வரிகளை, வாழ்க்கையின் பிரத்தியேக தருணங்களில் துக்கத்தோடு முணுமுணுக்கவும் மகிழ்ச்சியோடு உச்சரிக்கவும் விரக்தியோடு பிதற்றவுமான பல வரிகளை சி.சிவசேகரம் எனக்குத்; தந்திருக்கிறார். அதில் ஒன்று மட்டும் இங்கே…


உண்மைகளாகவும் பொய்களாகவும்
ஒரே கதைதான் சொல்லப்படுகிறது
விளங்குவது போலவும் விளங்காதது போலவும்
ஒரே கதை பற்றித்தான் பாவனை செய்யப்படுகிறது

இன்றைய பரபரப்பு மிகுந்த உலகம் படைப்பின் ஆற்றலை உணர்ந்து கொள்வதில் பொறுமையற்றுப் போய்விட்டது. படைப்பின் மெருகேற்றுதலுக்காக தீட்டப்பட்ட வண்ணங்கள் பற்றிய கவர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. பல கவிஞர்கள் தங்கள் கவிதையின் வெளிப்பூச்சுக்கு வர்ணம் பூசுபவர்கள். இவர்கள் மத்தியில் சிவசேகரம் வித்தியாசமானவர். நேர்மையான எழுத்தையும் நேர்மையான நோக்கங்களையும் அவரது படைப்புகளின் ஊடே அவதானிக்க முடியும். இதனால் எளிய மொழியில் செய்திகளின் அழகாக தொகுப்பாக நல்ல கதை சொல்லியாகவும் இருக்கின்ற இக் கவிதைகளின் படைப்பாற்றலும் உடபொதிந்திருக்கும் செய்தியும் எட்டப்படாமல் போய்விடுமோ? என்ற பயமும் இல்லாமல் இல்லை.

கவிதை என்பது ஓர் உணர்வு. அனுபவங்களும் உணர்வுகளும் மனதுள் பதிவுகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் அவற்றை கலை இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யும் திறமை உள்ளவர்கள் தான். ஆனால் பயிற்சியாலும் இடையறாத சிந்தனையாலும் சிறப்பு எய்துபவர்கள் சிலரே. அச்சிலரில் சிவசேகரமும் ஒருவர் என்று துணிந்து கூறலாம்.

இத் தொகுதியில் உள்ள கவிதை ஒன்றில் இப்படி வரும்

உமது பயணத்தை மக்களுடன் பகிரும்,
உமது பாதையை மக்களுடையதாக்கும்,
நீர் சுமக்கும் பணியின் கனம் இலகுவாகட்டும்.
எதிரி மேலும் மேலும் தனிமைப்பட நேருகிற போது –
வெற்றி
உம்முடையதாக மட்டுமன்றி
எங்களுடையதாக மட்டுமன்றி
எல்லா மக்களுடையதாகவும் அமையும்.

இவரது கவிதைகளில் உள்ள அழகும் உள்ளர்த்தமும் எளிமையும் கவிதை வாசிப்பை இலகுபடுத்துகின்றன. எளியதும் சீரியதுமான தமிழ்ச் சொற்களால் கவிதையாக்கம் சாத்தியமாகிறது. அபூர்வமாகவே மொழியில் முடிச்சுகளும் திரிபுகளும் இடம்பெறுகின்றன. பேச்சு வழக்கிலிருந்தும் இலக்கிய வழக்கிலிருந்தும் சொற்கள் தேர்ந்தெடுக்ப்பட்டு பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்ததாகக் கவிதை அமைவதனால் கவிதை மொழிக்கு மெருகு கூடுகிறது.

அள்ளிக் கொடுத்தாலும்
அளவாகத் தந்தாலும்
தரவே மறுத்தாலும்
கடலம்மா என்றழைத்துக்
கடலோரக் குடிசைகளில்
கடல் நோக்கி வாழுகிற
கடலின் குழந்தைகளைக்
கடல் கொண்டு போயிற்று

என்ற இடை வரிகளைக் கொண்ட ‘கேளாமல் வந்த கடல்’ கவிதை சுனாமியையும் அதன் கொடுரத்தையும் சில வரிகளில் சொல்லிச் செல்கின்றன. வாசகன் மனங்கனத்து நிற்கிறான்.
ஒரு வாசகனின் பார்வையில் நூற்கப்படும் நூல் நிகழ்த்துகிற எல்லாச் செயல்களையும் மனிதனால் கற்கப்படும் நூலும் அவனுக்குள் நிகழ்த்துகிறது. அதனால்தான் “புத்தகத்தைத் தொடுபவன் அதன்மூலம் மனிதனைத் தொடுபவனாகிறான்” என்கிறார் வால்ட் விட்மன்.

சமகால வாழ்வின் சிக்கல்களும் அதில் அகப்பட்டுத் திணறும் மனசின் கோலங்களுமே பாடுபொருட்கள். இக் கவிதைகளின் பின்னால் நெல்லிக்கனியில் மறைந்திருக்கும் தித்திப்பு போல மனதைத் தொடும் விடயங்கள் இருப்பது மறுக்க இயலாதது. படைப்பாளியின் உள்ளாற்றலை அறிந்து கொள்ளல் அத்தகைய சுலபமானதாக இல்லை. வானத்தின் விரிவைப் போன்று, கடலின் ஆழத்தைப் போன்று வியப்புலகாகவே இது தோற்றம் தருகிறது. ஆனாலும் படைப்பின் ஆழம் குறித்தவற்றைத் தெளிவாகவே சொல்லிவிட முடியும். இது படைப்பாளியின் அனுபவம் சார்ந்தது. அதே நேரத்தில், ஒருவன் அனுபவக் கருவை பல காலம் சுமந்து, அதனை பெற்றெடுப்பதில் தாங்கிக்கொள்ளும் வலியைத்தான் சார்ந்து தான், இதன் வெற்றியும் அமைந்துவிடுகிறது. இதனடிப்படையில் வெற்றி பெற்ற தொகுதியாகவே “கல்லெறி தூரம்” என்ற கவிதைத் தொகுதியை காண்கிறேன்.

முற்றும் பெறாத எழுத்துக்களோடு தன் மூடியை அணிந்து கொள்ளும் பேனா, தொடரும் என அறிவிப்போடு மூடப்படும் புத்தகம்... வெளிக்கிளம்பும் பொழுதில் தேடுதல் வேட்டை... எஞ்சியிருப்பது, புத்தகங்களை பையில் திணிக்கும் குழந்தைகளின் அவசரம் மட்டுமே என்ற நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம்.

நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் ஈழத்துப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள், விவாதியுங்கள். சேர்ந்தே பயணிப்போம் புதிய உலகிற்காய். எனக்கு வால்ட் விட்மனின் கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது.

அகந்தை மிக்க நூல் நிலையங்களே!
உங்கள் கதவுகளை எனக்கு மூடிவிடாதீர்கள் - ஏனெனில்
நிரம்பி வழியும் உங்கள் அலமாரிகளில்
எது இல்லாமல் இருக்கிறதோ
எது மிகமிக இன்றியமையாமல் தேவைப்படுகிறதோ
அதை நான் உங்களுக்குக் கொண்டு வந்து தருவேன்.

- ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com