Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
புதியமாதவி, மும்பை


"ஏற்றநீர்ப் பாட்டின்
இசையினிலும் நெலிடிக்கும்
கோற்றெடியார் குக்குவெனக்
கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம்
சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார்
பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள்
வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர்
கூட்டமுதப் பாட்டினிலும்
..........நெஞ்சைப்
பறிகொடுத்தேன் பாவியேன்.."

என்று நெஞ்சுருகிப்பாடுகிறார் மகாகவி பாரதியார்.

பாரதி மட்டுமா.. பாரதிக்கு முன்பே இந்தப் பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்தவர்கள்தான் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும், கவிச்சக்கரவர்த்தி கம்பன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இன்று நம்முடன் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசன், வைரமுத்து, இளையராஜா வரை.. இந்தப் பாடல்களின் தாக்கங்கள் இல்லாத கவிஞர்களே இல்லை எனலாம். இன்னும் சொல்லப்போனால், மிகச்சிறந்தக் கவிஞர்களின் அடையாளமே அவர்களின் இந்தப் பாடல்களின் தாக்கத்திலேயே வேர்விட்டு வளர்ச்சியை எட்டியது என்றும் சொல்லலாம்.

கரகாட்டம், கும்மி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம், சக்கை ஆட்டம், கழைக்கூத்து, தப்பாட்டம், பொம்மி ஆட்டம் அல்லது பாவைக்கூத்து, பாகவத நடனம், தெருக்கூத்து, தேவராட்டம், பாம்பாட்டம், உருமி ஆட்டம், ஒட்டன் கூத்து, காமண்டி அல்லது காமன் பண்டிகை, புலியாட்டம், களியாட்டம், சேவை ஆட்டம், வில்லுப்பாட்டு..இப்படி பல்வேறு தளங்களில் முன்னிலையிலும் பின்பாட்டாகவும் ஒலித்துக் கொண்டிருப்பது நாட்டுப்புறப் பாடல்கள்.

நாட்டுபுறப் பாடல்கள்/நாடோடிப் பாடல்கள் என்றழைக்கப்படும் இப்பாடல்கள் குறித்து இன்றைக்கு பல்வேறு தமிழ் இலக்கிய கலை அமைப்புகளும் பல்கலை கழகங்களும் ஆய்வுகள் கருத்தரங்குகள் நடத்தி நாட்டுப்புறப் பாடல்களுக்கு தனிப்பட்ட இலக்கிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பழமையான தொல்காப்பியம் நாட்டுபுறப் பாடல்களை இலக்கியத்தின் ஒரு பிரிவாகவே எழுதி வைத்திருக்கிறது.

தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ஆறுதல் கூறும் செவிலித்தாய் உபயோகப்படுத்தும் இலக்கிய வகைகளை சில சூத்திரங்கள் சொல்கின்றன. கற்பனைக் கதைகளைப் 'பொருளொடு புணராப் பொய்மொழி' என்றும், நகைச்சுவைக் கதைகளை 'பொருளொடு புணர்ந்த நகைமொழி' என்றும், விடுகதைகளை 'பிசி' என்றும் நாட்டுபுறப் பாடல்களை 'பண்ணத்தி' என்றும் தலைமகனைப் பிரிந்த தலைவிக்கு செவிலியர் உரைத்து நகுவித்து பொழுது போக்குதற்குரியவை' என்று உரையாசிரியர்கள் விரித்து பொருள் எழுதுகின்றனர். நாட்டுபுறப் பாடல்களான பண்ணத்தி என்பது பாட்டும் உரையும் போல இருக்குமென்றும் எழுதும் பயிற்சி இல்லாத புற உறுப்புகளை உடையதென்றும் இலக்கணம் அமைத்திருக்கிறார்கள். வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு என்று மூன்று பாட்டு வகைகளைப் பேராசிரியர் என்ற உரைக்காரர் உதாரணங்களாக எழுதி வைத்துள்ளார். இத்தனைப் பழமை வாய்ந்த பாடல்கள் இந்த மண்ணின் பழமை வாய்ந்த மனிதர்களின் குரலாகவே பதிவுச் செய்யப்பட்டு கவிஞர் விழி. பா. இதயவேந்தன், கவிஞர் அன்பாதவன் முயற்சியால் தொகுக்கப்பட்டு 'தலித் நாட்டுபுறப் பாடல்கள்' என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த சங்ககாலத்திலேயே ஆண்டான் - அடிமை சமுதாய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் முகம் காட்ட ஆரம்பித்துவிட்டன. காலம் காலமாய் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட மக்களின் குரலாய் மற்றவர்களின் மனக்குரல்களிலிருந்து வேறுபட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிப்பதை அவர்களின் நாட்டுப்புறப்பாடல்களில் காண்கிறோம். அவர்களின் குரல் அவர்களின் வலியின் குரலாய், உரிமையின் குரலாய், கலகக்குரலாய், இந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை உடைக்கும் குரலாய், எதெல்லாம் புனிதங்கள் என்று இந்த சமுதாயத்தின் மேன்மக்களால் போற்றப்படுகின்றதோ அந்தப் புனிதங்களைப் புரட்டிப்போட்டு அவற்றின் மறுபக்கத்தை மக்கள் மன்றத்தில் ஒலிக்கும் குரலாய் ஒலிக்கின்றது.

தாலாட்டு:

அத்த அடிச்சாரோ அரளிப்பு தண்டாலே
மாமன் அடிச்சாசோ மல்லிகைப்பூ செண்டாலே..

என்ற பொதுமையான தாலாட்டு வரிகளுக்கு நடுவில் தனித்து ஒலிக்கிறது இவர்களின் ஒடுக்கப்பட்டக் குரல். குழந்தை அழுகிறது.. இரண்டும் குழந்தைகள் தான். ஆனால் வர்க்க வேறுபாடுகளில் ஒரு குழந்தையின் அழுகுரலுக்கு ஓடிவர தாசிமார்களின் கூட்டம். ஒருத்திக்கோ தன்னந்தனியாக குழந்தையின் அழுகுரலுடன் தொடர்கிறது வாழ்வின் போராட்டம்.

'முருங்க மரம் வெட்டி
முனி மரத்தில தொட்டிகட்டி
மொதலாளி பெத்த கண்ணே
ஆட்டுங்கம்மா தாசிமாரே
பாழும் அடுப்பிலேதான்
பாலகனும் தொட்டியில நான்
பால ஆத்துவனா-நான்
பாலகன அமத்துவனா..'

என்று பாடுகிறாள்.

விளையாட்டுப் பாடல்கள்
---------------------
படுத்துக்கொண்டு முழங்காலில் குழந்தையைப் படுக்கவைத்து முழங்காலைத் தூக்கியபடி காலாட்டிப் பாடும் பாடலிலே அவர்களின் வாழ்க்கைத்தரம் சொல்லப்படுகிறது.

'காக்காயே காக்காயே
எங்கம்மாவ கண்டிங்களா!
கச்சை கருவாட்டுக்குக்
கையேந்தி நிக்கிறாங்க!
மாங்க பொளப்புக்கு
மாருமேல நிக்கிறாங்க!
தேங்காய் பொளப்புக்கு
தேருமேலே நிக்கிறாங்க!'

என்று தங்களின் நிலையைச் சொல்லிவிட்டு நாம்பளும் போலாமா எல்லோரையும் போல கட்டுச்சோறு கட்டிக்கொண்டு என்று குழந்தையிடம் கேட்டு அடுத்த நிமிடமே தங்களின் இயலாமையும் இல்லாமையும் உணர்ந்து தங்களால் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மற்றவர்களைப் போல போகமுடியாது என்பதை நகைச்சுவையாக 'நாம்பளும் போலாமா மேலேபாரு வெள்ளக்காக்கா!" என்று முடிப்பார்கள். இல்லாத வெள்ளைக்காக்காவைப் போல இல்லாத கட்டுச்சோறு. சரிநாமும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போகலாமே என்று குழந்தை அழ ஆரம்பித்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இல்லாத வெள்ளைக்காக்காவை மேலே பாரு என்று காட்டி திசைதிருப்பும் வாழ்வின் அவலம் ..அத்தனையும் சேர்த்து ஒலிக்கிறது இந்தப் பாடல்வரிகள்.

உலகின் ஒருமையை நோக்கிய பயணத்தில் அவரவர்களுக்கான சில சிறப்பியல்புகள் சிதைந்துகொண்டு வருகின்றன. இன்று விளையாட்டு என்பது கிரிக்கெட், கால்பந்து என்று மைதானங்களில் இரவு விளக்குகளில் சின்னத்திரையின் விளம்பரங்களில் மின்னி எத்தனை எத்தனையோ சிறுவர்களுக்கான விளையாட்டுகளை இல்லாமல் செய்துவிட்டன. இன்றைய சிறுவர்களுக்குச் சில விளையாட்டுகளின் பெயர்கள் கூட தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. எத்தனை வகையான விளையாட்டுகள், அந்த விளையாட்டுகளின் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ளும் எண் கணித வாய்ப்பாடுகள் எல்லாம் நாட்டுப்புறப்பாடல்களில் உண்டு.

நடவுப்பாடல்கள்
---------------

உழைக்கும் மக்கள் தங்கள் வேலைப்பளுவினால் ஏற்படும் வலி மறக்கவும் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளவும்
பாடும் பாடல்கள் பல. நாட்டுப்புறப் பாடல்களே அவர்கள் வேலை செய்யும்போது ஏற்படுத்திய ஒலிக்குறிப்பிலிருந்துதான்
பிறந்திருக்க முடியும் என்றும் ஒரு சாரார் சொல்வர். நிலம் இந்த மக்களுக்குச் சொந்தமில்லை. ஆனால் காலம் காலமாய்
இந்த நிலத்தில் உழைப்புக்கு இவர்கள் மட்டுமே காரணகர்த்தாக்கள். இன்றும் தொடர்கிறது இவர்களின் வியர்வையின் பயணம்.
எத்தனையொ நடவுப்பாடல்கள் உண்டு எனினும் தலித்துகள் மட்டுமே தான் சிலப் பாடல்களை, சில கருத்துகளைப் பாட முடியும்
என்பத்ற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது ஒரு நடவுப்பாடல்.

மாடு ஒன்று இறந்துபோனது. முந்நூறு மாடுகளில் சிறந்த மாடு. அதுவும் ஆண்டை வேலியிலிருக்கும் முள் மூக்கில்
பட்டு செத்துப்போனது. உயிருடனிருக்கும் வரைச் சொந்தம் கொண்டாடமுடியாத மாடு, செத்தப்பின் இவர்களுக்கு மட்டுமே உரிய
சொந்தமாகிவிடுகிறது பாருங்கள்!

'முந்நூறு மாட்டுக்கு மொதலான மாடு
முழுங்கல் பொதரேரி மேஞ்சிது கண்டேன்
நாட்டாமையெல்லாம் கூடுங்க
நம்ப நறுக்கித் தின்னுவோம் வாருங்க'

என்று அழைத்து சின்னப்பொண்டாட்டியிலிருந்து பெரிய பொண்ணுவரை மாட்டுக்கறியைப் பங்குப் போடுகிறார்கள். இந்த தலித்துகளுக்கே உரிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறது இவர்களின் பாடல்.


கள்ளக்காதல்:
-----------

இறைவனிடத்தில் இடையறாத பக்கதி இருக்கவேண்டுமென்றும் என்பதற்கு உவமையாக கட்டழகி ஒருத்தி தன் கள்ளக்காதலனுடன் கொள்ளும் காதலைச் சொல்லுகிறார் கோபால கிருஷ்ண பாரதியார். கட்டிய கணவனை ஏமாற்றி வேறு ஒருவனுடன் இன்பம் துய்க்கும் உறவை எக்காலத்தும் இருந்தே வருகிறது. இதை ஆன்மீகக் காதல், தெய்வீகக் காதல் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களில் ஏமாற்றத் தெரியாதவர்கள் நாட்டுபுறக் கவிஞர்கள். அதனால் தான் இப்படிப் பட்ட கள்ளக்காதலைக் கூட நாட்டுபுறப்பாடல்கள் பச்சை பச்சையாக
பாடி வைத்திருக்கின்றன.

ஏரியின்னா ஏரிதாண்டி..
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணெ
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருஷன் கேட்டு நின்னா- நான்
என்ன பதிலச் சொல்லுறது

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்'


புராணக்கதைகள்
---------------

இராமாயணம். மகாபாரதம் இந்தியாவின் எல்லா மொழிகளின் நாட்டுப்புறப்பாடல்களிலும் ஊடுருவி இருப்பதை எவரும்
மறுக்க முடியாது. எழுத்து வடிவத்தில் இலக்கியங்களாக இந்த இருபெரும் காப்பியங்களும் கற்றவர்கள் நடுவில் அரங்கேறுவதற்கு
முன்பே நாட்டுப்புற மக்களின் வாய்ப்பாட்டுகளில் அவர்களின் வாழ்க்கையுடனும் வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளுடனும்
இரண்டற கலந்துவிட்டன. அரியும் சிவனும் ஒன்று இதை அறியாதவர் வாயிலே மண்ணு என்று நாட்டுப்புற வழக்கில் இன்றும் சொல்லும் கருத்துக்கு இணங்கவே அரியும் சிவனும் இவர்களின் பாடல்களில் கலந்தே இருக்கிறார்கள்.

ஆறுரெண்டும் காவிரியோ
அதன் நடுவே சீரிரங்கமோ
அந்த சீரிரங்கத்து பாப்பாரெல்லாம்
என் கண்ணெ யுனக்குத்
திருநாமம் இட்டாரோ

*

அண்ணா கவுத்துக்கும்
ஆதிசிவன் வில்லுக்கும்
பட்டுக்கவுத்துக்கும்
பரமசிவன் வில்லுக்கும்
பழுதில்லாம நானிருந்தேன் இந்தப்
பட்டுக்கவுத்துக்கும்
பரமனோட வில்லுக்கும்
பழுதுவந்து நேர்ந்ததென்ன?

இவற்றைத் தவிர வீமனின் கதையும் கர்ணனின் கதையும் வேலனின் கதையும் இவர்களின் கதைகளில் ஒன்றாகவே இவர்கள் உணர்வுகளில் கலந்திருப்பதை இவர்கள் பாடல்களில் காண முடிகிறது. ஆதிவாசியை மணந்த வீமன், வேட்டுவப்பெண் வள்ளியைக் காதல் கொண்டு மணந்த வேலன், காப்பியத்தில் கடைசிவரை கீழ்த்தட்டு மகனாகவே வாழ்ந்து வீரனாக மடிந்த கர்ணனின் கதை.. இதன் பின்புலத்தில் இந்தக் கதை மாந்தர்களை இவர்களின் பாடல்களில் காணும்போது பாடல்களில் வரிகளும் அந்த வரிகளுக்கு நடுவில் ஊடாடிக் கிடக்கும் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

வெரலெல்லாம் கண்ணாடி
என் வீமனோட பொண்டாட்டி
வீமனுக்கு வந்த வெள்ளி மதிக்கலியே
வெணுமின்னுத் தேடலியே!

கையெல்லாம் கண்ணாடி
கர்ணனோட பொண்டாட்டி
எங் கர்ணன் மதிச்சாலும்
எங் கர்ணனுக்கு வந்தவ
கள்ளி மதிக்கலியே
காணாமின்னு தேடலியே!

இங்கே வீமனும் கர்ணனும் தலித்துகளின் உறவு நிலையில் வைத்தே பாடப்படுகிறார்கள். வேறு எந்த புராணக் கதை மாந்தர்களுக்கும் இவர்களில் பாடல்களில் இந்த உறவில் சங்கிலிப் பிணைப்பு உறுதிச் செய்யப்படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தக் கருத்தை உறுதிச் செய்கிறது மற்றும் ஒரு பாடலின் வரிகள்

"கத்தி எடுத்துச் சண்டை செய்து - நான்
கர்ணனோட பொண்பொறந்தேன்
கர்ணன் மதிச்சாலும்
கர்ணனுக்கு வந்தவள் மதிக்கலியே

வில்லெடுத்துச் சண்டை செய்து
வீமனோட பொண்பொறந்தேன்
வீமனுக்கு வந்த வேசி மதிப்பாவ...'

வன்கொடுமைகள்
----------------
தலித்துகளின் இறப்பு என்பது இயற்கையுடன் கலந்து வருவது மட்டுமல்ல,.. காலம் காலமாய் சாதிய வன்கொடுமையினால் விளையும் முடிவு அது. இவர்களின் ஒப்பாரிப் பாடல்களில் அந்த வன்கொடுமைகள் ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் இவர்களின் அழுகுரல் ஒலிக்கிறது. இதில்தான் இவர்களில் ஒப்பாரிப்பாடல்கள் மற்றவர்களின் சோகம் கலந்த ஒப்பாரிப் பாடல்களிலிருந்து வேறுபட்டு தனிமனித இறப்புக்கு அப்பால் ஒலிக்கும் ஒர் இனத்தின் சோகக்குரலாகவே தொடர்கிறது.

பூவரசு கொத்துகளா
பூமுடிக்கும் பெண்டுகளா
போலீசு ஸ்டேஷனிலே- எனக்கு வந்த
புண்ணியவர பாத்தீங்களா?

புண்ணியவர பாக்கவில்லை - ஒரு
பொட்டி வண்டி பாத்துவந்தோம்

என்ற பாடல் காவல்நிலையங்களில் நடக்கும் தலித்துகளின் "இயற்கை மரணத்தை" தன் சோகத்திலுய் பதிவு செய்திருக்கிறது.

கொடல பொறட்டுதுன்னு - நான்
குடிக்க ஜலம் கேக்கப் போனேன்
குடிக்க ஜலம் இல்லேன்னு
கொளத்துத் தண்ணீர் தூரமின்னான்

வவுத்த பொறட்டுதுன்னு
வடித்த ஜலம் கேட்கப்போனேன்
வடிச்ச ஜலம் இல்லேன்னு -எனக்கு
வாய்க்காத் தண்ணி தூரமின்னான்

என்ற வரிகள் எல்லாம் ஆடு மாடுகள் குளித்து குடிக்கும் குளம், வாய்க்கால் தண்ணிரும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டிருப்பதையும்
சாதிய ஆதிக்கத்தின் மனித நேய முகத்திரையைக் கிழித்தும் பிறந்த ஒப்பாரிப் பாடல்கள்.

பெண்குரல்:
==========

தற்காத்து தற்கொண்டான் பேணி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பொய்முகம் காட்டி வாழும் காவிய நாயகிகள்
அல்லர் நாட்டுபுறப் பாடல்களின் பாட்டுடைப் பெண்டிர். வாய்த்தவன் சரியாக வாய்க்கவில்லை என்றால் கற்பும் ஒழுக்கமும் மனத்திட்பமும் வாழ்க்கையும் எத்தனைப் போலித்தனமானது என்பதை இன்றையப் பெண் கவிஞர்கள் பலர் தங்கள் கவிதைகளின்
கருப்பொருளாக்கிப் பாடியுள்ளனர். குற்றமில்லாத குறைகளே இல்லாத காவியப்பெண்களிடம் நடைமுறை வாழ்வில் தன் முகத்தைப்
பார்க்க முடிவதில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் பெண்குரல்கள் அப்படிப் பட்டவை அல்ல.

தனக்கு ஏற்ற மணவாளனைத் தேடித் தாராமல், மனப்பொருத்தம் பார்க்காமல், இனப்பொருத்தம், இடப்பொருத்தம், பணப்பொருத்தம்,
பட்டம் பதவிப் பொருத்தம், சாதகப் பொருத்தம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்த்து உடைந்துப் போன பெண்களின் குரலாக
ஒலிக்கிறது ஒரு பாடல்.

எனக்கு மங்கைக்கேத்த மணவாளனைத் தேடாம
எனக்கு மலையிலிருக்கும் மலைப்பாம்பைத் தேடனீங்க
நான் மங்கைப் பொலம்புறதும்
அந்த மலைப்பாம்பு சீறறதும்
எனக்கு தாங்க முடியலம்மா..

என்று தன் தாயிடமே முறையிடுகிறாள் அவள். இன்னொரு பெண்ணோ தனக்கு வாய்த்தவன் சரியில்லாததால் தன் தாய்வீட்டுக்குப் போக வேண்டிய 'வாழாவெட்டி' நிலையை தன் கண்ணிரில் பதிவு செய்கிறாள்.

ஆக்குன சோறிருக்க
அறிவுள்ள மாடிருக்க- எனக்கு
அரசன் சரியிருந்தா
ஆத்தாவூடு ஏன் போறேன்

என்று பாடுகிறாள். கொண்டவன் சரியில்லாதப்போது விட்டுப் போன உறவுகளின் சொந்தங்களைத் தொட்டுப் பார்த்து மனம் அழுகிறது. அதுவும் பக்கத்திலேயே அத்தை மகனும் மாமன் மகனும்.

அந்த வூட்டுத் திண்ணமேல
அரும்பு காட்டித் தொங்குதுங்க
அரும்பு பொருத்தமில்லே
அத்த மகனும் சொந்தமில்ல

மாமன் வூட்டு மெத்தயில
மால கட்டித் தொங்குதுங்க-இந்த
மால பொருத்தமில்ல
மாமன் மவனும் சொந்தமில்ல

என்ற ஏக்கப்பெருமூச்சு விடுகிறது பெண்ணின் மனம். இந்த மனங்களில் இருப்பதெல்லாம் நடைமுறையின் சித்திரங்கள். ஆனால் கொண்டவன் சரியாக இருந்தால் இளம் வயதுக் காதலுனுக்கும் இசைய மறுக்கிறது பெண்ணின் ஒழுக்கம். அன்று அவள் அவனின் காதலி. இன்று அவள் வேறு ஒருவனின் மனைவி. அவள் காதலன் அவளிடம் இப்போது கேட்கிறான்

கானக் கரிசலிலே
களை எடுக்கும் பொன்குயிலே
நீலக்கரிசலிலே -நான்
நிக்கட்டுமா போகட்டுமா

நிக்கச் சொன்னா நட்டாப்பு
போவச் சொன்னா பொல்லாப்பு
நானொருத்தன் பொண்டாட்டி
நானென்னெத்த சொல்றது..

என்று திருமண வாழ்வின் ஒழுக்க விதிகளைக் கட்டிக்காக்கும் குரலாய் காதலைத் தியாகம் செய்கிறது இவர்களின் வாழ்க்கை. பெண்ணின் வாழ்க்கை ஒரு கிளிக்கூண்டு. காலம் காலமாய் இந்த கிளிக்கூண்டின் வாசம். கிளிக்கூண்டுகள் இரும்பில், மரத்தில், ஏன் இப்போதெல்லாம் தங்கத்தில் கண்ணாடிகளில் பளபளப்பு காட்டுகின்றன. ஆனாலும் வாழ்க்கை என்னவொ கிளிக்கூண்டில்தான். இந்த கிளிக்கூண்டு என்ற சொல்லாக்கம் உருவகம் நாட்டுப்புறப் பெண்ணிடமிருந்துதான் வந்திருக்கிறது.

எனக்கு ஆக்கும் கிளி கூண்டு
என்னப் படச்ச பிரம்மன்
நா ஆக்கி வெளிய வந்தா..
நான் ஆளில்லாச் சாதமின்னு
என்ன ஆண்காக்க தீண்டலியே

எனக்குப் பொங்கும் கிளி கூண்டு
அய்யய்யோ தெய்வங்களா
நான் பொங்கி வெளிய வந்த
எனக்குப் புள்ளயில்லா சாதமின்னு
அந்தப் பொண்காக்கா தீண்டலியே

இந்தப் பாடலில் ஆள் துணையில்லாத வாழாவெட்டியின் கதையும் குழந்தைப்பேறில்லாத பெண்ணின் கண்ணீரும் சேர்ந்தே ஒலிக்கிறது.

இன்னும் சில:

எட்டுப்பைசாவுக்கு அஞ்சலட்டை வாங்கித் தான் பொறந்த இலங்கைக்கு கடிதம் எழுதினாலும் இலங்கையில் இருக்கும் தன் தம்பி தன் கடிதத்தைப் படிப்பானா அல்லது தன் குறையைத் தீர்ப்பானா .. என்று ஈழத்தமிழர்களுடன் தொடரும் மண உறவுகள், கண்ணதாசன் காலம் முதல் கொண்டு இன்றைய வைரமுத்து வரை எத்தனையோ வரிகளை அப்படியே தங்களின் திரைப்படப் பாடல்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

தொகுப்பட்டிருக்கும் பல பாடல்கள் வெள்ளையரின் ஆட்சிக்குப் பின் வந்தவை என்பதைச் சில வரிகளில் காணமுடிகிறது. வாய்மொழிக் கதைப்பாடல்கள் தொகுக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த வாய்மொழிக் கதைப் பாடல்களில்தான் தலித்துகளின் கலகக்குரல் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூலி இல்லாமல் வேலை செய்ய முடியாது என்று கரிகால் வளவன் காவிரி மீது அணைக் கட்டிய போதே ஒலித்த பாட்டாளியின் உரிமைக்குரல் (வலங்கையர் கதைப்பாடல்) திம்மக்கா பொம்மக்கா என்ற அருந்ததியர் சமூகத்து பெண்களைத் திருமணம் செய்து கொண்ட பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த முத்துப்பட்டனின் கதை போன்ற கதைகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உண்டு. சாதிக் கட்டுபாடுகளை மீறி மாற்று பண்பாட்டை நிறுவும் தலித்தியக் குரல்களின் பதிவுகளாக விளங்கும் கதைப்பாடல்களைத் தேடிப் பதிவு செய்திருந்தால் இந்நூல் முழுமை அடைந்திருக்கும். தொகுப்பாசிரியர்கள் சொல்லியிருப்பது போல கையளவு கடல்நீர்தான் இது.

இவர்களின் தொகுப்புகளில் இருக்கும் குறைகள் சுட்டிக்காட்டப் படவேண்டியவை தான். ஆனால் இல்லாததை எல்லாம் பட்டியலிட்டு அதையே காரணம் காட்டி இவர்களின் முயற்சி கண்டு கொள்ளாமல் ஒதுக்கப்பட வேண்டியதல்ல.

நாட்டுபுறக் கலைஞர்களிடம் இன்றைய அறிவுஜீவிகள் நடத்தும் நவீனச் சுரண்டலைப் பற்றி முனைவர் அ.அந்தோணி குருசு அவர்கள் "நவீனத் தொழில் நுட்பக் கருவிகளான ஒலிநாடா, வீடியோ போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கிராமப்புறக் கலைஞர்களின் ஆடல் பாடல்களைப் பதிவு செய்து ஆராய்ச்சி செய்து பி.ஏ, எம்.ஏ, எம்.பில், பிஎச்.டி. டி.லிட், என்று பட்டம் பெறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. அறிவு ஜீவிகளான பேராசிரியர்கள் பயில்முறைக் கலைஞர்களாகத் தொடங்கி தொழில்துறைக் கலைஞர்களாக வளர்ந்து வியாபார ரீதியில் பிழைப்பு நடத்துகிறார்கள். கலைஞர்களாக மாறிப் பொங்கல் போன்ற தமிழர் விழா நாட்கள், கோயில் திருவாழாக்கள் ஊர்க் கொண்டாட்டங்கள் வியாபார நிறுவன விழாக்கள், வானொலி நிலைய மேடைகள், தொலைக்காட்சி மேடைகள் ஆகியவற்றில் சினிமா
நடிகர்களுக்கே உரிய பகட்டு மேக்கப்புகளுடன் தோன்றுகிறார்கள். அரசியல்வாதிகள், தொழில்துறை நிறுவனத்தினர், வியாபார முதலீட்டாளர்களின் அபிமானம், செல்வாக்கு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு கலைமாமணிப் பட்டங்கள். ரொக்கப்பரிகள் பெற்று
நாட்டுபுறக் கலைஞர்களாக நாடறிய உள்நாட்டில் தங்களை நிலை நிறுத்துக் கொள்வது மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி என்ற பல நாடுகளுக்கும் சென்று கலைப் பணிகள் நிகழ்த்தி காசு குவித்து வருகிறார்கள்" என்று கடுமையாகச் சாடி இருக்கிறார்.

அது உண்மைதான். ஏதேனும் ஆய்வுக்காக இந்தப் பாடல்கள் கண்டறியப்பட்டு வேறு தளங்களில் இருந்து வெளிக்கொணரப்பட்டிருந்தால் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றத் தான் செய்கிறது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பேராசியர் பழமலய் அவர்களின் அறுவுரைப்படி விழி. பா. இதயவேந்தனும், அன்பாதவனும் தொகுத்தப் பாடல்கள் அதன் பின் இருபது வருடங்களுக்குப் பிறகு நூலாக வெளிவந்தபோது எந்தளவுக்கு வாசிக்கவும் பேசவும் பட்டது, ஏன் தலித்திய பத்திரிகைகளும் இந்த முயற்சிக்கு எந்தளவுக்கு விமர்சன அறிமுகம் செய்தார்கள் என்பதை எண்ணும் போது சில இருட்டடிப்புகளுக்கு எதிராகவும் எழுந்து நிற்கும் வல்லமையை ஒவ்வொரு தளத்திலும் தலித்துகள் உருவாக்கிக்கொள்ள வேண்டிய சூழல் மறையவில்லை என்பதையே உணர்த்துகிறது.


"நான் பேரறிஞர்களிடன் பாடம் கற்றவன் அல்லன். நான் கிழிந்த ஆடைகளில் குழந்தையாய் இருக்கையில் அன்னையின் நூல்நூற்கும்
கருவியின் பக்கத்தில் எனது குடிசையில் பாடல்களைப் பயின்றவன். இருப்பினும் நான் பாடல்களுக்கு ஒரு பாதை அமைத்திருக்கிறேன்.
மரக்கிளைகளை வெட்டி ஒரு வழித் திறந்து வைத்திருக்கிறேன். உயர்ந்து வரும் இளைஞர்களுக்கும் மேன்மையுறும் தேசிய மக்களுக்கும்
இனிமேல் இதுதானப்பா புதியபாதை" என்று பின்லாந்து நாட்டின் நாட்டுபுறப் பாடல்களில் (கலேவலா-எலியாஸ் லொண்ரொத்) ஒலிக்கும் குரல் இந்த நாட்டுபுறப்பாடல்களுக்கும் பொருந்தும்.

"நம்முடைய தலித் கவிஞர்களுக்கு இத்தொகுப்பு ஒரு பயிற்சிப் பட்டறையாகப் போய்ச் சேர்ந்தால் பயனுள்ள விளைவுகளை
எதிர்பார்க்கலாம். மகாகவிகள் தலித்துகளிடம் இருந்துதான் தோன்றமுடியும்" என்று இந்நூலுக்கான அறிமுக உரையில்
முனைவர் க. பஞ்சாங்கம் சொல்லியிருப்பது வெறும் அணிந்துரை மட்டும் அல்ல.

சிறப்பாக வெளியிட்டிருக்கும் காவ்யா பதிப்பகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டும்.


- புதிய மாதவி, மும்பை ([email protected]

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com