 |
கவிதை
கல்வளையம்
அனுஜன்யா
கழுத்தைச் சுற்றிய கல்வளையம்
பிறர் கண்களுக்குத் தென்படாமலும்
எனக்கும் புலப்படாமலும்
தொடர் பாரமாய்த் தொங்கியபடி ..
பால்ய நண்பர்களிடம்
பதட்டமாய் விசாரித்தேன்
மௌனத்துடன் நகர்ந்தவர்கள்
தூர தேசக் கடலில்
திரவியம் தேடுவதாகவும்
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் பிழைப்பதற்கு
வித்தைகளைக் கைவிட்டு
விவசாயம் செய்தேன்
வியர்த்தேன் முதன்முதலாய்
பயிராக்கிய கரும்பிற்கு
தேடி வந்த எறும்புகள்
தேய்த்து விடக்கூடும்
கல்வளையத்தை ;
எறும்புகள் ஊறுகையில்
சமயோசித காகங்களின்
இடைத்தரகு எச்சங்கள்;
சிகிற்சை நடக்கையில்
பக்கவிளைவுகள் இயல்பு தானே
காற்றின் திசைகள் மாறினால்
காகங்களுக்குத் தெரியும்
எச்சமிடும் புதுவிடம் எதுவென்று
கரும்புச் சாகுபடியில்
விளைந்த வியர்வைகள்
நெற்றிப் பட்டையுடன்
கழுத்துக் கல்லையும்
கரைத்துக் கொண்டிருந்தன
- அனுஜன்யா([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|