நூல் அறிமுகம்
குஜராத் 2002 இனப்படுகொலை - ‘தெகல்கா’ புலனாய்வு முழு தொகுப்பு
தமிழில்: அ.முத்துகிருஷ்ணன்
வெளியீடு: வாசல் பதிப்பகம்
402, முதல் தெரு, வசந்த நகர்,
மதுரை-625003.
செல்: 9842102133
தலித் முரசு
203, ஜெயம் பிரிவு, சித்ரா அடுக்ககம்
9,சூளைமேடு நெடுஞ்சாலை,
சென்னை-600094.
பேசி:044-23745473
நூலிலிருந்து:
‘தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் ‘தெகல்கா’ குடும்பத்தினருக்கு-வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தது. நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.
வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்கவேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப் படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரணைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாக்கிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள வாக்குமூலங்களை குஜராத் காவல் துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்’களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளைத் தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகள் கச்சிதமாய் தொடர்கின்றன.
இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திரமோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ்.தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்தும் இருப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்த பிரதிகள் வரும் பலரும் இந்த முகாம்களின் அங்கத்தினரே ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும்படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் ‘தெகல்கா’ தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.
சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புறப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க.வை உக்கிரமாய் எதிர்த்து முழக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்புப் பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்னை பேசுகிறவர்கள் மதவாதத்தை மிகவும் தட்டையாகப் புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாதத்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைத் திட்டம் ஏன் உருவாக்கப்படவில்லை? கே.என்.பணிக்கர், ராம் புன்யானி போன்று மனதின் அடியாழத்திலிருந்து தொடர்ந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாததால் தான் மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்?
மத வெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்சநாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.க.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?
இந்தப் பிரதிகள் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் தான் துரிதமாக மொழியாக்கம் செய்யப்பட்டது. மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகளில் கம்பீரமாய் வலம் வரும் பேராசிரியர் பன்துக்வாலா, காவல் துறை உயர் அதிகாரி ஆர்.பி.சிறீகுமார் ஆகியோர் நம்பிக்கையின் தூதர்களாகத் திகழ்கிறார்கள். இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கியா ஜாப்ரி, ‘தெகல்கா’ பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். இமயமலையில் பாறைகள் உருண்டதாக வெளிவந்த பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, வழக்கை தானே தாக்கல் செய்யும் உச்சநீதி மன்றம், ‘தெகல்கா’ புலனாய்வு மீது தன் பார்வையை பதிக்குமா? கோத்ராவில் இனப்படுகொலை செய்யப்பட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க - http://www.anyindian.com/product_info.php?products_id=213001
பதிப்பாளர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
|
|