KeetruLiteratureInterview
நேர்காணல்

புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்: நீலகண்டன்
நேர்காணல்: மினர்வா & நந்தன்


Neelakandan மாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். அநிச்ச இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கீற்றுவுக்காக சந்தித்து உரையாடினோம்.

கருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது?

கருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, பணமுதலீட்டோடோ, திட்டமிட்டோ தொடங்கப்பட்டதல்ல. ஐ.ஐ.டிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த பிரசுரத்தையும், தலித் முரசு வெளியிட்டிருந்த ‘வடநாட்டுப் பெரியார், தென்னாட்டு அம்பேத்கர்’ பிரசுரத்தையும் விற்பனை செய்யும் வேலையாகத் தான் முதலில் ஆரம்பித்தேன். அப்போது தான் பிரசுரங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதன் பின் தலித்துகளுக்கு ஆதரவாக மார்க்ஸ் எழுதிய ஒரு பிரச்சாரப் புத்தகத்தை வெளியிட்டோம். பிரசுரங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அது கொடுத்த அரசியல் அனுபவமும் தான் ‘கருப்புப் பிரதிகள்’ உருவாகக் காரணமாய் இருந்தது. கருப்புப் பிரதிகள் இதுவரை வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூகம் சார்ந்த இலக்கியங்கள் மட்டுமே. பொழுதுபோக்கு இலக்கியம் என்பது என் பதிப்பகத்தில் எதிர்காலத்திலும் வெளிவராது.

தமிழ்ப் பதிப்பகச் சூழல் தற்போது எப்படி உள்ளது?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுப் பத்திரிகைகளோ, புத்தகங்களோ நடத்துவது என்பது கனவாகத் தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் வேண்டும் என்ற சிந்தனையோடு இடதுசாரிகள் பதிப்பகத் துறையில் கால்வைத்திருப்பது இதற்கு ஒரு காரணம். பாரதி புத்தகாலயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஈழத்தமிழர்கள் தான் தமிழ் புத்தகங்களை அதிக அளவு வாசிப்பவர்கள். ஆனால் அவர்களிடம் நமது மாற்றுச் சிந்தனை புத்தகங்கள் போய்ச் சேருவதில்லை. உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள்தான் தங்கள் புத்தகங்களை அவர்களிடம் அதிக அளவில் விற்று வருகின்றன. இவர்கள் விற்பனையில் செலுத்துகிற கவனத்தை புத்தகங்களின் அரசியலை, எழுத்தின் தன்மையைக் கவனிப்பதில் செலவிடுவதில்லை.

இங்குள்ள பதிப்பகத்தார் மாற்றுச் சிந்தனைகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதில் காட்டிய ஆர்வத்தை, உலகம் முழுவதும் புத்தகங்களைக் கொண்டு செல்வதில் காட்டவில்லை.

குறிப்பாக பாலியல் தொழிலாளிகள் குறித்த பார்வையை, அவர்கள் வாழ்க்கையை விளக்கும் சொற்களை மாற்றியமைத்தது பெரியாரியத் தோழர்களும், இடதுசாரித் தோழர்களும் தான். அரசியலை உற்பத்தி செய்த தளம் நம்முடையதாக இருந்தாலும், விற்பனைத் தளம் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களிடம் தான் இருக்கிறது. அரசு சார்ந்த இடங்களில் தன்னுடைய ஆட்களை அனுப்பி அதன் அனுகூலங்களை பெறுபவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர்.

நூலக ஆணையை எதிர்பார்த்து தான் பதிப்பக ஆட்கள் இயங்குகிறார்கள். ஆனால் அரசின் நூலக ஆணையும், கோடிக்கணக்கான பணமும் மாற்றுச் சிந்தனையாளர்களின் பதிப்பகங்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ போய்ச்சேருவதில்லை. எந்தவித வரலாறும், போராட்டங்களும் தெரியாமல் சாப்பிட்டு, குடித்து கும்மாளம் அடிப்பவர்களுக்குத் தான் இந்தப்பணம் போய்ச் சேருகிறது. மேலும் புத்தக பதிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களிடமும் ஒரு அரசியலும் இல்லை.

ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஓயும்போது இங்குள்ள பதிப்பகங்கள் அரசியல் சார்ந்த பதிப்பகங்கள், அரசியலற்ற பதிப்பகங்கள் என இரண்டாகப் பிரியும். அப்போது தான் அரசியல் சார்ந்த பதிப்பகங்களின் செயல்பாடுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத் தமிழர்களின் வாசிப்பு அனுபவம் எந்த மாதிரியாக இருக்கிறது?

நாவலாசிரியை ரமணிச்சந்திரனை சிற்றிலக்கிய உலகில் யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது புத்தகங்களைத் தான் ஈழத்தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள். சோளகர் தொட்டி பற்றியோ, ஷோபா சக்தியின் சமீபத்திய நாவல் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களது அரசியல் என்னவாக இருக்கிறது?

கார்ப்பரேட் நிறுவனங்கள் சேகுவேரா பற்றி புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சமூக அக்கறையும் கிடையாது. சேகுவேரா இவர்களுக்கு ஒரு Icon அவ்வளவுதான். பார்ப்பனர்கள் சேகுவேரா டி ஷர்ட்டை போட்டுக்கொண்டு திரிவார்கள். அம்பேத்கர் படத்தையோ, பெரியார் படத்தையோ போடமாட்டார்கள். அவர்கள் இருவரும் தான் உள்நாட்டுப் பிரச்சனைகளையும், இங்குள்ள சாதீய உள்கட்டமைப்பு குறித்தும் பேசியவர்கள்.

சேகுவேரா லத்தீன் அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். நம் தமிழ்ச் சமூகத்தில் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது ஒரு பேஷனாகி விட்டது. அதைத்தான் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம.க.இ.க.வைப் போல் அதை ஒரு கடமையாகச் செய்வதில்லை. தாமிரபரணியை உறிஞ்சும் கோக்கை எதிர்த்து ம.க.இ.க.தோழர்கள் தான் அடி, உதை வாங்கினார்கள். சித்திரவதைகளை மீறி துண்டுப் பிரசுரங்கள் விற்றார்கள்.

எப்போதுமே ஒரு பிரச்சனைக்காக உழைப்பது நாமாகவும், அதன் பயனை அனுபவிப்பது அவர்களாகவும் இருந்து கொண்டு இருக்கிறார்கள். தலித் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதற்காக போராடியது நம்முடைய இயக்கங்கள் தான். சொந்த வேலையையும் பார்த்துக் கொண்டு இயக்கங்களுக்காக புத்தகங்களை பல கிலோமீட்டர் சைக்கிளில் போய் விற்று தோழர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள். இந்த அரசியலை உருவாக்குவதற்காக பெரும்பாடுபடுபவர்களாகவும், சிறைக்குச் செல்பவர்களாகவும் நாம் இருக்க, சந்தைப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்களாக கார்ப்பரேட் பார்ப்பன நிறுவனங்கள் இருக்கின்றன.

அவர்களது சந்தையை ஏன் நம்மால் கைப்பற்ற முடியவில்லை?

சேகுவேரா ஒரு அரசியல், சமூக அடையாளமாக இருக்கலாம். ஆனால் கிழக்குப் பதிப்பகம் போடும் புத்தகத்தில் அரசியலற்ற தன்மை தான் இருக்கும். அதேபோல் பதிப்பகத்துறையில் அட்டை வடிவமைப்பு, அச்சு போன்றவற்றிலும் உலகமயமாக்கலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை என்.ஆர்.ஐக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுவாகவே பார்ப்பனர்கள் சிறுபத்திரிகை உலகிற்கு அடிக்கடி வருவார்கள். திரும்பி தங்களது அக்ரஹாரத்திற்குள் சென்று பச்சைப் பார்ப்பனர்களாகவும் நடந்து கொள்வார்கள். அதாவது பொழுதுபோக்கிற்காக இலக்கியம் பேசுவார்கள்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடம் ஒரே நாளில் உருவானதல்ல. ஏற்கனவே தன்னுடைய புத்தகத்தைத் தானே அச்சிட்டு சலித்துப்போன எழுத்தாளர்களும் சேர்ந்துதான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பெரியாரிய வழியில் வந்த எனக்கு எப்போதுமே தமிழ் இலக்கியம் குறித்து ஒரு அச்சம் இருக்கும். சாதி, மதங்களின் பெயரால் இங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப்போய் இருக்கும் எனக்கு இந்த இலக்கியத்தில் என்ன இடம் என்ற கேள்வி இருந்ததுண்டு. இங்கு இருக்கிற எல்லாப் பத்திரிகைகளும் புரியாத தன்மையோடும், ஒரு மிரட்டல் தன்மையோடும் தான் இருந்தது.

‘நிறப்பிரிகை’க்குள் தான் என்னால் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நுழைய முடிந்தது. பெரியார் ஏற்படுத்தியிருந்த பார்ப்பனர் அல்லாத அச்சமற்ற தன்மையை இலக்கியத்திற்குள் நிறப்பிரிகை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இருக்கிற தலித் அரசியலின் கச்சாப்பொருள் எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை தான். ஆனால் இன்றைக்கு அது காணாமல் போய்விட்டது. வணிக நோக்கிலான பத்திரிகைகள் தான் இதற்குக் காரணம். நிறப்பிரிகையில் இருந்த ஆ.சிவசுப்பிரமணியம், தொ.பரமசிவம் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இன்று காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வருகின்றன.

சிவசுப்பிரமணியத்தின் அரசியலில் தான் நாங்கள் உருவானோம். இலக்கியம் தான் கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கிறது, இதற்குள் பார்ப்பனர்கள் எப்படி நுட்பமாக இயங்குகிறார்கள் என்று பார்க்க சொல்லிக்கொடுத்தவர்கள் ஆ.சிவசுப்பிரமணியமும், தொ.பரமசிவமும். ஆனால் இன்று அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் தங்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். வணிக நோக்கோடு தங்கள் புத்தகத்தை இன்னும் அதிகம் பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் நினைக்கக்கூடும்.

90களுக்குப் பிறகு மாற்று அரசியலையும் சார்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இரண்டு தலித்துகள் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்போது செய்தி ஒலிபரப்புத் துறை தலித்துக்கு கொடுக்கப்பட்டது? காலச்சுவடாக இருக்கலாம், தமிழக அரசாக இருக்கலாம். இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது?

தலித் அரசியலை நேர்மையாகப் பேசக்கூடிய ஒரு தோழர், தன்னுடன் தலித் ஒருவர் இருந்தால் தான் தான் பேசுவது நேர்மையாக இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அவர்களையும் தங்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சி. தலித் அரசியலை முன்னிலைப்படுத்திய, அம்பேத்கர் புத்தகங்களை அதிக அளவில் கொண்டுவந்த பல பதிப்பகங்கள் தங்கள் செயலை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் ராஜ்கவுதமனையும், ரவிக்குமாரையும் வைத்துக்கொண்டுள்ள காலச்சுவடின் தொனி வேறுவிதமானது. அதாவது தங்களது பார்ப்பன, சனாதன முகங்களை மறைத்துக்கொள்ளத் தான் இந்த கார்ப்பரேட் பதிப்பகங்கள் சமூக அக்கறையுடன் புத்தகங்கள் வெளியிடுவதாய் காட்டிக்கொள்கிறார்கள்.

புத்தகங்களை சந்தைப்படுத்தும்போது பதிப்பகத்தின் அடிப்படை கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போது பதிப்பகங்கள் நிறுவனங்களாகி விடுகின்றன. எனக்கு இருக்கிற அடிப்படை அரசியல் காரணமாக என்னுடைய பதிப்பகத்தை நிறுவனமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

புத்தகச்சந்தை நடத்தும் பபாசி மாதிரியான நிறுவனங்கள் சிறு பதிப்பகங்களுக்கு எந்த மாதிரியான ஆதரவைத் தருகின்றன?

ஒரு ஆதரவும் இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்ட ஒரு சங்கமாக பபாசி மாறிவிட்டது. இதன் விளைவாக எளிமை என்கிற என் கொள்கையின் மீதே எனக்கு அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் வந்துவிட்டன. புத்தகங்களின் வடிவமைப்பு எங்கேயோ போய்விட்டது. நானும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் புத்தகங்களைப் போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். எல்லோருக்கும் பபாசி இடம் கொடுக்கிறதா என்றால் என்னைப் போல் சிறு பதிப்பகங்கள் கோபத்தோடும், விமர்சனங்களோடும் இல்லையென்று சொல்ல வேண்டியிருக்கிறது.

உறுப்பினராகச் சேர்வது கூட சிரமமான காரியமா?

கடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் எனக்குப் போன் செய்தார். இன்னும் அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செக் எடுத்துக் கொண்டு வந்தால் உறுப்பினராக சேர்ந்திடலாம் என்று. அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் திரட்டும் அளவுக்கு எனக்கு பலம் இல்லை. ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னுமொரு புத்தகம் கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னுடைய முதலீடு, உழைப்பு என எல்லாமே புத்தகங்கள் கொண்டு வருவதற்காக செலவாகிறது.

இங்கு என்னுடைய கேள்வி, உறுப்பினர் சேர்ப்பதை பபாசி பகிரங்கமாக அறிவித்துச் செய்ய வேண்டாமா? பதிப்புச் சார்ந்த தளங்களிலாவது அறிவிக்கப்பட வேண்டாமா என்பதுதான்.

கடந்த புத்தகச் சந்தையின்போது கூட கிழக்கு, ஆனந்த விகடன் பதிப்பகங்கள் தான் அதிகம் புத்தகங்களை விற்றன. ஏன் இவர்களது இடத்திற்கு நம்மால் செல்ல முடியவில்லை?

நம்முடைய பதிப்பு முயற்சி என்று தனியாக எதுவுமில்லை. நம்முடைய அரசியல் முயற்சிதான் நம்முடைய பதிப்பு முயற்சி. என்னுடைய புத்தகங்களை நான் புழுதி நிறைந்த வீதிகளில் தான் விற்கிறேன். மறுபடியும் மறுபடியும் தூசி தட்டித் தான் விற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படியல்ல. வாங்க வரும் வாசகன் அந்தப் புத்தகத்தை ஒரு referenceக்கு கூட பார்த்து விடக்கூடாது என்று பிளாஸ்டிக் அட்டைகளில் பூட்டி வைக்கிறார்கள். காலங்காலமாக வேறு யாரும் கல்வி கற்கக்கூடாது என்று பூட்டிவைத்த மனநிலைதானே இது.

உதவித்தொகை வாங்கிக்கொண்டு ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஒரு மாணவனுக்கு ஆய்வுக்காக என்னால் ஒரு புத்தகத்தை காசு வாங்காமல் கொடுக்க முடியும். நான் கற்ற அரசியல் அப்படி. ஆனால் அவர்களால் முடியாது. படிக்க ஆர்வமுள்ள ஒரு மாணவனால் ஒரு புத்தகத்தை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையும் இங்குதானே நிலவுகிறது. அவன் புத்தகத்தை பிரித்துக்கூட பார்க்கக்கூடாது என்று பூட்டி வைக்கிறார்கள். இதை உடைத்தெறிவதற்கான சாத்தியங்களோ, பலமோ என் போன்றோரிடம் கிடையாது.

புத்தகக் கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்கள், வாஸ்து, ஜோதிடம், சமையல் புத்தகங்கள் தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. வாசகர்களின் ரசனை இப்படித்தான் இருக்கிறதா?

இப்படித்தான் இருக்கிறது என்பதை விட இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் அதிக விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எங்காவது போராட்டம் நடந்ததா என்றால் இல்லை. தமிழ்நாடு தான் இட ஒதுக்கீட்டை முதன் முதலில் பேசி சட்டமாக்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.

ஆனால் நம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இடதுசாரி, வலதுசாரித் தன்மைக்கு நடுவில் இருக்கிறார்கள். வாசிப்பைப் பொறுத்தவரை வலதுசாரிகள் தங்கள் புத்தகங்களை இந்த இளைஞர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள். அச்சு ஊடகங்களை விட காட்சி ஊடகங்கள் தாங்களே காட்சிகளைக் கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்த்து விடுகின்றன. எந்த விஷயம் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ அந்த விஷயம் சார்ந்து தான் வாசகர்களும், இளைஞர்களும் இயங்குகிறார்கள்.

இந்த இளைஞர்களிடம் கிரிக்கெட்டும், தேசபக்தியும் தான் மீடியாவால் கொண்டு சேர்க்கப்படுகின்றன. நவீன சமூகம் சார்ந்த இலக்கியங்களோ, அரசியலோ போய்ச் சேருவதில்லை. நம்முடைய இயக்கங்களும் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. இதில் திராவிட இயக்கங்களோடு ஒப்பிடும்போது இடதுசாரி இயக்கங்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. சேது பாலம் விவகாரத்தில் தீக்கதிர் பத்திரிகை தான் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் முரசொலி, விடுதலை போன்ற பத்திரிகைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. கலைஞர் தன்னுடைய தனிக்கருத்தாக சேது பாலம் பற்றிப் பேசுகிறார். எனக்குத் தெரிந்து அவருடைய அரசியல், வாசக தளத்தில் “ஏன் தலைவர் இந்த விஷயத்தில் எல்லாம் தலையிடறார்” என்று கேட்கும் மனநிலையில்தான் இருக்கிறது. டீக்கடையில் தி.மு.க. தொண்டனுக்கு கலைஞரின் பேட்டியைப் புரியவைக்கும் வேலையை என்னைப் போன்றவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

இதன் விளைவு ஒரே நாளில் இந்த இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நாம் இயங்காத தளங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் வாஸ்துவையும், சமையலையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெருந்தீனி தின்னும் சமூகமாகத் தானே நம்முடைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும், உலகமயமாக்கலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

Neelakandan உடல் உழைப்பற்ற சமூகத்தை தானே நாம் உருவாக்க ஆசைப்படுகிறோம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலைபார்ப்பது தான் கவுரவமாக கருதப்படுகிறது. உழைப்பு சார்ந்த சமூகம் வேகமாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அப்படியானால் முன்னேறுவதாக நாம் கூறும் சமூகத்தை பின்பற்றித்தானே புத்தகங்கள் விற்கப்படும். ஆனாலும் புத்தகம் விற்பதே சிரமம் என்ற நிலையில் இருந்து ஆயிரத்து இருநூறு புத்தகங்கள் விற்கப்படும் நிலையை இன்று நாம் உருவாக்கியிருக்கிறோம்.

புத்தகச் சந்தைகள் மூலம் மட்டுமே இந்த நிலையை மாற்றி விட முடியாது. இயக்கங்களால் மட்டுமே முடியும். பாரதி புத்தகாலயத்துக்குப் பின்புலமாக ஓர் அரசியல் இயக்கம் இருப்பதைப் போல் நிறைய புத்தகாலயங்கள் உருவாக வேண்டும். இயக்கத்தின் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களைத் தான் அரசியலோடு உருவாக்க முடியும். ஆனால் அந்த இளைஞர்களுக்கும் பிற இளைஞர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

மாற்றுப் பதிப்பகங்கள் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து ஏதாவது உதவிகள் கிடைக்கிறதா?

பெரிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு பதிப்பகத்தில் இருந்து சிரமப்பட்டு நாற்பது புத்தகங்கள் வெளிவருகிறது என்றால் இரண்டு மூன்று புத்தகங்களை நூலக ஆணைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அனைத்து புத்தகங்களுமே இந்த சமூக மாற்றத்துக்கான புத்தகங்களாக இருக்கும். பழமைவாதங்களோடு, பார்ப்பனியத்தை ஆதரிக்கும் பதிப்பகங்களில் இருந்து எடுக்கப்படும் புத்தகங்கள் அளவுக்கு மாற்று பதிப்பகங்களில் இருந்து வாங்கப்படுவதில்லை. புத்தகங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு பதிப்பகங்களின் அரசியல் குறித்து எதுவும் தெரியாது. காலச்சுவடு பதிப்பகம் தங்கள் ஆட்களை எல்லா இடங்களிலும் வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொள்கிறது.

பதிப்பக சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு?

இயக்கங்கள் நடத்துவதன் மூலமாக மக்களிடம் நேரடியாகச் சென்று புத்தகங்கள் விற்கலாம். இதை பாரதி புத்தகாலயம் ஓரளவு நன்றாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மூலம் கட்சி சார்ந்த வாசகர்கள் மட்டுமே உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் தலித் எழுத்தை எப்படி படிப்பார்கள்? எனவே ஒரு பரந்த வாசிப்பை இவர்களிடம் உருவாக்க வேண்டும்.

அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக புத்தகங்களை அச்சடித்து வைத்துக்கொண்டு நூலக ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் புத்தகங்கள் வாங்கப்படும் விலை இருபது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது தயாரிப்புச் செலவு அதிகரித்து விட்டது. காகிதத்திற்கான வாட் வரி மட்டும் 12 சதவீதம். ஒவ்வொன்றிலும் விலை ஏறிவிட்டது. பெரிய பதிப்பகங்களுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. விளம்பரங்கள், அரசியலற்ற தன்மை போன்றவற்றால் அவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.

தேர்வுக்குழு என்ன மனநிலையோடு புத்தகங்களைத் தேர்வு செய்கிறது என்பது எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. தமிழில் கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த எந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டாலும் மிகச்சிறந்தது ஷோபாசக்தியின் ‘ம்’ நாவல். அதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நூலக ஆணை கிடைக்கவில்லை. இது போன்ற செயல்களால் நான் தளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறேன். நூல்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம், விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.

இன்னொருபுறம் அரசு நூலகத்துறையை மட்டும் சார்ந்தே பதிப்பகங்கள் இயங்குவதை நான் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதவில்லை.

முற்போக்கு எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொண்ட பலர் பார்ப்பன பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். என்ன மாதிரியான உறவு இது?

இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் காத்திரமான அரசியல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. காத்திரத்தோடு இயங்கிய முதல் தலைமுறை ஓய்ந்து விட்டது. இரண்டாவது தலைமுறை உயிர்மை பதிப்பகத்திற்கும், காலச்சுவட்டிற்கும் எழுதிக் கொண்டிருக்கிறது. அ. முத்துலிங்கம் சுவாரஸ்யமாக எழுதுகிறார் அவ்வளவுதான். அவரிடம் எந்த அரசியலும் இல்லை அதனால் தான் அவரால் காலச்சுவட்டில் எழுத முடிகிறது.

அதே நேரத்தில் ஷோபாசக்தி தன்னுடைய நாட்டின் ஜாதீய சமூகத்தோடு வேறுபடுகிறார். மத, ஜாதி, தேசியம் என்கிற எல்லாவற்றோடும் முரண்படுகிறார். அதற்குள்ளே ஒழுங்குகளை கட்டமைப்பவர்களோடும் சண்டையிடுகிறார். இது எதுவும் இல்லாதவர்தான் அ.முத்துலிங்கம். காலச்சுவடுக்கு காத்திரமான படைப்புகள் தேவையில்லை. பக்கங்களை நிரப்பும் பிரதிநிதிகளைத் தான் அது தேர்ந்தெடுக்கிறது. இது புரியாமல் பெண் எழுத்தாளர்களும் அதில் போய் எழுதுகிறார்கள்.

ஆண்களின் எழுத்தில் இருந்து விடுபட்டு தன்னைப்பற்றி அவர்கள் எழுத வந்தது சந்தோஷமான விஷயம் தான். பெண்ணுடல் அடிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம் இந்து மதமும், இங்குள்ள ஜாதிய கட்டமைப்பும் தான் என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காலச்சுவடில் இருந்து விலகி நிற்கும் குட்டிரேவதி போன்றவர்களால் தான் இதைச் சொல்ல முடிகிறது.

பெண் எழுத்தாளர்களில் காத்திரமான படைப்புகளை எழுதும் மாலதி மைத்ரி ஏன் காலச்சுவடுக்கு எழுதுகிறார்? காலச்சுவடு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓர் இதழ் போடுவதைப் பற்றி மாலதிக்கு என்ன கருத்து இருக்கிறது? அதில் அவருக்கு கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் அந்தப் பத்திரிகையோடு அவரால் எப்படி இயங்க முடிகிறது? மாலதியின் இயக்கமற்றப் போக்குதான் காலச்சுவடோடு இணைந்து வேலை செய்ய வைக்கிறது.

காலச்சுவடின் செயல்பாடு மிகவும் தந்திரமானது. தஸ்லிமா நஸ்ரின் பிரச்சனையில் களந்தை பீர்முகம்மதுவை வைத்துத்தான் எழுத வைப்பார்கள். அ. மார்க்ஸ்க்குப் பதில் எழுத ரவிக்குமாரைப் பயன்படுத்துவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் எழுத தனித்தனியாக ஆள் வைத்திருக்கிறார்கள். இதெல்லாமே ஒருவித தந்திரம் தான். இது தெரியாமல் அதில் இந்த எழுத்தாளர்கள் போய் விழுந்து விடுகிறார்கள்.

எழுதவரும்போது தங்கள் அரசியலை அடையாளமாகக் கொண்டு எழுத வருகிறார்கள். கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு பரந்துபட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ எழுதுவது பரந்துபட்ட இடம் என்று நினைத்தால் கூட பரவாயில்லை. காலச்சுவடையும், உயிர்மையையும் பரந்துபட்ட இடம் என்று நினைக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா, அழகியபெரியவன், மதிவண்ணன் போன்றவர்கள் தான் யாருக்கு எழுதுகிறோம் என்பதில் தெளிவாகவும், தன்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் காத்திரமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.

தலித், முஸ்லிம், விளிம்புநிலை எழுத்தாளர்கள் என்று அடையாளங்களோடு தான் முதலில் எழுத வருகிறார்கள். இந்த அடையாளங்களை அரசியல் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யத் தவறி விடுவதால் தான் காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றில் போய் தஞ்சமடைந்து விடுகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கார்த்திகேயனுக்கு எதிராக திராவிட இயக்கத் தோழர்கள் தான் போராடினார்கள். பார்ப்பன எழுத்தாளர்கள் அனைவரும் மரணதண்டனை தவறானது என்ற கோஷத்தில் போய் ஒழிந்து கொண்டார்கள். சுந்தரராமசாமியும் அந்த கோஷத்தில் கலந்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு சுந்தரராமசாமி மரண தண்டனைக்கு எதிரானவர் என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்சலுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை. அவருக்கு ஆதரவாக இடதுசாரி, பெரியாரிய, நக்சலைட் தோழர்கள் தான் பேசுகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே காலச்சுவடை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அதன் பார்ப்பனத் தன்மையை எப்போது கண்டு கொண்டீர்கள்?

நான் நிறப்பிரிகையில் இருந்து வந்தவன். பெரியாரும், அம்பேத்கரும் கற்றுத்தந்த அரசியல் எனக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. ஆரம்பத்தில் காலச்சுவட்டின் பார்ப்பனத் தன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் காலச்சுவடு தன்னுடைய பார்ப்பனத் தன்மையை தோலுரித்துக் காட்டியது. பெரியார்-125 இதழ், இஸ்லாமிய பயங்கரவாத இதழ், உச்சகட்டமாக சுந்தர ராமசாமி இறந்தபோது அவர்கள் நடத்திய கூத்துகள் அவர்களை தோலுரித்துக் காட்டின.

நண்பர் ஷோபாசக்தி சமீபத்தில் புதுவிசை பேட்டியில், ‘காலச்சுவடு என்று ஏன் பூச்சாண்டி காட்டுகிறீர்கள் அது அவ்வளவு பெரிய விஷயமா’ என்று கேட்டிருந்தார். இது மிகவும் தவறு. ஆயிரத்து ஐநூறு பிரதிகள் விக்கிற புத்தகம் தானே என்று விட்டுவிடக் கூடாது.

ஆரம்பத்தில் அது ஒரு இலக்கியப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வணிகப் பத்திரிகையாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. வந்தோமா, சம்பாதித்தோமா என்பதைத் தாண்டி வரலாறு, இலக்கியம் எல்லாவற்றிற்கும் ஒரு ஆவணக்காப்பகம் போல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.

நான், அ.மார்க்ஸ், வீ.அரசு போன்றவர்களிடம் தான் அவர்களைப் பற்றிய இந்த நுட்பமான பார்வை இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் காலச்சுவடு இன்று வரை அந்த இடத்தில் சிவாஜிக்குப் பதிலாக ஒரு பார்ப்பன ஆளை நிறுத்தப் பார்க்கிறது. வரலாற்றில், இலக்கியத்தில் என எல்லா இடங்களிலும் காலச்சுவடு இந்த மாதிரியான திரிபு வேலைகளைத் தான் செய்கிறது.

Visual Communication படிக்கிற மாணவர்கள் தங்களது Referenceகாக ஏதாவது ஒரு காலச்சுவடு புத்தகத்தை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரலாறு நிஜமானதல்ல, காலச்சுவடால் திரிக்கப்பட்டது. இதன் மூலம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தூவிக்கொண்டிருக்கின்ற விஷத்தை காலச்சுவடும் நுட்பமாக தூவிக்கொண்டே இருக்கிறது. வரலாறு, சமூகம், பண்பாடு போன்றவை ஒன்று கிடையாது. அதற்குள் எத்தனையோ பிரிவுகள் இருக்கிறது என்று பேசத்தொடங்கியது நிறப்பிரிகைதான். இந்த நோக்கில் நகர்ந்திருந்தால் காலச்சுவடு ஜனநாயக அரசியலை நோக்கி நகர்ந்திருக்கும். ஆனால் காலச்சுவடு பார்ப்பனீயம், இந்துத்துவம் போன்றவற்றைத் தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்களை தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது, தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது இதுதான் காலச்சுவடின் வேலை. சங்கராச்சாரியார் கைதின் போது எழுத்தாளர்கள் இதைக் கண்டிக்க வேண்டும் என்று சுந்தரராமசாமி எழுதினார். அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன், “சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டால் சுந்தரராமசாமி ஏன் வருந்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

சுந்தரராமசாமியால் அரசை எதிர்த்து எழுதவும் முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு அதிகாரமிக்க பார்ப்பான் கைது செய்யப்பட்டதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன் தனி விமானத்தில் போய் முஸ்லீம்களை மிரட்டிக் கொண்டிருந்தவர். அவர் கைது செய்யப்பட்டபோது தமிழ்ச் சமூகம் அவ்வளவு சந்தோஷப்பட்டது. ஆனால் காலச்சுவடின் குரலும், சுந்தரராமசாமியின் குரலும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

அந்த நேரத்தில் சங்கரமடத்தின் அள்ளக்கையாக சரியாக செயல்பட்டவர் ரவிக்குமார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சங்கரமடம் என்று பார்ப்பனர்களை மிஞ்சும் வகையில் புளுகியிருந்தார் அவர். சமீபத்தில் உத்திரப்பிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்றதைப் பற்றி குட்டிரேவதி ஒரு பத்திரிகையில் கருத்து சொல்லியிருந்தார். “மாயாவதி பார்ப்பனர்களோடு இணைந்து கொண்டு செயல்படப்போகும் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதை மேற்கோள் காட்டி காலச்சுவடு பத்திரிகையில் கண்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் காமராஜரும் பார்ப்பனர்களோடு இணைந்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்றொரு பச்சைப் பொய்யை எழுதியிருந்தார். காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களை இணைத்துக்கொண்டு தான் காமராஜர் வெற்றி பெற்றார். மேலும் பெரியார் உக்கிரமாக இருந்த காலகட்டம் அது. பெரியார் மாநாட்டில் பேசுகிற விஷயங்கள் காமராஜர் ஆட்சியில் செயல்திட்டமாக மாறுவதாக கல்கி பத்திரிகை தலையங்கமே எழுதியது. ஆனால் கண்ணன் அதை திரிக்கப் பார்க்கிறார்.

காலச்சுவடில் குட்டிரேவதியின் கருத்து குறித்து கண்ணன் எழுதியதன் அர்த்தம் இதுதான். ‘உங்கள் நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் ஜெயிப்பதற்கு பார்ப்பனர்கள் தேவை, அதேபோல் மாயாவதி பார்ப்பனர் ஆதரவோடு ஜெயித்தால் என்ன’ என்பதுதான் அது. நீ யாரைப் பற்றியாவது பேசினால் நான் உன் ஜாதியைச் சொல்லி உன்னைத் தாக்குவேன் என்கிற தந்திரம் தான் அது. மேலும் அ.மார்க்ஸ் இதுகுறித்து பேசக்கூடாது, பேசினால் அவரையும் ஜாதியைச் சொல்லித் தாக்கலாம் என்கிற தந்திரமும் அதில் அடங்கியுள்ளது. ஏனெனில் மார்க்ஸ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுவாகவே இம்மாதிரியான செயல்களினால் காலச்சுவடு மீது எல்லோருக்கும் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.

மிகக் காத்திரமான மாற்று இதழ் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே காலச்சுவடின் தந்திரத்தை முறியடிக்க முடியும். எங்கள் ‘அநிச்ச’ இதழ் அந்த நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் நுட்பமாக இயங்குபவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் வரும் என்பதால் அது தடைபட்டு விட்டது. இப்போதிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசையைத் தவிர வேறு எதுவும் காத்திரமாக இயங்கவில்லை. தலித் முரசு அரசியல் பத்திரிகையாக வருகிறது. இலக்கியத்திற்கான இடம் அங்கு நிரப்பப்படவேயில்லை.

காலச்சுவடின் அரசியலில் இருந்து உயிர்மை என்ன மாதிரியாக வேறுபடுகிறது?

வியாபாரத்திற்காக வாசகனை முட்டாளாக்குகிற வேலையைத் தான் அதுவும் செய்து கொண்டிருக்கிறது. என்றாலும் காலச்சுவடோடு ஒப்பிடும்போது உயிர்மை பரவாயில்லை. அது சுதாரித்துக்கொண்டு தன்னுடைய செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. ஆனாலும் சுஜாதா என்கிற பார்ப்பானை கடவுளாகக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. உயிர்மையில் எழுதும் சாருநிவேதிதா உலகத்தில் உள்ள எல்லோரையும், எல்லா சம்பவங்களையும் விமர்சிப்பார். சுஜாதாவை மட்டும் அவர் விமர்சிப்பதேயில்லை.

அநிச்ச வெளிவந்த இரண்டு இதழ்களிலும் மனுஷ்யபுத்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள். அதன்பிறகு அவர் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?

மனுஷ்யபுத்திரன் பத்திரிகை ஆரம்பித்ததற்கு பெரிய சமூக நோக்கம் எதுவும் கிடையாது. அவர் காலச்சுவடில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணத்தை அவர் சொல்லத் தயாராக இல்லை. தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு அரசியலோடு பத்திரிகையில் தலையங்கம் எழுதுவதை நிறப்பிரிகை தான் ஆரம்பித்து வைத்தது. அதனால் பின்னால் வந்தவர்களுக்கு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பத்திரிகை முழுவதையும் எந்த அரசியலும் இல்லாத இலக்கியத்தால் நிரப்பினாலும் அரசியலோடு தலையங்கம் எழுதுவது அவசியமாகி விட்டது. அரசியல் முகம் இல்லாமல் ஒரு பத்திரிகை நடத்த முடியாது என்பதே நாம் இங்கு ஜெயித்திருக்கிறோம் என்பதன் அடையாளம் தான். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பத்திரிகையின் எல்லாப் பக்கங்களும் அரசியலாகத் தான் இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். இந்த நிலை வந்தால் உயிர்மையால் நிற்க முடியாது.

அப்சல் குரு விவகாரம் பரபரப்பாக இருந்தபோது ஒரு கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘உயிர்மை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். ஆனால் அப்சலுக்கு ஆதரவாக வெளியிட்ட கட்டுரை பெரிய பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டது. நீங்கள் இஸ்லாமிய மனோபாவத்தோடு செயல்பட்டு அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். நண்பர்கள் என்று நினைத்தவர்களே எதிரிகளாகி விட்டார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று பேசினார்.

ஒருநாள் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கும்போதே மனுஷ்யபுத்திரனுக்கு இவ்வளவு கோபமும், ஆயாசமும், மன விகசிப்பும் வருகிறதே, அப்படியானால் என்னைப் போன்ற மாற்றுப் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய பதிவுகள் உயிர்மை புத்தகத்தில் என்னவாக இருந்திருக்கிறது? ஒரு பிரசுரத்தைக் கொண்டு போய் விற்று விட்டு வருவதற்குள் போலிசிடமிருந்து, பிற இயக்கத்தினரிடம் இருந்து எவ்வளவு பிரச்சனைகளை மாற்று இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள்.

ரொமான்டிக்காக ஒரு பத்திரிகை நடத்தி விட்டுப் போகலாமென்று நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது நடக்காது. சோளகர் தொட்டி வெளிவந்தபோது காலச்சுவடு அதை நிராகரித்தது. ஆனால் அந்தப் புத்தகம் இப்போது ஐந்து பதிப்புகள் விற்று விட்டது. காலச்சுவடு, உயிர்மை பத்திரிகைகளுக்கு தமிழ்ச் சூழலில் எதையும் தீர்மானிக்கிற இடம் கிடையாது. இளைஞர்களைத் திசைதிருப்பி விடலாம் அவ்வளவுதான். ‘பார்ப்பனர்களால் நல்ல படிப்பாளிகளாக இருக்க முடியும், படைப்பாளிகளாக இருக்க முடியாது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டது கண்முன்னே நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.

நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைமுறை, அனுபவம் போன்றவற்றால் தான் ஒருவன் எழுத முடிகிறது. எனக்குக் கிடைத்த அனுபவத்தோடு ஒப்பிடும்போது நீ வெகு கீழே இருக்கிறாய். என்ன அனுபவம் இருக்கிறது உனக்கு? நிறப்பிரிகைக்குப் பிறகு அரசியலோடு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியமும், பார்ப்பனத் தன்மை அற்றதாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டி பெண்கள், தலித் போன்றவர்களை ஆசிரியர் குழுவில் அமர்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர்கள் தாங்கள் எங்கேயிருந்து வந்தோமோ அந்த இடத்தின் பிரதிநிதிகளாக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

புத்தகத்தில் எல்லாமே அரசியலாகத்தான் எழுத வேண்டும் என்றால் தனிமனித உறவுகள் இல்லையா, அதை எழுதக்கூடாதா?

எல்லா உறவுகளும் சமூகத்தில் நடைபெறும் அரசியலின் விளைவால் ஏற்படுபவை தான். இதன் பிரதிபலிப்பாகத்தான் இலக்கியம் இருக்க முடியும். தொலைக்காட்சித் தொடர்களைக் கூட இதன் அருகில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எல்லா ஆண் எழுத்தாளர்களும் வெட்கமேயில்லாமல் டி.வி. சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டுவார்கள். சமீபகாலமாக இது அதிகரித்து விட்டது. இங்கு இயங்கும் சமூக இயக்கங்கள் பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் தான் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சீரியல்களைப் பார்க்கிறார்கள். வெளிக்கலாச்சாரம், வெளிப்பண்பாட்டில் பெண்களை நாம் அழைத்து வரவில்லை என்பதால் தானே டி.வி.க்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நம்மால் அரைமணி நேரம் பார்க்க முடியாத தொடர்களை பெண்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம் வாழ்க்கை முறையும் அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு வேறு என்றுதானே அர்த்தம். இதில் எல்லா ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது.

ஆண்களுக்கு ஒருநாளைக்கு ஒரு லட்சம் காட்சிகள் காணக் கிடைக்கிறதாம். ஆனால் பெண்களுக்கு குடும்பத்தைத் தாண்டி என்ன இருக்கிறது? பெண்களை குடும்பம் என்கிற அமைப்பிற்குள் பூட்டி வைத்து விட்டு அவர்கள் குடும்பக்கதைகள் வரும் தொடர்களையே பார்க்கிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?

நிறப்பிரிகைக்குப் பிறகு நல்ல பத்திரிகைகள் என்று எதையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

மிகக்குறைவு தான். நிறப்பிரிகை அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய இதழாக புதுவிசை வெளிவருகிறது. விசையின் சமீபத்திய இதழ்கள் பிரமாதமாக இருக்கின்றன. உயிர் எழுத்து பத்திரிகையும் அரசியல் அடையாளத்தோடு வெளிவருகிறது.

மாற்று அரசியல் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் தங்களைப் போன்றவர்களுக்கு, மாற்று அரசியல் இயக்கங்கள் காட்டும் ஆதரவு எத்தகையதாக இருக்கிறது?

இன்றைக்கு இருக்கிற இயக்கங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக போராடினாலும் அவர்களது வரலாறு விருப்பு வெறுப்புகளோடு தான் பதிவு செய்யப்படுகிறது. பாடநூல்களில் வரலாற்றை பாரதீய ஜனதா மாற்றி எழுதியது. இதை மார்க்ஸ், நான், ராஜேந்திரன் என்கிற நண்பர் இந்த மூவரும் தான் இங்கே தெரியப்படுத்தினோம். பிறகு இடதுசாரித்தோழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதில் இணைந்ததன் விளைவாக அது பெரிய வீச்சாக அமைந்தது.

இந்த வரலாற்று திரிப்பு தொடர்பாக மார்க்ஸ் எழுதிய நூலை எங்கள் குழு கலைஞரை சந்தித்துக் கொடுத்தது. இது தொடர்பாக தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியில் இருந்தபோதும், பாரதீய ஜனதா மீது ஒரு குற்றச்சாட்டாக தி.மு.க. வைத்தது. இதில் எங்களுக்கு இருந்த பங்கை எந்தப் பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. தீக்கதிர் போன்ற இடதுசாரி பத்திரிகைகளும், த.மு.மு.க.வின் ஒற்றுமை என்கிற பத்திரிகையும் தான் இதைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகத்தின் ஏடுகளில் கூட இதுகுறித்து எந்தப் பதிவும் இல்லை. நான் அங்கிருந்து வெளியேறியவன் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

நான் இறந்தபிறகு என்னை எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்துவது? உங்கள் சிந்தனையோடு, கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பதிவு செய்யாமல் இருப்பது என்ன நியாயம்? எங்கேயோ இருந்த சேகுவேராவை நாம் கொண்டாடுவதன் காரணம் அவரது வரலாறு பதிவு பெற்றிருப்பது தானே. விருப்பு வெறுப்புகளற்ற எந்தப் பதிவும் நம் சூழலில் கிடையாது. இதைச் சொன்னால் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதாக சொல்வார்கள். ஆம் அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பன பத்திரிகைகள் ஏற்படுத்திய இந்த விருப்பு வெறுப்பு மனோபாவம் நம்மிடமும் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் தான் அவன் ஆளு, இவன் ஆளு என்று குழுக்களாக சிதைந்து கிடக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நம்முடைய செயல்பாடுகளையும் சேர்த்தே வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது.

இடதுசாரி பதிப்பகங்கள் என்னுடைய புத்தகத்தை வாங்கி விற்பதில்லை என்ற கழிவிரக்கம் எனக்கு உண்டு. ஆனால் அந்த கழிவிரக்கத்தோடு நான் நின்றுவிட முடியாது. தொடர்ந்து இயங்குவதன் மூலமே நான் வாழ்ந்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்.