Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

நிழல்களைத் தேடி!!!
றஞ்சி


பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என உணர்வுகள் கவிதையின் மூலம் மொழியியல் பெறுகிறது. பெண்களின் மன உணர்வுகளை காட்டுவதாகவும் "வரையறுக்கப்பட்ட காற்றை திணறலோடு சுவாசிக்க" சபிக்கப்பட்ட பெண்களுக்கு எழுச்சியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்துவன இலக்கியங்கள் தான். உணர்வுகளை வெளிக்காட்ட, வெளிக்கொணர இன்று ஒரு உந்து சக்தியாக கவிதை மொழி உள்ளது.

புதிய மாதவியின் நிழல்களைத் தேடியும் இந்த வகைக்குள் அடங்கும். இக்கவிதைத்தொகுதிக்கு தலித் எழுத்தாளரான சிவாகாமி முகவுரை எழுதியுள்ளார். "விமர்சனங்களுடன் கூடிய கனமான சிந்தனையை ஒட்டி பூடகமான கேள்விகளுடன் வருகிறது புதியமாதவியின் கவிதை என கூறுகிறார் சிவகாமி"

போர், பட்டினி, அரசு ஒடுக்குமுறை ஆண் அதிகாரம், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றின் கீழ் அவதியுறும் மக்களின் மனோநிலையை காயப்படுத்தபட்ட நம்பிக்கையின் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் கூட வரலாற்றின் பதிவுகள் தான.; புதிய மாதவியின் கவிதைகளும் அந்த வகையை சார்ந்தவையாக உள்ளன.

நாம் புதியவர்கள் என்ற கவிதை

நான் தென்றலாக
வரவில்லை
அதனாலேயே
புயல் என்று
யார் சொன்னது?
நான் கனவுகளாக
வரவில்லை
அதனாலேயே
நிஜம் என்று
யார் சொன்னது (பக் 21)

நான் நானாக
நீ நீயாக
நீயும் நானும்
புதிதாகப் பிறந்தவர்கள்…
நான் யார்…?
நாளைய
அகராதி
எழுதும்…
அதுவரை
இருக்கிற சொற்களில்
என்னைக் கழுவேற்றி
உன்னை
முடித்துக்கொள்ளாதே (பக் 22)

இக் கவிதை எதிர்நிலை, இருமை தாண்டிய பரிமாணங்களை கோரும் கவிதையாக உள்ளது.

கணவனின் தோழியர் என்ற கவிதை

ஏதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப்பிராயத்து நண்பனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை (பக் 27)

ஆணாதிக்கம் இருக்கிறதே அது மூளைக்குள் ஆழமாய் பதியப்பட்டிருக்கிறது. கல்வி வளர்ப்பு முறை தொடர்பு சாதனங்கள் மதம் கலாச்சாரம் என்கின்ற பல வழிகளில் புகுத்தப்பட்டு சமூக அரசியல் நடைமுறைகளினுடாக அது மேலும் ஆமோதிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. இது பெண், ஆண் நட்பு மீது ஆண் மனதில் பெண் தரப்பு மீது சந்தேகங்களை இலகுவாகவே உருவாக்கியும் விடுகிறது. என்பதை இக்கவிதை சொல்லி நிற்கிறது.

எறும்புக்கடி

இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்? (பக் 28)

பெண்கள் மீது சுமத்தப்படும் அதிதீவிர வன்முறைதான் ஆண்களால் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரமாகும். பெண்களை ஏமாற்றும் பாவச் செயலை, துரோகங்களை உணர்ச்சி பூர்வமாக குழப்பமில்லாமல் கூறுகிறார் புதிய மாதவி. பாலியல் வன்முறையானது பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தின் அராஜகத்தின் வெளிப்பாடாக வௌ;வேறு இடங்களில் நடைபெறுகிறது. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பின் தூக்கியெறியக்கூடிய போகப் பொருள்களாக பெண்களின் வாழ்வும் சிதைந்த மனநிலையையும் செய்தியாக சொல்லுகிறது எறும்புக்கடி கவிதை.

ஒற்றை நட்சத்திரம்

போதுமா இருட்டுக்கு?
நகைக்கிறது வானம்
எப்படி புரியவைப்பேன்?
முகம் தேடி அலையும் இருட்டில்
எரியும் மெழுகுவர்த்தியிடம்
காணாமல் போகிறது
கண் கூசும் சூரியன் என்பதை (பக் 29)

ஆண் மொழி அதிகாரத்தினால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் பெண்கள் முகம் தேடும் முயற்சியில் அவளது மொழியும் குரலும் வலிமையானதுதான் என பூடமாக பேசுகிறது இக்கவிதை.

புதிய நந்தன்

பாலைவனச் சூடும்
பாதரச நெருப்பும்
எரிக்காத நந்தனை
எரித்துக்கொண்டிருக்கிறது
பிறந்த மண்ணில்
பிறப்பையே குற்றமாக்கி
வாயில் திணிக்கப்பட்ட
மலமும் மூத்திரமும் பக் (39)

தனது பார்வையை தலித்துகள் பக்கம் திருப்புகிறார் சமூகத்தில் இவர்களுக்கு எந்தவித அங்கீகாராமும் இல்லை. எவ்வித சமூகப் பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க மறுக்கும் சாதிய சிந்தனையை இக்கவிதை மூலம் தாக்குகிறார் கவிஞர் புதியமாதவி.

உன் குற்றம்

நீ...
கடைசிவரை
காதல் அறியாமலேயே
விதவை ஆனாயே
அது…
மட்டும் தான்
குற்றம்
நூலின் நீளத்தில்
காற்றில் பறப்பதாய்ப்
பாவனைச் செய்யும்
காற்றாடி அல்ல
எங்கள் கவிதைகள்
வெட்ட வெட்டப்
புதிது பதிதாக
எரியும் சாம்பலிலும்
எழுந்து பறக்கும்
எழுத்துப் பறவையாய்
எங்கள் சுவடுகள்

இச்சமூகம் பெண்களை தமது ஆண் அதிகாரத்திற்குள் அடக்கி வைத்திருந்தாலும் அதையும் மீறி பல்வேறு பரிமாணங்களில் பெண் எழுத்துக்கள் மிளிரும் என்ற புதிய மொழியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எரியும் சாம்பலிலும் அதன் உயிர்ப்பைக் அடையாளம் இடுவோம் என உரத்துக் கூறுகிறார். .புதியமாதவி உண்மை தான் புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது என்பது இங்கு குறிப்பட்டுத் தான் ஆகவேண்டும். படிமங்களின் ஆளுமையும் ,குறியீடுகளின் அர்த்தங்களும் கவிதையாக புரிந்து கொள்ளப்படுகிற சூழலில் அன்றாடம் பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அனுபவங்களை வார்த்தைகளால் எளிமையாக ஊடறுத்து தந்துள்ளார்:

இந்தக் கவிதைகளின் பலம் சக மனிதர்கள் மீதான அன்பும் சமூக பிரக்ஞையுமே எனலாம். நவீன சமூகத்தில் வெளிப்படும் இன்றைய தளங்களான பெண்ணியம், குடும்பம், கல்வி, சாதி சுற்றுச்சூழல் என எண்ணற்ற தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் ஊடுருவும் கவிதைகள் தான் புதியமாதவியின் கவிதைகளாகும்.

நிழல்களை தேடி
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்
41 கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர் சென்னை 600011
தொலைபேசி: 0091 44 25582552

- றஞ்சி(சுவிஸ்) [email protected]



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com