Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

இன்று இக்கட்டில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; சில பெருந்தலைகளுந்தான்!: தமிழ்நதி
பேட்டி: மினர்வா & ‘கீற்று’ நந்தன்


‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலக மக்களையெல்லாம் அன்பு செய்த எம் தமிழினம் இன்று அகதிகளாக உலகெங்கும் சிதறிப் போயுள்ளது. ‘எங்கள் சகோதரி’ என அறிமுகப்படுத்த வேண்டிய எம்குலப் பெண்ணை ‘ஈழ அகதி’ என்று அடையாளம் காட்டும் துயரத்தோடு, எழுத்தாளர் தமிழ்நதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தபோது, அங்கிருந்து வெளியேறி கனடாவில் சில காலம் வாழ்ந்து, பின்பு தமிழ்நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதி மூலம் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றவர். அண்மையில் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

Tamilnathy தமிழ்நதியைப் பற்றி மேலும் சில கூறுவதற்குப் பதிலாக, அவரது கவிதையே அவருக்கு சிறந்த அறிமுகமாக இருக்கும் என்பதால் அவரது கவிதை ஒன்றை இங்கு தருகிறோம்.

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படி
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது ஐயா!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்.

போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
கவிஞர்கள்
தம் கடைசிக் கவிதையை
எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க...
நவீன சித்திரவதைகளில்
சிறையதிகாரிகள் பயிற்சி பெற...
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும்
குடுவைகளில் சேகரிக்க...
நகக்கண்களுக்கென ஊசிகள்
குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்...
கால்களுக்கிடையில் தூவ
மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
மேலும் சில இசைக்கருவிகள்
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

மறந்தே போனேன்
எங்களைக் கைவிட்டவர்கள்
தேர்ந்த சொற்களால்
இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.

நாங்கள் கேட்கும்
அவகாசத்தை வழங்கி
தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.

---------------------

ஈழப்போராட்டம் குறித்து தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றுக்கான பதிலை மின்னஞ்சல் வழியாக தமிழ்நதியிடம் வேண்டினோம். தமிழ்நதியின் பதில்கள் இதோ:

ஈழச்சிக்கல் தொடர்பாக இன்றைய தமிழகச்சூழல் எப்படி இருக்கிறது?

மனிதச் சங்கிலி மற்றும் உண்ணாநிலைப் போராட்டங்கள் பேரணிகள் இவற்றால் செய்யமுடியாத ஒன்றை முத்துக்குமார் என்ற தனியொரு இளைஞன் செய்துகாட்டியிருக்கிறான். அவனது மரணத்தின் பின்பு தமிழகத்தில் பெரியதொரு மாறுதலை, உணர்ச்சி அலையை அவதானிக்க முடிகிறது. அதன் நீட்சியாக பள்ளப்பட்டி ரவி, மயிலாடுதுறை ரவி (இருவர் பெயரும் ரவிதான்) இருவரும் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். ஒரு உயரிய நோக்கிற்காக உயிரை விட்டிருக்கிறார்கள் என்றாலும் இது தொடருமோ என்று அச்சமாக இருக்கிறது. உயிரோடு இருந்து சொல்லும் வார்த்தைக்கு மதிப்பில்லாத ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே வருந்தத்தக்கதுதானே? ஒருவன் செத்துத்தான் தன்னைச் சுற்றியிருப்பவர்களை விழிக்க வைக்க வேண்டிய சூழல் ஆரோக்கியமானதல்ல. கத்திச் சொன்னால் கேட்காததைக் கன்னத்தில் அடித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

அரசியல்வாதிகளிடமிருந்து ஈழச்சிக்கலை பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குக் கடத்தியதில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. தமிழகம் என்றுமில்லாதபடி விழித்துக்கொண்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தமிழகத்தை மீளுறக்கம் கொள்ளச் செய்த நாடகங்களும் பலிக்கவில்லை. இப்போது பாரிய இக்கட்டில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; தமிழக மக்களை ஏமாற்றுவதில் தோற்றுப் போயிருக்கிற சில பெருந்தலைகளுந்தான்.

புலிகள் நினைத்திருந்தால் இத்தகைய பேரழிவிலிருந்து எப்போதோ மீண்டிருக்கமுடியும்; தேவையில்லாமல் போரை வளர்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறதே...

உயிர்வாழ யாருக்குத்தான் ஆசையில்லை? அந்த ஆசை புலிகளுக்கு மட்டும் இருக்காதா என்ன? மண்ணுக்காகத் தங்கள் உயிரை ஈகம் செய்த 22,700 (ஏறத்தாழ) மாவீரர்களுக்கும் வாழ்வு குறித்த காதலும் கனவும் நிச்சயமாக இருந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் அனுபவித்திருக்கக்கூடிய வசதியான வாழ்வை, அடைந்திருக்கக்கூடிய பதவியை நினைத்துப் பாருங்கள். எப்போதும் தலைக்குமேல் மயிரிழையில் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் வாழ்வைத் தேர்ந்தது எதனால்? ஓராண்டல்ல; ஈராண்டல்ல. ஏறத்தாழ 35 ஆண்டுகள் அப்படி வாழ்வதென்பது இலகுவானதல்ல. எதிராளிகள் சொல்லும் பதவியின் பொருட்டும் கூட அத்தகைய வாழ்வு சகிக்கத்தக்கதல்ல. பழகிப் புளித்த வார்த்தைகளில் சொல்வதானால் போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்கொள்ளவும் திருப்பித் தாக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இறங்கிப்போய் இனவாதத்திடம் கையேந்தினால் என்ன நடக்குமென்பதை யாவரும் அறிவர். மலினமான சமரசங்களுக்காக அடிப்படை வாழ்வுரிமைகளை விட்டுக்கொடுக்க இயலாத காரணத்தினால்தான் தொடர்ந்து சமராட வேண்டியிருக்கிறதேயன்றி, போர்வெறியினால் அல்ல.

பொருத்தமான தீர்வை வழங்காமல் ஏமாற்றியும் இழுத்தடித்தும் கொன்றுகுவித்தும் போரை வளர்த்துவருவது ஐயத்திற்கிடமின்றி இலங்கை அரசாங்கம்தான்.

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?

Tamilnathy அது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் 'அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்' என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? விடுதலைப் புலிகள் வேற்றுக் கிரகத்திலிருந்தோ வேறு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்கே செத்துக்கொண்டிருக்கும் மக்களின் பிள்ளைகள், சகோதரிகள், சகோதரர்கள். தங்கள் பிள்ளைகளை, சகோதரர்களை ஆபத்துக் காலத்தில் விட்டுவிட்டுப் போகமுடியாமல் மக்கள்தான் அவர்களோடிருக்கிறார்கள். தங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களை மக்களால் பிரித்துப் பார்க்க முடியாது.

1995ஆம் ஆண்டிலே 'ரிவிரச' இராணுவ நடவடிக்கையின் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது, அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இருந்த வன்னியை நோக்கிப் போனார்கள்? புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அண்மையில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது, மக்களும் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? மக்களிடமிருந்து புலிகளைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கோடு 48 மணி நேர போர்நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்தது. வெறும் 65 பேர்தான் வெளியேறிச் சென்றதாகச் செய்திகள் கூறுகின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது?

போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களைப் புலிகள் தடுக்கிறார்கள் என்றொரு நச்சுப்பிரச்சாரத்தை வேண்டுமென்றே முடுக்கிவிட்டிருக்கிறது இனவாத அரசாங்கம். தன்னுடைய இனவழிப்பு நடவடிக்கையை உலகின் கண்களின் முன் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. 'புலிகள் தடுக்கிறார்கள்... தடுக்கிறார்கள்' என்று சொல்லிக்கொண்டே அங்கிருக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அழித்துவிடலாம் அல்லவா? மேலும், தன்னினத்தையே அழிப்பதற்குத் துணைபோகும் திருவாளர் கருணா ஜூனியர் விகடனுக்கு அளித்த நேர்காணலில் "முப்பதாயிரம் வீரர்கள் இருந்த புலிகளின் படை இரண்டாயிரத்துக்கும் கீழ் சுருங்கி இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இரண்டரை இலட்சம் மக்களை இரண்டாயிரம் புலிகள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு அபத்தமானது.

எவ்வித விமர்சனமுமின்றி எத்தனை சதவீதம் ஈழத்தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அதுவொரு உணர்ச்சிவசப்பட்ட நிலை. செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே எழும் வியப்பில் பிறந்த பிடிப்பு அது. அதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. விடுதலைப் புலிகளின் இனவுணர்வு, அர்ப்பணிப்பு, தியாகம், கட்டுப்பாடு, வீரம் இன்னபிறவற்றால்தான் புலிகளை - ஈழத்தமிழர்கள் என்றில்லை- உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நேசிக்கிறார்கள். எல்லா மனிதர்களையும் போல அவர்களும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அந்தத் தவறுகளோடும் கூட, விமர்சனங்களோடும் கூட அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள்தான் எங்களுடைய இறுதி நம்பிக்கை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எத்தனை சதவீதமானவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. 90 சதவீதத்தினராக இருக்கக்கூடும்.

போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் உதவுவது புலிகளா? சிங்களப் படையினரா?

சிங்களப் படைகளா? கொல்பவன் எப்படிக் காப்பாற்றுவான்? ஆபத்துக் காலங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, தூக்கிச் சுமப்பவர்களாக, உறவுகளை இழந்து கதறுபவர்களைத் தேற்றுபவர்களாக விடுதலைப் புலிகள் இருந்ததை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இயற்கைப் பேரழிவான சுனாமியின்போதும் அதைக் காணமுடிந்தது. பாதுகாப்பு வலையம் என்று அறிவித்துவிட்டு அங்கே மக்களை வரவழைத்துக் குண்டு போட்டுக் கொல்கிறது இலங்கை அரசாங்கம். அண்மையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மீது அகோரமான எறிகணை வீச்சை நடத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களைக் கொன்று தள்ளியது. கேட்டால் 'நியாயமான இலக்கு' என்கிறார் ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்சே. கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களைக் கொன்று 'இலங்கைத் தீவில் இப்படியொரு இனம் வாழ்ந்தது' என்ற சுவடே இல்லாமல் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறி ஆட்சியாளர்கள். உயிர்காக்க உதவும் மருந்துகளைக் கூட போர் நடக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்லவிடாமல் தடைசெய்திருக்கிறார்கள். அவர்களாவது... தமிழர்களுக்கு உதவுவதாவது...!

சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தை ஒருவர் ஏதோவொரு சமயத்தில் சொல்ல ஆரம்பிப்பார். பிறகு அது அவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்படும். சில நாட்களில் அந்த வாக்கியம் தன்னளவில் பொருள் இழந்து எல்லோராலும் சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு வாக்கியமாக மாறிவிடும். 'எந்த அரசாங்கத்தினது காலத்திலும் இப்படியொரு இனவழிப்பு நடந்ததில்லை' என்று சொல்வதுபோலத்தான். 'பழைய காலம் நன்றாக இருந்தது' என்று சொல்வார்களே... அதுபோல. உண்மையில் அது துயர்மிகு காலமாக இருந்திருக்கும்.

சில புலி எதிர்ப்பாளர்களாலும் இலங்கை அரசாங்கத்தாலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதானேயன்றி வேறில்லை. ஏதோவொரு மனக்கசப்பில் விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், புலிகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களை 'புலியெதிர்ப்புக் காய்ச்சல்' பீடித்திருக்கிறது. மிகுந்த முனைப்போடு, திட்டமிட்டு அவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது காழ்ப்புணர்வு கலந்த பரப்புரை உலகநாடுகளில் மறைமுகமாக ஈழப்போராட்டத்திற்கெதிரான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. அது அரசியல் தளத்தில் உள்ளார்ந்து இயங்கி பாதகமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. இவ்வாறான பரப்புரைகளால் தமது சொந்த மக்களின் நலன்களுக்கே எதிரிகளாகிறார்கள்.

சரி, புலிகள் வேண்டாமென்றால் யாரை நமது பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வது? தனிப்பட்ட வாழ்வின் அற்ப சலுகைகளுக்காக இனவாத அரசாங்கத்தின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டிருப்பவர்களையா? நமது மக்களைக் கொன்றுகுவிக்க வரைபடம் வழியாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்களையா? 'புலிகள் பாசிசவாதிகள்... அவர்கள் வேண்டாம்' என்றால் யாரைத் தொடர்வதென்று கைகாட்டச் சொல்லுங்கள். அந்தப் புனிதர்களின் முகங்களை நாங்களும் கண்டுகொள்கிறோம்.

புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டு, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்புவதாக இராஜபக்ஷே கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா? சிங்களவர்கள் ஆட்சியில் வாழ்வதை விரும்புவீர்களா?

இந்த இருண்ட, துயர்படிந்த, கையறு காலத்தில் யாராவது நமக்குச் சிரிப்பூட்ட வேண்டியிருக்கிறது. கோமாளிகளுக்குப் பதிலிகளாக அரசியல் தலைவர்களே தொழிற்படும் காலம்போலும் இது. ராஜபக்ஷே தனது அறிக்கைகளால் எங்களுக்குச் சிரிப்பூட்டிக் கொண்டிருக்கிறார்.

புலிகளை முழுவதுமாக அழிப்பது சாத்தியமா என்பதை ராஜபக்ஷே சிந்திக்க வேண்டும். அவர் விரிக்கும் பொருளில் புலிகள் தோற்றுப்போகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இறுதிவரை போராடிய அவர்கள் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வென்றவர்களே! அதன் பிறகு போராட்ட வடிவமும் அதில் பங்கேற்கும் ஆட்களும் மாறுவார்கள் அவ்வளவுதான். மக்கள் மனங்களிலிருந்து புலிகள் மீதான அபிமானத்தை ஒருபோதும் அகற்ற முடியாது. 'புலிகளை விரட்டிவிட்டோம்' என்று, துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அரசாங்கம் கொக்கரிக்கும்போது மக்கள் உள்ளுக்குள் கனன்றுகொண்டுதான் இருப்பார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைகளால் கொதித்துப்போயிருக்கிறார்கள். தமிழகத்திலிருக்கும் இனப்பற்றாளர்களும் அப்படித்தான். நாற்காலிக்காகத் தன்னினத்தையே விற்றுப் பிழைக்கிற சிலரைத் தவிர மற்றெல்லோருக்கும் புலிகளின் பின்னடைவு என்பது பெருந்துயரைத் தரத்தக்கதே.

உலகிலேயே வன்முறைகளில் முதலிடம் வகிக்கிற ஒரு நாட்டின் ஜனாதிபதி, வைத்தியசாலைகள் மற்றும் வழிபாட்டிடங்களின் மீது குண்டுபோட்டுக் கொல்லும் இராணுவத்திற்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர், பச்சைக் குழந்தைகளைத் துடிக்கப் பதைக்கக் கொன்றுவிட்டு அதைத் தலைநகரில் கொண்டாடப் பணிக்கிற பண்பாளர் ஜனநாயகத்தை பற்றிப் பேசுவது உங்களுக்கு நகைப்பூட்டவில்லையா?

பெரும்பான்மை ஆட்சியில் நாங்கள் பட்ட, படும் சீரழிவுகள் போதாதா? நாங்கள் பிரிந்துசெல்லவே விரும்புகிறோம்.

'நாம் எடுத்துக்கொண்ட முயற்சியினால் உலகத்தின் கவனம் ஈழத்தமிழர் அவலத்தின் மீது திரும்பியிருக்கிறது' என்ற தொனிப்பட கலைஞர் பேசியிருக்கிறாரே...

இதற்கான பதிலை நாம் அனைவரும் அறிவோம். 'தாம் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இருந்தாலும் ஆண்டவரே! இவர்களை மன்னியும்' என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

உலகநாடுகள் தலையிட்டு ஈழத்தில் அமைதி ஏற்பட்டால், நீங்கள் அங்கு சென்று வாழ விரும்புவீர்களா?

நிச்சயமாக. சொந்த மண்ணில் வாழ்வதைக் காட்டிலும் மகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்? இதை வெறும் பேச்சுக்காகச் சொல்லவில்லை. புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போய், அங்கே பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தபின், தாயகத்தில் வாழவேண்டுமென்ற ஆசை உந்தித்தள்ள 2003 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றேன். 2006 ஆம் ஆண்டுவரை அங்கேதான் வாழ்ந்தோம். கடுமையான போர்ச்சூழல் இரண்டாவது தடவையாகவும் புலம்பெயர வைத்துவிட்டது. ஓரளவு போர்ப் பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் மீண்டும் ஊருக்குத் திரும்பிப் போய்விடுவேன்.

- தமிழ்நதி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com