Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
நூல் விமர்சனம்

இசை பிழியப்பட்ட வீணை
ஆழியாள்

19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். ‘இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடுகளும் தீவுகளும், நாடுகளும் நாற்பதுக்கும் மேற்பட்டவை என்பர்’.

இலங்கையைப் பொறுத்தவரை பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்காக தென்னிந்தியத் தமிழர்கள் பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டு மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள். இம்மக்களை மலையக மக்கள் என்றும் குறிஞ்சி நில மக்கள் என்றும் கூறுகிறோம். இது ஒரு தொடர்குடியேற்றச் சந்ததியானபடியால் தென்னிந்தியக் கலாசார, பண்பாட்டு உணர்வுகளின் பாதிப்பிலிருந்து முற்றாக விடுபடாமலும் இந்திய மண்ணின் தொடர்புகளிலிருந்து முற்றாக அறுபடாமலும் பாரம்பரிய கலை வடிவங்களையும், நாட்டார் வழக்காறுகளையும் வாய்மொழி இலக்கியமாக ஆரம்ப காலங்களில் வெளிப்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வயற்புற கிராமிய சூழலில் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் இலங்கையில், மலையகத் தோட்டப்புறச் சூழலில் மாற்றத்தோடு பாடப்பட்டன. 1920களின் பின்னர்தான் கவிதை முயற்சிகள் வாய்மொழிப்பாடல் வடிவில் சிறுதுண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு மலையகத் தொழிலாளர்களிடையே பாடிப் பரப்பப்பட்டன. பெண்களைப் பொறுத்தவரையில் மீனாட்சியம்மை இதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். (‘இசை பிழியப்பட்ட வீணை’ தொகுப்பு மீனாட்சியம்மையின் நினைவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது).

தோட்டம் தோட்டமாகச் சென்று இவர் விடுதலை உணர்வூட்டும் பாரதியார் பாடல்களையும், தான் இயற்றிய பாடல்களையும் பாடுவார். இவ்வாறு பாடிய பாடல்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு விநியோகமும் செய்தனர். இவ்விடத்தில் “இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலமை” என 1940இல் மீனாட்சியம்மை எழுதிய பிரசுரம் வெளிவந்துள்ளது நினைவு கூறத்தக்கது.

இனி ‘இசை பிழியப்பட்ட வீணை’ தொகுப்புக்கு வருவோம். இந்தத் தலைப்பே (நிரஞ்சலாவின் தொலைந்த கவிதையின் தலைப்பு என தொகுப்பாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்) தொகுப்பின் கவிதைகளைப் பற்றி விளக்கும் ஒரு சொற்றொடராக இருக்கிறது. உழைப்பு பிழிந்தெடுக்கப்படும் மலையகத் தொழிலாளிகளை இவ்வரி இசை பிழியப்பட்ட வீணை என்று குறிக்கிறது.

வீணையிலிருந்து இசையை மீட்டலாம் அல்லது இசையை வாசிக்கலாம். ஆனால் இங்கு இசை பிழியப்பட்டிருக்கிறது. இச்
சொற்றொடரின் பின்னால் மலையகத் தொழிலாளிகளின், குறிப்பாகப் பெண் தொழிலாளிகளின் நோவும், வலியும் உள்ளது. அவர்களின் வாழ்வு வன்முறைக்குள் அகப்பட்டுவிட்ட தொனி இருக்கிறது. பொதுவாக இக்கவிதைகள் எல்லாவற்றினதும் அடியிழை நாதமாக இந்தப் ‘பிழியப்படும், பிழியப்பட்ட’ உணர்வின் பாற்பட்ட சரடு ஓடிக்கொண்டே இருக்கிறது.

முகவுரையில் வே.தினகரனும் மலையகப் பெண் தொழிலாளிகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “மனித உரிமை மறுப்புக்கு உள்ளாகி, ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை மனதுக்குள்ளும், கொழுந்துக்கூடைச் சுமையை முதுகிலும், குடும்பச் சுமையை தலையிலும் சுமந்தபடி வாழ்கின்றனர். பிறவி உழைப்பாளர்களாக தமைக்கருதிக் கொண்டு வீட்டுக்குள்ளும், வெளியிலும்
வேலை, உழைப்பு, வேலை எனும் நிரந்தர நிர்ப்பந்தத்தை தம்மீது பணித்துக் கொண்டு குறைந்த கூலியில் வியர்வை சிந்துகின்றனர்.”

இக்கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் இப் பெண்களுக்கு பொருளதாரமே அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. அது வர்க்க ரீதியில்,பால் ரீதியில், சமூக ரீதியில் (இலங்கை, இந்திய), இன ரீதியில், யாழ் வேளாள மேலாதிக்க உணர்வு ரீதியில் கடையிடத்துக்கு தள்ளப்பட்ட இம் மக்களை மேலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது. இதை மஞ்சுளா தனது ‘சவால்’ கவிதையில்,

‘வறுமையின் நிறம்
இன்னும்
கடுமையாகிக் கொண்டே இருக்கிறது’ எனவும்

‘ஒளிந்திருக்கும் தேவதையின் கதை’ கவிதையில் எஸ்தர்,

‘விருப்பமில்லா என் விடுமுறையில்
ஏழையூர் விரையும் நாளில்
கசிந்துருகி ஓடிக்கொண்டே
இருக்கும்
நதியெல்லாம்! எனவும்

‘தொழிலாளிப் பெண்ணின் சோககீதம்’ கவிதையில் அ.பரமேஸ்வரி

‘இரவுப்பசி மீதமிருக்க
காலைப் பசியையும்
சுமந்து கொண்டு
எட்டாத தூரத்திலிருக்கும்
பச்சை மலையை எட்டிப்பிடிக்க
ஓடும் தாய்’ எனவும் மிக அழகாக சொல்கிறார்.

இக் கருப்பொருளையே ‘ஏனிந்த அவலம்’ (சு.பிரேமராணி), ‘நல்வரவு’ (எம்.புனிதகுமாரி), ‘என் அன்னையும் இப்படித்தான்’
(ஜெ.ரெஜினா), ‘தூங்காத இரவில் நீங்காத நினைவு’ (எஸ்.விஜயபாரதி), ‘இருண்ட மண்’ (வே.சசிகலா), ‘ஏழைகளின் ஓலம்’ (ஆர்.சரஸ்வதி), ‘தாமரையே மூழ்கும் தண்ணீர்’ (இரா.வனிதா) போன்ற கவிதைகளும் பேசுகின்றன.

வறுமையை விட வேறு பல கருப்பொருள்களும் கையாளப்பட்டிருக்கின்றன. தாய்மைக்கு ஏற்படும் இப்பிரச்சனை மலையகத் தாய்மாருக்கு மட்டும் பிரத்தியேகமானது. இளங்குழந்தையை மடுவத்துக்கு அனுப்பிவிட்டு தேயிலை கொய்வதற்குத் தாய் போனால்தான் அவளைச் சார்ந்த குடும்பம் வாழலாம். இதை ‘நலம் பிறக்க வேண்டும்’ (இஸ்மாலிகா), ‘புதிய தாலாட்டு’
(உஷா நந்தினி) போன்ற கவிதைகள் சொல்லுகின்றன. இதனையே ‘பாவ சங்கீர்த்தனம்’ கவிதையில்

‘மண்டையோட்டில் மாறாத பள்ளத்தையும்,
அடிவயிற்றில் அழியாத கோடுகளையும்
போட்டுக்கொண்ட தாய்’ என்று மீனாள் செல்வன் வெளிப்படுத்துகிறார்.

மலையகச் சிறார்களை உழைப்புக்குப் பயன்படுத்தல், அவர்களின் துஷ்பிரயோகம் என்பன பற்றி கு.விஜிதாவின் ‘மலையகச்
சிறார்கள்’ கவிதை பேசுகிறது. இதைவிட இம் மலையகப் பெண்கள் சமூகத்தின் பல்வேறுபட்ட சுமைகளிலிருந்தும் விடுதலை
பெறுவதை நிமித்தமாகக் கொண்டு பல சமூக விழிப்புணர்வுக் கவிதைகளும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

விழிப்புணர்வைப் பற்றிப் பேசுவதாக தி.சுபந்தினியின் ‘புதிய அறிமுகம்’, சாந்தி மோகனின் ‘கூடைக்கு வெளியே’, சந்திரலேகாவின் ‘கற்கள்-கவண்கள்-தாவீது’, புனிதகலாவின் ‘சிறகுவிரி’ , போன்ற கவிதைகள் அமைகின்றன.

பேரினவாதம், சாதியம் ஆகிய கருக்களையும் சில கவிதைகள் தொட்டுச் செல்கின்றன. உதாரணமாக ‘ஏனிந்த அக்கிரமம்’ (மணிமேகலா செல்லத்துரை), விடியலுக்காய் காத்திருந்த அன்று (சி.சாரதாம்பாள்), வல்லமை (சூர்ப்பனகை), ‘உயிர்’ (ரா. சிறீபிரியா) ஆகிய கவிதைகளைச் சொல்லலாம்.

கவித்துவம், கவிதைவீச்சு என்பவற்றைப் பொறுத்தவரை பல கவிதைகள் நல்ல கவிதைக்கான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. கால ஓட்டத்தில் மேலும் காத்திரமானதும் செழுமையானதுமான படைப்புக்களை இம் மலையகப் பெண்படைப்பாளிகள் தமிழுக்குத் தருவார்கள் என்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

‘புதிய தாலாட்டு’ (சு.உஷா நந்தினி), ‘பெண்நிலை’ (பி.ஜேசுராணி), ‘ரயில் அனுபவம்’ (ஆர்த்தி), ‘எங்கள் எம்.பி’ (ரா.கெத்தரீன்), ‘விடியலுக்காய் காத்திருந்த அன்று’ (சி.சாரதாம்பாள்), ‘உன்னில் இல்லாத நான்’ (எஸ்.கலைச்செல்வி), ‘ஏனெனில்’ (க.கவிதா) ஆகிய கவிதைகள் மலையகப் பெண் எழுத்துகளுக்கு வீறான காலம் கனிந்திருப்பதைக் குறித்து நிற்கின்றன. மலையக இலக்கியத்துக்கு, இசைபிழியப்பட்ட வீணை எனும் இப்பெண் கவிஞர்களின் தொகுப்பு ஒரு பல்குரல் வரலாற்று ஆவணம்.

மலையகப் பெண் படைப்புகளைத் தொகுக்க முன்வந்த ஊடறு உட்பட, இத்தொகுப்புக்காகச் செயற்பட்ட அனைவரின் உழைப்பும் வீண்போகவில்லை.

உதவிய நூல்கள்

1) மலையகமும் இலக்கியமும் – அந்தனிஜீவா, 1995.
2) மலையகத் தமிழ் இலக்கியம் – க.அருணாசலம், 1994.
3) மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் – சாரல் நாடன், 2000.
இந் நூல்களை மின்வடிவில் பாதுகாக்கும் றறற.ழௌடயாயஅ.நெவக்கு நன்றி.

இசை பிழியப்பட்ட வீணை - மலையகக் கவிஞைகளின் படைப்புகள்
தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி)
ஊடறு வெளியீடு, 2007.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com