Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நிகழ்வு

சாதி வழியாக உருவான உறவுகளை மறுத்த சி.மணி
செல்மா பிரியதர்ஸன்

எழுத்து என்பதை ‘பேச்சின் நோய்’ என்ற ரூசோவின் கண்டுபிடிப்பை இடைமறித்து இல்லாததும் முக்கியமானதுமான ஒன்றை வழங்குவதன் மூலமாக எழுத்தானது பேச்சை முழுமையடையச் செய்கிறது அல்லது எது இல்லாமல் பேச்சு தத்தளித்து நிற்குமோ அதை எழுத்து நிறைவாக்குகிறது என்கிறார் தெரிதா. பேச்சிலிருந்த தனது குரலை கவிதைக்குள் ஒளித்து வைத்ததால் தான் இல்லாத இடத்திலும், இல்லாமலே போனபின்னும்கூட கவிஞரின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. கவிஞர்கள் தாங்கள் வாழும் காலங்களில் எங்ஙனம் நடந்து கொள்கிறார்கள் என்ப¨¾ யோசித்தால் விந்தைதான். குடும்பத்திற்குள்தான் பிறக்கிறார்கள். அமைப்பிற்குள்தான் வாழ்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களாக, சதா வெளியேறிக்கொண்டும், எங்கிருந்தாவது வந்து கொண்டும், ஒரே இடத்தில் தங்கிவிட முடியாதவர்களாக, பிடிப்பற்றவர்களாக சமயத்தில் உழைக்காமலும், அறிந்தே, விரும்பியே சுய நசிவிற்கு ஏன் ஆளாகிறார்கள்? குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியப்பட்டு, வாழ்வதற்கும் பொருளீட்டுவதற்கும் எந்த வகையிலும் உத்திரவாதமளிக்காத ஒரு எழுத்து முறையை சமூக அமைப்பிற்குள் ஏன் விடாப்பிடியாகக் கைக்கொள்கிறார்கள்? கவிஞர்கள் ஏன் நோய்மை அடைகிறார்கள்? ஒருவேளை சமூகம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா? பொதுவாக நம்பப்பட்டு வரும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு எதிரான நோய்மையாகவே எழுத்து அமைந்து விடுகிறதா?

C Mani memories பிளாட்டோகூட தன்னுடைய லட்சியக் குடியரசிலிருந்து கவிஞர்களை அரச விலக்கம் செய்கிறார். கவிதைகள் கண்டிக்கப்படுவதும் கவிஞர்கள் சிறுமைப்படுத்தப்படுவதும் சமூகத்தின் பொதுக் கருத்தாக உருவாகி வந்திருக்கிறது. குடிமக்களைத் தப்பு வழிக்குத் தூண்டி, மட்டுமீறிய ஆசைகளை வரவழைக்கும் ஏமாற்றுப் போக்குடைய விளையாட்டுத்தனமான வகையினமாகவே கவிதைகளையும் கவிஞர்களையும் பிளேட்டோ குறிப்பிடுகிறார். அமைப்பை உருவாக்குபவர்களுக்கு, அதை அதிகாரத்தினால் வழிநடத்திச் செல்பவர்களுக்கு கவிஞர்கள் ஒருவகையான அச்சுறுத்தலாக, தொந்தரவாகவே ஆரம்பம் தொட்டே இருந்து வந்திருக்கிறார்கள். தனது சுய அழிவை அதிகாரத்திற்கு எதிராக கடைபிடிக்கிறார்கள். சமீபத்தில் தங்களது மரணத்தை முடித்துக்கொண்ட சி. மணியும் அப்பாஸூம்கூட சுய அழிவிற்கு தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள்தான். சி. மணியின் கவிதைகளுக்கு வெளியே நமது சமூகம் தெâந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டென்றால் அது சி. மணி தனது சொந்த சாதியோடு தனக்கிÕந்த அத்தனை பிடிமானங்களையும் அறுத்துக்கொண்டதுதான். சாதி வழியாக உருவான உறவுகளை மறுத்தார். அவ்வகையில் உறவினர்கள் இல்லாமல் இருந்தார். சாதி வழியான ஒன்று கூடல்கள், குடும்ப விழாக்கள் ஆகியவற்றையும்கூட தவிர்த்தார். இறந்தபோது அவரது மரண ஊர்வலம் இருபதிற்கும் குறைவான நபர்களோடே நடந்தது.

இந்தக் கவிஞன் சமூகத்திற்கு முன்னால் ஏன் தன்னை அனாதையாக்கிக் கொள்ளவேண்டும்? தனக்கு உடன்பாடற்ற, தவ¦Èன்று உணர்ந்த சமூகத்தின் சாதிய கட்டுமானங்களுக்கு எதிரான கலகமாக, தண்டனையாகத் தன்னை அனாதையாக்கிக் கொண்டு மரணமடைகிறார். எழுத்து, கணையாழி, ஞானரதம், நடை, கசடதபற ஆகிய இதழ்களில் எழுதி, ‘வரும்போகும்’(1974), ‘ஒளிச்சேர்க்கை’(1976) ஆகிய கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்த கவிதைகளையும் அதற்குப்பின் எழுதிய கவிதைகளையும், 1996ல் கிரியா பதிப்பகத்திலிருந்து ‘இதுவரை’ என்ற முழுத்தொகுப்பாக நண்பர்கள் கொண்டு வந்தபோது சிறிதும் உடன்பாடற்று இருந்தார். முடிந்துபோன தனது கவிதைகள் அனைத்தையும் எரித்துவிட விரும்பினார். குரல்வளை சுருங்கி உணவுப்பாதையும் நுரையீரலும் பழுதடைந்த பின்னரும் நீரூற்றி தொய்வாக்காத அடர்ந்த மதுவினை பருகியும் விடாப்பிடியாக புகைத்துக் கொண்டுமிருந்தார். சிறு உணவை மட்டுமே அவரது உள்ளுறுப்புகள் அனுமதித்த நிலையிலும் அடையாளம் பதிப்பகத்திற்காக ‘ப்ராய்ட்’, ‘புத்தர்’, ‘பெளத்தம்’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார்.

அவர் உடல் அழிந்து கொண்டிருந்ததை அவர் பார்த்தார். அனாதித்தனமும் சுய அழிவும்தான் அவரை இங்ஙனம் எழுத வைத்தது. ‘இனிமேல், செய்யப் போவதில் பழக்கமற்றது . . . சாவதும், பழக்கமானதோ என்னவோ? . . . அதுவும் நாள்தோறும்’. பெயரில் திருப்தியற்று சி. மணி, வே. மாலி, எஸ். பழனிச்சாமி, செல்வம், ஓலூலூ, தாண்டவ நாயகம், ப. சாமி என்ற பெயர்களில் மாறி மாறி எழுதிவந்தார். க்ரியாவோடு இணைந்து தமிழகராதி தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தார். இலக்கியம் தவிர்த்து அறிவியல், தத்துவம், உளவியல் ஆகிய துறைகளையும் அறியும் வேட்கைக் கொண்டலைந்தார். எதிலும் திருப்தியற்று, எதிலும் தங்கிவிடாது, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞை தளங்களை நோக்கி தகித்த வண்ணமிருந்தார். தடித்து ஒலித்த நவீனக்கவிதையின் ஒற்றைக் குரலை உடைத்து பல குரல்கள் பங்கேற்கும் உரையாடலாக மாற்றியமைத்தார். தனது காலத்தில் நிலைபெற்றிருந்த கவிதையல்லாத வேறொன்றையே எழுதினார். செய்திகளையும் அன்றாடங்களையும்கூட கவிதையாக்கிக் காட்டினார். அதனால் தான் வாழும் காலங்களில் மெளனப்படுத்தப்பட்டார்.

நவீனம், பின் - நவீனத்துவம் ஆகிய கருத்தாக்கங்கள் தமிழில் நிலைபெறும் காலங்களுக்கு முன்பே அவை பற்றிய மெல்லிய சலனங்களை கவிதைகளுக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். ‘சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை. எண்ணம், வெளியீடு, கேட்டல் இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல. ஒன்றென்றால் மூன்றான காலம்போல் ஒன்று’ என்று இடையீடு செய்து பார்த்தார். குழுக்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கவில்லை. தனது எழுத்தை நிலைநிறுத்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒன்றை எழுதவும், அதனை மறுக்கவும், பிறிதொன்றை எழுதவும், அதனையும் மறுக்கவுமாக, எழுதியதை, சிந்தித்ததை மறுத்துக்கொண்டே வந்த சி. மணியின் படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். அவரது கவிதைகள் மீளாய்வு செய்யப்பட்டு தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் எந்த வகை மாதிரியான கவிதைகளுக்கான ஆரம்பமாய் அவரது கவிதைகள் இருந்தன என்பது கண்டு சொல்லப்பட வேண்டும்.

பழைய ஜமீன் குடும்பமொன்றோடு நெருங்கி வாழ்ந்து வந்த அப்பாஸ், நிலவுடமை சமூகத்தின் கலை மற்றும் கேளிக்கை மனோபாவத்தோடு கூடிய அழகியல் உணர்வின் தீவிர எழுச்சியுள்ளவர். ஆனால் ஆதிக்கக் கருத்தியலின் தடயங்களை அவரது கவிதைகளில் காண முடியாது. வாழ்வின் மீதான கொண்டாட்டமும் நவீன வாழ்வின் நெருக்கடியும் சந்தித்துக் கொள்கிற இடத்தில் உல்லாசமும், வலியும், களிப்பும், வேதனையுமாக அவரது கவிதைகளுக்குள் பல குரல்கள் முட்டி மோதி ஒருவித கூத்துத் தன்மையை எய்துகிறது. அவர் ஒரு மதுப்பிரியர், உல்லாசி, நிலவுடமை கலாச்சாரத்தின் கேளிக்கை மீதிருந்த நாட்டமாக கவிதைகள் எழுதியவர் என யாரேனும் அவரது ஒட்டுமொத்தக் கவிதை வாழ்வையும் மேம்போக்காக முடித்தும்கூட வைக்கலாம். அவரது பின்னணி பற்றி அறிந்திராத புதிய வாசகருக்கு அவரது கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களை உருவாக்கும். எல்லாம் மது மேசைக்கு முன்பிருந்து தொடங்குவதுபோல பாவனை செய்கிற அவரது கவிதை உலகம் சகலத்தோடும் முட்டி மோதி தத்துவநிலையோ, ஆன்மீக நிலையோ எய்திவிடாமல் கவித்துவ பித்து நிலையை உருவாக்குகிறது.

N.Muthusamy நீண்ட நவீன கவிதைகளை முயற்சித்துப் பார்த்தார். அதில் டேனியல், பசவராஜ், பொன்ராஜ், கேசவன், ருத்ரா என்ற பாத்திரங்களைத் தொடர்ந்து விவாதிக்க வைத்தார். வாசிப்பிற்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் இவரது கவிதைகள், உண்மையில் மது மேசைகளுக்கானவை மட்டுமல்ல. தன்னையும், தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் விமர்சித்துக் கொள்கிற தீவிரமான ஒரு மனோநிலைக்கு இட்டுச் செல்லும் தவிப்பாக அவரது கவிதைக் குரல் இருக்கிறது. அந்தத் தீவிரமான மனோநிலை அவரது கவிதைகளில் பெரும் போதையாக, சுய மறுப்பாக, நிற்குமிடத்திலிருந்து கடக்கும் அவஸ்தையாக, கேள்வியாக, சராசரி அலுப்புற்ற வாழ்விலிருந்து விடுபடலாகவுமே இருக்கிறது. கடந்து கடந்து போகத் துடித்து முட்டி முட்டி மோதி நிற்கும் அவலத்தின் துடிப்பாக பெரும்போக்கில் கொண்டாட்டத்தின் பேருவைகையாக அப்பாஸின் குரல் ஒலிக்கிறது. அவரது குரல் தத்துவமாகவில்லை, அரசியலாகவில்லை. விடுபட்ட இடத்தை எட்ட விரும்பும் கவித்துவ துயரமாக தனது இருப்பை முணுமுணுக்கும் கவிதைகளை அப்பாஸ் எழுதி வந்தார்.

இலக்கிய கூட்டங்களில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொள்வதும், பொதுக் கருத்தியல்கள் மேல் பூசல்களை உருவாக்குவதையும், வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தன் காலத்து ஆளுமைகளால் புரிந்து கொள்ள முடியாத கேள்விகளை அவர்களை நோக்கி ஏழுப்பினார். (நெல்லையில் கள்ளழகர் ஏற்பாடு செய்திருந்த அரங்கமொன்றில் சுந்தரராமசாமி வாசித்தக் கட்டுரை மீது அப்பாஸ் ஒரு கேள்வியை எழுப்பினார். அக்கேள்வி தனக்குப் புரியவில்லை என்று சுந்தரராமசாமி சொல்ல, மூன்றாவது முறையாகவும் அதே கேள்வியைக் கேட்க மூன்றாவது முறையும் அந்தக் கேள்வி தனக்குப் புரியவில்லை என பதிலளிக்க சுந்தரராமசாமி மறுத்துவிட்டார்.) இறுதியாக ‘முதலில் இறந்தவன்’ என தனது கவிதை நூலிற்கு தலைப்பை தேர்ந்தெடுத்தார். மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமாகாத நிலையிலும் தொடர்ந்து மது அருந்தினார். இறுதி நாட்களில் நண்பர்களைத் தவிர்த்தார். உள் அவயங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 52- வது வயதில் மரணமடைந்தார். சி. மணியும், அப்பாஸூம் ஒருவகையில் சுய அழிவிற்கு தங்களைத் தாங்களே இட்டுச் சென்றனர். தாங்கள் நம்பிய வாழ்வை வாழ்ந்தார்கள். நம்பிய கவிதைகளை எழுதினார்கள். தீர்வற்ற அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வை மரணம் ஒத்ததாய் இருவரும் எழுதினார்கள். அங்ஙனம் தங்களது மரணத்தை ஒரு நாள் தழுவிக் கொண்டனர்.

ஏப்ரல் 19, ஞாயிறு மாலை சென்னை லயோலா கல்லூரி அருகிலுள்ள அய்க்கப் அரங்கில் ‘தமிழ்க் கவிஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் சி. மணி, அப்பாஸ் ஆகிய இருவருக்கும் நினைவரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓவியர் மணிவண்ணன் வரைந்த இருவரது உருவ ஓவியங்களும் அரங்கம் நிறைய வியாபித்திருந்தன. எழுத்தாளரும், இசைஞருமாகிய குமார் அம்பாயிரம் ‘டிஜிருடு’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி இசையை இசைத்தார். தமிழ்க் கவிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் சுகிர்தராணி வந்திருந்தவர்களை வரவேற்றார். தமிழ்க்கவிஞர்கள் இணைந்து மெரீனா கடற்கரையில் ஈழப்போருக்கு எதிராக நடத்திய கவிதைப் போராட்டம் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இலங்கை தூதரகத்திற்கு முன் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிட்டு இவ்வமைப்பு இலக்கிய, சமூக, கலாச்சாரத் தளங்களில் தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையைப் பதிவு செய்தார்.

அரங்கம் இரண்டு அமர்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அப்பாஸ் பற்றிய முதல் அமர்வை நெறியாளுகை செய்த யவனிகா ஸ்ரீராம், அப்பாஸின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மனுஷ்ய புத்திரன் அப்பாஸின் உருவ படத்திற்கு மலர்தூவி உரையாற்றினார். கோணங்கி, பா. வெங்கடேசன், லதா ராமகிருஷ்ணன், அய்யப்ப மாதவன் ஆகியோர் அப்பாஸின் படைப்புகள் மீது கட்டுரை வாசித்தவர்கள். அப்பாஸின் தனித்துவமான நெடுங்கவிதைகளை லீனா மணிமேகலை தன் குரலின் ஊடாய் நிகழ்த்திக் காட்டினார்.

இரண்டாம் அமர்வை அ. வெண்ணிலா ¦¿றியாளுகை செய்தார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, சி. மணியோடு தனக்கிருந்த நட்பையும், சி. மணியின் இலக்கிய ஈடுபாடுகள் குறித்தும் விரிவாகப் பேசினார். பதினைந்து ஆண்டுகளாக சி. மணியோடு நட்போடும், இறுதி நாட்களில் அவருக்குத் திணையாகவும் இருந்த சாகிப்கிரான், கரிகாலன், அசதா, வியாகுலன் ஆகியோர் சி. மணியின் படைப்புலகம் குறித்த ஆய்வுகளை முன்வைத்தார்கள். சி. மணியின் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றை இசை வாசித்துக் காட்டினார்.

ரவி சுப்பிரமணியம் இருவரது கவிதைகளிலிருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மெட்டமைத்துப் பாடலாக்கி தன் குரல் வழியே உருகியோடச் செய்தார். இளங்கோ கிருஷ்ணனும் நானும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்கள். சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த 50க்கும் மேற்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்கும் இன்பா சுப்பிரமணியம் நன்றி பகர்ந்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com