Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

தமிழ் பத்திரிகையாளர்களிடம் ஒற்றுமை இல்லை: ‘நக்கீரன்’ கோபால்
நேர்காணல்: மினர்வா & நந்தன்


தமிழ் புலனாய்வுப் பத்திரிகை உலகின் அசைக்க முடியாத நபர் நக்கீரன் கோபால். பரபரப்பான செய்திகள் மூலமாக தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியா முழுமையையும் தன் பக்கம் திருப்பியவர். அரசியல்வாதிகளின் தாக்குதல்கள், வழக்குகள் என அடக்குமுறைகளை தினம்தோறும் சந்தித்தாலும் அவை எவற்றுக்காகவும் பணியாது தொடர்ந்து பத்திரிகையை நடத்தி வருபவர். அந்த வாரத்திற்கான வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வாக இருந்த ஒரு சனிக்கிழமை மாலை வேளையில், நக்கீரன் கோபாலை கீற்றுவுக்காகச் சந்தித்தோம்.

Nakkeeran Gopal ஜெயேந்திரன், முகம்மது அலி, ஜெயலெட்சுமி என தமிழகத்தில் நடக்கிற பல முக்கியமான குற்றங்களை நக்கீரன் தான் முதலில் வெளிக்கொண்டு வருகிறது. ஆனால் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. அதே விவகாரம் மூன்று, நான்கு மாதங்கள் கழிந்து வழக்குப்பதிவு, கைது என்று பரபரப்பாகிறது. முன்கூட்டியே நக்கீரன் சொன்னாலும் அந்தச் செய்தியின் மேல் அவ்வளவு நம்பிக்கை வருவதில்லை. நக்கீரன் மீதான இந்த நம்பகமின்மைக்கு என்ன காரணம்?

அப்படியெல்லாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மக்கள் எல்லாரையும் நம்பி அவர்களை ஏற்றுக் கொண்டே இருப்பதால் நாம் உண்மையை சொன்னாலும் அவர்களால் உடனடியாக நம்ப முடியாமல் போய்விடுகிறது.

உதாரணத்திற்கு சங்கராச்சாரியார் கைது விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். செப்டம்பர் 2ம் தேதி சங்கர்ராமன் கொலை செய்யப்படுகிறார். 9ம் தேதி நக்கீரன் இதழில் சங்கராச்சாரியார் தான் கொலைக்கு காரணம் என்று செய்தி வெளியிட்டோம். சங்கராச்சாரியாருக்கு ஆதரவான பத்திரிகைகள் அதிர்ந்து போய்விட்டன. அதற்கு அடுத்த இதழில் சங்கராச்சாரியாரின் பேட்டி வெளியானது. அதில் “என் கால் நகத்தில் சிறுவலி வந்தால் கூட என் பக்தர்களால் தாங்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்திருக்கலாம்” என்று மறைமுகமாக அவரே ஒத்துக்கொண்டார்.

அதற்கு அடுத்த இதழில் கொலை தொடர்பாக போலீசில் சரண்டரான 5 பேரும் போலி குற்றவாளிகள் என்று செய்தி வெளியிட்டோம். நக்கீரனை உதாரணமாகக் கொண்டே பலப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

வீரப்பனைப் பற்றி 1993 ஏப்ரல் 7ம் தேதி முதன்முறையாக படத்துடன் நக்கீரன் தான் செய்தி வெளியிட்டது. இதேபோல் 1988 ல் ஆட்டோ சங்கர் விவகாரத்தையும் நக்கீரன் தான் முதலில் வெளியிட்டது. முத்திரைத்தாள் மோசடி விவகாரத்தில் கூட முகமது அலிக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டோம். அவருக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

நீதிபதி எங்களிடம் ‘பத்திரிகைகளில் முகமது அலி தொடர்பாக செய்தி வெளியிடுவதை ஏன் நிறுத்தக் கூடாது’? என்று கேட்டார். நாங்கள் ஆதாரங்களைக் காண்பித்தோம். ஒரு மாதத்திற்கு பிறகு முகம்மது அலி கைது செய்யப்பட்டபோது அதே நீதிபதி கடும் கோபத்துடன் அரசு வழக்கறிஞரிடம், ‘ஒரு பத்திரிகைக்கு இருக்கும் தார்மீக கடமை உணர்வு கூட உங்களுக்கு வேண்டாமா?’ என்று கேட்டார். இது எல்லாமே எங்களுக்கு கிடைத்த பரிசு தான். நக்கீரன் மேல இருக்கிற அதிகப்படியான நம்பிக்கை காரணமாக, அதை இன்னமும் மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பதாகவே நான் கருதுகிறேன்.

தொடர்ந்து 20 வருடங்களாக அரசியல், குற்றப் புலனாய்வு பத்திரிகைத் தளத்தில் இயங்கி வருகிறீர்கள். 20 வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் நிலைக்கும், இப்போதைய நிலைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. முதலில் நான் தாய்ப் பத்திரிகையில் வேலை பார்த்தேன். எம்.ஜி.ஆர். தான் அந்தப் பத்திரிகையின் நிறுவனர். வலம்புரி ஜான் ஆசிரியர். அப்போது ஜெயலலிதா குமுதம் பத்திரிகையில் தொடர் எழுதிக் கொண்டிருந்தார். தாய் ஆரம்பித்தவுடன் குமுதம் தொடரை திடீரென்று நிறுத்திவிட்டு தாய் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். எனக்குத் தெரிய, அப்போது இருந்து தான் பத்திரிகை தர்மம் அடிபட ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.

அப்போதிருந்த ஜெயலலிதா இன்று வரை மாறவேயில்லை. ஜெயலலிதாவை இருபது வருடங்களாக நான் ஜெயலலிதாவாகத் தான் பார்த்து வருகிறேன். அரசியலில் பெரிதாக எந்த மாற்றமும் நடந்துவிட்டதாக நான் கருதவில்லை.

இருபது வருடங்களாக இயங்கி வரும் நக்கீரனுக்கு தமிழ்ச் சமூக தளத்தில் என்ன பங்களிப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

மிகப் பெரிய பங்களிப்பு இருக்கிறது. வீரப்பன் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோரும் அதை வீரப்பன் என்கிற ஒரு நபராகப் பார்த்தார்கள். நக்கீரன் அப்படிப் பார்க்கவில்லை. பதினாறாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள அந்தக் காட்டில் வசிக்கும் ஆறு லட்சம் பழங்குடி மக்களின் வாழ்க்கையாகத் தான் பார்த்தது. அந்த சமூக மக்களின் விடியலுக்காகத்தான் நக்கீரன் போராடியது. அவர்களுக்கு விடியல் வேண்டுமென்றால் வீரப்பனுக்கு முடிவு வரவேண்டும்.

அதற்கு ஒன்று வீரப்பன் சரணடைய வேண்டும். அல்லது போலீஸ் அவனைக் கைது செய்ய வேண்டும். வீரப்பனை சரணடைய வைக்கும் முயற்சியைத் தான் நாங்கள் செய்தோம். வீரப்பனைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறையால் கிராம மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் வெளிக்கொண்டு வந்தோம். போலீசாரால் அமைக்கப்பட்டிருந்த சித்திரவதைக்கூடத்தை படம்பிடித்து வெளியிட்டோம். அதை உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

அதன்பிறகு தான் சதாசிவம் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் மூலம் அந்த மக்களுக்கு பல தீர்வுகள் கிடைத்தன. அதற்கு முக்கியக் காரணமே நக்கீரன் தான்.

அதேபோல் ஆட்டோ சங்கர் என்கிற ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் காவல்துறை உதவியுடன் எப்படி ஒரு கொலைகாரனாக மாறுகிறான், பின்பு காவல்துறையை பகைத்துக் கொண்டதும் எப்படி மண்ணோடு மண்ணாக ஆக்கப்படுகிறான் என்பதையும் மக்களுக்குப் புரிய வைத்தோம். இதன்மூலம் காவல்துறையின் இன்னொரு முகம் மக்களுக்குத் தெரியவந்தது. சமூக அர்ப்பணிப்போடு இதுபோன்ற விஷயங்களை நக்கீரன் தொடர்ந்து செய்து வருகிறது.

சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உங்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள். சில வேளைகளில் அவர்களைப் பற்றியும் செய்தி வெளியிடும் அவசியம் ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நாங்கள் ‘பிளாக்மெயில் ஜர்னலிசம்’ செய்கிறவர்களாக இருந்தால் இதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கும். நாங்கள் பத்திரிகைத் தொழிலை தார்மீக கடமையாக நினனத்துச் செய்வதால் மற்றவர்களை எதிர்கொள்வதில் இருக்கும் பயம் குறித்து சிந்திப்பது இல்லை.

பொதுவாகவே எங்களுக்கு எதிரிகள் அதிகம். ஒரு இதழ் வெளிவந்ததும் குறைந்தது 15 பேராவது எங்களுக்கு எதிரியாக மாறுவார்கள்.

நாங்கள் ஆயிரம் தவறு செய்துவிட்டு மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் நாங்கள் பயப்பட வேண்டும். நாங்கள் சரியாக இருக்கிறோம். தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுகிறோம். அதே நேரத்தில் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை. பொறுப்புடன் செயல்படுகிறோம். அதையும் மீறி பிரச்சினைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

நீங்கள் வீரப்பனை காட்டிற்குள் சென்று சந்தித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்ட நேரம். துக்ளக்கில் “நக்கீரன் அலுவலக வாட்ச்மேனுக்கு கூட வீரப்பன் போல்தான் மீசை இருக்கும். அவரை காட்டில் கொண்டு போய் புகைப்படம் எடுத்திருப்பார்கள்” என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். சக பத்திரிகையை கேவலமாகத் தாக்கும் இந்த மனப்போக்கும் இன்னமும் நீடிக்கிறதா?

தமிழ்ப் பத்திரிகைகளுக்குள் போட்டி இருக்கிறது. யார் செய்தியை முதலில் வெளியிடுகிறார்களோ அவர்களது பத்திரிகை தான் விற்கும் என்பதால் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுகிறார்கள். போட்டி இருக்கும் இடத்தில் அது ஆரோக்கியமாக இருந்தால் தவறில்லை என்பது தான் என்னுடைய கருத்து.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்க நாங்கள் சென்றோம். அதை கடுமையாக விமர்சித்து, துக்ளக்கில் சோ எழுதினார். அப்போது ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் நான் கேட்டேன், ‘இந்த ராஜ்குமார் மீட்புப் பணியிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். சோ இந்த வேலையை ஏற்று காட்டிற்குச் செல்லத் தயாரா?. அதற்கு சோ, ‘அங்கு போய் யார் உயிரை விடுவது’ என்று பதில் எழுதினார். அவ்வளவுதான் அவரது தைரியம்.

தமிழில் பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது?

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பத்திரிகைகள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்டன என்று படித்திருக்கிறோம். அதோடு ஒப்பிடும்போது இன்று பத்திரிகைகளுக்கு வானளாவிய சுதந்திரம் இருக்கிறது. நக்கீரன் அதிகமாக பாதிக்கப்பட்டதற்கு ஜெயலலிதா என்ற தனி ஒரு அரக்கிதான் காரணம். ஜெயலலிதாவின் அடக்குமுறையை அப்போதே பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து எதிர்த்திருக்கலாம். ஆனால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று இன வேறுபாடு பத்திரிகைகளையும் விட்டு வைக்கவில்லை.

அதே நேரத்தில் நக்கீரனை தனிமைப்படுத்தினால் அடக்கிவிடலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. ஜெயலலிதா தான் ஆட்சியை விட்டுப் போயிருக்கிறார்.

சென்ற ஐந்தாண்டுகளில் அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சூழலை விட இப்போது சூழல் நன்றாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

Nakkeeran Gopal சமீபத்தில் வைகோவை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். எப்படியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகக் குறிப்பிட்டேன். இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. கடந்த 2001-05 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் உயிரைப் பயணம் வைத்து தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். உயிரைப் பணயம் வைத்து செய்திகளை சேகரிப்பது வேறு.

‘உயிரைப் பணயம் வைத்து வாரம் இரண்டு பத்திரிகைகளைக் கொண்டு வர வேண்டும். என் உயிரையும், என் தம்பிகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும்’ என்பது வேறு. இந்தப் பதட்டங்களில் தான் அந்த ஐந்தாண்டுகளும் சென்றன. மாறாக இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒருவேளை ஜெயலலிதா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரம் கேள்விக்குறியாகலாம். அப்படி வர வாய்ப்பில்லை.

இப்போது இருக்கிற ஆட்சியிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஆட்சியாளர்களுக்குப் பிடித்த கேள்விகளை மட்டும் தானே கேட்க முடிகிறது?

அப்படியெல்லாம் இல்லை. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் தான் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதற்கும் உதாரணமாக ஜெயலலிதாவைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய முதல்வர் பத்திரிகையாளர்களை தினமும் சந்திக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் பத்திரிகையாளர்கள் அதிகம் அவமானப்படுத்தப்பட்டார்கள். எப்போது சந்திப்பார் என்று தெரியாத நிலையில் போயஸ் கார்டனுக்கு வெளியே மணிக்கணக்கில் காக்க வைக்கப்படுவார்கள். பலமணிநேர காவலுக்கு பிறகும் சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.

இந்த நிலைக்குக் காரணம் பத்திரிகையாளர்களிடம் ஒற்றுமை இல்லை. யார் முதலில் செய்தி தருவது என்ற போட்டி மனப்பான்மையில் எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஒற்றுமை இருந்தால் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் எந்த ஆட்சியாளராவது தப்பிக்க முடியுமா?

இருபது வருடங்களாக தமிழக அரசியலை கவனித்து வருகிறீர்கள். தமிழக அரசியலின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடிகிறதா?

ஆரோக்கியமாகத் தான் இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்தே மக்கள் தெளிவாக இருப்பது தெரிகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வராதவரை தமிழக அரசியல் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

திமுக ஆதரவு பத்திரிகை என்ற முத்திரை நக்கீரன் மீது இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உங்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் உங்களை தி.மு.க. ஆதரவாளராக மாற்றி விட்டதா?

நாங்கள் திமுக ஆதரவாளர்கள் கிடையாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஜெயலலிதா செய்யும் நல்ல விஷயங்களை நீங்கள் சொல்வதில்லையே என்று சிலர் கேட்கிறார்கள். வாழ்க்கையில் அந்தம்மா நல்ல விஷயங்கள் செய்தால் தானே சொல்லமுடியும்? ஜெயலலிதா ஆட்சியில் தொடர்ந்து அடக்குமுறைகளை, பல இழப்புகளை சந்தித்த பத்திரிகை நக்கீரன்தான். ஜெயலலிதா ஆட்சியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் சமூகக் குற்றங்கள் அதிக அளவு குறைந்துள்ளது. இதை உண்மையாக எழுதுவதால் திமுகவுக்கு ஆதரவாக எழுதுவது போல் தோன்றலாம்.

நக்கீரனில் பாலியல் தொடர்பான செய்திகள், சினிமா கிசுகிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்தகைய செய்திகளால் சமூகத்திற்கு என்ன பயன்?

நம்முடைய சமூகம் ஒரு முன்மாதிரி சமுகம் கிடையாது. இங்கு ஒவ்வொரு வீடும் ஒரு தியேட்டராக மாறிக் கொண்டிருக்கிறது. கன்னட பிரசாத் தன்னுடைய கதையை நக்கீரனில் தொடராக எழுதுகிறார். அது வெறும் பரபரப்புக்காக எழுதப்படும் தொடரல்ல. சமூகம் எப்படியிருக்கிறது, குற்றவாளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது.

ஜெயலெட்சுமி என்ற ஒரு பெண்ணின் கீழ் காவல்துறையே அடிமையாகக் கிடந்த அவலத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அவர் குறித்து தொடர் வெளியிட்டோம்.

அதே நேரத்தில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரு வியாபாரம் தேவைப்படுகிறது. அதற்காக சிம்பு-நயன்தாரா போன்ற செய்திகளை வெளியிடும் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. முழுவதும் சமூக அக்கறையோடு ஒரு பத்திரிகையை வெளியிட்டால் அதை வாங்கிப் படிக்கும் நிலையில் நம் மக்கள் இல்லை. நல்ல இலக்கிய புத்தகமாக நக்கீரன் குழுமத்திலிருந்து இனிய உதயம் என்று ஒரு பத்திரிகை வெளிவருகிறது. அதை யாரும் வாங்குவதில்லை. மிகுந்த நஷ்டத்தில் அந்தப் பத்திரிகை வெளிவருகிறது. இதை என்ன சொல்வீர்கள்?

நக்கீரன் குழுமத்திலிருந்து இன்று பல பத்திரிகைகள் வெளிவருகின்றன. நக்கீரனில் போலி சாமியார்களைப் பற்றி பரபரப்பாக செய்தி வருகிறது. அதே நேரத்தில் உங்கள் குழுமத்தில் இருந்து வரும் ஆன்மீகப் பத்திரிகையில் வேறு சில சாமியார்களின் அருள்வாக்கும் வெளிவருகிறறது. உங்கள் குழுமத்தின் சித்தாந்தம் என்ன?

இந்த தேசத்தைக் காப்பாற்ற வந்த பிதாவாக என்னை நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் ஒரு விபத்தாகத் தான் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தேன். வியாபார ரீதியாக இந்தப் பத்திரிகைகளை நடத்திக் கொண்டும், அதே நேரத்தில் எனக்கான குறைந்தபட்ச நியாயங்களோடும் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

இருபது வருடங்களுக்கு முன்பு நான் நக்கீரனை ஆரம்பித்தேன். முதற்பதிப்பாக 18 ஆயிரம் பிரதிகள் அச்சானது. தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு இடையே நக்கீரன் தொடர்ந்து வெளிவந்தது. சில மாதங்களுக்குப் பிறகு ரஜினி ரசிகன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தேன். முதற்பதிப்பே 40,000 பிரதிகள் விற்பனையானது. அதன் விலை 40 ரூபாய். ரஜினி ரசிகன் என்ற பத்திரிகை மூலமும் நக்கீரன் வளர்ந்தது. இதைச் சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. ரஜினி ரசிகன் என்ற பத்திரிகை தந்த நம்பிக்கையில் முகவர்கள் நக்கீரனை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். ஒரே வருடத்தில் நக்கீரன் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தான் பத்துக்கு பத்து என்ற அறையில் இருந்து என்னுடைய அலுவலகத்தை மாற்றினேன்.

பத்திரிகை ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் செய்யும் தவறு அதிகமாக முதலீடு செய்வது தான். அலுவலகம், பொருட்கள் என்று ஆரம்பத்திலேயே லட்சக்கணக்கில் செலவு செய்துவிடுவார்கள். பத்திரிகை வெளிவந்து மூன்று, நான்கு இதழ்களிலேயே நின்று விடும். இதை ஏற்கனவே பார்த்திருப்பதால் நக்கீரன் நன்கு விற்பனையான பிறகு தான் என்னுடைய அலுவலகத்தை உருவாக்கினேன். நக்கீரனுக்கான என்னுடைய முதலீடு வெறும் நான்கு ஆயிரம் ரூபாய் தான்.

தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத் தான் பத்திரிகைகள் நிலைத்து நிற்கின்றன. என்னுடைய பத்திரிகை தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், என்னிடம் வேலை பார்க்கிற தம்பிகளின் நலனுக்காகவும் நான் இத்தனை பத்திரிகைகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயேந்திரர் கைது விஷயத்தை நக்கீரனில் பாராட்டிவிட்டு ‘ஓம்’ பத்திரிகையில் அது தவறு என்று எழுதக் கூடாது என்று மட்டும்தான் சொல்லுவேன். மற்றபடி அந்தப் பத்திரிகைகளின் எடிட்டோரியலில் நான் தலையிடுவது கிடையாது.

குங்குமம் பத்திரிகை ஆரம்பத்தில் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்த பத்திரிகை. இன்று அந்தப் பத்திரிகையில் ராசிபலன் வருகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது? பத்திரிகை விற்பனைக்காக சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது.

நக்கீரன் பத்திரிகை மூலம் சமூகத்திற்கு சில நன்மைகளை செய்ய விரும்பும்போது இதுபோன்ற பல பத்திரிகைகள் நடத்துவதும் அவசியமாகிறது. ஆனால் இதன்மூலம் நான் தவறான விஷயம் எதையும் போதிக்கவில்லை. நல்ல விஷயங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நக்கீரன் பதிப்பகம் கடந்த மூன்று வருடங்களாக முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறது.

எனக்கான குறைந்தபட்ச கோட்பாட்டிலிருந்து நான் விலகவில்லை. ஜெயலலிதா என்ற அரக்கியின் ஆட்சியில் இந்தப் பத்திரிகை தொடர்ந்து துன்புறுத்தப்பட்டபோதும் யாருக்கும் அடிபணியாமல் பிரச்சனைகளை நேருக்கு நேராக சந்தித்து வந்திருக்கிறது.

சமீபத்தில் கூட உயரதிகாரி ஒருவரை சந்தித்த போது சொன்னார். ‘நீங்க மட்டும் ஜெயலலிதாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருந்தா எங்கேயோ போயிருக்கலாமேன்னு”. எனக்கு அந்த அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

கடந்த ஆட்சியில் என்மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 211. இதில் ஒன்பது வழக்குகள் கொலை, கடத்தல், பொடா போன்ற பயங்கர வழக்குகள். இதே போல் என் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தம்பிகளின் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என்று பல இடங்களில் நடைபெறுகிறது. இதற்காக நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் செலவழித்த தொகை நான்கரை கோடி ரூபாய். ஆனாலும் எந்த விதத்திலும் நாங்கள் சோர்ந்தோ, அடிபணிந்தோ போகவில்லை. இந்த வழக்குகளை நேரடியாக சந்தித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் பணம் தேவை.

ஒரு பத்திரிகைக்கு மிக முக்கியமானவர்கள் முகவர்கள். அவர்கள் தான் வாசகர்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்ப்பவர்கள். ஒரு குழுமத்திலிருந்து அதிக பத்திரிகைகள் வெளிவந்தால் அதை முகவர்கள் ஆர்வத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இவையெல்லாவற்றிற்காகவும்தான் இத்தனை பத்திரிகைகள் நடத்துகிறோம்.

இன்டர்நெட், டிவி காரணமாக உலகம் மிகவும் சுருக்கி விட்டது. ஆனால் நக்கீரன் ஒரு மாநிலம் தழுவிய பத்திரிகையாகவே இருக்கிறது?

உலகச் செய்திகளுக்காகத் தான் நக்கீரன் டாட்காம் (www.nakkheeeran.com) என்று ஒரு இணையப் பத்திரிகையை நடத்தி வருகிறோம். நீங்கள் சொல்வது போல் உலக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு தான். அவர்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள்.

ஆனால் நடுத்தர மக்களுக்கும் கீழாக இருப்பவர்கள் தான் எங்கள் வாசகர்கள். அவர்கள் தான் நம்நாட்டில் அதிகம். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை சரியாகவே தருகிறோம்.

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை தைரியமாக, அதிகளவு தருவது நக்கீரன் தான். ராஜீவ் கொலைக்கு பின்னால் இருக்கும் சதியை கொலை நடந்து மூன்றாவது வாரமே முதல்முறையாக வெளியிட்டது நக்கீரன் தான். பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் நக்கீரன் வாசகர்கள். தலையில் இருந்து பிறந்தவர்களின் உலகச் செய்தி ஆர்வத்திற்கு தீனிபோட நிறைய ஊடகங்கள் இருக்கின்றன.

இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கிற மிக முக்கியப் பிரச்சனை உலகமயமாக்கல். இதை ஒரு பத்திரிகை ஆசிரியராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நாட்டையே நாசப்படுத்துகிற விஷயம்தான் இந்த உலகமயமாக்கல். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மக்களுக்குத் தர வேண்டியது அரசின் கடமை. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் எல்லோர் கையிலயும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இருக்கிறது. அது எல்லாமே வெளிநாட்டு முதலாளிகளுடையது. நம்முடைய தண்ணீரையே நம்மை விலைகொடுத்து வாங்க வைத்த பெருமை உலகமயமாக்கலை ஆதரிக்கும் பாவிகளைத் தான் சேரும்.

வெளிநாட்டுப் பொருட்களை வீட்டில் வைப்பதில் நாம் அனைவருமே பெருமைப்படுகிறோம். ஒவ்வொரு பொருளையும் வெளிநாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்யும்போதே, ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த நம் சகோதரர்களான ஆசாரிகளும், கொல்லர்களும், குயவர்களும் வீதிக்கு வந்துகொண்டிருப்பதை நாம் மறந்து விட்டோம். வருமானம் இழந்த அவர்கள் உணவிற்கு வழியில்லாமல் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கவனிக்க வேண்டிய அரசாங்கமும் மௌனமாக இருக்கிறது.

இதற்கு சரியான உதாரணம் கோககோலா, பெப்சி. முதன்முதலில் 350 மி.லி. குளிர்பானங்கள் ஐந்து ரூபாய் என்ற விளம்பரத்தோடு கோலாவும் பெப்சியும் அறிமுகமானது. இதனால் 250 மி.லி. ஐந்து ரூபாய் என்று விற்பனையாகிக் கொண்டிருந்த நம்மூர் காளிமார்க், டொரினோ போன்ற குளிர்பானங்களும், குடிசைத் தொழிலாக நடைபெற்று வந்த சோடா நிறுவனங்களும் ஆட்டம் கண்டன. இவர்களாலும் 350 மி.லி. ஐந்து ரூபாய்க்கு தரமுடியும். ஆனால் அதற்கான பாட்டில்கள் இல்லை. கோலா, பெப்சி கம்பெனிகள் நம் ஊரில் நுழைந்தவுடனேயே இங்கிருந்த பாட்டில் நிறுவனங்களை விலைக்கு வாங்கி விட்டன.

மேலும் கடைக்காரர்களுக்கு அதிகப் பணத்தைக் கொடுத்து உள்ளூர் நிறுவனங்களின் குளிர்பான பாட்டில்களை அந்த நிறுவனங்களே வாங்கி உடைத்து விட்டன. இதற்கு சலுகையாக குளிர்பதனப் பெட்டியையும் கடைக்காரர்களுக்கு இலவசமாக கொடுத்தன.

உடைந்த பாட்டில்களுக்கு கடைக்காரர்கள் மூலம் பணம் கிடைத்தும் அந்தப் பணத்தால் புதிதாக பாட்டில்களை வாங்க முடியாத நிலை ஒருபுறம், மக்களின் அந்நிய மோகத்தால் கோலா, பெப்சி நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவு மறுபுறம். சோடா, குளிர்பானங்களை நம்பியிருந்த குடிசைத் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர்.

Nakkeeran Gopal இனி இவர்களால் எழுந்திருக்க முடியாது என்ற நிலையில் அந்த நிறுவனங்கள் குளிர்பானங்களை 250 மி.லி ஐந்து ரூபாய் என்று விற்க ஆரம்பித்தன. இன்று அது ஏழு, எட்டு, ஒன்பது என்று உயர்ந்து விட்டது. அது நஞ்சு என்று தெரிந்திருந்தும் நம் மக்கள் அதற்கு அடிமையாகி விட்டனர். விளம்பரங்களின் மூலம் பன்னாட்டு கம்பெனிகள் அவர்களது பொருட்களை தொடர்ந்து வாங்குமாறு நம்மைத் தூண்டுகின்றனர். இதுவும் ஒருவித அடிமைத்தனம் தான்.

இன்று நம்நாட்டில் சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. தாராளமயத்தின் விளைவு தான் இதுவும். அமெரிக்க முதலாளிகளின் உத்தரவிற்கு நம் இளைஞர்கள் தினமும் பதினாறு மணிநேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது அவர்களது சராசரி ஆயுள் குறைந்து வருகிறது. அதிக சம்பளம் வாங்கும் பிள்ளைகளைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் பலர் பார், டிஸ்கொதே என்று சுற்றுகிறார்கள். நம் குடும்ப உறவும் இதனால் கேள்விக்குறியாகி விட்டது. பணத்திற்கான மரியாதை குறைந்து விட்டது. சுருக்கமாக இன்றைய சாப்ட்வேர் இளைஞர்களால் நம் அடையாளம் தொலைந்து விட்டது.

உலகமயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வரும் கட்சி கம்யூனிஸ்டு கட்சி. மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அரசியலில் முக்கிய இடத்திற்கு வரமுடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

பி.ஜே.பி. என்கிற பேய் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் என்கிற நரியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். கூட்டணியில் இருந்து கொண்டு அரசை எதிர்த்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும், மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்து விடும். வேறு வழியில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசாமல் இருக்கிறார்கள். உள்ளுக்குள் அவர்களும் புழுங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார். பி.ஜே.பி.க்கு எதிராக அரசியல் நடத்தவேண்டிய அவர் அதற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கலைஞர் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்கவில்லையா? அதைப் போன்றது தான் இதுவும். கட்சியைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லை என்று கலைஞர் அப்போது சொன்னார். அதையேதான் மாயாவதியும் இப்போது செய்திருக்கிறார்.

தலித்கள் மீதான வன்கொடுமைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

கடந்த காலங்களை ஒப்பிடும்போது தலித் மக்கள் பெருமளவு விடுதலை அடைந்திருக்கிறார்கள். தற்போதைய திமுக அரசு அவர்களுக்கு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துத் தேர்தல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மாற்றம் போல் தென்பட்டாலும் தற்போதும் கயர்லாஞ்சி போன்ற கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன?

முன்பை விட தமிழகத்தில் வன்கொடுமைகள் தற்போது அதிக அளவில் குறைந்துள்ளது. பத்திரிகைகள் விழிப்புடன் இருப்பதால் ஆதிக்க சாதிகளுக்கு ஒரு பயம் வந்திருக்கிறது. கொடியங்குளம் கலவரத்திற்கு முன்பாக அதுபோல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு அதுபோன்ற சம்பவங்கள் குறைவாகவே நடைபெற்றன. இதற்கு விழிப்புணர்வு தான் காரணம்.

நக்கீரன் குழுமத்தின் எதிர்காலத்திட்டம் என்ன?

நக்கீரன் குழுமத்தின் சார்பில் செய்திகளுக்கான தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. நக்கீரனிலும் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இதைத் தவிர திரைப்படத்தில் நடிக்க எனக்குத் தொடர்ந்து அழைப்பு வருகிறது. அதில் கவனம் செலுத்தினால் நக்கீரனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற ஒரே காரணத்திற்காக அதைத் தவிர்த்து விட்டேன். எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு நக்கீரனை உண்மையான பத்திரிகையாக மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டு செல்வது தான் எங்களது லட்சியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com