Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

அழகிய ‘ழ’
செங்காளி

தொழுகை:

மழுவாளி குழந்தைகள்
வேழமாய்த் திகழ்வோன்
பழனியில் தவழ்வோன்
புகழ்வோம் தொழுவோம்
குழுவாய்ச் சூழ்ந்து
மழையானைப் புகழ்ந்து
வியாழனைத் தொழுது
மார்கழித் திருவிழா
நிகழ்த்துவோம் வாழ்த்துவோம்

பொழுது:

கிழக்கில் பொழுது
விழித்து எழுந்திட
கழனிக்கு உழவரை
ஈழவரை காழியரை
உழைத்துப் பிழைத்திட
அழைத்திடும் கோழி

நிழல்:

பொழுதும் நிழலும்
இழைந்து வாழ்வன
பொழுதின் எழுச்சி
நிழலின் நிழத்தல்
பொழுதின் வீழ்ச்சி
நிழலின் நீழ்ச்சி
பொழுது அழிந்திட
நிழலும் நழுவிடும்

தழை:

மழைதான் பொழிய
அழிஞ்சில் முழுதும்
கொழுந்துகள் எழுந்து
தழைத்திடும் தழைகள்
செழித்து பழுத்து
கீழே விழுந்து
பழுதாய்க் குழைந்து
புழுதியில் அமிழ்ந்து
முழுதும் மூழ்கிட
கழனி செழித்திடும்

உழைப்பு:

ஊழகம் எழுந்து
தொழுவம் தெழித்து
கழனியில் உழவன்
மோழியே தோழனாய்
கொழநீர் வீழ்ந்திட
ஆழமாய் உழுவது
பழமைத் தொழிலாம்
பழுதற்ற உழைப்பிது
வழங்கிடும் செழிப்பினை

இழது:

கொழுநனுக்கு வழங்கிட
கூழொடு நேரிழை
கழனியில் நுழைவாள்
உழுவையும் கழலியும்
கூழும் குழம்பும்
கிழங்கும் பழுத்த
வாழைப் பழமும்
ஏழையின் பிழியலாம்

அழகி:

ஆயிழை விழிகள்
கவிழ்ந்திடும் முழிகள்
அவிழ்ந்து விழுதாய்
நெகிழ்ந்திடும் குழல்கள்
குழல்களின் சுழிகள்
அழகிய குழைகள்
செழுமிய கழுத்து
கழுத்தில் உழுத்து
தாழைக் கழல்கள்
எழிலைப் பொழிவன
விழியைச் சுழற்றி
இழுக்கும் சேயிழை
சிமிழனை இதழ்களை
சுழித்து அழைத்து
உமிழ்ந்தால் வழிவது
கமழ்ந்திடும் அமிழ்தாம்

அழகன்:

அழகன் குழகன்
எழிலின் பிழம்பு
ஒழுங்கின் தோழன்
மழவன் மழுவன்
எழுகளம் எழுந்து
விழுப்புண் தழுவி
வேழமாய்த் திகழ்வோன்

குழந்தை:

கிழத்தியின் அழகில்
கிழவன் மகிழ்வான்
அழகன் அழகி
மகிழ்ந்து தழுவின்
நிகழ்வது குழந்தை
தவழ்ந்து எழுந்து
விழுந்திடும் குழவி
இதழ்கள் ஒழுகிட
மிழற்றிடும் மழலை
பழுதிலாக் குழலாம்
ஏழிசை யாழாம்


ஊழ்:

இகழ்ச்சியும் புகழ்ச்சியும்
அழுகையும் மகிழ்ச்சியும்
விழுவதும் எழுவதும்
ஏழ்மையும் செழுமையும்
தாழ்வும் வாழ்வும்
வாழ்க்கையில் நிகழ்வது
ஊழெனும் வழக்கம்
பிழையென மொழிவோம்

வாழ்க்கை:

ஆழமான குழியெனும்
பேழையில் அழமாய்
விழுந்து பழுத்து
புழுவாய் அழுகி
தழலில் மெழுகென
அழிவதே வாழ்க்கை
வாழும் கிழமையில்
அழுக்கைக் கழுவி
அழுக்காறு அவிழ்த்து
பழுதைக் கழித்து
புழுக்கம் இழந்து
பழிப்பை இழித்து
கழவை ஒழித்து
குழப்பம் அழித்து
சூழ்ச்சியை வீழ்த்தி
இழுக்கைக் கழற்றி
ஒழுக்கம் தழுவி
வழுவுகள் நழுவ
விழுமிய அறவழி
பழுதற ஒழுகி
வாழ்ந்திடப் பழகின்
அழிதகை ஒழிந்து
செழித்திடும் வாழ்வு


தமிழகம்:

பழைய கூழுக்கு
அழுதிடும் ஏழைகள்
வாழ்ந்திடும் தமிழகம்
இழிவினும் தாழ்விது
தாழ்வை ஒழித்திட
எழுமின் விழிமின்
ஏழைக்குத் தோழனாய்
தமிழுக்கு ஊழியனாய்
உழைப்போம் பிழைப்போம்
ஆழிகள் சூழ்ந்த
அழகிய தமிழகம்
தாழ்ந்து விழுவதை
எழுப்பிட விழைவோம்
புகழை இழந்து
உழன்றிடும் தமிழகம்
செழித்திட வாழ்வோம்
பிழையின்று தமிழை
எழுதிடப் பழகுவோம்
ஆழிக்கொடி கொழித்த
ஈழத் தமிழர்
சீரழிந்த வாழ்வில்
மகிழ்ச்சி தழைத்திட
தமிழை இகழ்வோர்
கழறி வீழ்ந்து
அழிந்து ஒழிந்திட
முழங்குவோம் முழவை


அழகிய ‘ழ’:

மொழியில் இழைந்து
எழிலைப் பொழியும்
‘ழ’வைத் தொழுவோம்
அழகிய ‘ழ’வை
வாழ்க வாழ்கென
வழுத்து வாழ்த்துவோம்

‘ழழழழ ழழழ’
‘ழழழழ ழழழ’
- - - - - - - -

அழலவன் - கதிரவன்
அழம் - பிணம்
அழிதகை - துயரம்
அழிஞ்சில் - மரம்
ஆழிக்கொடி - பவளம்
இழது - நெய், தேன்
ஈழவர் - சானார்
உழுத்து - ஒரு கழுத்தணி
உழுவை - மீன்
ஊழகம் - விடியற்காலை
எழுகளம் - போர்க்களம்
கழலி - பிரண்டைக்கொடி
காழியர் - வண்ணார்
கொழநீர் - வியர்வை
பிழியல் - தேன், மது
புழுக்கம் - பொறாமை
நிழத்தல் - குறைதல்
மழவன் - இளைஞன்
மழுவன் - அஞ்சாதவன்
மழுவாளி - சிவன்
மழையான் - திருமால்

- செங்காளி [email protected]


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com