KeetruLiteraturePoem
கவிதை

நீரோடு போதல்
மாலதிமைத்ரி

Lady in waterஎனது கனவில் சிறுபூச்சியாய்
நீரோட்டத்தில் தலை காட்டியபடி
அண்ணாந்து மிதந்துகொண்டிருக்கிறாள்
பிறகு கைகளை நீட்டிக் காற்றை வாரியணைத்து
மூழ்கி எழ மாலை ஒளி வலையென நீருக்குள்
பரவுகிறது

குட்டிமேகங்கள் திட்டுத் திட்டாக
நகர்ந்துகொண்டிருக்க
சூரியன் ஒவ்வொரு மேகத்திற்குள்ளும்
மறையும்போது
மூழ்கித் தரைதொட்டு ஒருபிடி மண் அள்ளி
கரையில் வைத்துத் திரும்புகிறாள்
மேற்கே கரையொதுங்கும் சூரியனை
தவிர்க்க மீண்டும் மூழ்குகிறாள்
நீருக்குள் புதைவதில் உள்ள சுகமும் இதழும்
தாய்ப்பாலுக்குள் நிகழ்வதெனக்கொண்டு
அடி மண்ணைத் தொடுகிறாள்
வீடு திரும்பும் நினைவறுந்து

சந்தடியற்ற ஆறு அவளால் நிரம்பி
வழிந்து கரை தாவுகிறது.

- மாலதிமைத்ரி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்