Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

கல்வெட்டில் தெரியும் காலம்
சா.கந்தசாமி


மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது மொழிதான். அதாவது பேசுவதும், எழுதுவதும். மொழி, தகவல் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக உள்ளது என்பது மட்டுமல்ல அது கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் ஊற்றாகவும் இருக்கிறது. எழுதப்பட்ட சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆதாரமாக உள்ளது போலவே, எழுதாமல் விட்டிருப்பதையும் மொழியின் மூலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

Tamil Sollagarathi உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுதான் என்றாலும், எல்லோரும் ஒரே மொழியை பேசுவதில்லை. ஒரே மாதிரியாக எழுதுவதுமில்லை. ஒரு பகுதியில் வாழ்ந்தாலும் பல மொழிகளை பேசுகிறார்கள். அதிலும் மலைப்பகுதிகளிலும் காடுகளுக்கிடையிலும் வாழ்கிற மக்கள் தனித்தனியான மொழியைப் பேசுகிறார்கள். அதாவது ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மொழி இருக்கிறது. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துக்கள் கிடையாது. வெறும் பேச்சு மொழிதான். ஆனால் கதை, பாட்டு எல்லாம் வாய்மொழியில் உண்டு.

மொழிக்கும் அர்த்தம் கொடுத்தது எழுத்துதான். எழுத்தின் வழியாகவே நாம் சரித்திரத்தை அறிகிறோம். உலகத்திலேயே முதன் முதலாக எழுதியவர்கள் சுமேரியர்கள் என்றும், அம்மொழிக்கு எழுத்து வந்து 4500 ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன என்றும் ஐரோப்பாவில், சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்த களிமண் கட்டிகளில் காணப்படும் எழுத்துகளை வைத்துக்கொண்டு சொல்கிறார்கள். ஆனால், மொழி என்பது நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுக்கு வசப்பட்டு விட்டதென்று திட்டமாகச் சொல்கிறார்கள். சுமேரியர்கள், எகிப்தியர்கள், சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மொகஞ்சதோரா மக்கள் எல்லாம் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள் என்பது புதையுண்ட அவர்களின் நகரங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் இருந்து அறிய முடிகிறது. பண்டைய மக்களின் எழுத்துக்களை முழுவதுமாக படிக்கமுடியாவிட்டாலும் _ பெரும்பகுதி படிக்கப்பட்டு அர்த்தம் காணப்பட்டு இருக்கிறது. அதில் இன்னமும் படிக்க முடியாமல் இருப்பது சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதோரா _ ஹரப்பா மக்களின் எழுத்துகள்தான். அவை திராவிட மக்களின் மொழிதான் என்றாலும் அர்த்தம் தெரியாமல்தான் இருக்கிறது.

உலகத்தில் பல பண்டைய நாகரிகங்கள் அழிந்துவிட்டது போலவே, பல தொன்மையான மொழிகள் வழக்கொழிந்து விட்டன. மொழிகள் கழிவதும், புதிய மொழிகள் தோன்றுவதும் தொடர்ந்து நிகழும் வரலாறாக உள்ளது. அதுவே மொழி பற்றிய ஆராய்ச்சியை சுவாரசியமாக்கி உள்ளது. 6760க்கு மேற்பட்ட மொழிகள் உலகத்தின் பல பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான அம்சம் நான்கு சதவீத மக்கள் தொன்னூற்று ஆறு சதவீத மொழியைப் பேசுகிறார்கள் என்பதுதான். அது இந்தியாவிற்குப் பொருந்தக்கூடிய நிலைதான். இந்தியாவில் 1652க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆனாலும், இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் உள்ளன. ஒன்று தமிழ். இன்னொன்று சமஸ்கிருதம். இவற்றில் தமிழ் பல்லாண்டுகளாக பேச்சு மொழியாகவும், இலக்கிய, இலக்கணங்கள் கொண்ட மொழியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழி - அதாவது எழுத்து பற்றிய ஆவணம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கிடைக்கிறது. தமிழ் எழுத்துக்களின் பதிவு குகைகளிலும் கற்பாறைகளிலும், மலை முகடுகளிலும் காணப்படுகின்றன. தமிழ் எழுத்து என்று ஒன்று உள்ளது என்பதை ராபர்ட் சுவெல் என்பவர்தான் 1888ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து தமிழ் எழுத்து காணப்படும் கல்வெட்டு பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது.

தமிழ் கல்வெட்டுக்களில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள், இதர நன்நெறிகள் எதுவும் வெட்டப்படவில்லை. கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ள முக்கியமான அம்சம் மன்னர்கள், வணிகர்கள் கொடுத்த தானம், வெகுமதி பற்றிதான். இருந்தாலும், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த ஆவணமாக உள்ளது என்பது போலவே எழுத்து என்பதின் வளர்ச்சியைப் பற்றியும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
தமிழ் எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாகக் காணப்பட்டாலும் அதிகமான தகவல்கள் கொண்டதும், தீர்க்கமான அமைப்பும், வடிவ நேர்த்தியும் கொண்டது ராஜராஜசோழன் கல்வெட்டுகள்தான். தஞ்சாவூர் பெரிய கோயில், திருப்பதி கோயில் ஆகியவற்றில் காணப்படும் பதினாறாவது நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜன் கல்வெட்டுகள் - சமூக சரித்திரம் பற்றி அறிந்துகொள்ளத்தக்க ஆவணமாக உள்ளன. கி.பி. 400ஆம் ஆண்டில் தொடங்கி கி.பி. 1800 வரையிலான காலத்தில் காணப்படும் சொற்களைத் திரட்டி ஓர் அகராதி கொண்டு வர தமிழன்பர் மர்ரே ராஜம் 1969ஆம் ஆண்டில் முயற்சி எடுத்துக்கொண்டார். அவர் பணி 37 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றுப்பெற்று 2002ஆம் ஆண்டில் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியாக இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கல்வெட்டுகளில் காணப்படும் சிறப்புப் பெயர், இடப்பெயர் தவிர்த்து பிற எல்லா பெயர்களும் முக்கியமான சொற்தொடர்களும் அதோடு அமைந்த சொற்கள் அனைத்தும் கல்வெட்டில் உள்ளபடி உருவமைதி சிதையாமலும் திருத்தப்படாமலும் கொடுக்கப்பட்டுள்ளன என்று பதிப்பில் முக்கிய பங்காற்றியுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டுத்துறை முன்னாள் பேராசிரியர் ஏ. சுப்பராயலு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியில் அதிகமாக இடம்பெற்றுள்ள சொல் வரிதான். எதன் எதன் மீதெல்லாம் பண்டைய காலத்தில் வரி விதிக்கப்பட்டிருந்தது என்பதை அறிந்துகொள்ள அகராதி துணை செய்கிறது. வரிக்கு அடுத்து முக்கியமான சொல்லாக கல்வெட்டில் இருப்பது நீர்ப் பாசனம். பிறகு நெசவு, அரசக்கட்டளை, கடவுள் வழிபாடு, கோயில் சார்ந்த சொற்கள், மக்கள் பழக்கவழக்கங்கள் என்று பல சொற்கள் அகராதியில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியில் இடம்பெற்றுள்ள சில சொற்கள் வழக்கொழிந்துவிட்டாலும் சில சொற்களுக்குப் பழைய அர்த்தம் போய், புது அர்த்தம் வந்திருந்தாலும் - பல சொற்கள் இன்னும் புழக்கத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தியாவிலேயே கல்வெட்டுகள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி திருத்தமாகவும் ஆதாரத்தோடும் வெளிவந்திருப்பது பாராட்டக்கூடியது. தமிழ் மொழியை அதன் பண்டைய பெருமைகளோடு முன்னெடுத்துச் செல்லும் அரிய செயல் என்றே அதனை பாராட்ட வேண்டும்.

தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி - இரண்டு தொகுதிகள், (டபுள் க்ரவுன் சைஸ்) வெளியீடு: சாந்தி சாதனா, பக். 606, விலை ரூ. 800

Kandasamy
சா. கந்தசாமி

‘சாயாவனம்’ என்ற நாவல் மூலமாக தமிழ் இலக்கிய உலகிற்கு 1970ஆம் ஆண்டில் அறிமுகமான படைப்பு எழுத்தாளர். சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும், பதினோரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ‘விசாரணைக் கமிஷன்’ என்ற நாவலுக்காக 1998ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். பத்தாண்டுகள் திரைப்பட தணிக்கைக் குழு ஆலோசகர். சாகித்திய அகாதமி வெளியீடான ‘நவீன தமிழ்ச் சிறுகதைகள். இலங்கை மலேசியா சிங்கப்பூர் படைப்புகளைக் கொண்ட ‘அயலக தமிழ் இலக்கியம்’ஆகியவற்றின் தொகுப்பாசிரியர். குறும்பட தயாரிப்பாளர், இயக்குநர் சுடுமண் சிலைகள் - என்ற தமிழக பாரம்பரிய கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன் - அசோகமித்திரன் - வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்கள் எடுத்துள்ளார். மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்திற்காக சமீபத்தில் ‘தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற குறும்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். 1940ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். தற்போது வசிப்பது சென்னையில்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com