Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா 2009

கடந்த வாரம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜார்ஜியா மாநிலத்தில் அடலாண்டா நகரில் சீரும் சிறப்போடும் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் வரும் அமெரிக்க சுதந்திர தின விழா விடுமுறையின்போது நடக்கும் இந்தத் தமிழ் விழா ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாநிலத்தில் நடைபெறும். அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டத்தட்ட 1000 முதல் 2000 தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு அமெரிக்க மண்ணில் தமிழால் கூடி, பேசிமகிழ்ந்து, சுவாசித்து, தமிழ் உணர்வோடு செல்லுவார்கள்.

இந்தத் தமிழ் விழாவிற்குக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, குறைந்தது 50 குடும்பங்கள் இரவு பகல் பாராமல் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் நல்லதொரு தலைப்பை விழாக்குழு தீர்மானிக்கும். இந்த ஆண்டு தமிழர் விழாவின் தலைப்பு "உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்".

இந்தத் தலைப்பிற்கு ஏற்ப தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக் கொள்வதற்கும், உரிமையை நிலை நாட்டுவதற்கும் ஏதுவாக விழா நிகழ்ச்சிகள் அமையும், பேச்சாளர்கள் பேசுவார்கள், விழா மலரில் படைப்புக்கள் தொகுக்கப்படும்.

வழக்கம்போல் தமிழர் விழா, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் இனிதே தொடங்கியது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 தமிழ்ச் சங்கங்களில் இருந்தும் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆடல், பாடல், நாடகம் என்று கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளித்தனர்.

தமிழ் அருவியாகத் தமிழ் உணர்வையும், ஈழ மக்களின் இன்றைய நிலமையையும் குறித்துப் பேசிய, சிறந்த காந்தியவாதியான திரு தமிழருவி மணியன் அவர்களின் பேச்சை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். விழாவின் கடைசி நாளில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் புறநானுற்றைத் தேன் தடவிய உரையாக அவர் மக்களுக்கு அளித்தார். தனது எண்பது வயதிலும் தளராது தமிழின் சிறப்பு அம்சமான சிலம்பின் சிறப்புக்களை எடுத்துரைத்த திரு சிலம்பொலி சு செல்லப்பனின் எளிய தமிழை அனைவரும் ரசித்தார்கள்.

தமிழகத்தில் இருந்து வந்திருந்த "சந்திராயன்" திட்ட இயக்குனர், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அனுபவம் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை அவையோருக்கு உணர்த்தினார். அது மட்டுமன்றி தன்னுடைய ஓய்வு நேரத்தை "எளிய அறிவியல் தமிழ்" பணிகளுக்காக ஒதுக்கியிருப்பதைக் குறிப்பிட்டது, இங்கு வாழும் பல அறிவியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு, தாங்களும் அத்தகைய காரியங்களில் ஈடுபடவேண்டும் என்ற உணர்வைத் தந்தது.

விழாவின் சிறப்பு அம்சமாக அமெரிக்க மருத்துவர் திருமதி எலன் ஷாண்டர் (Dr. Ellyn Shander) ஈழ விடுதலைக்கு நாம் போராட வேண்டிய அவசியத்தை மிக அருமையாக எல்லோருக்கும் புரியும்வண்ணம் எளிய ஆங்கிலத்தில் உரையாடினார். அவருடைய இந்தp பேச்சைத் தமிழர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

எளிய நவீன கவிதைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திய கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதைகளை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தார்கள் என்றால் அது மிகையல்ல. கவிஞர் வைரமுத்துவும் தமிழர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழா மலரை திரு தமிழருவின் மணியன் வெளியிட, கவிஞர் ஜெய பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்கள்.

பாண்டிச்சேரியில் இருந்து வந்திருந்து, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்றான "சிலம்பக்கலை"யை திரு ஜோதி கண்ணன் நிகழ்த்திக்காட்டிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார். இந்த இளைஞர் தன் வாழ்க்கையைச் சிலம்பத்திற்காகவே அர்ப்பணித்துவிட்டதாகச் சொன்னார். உலகின் பல நாடுகளுக்கும் சென்று சிலம்பத்தைக் காட்சிப்படுத்தி ஆர்வத்தைத் தூண்டியும், பட்டறைகளின் மூலம் கற்பித்தும் வருகிறார். மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்தக் கலையை உயிர்ப்பித்து வரும் இவரது பணி மகத்தானது. வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் வேந்தர் முனைவர் விஸ்வநாதன் அவர்கள் வந்திருந்து, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா உரையை நிகழ்த்தி விழாவைச் சிறப்பித்தார்.

வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தில் இருந்து திரு பீட்டர் தமிழ் இலக்கிய வினாடி வினா அனைவராலும் வெகுவாக பாராட்டப் பட்டது. பார்வையாளர்களும் பதில் சொல்லி ரசித்தனர். இந்த கேள்விகள் மு வ வின் இலக்கிய வரலாறு, திருக்குறள், புறநானூற்றில் இருந்து தொகுக்கப் பட்டவை என்று பீட்டர் விளக்கம் அளித்தார்.

தென் கரோலினா, பனைநிலத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் "நாடு கடந்த தமிழீத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும்" என்று தமது நாடகத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும் விழாவைச் சிறப்பிக்க நடிகர்கள் ஜீவா, பசுபதி, ஜெயஸ்ரீ, கன்னிகா ஆகியோர் வந்திருந்து மக்களோடு உரையாடியும், தங்களது திரையனுபவங்களைப் பகிர்ந்தும் கொண்டார்கள்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் தமிழ்த் தேனீ (திருக்குறள், பேச்சு, கட்டுரை, வாசித்தல், வினாடிவினா) போட்டிகளில் கலந்து கொண்டார்கள். இந்தச் சிறுவர் சிறுமியர்களை அனைவரும் மனதாரப் பாராட்டினார்கள். வடகரோலைனா தமிழ்ச்சங்கத்தினர் தயாரித்திருந்த "Stop the Genocide of Tamils in Sri Lanka" என்ற ஒட்டியை (bumper sticker) நம் சிறுவர்கள் ஓடியாடி விற்றுக் கொண்டிருந்ததைக் காண எழுச்சியூட்டுவதாக இருந்தது.

மேலும் விழாவில் அமெரிக்காவில் தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்று விளங்கும் அமெரிக்க தமிழ் தொழில் அதிபர்களுக்கு பேரவை தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

தனித்தனிச் சிற்றரங்குகளில் தொடர் மருத்துவக் கல்வி (CME), இளையோர் நிகழ்வுகள், பழைய மாணவர் சங்கக் கூட்டங்கள், தமிழ் அமைப்புக்களின் கூட்டங்கள் என்பன நிகழ்ந்துகொண்டேயிருந்தன. அரங்கின் வெளியே அங்காடிகளில் மக்கள் எப்போதும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மூன்று நாட்களிலும் தமிழர்களின் பரபரப்பும், உற்சாகமும், செயல்வேகமும் அந்தக் காற்றில் கலந்து வீசிக் கொண்டிருந்தது.

விழா நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்ததுவும், பதிவர் பழமைபேசி அவர்களின் நிகழ்பதிவுகளும் விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு விழாவின் சிறப்பினை உணரும் வாய்ப்பினைத் தந்தன.

மொத்தத்தில் தமிழ் விழா மிக அருமை! மிகச் சிறப்பு! தமிழார்வத்தையும், தமிழுணர்வையும் ஏற்படுத்திய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மேலும் மேலும் வளர வேண்டும் என்று வந்திருந்த தமிழர்கள் வாழ்த்தினார்கள்.

இந்த பேரவை விழா முதன் முறையாக இணைய மூலம் அனனத்து இருக்கைகளும் 10 நாட்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்துவிட்டது. இது பேரவைக்கும் தமிழர்விழாவிற்கும் மிகப் பெரிய பெருமை என்றால் அது மிகையல்ல.

அடுத்த ஆண்டின் பேரவை விழா கனெக்டிகட் மாநிலத்தில் நடைபெறப் போவதாகப் பேரவை அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டிற்கு இப்போதே திட்டம் தீட்டியாகவேண்டும், இல்லையென்றால் இவ்வாண்டில் பலருக்கு நிகழ்ந்ததுபோல இருக்கைகள் கிடைக்காமற் போகலாம்!

"இந்த நாளில் நம் ஆணை செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை..."

என்ற பாவேந்தரின் வரிகளைப் போல நம்மை உணர்வுகொள்ள வைத்து நம் உரிமைகளைக் காக்கப் போராடும் வலிவினைத் தந்த பேரவையின் விழா என்றும் சிறந்திருக்கட்டும்!

தொகுப்பு : மயிலாடுதுறை சிவா [email protected]
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை முன்னாள் செயலர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com