Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

கனவுப் பட்டறையின் மூன்று நவீன கவிதை நூல்கள் வெளியீட்டு விழா
லிபி ஆரண்யா

Kanavupattari_bookrelease3 கடந்த 09.01.2009 அன்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்ற கனவுப்பட்டறை பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் மூன்று நவீன கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டன.

முதல் அமர்வில் கவிஞர் செல்மா பிரியதர்ஸனின் 'தெய்வத்தைப் புசித்தல்' என்ற கவிதைத் தொகுப்பை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர் திரு. ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியிட கவிஞர் சுகிர்தராணி பெற்றுக்கொண்டார்.

நூல் குறித்து தமிழ்ச்செல்வன் பேசும்போது இக்காலகட்டத்தின் மிக முக்கியமான தொகுப்பு இது என்றார். நாவல், சிறுகதை போன்ற உரைநடை வடிவங்களில்தான் பருவகாலங்கள், அவை சார்ந்த அழகியலை விஸ்தாரமாக உருவாக்க முடியும் என்று இருந்த நிலையை மாற்றி தனது கவிதைகளுக்குள் பருவ காலங்களையும் திணைகளையும் அருமையாகவும் அனுபவமாகவும் ரசிக்கும்படி கொண்டுவந்திருக்கிறார் செல்மா பிரியதர்ஸன். அதற்கிடையில் அரசியலும் இருப்பதுதான் இத்தொகுப்பை வித்தியாசப்படுத்துகிறது. மேலும் இத்தொகுப்பில் உள்ள காதல் கவிதைகள் வாசிப்பில் மிகுந்த இன்பத்தையும் புதுவகை உணர்ச்சிகளையும் நமக்குத் தருகின்றன என்றார்.

கவிஞர் கரிகாலன் தனது மதிப்புரையில், அரசு, மதம் போன்ற நிறுவனங்கள் சார்ந்த அதிகார அமைப்பை எதிர்க்கவும் அதை மாற்று வழிகளில் வேறொன்றாய்ச் சிந்திக்கவும் ஆக ஒரு எழுத்து அவசியப்படும் இந்நாட்களில் செல்மாவின் கவிதைகள் அதை நோக்கி மிக உக்கிரத்துடன் இயங்கியுள்ளது. பல்வேறு நுண் அரசியல் தளங்களில் நிலம், மனம் சார்ந்து பல்வேறு கவிதைகளாய் இவற்றில் காணக்கிடைக்கிறது என்று குறிப்பிட்டார்.

கவிஞர் வெண்ணிலா பேசும்போது குழந்தைகளின் உலகம் மிகக் கவனத்துடன் இயல்பாக இத்தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் இருப்பில் பெரியவர்களின் குறுக்கீடு மற்றும் அதிகாரம் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்களின் பின் நாளைய அரசியல் தன்மைகள் வரை நீட்டித்து ஒரு காலத்தில் குழந்தைகளாய் இருந்த நமக்கு இன்றைய காலத்தின் அதிர்வுகளைத் தருவதாகவும் இத்தொகுப்பு நீள்கிறது என்று குறிப்பிட்டார்.

நூலைப் பெற்றுக்கொண்ட சுகிர்தராணி தனது ஊரான ராணிப்பேட்டையும் செல்மாவின் ஊரான திண்டுக்கல்லைப் போலவே தோல் பதனிடும் பல தொழிற்சாலைகளைக் கொண்டது என்பதால் இத்தொகுப்பில் பறை செய்வதற்காக தோல் பதப்படுத்தும் ஒரு தலித்தின் வாழ்வு, அதன் தொன்மம், அரசியல் என தீவிரமாக வெளிப்பட்டிருக்கும் ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.


Kanavupattari_bookrelease2

இரண்டாவது அமர்வில் கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் 'திருடர்களின் சந்தை' என்ற தொகுப்பை திரு. அ. மார்க்ஸ் அவர்கள் வெளியிட கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலை வெளியிட்டுப் பேசிய அ. மார்க்ஸ் அவர்கள் நான்கு வழிச் சாலைகளும் இடைவிடாமல் பெருகும் நகர வரைபடங்களும் தொழில்களும் பங்குச் சந்தைகளும் நெருக்கியடிக்கும் இன்றைய சூழலில் விவசாயத்தோடு சிறுதொழில் செய்துவந்த குடும்பத்தில் பிறந்த யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் இன்றைய பின் காலனித்துவ அரசியலை மிக சாதுரியமாக துல்லியமாக கவிதைப்படுத்துவதோடு ஆத்மாநாமிற்குப் பிறகு தீவிரமான அரசியல் கவிதைகளை யவனிகா ஸ்ரீராமிடம் தவிர கடந்த பத்தாண்டு காலமாக வேறெந்தத் தொகுதியிலும் தன்னால் காண முடியவில்லை என்றார். இந்த சந்தர்ப்பம் போக இக்கவிதைகள் குறித்து ஒரு ஆய்வு ரீதியான கட்டுரையை எழுத இருப்பதாகவும் சொன்னார்.

நூல் மதிப்புரையில் ரமேஷ் பிரேதன் பேசும்போது என்னுடைய கவிதையும் யவனிகாவின் கவிதையும் மாற்றுத் தளங்களில் ஒரு இயக்கமாக உருவாகியிருப்பவை என்றாலும் இத்தொகுப்பில் உள்ள சில வரிகள் சர்வதேசத் தன்மை வாய்ந்தவை என்று கூறியதோடு 'இரவு என்பது உறங்க அல்ல' என்ற அவரது முதல் தொகுப்பிலிருந்து இந்த நான்காவது தொகுப்பு நமக்கு ஒரு அரசியல் தொடர்ச்சியை வழங்குகிறது என்றார். மேலும் யவனிகா ஒரு இடதுசாரி சிந்தனையின் வழி பல பின் நவீனத்துவ பிரதிகளை உருவாக்குகிறார் என்றும் குறிப்பிட்டார்.

நூலைப் பெற்றுக் கொண்ட கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள், ரமேஷ் பிரேமின் எழுத்துகளிலிருந்து அடுத்த கட்டத்துக்கு யவனிகாவின் கவிதைகள் சென்றுவிட்டன என்று அறிவித்தார்.

மூன்றாவது அமர்வில் கவிஞர் லீனா மணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' தொகுப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர் திரு. டி. ராஜா அவர்கள் வெளியிட திரு. அ.மார்க்ஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அ.மார்க்ஸ் பேசும்போது 2000க்குப் பிறகு தமிழில் நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்கிறார்கள் என்பதே மிகவும் ஆரோக்கியமான விஷயம், குறிப்பாக அவர்கள் தங்கள் வேட்கையை கவிதையாக்கும்போது இங்கே கலாச்சாரக் காவலர்களாக மாறுவது சினிமா மற்றும் அரசியல்வாதிகளின் முக்கிய வேலையாக இருக்கிறது. ஆனால் இலக்கியத்தில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லை. லீனா மணிமேகலையின் கவிதைகளில் வேட்கையும் காமமும் மாற்று அழகியலும் புதிய மொழியில் வெளிப்பட்டிருக்கிறது என்றார்.

தமிழச்சி தன் உரையில், 'உலகின் அழகிய முதல் பெண்' என்ற கவிதை மிகுந்த அரசியல் தன்மையுடைய கவிதை என்றும் இதுவரை 'அழகு' என்று பெண்ணுக்கு சுமத்தப்பட்டிருந்த ஆண் ஆதிக்க அதிகார கருத்துருவாக்கங்களைச் சிதைத்து அழகு என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தங்களை இவருடைய கவிதை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். சமகாலம் வரை பெண்கள் கையாண்டு வந்த மொழியிலிருந்து மிகத் தனித்த வேறுபட்ட தன்மையோடு தனது உடலையும் வேட்கையையும் மொழிப்படுத்தியிருக்கிறார் என்றார். கவிதைத் தொகுப்பு முழுவதும் குருதியின் வாசனையும் குருதியின் நிறமும் குருதியின் வரலாறும் நிறைந்து கிடக்கிறது என்றார். இவர் கவிதைகளில் நிராசைகளுக்கும் புலம்பல்களுக்கும் இடமற்று திளைப்பும் கொண்டாட்டமும் மேலோங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் புதிய 'அழகு' என்ற கருத்துருவாக்கத்தில் உலகின் முதல் அழகிய பெண்ணும் உலகின் கடைசி அழகிய பெண்ணும் தோழி மணிமேகலைதான் என்றார்.


Kanavupattari_bookrelease1

விமர்சகர் ந. முருகேச பாண்டியன் தனது விமர்சனத்தில் இன்றைய பெண் கவிதைகள் சங்க காலப் பெண் பாடல்களின் எச்சங்களே என்றார். லீனா தனது 'ஒற்றையிலையென' என்ற முதல் தொகுப்பிலிருந்து இந்த தொகுப்பில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியருக்கிறார் ஆயினும் உடலை, வேட்கையை எழுதுவதிலிருந்து பெண்கள் அரசியல் சமூக கவிதைகளுக்கும் தங்களது மொழியை விரிவாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு பேசுகையில் தூமை என்பது அழுக்கு மற்றும் பாவம் என்ற பழைய கருத்துருவாக்கத்தை உடைத்து தூமை படைப்பின் ஆதாரமாக இவர் கவிதைகளில் விளங்குவதோடு அதுவே ஒரு கலகமாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜா, நவீன உலகமயச் சூழல் உழைப்பைப் போலவே அழகையும் சுரண்டலுக்குரியதாக மாற்றியிருக்கிறது. லீனாவின் இக்கவிதைத் தொகுப்பு வர்த்தகக் காலனித்துவம் ஏற்படுத்தியிருக்கும் அர்த்தங்களைச் சிதைத்து இயங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார். 'நீ பரப்பு நான் துண்டு' என்ற கவிதையை வாசித்துக் காட்டிய அவர், ஈழப் போராட்டத்தில் ஒரு மனித வெடிகுண்டின் மனசாட்சியாக இந்தக் கவிதை மொழிப்பட்டிருக்கிறது என்றார்.

இயக்குநர்கள் பாலு மகேந்திரா, ராதா மோகன், அமீர் ஆகியோர் கவிதைத் தொகுப்பை வாழ்த்தியதோடு லீனா மணிமேகலையின் ஆகச் சிறந்த ஆவணப்படங்களைப் போன்றே அவரது திரைப்படமும் சிறப்பாக இருக்கப் போவது நிச்சயம் என்றும் அவருடைய முதல் முழுநீளப் படத்தை விரைவிலேயே எதிர்பார்ப்பதாகவும் கூறினார்கள். நூலாக்கத்தில் லீனா மணிமேகலையின் நூலில் இடம்பெற்ற மணிவண்ணனின் ஓவியங்களையும் குகை ஓவியங்களில் கே.டி. காந்திராஜனின் பங்களிப்பையும் இயக்குனர் பாலு மகேந்திரா சிலாகித்துப் பேசினார்.

இறுதியாக ஏற்புரையில், லீனா மணிமேகலை, சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் இருந்த பெண் குரல் ஆணாதிக்க மனோபாவத்துக்குக் கட்டுப்பட்டே இருந்தது. ஆனால் இன்றைய நவீனப் பெண் குரல்கள் அவற்றைக் கடந்துவிட்டன. இன்றைய பெண் கவிதைகள் ஒரு எதிர்கலாச்சார மனோபாவத்தில் வீரியத்தோடு செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அதை ஒரு அரசியல் இயக்கமாகவும் மாற்றிவிட்டிருக்கின்றன என்றார். தனக்குக் கவிதை என்பது களிப்போடு கூடிய சுய வெளியீடு என்றும் பெண்கள் எதை எழுத வேண்டும் எதை எழுதக்கூடாது என்று பட்டியலிடும் நாட்டாண்மை மனோபாவத்தை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை கவிஞர்கள் மு.முருகேஷ், யாழன் ஆதி, தாரா கணேசன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர். இந்த வருடத்தின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளாக இந்நூல்கள் விவாதிக்கப்படும் என்ற மனநிலையை நிகழ்ச்சி நுட்பமாக ஏற்படுத்தியிருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com