Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureBook Review
நான் ஒரு மநுவிரோதியின் இரண்டாம் பதிப்புக்கான முன்குறிப்புகள்

எங்கும் பரவும் மநுவிரோதிகள்
ஆதவன் தீட்சண்யா

1.

1927 டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக் கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

Manuvirothi பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்துகொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரிய பெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு கற்பனை செய்துதான் பாருங்களேன்...

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும்கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே...... (சரி, வேண்டாம் விடுங்கள்....ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்?) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது. எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்கநிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக் கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க. வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரம/ஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள். அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2.

நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக்கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத் தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப் பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத் தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?... மனதுக்கு ஒப்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது...’ - என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அதுஇதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப் போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல் உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்புசாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை?

‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன் பேரால் நியாயப்படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக் கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லாவற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல்தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்கவிடப் பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டேயிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே... ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக்கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்? ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய், அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும்கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்-ளாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப் பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்கவிவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார்களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்து போய்விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு...’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்குமாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.

3.

சாதியழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவதாயும், சாதியழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப்போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறானவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங்கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம் தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப்போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதியடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானவைகளாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும், மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவையாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்துகொள்கிறபோதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம். (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற...?)

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.

4.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.

அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டுமானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியடுக்குமுறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக்கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்துகளின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற - எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிறசாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடுதானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப் பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஒபாமாவைப் பார்... ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராகவில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறைகளை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம் போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமையின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படுமானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னைகளுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத - அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்துகளாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங்களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதியழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடுகளை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.

சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.

பாப்லோ நெரூடா என்கிற மகத்தான கவிஞனின் படைப்பாளுமை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, சோசலிசத்திற்கு ஆதரவான அரசியல் விருப்புறுதி ஆகியவற்றை புறந்தள்ளி, அவரே தன் கைப்பட எழுதிய நினைவுக்குறிப்புகளிலிருந்து சிலவரிகளை உருவியெடுத்து அவரை காமாந்தகனாக சித்தரித்து கட்டுரை எழுதுவதில் ஒழுக்கவாதிகள் சிலர் முனைப்பு கொண்டுள்ளனர். பெரியாரின் பன்முகப் பங்களிப்புகளை நிராகரித்து- அவரே பகிரங்கமாக வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து சில வரிகளை உருவியெடுத்து காவிரிக்கரை மைனராக சிறுமைப்படுத்துவதில் சில பத்திரிகைகள் ஆர்வம் கொண்டுள்ளன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுமைகளும் அவர்களது சிந்தனைகளும் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெறுத்தொதுக்கப்பட வேண்டியவை என்கிற ரீதியில் முன்வைக்கப்படும் இம்மதிப்பீடுகள் உள்நோக்கம் கொண்டவைதான். ஆகவே அவ்வாளுமைகளின் செயல்பாட்டின் மீதான விமர்சனத்தையும், தனிமனிதச் சாடலையும் பிரித்தறிய வேண்டிய நிர்ப்பந்தம் நம்முன் நிற்கிறது. இப்புரிதலோடுதான் பாரதியையும் நான் அணுகுகிறேன்.

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். காலனிய ஆட்சி, இந்திய தேசியம், விடுதலைப் போராட்டம் ஆகியவை குறித்து அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் முன்வைத்த மாற்று வரலாற்றினூடே பார்க்கிறபோது, இந்துத்துவத்தின் மூலவர்களில் ஒருவரான திலகருடன் பாரதி நட்பு கொண்டிருந்ததும், பசுவதை போன்றவற்றில் அவர் வெளிப்படுத்திய பார்ப்பனீய புனிதக்கோட்பாட்டையும், இன்னும் அகவயமான பார்ப்பனீய சார்பு மனநிலையையும் இயல்பானதாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இதையே ஞானத்தின் உச்சமென்று அறிவித்துக் கொள்வதால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதால் அடுத்த வேலைக்கு நகர்கிறேன்.

5.

-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஓர் ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞை நிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்க முடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வு நிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர்போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன். எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.


அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா
13.08.08


இலண்டனில் வெளியீட்டு விழாவை நடத்திட்ட ராகவன், தேசம்நெட் ஜெயபாலன், ரங்கன், சேனன், ஷோபா சக்தி, வேலு, நிர்மலா, காண்டீபன், சபேசன், ராஜேஸ்வரி பாலா, சபாபதி, சபா நாவலன் உள்ளிட்ட தோழர்களை இந்த இரண்டாம் பதிப்பு வெளியாகும் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்று தோழர்கள் பிரளயன், பி.சம்பத், வ.கீதா, புனிதபாண்டியன், கொளத்தூர் மணி, ச.தமிழ்ச்செல்வன், மரு.ஜெயராமன், மினர்வா ஆகியோர் தெரிவித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எழுதவும் இயங்குவுமான ஆற்றலைத் தருமென நம்புகிறேன். புதுக்கோட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சையில் நடைபெற்ற விமர்சன அரங்குகளிலும் இந்நூல் குறித்து மதிப்புமிக்க விமர்சனங்களை பலரும் முன்வைத்துள்ளனர். நான் பெரிதும் மதிக்கும் தோழர் எஸ்.வி.ஆர், பேரா.ஆ.சிவசுப்பிரமணியம், ந.முத்துமோகன் போன்ற தோழர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் நூல் குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றின் வெளிச்சத்தில் எனது போதாமைகளை உணர்ந்து கொள்ள முடிந்தது. திறப்படுத்திக் கொள்ளும் முயற்சி தொடர்கிறது.

விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்ட விடுதலை, தீக்கதிர், மார்க்சிஸ்ட், புத்தகம் பேசுது இதழ்களுக்கும், இந்நூல் குறித்து இணையதளங்களில் விவாதித்து வரும் நண்பர்களுக்கும் நன்றி. பல்வேறு மட்டங்களிலும் இந்நூல் வாசிக்கப்படுவதற்கான தூண்டுதலாய் இருந்த தோழர். என்.குணசேகரனின் முயற்சி இங்கே தனித்து நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் பதிப்புக்கு செல்ல வேண்டும் என்று என்னையும் பூபாளம் புத்தகப் பண்ணையினரையும் உந்தித் தள்ளிய தோழர்.சிராஜ், மோகனசுந்தரம், கீற்று.காம் ரமேஷ் ஆகியோரின் கரங்களை மெதுவே பற்றிக் கொள்கிறேன்.

எனக்கு எல்லாவகையிலும் திறப்பாயிருந்த தோழர்.து.சண்முகம் அவர்கள் இந்த புத்தகம் அச்சாகி வந்த அதேநாளில் மறைந்துவிட்ட பெருந்துயரம் என் எழுத்தெங்கும் கசிந்து நிற்கும்.

110 பக்கங்கள், விலை.ரூ.50/-
பூபாளம் புத்தகப்பண்ணை
2027/6 வடக்கு ராஜவீதி,
புதுக்கோட்டை-612001
98416 25373


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், புத்தகத்தின் ஒரு பிரதியை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Ramesh, 5, First Main Road, AGS colony, Velachery West, Chennai - 42.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
கோகுலகிருட்டிணன்
2008-10-13 12:52:00
egokulakrishnan@gmail.com

வணக்கம்,
மிகச்சிறந்த பதுவு திரு. ஆதவன் தீட்சன்யா அவர்களே, வாழ்த்துக்கள் தங்களது பணி சிறந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் மும்பையில் வசிக்கிறேன் எனக்கு இந்நூலை வாசிக்க மிக ஆவலாக உள்ளது,நூலைப் பெரும் வழியை எவரேனும் கூற முடியுமா?

கோகுலகிருட்டிணன்
மும்பை

புறம் போக்கு
2008-10-13 02:03:00
puramboakku@gmail.com

பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே நான் இப்படியே கூறி வருகிறேன்(ஆனால் நூல் எழுதும் வசதி இல்லாததால் வெளியடவில்லை)!

"நான் ஒரு மநுவிரோதி" 'என்றே 'புறம் போக்கு' ஆகிய நான் கூறுகிறேன்! இப்படி சொல்வது எனக்கு மிகவும் எளிதானதும், இலாபகரமானதும் ஆகும். ஏன் எனில் செத்த குதிரையை அடிப்பது எனக்கு மிகவும் எளிதானதும், பாதுகாப்பானதும் ஆகும்!!

இந்திய வரலாற்றை (ஆங்கிலேயரால் எழுதப்பட்ட வரலாற்றை) எடுத்துப் பார்த்தால், அது கிட்டத்தட்ட Alexander காலத்துக்குப் பின் நடந்த வரலாற்றைத் தான் தெளிவாகக் கூறுகிறது! அதன் படி பார்த்தால் நமக்கு தெரிந்த பெரிய அரசியல் தலைவர்கள் அண்ணா, காமராசர், நேரு,காந்தி, கட்ட பொம்மன், திப்பு சுல்தான், சிவாஜி, அக்பர், பிருத்வி ராசன், சுந்தர பாண்டியன், இராசேந்திர சோழன், இராச இராச சோழன் , நரசிம்ம பல்லவன், ஹர்ஷர், சமுத்திர குப்தன், அசோகர், கரிகாலன்.... இவர்கள் தான்!
இவர்களுக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மன்னர்கள்- வள்ளள் பாரி, வல்வில் ஓரி,யயாதி, பாரதன், துஷ்யந்தன், நளன், தருமராசன், கிருத்தினன், அரிச்சந்திரன், இராமன், தசரதன், பகீரதன்..... இப்படி போகிறது பட்டியல்! இதில் எங்குமே மநு என்னும் மன்னன் இல்லை.அதாவது அந்த மநு என்னும் மன்னர் ஒன்றும் பெரிய புகழ் பெற்றவர் அல்ல! ஆனாலும், அந்த மநு என்பார் எழுதிய நூலை வைத்து அவர் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நாம் யூகிக்கலாம்! பிறப்பு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மிகத் தாழ்ந்த நிலையில் வைத்தும், ஒரு சாதியாரை மிக உயர்ந்த நிலையில் வைத்தும், ஒரு சாதியாரை நில உரிமையாளர்களாக- தாழ்ந்த சாதியினரை தங்கள் வயல் வேலைக்கு (நாத்து நடுவது, கலை பறிப்பது, அறுப்பு வேலை) குறைந்த கூலிக்கு வேலை செய்யுமாறு வைத்தும், ஒரு சாதியினரை வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்ட செய்யுமாறு வைத்தும், ஒரு சாதியினரை நாடாள செய்யுமாறு வைத்தும்- இப்படிப் பட்ட அமைப்பில் கொடுமையான பாதிப்பு அடைந்தது- தாழ்த்தப் பட்ட சாதியினராக அன்று வாழ்ந்தவர்கள் தான்- இப்படிப் பட்ட ஒரு கொடும் நிலையில் ஒரு பிரிவீனரை வைத்து இருந்தது அநீதி தான்! மநு தான் இந்த சாதிப் பிரிவை நிறுவியவர் என்றால் அவர் மீது கடுமையான கண்டனம் தெரிவித்து அவரை எதிரியாக நான் கூறுவது சரிதான்!

ஆனால் இந்த சாதிப் பிரிவினை சமூகத்தை முதலில் ஆரம்பித்தவர் யார்- மநுவா? அவர் தான் இந்தியாவின் முதல் மன்னரா? மநுதான் சாதிப் பிரிவினை சமூகத்தை முதலில் ஆரம்பித்தவரா? தெளிவாககக் கேட்டால், மநு பிறக்கும் முன் இந்தியாவில் சமத்துவ சமுதாயம் நிலவியதா??? மநுதான் சாதிப் பிரிவினை சமூகத்தை முதலில் ஆரம்பித்தவரா?

மநு, தான் பிறந்து வாழ்ந்த போது, தான் எந்த சமுதாயத்தைப் பார்த்தாரோ - அந்த சமுதாயம் எப்படி இருந்ததோ- அந்த நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல நூல் எழுதி விட்டார் என்று ஒரு பெரிய அறிங்கர் கூறி இருக்கிறார்!

இரண்டு ஏக்கர் நிலம் இருப்பவனுக்கு கூட வயலில் கூலி வேலை செய்ய , எதிர்ப்புக் காட்ட முடியாத நிலையில் இருக்கும் வேலையாள் தேவையாக இருந்தது! வாணிபம் செய்பவனுக்கு, நாட்டை ஆள்பவனுக்கு- எல்லோரும் தங்கள் வசதிக்காக இந்த சாதிப் பிரிவு வருணாசிரம தருமத்தை உறுதியாக்கி விட்டனர்! நன்றாக உழுது பயிரிட்டு, உண்டு மகிழ்ந்து, இறந்தும் விட்டனர்- மாட்டியது மனு மட்டும்தான்- அவனைத் தரும அடி போட்டு என் வீரத்தைக் காட்ட நான் தயங்குவேனா?

அக்பரை, காந்தியை, இராச இராச சோழனை, அசோகரை தெரிந்த நம்மில் பலருக்கு மனுவைத் தெரியாது! ஆள் தோட்ட பூபதியைத் தெரிந்த அளவுக்கு கூட மனுவைத் தெரியாது! எனவே அவனைச் சக்கைப் பின்னு பின்னுவததில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை!

ஆனால், இன்று

" நான், சக மனிதனின் வாயில் பீ திணிப்பவனின் எதிரி" என்று நான் கூற மாட்டேன்!

" நான், கோவில் திருவிழாவை பயன் படுத்தி 5, 6 பேரின் தலையை வெட்டி, காலால் உதைத்து விளையாடுபவன் எதிரி" என்று நான் கூற மாட்டேன்!

"நான், குடிசைகளை எரித்து பெண்களைக் கற்ப்பழிப்பவரின் எதிரி" என்று நான் கூற மாட்டேன்!

"நான் ,சாதி மத வெறியை தூண்டுபவரின் எதிரி" என்று நான் கூற மாட்டேன்!

" நான் சாதிகளின் அடிப்படையில் சங்கமும், அரசியல் கட்சியும் அமைத்து சாதிப் பிரிவினைகளை, என்றும் அழியாமல் நிரந்தரம் ஆக்குபவரின் எதிரி" என்று நான் கூற மாட்டேன்!

ஏன் என்றால், இப்படி எல்லாம் கூறி விட்டு தமிழ் நாட்டில் வாழ்வது அவ்வளவு எளிது அல்ல. எவனுக்குமே தெரியாத - இன்றைய உலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத - சாதிச் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, மொழிச் செல்வாக்கு, இனச் செல்வாக்கு, மதச் செல்வாக்கு எதுவுமே இல்லாத ஒருவனுக்கு (அவன் மீது உண்மையில் விரோதம் பாராட்ட வேண்டிய நியாயம் இருக்கிறதோ இல்லையோ) எதிரியாக என்னை அறிவிப்பது எனக்கு மிகவும் எளிதானதும், பாதுகாப்பானதும், இலாபகரமானதும் ஆகும்.

ravi srinivas
2008-10-13 08:45:00
ravisrinivas@rediffmail.com

Just as some people call themselves as 'Cinema Pughaz', 'SUN TV Pughaz' and put that as a prefix before their names Adhavan can call himself as 'Manu Virodhi Pughaz' and put that as a prefix before
his name. Perhaps he can examine the possibility of getting a trade mark over i.e. 'Manu Virodhi' and
'Manu Virodhi Pughaz' so that others cannot appropriate that unique identity.

sonai
2008-10-14 06:02:00
spimdu1980@rediffmail.com

திரு. ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு,
சாதாரண உணவுப் பழக்க வழக்கத்தைக் கூட தூக்கியெறிய முடியாதவர்கள், சாதியை தூக்கியெறிகிறேன் என்று சொன்னால், அதை சந்தேகப்பட நியாயம் இருக்கிறது. அந்த வகையில் உங்களின் கேள்வி ஏற்புடையதே.
அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தலித்துக்களும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்களா? என்ற கேள்வி எனக்கு உண்டு. ஏனென்றால், வடக்கே எப்படியோ தெரியாது, தென்தமிழ்நாட்டைப் பொறுத்தவரை "மாட்டுக்கறி" என்பது, சக்கிலியர்களுக்கான உணவாகத்தான் பார்க்கப்படுகிறது.
எஞ்சிய பறையர், பள்ளர் சாதியினரோ, "நாங்கள் மாட்டுக்கறியெல்லாம் சாப்பிட மாட்டோம்" என்பதில் பெருமை கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும், "மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்" என்ற காரணத்துக்காகவே, சக்கிலியர்களை தங்களிலும் இழிசாதியாக, அவர்கள் பார்க்கின்றனர்... நடத்துகின்றனர்.
அப்படியிருக்கையில், தலித் என்பவர்கள் யார்? "மாட்டுக்கறி" என்பது யாருடைய உணவு?
தாங்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

Rajendran
2009-01-04 01:57:00
rajganap@yahoo.com

வணக்கம்,
மிகச்சிறந்த பதிவு. சாதி என்ற ஆலமரத்தின் ஆணிவேராகத் திகளும் மநுஸ்மிருதியை அம்பேத்கர் அன்று எரித்தார். ஆனால் இன்று பலவிழுதுகளுடன் மரங்களாய் நன்று வளர்ந்து கொண்டு இருக்கின்றது. நம் கண்களுக்குத் தெரியும் சாதீயக்கொடுமைகள் என்ற விழுதுகளை அழிப்பதோடு ஆணிவேரையும்( மநுஸ்மிருதியை) சாய்க்க வேண்டும். உங்களின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

VimalaVidya
2009-03-04 07:34:00
vimalavidya@gmail.com

The "Class" and "Caste" have to be discussed eloborately.A wide discussions on should be initiated by all left oriented persons & parties particularly.A smsll Ray/light is seen at far distances.---Selvapriyan

purachi
2009-06-25 04:25:00
purachi1107@gmail.com

//சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.//

இந்த கட்டுரை பேசும் பொருளுக்கும் மேலேயுள்ள விசயத்துக்கும் என்ன தொடர்பு? தன்னுடைய பழைய அரிப்புகளை சந்தடி சாக்கில் சொறிந்து விட்டுக் கொள்கிறார் ஆதவன் தீட்சன்யா(நாங்களும் கொஞ்சம் கறடு முரடாத்தான் பேசுவோம்). அது அவர் சார்ந்த கட்சியில் இருந்து அவருக்கு தொற்றிய வியாதி. அவர்கள் மீதான விமர்சனத்தை நேரடியாக நேர்மையாக அணுகுவதோ, விளக்குவதோ அவர்களுக்கு வராத செயல். இப்படி கிசு கிசு போல் பேசுவார்கள்.

புரச்சி

purachi
2009-06-25 04:37:00
purachi1107@gmail.com

//தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. //

இது மனு விரோதன் சொன்னது.

கீழே உள்ளது புனித பாண்டியன் சொன்னது:
//மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.//

இதுல யாருடன் ஒப்பிட்டு பேசினார் என்பதும் அதனை எப்படி ஆதவன் முதலான சுத்த கம்யூனிஸ்டுகள் பொறுத்துக் கொண்டனர் என்பதும் பின்வரும் கட்டுரையில் காணக் கிடைக்கும்.
http://poar-parai.blogspot.com/2008/03/blog-post_24.html



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP