 |
கவிதை
முரண்டு பிடிக்கும் மரணம் விக்னேஷ்வரன் அடைக்கலம்
எச்சமாய் இருக்கும்
வாழ்க்கையின்
மிச்சத்தை
தள்ளாடித் தீர்க்கிறான்
தடி ஊன்றும் கிழவன்!
உடல் தேய
உழைத்தவனின்
உள்ளங்கை ரேகைகள்
ஊமையாகிவிட்டன!
இந்த முதுமை
சோகங்கள்
அழியா கரையாய்
நெஞ்சுக் கூட்டில்
நெளிந்துக் கிடக்கிறது!
வேட்டி முடிய
கனக்கும் கைகள்!
அடுத்த அடிக்கு
முகம் சுழிக்கும் கால்கள்!
“டேய் கிழவா”
கேட்டு மந்தமான செவிகள்.
பகல் கூட இருட்ட
தொடங்கிவிட்டது கண்களுக்கு!
உறவுகள் சாதகமில்லை
உணர்வுகள் புரியவில்லை!
உணவு இறங்கவில்லை
உறங்கவும் முடியவில்லை!
மரியாதையை எதிர்பார்த்து
மானமும் போய்விட்டது!
வினாடிகளை எண்ணிக்
காலத்தைக் கரைக்கிறான்!
மரணம் இவனுக்கு
மட்டும் முரண்டு பிடிக்கிறது!
- விக்னேஷ்வரன் அடைக்கலம், மலேசியா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|