புத்தக விமர்சனம்
திரும்பிப் பார்க்கிறேன் - நூல் விமர்சனம்
சு.பொ.அகத்தியலிங்கம்
ஒரு லட்சியத்திற்கு தாலி கட்டிக் கொண்டு வாழுகிறவர்கள் பல சங்கடங்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. அதிலும் ஒரு அமைப்பின் கட்டு திட்டத்திற்கு உட்பட்டு செயல்பட உறுதி மேற்கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவே பல சாவல்களை சந்திக்க வேண்டியிருக்கும். விஜயபாஸ்கரன் தான் ‘சரஸ்வதி' ஏட்டை நடத்தியபோது மேற்கண்ட சவால்களை மிகச்சாதுர்யமாக எதிர்கொண்டிருக்கிறார். அந்த வலியின் பதிவே “திரும்பிப் பார்க்கிறேன்” எனும் இந்நூல்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராக இருந்து கொண்டே தனிப்பட்ட முறையில் ‘சரஸ்வதி'யை அவர் வெளிக்கொணர்ந்தது புகழ்வேட்கையால் அல்ல. அதிலும் ஒரு நன்னோக்கம் ஒளிந்திருந்தது. “நல்ல தரமுள்ள இலக்கியத்தையும் மனித பண்புகளின் மேம்பாட்டு கருத்துக்களையும் வளர்க்க வேண்டும் என்பதே நமது கருத்து. ஜனநாயக மனிதாபிமானத்தை வளர்க்கும் இலக்கியமே இன்றைய தமிழ்நாட்டுக்குத் தேவை. இத்தகைய இலக்கியத்தை ஊட்டி வளர்த்து ஊக்குவிப்பதும் உண்டாக்குவதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். இவைதான் ‘சரஸ்வதி' ஆசிரியர் குழுவின் அடிப்படை நோக்கம் ஆகும்.”' இந்தத் தெளிவான புரிதல் ‘சரஸ்வதி'யை பரந்து விரிந்த ஜனநாயக மேடையாக்கியது.
கட்சியின் அதிகார பூர்வ ஏடாக தாமரை வெளிவந்தது. ‘சரஸ்வதி’ கட்சித் தலைமையின் புறக்கணிப்புக்கு உள்ளானது. இதற்கு மத்தியில் பெருத்த பொருளாதார நட்டத்தை தாங்கிக் கொண்டு ஏழு ஆண்டு காலம் ‘சரஸ்வதி' வெளிவந்ததே மகத்தான சாதனை. அன்றே எது ஆபாசம் என்பது குறித்து ‘சரஸ்வதி' நடத்திய ஆக்கப்பூர்வமான விவாதம் பத்திரிகை வரலாற்றில் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய சிறப்புச் செய்தி.
“வேண்டாம் வீர வணக்கம்” என புதுமைப்பித்தனை மையமாக வைத்து ‘சரஸ்வதி' நடத்திய விவாதம் இப்போதும் தேவையானது. தனி நபர் துதி என்பது நமது பண்பாட்டின் சாபக்கேடு. அதிலும் இன்று அரசியல் தொடங்கி சகல துறைகளிலும் தனிநபர் துதி உச்சத்தில் இருக்கும் வேளையில் ‘சரஸ்வதி'யின் அன்றைய பணி நிச்சயம் நினைவு கூரப்படவேண்டிய செய்தியே.
விஜயபாஸ்கரன் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன். மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்ட்டானவர். கம்யூனிஸ்ட் கட்சியில் உருவான தத்துவ மோதலில் ஊக்கமுடன் பங்கு கொண்டவர். எனவே, அவருடைய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் இரண்டு கோணங்களில் அணுகப்பட வேண்டும். ‘விடிவெள்ளி', ‘சமரன்', ‘சரஸ்வதி' ஏடுகளில் வெளிப்பட்ட அரசியல் கோணங்கள். அதனை இப்போது இங்கு விமர்சிக்கவில்லை. அக்கருத்துகள் பலவற்றோடு நமக்கு உடன்பாடும் இல்லை.
ஒரு அமைப்புக்குள் நின்று கொண்டு தனியாக ஒரு ஏட்டைக் கொண்டு வந்து - அதன் மூலம் இலக்கியத் துறையில் அவர் வகுத்த ஜனநாயகப் பாதை, அதற்காக அவர் அனுபவித்த துன்பதுயரங்கள் வலிகள் ஊன்றி கவனிக்கத்தக்கது. இந்நூல் அதனை எளிமையாகவும் நேர்மையாகவும் வலிமையாகவும் பதிவு செய்துள்ளது.
“ எண்பத்திரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். தோல்விகளையும் இழப்புகளையும் நிறையவே சந்தித்திருந்தாலும் துவண்டு விழாமல் நேர்மை தவறாத ஒரு மனிதனாக வாழ்ந்திருக்கிறேன் என்ற மனத் திருப்தி இருக்கிறது” என்று தோழர் விஜயபாஸ்கரனால் சொல்ல முடிகிறதே. இதுதான் வெற்றிகரமான வாழ்க்கை இலக்கணம்.
வ.விஜயபாஸ்கரன்
பதிப்பாசிரியர் அ.நா.பாலகிருஷ்ணன்
பக்கங்கள் 144 விலை ரூ. 100
வெளியீடு: ஞானியாரடிகள் தமிழ் மன்றம்
பு.எண். 17 (ப.எண். 7) நாகமணி தெரு, சிந்தாதரிப்பேட்டை,
சென்னை 600 002
- சு.பொ.அகத்தியலிங்கம் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
பதிப்பாளர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
|
|