Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
நூல் விமர்சனம்

படைப்புகளின் வரையறைகளை மாற்றி எழுதும் கலைஞன் ஆதவன் தீட்சண்யா
கீற்று நந்தன்

“ஓசூர்லே ஆதவன் தீட்சண்யான்னு நம்ம ஆளு ஒருத்தர் இருக்காரு. அவரைப் போய் பாருங்க” என்றார் இலட்சுமிகாந்தன். ஓசூர் சென்றேன்.

Aadhavan dheetchanya Book என்ன வாங்குவது என்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் இல்லாதவன் ஒரு பெரிய துணிக்கடையில் நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இலக்கிய உலகினுள் வாசகனாய் எனது பிரவேசம் இருந்தது. அதற்கு முன்னர் ராஜேஷ்குமார், சுபா, சுந்தரராமசாமி, பாலகுமாரன், சுஜாதா, கல்கி, சாண்டில்யன் ஆகியோரது நாவல்களைத் தாண்டி எனது வாசிப்பின் எல்லை நீண்டிருக்கவில்லை. ஆதவன்தான் கைப்பிடித்து என்னை கூட்டிக் கொண்டு போனார்.

ஓசூரில் அன்றிரவு அவரது வீட்டிலேயே தங்கினேன். அபத்தமாய் நிறைய பேசினேன், நிறைய கேள்விகள் கேட்டேன். குழந்தையின் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லும் தகப்பனைப் போல் ஆதவன் பேசினார். எனக்கு வலிக்காமல் எனது நம்பிக்கைகள் பலவற்றைப் பொய்யாக்கினார். விடைபெற்றுச் செல்லும்போது அவரது கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்தார்.

பேருந்தில் போகும்போது ‘பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்’ கவிதைத் தொகுப்பின் முதல் இரண்டு கவிதைகளைப் படித்தேன். வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாமல் அவதிப்படும் பச்சிளங்குழந்தையைப் போல் இருந்தது எனது நிலை. ஒன்றுமே புரியவில்லை. ‘15 வருடங்களாக தமிழில் படிக்கும் எனக்கே புரியவில்லையே, 3ம் வகுப்பு வரை படித்த என் அப்பா போன்ற தொழிலாளிக்கு இவர் எழுதுவது எப்படிப் புரியும்? இவரை எல்லாம் எதற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள்?’

‘நீ படித்து தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டவை அல்ல இந்தக் கவிதைகள்’ என்று என்னை அந்தப் புத்தகம் பரிகசிப்பது போலிருந்தது. கவிதைத் தொகுப்பை மூடிவிட்டேன். அடுத்த இரண்டு நாட்களில், படிப்பதற்கு வேறு எதுவும் கைவசம் இல்லாதபோது ஆதவனின் புத்தகம் நினைவுக்கு வந்தது. மறுபடியும் ஒருமுறை மோதிப் பார்த்துவிடுவது என்று புத்தகத்தைக் கையில் எடுத்தேன். குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்தபோது, அது ‘புதுஆட்டம்’ கவிதையாக அமைந்தது.

இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில்
தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து
யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து
துவங்குகிறது இப்போது’

என்ற வரிகளைக் கடந்தபோது உடலும், மனமும் சட்டென்று விழிப்பானது. சரசரவென கவிதையை முடித்தபோது, என்னிலிருந்து ஒருவன் வெளியேறி, கொள்கைரீதியிலான எனது எதிரிகளைப் பார்த்து, ‘வாங்கடா’ என்று சமருக்கு அழைத்தான். இரண்டு கைகளிலுமிருந்த வாளை இலாவகமாகவும், மூர்க்கமாகவும் சுழற்றினான். தொகுப்பின் பின்பகுதி கவிதைகள் முழுக்கப் படித்து முடித்தபோது வாளின் வேகம் கூடியிருந்தது. இலக்கியத்தில் இதுநாள்வரை நான் தேடிக்கொண்டிருந்தது இதுதான் என்பது உறுதியானதில் மனம் குதூகலித்தது. ‘புறத்திருந்து’ கவிதைத் தொகுப்பையும் ஆர்வத்துடன் வாசித்தேன். இதுநாள்வரை கவிதை என்பதற்கு நான் கொண்டிருந்த முன்மாதிரிகள் எல்லாம் என்முன்னால் சரிந்து விழுந்தன. கவியரசு, கவிப்பேரரசுகளிடமிருந்து என்னை அக்கவிதைத் தொகுதிகள் மீட்டன. சிருங்காரமும், ஆழ்மன விகாசங்களும் நிரம்பிய கவிதைகளையே அதுகாறும் படித்து வந்திருந்தவனை ஆதவனின் கவிதைகளிலிருந்த வலி, கோபம், எள்ளல், அறைகூவல் இயல்பாகவே கட்டிப் போட்டன.

இதையெல்லாம் கவிதையாக எழுதமுடியுமா, மொழியை இவ்வளவு காத்திரமாகப் பயன்படுத்த முடியுமா, வார்த்தைகளால் வாசகனின் மனதில் நெருப்பைப் பற்ற வைக்க முடியுமா? அன்றைய தினமும், அதற்கு அடுத்த வந்த விடுமுறை தினமும் ஆதவனின் கவிதை தினங்களாகவே கழிந்தன. ஓவ்வொரு கவிதையையும் இரண்டு மூன்று முறை வாசித்தேன். ஒவ்வொரு வரியையும் பிரித்துப் பிரித்து படித்தேன். எனது கொள்கைகள் பலவற்றையும் அக்கவிதைகள் கூர்மையாக்கின.

எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் அக்கவிதைகளைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்து போனேன். தொலைப்பேசியில் ஆதவனை அழைத்து, எனது வாசிப்பனுபவத்தைக் கூறினேன். அப்படியா என்று கேட்டுவிட்டு அடுத்த செய்திக்குத் தாவிவிட்டார்.

அதன்பின்னர் ஓசூர் சென்றபோது அவரது சிறுகதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தார். கவிதை தந்த அனுபவத்திற்கு சற்றும் குறையாத வேறோரு வாசிப்பனுவத்தை சிறுகதைகள் தந்தன.

ஆதவன் என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளரானார். நான் எந்த சித்தாந்தத்தினால் உந்தப்பட்டவனாய் இருந்தேனோ, அதையே தான் ஆதவன் தன் படைப்புகளில் கைக்கொண்டிருந்தார். எதையெல்லாம் மானுடத்திற்கு எதிரானதாக நான் கருதி வந்தேனோ அதையெல்லாம் அவர் தனது திராவக வார்த்தைகளால் சாடிக்கொண்டிருந்தார்.

எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே பொதுவான புள்ளிகள் சிலவாவது இருந்தால் மட்டுமே எழுத்தாளன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனாகிறான். ஆதவனுடன் ஒன்றுபடும் புள்ளிகள் என்னிடம் நிறைய இருந்ததால் அவர் எனக்கான எழுத்தாளரானார்.

இணைய ஊடகத்தில் பணிபுரிந்து வந்ததால் எனக்குக் கிடைத்தை வாய்ப்பைப் பயன்படுத்தி ஆதவனின் படைப்புகள் இணையத்திற்குக் கொண்டுபோனேன். நான் இல்லாவிட்டால் கூட கொஞ்சம் தாமதமாகவேனும் அவை இணையத்திற்குப் போயிருக்கும் என்றாலும், அவை என்மூலமாகவே உலகின் பல்வேறு மூலைகளில் வசிக்கும் தமிழர்களிடம் போய்ச் சேர்ந்தது என்பது இன்றளவும் எனக்குப் பெருமிதமாகவே இருக்கிறது.

வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான உறவை இரத்தம் சம்பந்தமான அல்லது நட்புரீதியான எந்த உறவுகளுடனும் ஒப்பிட முடியாது. அது மாணவனுக்கும், ஆசிரியனுக்குமான உறவைப் போன்று தனித்துவமானது. அது வாசகனை தனது உயரத்துக்குக் கைதூக்கி விடுவது. அந்த உயரம் மேல்நோக்கியதா, கீழ்நோக்கியதா என்பதிலிருந்தே அந்த எழுத்து மக்களுக்கானதா இல்லையா என்பது வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் ஆதவன் தீட்சண்யா மக்களுக்கான (மக்கள் மொழியில் எழுதாத) எழுத்தாளர். அவரது படைப்புகளின் கரம்பிடித்தேதான் எனது தமிழ் இலக்கிய வாசிப்பு இதுவரை தொடர்கிறது.

ஆதவனை சந்தித்தபின் பல எழுத்தாளர்களின் படைப்புகளில் என் மனதைக் கரைத்ததுண்டு. ஆனால் தொடர்ச்சியாக அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அந்த லயிப்பு கரைந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன். வாசகனின் வாசிப்பு அதிகமாகும்போது எழுத்தாளர்களைத் தாண்டி அவன் முன்னே நகர்ந்துவிடுகிறான். நான் படிக்க ஆரம்பித்த பல எழுத்தாளர்கள் வெகு சீக்கிரமாகவே எனக்குப் பின்தங்கிவிட்டார்கள். அவர்களது வாசிப்பும், படைப்பு எல்லையும் வெகு எளிதாக கடக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்றளவும் என்னால் கடக்க முடியாத எழுத்தாளர்களில் முதன்மையானவராக ஆதவன் தீட்சண்யா இருக்கிறார்.

அவரது ஓவ்வொரு படைப்பும் என்னுள் பல சாளரங்களைத் திறந்துவிட்டபடியே இருக்கிறது. சமுக - பண்பாட்டு நிகழ்வுகளின் மீதான அவரது கூரிய விமர்சனங்கள் என்னைக் குறுக்கீடு செய்தபடியே இருக்கின்றன. நான் சென்னை வந்து, கீற்று இணையதளத்தைத் தொடங்கிய பின்பு அவருடனான நட்பு மேலும் இறுகியது. சென்னைக்கு ஒருமுறை வந்திருந்தவரை நான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்து, நானும் நண்பர் பாஸ்கரும் இரவு மூன்று மணிவரை அவரது படைப்புகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். என் நெஞ்சை விட்டு நீங்காத இரவுகளில் அதுவும் ஒன்று.

‘நாம எழுதறதை இந்த இரண்டுபேர் ஆர்வமாகப் படிச்சிட்டு இருக்காங்களே’ என்று நினைத்தாரோ என்னவோ, அதன்பின் அவர் எழுதி முடித்ததும் பல படைப்புகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார். மற்றவர்கள் யாரும் படிப்பதற்கு முன்பு அவற்றை சுடச்சுட படிப்பதும், அதுகுறித்து அவருடன் உடனே விவாதிப்பதும் உவப்பானதொரு அனுபவமாகவே இருந்துவருகிறது.

நான் சென்னைக்கு வந்த பின்பான நாட்களில் அவரது ஆர்வம் சிறுகதைகளில் அதிகரித்தை உணர முடிகிறது. அவரது சிறுகதைகள், சிறுகதைகள் என்று இதுவரை கூறப்பட்டு வந்ததின் வரையறையை முற்றாகப் புரட்டிப் போட்டன. கட்டுரையாக எழுதவேண்டியதை கவிதையாக எழுதுவது அத்தனை கடினமில்லை. ஆனால் அவற்றையே சிறுகதையாக எழுதுவது? அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பின் முக்கால்வாசி சிறுகதைகள் அப்படித்தான் அமைந்தன. கட்டுரையா, புனைவா என்ற மயக்கத்தில் வாசகன் இருக்கும்போதே சிறுகதையை முடித்துவிடும் ரசவாதம் அவருக்கு வாய்த்திருந்தது. மேடைபோட்டு பேசினால் மூன்று மணிநேரமும், எழுதினால் 300 பக்க புத்தகமாகவும் எழுதவேண்டிய உலகமயமாக்கல் பிரச்சினையை அவர் ஒரு சிறுகதையாக எழுதி, ‘படித்து விட்டுச் சொல்லுங்கள் ரமேஷ்’ என்று மின்னஞ்சலில் அனுப்பியபோது, அதைப் படித்துவிட்டு உண்மையில் மிரண்டுபோனேன்.

இப்படியும் எழுதமுடியுமா? தமிழ்ச்சிறுகதைகளின் உச்சங்களில் ஒன்றாகவே அது எனக்குப் பட்டது. அந்த உச்சத்தை, துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றிய அவரது கதை தாண்டியது. முந்தைய படைப்பில் எட்டிய உயரத்தை அடுத்த படைப்பில் தாண்டுவது அவரது வழக்கமாக இருந்துவருவதால்தான் இன்றளவும் என்னால் கொண்டாடப்படும் எழுத்தாளராக இருக்கிறார். கதை சொல்லலில் புதிது புதிதான உத்திகளைக் கையாளுவதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இன்றளவும் தீராததாக இருக்கிறது. அந்த ஆர்வம் மட்டுமே அவரது சிறுகதைகளை வேறு யாருடனும் ஒப்பிட முடியாத இடத்திற்குக் கொண்டு போகிறது.

காய்த்தல், உவத்தல் இன்றி தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் எவரும், ஆதவனுக்கு பிரபஞ்சன் கொடுத்த அங்கீகாரத்தையே கொடுப்பார்கள். ஆனால் அந்த அங்கீகாரம் ஆதவனுக்குப் போதிய அளவு தற்போது கிடைக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே. இன்றில்லாவிட்டாலும் கூட, நிச்சயம் நாளை ஒரு நாள் அவருக்கான அங்கீகாரத்தை அவரது படைப்புகள் பெற்றுத்தரும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆதவனின் வாசகனாக இருப்பதில் மகிழ்ந்து,
கீற்று நந்தன்

('ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்' தொகுப்பிற்கு எழுதப்பட்ட பின்னுரை. புத்தகம் வெளியீடு: சந்தியா பதிப்பகம், 57 - 53வது தெரு, அசோக் நகர், சென்னை - 83. பக்கங்கள் - 336, விலை - ரூ.175)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com