Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

அந்த அழகிய மரம் (THE BEAUTIFUL TREE)
இந்தியாவின் கல்வி வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்

இந்தியாவின் பெரும்பாலான வரலாற்று அறிவு, குறைந்த பட்சம் சமீபத்திய சில பத்தாண்டுகளிலாவது, அயல் நாட்டவர்களின் எழுத்துக்களிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. இது இந்தியக் கல்வி பற்றிய அறிவுக்கும் மற்றும் பல துறைகளுக்கும் பொருந்தும். இந்திய தகவலுக்கான ஆதாரம் கல்வெட்டாகவோ அல்லது தொல்பொருள் துறையினதாகவோ அல்லாமல், வாய்மொழிப் பாரம்பரியம், நம்பிக்கை, ஏன் தற்கால இந்திய எழுத்துக்கள் கூட ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படின், வரலாற்றை எழுதுபவர்கள் நம்புவதாகத் தோன்றவில்லை. நாளந்தா தட்சசீலா பல்கலைக்கழகங்களும் சமீப காலம் வரை அதிகம் அறியப்பட்டவையும் எழுதப்பட்டவையும் ஏனைய சிலவும் கூட, பல நூற்றாண்டுகளுக்கு முன் சில கிரேக்கர்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது அல்லது இவை பற்றிய சீன யாத்திரிகர்களின் குறிப்புகள் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது அல்லது அவர்தம் நாட்டினரால் நவீன உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனால்தான் நம்பப்படுகிறது.

கி.பி.10 ஆவது மற்றும் 16 ஆவது நூற்றாண்டுகளில் இந்தியா பற்றிய வெளிநாட்டுத் தகவல்கள் வெகு அரிதாகவே தென்படுகின்றன. மேலும், தெரிந்த சிலவும் எழுத்தாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டறிந்தவையாக இருக்கின்றன. அத்தோடுகூட இத்தகைய வரலாற்றுத் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். (இவர்களது சொல்முறை பல்வேறு நடைகளைக் கொண்டுள்ளது.) ஐரோப்பாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ வந்தவர்கள் இல்லை என்பதோடு இஸ்லாமிய விரிவாக்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்தவர்களோடு தொடர்புடையவர்கள் என்பதனால் அதிகம் கவனத்துக்கோ சிறப்புக்கோ ஆட்படவில்லை, 19ஆம் நூற்றாண்டு இந்திய வராற்று ஆசிரியர்களுக்கு ஏற்புடையவர்களாக இருந்தால் ஒழிய.

கி.பி 8 அல்லது 10 ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்தியாவின் செல்வம், தத்துவம், கல்வி பற்றியெல்லாம் ஏராளமாக எழுதப்பட்டு விட்டதாலும் (அந்த சமுதாய அமைப்பு அதன் அண்டைய பகுதிகளின் நிகழ்நிலையிலிருந்து அடிப்படையில் பெரிதும் மாறுபடவில்லை என்பதனாலும்) அந்தக்காலத்து அந்நியநாட்டு யாத்திரிகர்களும் வரலாற்றுத் தொகுப்பாளர்களும் இவை பற்றி எழுதுவதற்கு சிறப்பான காரணம் ஏதுமில்லை எனவும் கருத இடமுண்டு. பொதுவாக பல அறிஞர்கள் கருதுவது போல் கி.பி 8 -10 நூற்றாண்டு தொடங்கி வெளிப்படையாகவே இந்தியா சரியத் தொடங்கி விட்டது அல்லது புலப்படாத வகையில் சரியத் தொடங்கிவிட்டது என்பதனால் அந்நிய யாத்திரிகர்களின் கவனத்தைக் கவரவில்லை எனலாம்.

இருந்த போதிலும் கி.பி.1500-லிருந்தும் அதற்குப் பின்னர் 16 ஆம் நூற்றாண்டு முடியும்போதும் புதிய வகையிலான யாத்திரிகர்களும் துணிககரக் கண்டுபிடிப்பாளர்களும் இந்தியாவின் பகுதிகளில் சுற்றி அலைந்தனர். அவர்கள் எந்தப் பகுதியில் இருந்து வந்தார்களோ அதற்கும் இந்தியாவுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்புகள் இல்லையாதலால் அவர்களுக்கு இந்தியாவின் பெரும்பான்மையான அம்சங்கள் - அதன் பழக்க வழக்கங்கள், சமயங்கள், தத்துவங்கள், பண்டைய மற்றும் நிகழ்காலத்திய கட்டிடக்கலைகள், செல்வம் அறிவு, அதன் கல்வி முறைகள் ஆகியவை அவர்களது சொந்த ஐரோப்பிய பின்புலம் யூகம் மற்றும் அனுபவங்களிலிருந்து மாறுபட்டவையாகத் தோன்றின. அதனால் அவர்கள் வந்த தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் செல்வம் தத்துவங்கள், சமயங்கள் அல்லது வரலாற்று ரீதியான மகத்தான கட்டிடக்கலை எல்லாம் இல்லை எனவாகாது.

செல்வத்தைப் பொருத்த மட்டிலுமே கூட ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் திரட்டிய செல்வங்களை வைத்திருந்த பிரபுக்கள் மட்டுமல்ல, வியாபாரம் மற்றும் வங்கித்தொழிலில் ஈடுபட்ட செல்வந்த வர்க்கமும் இருந்தது. அத்தோடு மட்டுமன்றி 1500 தொடங்கி பெருமளவிலான தங்கமும் வெள்ளியும் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் குவியத் தொடங்கி இருந்தது. 1500 ஆண்டு பழமையான சமயமும் ஐரோப்பாவுக்கு இருந்தது. அதன் கொள்கைகள் தத்துவங்கள் அவற்றிலிருந்து பிறந்த உலகக் கண்ணோட்டம் ஆகியவையும் இருந்தன. இருந்தபோதிலும் ஐரோப்பாவின் மேட்டுக்குடியினருக்கு நீண்டநெடுங்காலமாகவே இந்தியாவெனும் உலகம் மற்றொரு கிரகம் போல் தோன்றியது.

அதுவுமன்றி, 1500 வாக்கில் ஒரு எழுத்துப் பாரம்பரியம் சொல்நேர்த்தி விவரணை மற்றும் அவற்றைவிட முக்கியமாக அச்சுக்கலை ஐரோப்பாவெங்கும் பரவத்தொடங்கியது. எனவே, பல யாத்திரிகர்கள், துணிகரக் கண்டுபிடிப்பாளர்கள் அல்லது மதரீதியான மதச்சார்பற்ற ஐரோப்பிய அரசுகளின் முழு அதிகாரம் கொண்டவர்கள் ஆகியோர் தங்களது அவதானிப்புகள் குறித்தும் அவர்களுக்குப் பிடித்தமானவை குறித்தும் தாங்கள் கண்டவற்றை தமக்குப் புரிந்த வகையிலும் தங்களது ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலும் எழுதத் தொடங்கினர். (மாலுமிகளால்தான் இவர்களின் கடற்பயணம் சாத்தியமானது என்ற போதிலும், இவர்கள் விறகு வெட்டுவதும் தண்ணீர் சேந்துவதுமான பணிகளில் ஈடுபட்டிருந்த சாதாரண கடலோடிகளைவிட மாறுபட்டவர்கள்.) எடுத்துக்காட்டாக கோழிக்கோட்டு சாமுத்திரன் ராஜா, சூரத்தின் பனியாக்கள், பார்ஸிகள், அக்பர் மற்றும் ஜஹாங்கீரின் அரசவை பற்றிய நீண்ட விவரங்கள், இந்திய ஏழைகளின் உணவான நெய்யுடன் சேர்த்து உண்ணப்பட்ட கிச்சடிபற்றியும் பதிவு செய்யப்பட்டன. இந்தியப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட முறை கூட அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இவை அனைத்தும் 16வது நூற்றாண்டு மற்றும் 17வது நூற்றாண்டின் துவக்க காலம் குறித்தவை.

1770க்கு முன்பு அதாவது பிரிட்டிஷார் இந்தியாவின் பெரும்பாலான பகுதியின் நடைமுறை அரசாக ஆகுமுன்பு, யாருடைய குறிப்புகளையும் அறிக்கைகளையும் இந்நூல் சார்ந்து இருக்கிறதோ அவர்களது அக்கறை வேறாக இருந்தது. அப்போதும் அதற்குப் பின்னரும் கூட அவர்களது அக்கறையானது பெரும்பாலும் வணிகரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் அல்லது இந்திய நாட்டுத் தொழிலைப் புரிந்து கொள்வதிலும் மதிப்பீடு செய்வதிலும் அதன் மூலம் இந்திய சமயங்கள், தத்துவங்கள் அறிவு மற்றும் கல்வியின் பரப்பு ஆகியவற்றின் மீது தங்களது செல்வாக்கினையும் ஆதிக்கத்தினையும் விரிவாக்குவதிலுமாக இருந்தது. அதுவரை அவர்களில் சிலர் பார்சிகள் பற்றியும் அல்லது சூரத்தின் பனியாக்கள் பற்றியும் எழுதியதெல்லாம் வெகு அரிதாகவே அவர்களது கவனத்தைக் கவர்ந்தது.

இத்தகைய ஆர்வமின்மை அவர்கள் இந்தியாவிலிருந்து வேறு எதையோ எதிர் பார்த்தார்கள் என்பதனால் தோன்றியதாக இருக்கலாம். இதற்கான பிரதான காரணம், அந்தக் காலத்திய பிரிட்டிஷ் சமுதாயம், அதாவது 16 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இத்தகைய விஷயங்களில் (சமயம், தத்துவம், கல்வி, மேதமை ஆகியவற்றில்) சிறிதளவே அக்கறை செலுத்தியதானது, இயற்கையிலேயே ஒருவகையில் உண்முகமாக ஆய்ந்து கொண்டு இருந்தது எனலாம். இதனால் 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டனுக்கு சமயம், தத்துவம், கல்வி, மேதமை ஆகியன குறித்து ஒரு பாரம்பரியம் இல்லையென ஆகிவிடாது.

பிரான்சிஸ் பேக்கன், ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் போன்ற அறிஞர்களை அக்காலத்தில் உருவாக்கியது பிரிட்டன் தான். 13,14 ஆவது நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனில் சுமார் 500 இலக்கணப்பள்ளிகள் இருந்தன. இருந்த போதிலும் இந்த எல்லாக் கல்வியும் மேதமையும் வெகு குறுகிய மேட்டுக்குடியினருக்கே கிட்டின. குறிப்பாக, இடைக்காலத்தில் புரட்டெஸ்டெந்த் புரட்சியினால் பெரும்பாலான மடாலயங்கள் மூடப்பட்டு அவற்றின் சொத்துக்களும் வருமானமும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதால் நிலைமை இவ்வாறு இருந்திருக்கக்கூடும்.

A.E.Dobbs என்பவரின் கூற்றுப்படி புரொடெஸ்டெந்த் புரட்சிக்கு முன்னர் ‘ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஏழைகளுக்கான பிரதான இலவச/தர்மப் பாடசாலையாகவும், இங்கிலாந்தின் பிரதான இலக்கணப்பள்ளியாகவும் அத்தோடு கூட இறையியல், சட்டம் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மகத்தான இடமாகவும்’ சித்தரிக்கப்பட்டது. அத்தோடு பள்ளி முழுவதும் போதனை இலவசமாக இல்லை என்றபோதிலும், ஏழைகளுக்கு உதவும் வகையில் அனுமதிக்கட்டணமும், தங்கும் வசதியும்படி நிலைகளாக வகுக்கப்பட்டிருந்தது. மேலும் இங்கிலாந்தின் ஒரு மிகப்பழைய சட்டப்படி விதிமுறைகள் வகுக்கப்படும் போது “யாரொருவரும் தங்களுக்கென வருடத்துக்கு 20 ஷில்லிங் வருவாயோ நிலமோ இல்லாவிடில் எந்த நகரத்துக்குள்ளும் அல்லது பேரூருள்ளும் தனது குழந்தையை பயிற்றுவிக்க அனுப்பக்கூடாது, ஆனால் அவர்களது தாய் தந்தை அல்லது பண்ணை அவர்களை எப்படிப் பயன்படுத்துமோ அவ்வாறான வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இருந்த போதிலும் யாரொருவரும் தங்களது குழந்தைகளை இலக்கியம் படிப்பதற்கு அனுப்பலாம் என்று பேசியது.

இருந்த போதிலும் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாறுபட்ட போக்கு ஒன்று உருவானது. அது ஆங்கில பைபிள் (விவிலியம்) தேவாலயங்களில் படிக்கப்படலாகாது என ஒரு சட்டம் இயற்றப்படும் அளவுக்கு இட்டுச் சென்றது. தனிப்பட்ட முறையில் படிக்கும் உரிமை பிரபுக்களுக்கும்,நிலவுடைமையாளர்களுக்கும் வியாபாரிகளுக்குமான குடித்தனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் வெளிப்படையாகவே, கைவினைஞர்களுக்கும் பயிற்சியாளருக்கும் மற்றும் சிறுநிலச் சொந்தக்காரர்களிடமும் அவர்களுக்குக் கீழான தரத்தில் உள்ளோரிடம் ஏவளாலாகப் பணி புரிவோருக்கும்,உழவுத்தொழில் புரிவோருக்கும்,கூலிகளுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டது. வேதங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தப்படும்போது தென்படும் சில கோளாறான போக்குகளை தவிர்க்குமுகத்தான் இவ்வாறு செய்யப்பட்டது. இந்தப் புதிய போக்கின்படி “உழவனின் மகன் உழுவதற்கும், கைவினைஞர்களின் மகன் தந்தையின் தொழிலைச் செய்வதற்கும்,கனவான்களின் குழந்தைகள் அரசாளும் அறிவு பெற்று ‘Common wealth’ அமைப்பினை ஆளவும் தயார் செய்யப்பட வேண்டும். ஏனெனில் மற்ற நாடுகளைப் போலவே நமது நாட்டுக்கும் உழவர்கள் தேவைப்படுகின்றனர். அனைத்து வகையானவரும் பள்ளிக்குச் செல்லத் தேவை இல்லை” எனப் புரிந்து கொள்ளப்பட்டது.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 17 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் மேலே சொல்லப்பட்ட போக்கினில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. “சமய உண்மைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் பொதுக் கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யும் விதத்திலும்”, அதை விட அதிகமாக வேல்ஸ்சில் “ஏழைகள் ஞாயிறு வழிபாட்டில் விவிலியம் படித்துத் தொழும் அளவுக்கு தயாரிப்பதிலும், வினா- விடை போதனையிப் புரிந்து கொள்ளும் அளவிலும்” தயாரிப்பதற்கென பொதுமக்களுக்காக தரும - இலவசப் பாடசாலைகளை அமைக்கும் அளவுக்கு மாறுதல் வந்தது.

ஒரு குறுகிய தொடக்கத்துக்குப் பின் தருமப்பள்ளிகள் இயக்கம் தொய்வடந்து விட்டது. ஆனால் 1780 இல் ,அதனைத் தொடர்ந்து ‘ஞாயிறுப் பள்ளி’ இயக்கம் வந்தது. இருந்த போதிலும் இந்தக் காலகட்டத்தில் கூட “பரவலான கல்வி என்பது சமய முயற்சியாகவே அணுகப்பட்டது.” அதன் நோக்கம் ஒவ்வொரு குழந்தையும் விவிலியம் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகள் கவுரவமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. இது ஞாயிறுப் பள்ளிகளை அதிகரிப்பதில் அதிகக் கவனம் குவித்து சில ஆண்டுகளில் தினப் பள்ளிகளின் அவசியத்தின் மீதும் கவனம் செலுத்தியது. அப்போது தொடங்கி பள்ளிக்கல்வி விரைவாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. இருந்த போதிலும், 1834 வரை கூட, “தேசீயப் பள்ளிகளின் பாடத்திட்டமானது மத போதனை, படித்தல் , எழுதுதல் கணக்கிடல் என இருந்தது; ஆனால் கிராமப் பள்ளிகளில் தீமை பயக்கும் என்ற அச்சத்தில் எழுதுவது தவிர்க்கப்பட்டு வந்தது.”

‘ஏழு ஆண்டுகால பயிற்சியாளர் திட்டத்தின் ( Apprenticeship) முதல் நான்கு ஆண்டுகளில் படித்தல்,எழுதுதல்,கணக்கிடுதல் திறன்களை ஈட்டும் விதத்தில் பயிற்சி அளிப்பதன் மூலம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு மணி நேர சமய பயிற்சியும் மீதி நேரத்தில் வழிபாட்டிலும் பயிற்சியாளர்களை முதலாளிகள் ஈடுபடுத்தவேண்டும்’ என அறிவுறுத்திய Peel’s Act of 1802 என்ற சட்டத்தில் இருந்து பகல் நேர தினப் பள்ளிகளுக்கான தூண்டுதல் வந்தது. அந்தச் சட்டம் எதிர்ப்புகளைச் சந்தித்தது என்பதுடன் நடைமுறையில் பெரிய அளவு பலனளிக்கவும் இல்லை. அதே சமயத்தில் Andrew Bell ,Joseph Lancaster ஆகியோரால் (Monitorial) எனப்படும் சடாம்பிள்ளை மூலம் பயிற்சி அளிப்பது நடைமுறைப் படுத்தப் பட்டதானது பொதுக் கல்வியின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியது.இந்த சட்டாம்பிள்ளைப் பயிற்று முறையை இந்தியாவிலிருந்து கடன் வாங்கியதாக Andrew Bell சொன்னார். பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1792 இல் 40,000 ஆகவும், 1818 இல் 6,74,883 எனவும், 1851 இல் 21,44,377 எனவும் மதிப்பிடப் பட்டது. பொது மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 1801 இல் 3363 என இருந்த நிலை படிப்படியாக அதிகரித்து 1851 இல் 46,114 ஆக உயர்ந்தது.

இருப்பினும், ‘ ஆசிரியர்கள் அரிதாகவே திறமை வாய்தவர்களாக இருந்தனர்’ என்றும் , அந்த ஆசிரியர்களும் தற்குறிகளாக மட்டுமின்றி குடிகாரர்களாகவும் இருந்தனர் என Lancaster மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். படிப்பு எத்தனை காலம் நீடித்தது என்பது குறித்து Dobles எழுதுகையில், வருகையில் ஒரு ஒழுங்கு முறை வலியுறுத்தப் படாமையினால் சராசரி கல்வி ஆண்டுக்காலம் 1835 இல் ஒரு ஆண்டாக இருந்தது 1851 இல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக ஆகியது எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பொதுப்பள்ளிகளைப் பொருத்தவரை பதினெட்டாம் நூற்றாண்டில் அவற்றின் வளம் பெருமளவு குன்றி விட்டதாகச் சொல்லப் படுகிறது.ஜனவரி 1797 இல் புகழ் பெற்ற Shrewbury பள்ளியில் மூன்று நான்கு பையன்களுக்கு மேல் இல்லை. ஆனால் பெருமளவு சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர் ஆண்டுக்கு 20 மாணவர்கள் என உயர்ந்தது.Eton போன்ற பொதுப் பள்ளிகளில் எழுதுவதும் கணக்கிடுவதும் கற்பிக்கப்பட்டது. பல ஆங்கில மற்றும் இலத்தீன் நூல்கள் படிக்கப் பட்டன. ஐந்தாம் படிவத்தில் இருந்தவர்களுக்கு பண்டைய நில நூல் அல்லது அல்ஜிப்ராவும் நீண்டநாள் தொடர்ந்து அங்கு படித்தவர்களுக்கு Euclid இல் இருந்து ஒரு பகுதியும் கற்பிக்கப் பட்டது. இருந்த போதிலும் 1851 வரை முறையான பள்ளிகளில் கணிதம் ஒரு அங்கமாக ஆகவில்லை. அப்ப்டி கற்பித்தவர்களும் முழுமையான தகுதி படைத்த ஆசான்களாகக் கருதப் படவில்லை.

பள்ளிக்கல்வி குறிப்பாக அடிப்படைக்கல்வி மக்கள் மட்டத்தில் 1800 வரை அரிதான பொருளாகவே இருந்தது. இருந்த போதிலும் ஆக்ஸ்போர்ட்,கேம்பிரிட்ஜ், எடின் பர்க் ஆகியவை 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ,இந்தியாவிலும் நவதீப்பிலும் நாளந்தா தட்சசீலா ஆகியவற்றைப் போல் முக்கியத்துவம் பெறவில்லை.இந்தியாவுக்கு குறிப்பாக 1773க்குப் பிறகு யாத்திரிகர்களாகவும் அறிஞர்களாகவும் அல்லது நீதிபதிகளாகவும்.வந்தவர்கள் இந்த மூன்று பல்கலைக் கழகத்தில் தான் படித்தனர்.. இந்திய நிலை பற்றி விவாதிக்கு முன் இவற்றில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை கற்பிக்கப்பட்ட துறைகள் பற்ரிய சுருக்கமான தகவல் தருவது பொருத்தமாக இருக்கும். இவற்றுள் ஒன்றில் 1800 மாணவர்கள் படித்தனர்.

ரோமுக்கும் இங்கிலாந்துக்கும் விரிசல் ஏற்பட்ட பிறகு 1546 இல் இருந்து வரிசைக்கிரமமாய் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட பேராசிரியர் நிலைகள் கீழ் வருமாறு இருந்தன.

1546 ஆம் ஆண்டு - Henry VIII அவர்களால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் நிலை/இருக்கை : 5.
1.தெய்வீகம் (Divinity) 2. குடிமைச் சட்டம் (Civil Law) 3. மருத்துவம் 4.ஹீப்ரூமொழி 5.கிரேக்கமொழி

1619 ஆம் ஆண்டு : வடிவ கணிதம் மற்றும் சோதிடம்.
1621 ஆம் ஆண்டு :இயற்கைத் தத்துவம்.
அதே ஆண்டு :அறவழி தத்துவம் (Moral philosophy) (1707 லிருந்து 1829 வரை விடுபட்டு இருந்தது)
1622 ஆம் ஆண்டு : பண்டைய வரலாறு (அதாவது ஹீப்ரூ மற்றும் ஐரோப்பிய வரலாறு)
1624 ஆம் ஆண்டு: இலக்கணம், அடுக்கு மொழி ,இயல் கடந்த (அப்பாலை) தத்துவம்
இவை பயன் படுத்தப்படாமல் போய் 1839 இல் தர்க்கவியல் நடைமுறைக்கு வந்தது.

1624 ஆம் ஆண்டு : உடற்கூறு இயல்
1626 : இசை
1636 : அராபிய மொழி
1669 : தாவர இயல்
1708 : கவிதை
1724 :நவீன வரலாறு மற்றும் நவீன மொழிகள்
1749 : சோதனை தத்துவ இயல்
1758 :பொது சட்டம்
1780 : மருத்துவ மனைப் பயிற்சி
1795 : ஆங்கிலோ சாக்சன் மொழி மற்றும் இலக்கியம்
1803 : வேதியல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால விவரங்கள் பற்றிப் பார்க்கையில் ஆக்ஸ்போர்டில் பத்தொன்பது கல்லூரிகளும் ஐந்து அரங்கங்களும் (Halls) இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் கல்லூரிகளில் 500 கற்றறிந்த பேர்கள்(fellows) இருந்ததாகவும் அவர்களில் சிலர் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது. அத்தோடு கூட, 1800 இல் , 19 பேராசியர்கள் இருந்தனர், இவர்களது எண்ணிக்கை 1854 இல் 25 ஆக உயர்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படிக்கப்பட்ட பிரதானமான துறை இறையியலும் செவ்வியல் இலக்கியமும் ஆகும். ‘Litrrae Humaiores’ எனப்பட்ட செவ்வியல் துறையி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றுள் கிரேக்க,இலத்தீன் மொழிகளும் இலக்கியமும் அறவழித் தத்துவமும், அடுக்கு மொழி மற்றும் தர்க்கவியல், இயற்பியல் மற்றும் கணிதத்துறையின் அடிப்படைகள் உள்ளடங்கி இருந்தன. சட்டம், மருத்துவம், நிலவியல் (Geology) ஆகியவை பற்றியும் விரிவுறைகள் நடத்தப்பட்டன.

1805 டொடங்கி பல்கலைக்கழகத்தில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஆண்டு ஒன்றுக்கு 760 என இருந்த மாணவர் எண்ணிக்கை 1820 - 24 இல் 1300 என அதிகரித்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த கல்லுரிகளின் வருவாயானது அறக்கட்டளைகள்,பிரதானமாக நிலமான்யங்கள் மற்றும் மாணவர்கள்செலுத்தும் கட்டணத்தைச் சார்ந்திருந்தது. இந்த வருவாய் எந்த ஆதாரத்திலிருந்து வருகிறது என்பது கல்லூரிக்குக் கல்லூரி மாறுபட்டது. 1850 வாக்கில்,நான்கு ஆண்டுகால பல்கலைக்கழகப் படிப்புக்கான செலவு என்பது துணிமணி பயணச்செலவு, விடுமுறைக்காலத்தில் மாணவரை வளர்ப்பது உட்பட பெற்றோருக்கு 600லிருந்து 800 பவுண்டு வரை இருந்தது.

பிரிட்டிஷ், டச்சு போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் நேரடியாகவோ;அல்லது 16 ஆவது நூற்றாண்டு மற்றும் 17ஆவது நூற்றாண்டின் துவக்கத்தில் தொடங்கிய, அவர்களின் கிழக்கிந்திய வணிக நிறுவணங்கள் மூலமாகவோ, தங்களது ஆதிக்கம் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதியில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் விரிவுபடுத்திக் கொண்டிருந்த வேளையில் கி.பி 1500 தொடங்கி ஐரோப்பிய அறிஞர்கள் இந்தப் பகுதிகளில் நிலவிய நாகரிகத்தின் பல்வேறு அம்சங்களை விளங்கிக் கொள்ள முயன்று கொண்டு இருந்தனர்.

இவர்களுள் முதன்மையானவர்கள் குறிப்பாக அறிவியல் மற்றும் சடங்குகள், பண்புகள், தத்துவங்கள் மற்றும் சமயங்கள் பற்றி கிருத்துவ துறவிகள் குறிப்பாக JESUITS எனப்படும் இக்னோஷியஸ் லயொலா என்பரால் 16 ஆம் நூற்றண்டில் நிறுவப்பட்ட இயேசுனாதர் சங்கத்தின் அங்கத்தினர்கள். அதற்கும் அப்பால் அரசியல், இயற்கை, பொருளாதாரம், வரலாற்றியல் சார்பான அக்கறை கொண்டவர்களுமிருந்தனர். பலர் கீழ்த்திசை பற்றி விசித்திரமானதும் நம்பத்தகாததுமான தங்களது சொந்த துணிகரச் செயல்கள் துயரங்கள் பற்றியும் அவ்வப்போது எழுதினர். ஐரோப்பியர்களுக்கு இருந்த பரவலான அக்கறையின் காரணமாக இப்படிப்பட்ட பலதும் ஐரோப்பிய மொழிகளில் பிரசுரமாயின. குறைந்த அளவில் இருந்த போதிலும் மேதமை மிக்கதும் சமயம் தொடர்பானதுமான குறிப்புகளும் விவாதங்களும் பல முறை கையெழுத்துப் பிரதிகளாகப் பதிவு செய்யப்பட்டன.

THE BEAUTIFUL TREE
Indigenous Indian Education in 18th century
Biblia Impex private ltd, New Delhi

- தமிழாக்கம் ; புதுவை ஞானம்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com